நண்பனே பகைவனாய்

சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘மகாநதி’ என்றொரு திரைப்படம் வந்தது. அதில் ஒரு பாத்திரம், கதா நாயகனிடம் ஒ பி எம் (OPM) என்று சொல்வார். புரியவில்லை என்ற போது, ‘அதர் பீபிள்ஸ் மணி’ (Other Peoples’ Money) என்பார். நம் கதா நாயகன் சொல்வார்- ‘எனதும் ஒ பி எம் தான்-ஓன் பர்சனல் மணி’ (Own Personal Money). சமூகத்தின் குற்ற முகத்தைக் காட்டிய திரைப்படம் அது. ஆனால், குற்றங்கள், அதுவும், வெள்ளைக் காலர் குற்றங்கள், செய்யும் போது புலனாவதில்லை மற்றவர்களுக்கு. அந்தக் குற்றம் வெளிப்படும் போது சிறு துளியையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போகும் பெரு வெள்ளமாக, பெரும் நாசத்தை ஏற்படுத்தி விடுகிறது.

மற்றொரு லெமேன் (Lehman) சுனாமி அலை அடித்திருக்கிறது இப்போது. மாசசூசெட்ஸ் கல்வி நிறுவனத்தில் (MIT) பயின்றவரான, ஜனநாயகக் கட்சியின் (Democratic Party) இரண்டாவது மிகப் பெரிய புரவலரான, இணைய இலக்க (உருவிலா- க்ரிப்டோ) பணப் பரிமாற்ற மையமான எஃப்டிஎக்ஸின் (FTX) தலைவரான சேம் பேங்க்மேன் ஃப்ரைட் (Sam Bankman –Fried / SBF) என்பவர் இந்தப் பேரழிவு நிலையை உருவாக்கியுள்ளார்.

முதலில் தன் நிறுவனமாக அலமீடா ரிசர்ச் (Alameda Research) என்னும் க்ரிப்டோ கரன்சி வர்த்தக அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர், வணிகர் என்ற நிலையிலிருந்து, சந்தையென உருமாற்றம் கொள்ள எஃப்டிஎக்ஸ் (FTX) இலக்கப் பணப் பரிவர்த்தனை நிறுவனத்தை உண்டாக்கினார். இந்தப் பரிவர்த்தனை மையத்திற்கென்று சொந்தமான முதலீடு பெரிதாகத் தேவையில்லை; அது ஒரு பரிவர்த்தனைத் தளம் மட்டுமே. அலமீடா மற்றும் FTX இரண்டிற்கும் ஒரே நிறுவனர் என்பது குறிப்பிடத் தக்கது. எஃப்டிடி (FTT) என்ற க்ரிப்டோ இலச்சினைகளை உருவாக்கினார்.. அதில் முதலீடு செய்ய விரும்புவோர், தங்கள் பணத்தை டாலர்களாக அல்லது ஏற்புடைய கரன்சிகளாகச் செலுத்தி, இணைய இலக்க இலச்சினைகளாகப் பெற்று கடன் வாங்கலாம், கொடுக்கலாம். அந்த நிறுவனம் குறைந்த சேவைத் தொகையை மட்டுமே தன் வாடிக்கையாளர்களுக்கு விதித்ததால், புதுமையிலும், நிகழ் நிலை பணப் பரிவர்த்தனைகளிலும், குறுகிய காலத்தில் அதிக வருவாய் என்ற மனக்கோட்டையிலும் இருந்தவர்கள் அதில் தங்கள் நிஜக் கரன்சிகளை-அதாவது, அரசு வெளியிடும் நாணயங்களை, தாங்கள் சம்பாதித்ததைக் கொடுத்து, இணைய இலக்க இலச்சினைகளாகப் பெற்று உலகை வென்ற உவகையுடன் இருந்தார்கள். திரை மறைவில் நிகழ்ந்தது வெளியில் வந்த போது அதிர்ச்சியில் நிலை குலைந்தார்கள். இத்தனைக்கும் அதில் அதிக அளவில் முதலீடு செய்தவர்கள் நிதித் துறை சந்தையின் அம்சங்களை நன்றாகவே அறிந்த சாஃப்ட் பேங், (Soft Bank) செகொ(ய்)யா (Sequoia) போன்றவர்கள். இந்தப் பெயர்கள் சிறு முதலீட்டாளர்களையும், சிறிய சேமிப்பாளர்களையும் FTX ஸை நோக்கி இழுத்தன. வாழ்வாங்கு வாழ்ந்த காலத்தில் அந்த வர்த்தக மையத்தில் தினமும் $2 பில்லியன் அளவிற்கு கரன்ஸி வணிகம் நடைபெற்றது.

அலமீடா, FTX என்ற இந்த இரு நிறுவனங்களின் உறவுதான் இத்தகைய இடர்களுக்கான முன்னோடி எனச் சொல்லலாம்.

தன்னுடைய எஃப்டிடி இலச்சினைகளை, ஆகக் குறைந்த விலைக்கு அல்மீடாவிற்கு விற்றது FTX. பின்னர் அதிக அளவில் இலச்சினைகளையும் அதற்கு அளித்தது. தான் பெற்ற எஃப்டிடி இலச்சினைகளை, அல்மீடா, FTXடமிருந்து தான் பெற்றுக் கொள்ளும் உண்மையான நாணயங்களுக்குப் பிணைச் சொத்தாகத் தந்தது. ஒரே நேரத்தில் இரு அவதாரம்! வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்வது என்று சொல்வது போன்றது இது.

காற்றில் கோட்டை கட்டி, அதை வலது கரத்திலிருந்து இடது கரத்திற்கு மாற்றி பெருங்கோட்டையாய் காண்பித்து மக்களுக்கு விற்று விட்டார்கள். ஆனால், இந்தக் கோட்டையைப் பற்றி அக்டோபர் 2022 வரை ஏன் எவருமே கவலைப்படவில்லை? மக்கள் கருத்தைக் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. இரு தாரக மந்திரங்கள்- ஒன்று FTX மற்றொன்று SBF. மூழ்கிக் கொண்டிருந்த இணைய இலக்க நாணய வர்த்தக நிறுவனமான ‘வாயேஜரை’ சமீபத்தில் தான் FTX வாங்கியிருந்தது. இதுவும் நிதிப் பின்னடைவிற்கான ஒரு காரணம்

நியூயார்க் டைம்ஸின் க்ரிப்டோ தொடர்பாளர் டேவிட் யாஃபி பெல்லனி, (David Yaffe Bellany) தனது 14/05/22 கட்டுரையில், SBF ஒரு நடைமுறைவாதி, தன் பெற்றோர்களிடமிருந்து பயன்பாட்டு வாதத்தையும், பீட்டர் சிங்கர் (Peter Singer) போன்ற ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட ஆளுமைகளிடமிருந்து பரோபகாரம் போன்ற நற் சிந்தனைகளையும் பெற்றுள்ளவர் என்று புகழ்ந்திருந்தார். FTX ‘திவால் அறிக்கை’ தாக்கல் செய்த பிறகும் கூட அவர் தன்னுடைய 14/11/22 கட்டுரையில் அந்த நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு பொருளாதார மந்த நிலை காரணம் என்றும், எந்தக் குற்ற நோக்கமும் SBFக்கு இல்லை என்றும் எழுதினார். இப்படியெல்லாம் ஆறுதல் சொன்னதை 15/11/22ல் கேலி செய்தது ‘நியூயார்க் போஸ்ட்’; இதில் அதிக வேடிக்கை என்னவென்றால், அதன் சகோதரப் பத்திரிகையான ‘வால் ஸ்ட்ரீட் ஜெ(ர்)னல், 30/10/22ல் ‘பொருளாதார மந்த நிலை, க்ரிப்டோ கரன்சி சந்தையையும் பாதித்துள்ளது- அதன் மதிப்பின் ஏற்ற தாழ்வுகள், நிதி நிலவரங்களையும், நிதி வட்டி விகிதங்களையும் சார்ந்துதானே இருக்க முடியும்’ என்று எழுதியது.

ப்ளும்பெர்க் அவரை நவீன ராபின் ஹூட் என்றது, அபீ ஹாஃப்மெனின் (Abbie Hoffman- American Political and Social Activist) மறு அவதாரம் என்றது. ‘நாலு பேருக்கு நல்லது என்றால், இதையெல்லாம் செய்யலாம்- நாயகன்’ ‘வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் அனைவருக்கும் செல்வ வளம்’ என்று விதந்தோதியது.

அவர் அணியும் டி ஷர்ட், கலைந்த தலை, எளிமையான தோற்றம், வீகன் (Vegan) உணவுப் பழக்கம் அனைத்தையும் சொன்னவர்கள், சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள்- அது அவரது நிறுவனம் நிலைத்து, நேர்மையாக நடை பெறுமா என்பது. அட்டையை வைத்து புத்தகத்தை மதிப்பிடுவது, குறிப்பிட்ட மார்பு, இடை, தொடை அளவுள்ளவர்கள் மட்டுமே பெண்களில் பொருட்படுத்தத் தக்கவர்கள் என்பது, ஆண் என்பவன் அறிவுஜீவி என நினைப்பது மனித இனத்தின் குணம் போலும்; பல பத்திரிக்கையாளர்களுக்கு இதையும் மீறிய ஒன்று இருக்கிறது- அது தாங்கள் விரும்பும் விதத்தில் செய்திகளை வளைப்பது, பெரும் கௌரவங்களை இந்தத் தொடர்புகளின் மூலம் அடைவது, பரபரப்பை அள்ளித் தெளிப்பது.

சில இதழியலாளர்கள், தங்கள் அறிவுறுத்தல்களைச் சொல்லித்தான் வந்திருக்கிறார்கள். க்ரிப்டோவிற்கு சுய மதிப்பென்று எதுவும் கிடையாது- அது கடற்கரை மண் கோட்டை; அது தன்னளவிலேயே போதுமான ஒன்றில்லை; பிட்காயின் செல்வமும் சிலரிடம் மட்டுமே குவிகிறது; பிட்காயினை உருவாக்க அதிக மின் சக்தி தேவைப்படுகிறது; மிகை ஊகங்களின் அடிப்படையில் அதன் சந்தை மதிப்பு உருவாகிறது; நிலைத் தன்மையற்றது. குற்றம், கடத்தல், கொந்தல் போன்ற நிழல் உலகச் சந்தைகளின் நாணயமாக பெரும்பாலும் க்ரிப்டோக்கள் உள்ளன என்றெல்லாம் சில ஆய்வாளர்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டுதானிருக்கிறார்கள்.

NBC (National Broadcasting Company) சொல்கிறது- SBF, வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்களுடன் அளவலாகியிருக்கிறார். முந்தைய ஜனாதிபதி பில் க்ளின்டனை ஒரு மாநாட்டில் பேச அழைத்து, அதற்காகச் செலவு செய்து நெருக்கமாகியிருக்கிறார்.

{Changpeng Zhao (CZ)} சாங் பெங்க் ஜாவ் என்பவர் பைனான்ஸ் (Binance) என்ற மிகப் பெரிய க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை மையத்தை நடத்தி வருபவர். அவர் நம் கதா நாயகனின் SBF நிறுவனத்தில் முதலில் $100 மில்லியன் முதலீடு செய்தார். முதலில் இருந்த நட்பு ஆறே மாதங்களில் முறிந்தது. அவரது முதலீட்டை FTX, $2 பில்லியன் எஃப்டிடி இலச்சினைகள் கொடுத்து வாங்கியது. இது தனக்குத்தானே குழி வெட்டிக் கொண்டது போலாயிற்று. எப்படியென்றால், நாம் முன்னர் பார்த்த அல்மீடாவை இப்போது நினைவில் கொண்டு வருவோம். ஒருவரின் நிர்வாகத்தின் கீழ் இரு நிறுவனங்கள். இருவரின் கணக்கு வழக்குகள் தெளிவாக வெளிவரவில்லை. ‘பி ஸ்போக்’(Bespoke) மென்பொருளைப் பயன்படுத்தி கணக்குப் பதிவுகள் நடந்திருப்பதாக இப்போது சொல்லப்படுகிறது. அதாவது, இது ஒரு பின்வாசல் வழி. இரு நிறுவனங்களிடையே நிகழும் நிதிப் பரிமாற்றம் வெளித் தணிக்கையாளருக்கோ, உள் தணிக்கைக் குழுவிற்கோ எந்தவித எச்சரிக்கையும் தராத முறையில் அந்த மென்பொருளின் கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. $10 பில்லியன் இவ்வாறாக FTXமிருந்து அல்மீடாவிற்கு தரப்பட்டுள்ளது. அல்மீடாவின் சொத்துக்கடன் அறிக்கையை காயின்பேஸ் (Coinbase) வெளியிட்டது. அதில் கண்டுள்ளபடி அதன் சொத்தான $14.6 பில்லியனில் ஏறத்தாழ 50% எஃப்டிடி இலச்சினைகள். அல்மீடாவின் கடனோ $7.4 பில்லியன். இந்தச் செய்தி வெளியானவுடன் CZ தன் வசமிருந்த எஃப்டிடிக்களை விற்பதில் இறங்கினார். அதனிடையில் CZயும், SBFயும் பேச்சு வார்த்தை நடத்தினர். எல்லாம் சுபமே என்று SBF சொல்ல, கிட்டத்தட்ட $8 பில்லியன் இந்த நிறுவனத்தைச் சீரமைக்கத் தேவைப்படும் என்று சொல்லி CZ எஃப்டிடிக்களை விற்பனை செய்வதில் மும்முரமானார். சந்தை கலவரமாகியது. ஒரே நாளில் FTX வாடிக்கையாளர்கள் $6 பில்லியனை கணக்குகளிலிருந்து எடுத்துவிட FTX திவாலாகியது. அதற்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட கடன் கொடுத்தோர் இருக்கிறார்களாம்; கடன் தொகை $10 பில்லியன் முதல் $50 பில்லியன் வரை இருக்கக்கூடும் என்று உத்தேசமாகச் சொல்கிறார்கள். அதன் சொத்துக்களையும் அதே அளவில் சொல்கிறார்கள். ஆனால். ஃபினான்சியல் டைம்ஸ் செய்தி FTXற்கு $900 மில்லியன் சொத்துக்களும், $9 பில்லியன் கடனும் இருப்பதாகச் சொல்கிறது. அல்மீடாவின் கடன் தொகை $7.4 பில்லியன் என்ற செய்தியும் வருகிறது. இந்த நிலையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும், எவ்வளவு நட்டம் என்பதை இப்போது கணிக்க இயலாது. ஒரு டாலருக்கு 10 சென்ட்ஸ் என்ற வீதத்தில் தற்சமயம் விற்பனை நடைபெறுவதாகத் தெரிகிறது.

இளைஞர், க்ரிப்டோ வித்தகர், காணொளியில் விளையாடிக் கொண்டே தன் சாம்ராஜ்யத்தை அமைத்தவர், $32 பில்லியன் நிறுவனமான FTXன் சொந்தக்காரர், $16 பில்லியன் தற் சொத்து உள்ளவர், சமச் செல்வ நிலை முதலாளித்துவக் கொள்கையின் எடுத்துக்காட்டு என்றெல்லாம் புகழப்பட்டவர் இன்று திவாலாகி விட்டார். அவருடைய எளிமை, அவரணிந்த முகமூடி எனப் புலனாகவில்லை. அவர் பெயரில் கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்டு விசாரிக்கப்படும் என அறிகிறோம்.

ஏனெனில்,

  • ஒரே நிர்வாகத்தின் கீழிருக்கும் இரு நிறுவனங்களின் இடையே நிகழ்ந்த பணப் பரிமாற்றத்தை மறைத்தது.
  • தான் வழங்கிய இலச்சினைகளையே பிணையாகப் பெற்றுக் கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட நிஜ நாணயங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று, சுய மதிப்பற்ற இணைய இலக்க நாணய வர்த்தகம் நடத்தியது. எந்த க்ரிப்டோவிற்கும் தனியான மதிப்பில்லை- அதாவது அதன் பின்னாக தங்கம் முதலான அங்கீகரிக்கப்பட்ட ஏதும் கிடையாது. ஆனால், தன் இலக்க நாணயங்களையே பிணையாகப் பெற்றது புது வரலாறு!
  • வாடிக்கையாளர்களின் முதலீட்டைப் பாதுகாப்பதற்கான எந்த ஒரு திட்டமுமில்லை.
  • என்னால், கோல்ட்மேன் சேக்ஸ் போன்ற நிறுவனங்களை கூடிய சீக்கிரம் வாங்க முடியும் என் மார் தட்டியது.
  • $100 மில்லியன் பங்குத் தொகையை திரும்பப் பெற @2பில்லியன் தொகையை எஃப்டிடியாக CZக்குக் கொடுத்தது. அதீத தன்னம்பிக்கை மற்றும் ஆணவத்தின் விளைவு அது.
  • நிதித்துறை, மற்றும் சட்டத் துறை விதிமுறைகளைப் பின்பற்றாதது மட்டுமல்ல, அதை பின்வாசல் கணக்கு முறையில் ஏமாற்றியது.
  • இதன் வீழ்ச்சி இணைய இலக்க நாணயச் சந்தையை மட்டும் பாதிக்காது; பொருளாதார மந்த நிலை, பண வீக்கம், இன்னமும் முழுதும் அகலாத கோவிட் அரக்கன், வேலையில்லாத் திண்டாட்டம், இருக்கும் வேலை பறிபோகும் அபாயம் என்று சங்கிலி விளைவுகளை ஏற்படுத்தும்/ஏற்படுத்தத் தொடங்கியும் விட்டது.

இணைய இலக்க நாணயச் சந்தையை, அதன் பரிவர்த்தனை நிலையங்களை அதிகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டிய அவசியத்தை உணரத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், பொறுப்பில்லாமல் அல்லது சரியான புரிதலில்லாமல், இந்த நாணய சந்தையை ஊக்குவிக்கும் வண்ணம், பொது மக்களை அதன் பால் ஈர்க்கும் வண்ணம், செய்திகள் மற்றும் கருத்துக்கள் வெளியிடும் இதழ்களையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.

சொல்வதற்கு எளிதான ஒன்று, செய்வதற்குக் கடினமான ஒன்று. தங்கள் மூலதனப் பங்கில் 30% மட்டுமே இணைய இலக்க நாணயங்களை எந்தவொரு நிறுவனமும் வெளியிட வேண்டும். அப்படி வெளியாகும் நாணயங்களின் ஒவ்வொரு பதினைந்து நாளின் சராசரி சந்தை மதிப்பிற்கு ஈடாக 20% அந்தந்த அரசுகளின் இறையாண்மை நாணயங்களை மத்திய வங்கியில் காப்பாக வைக்க வேண்டும். தொடரேட்டுத் தொழில் நுட்பத்தை செயற்கை நுண்ணறிவுடன் இணைத்து இந்த இலக்க நாணயங்களையும், அதன் சந்தைகளையும், அதன் கணக்குப் பதிவேற்ற முறைகளையும், காப்பு நிதிகளையும் கண்காணிக்க வேண்டும். இதற்காகும் செலவுகளை அத்தகைய நிறுவனங்கள், தங்கள் மூலதனப் பங்கு விகிதத்தில் ஏற்க வேண்டும். (நான் சொன்னால் யார் கேட்பார்?)

பெரிய புராணம் என்ற அருமைத் தமிழ் நூலில் மெய்ப்பொருள் நாயனார் என்பவரின் சரிதம் வருகிறது. திருநீறு பூசி, சிவச் சின்னங்கள் அணிந்து, சிவனது நாமத்தைச் சொல்வோரே மெய்ப்பொருள் என்ற அவரது எண்ணத்தால் அந்தப் பெயர் அவருக்கு. ஒரு குறு நில மன்னர் அவர். அவரை எவ்வகையிலும் வெல்ல முடியாத முத்த நாதன் என்பவன் எவ்வாறு அவரை அணுகிக் குறுவாள் செலுத்திக் கொன்றான் என்பதை சேக்கிழார் இவ்வாறு சொல்கிறார்:

“மெய் எலாம் நீறு பூசி, வேணிகள் முடித்துக் கட்டி கையினில் படை கரந்த புத்தக்க் கவளி ஏந்தி மைபொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து பொய்த் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்.”

சரி, இந்தியர்கள் என்ன செய்கிறார்கள்? இணைய இலக்க நாணயப் பரிவர்த்தனை விண்ணப்பங்களை தரவிறக்குவோர் வரிசையில் மூன்றாவது இடம் நமக்கு. ஜூன் 22 நிலவரத்தின்படி மூன்று கோடி விண்ணப்பங்கள் தரவிறக்கப்பட்டிருக்கின்றன. பிட்காயினின் விலை $20,000 என இருந்த போது கிட்டத்தட்ட இரண்டு கோடி நபர்கள் அதை வாங்கியிருக்கிறார்கள். விலை ஏறும் போது வாங்கிய சிறு முதலீட்டாளர்கள் நட்டத்தைத்தான் சந்தித்திருக்கிறார்கள்- ஏன் என்றால், பெரும் முதலீட்டாளர்கள் அதே நேரம் அவற்றை விற்றிருக்கிறார்கள்.

ஏமாற்றாதே, ஏமாறாதே!

உசாவிகள்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.