- இந்திய கீதத்தின் சின்னம் – 1
- ஜன கண மன எவ்வகையை சேர்ந்தது? அதன் பொருள் என்னவாக இருந்தது?
மூலம்: கொன்ராட் எல்ஸ்ட்டின் ’ஹிந்து தர்மமும் அதன் கலாச்சாரப் போர்களும்’
தமிழில்: கடலூர் வாசு
அனைத்து தேசிய கீதங்களுக்கும் முன்னோடியாக அமைந்த யூரோப்பிய தேசிய கீதங்களின் புதுவிதமான ஆய்வு, மூன்று மையக் கருத்துக்களை கொண்டுள்ளது; கடவுள்(ஒன்று அல்லது பல), அரசர், நாடு இவை மூன்றுமே.. பாரம்பரிய முடியாட்சிகளுடைய தேசிய கீதங்கள் அரசரை மையப்படுத்துவதாக அமைந்தன. அவை, அரசரை கடவுளின் நிழலிலோ (கடவுள் அரசியை காப்பாற்றட்டும், வில்ஹெல்மஸ் போன்றவை), அல்லது அரசரை விட மேலான அதிகாரி இல்லை (ஹைல் டியா இம் சீகர்கிரான்ஸ்-Heil dir im Siegerkranz) என்பது போல் அமைந்துள்ளது. மதச்சார்பற்ற மேல்மட்டத்தினரிடமிருந்து வெளி வரும் நவீன பாடல்கள், பிரெஞ்சு, ஜெர்மனி குடியரசின் தேசிய கீதங்கள் போல் கடவுளை தவிர்த்து விடுகின்றன. தலைமை அதிகாரியைப் பற்றிய குறிப்புகள் எங்குமே காணப்படுவதில்லை. அவரும் நம்மை போன்ற ஒரு சாதாரண மனிதர் என்ற கருத்தை கொண்டது. . அப்பாடல்களில் உன்னதமாக வருணிக்கப்பட்டுள்ள நாட்டில் ஒரு சாதாரண குடிமகனாகவே காட்டப்படுவார்.
ஜன கண மன இதில் எவ்வகையை சேர்ந்தது? அச்சமயம், அதன் பொருள் என்னவாக இருந்தது? 1911ல் வங்காளக் கவி, ரவிந்த்ரநாத் தாகூர் அவர்களால், கிட்டத்தட்ட சம்ஸ்க்ருத மொழியை போலுள்ள உயரிய வங்காள மொழியில் எழுதப்பட்டது. (அவரெழுதிய பாடல்களில் மற்றொன்றும் தேசிய கீதத்திற்கான அந்தஸ்தை பெற்றது:1905ல் அவர் எழுதிய அமர் சோனா பங்ளா,’எனது பொன்னான வங்காளம். 1971ல் இது வங்காளத்தின் மாநில கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இலங்கையின் தேசிய கீதத்திற்கும் இவர்தான் மெட்டமைத்தார்.) பல மொழிகளுடைய ஒரு நாட்டில் சிறிதளவு கல்வி பயின்ற குடிமகனும் புரிந்து கொள்ளுமாறு எழுதப்பட்டுள்ளது. முதலில், இது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்தான் பாடப்பட்டது. அச்சமயம், தேசிய காங்கிரஸ், இந்திய துணைக் கண்டத்தின் நலன்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தது, சுதந்திரத்திற்காக அல்ல.
தேசிய கீதமாக, முதலில் சுபாஷ் சந்திர போஸ் படை வீரர்கள்தான் ஜெர்மனியில் இதை பாடினர். 1943-45ல் ஜப்பானியர்களிடம் பயிற்சி பெற்ற இந்திய தேசிய ராணுவத்தின் தலைவராவதற்கு முன், 1941-42ல், நாஜிப் படையினரிடம் டன்கிர்க்கில் பிடிபட்ட பிரிட்டிஷ் ராணுவத்தை சேர்ந்த இந்தியர்களை ஒன்று சேர்த்து ஒரு சிறிய படையை உருவாக்கியிருந்தார். செப்டம்பர் 11, 1942ம் ஆண்டு, ஹாம்பர்க் நகரத்தில் ஜெர்மானிய -இந்தியக் குழுவின் (Deutsch-Indische Geselschaft) பிரம்மாண்டமான தொடக்க விழாவில், ஜன கண மன இசைக்கப்பட்டபோது, முதன் முறையாக கால்கள் ஒரு சேர நின்று மரியாதை செலுத்தினர். போஸ் ஏற்கனவே தேசிய கீத நிலைக்கு உயர்த்திய பாடலை, பின்னர் இந்திய சட்டமைப்புக் குழுவும் தேசிய கீதமென உறுதிப்படுத்தியது.

‘பாரத பாக்கிய விதாதா’ ஜார்ஜ் அரசர் அல்ல (‘THE BHARATA BHAGYA VIDHATA’ WAS NOT KING GEORGE)
இப்பாடல், நாட்டையும், அதன் எல்லைகளையும், மாகாணங்களையும் பார்வையிடுவதற்காக அமைந்துள்ளதால் வெளிப்படையாக தேசியவாதமாகத்தான் உள்ளது இருந்தாலும், ஜன கண மன அதிநாயக், “‘ஜனங்களின் மனத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்’ என முக்கியமாக ஒருவரை புகழ்ந்து கூறுவதாகவும், அதே சமயம், அவர் பாரத பாக்கிய விதாதா, ‘இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப்பவர்”எனவும் சொல்கிறது. இது, யாரை குறிப்பிடுகிறது? பாரம்பரியத் தலைவரையா? தலைவராக நியமிக்கப்பட்டவரையா அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவரையா?
1950களில், ஜனக்கூட்டம் இவ்வரிகளை வீண்பெருமை மிகுந்த நேருவின் முன்னர் பாடும்போது அவரை முகஸ்துதி செய்வதாக நினைத்து மகிழ்ச்சியடைந்ததை இப்போதும் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.. ஆனால் 1911ல், அவர் அத்தகைய உருவமல்ல. அப்போது ஐந்தாம் ஜார்ஜ்தான் இந்தியாவின் அரசர். இப்பாடல் முதன்முறையாக தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் பாடப்பட்ட ஒரு சில வாரங்களுக்குள் இந்தியாவிற்கு வருகை தருவதாக இருந்தார். இக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் அரசருக்கேற்ற வரவேற்பு என்பதுதான் மையமாக வைக்கப்பட்டிருந்தது.
இப்புள்ளிகளை ஒன்று சேர்த்து, பிரிட்டிஷ் பத்திரிகைகளும் அதன் வாசகர்களும் அரசரை கௌரவப்படுத்துவதற்காகவே இப்பாடலை எழுதியுள்ளார் என நம்பினர். தவறான இந்நம்பிக்கை பிசின் போல ஒட்டிக்கொண்டு விட்டது. இப்போதும் கூட சிலர் இதையே கூறுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். ஆர்வலர்கள் பலரிடையே இவ்வதந்தி, இந்தியா சுதந்திரமே பெறக்கூடாது என்பதற்காக செய்யப்படும் சதித் திட்டம் என்ற சந்தேகத்தை வேறு கிளப்பியது. தாகூர் இதை உடனே மறுத்தார். பிற்காலங்களில் மிக ஆவேசமாகவே மறுத்தார். ஆனால், பொது மக்கள் இவரது திருத்தத்தை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
பிரிட்டிஷ் பத்திரிகைகளுக்கும் பிரிட்டிஷ் இந்திய பத்திரிகைகளுக்கும் ஏற்பட்ட குழப்பத்திற்கு காரணம், ராம்புஜ் சவுத்ரி என்ற மற்றொரு இந்தியர், பிரிட்டிஷ் பேரரசரை உண்மையாகவே புகழ்ந்து உருது மொழியில் (காந்தீயவாதிகளால் ஹிந்துஸ்தானி என்று அழைக்கப்பட்ட) எழுதிய பாத்ஷா ஹமாரா, நமது அரசர் (Our King) என்ற பாடலாகும். இப்பாடலும் காங்கிரஸ் கூட்டத்தில் அதே சமயம் மன்னரை புகழ்ந்து பாடப்பட்டது. அக்கூட்டம் நிகழ்ந்த காலத்த்தில், காங்கிரஸ் கட்சி இந்தியா ஜார்ஜ் மன்னருடைய சட்டத்தின் கீழ் சுயாட்சி நாடாக இருக்க வேண்டும் என்று மட்டுமே விரும்பியது,
தாகூர், பிரிட்டிஷ் அரசரை புகழ்வதின் மூலம் பிரிட்டிஷ் அரசாட்சியை சட்டபூர்வமாக ஆக்கப் பார்க்கிறார் என்ற தவறான எண்ணத்திற்கு பின் பிரகாசமான பக்கமம் உள்ளது. 1913ல், முதன்முறையாக மேற்கத்தியரல்லாத ஒருவருக்கு இலக்கியத்திற்கான பரிசை அளிப்பதற்கு நோபல் குழு முன் வந்தது. தாகூரின் இலக்கிய பரிசிற்கான கீதாஞ்சலி எனும் பாடல் திரட்டு மிகச் சிறந்த பாடல்களை கொண்டதாக இருந்தாலும் அதற்கு முன்னர் ஒரு நிபந்தனையை தாகூர் திருப்தி செய்ய வேண்டி இருந்தது. அது, காலனிய ஆட்சிக்கு தாகூர் விசுவாசமுள்ளவர், பிற்போக்குத்தன்மையுடைய நாட்டுமக்களை மேலுயர்த்தும் கலாச்சாரத்திற்கு மாறியவர் என்ற நினைப்பு ஆகும். அவரை, யூரோப்பியர்கள் அக்காலத்தில் ‘காட்டுமிராண்டிகளாகக் கருதியவர்களை கலாச்சாரப்படுத்தும்’ (civilizing the savages) சங்கிலியாக கருதினர். பெல்ஜிய காலனியம் காங்கோ நாட்டில் அவர்களவிற்கு கலாச்சாரத்தில் முன்னேறிய பரிணாமிக்கு (Evolue) ஈடாக ஐரோப்பியர்கள் இந்தியாவில் தாகூரை கருதினர். வெகுமதிக்கு உகந்ததாகவும் இத்தகுதி கருதப்பட்டது.
நோபல் குழுவினரை கேட்டிருந்தால் இந்தியாவின் தேசிய இயக்கத்தை எதிர்த்தோ கண்டனம் செய்தோ எதுவும் கூறியிருக்க மாட்டார்கள். அதே சமயம், ஐரோப்பாவில் இந்தியாவின் கொலைகார கலகக்காரர்களைப் பற்றியும் காலனித்துவவாதிகள் தைரியமாக அவர்களை அடக்குவதையும் பற்றிய பல கதைகள் உலவி வந்தன. காலனியத்தின் கீழுள்ள ஒரு நாட்டின் கலகக்காரருக்கு வெளிப்படையாக ஆதரவு தருவதை சுவீடனில் உள்ள நடுத்தர மக்களே ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதால், தாகூர் பிரிட்டிஷ் மன்னரின் காலடியில் அவரது இலக்கிய பணியை சமர்ப்பித்தார் என்ற தவறான செய்தி நோபல் குழுவிற்கு கை கொடுத்தது.

பின் யார்தான் பாரத பாக்கிய விதாதா?
நவம்பர் 10, 1937 தாகூர் ஒரு கடிதத்தில் உண்மை விவரங்களை விளக்கியுள்ளார்.
‘ எனது நண்பரும் அரசரின் உயர் சேவையில் இருப்பவருமான ஒரு நபர் பேரரசரை புகழ்ந்து ஒரு கவிதை எழுதுமாறு என்னிடம் விண்ணப்பித்தார். இக்கோரிக்கை எனக்கு அதிசயமாக பட்டது. எனது இதயம் குழம்பியது. அதனால் ஏற்பட்ட மிகப் பெரிய மனக் கலக்கத்திற்கு விடையாக நான் ஜனகணமன பாடலில் இந்தியாவின் பாக்ய பிதாதா(வங்காள உச்சரிப்பு – தலை விதியை விநியோகிப்பவர்) காலங்காலமாக இந்திய ரதத்த்தின் கடிவாளங்களை மேடு பள்ளங்களிலும்,நேரான மற்றும் கோணல்மானலான பாதைகளிலும் கைவிடாமல் செலுத்துபவரின் வெற்றியை அறிவித்தேன். அத்தலைவிதியின் இறைவன், இந்தியாவின் கூட்டுமனத்தை வாசிப்பவன், என்றும் நிலைத்திருக்கும் வழிகாட்டி 4வது ஜார்ஜார்ஜாகவோ, 5வது ஜார்ஜாகவோ அல்லது எந்த ஒரு ஜார்ஜாகவும் இருக்க முடியாது. அதிகாரத்திலிருக்கும் எனது நண்பர் கூட இதை அறிந்திருந்தார். முடியரசின் மேல் அவருக்கு அத்து மீறிய மதிப்பு இருந்தாலும் பொது அறிவு குறைந்தவரல்ல.
இங்கு தாகூர், தலை விதியை நிர்ணயிப்பவர் யாரென அடையாளம் காட்டுகிறார். தாகூர் பிரம்ம சமாஜத்தின் வாரிசு. இம்மார்க்கம், உபநிடத சித்தாந்தத்தை மட்டுமே துணையாகக் கொண்டுள்ள, பலருக்குப் புலப்படாத ஹிந்துயிச வழி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது. பல்வேறு வண்ணங்களை உடைய கடவுள்களை கொண்ட பக்தி மார்க்க ஹிந்துயிசத்தை பார்த்து முகம் சுளிக்கக் கூடியது அந்த சமாஜம். எனவே தாகூர் யாரந்த இறைவன் என நேரடியாகக் கூறவில்லை. ஆனால், எண்ணிலடங்காக் காலமாக, மனித வரலாற்றில் யாத்திரீகர்களை அவர்களது பயணத்தில் முன் நடத்திச் செல்லும் நித்தியத் தேரோட்டி யாரென்பதை எவருமே சந்தேகமின்றி அனுமானம் செய்ய இயலும். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்து கீதோபதேசம் செய்த கண்ணனையே தாகூர் இங்கு குறிப்பிடுகிறார். திருமாலின் அவதாரமாக வழிபடுபவர்; தருமம் நலிந்தபோதெல்லாம் அதை நிலைநிறுத்த மீண்டும் மீண்டும் அவதரிப்பவர்.
இப்பாடலின் முதல் சீர்தான் பொதுவாக பாடப்படுகிறது. ஆனால் பாடலில் மேலும் சென்றால், 3வது சீரில் அனைத்துமே தெளிவாகிறது. கண்ணன், திருமால் இருவரின் படிமங்கள் (தேர்,சங்கு, ‘யுக யுகமாக’ போன்ற சொற்கட்டு) உற்சாகத்துடன் பாடப்படுகிறது. அதை பாடுபவர்களும் யாத்திரை செல்லும் யாத்திரீகர்களாக தங்களை விவரிக்கின்றனர். ஜார்ஜ் அரசரோ, பிரதம மந்திரி நேருவோ அல்லது எந்த அரசியல் தலைவரோ அங்கு இல்லை. வழிகாட்டி, தேரோட்டி என கண்ணனையே ஒருமுகமாக கூறுகிறது. ‘துன்பத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் விடுவிப்பவர்’ எனும் சொற்கள் அரசியல் தலைவருக்கு அடுக்காது. மேலும், அரசியல் தலைவரை மக்களின் வழிகாட்டி என எவ்வாறு ஏற்க இயலும்? இக்கீதம், எவ்விடத்திலும் சலிப்பூட்டுவதாகவோ ஓரளவு மதச் சார்பற்றதாகவோ இல்லவே இல்லை. வாழ்க! பாரத பாக்கிய விதாதா!
முன்னணித் தமிழ் பத்திரிகையாளர், அரவிந்தன் நீலகண்டன் இது 3வது சீரோடு நின்று விடவில்லை என சுட்டிக் காண்பித்துள்ளார். 4வது சீரில், இந்தியாவின் தலைவிதியை விநியோகிப்பவர், ‘தீய கனவுகளால் பீதி ஏற்படும் காலங்களில் தன மடியில் போட்டுக்கொண்டு சமாதானப்படுத்தும் ‘அன்புள்ள அன்னை’யாக அடையாளம் காட்டப்படுகிறார். இது இந்துக்களின் பார்வையில் ஒரு தெய்வீகக் கூற்று ஆகும். கடவுள் நம்பிக்கையுள்ள தேரோட்டி கண்ணனாகவோ அல்லது துர்க்கை அன்னையாகவோ அல்லது இப்பாடல் மேலும் நீண்டிருந்தால் மற்ற உருவங்களாகவும் அவதரிப்புகள் கூடும் .
சொல்லப் போனால், ஏன் இங்கு நாம் நிறுத்த வேண்டும்? 5வது சீரும் இறுதிச் சீரும் தெய்வ வழிகாட்டியின் மற்றொரு தோற்றத்தை முன் கிடத்துகிறது. அது ராஜேஸ்வரன், அரசர்க்கெல்லாம் அரசன், அல்லது ஆதி குருவாகிய சிவன். சிவனில்லையேல் இந்தியா இந்தியாவாக இருக்க இயலாது.

இந்தியா மதச்சார்பற்ற நாடா? (Is It Secular?)
மதச் சார்பற்றக் குடியரசு என எப்போதுமே போற்றப்படும் ஒரு நாடு ‘லா மார்ஸெல்லேய்ஸ்’ அல்லது ‘ஹெய்ல் டிர் இம் சீகேர்க்ரான்ஸ்’ போன்ற மதச் சார்பற்ற தேசிய கீதத்தை தேர்ந்தெடுக்கும் என நாம் எதிர்பார்த்திருக்கக் கூடும். மதத்தை முற்றிலும் புறக்கணிக்கும் இவ்விரு தேசிய கீதங்களுக்கு மாறாக, ஜன கண மன, ‘மதச்சார்பற்றது’ என்பதின் சரியான பொருள் அனைத்து மதங்களையும் அரசாங்கம் சமநோக்குடன் அடையாளம் காண வேண்டும் என்ற காந்தியவாதத்தை சார்ந்திருப்பது போன்ற பத்தியை கொண்டுள்ளது.
1975ல், இந்திரா காந்தி தனது அவசர கால சர்வாதிகார ஆட்சியின் போதுதான், இந்தியா ஒரு ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு என்ற அரசியலமைப்பு வரியுடன் மதச்சார்பற்ற, சோஷலிச என்ற இரண்டு சொற்களை நுழைத்தார். இந்த இரண்டு சொற்கள் மட்டுமே முறையான பாராளுமன்ற விவாதமின்றி அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டவை. ஜனநாயகத்தின் அடிமட்டப் பகுதி எனலாம். மாறாக, அரசியலமைப்பு சட்டக் கூட்ட காலத்தில், அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர், டாக்டர். அம்பேத்கர், மதச்சார்பற்ற என்ற சொல்லைச் சேர்ப்பதை வெளிப்படையாகவே நிராகரித்தார். 28 வருடங்கள் கழித்து இச்சொல் இணைக்கப்பட்ட பின் ‘இந்துக்களுக்கு எதிரான’ என்ற புதிய அர்த்தத்தை கொண்டுள்ளது. இருந்தும், பெரும்பான்மையான இந்துக்கள் இது பழைய அர்த்தத்திலேயே உபயோகிக்கப்படுகிறது என வெகுளித்தனமாக நினைக்கின்றனர்.
தாகூர் இப்பாடலை இயற்றியபோது இச்சொல் பிரயோகத்தில் இல்லை. ஆனால் அவர் மதப் பன்மைத்துவத்தை ஆதரித்தார். அவரும், பெரும்பான்மையான ஹிந்துக்கள் போல், இதை ஒரு கொள்கையாக எண்ணிப் பேசத் தேவை இல்லாமல் இயல்பாகவே ஏற்றுக் கொண்டவர். அவரை பொறுத்தவரை,காந்தியை போலவே அனைத்து மதங்களும் சம மதிப்பிற்குரியவை என ஓரளவு எண்ணினார் எனலாம். பாடப்படாத 2வது சீரை எடுத்துக்கொள்வோம். மேலெழுந்தவாரியாக படிப்பவருக்கு இச்சீர் மதங்களுக்கிடையே நடுநிலை வேண்டித் துணை போவதாகத் தோன்றும்
‘கருணை மிகுந்த உன் அழைப்பிற்கு செவி சாய்க்கிறோம்.
ஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள்,சமணர்கள், பார்ஸிகள்,
முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்கள்,
கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஒன்று கூடி
உனது சிம்மாசனத்தின் பக்கத்தில்,
அன்பை மாலையாக தொடுக்கின்றனர்.
ஆஹா! மக்களிடையே ஒற்றுமையை கூட்டுபவளே!’
இந்திய முஸ்லிம்கள் கிருத்துவர்களிடம், முஸ்லீம் கிருத்துவ உணர்வுக்கு எதிரான உணர்வுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதன் காரணம், அவர்களது இந்து முன்னோர்கள் பரம்பரையாகவோ இந்துச் சுற்றுப்புறத்தை தன்னுடையதாக்கிக் கொண்டதாலோ அல்லது அனைவருக்கும் பொதுவான மானுட உணர்வாகவோ இருக்கலாம். எனவே அவர்களிடம், தாய்நாட்டின் மேலுள்ள பற்றுதல் வலிந்து பயிற்றுவிக்கப்பட்டுள்ள மெக்கா, ஜெரூசலம், அல்லது ரோம் போன்ற இடங்களில் இல்லை. எனவே, இந்தியாவுடன் அவர்களது இணைப்பு சக ஹிந்துத் தோழர்களுடன் அவர்களை ஒன்று சேர்க்கிறது. பெரும்பான்மையான ஹிந்துக்கள் தங்களது கோட்பாடுகளில் மிக்க அக்கறை கொண்டவர்களல்ல. எனவே மற்ற மதங்களிலிருந்து வேறுபடுத்தும் இஸ்லாமிய, கிருத்துவக் கோட்பாடுகளை மதியாமல் அனைத்து மதப்பிரிவினரையும் முழு மனதுடன் வரவேற்கின்றனர்.
இந்நிலைப்பாடு பரஸ்பரமானதல்ல. அனைத்து மதப் பிரிவுகளும் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தினர் என்பது இஸ்லாமிய கிருத்துவ மனப்பான்மை அல்ல என அடித்துக் கூறலாம்.ஏனெனில், இரண்டுமே பிற மதங்களை சேர்ந்தவர்கள் நரக நெருப்பில் தள்ளப்படுகார்கள் என சபதம் செய்கின்றன. தேசிய கீதத்தின் 2வது சீரும், கொஞ்சம் முஸ்லீம், கொஞ்சம் கிருத்துவம், கொஞ்சம் மற்றவையெல்லாம் என்ற உணர்வை கொண்டுள்ளது என்பதும் சரியல்ல; அதே சமயம் மத நம்பிக்கை என்னவென்று பாராமல் அனைவரையும் வரவேற்பதென்பது முற்றிலும் ஹிந்து மதத்திற்கே உரியது.
இதனால் ஒவ்வொரு இந்தியனும் ஏதோ ஒரு உயிர் மேலிருந்து கொண்டு இந்தியாவின் தலை விதியை கண்காணித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நம்ப வேண்டும் என்ற அர்த்தமா? ஹிந்துயிசம் பன்முகங்களை கொண்டது; வித்தியாசமான விளக்கங்களை கொண்டது. ஹிந்து பாரம்பரிய,நவீன சிந்தனைக் கூடங்கள் இரண்டுமே கடவுள் நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மனதின் ஆற்றல் சக்தியினால் கிளம்பும் மன எழுச்சிதான் கடவுள் என்கிறது. ஆம்!. தலை விதியை விநியோகிப்பவர் மனவெழுச்சி என்றால் அவருக்கோ அல்லது அவளுக்கோ தேவையான ஊட்டச்சக்தியை அதே மனதுதான் ஊட்ட வேண்டும்.

இடத்திற்கான வாக்குவாதம் (TERRITORIAL DEBATE)
மதச்சார்பற்றவர்களும் பாகிஸ்தானியர்களும் மீண்டும் ஒரு முறை ஒரே மெத்தையில் இருப்பதை கண்டு ஆச்சரியப்படாமல் இருவருமே சிந்துவை இந்திய மாகாணமாக சேர்த்திருப்பதை எதிர்க்கிறார்கள். இந்த கீதம் எழுதப்பட்டபோது சிந்து பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைந்திருந்தது, உத்கலா(ஒடிஷா), பங்கா(வங்காளம்) உட்பட. பிரிவினை செய்யப்படவில்லை. பாகிஸ்தான் பிரிவினையின்போது கூட பாம்பே மாகாணத்தைதான் சேர்ந்திருந்தது. நினைத்துப் பார்த்தால் மேற்கு பஞ்சாபும் கிழக்கு வங்காளமும் கூட பிரிபடவில்லை..
பாகிஸ்தான் தந்தையர்கள் இந்த கீதத்தில் கணக்கிடப்பட்டுள்ள புவியியல் பிராந்தியங்களுக்கு ஏற்ப தங்கள் திட்டத்தை மாற்றிக் கொள்ளட்டும். அவர்கள் இப்பிராந்தியங்களை இந்தியாவிலிருந்து துண்டித்திருக்கக் கூடாது. இப்போது அவர்களது நாட்டின் பெருவாரியான பிரதேசம் மற்றொரு நாட்டையும் நாகரீகத்தையும் சேர்ந்துள்ளது. அதன் மிச்சம் மட்டுமே மொஹஞ்சதாரோ போல் அவர்களது நாட்டை சேர்ந்துள்ளது. எனவே, சிந்து, மேற்கு பஞ்சாப், கிழக்கு வங்காளம் ஆகியவை இந்தியாவின் தேசிய கீதத்தில் இருப்பது முற்றிலும் சரியானதே. எவ்வாறு கில்கித், பால்டிஸ்தான் இரண்டும் “பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர்” என சரியாகவே அழைக்கப்படுகிறதோ அவ்வாறே, பாகிஸ்தானும் பங்களாதேஷும் இஸ்லாம் ஆக்கிரமித்துள்ள இந்தியாதான். ஒரு பாகிஸ்தானிய தலைவர் முரளி மனோகர் ஜோஷியிடம், ‘காஷ்மீர் இல்லாமல் பாகிஸ்தான் முழுமை பெறாது’ என வருத்தத்துடன் கூறியபோது, ஜோஷி, “இந்தியாவும் பாகிஸ்தான் இல்லாமல் முழுமை பெறாது” என அவ்வாக்கியத்தை முடித்தார்.
ஜெர்மனி, அதன் தேசிய கீதத்தின் முதல் சீரை அப்புறப்படுத்தியதன் காரணம், 1945க்கு பிறகு அதன் எல்லைக் கோட்டிலிருந்து மெமெல் நதி வரையுள்ள பிரதேசத்தில்(பெருமளவு போலந்தும், லிதுவேனியாவும்) எவ்வித பாத்தியதையும் இல்லை என்பதை காட்டுவதற்காக ஆகும்.அப்பகுதிகள், அவ்வாறு ஒன்று இருந்திருந்தால், உள்ளார்ந்த முறையில் அது ஜெர்மனி அல்ல. அப்பகுதியினர், ஜெர்மனி பிறந்து பல நூற்றாண்டுகள் கழித்து டியூட்டானிக் சிலுவை போரில் தோற்கடிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக கிருத்துவர்களாக மாற்றப்பட்டவர்கள். அதை ஜெர்மனி மறுபடி இழந்தது பரிதாபத்திற்குரியது என்றாலும் ஜெர்மனியின் இதயத்தைத் தாக்கியது எனக் கூற முடியாது. மாறாக, சிந்து நதியின் கீழ்ப்புறமுள்ள சிந்து மாகாணம் இந்தியா என்ற பெயரின் அடிமூலம், கிரேக்க நதியின் பெயரான “இண்டோஸ்”, ஸமஸ்க்ரித சிந்து என்ற சொல்லின் பாரசீகத் திரிபு. சுருக்கமாக, சிந்து நதி. அங்குதான் மொஹெஞ்சதாரோ 5000 வருடத்திய ஆச்சாரிய அரசர், நடனமாடும் பெண், சிவன் பசுபதி போன்ற சின்னங்களுடன் ஹிந்து நாகரீகத்தை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தானுடைய நாகரீகத்தையல்ல. நிச்சயமாக, சிந்துவை இந்தியா திரும்பப் பெறும், அதன் இருப்பிற்கான காரணத்தை பாகிஸ்தான் இழக்கும் நாளன்று. அந்நாள் வந்தே தீரும்.

கூடவே ஓடின (ALSO RAN):
சுதந்திர இயக்கமும் பிறகு அரசியலமைப்புக்க குழுவும தேசிய கீதத் தேர்வுக்காக நடத்திய விவாதத்தில் 3 கீதங்கள் முக்கிய பங்கேற்றன. ‘ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’(Sare Jagan se accha Hindustan Hamara), ‘உலகத்திலேயே உயந்தது நமது ஹிந்துஸ்தான’எனும் முகம்மது இக்பால்1904ல் எழுதிய உருதுப் பாடல் அதில் ஒன்றாகும். ஜெர்மனியில் படித்ததினால் அவரை டியூட்ஷ்லாண்ட் உபேர் அல்லெஸ்(Deutschland Uber Alles) ஈர்த்திருக்கலாம். ஜெர்மனிதான் ஏனைய நாடுகளை விட தலை சிறந்தது என, தவறாக ஆனால் பொதுவாக, எண்ணப்படும் அர்த்தத்தை கொண்ட வரி. அது எவ்வாறு இருப்பினும், இவரது பாடலின் முதல் வரி இந்தியாதான் மற்ற நாடுகளை விட சிறந்தது என்பதாகும்.
இப்பாடலின் வரிகள் தகுதி,இசை இரண்டிலும் சிறந்திருந்தாலும், இக்பால் பாடல்கள் அனைத்துமே வாயில் ஒரு கசப்பை ஏற்படுத்தியது. இதன் காரணம் 1938ல் அவர் இறப்பதற்கு சில வருடங்கள் முன் புதிதாக பறக்க ஆரம்பித்துள்ள பாகிஸ்தான் இயக்கத்தின் ஆன்மீகத் தலைவராகி விட்டார். உலகிலேயே சிறந்த இந்தியா திடிரென்று நல்ல நாடில்லை என்றாகி விட்டது. “இஸ்லாமியர்கள் அதிக அளவில் இருந்த பிரதேசங்கள் இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும்” என விரும்பினார். . அவ்வாறிருந்தும், இந்திய ராணுவத்தினரிடையே அவருக்கு கிடைத்த அங்கீகாரம் மறையவே இல்லை.
மற்றொரு பாடல் ‘வந்தே மாதரம்’, தாயே! நான் உன்னை வணங்குகிறேன்’ அதாவது இந்தியா எனும் தாய். 1882ல், பங்கிம் சந்திர சட்டர்ஜிஎழுதிய ஆனந்த மடம் என்ற புதினத்திலுள்ள பாடல். மறைமுகமாக, வாசகர்களிடம் காலனியர்களை, அதாவது ஆங்கிலேயர்களை எதிர்த்தெழ முறையீடு செய்வது போல் தோன்றினாலும், வெளிப்படையாக, கதையமைப்பில் இப்புரட்சி முஸ்லீம் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதாக உள்ளது. இங்கு ஒரு சிறிய சிக்கல் உள்ளது. இக்கதை நிகழ்ந்த காலம் 1771. வங்காளம், 1757லேயே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்து விட்டது. இருந்தும், முஸ்லிம்கள்தான் இந்துக்களின் பகைவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலேயர்க்கு எதிராக உருவப்பட்ட கத்தியை, ஆங்கிலேயர்களின் தணிக்கை கண்களிலிருந்து மறைக்க வேண்டி மழுங்கியதாக கட்ட வேண்டியதாகி விட்டது. எதிர்பார்த்தது போலவே, முஸ்லிம்களும் நேருவிய மதச்சார்பற்றவர்களும் இப்பாடலுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், முஸ்லிம்கள் திட்டவட்டமான மத ஆட்சேபணையை முன் வைத்தனர்; இது அன்னைக் கடவுளின் வழிபாடு, சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய வீரமிகுக் கடவுள் துர்க்கையம்மனை குறிக்கிறது.எனவே இது உருவ வழிப்பாடு. நாங்கள் அல்லாவை மட்டுமே வழிபடுவோம் என்ற நேரடி ஆட்சேபணையாகும்.. ஆடம்பரமான, மகிமை வாய்ந்த ஒரு பாடல் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் அதில் கடவுளோ, கடவுள் ஸ்தானத்தில் உள்ள நாடோ இருக்கக் கூடாது. இன்று வரை முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடப்படும் பொது நிகழ்வுகளை புறக்கணிக்கின்றனர். சுன்னி மதப் பிரிவான பரேல்வி மத குரு ஒரு கட்டுரையில், “தேசிய கீதத்தை பாடுவது இஸ்லாமிற்கு எதிரானது” என்கிறார். முஸ்லீம் சட்ட நிபுணர் இதற்கான காரணத்தை விளக்குகிறார்,’ வந்தே மாதரம் ஆட்சேபணைக்குரிய சில சொற்களை கொண்டுள்ளது”. .
இது ஜன கண மன கீதத்தின் மாறுபட்ட வெளிச்சத்தை சுட்டிக் காட்டுகிறது. இப்பாடலில் இந்தியாவின் தலை விதியை விநியோகிப்பவர் மூடுமறைவில்லாமல் அன்புக்குரிய வழிகாட்டி கண்ணனாகவோ, சண்டைக்கார துர்கையம்மனாகவோ, நித்திய ஆசான் சிவனாகவோ காணப்படுகின்றனர். சில தீர்க்கதரிசிகளின் பிரகாரம் இவர்களெல்லாம் பொய் தெய்வங்கள் அல்லது சாத்தானின் ஆள்மாறாட்டம். வந்தே மாதரம் ஒரு சமூகத்திற்குரியது என்றால் ஜன கண மனவும் அதே போன்றதுதான். அதுதான் அதன் சிறப்பம்சம்.
இப்பாடல் பெரியதாகவும் அனைத்திந்தியாவையும் உள்ளடக்கியதாகவும், ஒன்று சேர்ந்த பிரிவுபட்ட வரலாற்றையும், ஆரிய, திராவிட, பழங்குடி,, நகர்ப்புறம், குடியரசு, முடியரசு ஆகிய அனைத்தையும் பாரபட்சமின்றி கூறுவதாக இருந்தாலும் ஒரு கருத்தியலை பற்றுக்கோடாக பிடித்துக் கொண்டுதான் நிற்கிறது.அது எதிர்மறை வாதமல்ல,, எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்ற தாராள வாதமல்ல, கலீஃபா ஆட்சி எனும் இஸ்லாமிய ஒற்றைக்கல் தூணல்ல, உள்நாட்டு கலாச்சாரத்தை தூற்றுவதோ அடக்குவதோ அல்ல. மாறாக, இப்பாடல் அனைத்து விதமான குழந்தைகளுக்காகவும் விரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தார்மீகக் குடையை வரவேற்பதாக அமைந்துள்ளது.

தாயக இந்தியா (MOTHER INDA)
சமீப காலமாக, மதச்சார்பற்றவர்கள் வந்தே மாதரத்திற்கான ஆட்சேபணைகளை வேண்டி மீண்டும் மிகக் கடினமாகவும் ஆழமாகவும் தோண்டியதில் புதிதாக சிலவற்றை கண்டு பிடித்துள்ளனர். பாடப்படாத பின்னருள்ள ஒரு சீரில் கேட்கப்படுவது (அரவிந்தரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து:
‘உன்னாட்டிலேயே உன்னை வலுவற்றவள் என யார் கூறியது
ஏழு கோடி கரங்கள் வாளை உருவிய தருணத்தில்
ஏழு கோடி குரல்கள் அச்சுறுத்தும் உனது பெயரை
இக்கரையிலிருந்து அக்கரை வரை கர்ஜித்த தருணத்தில்’
இப்பாடல் இயற்றப்பட்டபோது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளி வந்து விட்டது. இந்தியாவின் மக்கள் தொகை 7 கோடியல்ல, 30 கோடியை அணுகி விட்டது. ஆனால் 7 கோடியென்பது கிட்டத்தட்ட வங்காளத்தின் மக்கள் தொகை. இப்புத்தகம் அனைத்திந்திய கிளர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. வங்காளத்தினர் மட்டுமே கலகத்தில் ஈடுபடுவர் என்பதாக அமைந்துள்ளது. தேசியவாதி, பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களே இந்தியாவை ஒன்றிய நாடாகக் கருதவில்லை. அவர் பெரும்பாலும் வங்காள தேசியவாதி என்பதற்கு இதுவே சான்று என மதச் சார்பற்றவர்களும், இந்தியாவை பிளக்க முயலும் அவர்களது தோழர்களும் உபயோகிக்க வசதியாக இவ்வரிகள் உள்ளன. மெய்யாகவே, முன்மாதிரியாக அவர்கள்மதிக்கும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை உருவாக்கியது அவர்கள்தான் என வலியுறுத்திக் கூறுவது சரியானதுதான்; அதுவரை, வின்ஸ்டன் சர்ச்சில் கூறியது போல் ‘இந்தியா பூமத்திய ரேகை போன்ற ஒரு கற்பனை” என்று கூடச் சொல்லக் கூடும்.

முடிவுரை
இந்தியாவின் தோற்றத்திற்கு காரணமாயிருந்தவர்கள் முழுப் பாடலையும் அறியாமலே தேசிய கீதத்தை தேர்வு செய்து விட்டனர், வாக்களித்த அங்கத்தினர்களும் 3லிருந்து 5வது சீர் முடிய பேசப்படும் கடவுளை பற்றி அறியவில்லை அல்லது இவை தேசிய கீதத்தை சேர்ந்ததல்ல என நினைத்திருக்கக் கூடும். அவை அதிகாரபூர்வமானதல்ல என்பது உண்மைதான். எது எப்படியிருப்பினும், இச்சீர்களையும் சேர்த்துக் கொண்டால் இப்பாடல் நிச்சயமாக கடவுளை சார்ந்துள்ள ஹிந்துப் பாடல்தான்.
இந்தியாவின் தேசிய கீதம், ஹைல் டியா இம் சீகர்க்ரான்ஸ் போல் அரசரைச் சார்ந்ததல்ல, வில்ஹெல்ம், கெய்சர்ஹிம், கடவுள் அரசியை காப்பாற்றட்டும் போல் அரசரையும் கடவுளையும் சார்ந்ததல்ல, ப்ரபான்கோன், டாஸ் லெய்ட் டெர் டியூட்ஸ்ஷென் போல் மதச்சார்பற்ற நாட்டையும் அரசையும் சார்ந்ததல்ல. மார்செய் , நட்சத்திரங்கள் மினுமினுக்கும் பதாகை போல் நாட்டையும் இராணுவத்தையும் சார்ந்ததல்ல. மிக அழுத்தமாக நாட்டையும் கடவுளையும் சார்ந்துள்ள பாடல். இப்பாடலில் கடவுளாக அடையாளம் காணப்படுபவர் அநேகமாக கண்ணனாகத்தான் இருக்க வேண்டும். அல்லது தத்துவார்த்தமாக, எப்போதெல்லாம் தர்மம் நிலைப்பதற்கு தேவைப்படுகின்றதோ அப்போதெல்லாம் தன்னை உலகத்தில் ஈடுபடுத்திக் கொள்ளும் தெய்வம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
இப்பாடல் எந்த ஒரு அரசியல் அமைப்பிற்கும், உதாரணமாக, முடியரசிற்காக ஆட்சி செய்பவரை போற்றுவது போல் அமையவில்லை. விதவிதமான இயற்கை வனப்புகளையும், அவை உண்டு பண்ணும் அனுபவங்களையும் கூறுவதின் மூலம் நாட்டின் மேலுள்ள பாசத்தை வெளிப்படுத்துகிறது. கையோடு கையாக கூடவே தொடர்கிறது ஆதி குருவிற்கான வழிபாடு. தாகூர், இக்கீதத்தை உணர்ச்சியுடன் பாடும் மதிக்கும் இந்திய பிரஜைகள் இவர்களின் பிரகாரம், மேலுலகைச் சார்ந்த ஒரு புனிதமான பரிணாமமின்றி இந்தியா முழுமை பெறாது.
(This Piece has been adapted from the article published on Voice of India 7 April 2017)