மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 2

This entry is part 2 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

ச்சீ! ச்சீ!  இதைக் கேட்டு சுஹாக்வந்திக்கு காது எரிவது போல் இருந்தது. மித்ரோ எழுந்து கட்டிலுக்கருகே சென்றாள். முதலில் போர்வையை எடுத்தாள். பிறகு அதன் உள்ளே இருந்த ஒற்றைப் போர்வையையும் தலையணையையும் கைகளால் புரட்டிப் பார்த்தாள். பிறகு,  சுஹாக்வந்தியைப் பார்த்து ” அண்ணி, உங்கள் கொழுந்தனைப் போல ஒரு முட்டாள்,  இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்கவே முடியாது. சுக துக்கமில்லை, அன்பு பாசம் இல்லை, பொறாமை தாகம் இல்லை. எந்த உணர்வும் இல்லை. வந்தநாளாய் நான் கண்டது இந்த அடியும் குத்தும் உதையும் தான்.”

திடீரென அவள் கண்களில் ஒரு வெறி தோன்றியது. கழுத்தில் கிடந்த துப்பட்டாவை இழுத்து ஒரு பக்கம் வீசினாள். குர்தாவையும் பிறகு சல்வாரையும் கழற்றி மறுபக்கம் வீசினாள். பிறகு, சிரித்தபடியே, ” அண்ணி,  ‘மித்ரோ, உன் உடல் சர்க்கரை பாகு போல இருக்கிறது’ என்று பன்வாரி சொன்னார். அதற்கு நான்,  இதே   சர்க்கரைப் பாகில்தான் உங்கள்  ஆன்மாவைக் கொத்தும் பாம்புகளின் படையும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பதிலளித்தேன்,” என்றாள்.

மூத்த மருமகளின் முகம் கருத்துப் போனது. ” அம்மா தாயே! உனனை கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னைப் பழிகாரி ஆக்கிவிடாதே,” என்றாள்.

மித்ரோ சடாரென படுக்கையில் விழுந்தாள். மேலே எதையும் போர்த்திக் கொள்ளவில்லை. அதைப் பார்த்த சுஹாகின் உடம்பில் ஊசி குத்துவது போல இருந்தது. இந்த சிறுக்கியை போல, மற்ற  பெண்களும் வெட்டங்கெட்டுப் போனால்,  தினந்தோறும் எச்சில் படுத்தப்பட்டுவரும் பெண்களின் உடல், வெறும் பாவத்தின் குடமாக மட்டுமே எஞ்சியிருக்கும்.

சுஹாக் கம்பளியை இழுத்து முகத்தையும் தலையும் மூடிக்கொண்டாள்.

மித்ரோ குரல் கொடுத்தாள் “கண்களைத் திறந்து என்னைப் பாருங்கள் அண்ணி! என்றாள்.

சுஹாக்வந்தி, முகத்தை மூடிக்கொண்டே, ” அண்ணன் தம்பிகளுக்கு சரியான பாம்பு காது! எங்கேயாவது அவர்கள் காதில் விழுந்து விடப் போகிறது” என்றாள்.

மித்ரோ படுத்தபடியே,  “கேட்கட்டுமே,  எனக்கென்ன பயம்?” என்றாள்.பிறகு ஓரகத்தியிடம், ” சகோதரி, தயவுசெய்து இந்த ஒரு முறை மட்டும் நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்” என்றாள்.

சுஹாக்வந்தி வேண்டா வெறுப்பாக  கண்களைத் திறந்தாள்.

தலையை உயர்த்தி, “என்னடி?” என்று  எரிச்சலுடன் கேட்டாள்.

படுத்திருந்த மித்ரோ, படக்கென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள். கைகளால் தன் மார்பை மறைத்துக்கொண்டு,  ” உண்மையைச் சொல்லுங்கள் சுஹாக்வந்தி அண்ணி, எனக்கிருப்பது போன்ற மார்பகங்கள் வேறு எவருக்கேனும் இருக்கிறதா?….” என்றாள்.

சுஹாக்வந்திக்கு உடம்பு முழுவதும் எரிய ஆரம்பித்தது. படுக்கையை விட்டு எழுந்து அருகே வந்தாள். இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக் கொண்டாள்.

” அடி கூறு கெட்டவளே!  செத்த பிறகு நீயும் ஒரு காலத்தில் உயிரோடு இருந்தாயா என்று கூட ஒருவரும் கவலைப்படப் போவதில்லை!

தினமும் கொஞ்சம் கொஞ்சமாக இழைந்து தேய்ந்து அழிந்துகொண்டிருக்கும் இந்த உடல் மீது உனக்கு இவ்வளவு கர்வமா? வெட்கக்கேடு! ஒவ்வொரு வீட்டிலும் உன்னைப் போல பல பெண்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கும் உன்னைப் போலவே இரண்டிரண்டு கைகள், கால்கள், கண்கள், உன்னுடையதைப் போலவே இரண்டு மார்பகங்கள்! நீ மட்டும் என்ன வானத்திலிருந்து குதித்துவிட்டாயா என்ன?”

மித்ரோ வெட்கமின்றி இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டாள். “என் கொழுந்தனாரின் சதி சாவித்திரியை ஒத்த மனைவியை தரிசித்து நான் தன்யாவானேன்” என்று கிண்டலாகச் சொன்னாள்.

“அண்ணி,  கடவுள் கொடுத்த “சக்தி” மித்ரோவிடம் இருக்கும் வரை அவள் இறக்க மாட்டாள்.  என் கொழுந்தனாரிடம்  சொல்லி வையுங்கள்,” என்றாள்.

நல்ல குணம் படைத்த, பன்வாரியின் மனைவி சுஹாக்வந்தி, திடீரென சண்டி ரூபம் எடுத்தாள்.

“வாயை மூடடி கேடு கெட்டவளே! எழுந்து மரியாதையாக உடைகளை அணிந்து கொள். இல்லாவிட்டால் என்னை விடப் பொல்லாதவன் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்”  என எரிச்சலுடன் சீறினாள்.

ஓரகத்தியின் கோபத்தை வேடிக்கையாக ரசித்தபடியே மித்ரோ,  உடைகளை அணிந்து கொண்டாள். சுஹாக்வந்தி தலையை அசைத்து தனக்குத் தானே பேசிக் கொண்டாள்,  “முறைப்படி திருமணம் செய்து பல்லக்கில் அமர்த்தி வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்த மணப்பெண்ணின் இலட்சணமா இது? இவள் இந்த வீட்டு மருமகளாக வர என்ன பாவம் செய்தோமோ? அம்பிகையே, இந்த வீட்டின் மான மரியாதையை நீ தானம்மா காப்பாற்ற வேண்டும்!”

பிறகு கண்களைத் திறந்து மித்ரோவிடம், “இன்றைக்கு உனக்கு அதிர்ஷ்டம் இல்லை. அண்ணன் தம்பியிடமிருந்து தப்பித்து விட்டாய். செத்துப் போயிருந்தால் நீயும்  இந்த மாய வலையிலிருந்து விடுபட்டிருப்பாய். அவர்களுக்கும் நிம்மதி கிடைத்திருக்கும்.”

பிறகு  மோவாயில் கையை வைத்துக்கொண்டு “உண்மையைச் சொல்,  உனக்கு ஏன் இப்படி எல்லாம் எண்ணங்கள் தோன்றுகின்றன? எப்படி நீ இந்த கெட்ட வழிக்கு போக ஆரம்பித்தாய்?” என்றாள்.

மித்ரோவிற்கு தயக்கமோ கூச்சமோ கிஞ்சித்தும் ஏற்படவில்லை.

“ஏழு நதிகளின் சங்கமம் என் அம்மா. தோசைக் கல்லைப் போல கருப்பு. நானோ வெள்ளை வெளேரென்று அவள் வயிற்றில் பிறந்தேன்.  அந்த வட்டாரத்து பணக்கார தாசில்தாரின் வாரிசு நான் என்று அம்மா சொல்லுவாள். அண்ணி,  இப்போது நீங்களே சொல்லுங்கள் உங்களைப்போல அறம் பிறழா வலிமையை நான் எங்கிருந்து பெறுவேன்? எங்கிருந்து கொண்டு வருவேன்? கல்லானாலும் கணவன் என்று எப்படி இருப்பேன்? உங்கள் கொழுந்தனாருக்கோ,  என் வியாதி என்னவென்றே புரியவில்லை. எவ்வளவு நாட்கள் கழிந்து விட்டன…. எப்போதாவது…. ஒரு வாரமோ அல்லது பதினைந்து நாட்களிலோ ஒரு முறை…

என் உடல் தீராத தாகத்தில் தவிக்கிறது. நான்  நீரை விட்டு நீங்கிய மீனைப் போல துடிக்கிறேன்.”

சுஹாக்வந்தி, தெறித்து விழுந்து விடுவது போன்ற கண்களுடன், மித்ரோவை முதல்முறையாக பார்ப்பவள் போல, அவளை ஏற இறங்க பார்த்து விட்டு, வலுவற்ற குரலில், ” மித்ரோ,  இந்த நல்ல மனிதர்கள் வீட்டில் சம்பந்தம் செய்தது உன் அம்மாவின் தவறு,” என்றாள்.

பிறகு கோபத்தில் முகம் சிவக்க, ” மித்ரோ மருமகள்களுக்கும் மகள்களுக்கும் குடும்ப பழக்க வழக்கங்களையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றுவதென்பது லட்சுமணன் கிழித்த கோடு போல. தப்பித்தவறிக் கூட நாம் அதை தாண்ட நினைச்சா….”

மித்ரோ காதுகளைப் பொத்திக்கொண்டு,  கண்களைத் தாழ்த்தி, ” நீங்கள் என் முதுகைத் தட்டி அறிவுரை கூறினால் நான் தலையாட்டிக் கேட்டுக் கொள்வேன். ஆனால், என் உடல் முழுவதும் பரவியிருக்கும் இந்த வியாதியை..”.

சுஹாக் மேற்கொண்டு கேட்க பிடிக்காமல்,   போதும் நிறுத்து என்று கைகளால் ஜாடை காட்டினாள்.

மித்ரோ   கண்களை மூடிக்கொண்டு,  தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டாள் – “மித்ரோ ராணி! நீ எதற்கு கவலைப்படவேண்டும்? கவலையும் பயமும் உன் எதிரிகளுக்கு உண்டாகட்டும். உன்னை வனைந்து,  உலகில் உள்ள சுகங்களை யெல்லாம் அனுபவிக்க பூமிக்கு அனுப்பிய அவனே, உன்னை பற்றிக் கவலைப்படட்டும்!”

கண்களை மூடியதுமே, பனாரஸைச் சேர்ந்த அவளது போலீஸ்கார நண்பன் நயாமத் ராயின் முகம் கண் முன் தோன்றியது. ஆறடி உயரமும் மீசையும் கொண்ட ஆஜானுபாகு. முதலில் அருகில் நின்று கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான். பிறகு கோபத்துடன், ” ஏய் வாயாடி, எழுந்து உட்கார்!

வந்திருப்பது யார் என்று பார்க்கவில்லையா?” என அதட்டினான்.

“என்னைப் பொருத்தவரை வந்திருப்பது ஒரு திருடன். அதிகம் துள்ளாதே,  நயாமத் ராய்! இது உன்னுடைய காவல் நிலையம் இல்லை. என்னுடைய ராஜ்யம். என்னுடைய சமையலறை”

நயாமத் கையை நீட்டி அவளுடைய துப்பட்டாவை இழுத்தான்.

“போதும். போதும். நீ இப்படியே படுத்துக் கிடந்தால், உன் ராஜ்யம் கொள்ளை போய்விடும்”

மித்ரோ சந்தோஷமாக கைகளை விரித்துக் கொண்டு, ” சபாஷ்! கீழ்க்குடி ஈனப்பிறவியே! பாலைக் கண்டதும்,  திருட்டுப்பூனையைப் போல் வாய் வைக்க வந்தாயோ?”

போர்த்தியிருந்த கம்பளி விலகி விழுந்ததும், சுஹாக், எச்சரிக்கும் விதமாக, ” ஏ ஓரகத்தியே! கற்பனை குதிரையை ஓட விடாதே! வாயை மூடிக் கொண்டு, ஒழுங்காகத் தூங்குகிற வழியை பார். இன்னொரு முறை நீ அசைவதை பார்த்தால் நான் சும்மா இருக் மாட்டேன்” என்றாள்.

மித்ரோ படுக்கையில் நெளிந்தாள்.

“என் மனதிலும் உடலிலும் நிறைந்து கிடக்கும் கள்வனின் மீது, உன்னுடைய அதிகாரம் எப்படிச் செல்லுபடியாகும் அண்ணி? என்று கேட்க வேண்டும் போல  மனம் குறுகுறுத்தது. பிறகு அவளுக்கு தோன்றிற்று –  அண்ணி உண்மையாகவே அறத்தின் பாலும், சத்தியத்தின் பாலும்  நிற்பவள். இல்லாவிட்டால் படுக்கையில் நான் நயாமத்திடம் வாதாடிக் கொண்டிருப்பது அவளுக்கு எப்படி தெரிய வந்தது?”

காலையில் கண்விழித்தபோது,  ஓரகத்திக்கு பதிலாக மாமியார் அருகே அமர்ந்திருப்பதை பார்த்தவுடன், முந்தின இரவு நடந்த சண்டைகளும் விவாதங்களும் மித்ரோவுக்கு நினைவு வந்தன. கைகளை விரித்து, நிதானமாக சோம்பல் முறித்தாள். மாமியாரைக் கூர்ந்து பார்த்தாள்.

” இந்த இளமையை நான் எங்கிருந்தும் கடன் வாங்கி வரவில்லை” என்று மாமியாரிடம் ஏளனமாகக்கூறி  அவளைச் சீண்ட வேண்டும் போலத் தோன்றியது.

கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டபடியே,  திமிருடன், ” இவ்வளவு விடியற்காலையில் இங்கே என்ன செய்கிறீர்கள் அம்மா, பாவம்,  மித்ரோ வேறு உலகத்துக்கு போய்விட்டாளே! அவள் கிடந்த இடத்தில் விளக்கேற்றி வைக்கலாமென வந்தீர்களா?” என்றாள்.

தன்வந்தி வெகு நேரம் மருமகளை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். பிறகு தலையை அசைத்தபடியே, “மகளே! அந்த பாக்கியம் எனக்கு எங்கே?

உன்னை இந்த பூமிக்கு மான மரியாதையுடன் கடவுள் அனுப்பி இருந்தால், நானும் என் சுமித்ரா ராணிக்காக மனம் விட்டு அழுதிருப்பேன். ஆனால் என் துரதிஷ்டம், எனக்கு இதுவரை அந்த நாளைப் பார்க்க கொடுத்து வைக்கவில்லை,” என்றாள்.

“அம்மாதிரியான நாட்கள் இன்னும் நிறைய வரத்தான் போகின்றன அம்மா. எல்லா கவலைகளையும் சோகத்தையும் இன்றே தீர்த்து முடித்து விட வேண்டும் என நினைக்காதீர்கள். “

சமையலறையிலிருந்து சுஹாக்வந்தியின் குரல் கேட்டு, தன்வந்தி எழுந்தாள். போகிற போக்கில்,  தலையில் அடித்துக் கொண்டு, ” உன் அம்மாவையும் ஒரு மனுஷியென மதித்து, உன் வீட்டில் பெண்ணெடுத்து,  உன்னை மருமகளாக்கிக் கொண்டு வந்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்,” என்றாள்.

மித்ரோ பதில் சொல்ல வாய் எடுப்பதற்கு முன்பாகவே அறை வாசலில் மூத்த கொழுந்தனாரின் நீண்ட நிழல் விழுந்ததை பார்த்துக் கூச்சமடைந்தாள். முந்தைய இரவின் சம்பவங்கள் நினைவுக்கு வர,  கொழுந்தனாரைச் சீண்டும் விதமாக, துப்பட்டாவை தலையை மறைத்தும் மறைக்காமலும் இழுத்துவிட்டுக் கொண்டு, “கொழுந்தனாரே! என் ஓரகத்திக்கு நான் ஒருபோதும் சமமாக மாட்டேன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும்… கொஞ்சம் இந்தப் பக்கமும் உங்கள் பார்வை பட்டால்…..”

பன்வாரிலால்,  கேட்டும் கேட்காத மாதிரி, முகம் சிவந்து நகர்ந்தான். சுஹாக் அறைக்குள் வந்து, ” வேகமாகக் குளித்து விட்டு வா மித்ரோ. சின்ன மருமகளுக்கு உடல்நிலை சரியில்லை. நான் வீடு பெருக்கி மெழுகி விடுகிறேன். நீ சமையலைப் பார்த்துக்கொள்,” என்றாள்.

“அய்யய்யோ, அண்ணி, நான் செத்தேன்! இந்த அப்பளக்கார வீட்டு மேனாமினுக்கி ஃபூலாவந்தி, வந்ததிலிருந்து ஓவ்வொருநாளும் இப்படித்தான் நாடகம் போடுகிறாள். சாப்பிடுவதில் ஒன்றும் குறைச்சலில்லை. தினமும் நான்கு தொன்னைகள் ரொப்பி இனிப்புகள். இரவுக்கு அரை சேர் கெட்டிப் பாலில் ஊற வைத்த ஜிலேபிகள்!”

சுஹாக்வந்தி மறுத்தபடி தலையசைத்து, “இல்லை மித்ரோ,  அவள் மீது அபாண்டமாக பழி சொல்லாதே. உண்மையிலேயே அவளுக்கு இன்று உடல் நிலை சரியில்லை,” என்றாள்.

 மித்ரோ முகத்தைச் சுளித்துக்கொண்டு,  ” இன்று எலும்பு முறிந்து விட்டது போல உடல் வலி, இன்று காய்ச்சலில் நெற்றி கொதிக்கிறது, இன்று இடுப்பு வலிக்கிறது, இன்று இதயம் கொஞ்சம் வேகமாகத் துடிக்கிறது…”

சுஹாக் அவளைப் பேசவிடாமல் தடுத்தாள். “ஃபூலாவந்திக்கு இன்று நிஜமாகவே உடம்பு சரியில்லை. அவளுடைய உடல் கட்டை போல விரைத்துக் கிடக்கிறது,” என்றாள்.

”என்ன ஒரு சீராட்டல் இந்த பட்டுக்க்குஞ்சலத்துக்கு! ஃபூலாவந்திக்கு உடல் நிலை சரியாக இருந்தால், அவள் அப்பளக்காரர் வீட்டு வாரிசாக எப்படி இருக்க முடியும் சகோதரி? பொண்ணு கெட்டிக்காரி. என்னவெல்லாம் சாக்கு போக்கு சொல்லுவா தெரியுமா? அவள் சரியான ஜகஜ்ஜாலக்கள்ளி,” என்றாள்.

வாய்விட்டு சிரிக்கத் தோன்றிய போதிலும்,  சுஹாக் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டாள். வாஞ்சையுடன், ” எழுந்திரு என் சகோதரி, போய்  சீக்கிரம் குளித்துவிட்டு வா,” என்றாள்.

மித்ரோ பதினாறு வயது பெண்ணின் உற்சாகத்துடன் துள்ளி எழுந்தாள். முற்றத்தில் கணவனைப் பார்த்ததும், குறும்பு கொப்பளிக்க,  ஒயிலாக இடுப்பை அசைத்தாள்.

“நான் இன்னும் சாகவில்லை. உயிரோடு தான் இருக்கிறேன்”

கணவன் பதிலேதும்  பேசாமல் கோபமாக இருப்பதை பார்த்ததும், தோள்களைக் குலுக்கிக் கொண்டு, குளியல் அறைக்குள்  நுழைந்தாள்.

குளித்துவிட்டு வருவதற்குள் ஓரகத்தி, சமையலறையில் ரொட்டி செய்ய ஆரம்பித்துவிட்டிருந்தாள். மாமியார்,  மகன்களுடன் மாமனாரின் அறையில் அமர்ந்து ஏதோ மதியாலோசனையில் ஈடுபட்டிருந்தாள்.

மித்ரோ, உற்சாகத்துடன் துள்ளிக்கொண்டே ஃபூலாவந்தியின் அறைக்குள் வந்தபோது, அவளுடைய மயக்கம் தெளிந்திருந்தது. கொழுந்தன் குல்ஜாரி லால் அவளருகே அமர்ந்து, அவளது உள்ளங்கைகளைத் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தான்.

மித்ரோ இதைப்பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். போலிப் பாசத்துடன் ஓரகத்தியை முத்தமிட்டு, ” பாவம் ஃபூலா வந்தி,  இந்தச் சின்ன வயதில் நீ எத்தனை வியாதிகளை உன் உடலில் வளர்த்து வைத்திருக்கிறாய்? இந்த மயக்கம் இருக்கிறதே,  அது குணமாவதற்குள் உடம்பில் உள்ள ரத்தம் அனைத்தையும் உறிஞ்சிக் கொண்டு விடுமே!” என்று கவலைப்படுப வள் போல போலியாகக் கேட்டாள்.

ஃபூலாவந்தி குற்றம் சாட்டுகிற மாதிரி தன் கணவனை பார்த்தாள். பிறகு மித்ரோவை நோக்கி கைகளை விரித்து, ” யாராவது கேட்டால் தானே சகோதரி. சொல்லிச் சொல்லித் தோற்று விட்டேன். என் உடலில் தெம்பில்லை. ஆனால் இந்த வீட்டினரோ நான் வேஷம் போடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு இதயக்கோளாறு ஏற்பட்டிருக்கிறதென்று அவர்களிடம் எப்படிச் சொல்வேன்?”

“இதயக் கோளாறா? என்ன சொல்கிறாய் சின்னவளே? இது ராஜா மகாராஜாக்களுக்கு வரும் நோயாயிற்றே!” என்றாள்.

பிறகு மைத்துனனைப் பார்த்து, ” எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு முதலில் என் ஒரகத்திக்கு மருந்து வாங்கி கொடுக்கும் வழியைப் பார்! இல்லாவிட்டால் உன் மனைவியை உயிரோடு இழந்து விடுவாய்! என்றாள்.

அண்ணி புத்திமதி சொல்கிறாளா அல்லது கேலி செய்கிறாளா என்று குல்ஜாரி லாலுக்குத் தெரியவில்லை.

அவன் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தான்.

ஃபூலாவந்தி படுத்தப்படியே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாள்.

” நான் உயிரோடு இருந்தால் என்ன? செத்தால் என்ன?  என்னைப்பற்றி யாருக்கு என்ன கவலை?”

மித்ரோ அருகே வந்து பூலாவந்தியின் மார்பில் கையை வைத்துத் தலையாட்டிபடி “அதிசயம் தான் கொழுந்தனே! ஃபூலாவந்தியின் இதயம் வானையே தொட்டுவிடும் போல ஃபடக் ஃபடக் என்று துடிக்கிறது!” என்றாள்.

குல்ஜாரியின் முகம் வெளிறிப் போனது. திக்கியவாறே, “பயப்படும்படியாக எதுவும் இல்லை தானே அண்ணி?” என்றான்.

”பயப்படும்படியாகவா?  இந்த அதிவேக இதயத் துடிப்பு நோயிலிருந்து யாராவது பிழைத்திருக்கிறார்களா என்ன? இந்த உயிர்க்கொல்லி வியாதி,  உயிரை எடுத்துக் கொண்டுதான் அகலும்! ஃபூலா ராணிக்கு முத்து பஸ்பம் வாங்கிக்கொடு கொழுந்தனே! வைத்தியர் நாதிஷாவிடம் கொண்டு காட்டி மருத்துவம் பார்,” என்றாள்.

குல்ஜாரி கையை நீட்டி ஃபூலாவந்தியின் தோள்களை தொட்டவுடன்,  பாவம்,  அவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். “இந்த வியாதியிலிருந்து நான் மீள மாட்டேன். யாராவது உடனே வைத்தியரையோ மருத்துவரையோ கூப்பிடுங்கள்!” என்றாள்.

ஆரம்பத்தில்,  மித்ரோ எல்லாவற்றையும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு கொழுந்தனைப் பார்த் கண் சிமிட்டி கைத்தட்டி க்கொண்டே, ” ஒப்புக்கொண்டு விட்டேன் ஃபூலாராணி, ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்!  குல்ஜாரி! உன் பொண்டாட்டிக்கு இதயத்துடிப்பும் இல்லை,  வலியும் இல்லை. எந்தவித பலவீனமும் இல்லை. இவள் லேசுப் பட்டவள் இல்லை. குல்ஜாரி,  நீ இப்படியே மண்ணில் பிசைந்த பொம்மையைப் போல நின்று கொண்டிருந்தால், ஒரு நாள் உன்னுடைய புத்தி,  மூளை எல்லாவற்றையும் சுரண்டி எடுத்துக் கொண்டு சென்று விடுவாள் இந்த சிறுக்கி! என்றாள்.

அடிபட்ட சிங்கத்தைப் போல, ஃ பூலாவந்தி உரத்த குரலில் கத்தத் தொடங்கினாள்.

“என்னுடைய நோயைப் பொய் என்று சொல்பவர்களின் உயிர் துடிக்கட்டும்! வலியில் அவர்கள் நெஞ்சு வெடிக்கட்டும்!”

“சும்மா இருடி ஃபூலா! பொய்யான நோய் நாடகம் போடுவதை விட்டுவிட்டு, ஒரு ஆம்பிளை சிங்கத்தை பெற்றெடுக்கும் வழியைப் பார்” என்று மித்ரோ அவளை அதட்டினாள்.

ஓரகத்திகளின் வாக்குவாதம் முடிவடையாமல் நீண்டு கொண்டே இருப்பதை பார்த்து தனவந்தி அறைக்குள் வந்தாள். மருமகள்களை கோபமாக முறைத்து விட்டு, மகனிடம் கேலியாக, ” ஏனப்பா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இவர்கள் இருவரும் சண்டையிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாயா? உன் அண்ணிதான் தான் வாயாடி என்று தெரியுமே,  நீயாவது உன் மனைவியை  சமாளிக்கக் கூடாதா? என்றாள்.

குல்ஜாரி எதுவும் செய்யமாட்டாமல் தலையசைத்து, ” ஃபூலாவின் மீது குற்றம் இருந்தால் அவளிடம் ஏதாவது சொல்லலாம். அண்ணி வலிய வந்து வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டால்…. நான் என்ன செய்ய….” என்றான்.

மித்ரோ உதட்டைச் சுழித்துச் சிரித்தாள்.

“சபாஷ் குல்ஜாரி,  நன்றாகப் பேசுகிறாய். திருமணமாகி, மனைவி வந்த பிறகாவது,  நீ உண்மையான ஆண்மகனாக நடந்து கொள்வாய் என நான் தவறாக நினைத்து விட்டேன்” என்றாள்.

தனவந்தி நடுவில் புகுந்து மருமகளை அதட்டி, ” தேவையில்லாமல் கடுஞ்சொற் களை உபயோகிக்காதே.  உன் நாவை அடக்கு” என்றாள்.

மித்ரோ,  கண்களாலேயே கொழுந்தனின் முகமூடியை அகற்றிவிட்டு, ஏளனமாக தலையை அசைத்தபடி, “தம்பி குல்ஜாரி, அம்மாவின் இத்துனூண்டு அதட்டலில் பயந்து விட்டாயா? நீ ஆம்பிளை சிங்கம் இல்லையா? என் ஓரகத்தி ஃபூலாவந்தி உன்னோடு….”என்று முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தினாள்.

ச்சீ!  ச்சீ! தனவந்தியின் உடல் முள் குத்தியது போல கூசியது.

“இங்கிருந்து போய்விடு. என் கண் முன் நிற்காதே மருமகளே,” என்று கூறியபடியே தனவந்தி கண்களை மூடிக்கொண்டாள்.

மித்ரோவின் உயரம் இன்னும் ஒரு அங்குலம் கூடியது. மாமியார் கண்களை மூடிக் கொண்டிருப்பதை பார்த்து, ” கண்களை திறவுங்கள் அம்மா. கண்களைத் திறந்து கொள்ளுங்கள். உங்கள் அதட்டலைக் கேட்டுப் பயந்து நான் இங்கிருந்து போய் விடுவேன் என்று நினைத்தீர்களா?” என்றாள்.

தனவந்தி, மித்ரோவைத் தவிர்த்து,  ஃபூலாவின் பக்கம் திரும்பி ” ஃபூலாவந்தி, இப்போது  உடல்நிலை எப்படி இருக்கிறது? ஏதாவது சாப்பிட்டாயா, குடித்தாயா?” என்று விசாரித்தாள்.

“எனக்கென்ன கேடு. நான் நன்றாக தானே இருக்கிறேன் அம்மா. எனக்கு எந்த வியாதியும் இல்லை. நான் படுத்தபடியே நாடகம் தானே போட்டுக் கொண்டிருக்கிறேன்,” என்றாள்.

மித்ரோ சொன்னதையே, சின்ன மருமகள், எரிச்சலுடன் திரும்பச் சொல்கிறாள் என்று தனவந்தி புரிந்து கொண்டாள்.

“ஃபூலாவந்தி, மற்றவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாத,  நல்லது-கெட்டது இரண்டிற்கும்  வித்தியாசம் புரியாதவர்கள் பேசுவதைப் பற்றி  நீ ஏன் கவலைப்படுகிறாய்?” என்றாள்.

ஃபூலாவந்தி கோபத்துடன் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். “இவளை யார் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு  நன்றாக தெரியும் அம்மா. வாயில் வந்ததைப் பேசுகிறாள். யாரைக் குறித்தும் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை” என்றாள்.

மித்ரோ ஓரகத்தியை பார்த்து சீண்டுகிற தொனியில், “ஃபூலாராணி, பசுவை போன்ற சாதுவான மாமியாரின் முன் விஷம் நிறைந்த வார்த்தைகளை கக்காதே. நீ இரவில் கொட்டமடிப்பதும், ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் இந்த மகாபாரதத்தை ஆரம்பிப்பதும் இங்கு எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்,” என்றாள்.

“இவளிடம்  வாயைக் கொடுக்காதே. எதையாவது சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொள்,”  என்று தனவந்தி ஃபூலாவந்திக்கு அறிவுரை கூறினாள்.

ஃபூலாவந்தி தேளைப்போல கொட்ட முடியாது போனதால் துடித்தாள். “போலி இனிப்பு பேச்சுகள் எதுவும் என்னிடம் வேண்டாம் அம்மா. இந்த வீட்டில் நான் காலடி எடுத்து வைத்த நாளாய் என் உயிரைக் குடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறாள் என் ஓரகத்தி. என் பிறந்த வீட்டுக்காரர்கள் பணக்காரர வியாபாரிகளாக இருப்பதால், இங்கு என்னை பார்த்து எல்லோரும் பொறாமைப்படுகிறார்கள்……”

மித்ரோ கொழுந்தனைப் பார்த்து கண்ணடித்து விட்டு, “ஓஹோ! பணக்கார வியாபாரிகள் என்று ஏன் சொல்கிறாய் ஃபூலாவந்தி? ராஜா மகாராஜாக்கள் என்று சொல்ல வேண்டியது தானே?” என்றாள். பிறகு, முகத்தை சுளித்துக் கொண்டு தலையை ஆட்டி,” நாலு அப்பளங்களும் நாலு வடகங்களும் தானே உன் பிறந்தவீட்டு வியாபாரம்?” என்றாள்.

ஃபூலாவந்தி சடார் என்று கட்டிலிலிருந்து கீழே இறங்கினாள்.  எரித்து விடுவது போல கணவனை முறைத்து விட்டு,  கட்டிலின் கைப்பிடியில் மண்டையை இடித்துக் கொண்டு உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள்.

“எனக்கு எல்லாம் நன்றாக தெரியும் என் விரோதிகள் என்னை வீட்டில் அமைதியாக இருக்க விடுவதில்லை. என் நகை நட்டுகளின் மீது அவர்களுக்கு எப்போதும் ஒரு கண்,” என்றாள்.

அவமானத்திலும் கோபத்திலும் துடித்துக் கொண்டிருந்த தனவந்தி, “மருமகளே, உன்  புத்தி பேதலித்து விட்டதா?” எனச் சீறினாள்.

ஃபூலாவந்தி,  குல்ஜாரியின் தர்பாரில் தன் முறையீட்டை வைத்து – ” இப்போது நீயே உன் கண்ணால் பார்த்துக்கொள். உன் அம்மாவும் அண்ணியும் என்னை எப்படிக் கடித்துத் துவைத்துக் கொண்டிருக்கிறார்கள் பார்! நான் இன்று வரை மிகவும் பொறுமையாக தான் இருந்தேன். ஆனால் இப்போது நான் சொல்வதை நீ தெளிவாகக் கேட்டுக் கொள். நான் என் அலங்காரத்தை ஒருபோதும் குறைத்துக்கொள்ளப்போவதில்லை. என் நெத்திச்சுட்டியையும் தலையணியையும் கண்டிப்பாக திரும்ப பெறுவேன்,” என்றாள்.

தனவந்தியின் உதடுகளிலிருந்து வார்த்தைகள் வெளிவர மறுத்தன. “மருமகளே உன் மனதில் இவ்வளவு நம்பிக்கையற்ற தன்மையா. நான் உயிருடனேயே இறந்து விட்டேன். வீடு எல்லோருக்கும் பொதுவானது இதில் என்னுடையது உன்னுடையது என என்ன வழக்கு? ஃபூலாவந்தி, நான் என்ன உனக்கு அந்நியமானவளா?” என்றாள்.

“பரிச்சயமானவர்கள் – அந்நியர்கள் என்கிற  பேச்சில்லை அம்மா. என்னுடைய நகைகளைப் பற்றி பேசுங்கள்,” என்றாள்.

தனவந்தி, மகன் தன் பக்கம் பேசுவானென்று நினைத்து அவனைப் பார்த்தாள் – “மகனே! நீ இருக்கும் போது உன் எதிரிலேயே இப்படி பேசுகிறாளே. நீ இவளுக்கு புத்தி சொல்ல மாட்டாயா?” என்றாள்.

குல்ஜாரி அம்மாவின் பார்வையை தவிர்த்து விட்டு எதுவும் பேசாமல் எழுந்து வெளியே சென்றான்.

மகனின் நடத்தையை பார்த்து தனவந்தியின் மனதில் வெறுப்பு மண்டியது. கோபத்தை மறைத்துக் கொண்டு, மிகுந்த முதிர்ச்சியுடன், “மகளே, பன்வாரியின் முதல் மனைவியின் கொலுசுகள் உனக்குத்தானே சீராக கொடுத்தோம்? அதனால்,  உன் நெற்றிச்சுட்டியை சுஹாகுக்கு கொடுத்து நான் என்ன தவறு செய்து விட்டேன்? ஃபூலாவந்தி, வீடு என்பது எல்லோருக்கும் பொதுவானது.  எல்லோருமாக சேர்ந்து இணைந்து உருவாக்குவது தானே. இந்த மாதிரி பகைமையையும் விரோதத்தையும் தூண்டக்கூடிய பேச்சுகள் வாழவந்த மருமகள்களுக்கு அழகல்ல,” என்றாள்.

ஃபூலாவந்தி விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. கோபத்துடன்,  சண்டையிட முழுவதுமாகத் தயாராக இருந்தாள். “என் அம்மா கொடுத்த நகைகளையும் ஆடைகளையும் மற்றவர்கள் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? அவற்றை நான் மற்றவர்களுடன் ஏன் பகிர்ந்து கொள்ள வேண்டும்? அவை என்ன திருட்டுச் சொத்தா?” என்றாள்.

தனவந்தி மௌனமாக அடங்கிப் போனாள்.

 “மருமகளே கொஞ்சமேனும் வெட்கம் மானம் மீதி இருக்கட்டும். பார்ப்பவர்கள் கேட்பவர்கள் என்ன சொல்வார்கள்?”

(தொடரும்)

Series Navigation<< மித்ரோ மர்ஜானி – 1மித்ரோ மர்ஜானி-அத்தியாயம் 3 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.