தியேட்டர் இல்லாத ஊரில்

”டேய்..படம் பாக்கப் போவமாடா..? எந்த நாலும் ஓதிறந்தான..” கபீர் என்னிடம் மெல்லக் கிசுகிசுப்பது போல் கேட்டான். ஓதப்பள்ளியின் ஓதல் சத்தங்களின் பேரோசைகளைத் தாண்டி ஒரு சில்லூறுப் போல் அவன் குரல் என் காதுக்குள் ரீங்காரித்தது. அவன் முகத்தில் ஓர் ஆர்வக்களை மின்னி மறைந்தாலும் கண்களில் ஒருவித பதட்டம் தோன்றிக் கொண்டிருந்தது. அது எப்போதும் அவன் கண்களில் குடியிருக்கும் பதட்டமல்ல. அந்தக் கணத்தில் மட்டுமே தோன்றி மறையும் ஒருவித தற்காலிகப் பதட்டம். எப்படி அந்தக் கூட்டத்தில் என்னை சரியாக அடையாளங் கண்டானோ தெரியவில்லை. 

கபீர் கேட்டது இன்பத்தேன் போல் என் காதில் பாய்ந்தது. எனக்குள்ளும் படம் பார்ப்பதில் தீராதவெறி உள்ளடங்கிக் கிடந்தது. சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அதை நனவிலி மனதில் கொண்டு போய் அமுக்கி வைத்திருந்தன. அதற்கு இப்போது ஒரு திறப்பாக கபீர் வந்திருக்கிறான். நனவிலி மனதில் அமுங்கிக் கிடந்த திரைப்பட வேட்கை நனவு மனதுக்கு புதிய விசைகொண்டு மேலெழுந்து வந்தது. கபீரை ஒரு தெய்வப் பிறவிபோல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“டேய், செல்லன்டா…பேயன் பிலாக்காயப் பாக்கிற மாதிப் பாத்திட்டிருக்காம…”

பொங்கி வழியும் குதூகலத்துடன் மொத்த உடலாலும் அவனுக்குச் சம்மதம் சொன்னேன்.  

“செரிடா போவம்…எங்க பாக்கலாம்..”

“சவுக்காலைக்குப் பக்கத்தில வெலிங்டன்னு ஒரு தியெட்டர் இரிக்கிடா..டீ.வில அங்க படம் போடுவாங்க…பத்துருவாத்தான்..பார்ப்பமா…?”

“எத்தின மணிக்குடா..?”

“ரெண்டரைக்கெல்லாம் தியேட்டருக்குப் பெயித்திரனும்..நீ நாளைக்கு ஓதுற பள்ளிக்கு அங்கால இரிக்கிற வீனச்சி பாரிட சந்தில நில்லு..நான் வந்து கூட்டிப் போறன்..”

ஓதப்பள்ளியிலிருந்து ஒரு நூறு மீற்றர் தூரத்தில் வீனச்சி பாரிட சந்தி வளைவில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஒரு இரகசியச் சந்திப்புக்கு காத்திருப்பவனைப் போல் நான் கபீருக்காக காத்துக் கொண்டு நிற்கிறேன். படத்துக்கு டிக்கற் தலைக்குப் பத்து ரூபாய் என்று கபீர் முன்னமே சொல்லி இருந்தான். அதனால் டிக்கட்டுக்காக வாப்பாவின் பக்கெட்டிலிருந்து ஒரு பத்து ரூபாய் அன்று திருடி இருந்தேன். ஓதப்பள்ளிக்குச் செல்லும் போது எங்களுக்கு வீட்டில் காசு எதுவும் தருவதில்லை. இதனால் முதல்நாள் நான் பத்து ரூபாய் திருட வேண்டி வந்துவிட்டது. பின்னர் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போகத் தரும் பத்து ரூபாவை படத்துக்காக சேமிக்கத் தொடங்கினேன். பள்ளிக்கூட பக்கெட் மணி எனக்கு படத்துக்கான பக்கெட் மணியாக மாறியது. 

இதற்கு முன்னும் கபீர் இப்படி தனியே திருட்டுத்தனமாகச் சென்று பல தடவைகள் படம் பார்த்திருக்கிறானாம். எனக்கு இது முதல் முறை என்பதால் ஓர் இறுக்கமான பதட்டம் என்னை நிலைகுலையச் செய்தது. கால்கள் மரத்துப் போய், மரக்காலில் நின்றுகொண்டிருப்பதைப் போல என் உடல் தடுமாறியது. இதயத்தின் ஓசை காதுக்குள் துலக்கமாக ஒலித்தது. எங்கள் வீட்டாருக்குத் தெரியாமல் இதை லாவகமாகச் செய்ய வேண்டும். முக்கியமாக இந்த மௌலவிக்கு தெரிந்து விடக்கூடாது. தெரிந்தால் ஓதப்பள்ளி தூண் ஒன்றில் இரண்டு பேரையும் பிணைத்துக் கட்டிப் பின்னி எடுத்து விடுவார். அவரது நரைத்த தாடி மருதாணிச் சாயத்தால் செம்மஞ்சள் நிறம் கொடுத்திருந்தது. அவரது தழல் போன்ற சிவந்த கண் குழிகளுக்குள் தான் எங்களுக்கான நெருப்புக் கிடங்கு தோண்டப்பட்டிருப்பதாக அவரைக் காணுந் தோறும் அஞ்சுவேன். அவரிடம் மாட்டினால் அது நேராக நரகத்துக்கு எடுக்கப்பட்ட டிக்கெட்டாகவே இருக்கும்.   

இந்த முன்னெச்சரிக்கையோடு சற்று மறைவாகவே நின்றேன். நேரம் ஆக ஆக உடல் மொத்தமாக விறைத்து கண்களும் இருண்டு விட்டதைப் போல் உணர்ந்தேன். ஒளி மங்கிய கண்களால் கபீர் வருகிறானா என நிமிடத்துக்கொருதடவை வீதியை நோட்டமிட்டுக் கொண்டு நின்றேன். தியேட்டரில் படம் பார்க்கப் போகும் ஆர்வ மிகுதியினால் வெயிலின் சூட்டை அப்போது எனக்கு அவ்வளவாக உணர முடியவில்லைதான். 

கபீர் ஒரு சிவப்புச் சட்டையை அணிந்துகொண்டு ஒரு திருட்டுப் பூனையைப் போல் நடந்து வந்தான். அப்படி ஒரு சட்டையை அதற்கு முன் அவன் அணிந்து நான் கண்டதில்லை. 

“ஏதிரா இந்த சேட்டு” நிலைமை புரியாமல் கேட்டேன்.

”டேய் இப்ப அதாடா முக்கியம்..உன்ன யாரும் காணலிய எனடா..?” என்றான். அவன் கண்களில் அதே கலவரம் இப்போதும் துலக்கமாகத் தெரிந்தது. 

“இல்லடா, நான் மறஞ்சிதான் நின்டன்” என் குரலும் இலேசாக நடுங்கியது. திட்டப்படி ஒரு தூஸ் குர்ஆனையும், தொப்பியையும் இடுப்பில் சொருகிக் கொண்டோம். 

வீனச்சி பாரிட சந்தியிலிருந்து தியேட்டருக்கான என் கன்னிப் பயணத்தை அன்றுதான் தொடங்கினேன். 

“டேய் ஓதப்பள்ளிக்கு போட்டு வராத சேட்டத்தான் போடனும்..அப்பதான் லேசில யாரும் மதிக்கமாட்டாங்க..” கபீரின் சின்னத் திருட்டு மூளை எனக்கு வியப்பைத் தந்தது. என் நண்பர்களில் கபீர்தான் முதன் முதல் ஓதப்பள்ளிக்கு களவடித்துவிட்டு தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றான். அவன் ஓதப்பள்ளிக்கு வந்த நாட்களை விட வராத நாட்களே அதிகம். பள்ளிக்கு வராத நாட்களிலெல்லாம் அவன் தியேட்டருக்குத்தான் சென்றிருக்கிறான். இப்போது தனியே செல்வதில் அவனுக்கொரு தயக்கமிருந்தது. அதுக்கு என்ன காரணம் என்றும் சொன்னான். அவன் ஒரு நாள் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இவன் அருகில் படம் பார்த்துக்கொண்டிருந்தாராம். அன்று தியேட்டரிலும் பெரிய கூட்டம் எதுவும் இல்லையாம். இவனும் படத்தில் மூழ்கி இருந்தபோது ஒரு பாடல்காட்சியின் போது திடீரென்று அந்தக் கிழவர் இவன் கன்னங்களைக் கிள்ளி இவனை முத்தமிட முனைந்தாராம். இவன் அவரைத் தட்டிவிட்டு தியேட்டரை விட்டும் வெளியேறிவிட்டானாம். அன்று முழுமையாகப் படம் பார்க்க முடியாமல் போனதாகச் சொல்லி மிகவும் வருத்தப்பட்டான். துணைக்கு இன்னுமொருவர் இருந்திருந்தால் கிழவனுக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை என்று சொன்னான். அந்தக் கசப்பான அனுபவம்தான் அவனுக்கான தியேட்டர் துணையைத் தேடிக்கொள்ள அவனைத் தூண்டியது. அது எனக்கு ஒருவகையில் வாய்ப்பாகிவிட்டது. 

“என்ன படம்டா போட்டிருப்பாங்க..?” நான் ஆர்வமிகுதியால் கேட்டேன். மாத்தையப்படத்தில் பார்த்த பழைய படங்களாக இருந்து விடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எழுந்தது. 

“தெரியலடா..போய்ப் பார்ப்போம்..” என்றான். 

 “என்ன படமெண்டாலும் பார்க்குரான்..” நான் வாயில் எச்சிலூறச் சொல்லிவிட்டு எச்சிலை துப்பாமல் விழுங்கினேன். வழிநெடுகிலும் கபீர் ஊரிலுள்ள தியேட்டர்கள் பற்றி விளக்கம் சொல்லிக்கொண்டே வந்தான்.

ஊருக்கு வெளியே இன்று எஞ்சி இருக்கும் இரண்டு தியேட்டர்களில் ஒன்று வெலிங்டன். எங்கள் ஊரின் ஒரு கோடியில் மெயின் வீதிக்கு அருகில் அந்த தியேட்டர் இருந்தது. தியேட்டரின் இடப்பக்கமாக சவக்காலை ஒன்றிருந்தது. அங்குதான் நான் முதன்முதலாக கல்லறைகளைக் கண்டேன். நான் தொழப்போகும் பள்ளிக்கருகில் இருக்கும் மையவாடியில் அது போன்ற கல்லறைகளை நான் கண்டதில்லை. கல்லறைகளுக்கு பதிலாக அங்கு மீஸான் கட்டைகளே நடப்பட்டிருந்தன. கல்லறைகளில் மீந்திருக்கும் சோகத்தையும், ஒரு விதத் தனிமையையும், அச்சத்தையும் நான் மீஸான் கட்டைகளில் கண்டதில்லை. ஊருக்குள் தியேட்டர் இருக்கக்கூடாது எனப் பள்ளிவாசல் நிர்வாகம் தீர்மானம் எடுத்து அறிவித்த பின்னர் தியேட்டர்கள் இல்லாத ஊராக எங்கள் ஊர் ஆனது. ஊரின் கோடியில் இருந்த இரண்டு தியேட்டர்களிலுமே எந்தப் படமானாலும் ஒரு நாளைக்குத்தான் ஓடும். நூறு நாள் இல்லை மூன்று நாட்களுக்கும் ஓடாது. புதிதாக வெளிவரும் படங்கள் மட்டும்தான் போடுவார்கள் என்றும் விதிகள் எதுவும் இல்லை. இடைக்கால படம்தான் அதிகம் போடுவார்கள். அநேகமாக ரஜினி, பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், சரத் குமார், கார்த்திக். சில நாட்களில் அஜித், விஜய் படங்கள் இரண்டு தியேட்டர்களிலும் மாறி மாறி ஓடும். 

ராபின் என்றொருவர் ஊரின் இன்னொரு கோடியில் ஒரு சிறிய தியேட்டர் வைத்து நடத்தி வந்தார். அவரது சொந்தப் பெயர் ராபின் அல்ல. அப்துல்லா…என்றுதான் ஆரம்பிக்கிறது. அப்துல்லா என்றால் அல்லாவின் அடியான். அல்லாஹ்வின் அடியான் எப்படித் தியேட்டர் நடத்த முடியும்? அதனால்தான் அவர் தனக்கு ஒரு புனைப்பெயர் சூடிக் கொண்டார். நடந்துபோகும் போதே கபீர் இதை எல்லாம் சொன்னான். இப்படியான தகவல்கள் எல்லாம் கபீருக்கு எப்படித் தெரிகின்றன என்ற ஆச்சரியத்துடன் நான் நடந்துகொண்டிருந்தேன். 

ராபினின் தியேட்டரை தியேட்டர் என்றே சொல்ல முடியாது. அது ஒரு சிறிய கொட்டகைதான். அதுதான் ஊரின் இரண்டாவது தியேட்டர். அவரது தியேட்டருக்கருகில் பொலீஸ் நிலையமும், புகையிரத நிலையமும் இருந்தன. ராபின் என்றால் சண்டியன் என்றுதானே பொருள். பெயருக்கேற்றாற் போல் நல்ல உயரமான திடகாத்திரமான மனிதன். ஒருபோதும் அவர் முகத்தில் அச்சத்தையோ பதட்டத்தையோ யாரும் கண்டதில்லை. ராபின் அடித்தொடை தெரிய சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு படத்துக்கான டிக்கட்டை விற்கும் போது நாட்டாமை சரத்குமாரின் சாயல் கொஞ்சம் அடிப்பதை நான் கண்டிருக்கிறேன். அவரது கைகளும் கண்களும் இயங்கும் வேகம் ராபின் ஒரு சராசரி மனிதன் அல்ல என்பதைச் சொல்வது போலிருக்கும். யாரும் அவருடன் வம்பு வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். அரைக்கிலோ படிக்கல் சைஸூக்கு கையில் ஒரு வெள்ளி நிற கைக்கடிகாரம் அணிந்திருந்தார். சண்டை என்றால் அந்தக் கைதான் முதலில் முந்தும் என கபீர் பெருமிதப் புன்னகையோடு சொன்னான். இதனால் அவரால் தியேட்டரை சிறிது காலம் தடைகளை சமாளித்துக் கொண்டு நடத்த முடிந்தது.

ஆனாலும் இந்த இரண்டு தியேட்டர்களிலுமே திரை இல்லை. 21 இன்ஞ் டீ.வியில்தான் படம் காண்பிக்கப்பட்டது. எங்களுக்கு திரை எல்லாம் முக்கியமில்லை. படம்தான் முக்கியம். கபீரைப் பொறுத்தவரை கைக்கடிகாரத்தின் வட்டத்துக்குள் படம் ஓடினால்  கூடப் பார்த்துக் களிப்புறக் கூடியவன். படம் பார்ப்பதில் அவன் என்னைவிட பல மடங்கு ஆர்வமுள்ளவன். அவன் படம் பார்க்கும் போது அருகிலிருப்பவர்கள் இருமினால் கூட அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது. மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று புலம்பிக்கொண்டிருப்பான். ஆனால் எங்கள் இருவரையும் விஞ்சுமளவுக்கு அப்போது எங்கள் ஓதப்பள்ளியில் படம் பார்க்கும் ஆர்வத்துடன் யாரும் இருந்தார்களா என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. சிலவேளை என்னையும், கபீரையும் போல் திரைப்படம் பார்ப்பதற்கான ஆர்வத்தையும், அதற்கான முயற்சியையும் வெளிப்படுத்துவதற்கான துணிச்சல் அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். நனவிலி மனதில் அதை அவர்கள் அமுக்கி வைத்திருக்கலாம்.

தொடக்கத்தில் கிழமையில் மூன்று நாட்களே ஓதப்பள்ளிக்கு களவடித்துவிட்டு படத்துக்குச் சென்று வந்துகொண்டிருந்தோம். படத்தின் ருசி கூடக்கூட ஒவ்வொரு வாரமும் படத்துக்குச் செல்லும் நாட்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. அதன் ஆபத்தை உணருவதற்கான மதியை சினிமாச்சுவை மயக்கிற்று.

தியேட்டரை நோக்கி நடந்துகொண்டிருக்கும் போதே என் கதையையும் கபீருக்குச் சொல்லத் தொடங்கினேன். கடந்த காலங்களில் படம் பார்ப்பதற்காக நான் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதன் பொருட்டு செய்த தியாகங்கள், உருவான மனஉளைச்சல்கள் என என் கதையை கொஞ்சம் கூட்டிக் குறைத்து அடித்துவிட்டேன். என் கதை ஒரு திரைக்கதை போலவே அவனை சுவாரஸ்யப்படுத்திற்று. ஒரு படம் பார்க்கும் ஆர்வத்தோடு அவன் அதைக் கேட்பதை நான் இரசிக்கலானேன். தியேட்டர் நெருங்கியும் கதை முடியாவிட்டால் மறைவாக ஒரு ஓரத்தில் நின்று மிச்சக்கதையையும் கேட்டுவிட்டே உள்ளே நுழைவான். என் கதைக்கான முதல் வாசகனை நான் அப்படித்தான் உருவாக்கிக் கொண்டேன். 

அப்போது எங்கள் வீட்டில் டீ.வி. இருந்ததில்லை. இருந்திருந்தாலும் பிரயோசனமுமில்லை. அந்நாட்களில் தொலைக்காட்சியில் இரண்டு அரச அலைவரிசைகள் மட்டுமே இருந்தன. அதிலும் தமிழ் நிகழ்ச்சிகள் பெரிதாக ஒளிபரப்பப்படுவதில்லை. சிங்கள நிகழ்ச்சிதான். அதனால்தான் அப்போது எங்களது ஊரில் அதிகம் பேர் டீ.வி. வாங்கவில்லை. ஒரு ஆறுதலுக்காக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை 2.30க்கு ஒரு 15 நிமிட தமிழ் சீரியலின் அங்கமும், 3 தமிழ்த் திரைப்பாடல்களும் ஒளிபரப்பாகும். அந்த நிகழ்ச்சிக்கு பொன்மாலைப் பொழுது என்று பெயர். உண்மையில் அது எங்களுக்கு ஒரு பொன்மாலையாகத்தான் இருந்தது. அன்று எப்படியும் ஓதப்பள்ளி கட்தான். வேறு தமிழ் நிகழ்ச்சி என்றால் மாதத்தில் இரண்டாம் சனிக்கிழமை இரவில் ஒரு தமிழ்ப்படம் ஒளிபரப்பாகும். அதனை “மாத்தையப் படம்“ என நாங்கள் அழைத்துக்கொண்டோம். அதுவும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் படங்கள்தான். யாரோ எவரோ எனக்கு படம் என்றால் சரி. அதைப் பார்ப்பதற்குக் கூட மிகப் பெரும் தியாகங்களை எல்லாம் செய்ய வேண்டி இருந்தது. சவால்கள் முன்னே எக்கச்சக்கமாக கிளம்பி வந்து நின்றன. எத்தனை அலைச்சல்கள். எத்தனை தியாகங்கள். கடவுள் எங்களைத் திரைப்பட ரூபத்தில் எல்லையற்றுச் சோதித்தார். 

எனக்கு ஏழுவயதாக இருக்கும் போதே இந்த மாத்தையப்படத்துக்கு நான் அடிமையானேன். இரவு 9.30க்குத்தான் மாத்தையப்படம் ஒளிபரப்பாகும். அப்போது எங்களிடம் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை. கிராமத்தில் மின்சாரம் கூட இருந்ததில்லை. பக்கத்து ஊரில், எங்கள் மாமி வீட்டில் ஒரு கறுப்பு-வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. ஒரு ஐந்து, ஆறு கிலோமீற்றர் தூரத்தில் அவருடைய வீடு இருந்தது. மாத்தையப் படம் ஒளிபரப்பப்படவிருக்கும் அன்றைய இரவை முன்னிட்டு அன்று பின்னேரமே நான் மாமியின் வீட்டுக்குப் புறப்பட்டு விடுவேன். இந்தப் பயணத்தில் என்னுடன் என் மூத்த சகோதரங்களான மர்ழியாவும் மர்வானும் இணைந்துகொள்வார்கள். மர்வான் படம் பார்ப்பதற்காக என்னை விட கடுமையாக முண்டக்கூடியவன். சத்தமில்லாமல் ஒரே நாளில் ஒன்பது படம் ஒரு முறை பார்த்திருந்தான். 

ஆனால் சிலவேளைகளில் இந்த மாத்தையப் படமும் கைகொடுக்காமல் விட்டு விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அப்போதெல்லாம் மனம் ஒரு எரிமலைபோல் வெடித்துக் குமுறும். சிலநேரங்களில் மாத்தையப் படம் ஓட இருக்கும் இரவாகப் பார்த்து கரண்ட் போய் விடும். அப்போது உலகமே இருண்டு விட்டது போல் ஒருவித ஏமாற்றமும் விரக்தியும் மனதைப் பிசையும். இலங்கை மின்சார சபையை தூஷணத்தால் திட்டத் தொடங்கி விடுவேன். மர்வானென்றால் அல்லாவையும் சேர்த்து திட்டுவான். அல்லாதான் கரண்டை போக வைத்திருக்கிறான் என அவன் அப்போது உறுதியாக நம்பினான். நானும் அப்படித்தான் நம்பினேன். ஆனால் நான் அல்லாவைத் திட்டுவதில்லை. மரணத்துக்குப் பின் அல்லாஹ் நெருப்பால் நம்மைச் சுடுவான் என்ற அச்சம் என் மூளை முழுவதும் குடிகொண்டிருந்தது. படம் ஓட இருக்கும் அன்றைய இரவு மின்சாரமின்றி இருண்டதும் நான் நெஞ்சை அடைக்கும் வெப்பிசாரம் வெடித்துக் கதறி அழுவேன். அதையிட்டு எனக்கு பல தடவைகள் காய்ச்சலும் கண்டிருக்கிறது. 

சில வேளைகளில், மாத்தையப் படம் பார்ப்பதற்காக தூரத்திலிருந்து நடந்து வந்த களைப்போ என்னவோ சரியாக படம் தொடங்கும் நேரம் பார்த்து தூக்கம் வந்து அப்படியே தூங்கி விடுவேன். காலையில் எழுந்து கத்திக் கூச்சலிட்டு காய்ச்சல் வயப்பட்டு விடுவேன் என்ற பயத்தில் எனது சகோதரங்கள் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விளம்பர இடைவேளைக்கும் என்னை எழுப்பிப் பார்த்துக் கொள்வார்கள். நித்ராதேவி அரவணைத்து விட்டாளென்றால் இடையில் முழிப்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியாது. தூக்கத்தில் ஏதேதோ உளறி விட்டுத் தூங்கி விடுவேன். படத்தை விடவும் தூக்கத்துக்கு வலிமை அதிகம் போலும். இருந்தாலும் காலையில் எழும்பி அழுதுகொண்டே வீடு போய்ச் சேருவேன். போகும் வழியில் சகோதரங்களுக்கு மண்ணள்ளி எறிந்து காறித் துப்பி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு தாங்க முடியாமல் அழுது கொண்டே செல்வேன். அவர்கள் என்னை எழுப்பவில்லை என்பதுதான் என் நிலைப்பாடாக இருந்தது. அவர்கள் எழுப்பியதாக மக்காவில் அடித்துச் சத்தியம் செய்தாலும் நான் நம்பாமல் கலகம் செய்துகொண்டே செல்வேன். ஆனால் வீட்டுக்குச் செல்லுமுன் அமைதியாகி விடுவேன். அங்கும் அமளி பண்ணினால் இனி படம் பார்க்க போக வேண்டாம் என்று உம்மா தடுத்து விடுவார் என்ற அச்சம் என்னை அடக்கிப் போட்டு விடும். ஆனாலும் உள்ளுக்குள் வெப்பிசாரம் வெடித்துக்கொண்டே இருக்கும். 

எங்கள் மாத்தையப்படத்துக்கு மூன்றாவதாகவும் ஒரு எதிரி இருந்தது. மாத்தையப்படம் ஓட இருக்கும் அன்றைய நாளில் வழமை போன்று முன்கூட்டியே மாமி வீட்டுக்குச் சென்று நேரம் வந்ததும் தூக்கத்தை வெற்றி கொள்வதற்கான ஒரு சிறு ஆயத்தத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் டீ.விக்கு முன்னால் உட்கார்ந்துவிடுவேன். தூக்கம் வரும் போது கண்களில் ஒத்திக்கொள்வதற்காக ஒரு சிறிய கோப்பையில் தண்ணீர் கொஞ்சம் வைத்துக் கொள்வேன். இப்படி முன்னெச்சரிக்கையாக இருந்தால்தான் தூக்கத்தை ஒரு வழி பண்ணலாம் என முடிவெடுத்திருந்தேன். இந்த டெக்னிக்கை எங்கள் மௌலவிதான் சொல்லித் தந்தார். இரவில் பழைய பாடங்கள் ஓதும் போது தூக்கம் வந்தால் கண்களில் நீரை ஒற்றிக்கொண்டால் தூக்கம் கலைந்துவிடும் என்று அவர் சொன்ன உத்தி இப்போது மாத்தையப்படத்துக்குத்தான் உதவுகிறது.  இப்படியாக டீ.விக்கு முன்னால் குந்தி இருக்கும் போது, மாத்தையப்படம் ஓட வேண்டிய அந்த நேரமாகப் பார்த்து டீவியில் ஒரு ஹாமதுருவின் சிங்கள நேர்காணலொன்று ஒளிபரப்பாகும். அன்றைக்கு படம் இல்லை. இனி அடுத்த மாதம்தான். அதைத் தாங்கமாட்டாமல் நான் ஓவென்று அழுவேன். என் சகோதரனின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழியத் தொடங்கும். அவன் என்னைப் போல் வெளிப்படையாகவன்றி உள்ளூர அழத் தெரிந்தவன். எனக்கோ சத்தமிட்டு அழுது ஆர்ப்பரித்தால்தான் என் மனப் பாரம் இறங்கும். மறுநாள் அங்கிருந்து வீடு செல்லும் போது வழிநெடுகிலும் அந்த ஹாமதுருவை திட்டிக்கொண்டும் அழுதுகொண்டும் செல்வேன். எங்களில் யார் யாரைத் தேற்றுவது எனத் தெரியாது வீடு போய்ச் சேர்வோம். 

என் கதையைக் கேட்டு கபீருக்கும் கண்ணீர் பொலுபொலுத்தது. பளபளக்கும் கண்களோடு என் தோளில் கையைப் போட்டுக் கொள்வான். 

“இனி விர்ரா கவலையே தேவல” என தலையைத் தடவிச் சொல்வான். எனினும், அவன் கண்களில் இனம் புரியாத ஒரு பதட்டம் சுழன்றுகொண்டிருப்பதை நான் பார்ப்பேன். 

கபீரின் புண்ணியத்தால் கிடைத்த தியேட்டர் வாழ்வு மாத்தையப் படம் மீதான எல்லையற்ற காத்திருப்பை ஒரு தேவையற்ற சமாச்சாரமாக மாற்றியது. தினமும் படம் பார்த்து இன்பம் துய்க்கும் வாழ்க்கையாக எங்கள் வாழ்க்கை ஆனது. 

“டேய் எங்கட பெரியம்மாட்ட டீவி வாங்கிரிக்காங்கடா..” ஒரு நாள் தியேட்டருக்குச் செல்லும்போது கபீர் சொன்னான்.

 “இனிப்படம் போட்டுப் பாக்கலாம்” மகிழ்ச்சியாகச் சொல்லி திருப்தியுடன் தலையை ஆட்டிக்கொண்டான். 

“எங்கட வீட்டடியயும் ஒராக்கள் டீவி வாங்கிரிக்காங்கடா..” நான் முணுமுணுப்பாகச் சொன்னேன். டெக்கு, படக்கொப்பி போன்ற சொற்களை நான் முதன்முதலாக அவனிடமிருந்துதான் கேள்விப்பட்டேன். 

“பெரியப்பா டீவி வாங்கி வந்தண்டு எங்கட பள்ளி மௌலவி படம் பாக்கிற ஹராமெண்டு சொன்னாரு…” கபீர் உதட்டைச் சுழித்துக்கொண்டு சொன்னான். 

“எல்லா மௌலவிமாரும் அப்புடித்தாண்டா சொல்றாங்க” என்று அவனே சொல்லிச் சிரித்துக்கொண்டான். பரபரப்பும் பதட்டமும் வெளித்தெரியும் அவன் கண்களில் அன்று மட்டும் வேறொரு உணர்ச்சியைப் பார்த்தேன். 

 திடீரென்று வெலிங்டன் தியேட்டருக்கருகில் இராணுவக் காவலரன் ஒன்று முளைத்தது. இராணுவக் காவலரண் வந்தால் கூடவே வரக்கூடிய எல்லாப் பிரச்சினைகளும் அங்கு சம்பவிக்கத் தொடங்கின. ஒருநாள் இராணுவத்தினர் படம் பார்க்க வந்த ரசிகன் ஒருவனை அழைத்து அவன் தோள்பட்டையில் துப்பாக்கியை வைத்துச் சுட்டதில் அவன் சித்தம் கலங்கி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தான். ஆனால் அது அவனைச் துன்புறுத்தி இன்பம் காணும் இராணுவ புத்தி என யூகிக்கு முன்னரே தியேட்டர் சாக்கோலம் பூண்டு கூக்குரலிட்டுக் கலைந்தது. அதன் பிறகு அந்தத் தியேட்டரும் மூடப்பட்டு விட்டதாக ஒரு நாள் கபீர் துக்கத்துடன் சொன்னான்.    

பின்னர் ராபின் காக்காவின் தியேட்டர் மட்டுமே எஞ்சி இருந்தது. ஒரு விதத்தில் சொல்லப் போனால் ராபினுடையதை தியேட்டர் என்றே சொல்ல முடியாது. கூடிய பட்சம் ஒரு முப்பது-நாற்பது பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய அளவிலேயே பாங்குகள் போடப்பட்டிருந்தன. இடமும் போதாது. அது ஒரு சிறுகொட்டகை. வெலிங்டன் தியேட்டர் மூடப்பட்டதையடுத்து இந்தக் கொட்டகைக்கு படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டிருந்தது. சில நாட்களில் சிலர் பின்னால் நின்று கொண்டும் படம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இதனால் நானும் கபீரும் தியேட்டருக்கு கொஞ்சம் நேரத்தோடயே போய்விடுவோம். 

இன்புற்றுத் திளைத்து களிப்பாக கடந்துகொண்டிருந்த தியேட்டர் வாழ்வு கபீரின் வாப்பாவிடம் திடீரென்று நாங்கள் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட நாளன்று முடிவுக்கு வந்தது. அவனுக்கு எத்தனை அறைகள் விழுந்தன என எனக்குத் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. நான் எப்படி அங்கிருந்து தப்பி ஓடினேன் என்பது எனக்கே விசித்திரமாக இருந்தது. அவன் கண்களில் எப்போதும் ஒட்டியிருந்த பதட்டத்தின் அர்த்தம் அன்று எனக்கு ஓரளவு புரிந்தது.

அன்றுடன் எங்கள் நட்புக்கு நடுவே பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. அவன் வாப்பா கபீரை எங்கள் ஓதப்பள்ளியிலிருந்து விலக்கி அவனை ஒரு பெரிய மௌலவியாக்குவதற்காக பெரிய மதரசா ஒன்றில் சேர்த்துவிட்டார். அதன் பின் நான் தனித்துவிடப்பட்டேன். தியேட்டருக்கு நான் சிலவேளைகளில் கபீர் இல்லாமல் தனியே போய் வந்தேன். கபீர் போன்று எனக்கு சரியான இணையனை அந்த ஓதப்பள்ளியிலிருந்து கடைசி வரைக்கும் கண்டு பிடிக்க முடியாமலே போய்விட்டது. இப்போது கபீரை நினைத்து எனக்குள் பெருங்கவலை உண்டானது. கபீரால் படம் பார்க்காமல் எப்படி இருக்க முடியும். அவனால் மதரசாவின் வெற்றுச் சுவர்களை எத்தனை நாட்களுக்குப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். காட்சிகளற்ற வெற்றுச் சுவர்கள் ஒளியற்ற திரை போல அவனுக்கு இருண்டதாகவே இருக்கும். அதில் கற்பனையாக அவனுக்குத் தேவையான கதாபாத்திரங்களை அவன் உருவாக்கிக் கொள்வான் என எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன். பிறகு அவனைக் குறித்து விசித்திரமான சந்தேகங்களும் தோன்றி மண்டின. படம் பார்ப்பது கூடாது பாவம் என்றெல்லாம் மௌலவிமார் பிரச்சாரம் செய்வார்கள். கபீரும் மௌலவியாக வெளிவந்ததும் அப்படித்தான் பிரச்சாரம் செய்வானா? அப்படிச் சொல்வதற்கான தகுதியை ஒரு மதரசா அவனுக்குக் கொடுத்துவிடுமா? 

தினமும் படம் பார்க்கச் செல்லும்போது வழிநெடுகிலும் அவனை நினைத்துக்கொண்டே சென்றேன். சில நாட்களில் அவனுடன் பேசிக்கொண்டு போவது போலவும் பிரமை தோன்றும். அவனது பதட்டமான கண்களை எப்போது காண்பேன் என்றொரு துக்கம் என்னைத் தாக்கியழிக்கும். நான் சோர்வாகவே தியேட்டரை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். 

ஆனால் என் ஆர்வத்தை எப்போதும் தூண்டிக் கொண்டிருந்த கேள்வி கபீர் மௌலவியாகி படம் பார்ப்பது கூடாது என்று சொல்வானா மாட்டானா என்பதுதான். படத்துக்கு அவனால் துரோகம் செய்ய முடியுமா என்பதுதான் எனக்கு பெரிய குழப்பமானதாக இருந்தது. படம் பார்ப்பது கூடாது என்று அவன் சொன்னால் எனக்கு அது வேடிக்கையாகத்தான் தோணும். எதற்கும் பதில் அகப்படுவதாக இல்லை. சிரிப்பு மட்டுமே வந்தது. 

ண்டுகள் கழித்து கபீரை ஒரு பெரிய மௌலவிக் கோலத்தில் பார்த்தேன். நீண்ட சடைத்த தாடி வளர்த்திருந்தான். நெற்றியில் தொழுகை வடு பாரித்திருந்தது. தலைக்கு அளவான உயர்ரகத் தொப்பி அணிந்திருந்தான். அவனுடன் முன்பிருந்த அந்நியோன்யம் காலத்தில் கரைந்து போயிருந்தது. சலாம் மட்டும் சொல்லிக் கொண்டு கடந்து சென்றான். இப்போதும் கபீர் படம் பார்ப்பானா? அல்லது கூடாது என்று சொல்வானா? என்ற யோசனைதான் அவனைக் கண்டபோது எனக்குள் முதலில் எழுந்தது. கபீரைப் பிரிந்தபோது எழுந்த அதே பழைய கேள்விதான். ஆனால் உக்கிரமான ஆர்வத்தோடு இப்போது முகிழ்த்தது. பெரிய மௌலவியான கபீரிடம் இதை எப்படிக் கேட்பது? ஆசை விடுவதாக இல்லை. ஆனால் கேட்கப் போனால் முதல்நாள் தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றது போன்ற பதட்டம் போன்று நாவில் தண்ணீர் வற்றிவிடுகிறது.

கபீர் ஒரு பெரிய மௌலவி என்பதால் அவனை அடிக்கடி சந்திக்கவும் முடிவதில்லை. எனது போக்குவரத்துப் பாதைகளில் மட்டும் அவ்வப்போது எதேச்சையாக அவனைக் கண்டேன். அப்போதெல்லாம் ஒரு புன்னகையுடனும் ஒரு சலாத்துடனும் என்னைக் கடந்து செல்வான். கேட்டுவிட வேண்டும் என நினைத்தாலும் கேட்க முடியாமல் மனம் மட்டும் ஊசலாடியது. அவன் ஜூம்மாப் பிரசங்கம் செய்யும் பள்ளிகளுக்குச் சென்று திரைப்படம் பற்றி அவன் என்ன சொல்கிறான் எனக் கேட்டு விடுவது என முடிவுசெய்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவன் பிரசங்கம் செய்யும் பள்ளிகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். ஒன்றிலும் எதுவும் சிக்கவில்லை. 

நான் தொடர்ந்தும் படம் பார்த்துக்கொண்டேதான் இருந்தேன். ஊரின் கோடியில் இருந்த தியேட்டர் கூட இப்போது இல்லை. ஊரிலிருந்து 20 KM தொலைவிலிருந்த பெரிய தியேட்டர் ஒன்றுக்கு அவ்வப்போது படத்துக்குச் செல்வேன். கமலின் ஆளவந்தான் திரைப்படம் பெரிய ஆரவாரங்களோடு அன்று முதன்முதலாக திரையில் போடப்பட்டிருந்தது. படத்துக்கு டிக்கெற் எடுப்பதற்கென தியேட்டர் வாசலில் பெரிய கூட்டம் ஒன்று வரிசைகட்டி நின்றது. தியேட்டர் அமைந்திருந்த பிரதான வீதியின் ஓரமாக கிட்டதட்ட 200 மீற்றர் நீளமான வரிசை. நானும் அந்தவரிசையில் ஒருவனாகப் புகுந்து வரிசையின் நீளத்தை சற்றுக் கூட்டினேன். வரிசை இன்னும் நீண்டு கொண்டே சென்றது. எல்லோருக்கும் டிக்கட் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. படிப்படியாக வரிசை நகர்ந்து டிக்கட் கவுண்டரை நான் நெருங்கினேன். டிக்கட் எடுக்க என் முறை வந்த போது சடுதியாக ஒரு கை என் முதுகில் விசையாகத் தட்டியது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தேன். “எனக்கும் ஒரு டிக்கட் எடு மச்சான்” தலையைக் கவிழ்த்துக் கொண்டே காசை நீட்டிக் கொண்டு நின்றான் கபீர். அப்போதும் நான் அவன் கண்களில் அதே பதட்டத்தைக் கண்டேன். 

***

ஜிஃப்ரி ஹாசன் / நவம்பர் 2022

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.