மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு

1604 மிர்ஜான் கோட்டை

பெத்ரோவுக்குக் கோட்டையில் இருந்து வார்த்தை வந்தது. அது மிளகு வர்த்தகத்தைக் குறித்து இருக்கும் என்றால் உடனே போக வேண்டும். எவ்வளவு சீக்கிரம் போகிறோமோ அவ்வளவுக்கு சாதகமாகச் சந்திப்பு வாய்க்கும். 

வயநாட்டிலும், கோழிக்கோட்டிலும் ஒரே நேரத்தில் புது நிலங்களில் மிளகு பயிர் செய்தார்கள். அது ஐந்து வருடம் முன்பு. இப்போது அந்த நிலம் எல்லாம் மிளகுக்கொடி பூத்துக் காய் பிடித்து உயர்ந்த மரங்களைப் பிணைத்து மேலேறி நிற்கிறது. 

கடந்த பத்து வருடத்திலேயே இவ்வளவு அதிகமான விளைச்சல் இல்லை என்று சொல்லும் அளவு இன்னும் ஒரு, இரண்டு தினங்களில் எல்லாம் பறிக்கப்பட்டு சேமிக்கப்படும். விற்பனைக்கு வரும் அத்தனை மிளகையும் நிலவும் விலைக்கு போர்த்துகல் வாங்கினால் கஜானா காலியாகி விடும். 

மிளகு ராணி தயவு இருந்தால் விலை சற்றே குறைவாக, தரமான மணமான காரம் மிகுந்த மிளகை பெத்ரோ வாங்கி அனுப்பச் சந்தர்ப்பம் கிடைக்கும். 

கிடைத்தால் பெத்ரோவை இந்தியப் பெருநிலம், சயாம், இந்தோசைனா, சீனா என்று ஆசியா முழுக்க தலைமை வகிக்கவும் போர்த்துகல் அரசர் நியமிக்கலாம். எல்லாம் வாய் வார்த்தையிலிருக்கிறது. மிளகு என்ற ஒற்றைச் சொல்லில் இத்தனை சூட்சுமம் தங்கியுள்ளது.

கடந்த மூன்று தரிசன வேளைகளிலும் பெத்ரோவோடு மனம் விட்டுக் கலகலப்பாக மகாராணி அவர்கள் உரையாடியதாகத் தோன்றியது. உரையாடியது என்பதை விட மகாராணி பேச, பெத்ரோ கேட்டுக் கொண்டிருந்தார் பெரும்பான்மை நேரம். 

அந்த நிலைபாட்டில் பெத்ரோவுக்கு பெருமை தவிர வேறேதும் இல்லை. 

‘படை நடத்திப்போய் யுத்தம் செய்து நூறு, ஆயிரம் என்று உயிர்ச்சேதம் ஏற்படுத்திக் கிடைக்கிற வெற்றியைவிட இப்படி நட்பும் அன்பும் பரஸ்பர மரியாதையும் அதிகம் சாதிக்க முடியும் என்றால் போர் எதற்கு? ஆக்கிரமிப்பும், அங்கே இங்கே விரைவில் போக வர வழி கண்டுபிடிப்பதும், இந்தியாவில் செல்வம் குவிக்க, ஐரோப்பாவில் யுத்தம் புரிவதும் தேவையே இருக்காது’. பெத்ரோ யோசித்தபடி இருந்தார்.

அரசியார் நேர்காணல்களில் நிறைய வரலாறு பேசினார். அது பெத்ரோ லிஸ்பன் பள்ளியில் படித்தடை விட நிறைய மாறுபட்டிருந்தது. ரோமானியரும் கிரேக்கர்களும் இங்கே மதுரை அரண்மனையில் காவல் காத்து நின்றது முதல், அரபிகள் குதிரை விற்க வருவதும், காஞ்சி நகரில் உயர் படிப்புக்காக சீன அறிஞர்கள் வருவதும்,   காவிரி நதி கடலில் கலக்கும் இடத்தில் உயர்ந்து நின்ற புகார்  நகரச் சிறப்பும் அந்த நகரைக் கடல் கொண்டு போனதும் என்று ஐரோப்பியாவில் கற்பிக்கப்படாத, தெரியாத வரலாறு பற்றி எல்லாம் மகாராணி பெத்ரோவுக்கு விரிவாகச் சொன்னாள். 

தன்னை உலகம் தெரிந்த பெண்மணியாக நிறுவ அவள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் நிச்சயம் பெருவெற்றி அடைந்தன. துபாஷி நஞ்சுண்டையா மிகுந்த ஆற்றலோடு மொழியாக்கம் செய்த அந்த உரையாடல்கள் பெத்ரோவால் கவனமாக முழு ஈடுபாடு காட்டப்பட்டிருந்தன.

 போன சந்திப்பில் உரையாடலுக்கு நடுவே, கோழிக்கோட்டில் போர்த்துகல் அரச அல்லது அரசாங்க பிரதிநிதி ஒருவர் இருக்க அனுமதி கொடுக்க யோசனை செய்து கொண்டிருப்பதை ஒற்றை வரி கூறி, வேறேதோ சமாசாரம் பேச ஆரம்பித்தாள் சென்னபைரதேவி மகாரணி. 

மிளகு அதிகம் விளையும் கோழிக்கோட்டில் பெத்ரோவின் மாமனார் சந்தியாஹோ போல இல்லாமல், நேர்படப் பேசுதலும், அனைவரையும் நட்போடு நடத்தி பாலில்    கலந்து இனித்து மறைந்திருக்கும் சர்க்கரை போல பின்னணியில் இருந்து சாதிக்கவும் தெரிந்த ஒரு அதிகாரியை அனுப்பச் சொல்லி போர்த்துகல் அரசருக்கு லிகிதம் உடனே எழுத உத்தேசித்து, எதற்கும் இரண்டு நாள் பார்த்து, மகாராணியின் மனம் மாறாமல் அப்படியே இருப்பதை உறுதி செய்து கொண்டு லிஸ்பனுக்குக் கடிதம் எழுத இருந்தபோது, கோட்டையில் இருந்து தூதுவன் குதிரையேறி வந்து நேர்காணல் எனச் சொல்லிப் போகிறான். 

பெத்ரோ கண்ணாடியில் முகம் பார்த்தார். கன்னத்தில் சிறிய கீறல். இது காஸண்ட்ரா  விளையாட்டு இல்லை. மாடிப்படி ஏறும்போது கதவு சார்த்தி நீட்டிக்கொண்டிருந்த ஆணி கீறியது. மகாராணி தவறுதலாக நினைத்தால் என்ன செய்வது? 

கஸாண்ட்ராவையும் கூட்டிப்போய் நான் கீறவில்லை என்று சொல்ல வைக்கணுமா? பெத்ரோவுக்குச் சிரிப்பு வந்தது. சவரம் முடித்து நேரம் அதிகம் இல்லாததால் முகம் கழுவி உடை மாற்றி, நிறைய வாசனை அத்தரும் பாரசீக ஜவ்வாதுவும் பூசி, புது உடை உடுத்தி, சுல்தான் மாதிரி கிளம்பி விட்டார் பெத்ரோ, மிர்ஜான் கோட்டைக்கு. பதினொரு மணிக்கு சந்திப்பு. கடியாரத்தை முன்னால் வைத்து விடக் கூடும் என்பதால் எட்டரைக்கே போய்க் காத்திருக்க பெத்ரோ தயாரானார். 

பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸிலிருந்து வரவழைத்த மெல்லிய மனம் கவரும் நறுமணம் முன்னால் வர, பத்து வினாடி சென்று சென்னபைரதேவி மகாராணி உள் மண்டபத்தில் நுழைந்தபோது பெத்ரோவின் கடியாரம் பதினொன்றரையும் பத்து நிமிடமும் காட்டியது. கடியாரத்தைக் கள்ளத்தனமாகப் பார்க்கிற பழக்கம் ரொம்பக் கெட்ட பழக்கம் என்று மனைவி மரியா சொல்லியிருந்தாலும் பெத்ரோவால் அதை இதுவரை மாற்ற முடியவில்லை.

”என்ன, சரியான நேரத்துக்கு வந்துவிட்டேனா?” மிளகு ராணி கேட்டாள். 

சென்னா நீளப் பாவாடை அணிந்து வந்து கொண்டிருந்தது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது பெத்ரோ பிரபுவுக்கு.  ஒரே ஒரு சிறு குறைபாடு – நீளப் பாவாடை வீட்டில் இருக்கும்போது உடுப்பது ஆச்சே. போகட்டும். மகாராணிக்கு வீடும், அலுவலகமாக மிர்ஜான் கோட்டையும் ஒன்றுதான் என்பதால் எங்கே என்ன உடுத்தால் என்ன? சற்றே உயரம் குறைவான மகாராணி என்பதால் நீளப் பாவாடை தரையில் புரளாமல் ஊசி நூலெடுத்து மேலே மடித்துத் தைத்திருப்பது தெரிந்தது. தான் அதைப் பார்க்காதது போல் மகாரணியின் விழிகளைப் பார்த்தபடி நலம் விசாரித்தார் பெத்ரோ.

சொல்லியான பிறகு லிஸ்பன் விசேஷங்கள் கேட்டாள் சென்னா தேவி. 

“எங்கள்   மரியாதைக்குரிய பேரரசர் ஃபிலிப்பு ஓய்வெடுக்க சிண்ட்ரா நகரில் தங்கியிருக்கிறார். அவசியமான அரசாங்கக் காரியங்கள் மட்டும் சிண்ட்ராவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு முடித்துக் கொள்ளப்படுகின்றன. அது தவிர வேறு விசேஷம் மகாராணியாரின் கவனத்துக்குக் கொண்டு வரத் தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை, மரியாதைக்குரிய அரசியாரே”.

”அரசர் ஓய்வெடுக்க குடும்பத்தோடு போவாரா?” 

சென்னா தேவி ஆர்வமாகக் கேட்டாள். 

”அரசியார் பெரும்பாலும் கூடப் போவதில்லை. கிறிஸ்துமஸ் காலம் என்றால் அவரும், ராஜகுமாரர்களும் ராஜகுமாரிகளும் போயிருப்பார்கள்.  இவருக்கு முந்தைய அரசர் மாதம் ஒரு முறை ஒரு நாளாவது சிரம பரிகாரமாக செண்ட்ரோ வருவார். நீண்ட ஓய்வாக ஒரு மாதம்  வருவதும் உண்டு”.

  சென்னா கேட்ட தகவலுக்காகப் புன்னகைத்து ஏற்றுக் கொண்டு மேலும் பேசுவார் என எதிர்பார்த்தபடி ஆசனத்தில் இருந்தாள். பெத்ரோ துரை எழுந்து நின்று மெல்லிய உற்சாகமான குரலில் தொடர்ந்தார் –

”எங்கள் மூத்த முந்தைய பேரரசர் மேனுவேல் பெருந்தகை   இயற்கை எய்தும்வரை இந்த சிண்ட்ரா நகரில் வருடத்துக்கு ஒரு தடவையாவது போய் இருந்து ஒரு மாதம் கழிப்பார். பக்கத்திலேயே நல்ல காட்டு வளமும்,   போதும் என்று திருப்தி அடையும் வரை வேட்டையாட விலங்குகளும், நல்ல உணவும், அருமையான தட்ப வெட்ப நிலையும் தேடி இப்போதைய மன்னரும் போகும் இடம் சிண்ட்ரா. நீங்கள் வரும்போது நிச்சயம் அங்கே அன்போடு அழைக்கப் படுவீர்கள். மிகப் பெரிய கிறிஸ்துவ தேவாலயங்களும் புராதனமான கட்டிடங்களும் நேர்த்தியான சாலைகளுமாக நிறைந்த நகரம் அது”. 

பெத்ரோ உற்சாகமாகச் சொல்லிப் போனது மகாராணி கைகாட்டிச் சிரித்தபோதுதான் தற்காலிகமாக நின்றது. 

”மன்னிக்க வேண்டும் மகாராணி. சொந்த நாடு, சொந்த ஊர், அப்புறம் அம்மா. புகழ்பாட ஆரம்பித்தால் நிற்கவே நிற்காது”. 

பெத்ரோ நெகிழ்ச்சியோடு சொல்ல மகாராணி ஆம் என்று தலையசைத்தாள்.   

“லிஸ்பன் பக்கம் வேறே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஏதும் உண்டா?”

”உண்டே. செண்ட்ரா நகருக்கு சகோதரி போல கஸ்கய் நகரம் உண்டு. மனிதன் பூமியில் பிறந்து வந்து பரிணாம  வளர்ச்சி அடைந்த காலம் ஊடாக அங்கே வசித்து வந்திருக்கிறார்கள். லிஸ்பனுக்கு வரும் கப்பல் எல்லாம் நகருக்கு வெகு அருகே மேற்கில் எழுந்து நிற்கும் கஸ்கய் துறைமுக நகரில் நங்கூரம் பாய்ச்சி நின்றுதான் போகும்.  உங்களுக்கு மீன் உணவு உண்ணப் பிடிக்கும் என்றால் கஸ்கய் நகர மீன்கள் பிடிக்காமல் போகாது. விதவிதமான மீன்கள், கடல் மீன்களும் குளக்கரை, நதி மீன்களும் அபாரம். நான் கேட்க அனுமதித்தால், நீங்கள் அசைவம் உண்பீர்கள்தானே?” 

பெத்ரோ தன் நல்ல நேரத்தை நினைத்து சந்தோஷமும் பெருமையும் அடைந்திருந்திருந்தார். கவுடின்ஹோ அல்லது வேறு எந்த நாட்டு அரசப் பிரதிநிதியும் ஜெருஸோப்பா மகாராணியோடு, அதுவும் முக்கியமான விளைபொருளான மிளகின் விலையைத் தீர்மானிக்கும் மிளகு ராணியோடு மீன்கறி பற்றிப் பேசுகிறது போல் சில்லரை விஷயம் பேசியிருப்பார்களோ. 

”ஓ அது ஒன்றும் தப்பில்லை சென்ஹர் பெத்ரோ. மீன் எப்போதாவது என் தாதி மிங்கு கொண்டு வந்தால் கட்டுப்பாடு எல்லாம் மீறி கொஞ்சம் உண்பது உண்டு. இங்கே கொங்கணி பிரதேசத்திலும் வங்காளத்திலும் பிராமணர்கள் தொடங்கி அனைவரும் மீன் உண்பவர்கள் தான். நான் ஷத்திரியத்தி. படைவீர இனம். உங்க நாட்டில் இப்படி பிரிவு எல்லாம் உண்டா?”

பெத்ரோ இல்லை என்று மரியாதையோடு பதிலளித்தார்.

”நான் விருப்பப்பட்டால் மீன் மற்றும் கடல் பிராணிகளை உண்ணலாம். ஆனால் எனக்கு அந்த மாதிரி உணவு ஏற்றுக்கொள்ளாததால் ஏதோ ஒரு தினம், ஒரு சிறு வட்டிலில் எடுத்தது என்று ருசி பார்க்கிறேன். விஜயநகரப் பேரரசர் விருந்துக்குக் கூப்பிடும்போது அசைவமும் சைவமும் என்ன எல்லாம் அந்தப் பருவத்தில் கிடைக்கிறதோ அது எல்லாம் சமைக்கப்பட்டு விருந்து மண்டபத்துக்கு வந்து சேர்ந்து விடும். அங்கே விருந்து ஒரு நீண்ட சம்பிரதாயம் சார்ந்த நிகழ்ச்சி. சாப்பிடுவது நம் வயிற்றுக்காக இல்லை. வேண்டப்பட்டவர்களோடு கூடி இருந்து பேசிச் சிரித்து அவசரம் காட்டாமல் மெல்ல மென்று உண்ணும் சம்பிரதாயம். எவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கிறோமோ அவ்வளவு விரைவில் பேரரசர் கவனிப்பிலிருந்து விலகி விடக் கூடும். போன விருந்தின் போது, அது நாலு நாள் முன், பௌர்ணமி ராத்திரி விருந்தில், நான் பயணம் போக விருப்பப் பட்டதாக வெங்கட தேவராயரிடம் – விஜயநகர் அரசரிடம் – அறிவிக்கும் முன் சாதம், இறைச்சி, காய்கறி என்று மூன்று பேர் சாப்பிடும் அளவு உண்டபடி அவர்   நோக்கக் காத்திருந்தேன். காசி ராமேசுவரம் போக சென்னாதேவிக்கு எண்பது வயதாகட்டும். தில்லி முகலாயப் பேரரசர் அக்பர்-எ-ஆஸம் அவர்களைச்  சந்திக்க உருது மொழி கற்றுக்கொண்டு இன்னொரு ஆண்டு ஆகட்டும். லிஸ்பன் போவதாக இருந்தால் சென்று வரட்டும். நம் அரசு வட்டத்தில் வெளிநாடு யாரும் போனதில்லை. நான் கூடப் போனது இல்லை. சென்னா இங்க்லீஷ், மற்றும் ஃ பிரஞ்ச் மொழி கற்றுக் கொண்டால் சௌகரியமாக இருக்கும். இப்படி அவர் சொன்னபோது பகடி செய்கிறாரா, கண்டிப்பை உள்ளே வைத்த நகைச்சுவையாகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை”.

”உங்கள் பயணத்துக்கு மாமன்னரின் ஒப்புதல் உத்தரவு கிடைத்ததாக எடுத்துக் கொள்ளலாம் தானே?” பெத்ரோ ஆவலோடு விசாரித்தார்.

”பெத்ரோ அவர்களே, உத்தரவு எல்லாம் யாரும் யாருக்கும் தரவோ பெறவோ வேண்டியதில்லை. எங்கள் அரசியல் அமைப்பில் பாதுகாப்புப் பணியை அதற்கான கட்டணம் பெற்றுக்கொண்டு விஜயநகரம் செய்து வருகிறது. நாடுகளின் தொகுப்பு அவர்களால் நிர்வகிக்கப்பட்டு பரஸ்பர ’விற்பனை – வாங்குதல்’ சார்ந்த பணம் ’கொடுத்தல் – வாங்குதல்’ அவர்களால் சீராகத் தீர்வு செய்யப்படுகிறது. பார்த்திருப்பீர்களே, இங்கே உத்தர கன்னடத்திலும், அடுத்த பிரதேசங்களில் அத்தனை நாடுகளிலும் விஜயநகர் காசு பணம் தான் புழங்குகிறது. வராகன், பணம், காசு, விசா. அவற்றின் மதிப்பு எல்லா இடங்களிலும் ஒன்றுதான். அந்த நிதி மதிப்பு நிர்வாகம் விஜயநகரம் செய்வது”.

”புரிகிறது மகாராணி அவர்களே”. 

எழுந்து நின்று ஒரு முறை வணங்கினார் பெத்ரோ. 

“ஆக, நான் மகாராணியாரின் லிஸ்பன் எழுந்தருளல் தொடர்பான காரியங்களைத் தொடங்கலாம் அல்லவா?” ஆவலோடு கேட்டார் பெத்ரோ.

கையில் எடுத்த ஆரஞ்ச் பழத்தை அவரிடம் கொடுத்துச் சிரித்தபடி நடந்தாள் மகாராணி சென்னபைரதேவி.

வெளியில் பெய்யும் மழையில் ஒரு சின்னப் பையன்போல் நனைந்து ஓடி ஆட வேண்டும் போல் இருந்தது பெத்ரோவுக்கு.

அவர் உற்சாகமாக நடந்து போனார்

Series Navigation<< மிளகு  அத்தியாயம் முப்பத்திமூன்றுமிளகு அத்தியாயம் முப்பத்தைந்து >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.