சில்லறைகள்

கொல்கத்தாவிற்குச் செல்லும் பல எழுத்தாளர்கள் போல நானும் ஒரு நல்ல கதையைத் தேடித்தான் சோனாகாச்சிக்குச் சென்றேன். ரிப்பன் வீதியில் நான் தங்கியிருந்த விடுதிக்கு அருகே இருந்த டீக்கடைப் பையனிடம் அன்று காலை விசாரித்திருந்தேன். விடுதியிலேயே அனைத்தையும் ஏற்பாடு செய்ய ஆள் இருப்பதாக உடைந்த ஹிந்தியில் கூறினான் அந்தப் பையன். வேடிக்கை பார்க்க மட்டுமே நான் சோனாகாச்சி செல்வதாகச் சொன்னேன். வேடிக்கை பார்க்கவும் அறையிலேயே வசதி செய்து கொடுப்பதாக அந்தப் பையன் சொன்னான். ஒருவழியாய் அவனிடம் வழிகேட்டு அறிந்துகொண்டு இரவு எட்டு மணியளவில் விடுதியில் இருந்து எஸ்ப்லனேட் வரை நடந்து மெட்ரோ ரயில் பிடித்து சோவாபஜார் ரயில்நிலையத்தில் இறங்கி ஜத்திந்திர மோகன் நெடுஞ்சாலை நடைப்பாதையில் நடந்தேன். மங்கலாய் மஞ்சளாய் ஒளிர்ந்த நடைப்பாதையில் அவசரமாகச் செல்லும் பதின்வயது இளைஞன், சாலையை மெதுவாகக் கடக்கும் நாய், தூரத்தில் ஹாரன் சத்தம். ஆசியாவிலேயே பெரிய சிவப்பு விளக்குப்பகுதி நான் சென்ற நேரம்பார்த்து காலியாகி விட்டதுபோல இருந்தது. 

சென்னையில் சாலையோரத்திலும் கடற்கரையிலும் நிற்கும் சில பாலியல் தொழிலாளிகளைப் பார்த்திருந்தாலும் அவர்கள் யாரிடமும் நான் இதுவரை நின்று  பேசியதில்லை. பயம், கூச்சம் என்று காரணம் எதுவாகவும் இருந்திருக்கலாம். இப்பொழுது மட்டும் ஏன் என்று நீங்கள் நினைக்கலாம். மண்டோ போல, ஜி.நாகராஜன் போல ஒரு கதையை எழுதிட முயற்சித்துத்தான் இத்தனை மெனக்கேடு. சோனாகாச்சி என்றால் வங்காள மொழியில் தங்க மரம் என்று அர்த்தமாம். அப்படி அங்கே என்ன இருக்கிறது என்று பார்த்துவிட ஒரு ஆசை. 

எங்கேனும் சிகரெட் கிடைக்குமா என்று பார்த்தேன். நடைபாதையை ஒட்டிய கடைகள் அனைத்தும் பூட்டியிருக்க யாரிடமாவது வழி கேட்கலாம் என்று சுற்றிப் பார்த்துக்கொண்டே நடந்தேன். வலதுபுற சந்துமுனையில் ஜாய்மித்ரா வீதி என்ற பெயற்பலகைக்குப் பக்கத்தில் ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். நான் வழி கேட்கும்முன் அவள் என்னைப் பார்த்து சிரித்தாள். மினுமினுக்கும் மாநிற வட்ட முகத்தில் நெற்றியிலும் வகுட்டிலும் குங்குமம், இடது புருவத்தின் மேல் ஒரு வெட்டுத் தழும்பு. பூரித்த உடல்வாகுக்கு ஏற்ற சிவப்புப் புடவை, தோளில் ஒரு கைப்பை. பேருந்தில் சகபிரயாணியாய் தினசரி அலுவலகம் சென்றுவரும் பேரிளம்பெண்போல இருந்தாள் அவள். நான் சுதாகரிப்பதற்குள் மிதந்து வருவதைப் போல சடுதியில் என்னருகே வந்து நின்றாள். அருகே என்றால் அவள் மூச்சுக்காற்று என் முகத்தில் பட்டுவிடும் அருகில்.

“குஜராத்தியா?” என்று கேட்டாள். 

“இல்லை,” என்று ஹிந்தியில் சொன்னேன். 

“மதராசி,” என்று சொல்லிச் சிரித்தாள். 

“எப்படி ஒரே வார்த்தையில் கண்டுபிடிச்சே?” 

“என்ன கேள்வி இது? அதுவும் என்கிட்ட? என் உடம்பில் பூரா இந்தியா வரைபடமும் இருக்கு. வா மெட்ராஸ் எங்க இருக்குன்னு காட்டறேன்,” என்று  பேசிக்கொண்டே என் ஒரு கையை எடுத்து அவள் இரு கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். 

“இல்லை… நான் சும்மாதான் வந்தேன்.”

“பயமா?” என்று சிணுங்கினாள்.

“இதெல்லாம் காசுக்காக பண்ணக்கூடாது,” 

“வேற எதுக்காக பண்ணனும்?”

“காதலுக்காக.”

“காதலிச்சுட்டாப் போச்சு. இதுக்கா இவ்வளவு கூச்சம்?” 

அவள் இன்னும் நெருங்கி என் முகத்தருகே வந்து நின்றாள். எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. எச்சிலை விழுங்கி, “இல்லை. இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம்தான்,” என்றேன். 

“இது வேற சந்தோஷம், கல்யாணம் வேற சந்தோஷம். இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று புரியாததுபோல் கேட்டாள். 

கொஞ்சம் கொஞ்சமாக அவள் பக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. சாலையில் நிற்கும் ஒருத்தி வாஞ்சையாய் கையைப் பிடித்து ஐந்து நிமிடத்துக்குள் இப்படி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி விடும் அளவுக்கா நான் பலகீனமானவன்?

“என்ன இருந்தாலும் நீங்க காசுக்கு இதெல்லாம் பண்றதுக்கு பதிலா…” 

சிரிப்பை நிறுத்தி அவள் என்னை உற்றுப் பார்த்தாள். என் கையை விட்டுவிட்டு பின்னே நகர்ந்து மறுபடியும் சிரித்துக் கேட்டாள் “நீ பிச்சை எடுத்திருக்கயா?”

நான் உதட்டைப் பிதுக்கினேன். அவள் சொன்னாள், “முதல் நாள் தனக்குப் பெரிய மனசுன்னு காமிச்சுக்கக் காசு குடுப்பான். அடுத்த நாள் அவன் முந்தின நாள் பிச்சை போட்ட உரிமையில வேற வேலை இல்லையான்னு கேப்பான். மூணாவது நாள் அஞ்சு நிமிஷம் ஓரமா வா காசு தரேன்னு சொல்லுவான். நாலாவது நாள் அதுவே தொழிலாயிடும்.”

கதைக்குக் கரு கிடைத்துவிட்டதுபோல தோன்றியது, “இந்த உலகில் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலைன்னு எப்பவாச்சும் யோசிச்சுருக்கீங்களா?”

அவள் நடைப்பாதையைப் பார்த்துக்கொண்டே சொன்னாள், “நீ இப்படி வந்து என் பக்கத்துல நின்னு காசு கேட்டுப் பாரு. அஞ்சு நிமிஷம் திரும்பி நில்லு காசு தரேன்னு உன்னையும் கூப்பிடுவாங்க. ரோட்ல இறங்கிட்டா நம்ம ரெண்டு பேருக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்.”

“நீங்க எந்த ஊர்?” என்று அவளிடம் கேட்டேன். 

என் பின்னே வந்து கொண்டிருந்த ஒரு இளைஞனைப் பார்த்ததும் அவள் என்னைக் கடந்து சென்றாள். நான் திரும்பி அவளைப் பார்த்தேன். இனி அவள் என்னைப் பார்க்கவோ என் கைகளை பிடித்துக் கொள்ளவோ போவதில்லை. 

முன்னே நடந்து பெட்ரோல் பங்க் அருகே இருந்த ஒரு சந்துக்குள் நுழைந்தேன். சில கடைகள் திறந்திருந்தன. பெட்டிக் கடையில் ஒரு சிகரெட் வாங்கி அங்கேயே நின்று புகைத்து முடித்துவிட்டு நடந்தேன். சாலையோரம் ஆங்காங்கே முக்காலிகளில் கேரம்போர்டு வைத்து சுற்றி நின்று பல பதின்பருவ சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். 

“பாய்ஜான், ஹே பாய்ஜான்,” என்று பின்னால் இருந்து குரல் வர திரும்பிப் பார்த்தேன். ஒரு சிறுவன் என்னை நெருங்கி வந்து நின்றான். 

“பிரேம் கமல், கங்கா ஜமுனா, சங்கம், எங்க போகணும்?” என்று கேட்டான்.

சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு, “நான் ஒரு ரைட்டர். இந்த இடத்தைப் பார்க்க வந்திருக்கேன்,” என்று ஹிந்தியில் சொன்னேன்.

ஏதோ வங்காளக் கெட்டவார்த்தையில் அவன் திட்டியதைக் கேட்காததுபோல நான் நின்றிருக்க அந்தச் சிறுவன் அவன் நண்பனை அழைத்தான். கேரம் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுவன் என்னருகே வர என்னோடு இருந்தவன் விலகிக் கொண்டான். 

வந்து நின்றவனிடம் “சோனாகாச்சி முழுவதும் சுற்றிக்காட்ட முடியுமா?” என்று கேட்டேன்.  

“முழுக்கவெல்லாம் காட்ட முடியாது. ஒண்ணு ரெண்டு சந்து வேணா காட்டறேன்,“ என்று சொல்லி என்னிடம் நூறு ரூபாய் வாங்கிப் பையில் வைத்துக் கொண்டான். 

நாங்கள் நடக்க ஆரம்பித்ததும் பின்னால் இருந்து ஒருவன் கத்தினான், “ஓய் சோட்டோன், அவன்கிட்ட கேளு அவன் பேனால இங்க் இருக்கான்னு.”

முதலில் ஒரு சிறிய சந்துக்குள் சென்றோம். அடுக்குப்பெட்டி போன்ற சிறிய ஓட்டு வீடுகள், அவ்வீட்டு வாசல்களில் வயது முதிர்ந்த பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். முகத்தைத் துண்டால் மறைத்துக்கொண்ட வேட்டி அணிந்த, தேய்ந்த செருப்பணிந்த ஆண்களின் கால்கள் அந்த வீடுகளில் நுழைந்தன. 

என்னுடன் வந்த சிறுவன், “சீக்கிரம் வா” என்று சொல்லிவிட்டு முன்னால் நடந்து மறைந்தான். நான் அவன் பின்னாலேயே மற்றொரு சந்துக்குள் நுழைந்தேன். சின்ன சாலை, அதில் அத்தனை வெளிச்சம். கண்காட்சிக்குள் நுழைந்ததுபோல இருந்தது. அடுத்தடுத்து அடுக்குமாடி தீப்பெட்டிக் குடியிருப்புகள். கட்டிடங்கள் எங்கும் விதவிதமான விளக்கொளி, ஒலிப்பெருக்கிப் பாட்டொலி. தெருவில் விளக்குகள் கட்டி வரப்போகும் தேருக்காக சாலையோரம் கூட்டமாகக்  காத்திருக்கும் மக்கள் போல சாலையின் இருபுறத்திலும் நடந்து, அமர்ந்து, நின்று, காத்துக்கொண்டிருக்கும் பெண்கள். அதுவரை பார்த்திருந்த எல்லா முகவெட்டிலும் பெண்கள். புடவையில் இருந்து குட்டைப்பாவாடை வரை அனைத்து விதமான உடைகளும் அணிந்த பெண்கள். அதில் பல கண்கள் என்னைப் பார்ப்பதும் திரும்புவதும் திரும்பிப் பார்ப்பதும் மனதுக்குள் குதூகலத்தை வரவழைத்தது. 

முன்னால் சென்ற சிறுவன் எனக்காகக் காத்திருந்தான். அவனருகே சென்று “பிரேம் கமல், சங்கம் என்றெல்லாம் உன் நண்பன் சொன்னானே அது என்ன?” என்று கேட்டேன்.  

“எல்லாம் பெரிய வீடுகள். ஒரு மணிநேரம். பத்தாயிரம் ரூபாய். சப் அச்சா அச்சா மால். உனக்குத்தான் பேனா இருக்க வேண்டிய இடத்துல இல்லையே. பணம் குடு. நான் கிளம்பறேன்,” என்றான். 

நான் கொடுத்த இன்னொரு நூறு ரூபாயை வாங்கிக்கொண்டு எனக்குப் புரிய வேண்டும் என்றே ஒரு ஹிந்திக் கெட்டவார்த்தையில் திட்டிவிட்டு வந்த வழியே சென்றான். நான் வேடிக்கை பார்த்துக்கொண்டே முன்னே நடந்தேன். வலப்புறம் ஒரு கட்டிட வாசலில் இருந்து தமிழ்ப் பேச்சொலி கேட்டது. யார் என்று தேடிப் பார்க்கலாமா என்று யோசிக்கும்போது இரு பெண்கள் வழியின் குறுக்கே வந்து நின்றனர். 

இருவருக்கும் வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். ஒருத்தி மாநிறம், நைட்டி  அணிந்திருந்தாள். சற்று களையாக இருந்த மற்றவள் கை மடக்கிய சட்டையும் பாவடையும் அணிந்திருந்தாள். 

அவர்களைப் பார்த்து, சிரித்து, கடக்க முயன்றேன். “எங்க போற?” என்று சட்டை அணிந்த பெண் கேட்டாள். 

நைட்டி அணிந்த பெண் அடுத்தவளிடம் சொன்னாள், “பாவம்டி பயந்து ஓடிடப் போறான்.”

“நான் என்ன அவனைக் கடிச்சு திங்கவா போறேன்?” என்ற சட்டை என்னைப் பார்த்து “ஜாமூன் மாதிரிதான் இருக்க. கடிச்சு சாப்பிட்டுக் காட்டட்டுமா” என்று கேட்டுச் சிரித்தாள்.    

நானும் சிரித்தேன். சிறுவயதில் கூட விளையாடிய அக்காக்கள் பல வருடங்கள் கழித்து திரும்பப் பார்க்கையில் அதே விளையாட்டுத்தனத்துடன் விசாரிப்பதுபோல இருந்தது அவர்களுடன் பேசுவது. 

“அழகாக சிரிக்கற. உனக்கு என்ன வேணும் சொல்லு? இங்க எல்லா ஊர் ஆட்களும் இருக்காங்க, எல்லா வயசு ஆட்களும் இருக்காங்க,” என்று இடப்புறம் இருக்கும் இரண்டு மாடிக் கட்டிடத்தைக் காட்டினாள்.

“இல்லை வேண்டாம்,” என்றேன். 

“முதல்ல வந்து முஜ்ரா பாரு. அப்பறம் மத்ததை யோசிக்கலாம்” என்று கையில் அபிநயம் பிடித்துக் காட்டினாள். அவள் கை காட்டிய தரைத்தளத்தில் பாதித் திறந்திருந்த கதவின் உள்ளே சிவப்பு, பச்சை குவிவிளக்குகளின் வெளிச்சம் சுழன்று கொண்டிருந்தது. வேண்டாம் என்று தலையாட்டினேன். 

நைட்டி அணிந்த பெண் என்னிடம் சொன்னாள், “சோட் தோ. எனக்கு உன்னை புடிக்குது. நான் புரானா ஜமானா கா ராணி. நானே வரேன், சரியா?” 

தோழிகளுடன் கூட உணர்ந்திராத சகஜநிலை யாரென்றே தெரியாத இரு பெண்களிடம் தோன்றுவது வியப்பாகத்தான் இருந்தது.   

“நான் ஒரு எழுத்தாளன். இங்க கதை தேடித்தான் வந்தேன்,” என்று சொன்னேன். 

“காசு குடுக்காம வேலை செய்ய வந்திருக்கே,” என்று சட்டை அணிந்த பெண் சொன்னாள். 

“நீங்க யாரு?” என்று கேட்டேன்.  

“எதுக்கு? பத்து வயசுல இங்க வந்த பலர் கதையும் நிறைய எழுதியாச்சு. எல்லாம் ஒரே கதைதான். போதும், நீங்க எல்லாம் கரிசனப்பட்டு எழுதினது,” என்று நைட்டி அணிந்த பெண் சொன்னாள். 

“சரி, சோனாகாச்சி பத்தியாச்சும் கொஞ்சம் சொல்லுங்க,” என்று திரும்பி சட்டை அணிந்த பெண்ணிடம் கேட்டேன். 

அவள் சொன்னாள் “என்ன சொல்றது? இந்த சோனாகாச்சி இருபதாயிரம் இலைகள் கொண்ட ஒரு மரம். இந்த மரத்துல இலைகள் தானாக வளர்வதில்லை. யாராரோ பிடிச்சு வந்து ஒட்டிடறாங்க. ஒட்டும்போது பச்சையா இருக்கும் இலைகள் வயசாக வயசாக பழுத்து விலையில்லாம உதிர்ந்து போயிடும். ஏதோ எங்க மாதிரி சில இலைகள் பழுத்தும் மரியாதையோட மத்த இலைகளைப் பாத்துக்க மரத்துலயே இருக்கும். இந்த மரத்தைச் சுத்தி வேலி, ஆட்கள், காவலாளிகள், அரசாங்கம், உங்களை மாதிரி வந்து கல்லைப் போட்டு பழம் பறிச்சுட்டு போறவங்கன்னு எல்லாரும் இருக்காங்க. வெளியே இருந்து பார்த்தா சோனாகாச்சி ஒரு தங்க மரம். ஆனா எந்த மரமும் அதோட பழத்தையும், ஏன் நிழலையும் கூட அனுபவிப்பதே இல்லை.“

“இதை விரிவா எழுதி மத்தவங்க படிக்கும்போது உங்க மேல ஒரு மரியாதை–“ என்று நான் பேசப்பேச நைட்டி அணிந்த பெண் குறுக்கிட்டு பேசினாள், “நீ எழுதித்தான் எங்களுக்கு மரியாதை வாங்கித் தரப்போறயா? உனக்கு கொல்கத்தா துர்கா பூஜை தெரியுமா?”

நான் தெரியும் என்று தலையாட்டினேன். அவள் தொடர்ந்தாள், “துர்கா பூஜைக்கு கொல்கத்தா எங்கும் வெச்சு வணங்கும் துர்காமாவோட மண் சிலை இருக்கே? எங்களை மாதிரி ஒரு பொண்ணு வீட்டுக்கு பூசாரி வந்து வேசி வீட்டுவாசல் மண் வாங்கி கலக்காமல் எந்த துர்கா சிலையும் செய்ய மாட்டாங்க. மரியாதையைப் பத்தி நீ எங்ககிட்ட பேசறயா? கிளம்பு இங்க இருந்து.”

பேசிவிட்டு அவள் நகர்ந்துவிட்டாள். சட்டை அணிந்தவள் என்னைப் பார்த்து ஒரு சின்னப் புன்னகையை உதிர்த்து என் கன்னத்தை மெதுவாகத் தட்டி, “ஜாமுன், நீ போயிட்டு அப்பறம் வா,” என்றாள்.

அந்தத் தெருவை விட்டு வேகமாய் நடந்தேன். பல சந்துகளைக் கடந்து ஒரு ஆளில்லா சாலைக்கு வந்து சேர்ந்தபோது மணி பத்தரை ஆகி இருந்தது. கைப்பேசியில் டாக்ஸி எதுவும் கிடைக்கவில்லை. பத்து மணிக்கே மெட்ரோ சேவை முடிந்திருக்கும். அருகே பூட்டிப்பட்டுக் கொண்டிருந்த பெட்டிக்கடையில் ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்தைத் தேடி நடந்தேன். சற்று தூரத்தில் இரண்டு வயதானவர்கள் பேருந்துக்குக் காத்திருப்பதாகச் சொல்ல அங்கேயே ஓரமாக நின்று புகை பிடித்தேன்.

“ஹலோ” என்று பின்னால் இருந்து யாரோ தோளைத் தொட்டார்கள். காவலர் உடையணிந்த ஒரு மீசையில்லாத இளைஞன்,கான்ஸ்டபிள், அருகில் நின்றிருந்தான். சாலையில் சிகரெட் பிடிப்பதற்கு இங்கு எவ்வளவு அபராதம் என்று தெரியவில்லையே என்று நினைத்துக் கொண்டே சிகரெட்டை தரையிலிட்டு அணைத்து, “ஸாரி சார்” என்றேன். 

கான்ஸ்டபிள் ஆங்கிலத்தில் எந்த ஊர் என்று கேட்டான். சென்னை என்றேன். “ஐடீ கார்டு குடுங்க” என்று என் ஓட்டுனர் உரிமத்தை வாங்கிப் பார்த்துவிட்டு “இன்ஸ்பெக்டர் கூப்பிடறார்” என்று என்னை அழைத்துச் சென்றான். 

சற்று தள்ளி ஒரு போலீஸ் ஜீப் நின்று கொண்டிருந்தது. சறுக்கி இறங்கும் பாண்ட்டை வயிற்றுமேட்டில் ஏற்றிக்கொண்டு ஜீப்பில் சாய்ந்து நின்று காவல் அதிகாரி ஒருவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் சென்றதும் கான்ஸ்டபிள் சல்யூட் அடித்து என் உரிமத்தை அவரிடம் கொடுத்தான். முகத்தையும் பெயரையும் பார்த்துவிட்டு இன்ஸ்பெக்டர் கேட்டார், “முழுப்பெயர் என்ன.”

“அதுலயே இருக்கு சார்,” என்றேன். 

கான்ஸ்டபிள் கேட்டான், “சர்நேம் என்ன? முகர்ஜி, பானர்ஜி மாதிரி.”

“அதெல்லாம் எங்க ஊர்ல இல்லை சார். ஒரே பேருதான்.”

“அரே உன் ஜாதி என்னப்பா,” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். சொன்னேன். அவர் கேட்டார், “சோனாகாச்சி போனாயா? உண்மையைச் சொல்லு.”

“ஆமாம் சார், சும்மா போனேன்.” 

“சொன்னேன் இல்ல” என்று திரும்பி கான்ஸ்டபிளிடம் கேட்டுவிட்டு என்னைப் பார்த்து இன்ஸ்பெக்டர் கேட்டார், “அப்போ கொலையும் நீதான் செஞ்சுருக்க?”

“கொலையா?”

கான்ஸ்டபிள் சொன்னான், “தேக்கோ, எங்ககிட்ட ஆதாரம் இருக்கு. ஒரு மணிநேரம் முன்னாடி சோனாகாச்சி உள்ளே ஒரு கொலை நடந்திருக்கு. அந்தப் பக்கம் நீ நடந்து போகற சிசிடீவீ வீடியோ பாத்துத்தான் உன்னை அரெஸ்ட் பண்ணப் போறோம்.”

“சார், ஏதோ குழப்பம் நடந்திருக்கு. ஒரு மணிநேரம் முன்னாடிதான் நான் இங்க வந்தேன்.”

இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளைப் பார்த்தார். கான்ஸ்டபிள் என் கையில் இருந்த கைப்பேசியை வாங்கிக்கொண்டு “இப்படி வா,” என்று வண்டிக்குப் பின்புறம்  அழைத்துச் சென்றான்.

“சார், நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க,” என்று பேசப்பேச என்னை ஜீப்பின் பின்னால் ஏற வைத்தான். காலியாக இருந்த ஜீப்பின் பின்புறத்தில் எதிரெதிர் இருக்கைகளில் நானும் கான்ஸ்டபிளும் அமர முன்னே இன்ஸ்பெக்டர் அமர்ந்து டிரைவரிடம் கிளம்பச் சொன்னார். 

என்ன நடக்கிறதென்று புரிவதற்குள் என்னைச் சுற்றி என்னென்னவோ நடந்து கொண்டிருந்தது. பயம், குழப்பம், நடுக்கம் என்று எல்லா உணர்ச்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சிறுநீர் கழித்தே ஆக வேண்டிய அவசரம் முன்னுக்கு வந்தது. இருட்டிலும் அவன் கைப்பேசியில் என்னைப் படம் படம் பிடித்தான் கான்ஸ்டபிள். 

இன்ஸ்பெக்டர் என் பக்கம் திரும்பி ஹிந்தியில், “இங்க பாரு தம்பி. இன்னைக்கு சனிக்கிழமை. நாளைக்கு கோர்ட் லீவு. திங்கள் கிழமை மாஜிஸ்ட்ரேட் கிட்ட நீ எல்லாம் பேசிக்கோ.” என்று சொல்லிவிட்டு கான்ஸ்டபிளிடம், “அவனுக்கு இங்கிலீஷ்ல சொல்லி புரியவை” என்றார். 

கண்ணில் நீர் முட்டியது. யாரோ யாரையோ கொன்றதற்கு நான் ஏன் சிறையில் இருக்க வேண்டும்? ஒரு நல்ல கதை எழுத நினைத்தது அவ்வளவு பெரிய குற்றமா?  

கான்ஸ்டபிள் கேட்டான், “கல்கத்தா வந்து இப்படி ஒரு இடத்துல பையன்  மாட்டிக்கிட்டான்னு உங்க வீட்டுக்கு போன் பண்ணா என்ன ஆகும்?”

“உங்களுக்கு நல்லதா போகும். தயவுசெஞ்சு கூப்பிடுங்க. எங்க வீட்டுல தெரியும் நான் தப்பேல்லாம் பண்ண மாட்டேன்னு.” என்று சொன்னேன்.

இன்ஸ்பெக்டர் கேட்டார், “தேரீ… உங்க அப்பா அம்மா வந்து பெங்காலி பேசற வக்கீல் வெச்சு உன்னை கூட்டிட்டு போக ஒரு மாசம் ஆயிடும். பரவால்லயா?” 

கான்ஸ்டபிள் என் முட்டியைத் தொட்டு சொன்னான், “நான் ஐயாட்ட பேசறேன். நீயும் நல்ல பையன் மாதிரி தெரியறே. ஒரு முப்பதாயிரம் ரூபா குடு. உன்னை விட்டுடறோம்.”

“சார், என்கிட்ட அவ்வளவு எல்லாம் இல்லை, நீங்க என் வீட்டுக்கே கூப்பிடுங்க. அவங்க அனுப்பினாதான் ஆச்சு.“ என்றேன். இவர்கள்தான் வீட்டுக்கு கூப்பிடுவதாய் சொல்கிறார்களே, எதற்கும் கேட்டுப் பார்ப்போம் என்று, “சார், வீட்டுக்கு வேண்டாம் என் ப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான், ரிப்போர்ட்டர். அவனுக்கு கூப்பிட முடியுமா” என்று கான்ஸ்டபிளிடம் கேட்டேன். 

திரும்பி என்னைப் பார்த்த இன்ஸ்பெக்டர், “சீ, இதுக்கு எதுக்கு பிரஸ், ரிப்போர்ட்டர் எல்லாம்” என்று கேட்டார். கான்ஸ்டபிள் “ஒன்னும் பிரச்சனை இல்லை. இருவத்தி அஞ்சு குடுங்க போதும்” என்றான். 

பிரச்சனை இல்லையா? என் நண்பன் நிருபனாக இருப்பது உண்மைதான். ஆனால் அவன் யானை வழித்தடம், அழியும் கடல் ஆமைகள் என்று இயற்கைக் கட்டுரைகள்தான் எழுதி வருகிறான்.

“இல்லை அவனைக் கூப்பிடுங்க. கொல்கத்தால கண்டிப்பா அவனுக்கு ஆள் தெரியும்.” என்று சற்று அழுத்தியே சொன்னேன். 

“இருபதாயிரம் குடுப்பா போதும்” என்று இன்ஸ்பெக்டர் சொன்னார். 

“இல்லை சார். இருபதாயிரம் ரூபாய்ல என் ப்ரெண்ட் சென்னைல இருந்து கல்கத்தா ப்ளைட்ல வந்து என்னைத் திருப்பிக் கூட்டிட்டே போயிடுவான்.”

கான்ஸ்டபிள் சொன்னான், “தேக்கோ, மதராஸி லோக் ரொம்ப நல்லவங்க. சாம்பார், தாஹி பரா சாப்பிடறவங்க. அதனால சொல்றேன். பத்தாயிரம் ரூபா மட்டும் குடு. கேஸ் போடாம பாத்துக்கறோம்.”

சற்று மெதுவாக சொன்னேன், “ஐநூறு ரூபா தரேன் சார்.”

“என்னது” என்று கத்தியபடி இன்ஸ்பெக்டர் என்னைத் திரும்பிப் பார்த்தார். “என்கிட்ட அவ்வளவுதான் சார் இருக்கு.” என்று சொன்னேன். 

சத்தமாக இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் பேசிக்கொண்டனர். அவர்கள் பேசுவதில் சரி பாதி கெட்டவார்த்தை என்பது மட்டும் புரிந்தது. நான் காசே குடுக்காவிட்டாலும் இவர்கள் என்னை எதுவும் செய்யப் போவதில்லை என்று உறுதியாக தெரிந்தது. முகத்தை மட்டும் பயத்தில் இருப்பதுபோல வைத்துக் கொண்டேன். 

கான்ஸ்டபிள் சொன்னான், “ஐயாவுக்கு உன்னைப் பார்த்தா பாவமா இருக்காம். ஐயாயிரம் ரூபாய் வாங்கினா போதும்னு சொல்லிட்டார்.”

பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்து விரித்துக் கான்ஸ்டபிள் முன் காட்டினேன். “சோனாகாச்சி போகும்போது அளவா காசு வெச்சுட்டு போ, அங்க உள்ள பொண்ணுங்க ஏமாத்திப் புடுங்கிடுவாங்க” என்று காலையில் டீக்கடை பையன் எச்சரித்ததால் பர்ஸில் இரண்டு ஐநூறு, சில நூறு ரூபாய், பின் கொஞ்சம் சில்லறை நோட்டுக்கள் மட்டுமே வைத்திருந்தேன்.

கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரிடம் பேசினான். ஜீப் சாலையோரமாக நின்றது. கான்ஸ்டபிள் கை நீட்ட ஐநூறு ரூபாய் எடுத்து அவன் கையில் கொடுத்தேன். இன்ஸ்பெக்டர் இருக்கையில் நன்றாக திரும்பி அமர்ந்து என்னையும் என் கையில் இருந்த பர்ஸையும் பார்த்தார்.

கான்ஸ்டபிள் சொன்னான் “ஐயாவுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. ஆயிரம் ரூபாயாவது குடு.” 

இரு ஐநூறு ரூபாய் நோட்டுகளையும் எடுத்து அவனிடம் கொடுத்தேன். கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரிடம் சொன்னான், “சார், நான் தம்பிகிட்ட சொல்லிட்டேன். இனிமேல் இப்படி தப்பெல்லாம் பண்ணக் கூடாதுன்னு.”

ஜீப்பில் இருந்து இறங்கினேன். கான்ஸ்டபிளும் சேர்ந்து இறங்கி “நீ எங்க போகணும்.” என்று கேட்டான். “ரிப்பன் ஸ்ட்ரீட்” என்றேன். 

ரோட்டில் வந்துகொண்டிருந்த ஒரு பழங்கால கருப்பு மஞ்சள் டாக்ஸியைக்  கைக்காட்டி நிறுத்தி என்னை அதில் ஏறிக் கொள்ளச் சொன்னான். டிரைவரிடம் பேசிவிட்டு கான்ஸ்டபிள் என்னிடம் “ரிப்பன் ஸ்ட்ரீட்ல விட்டுடுவான். ஒரு நானூறு ரூபாய் குடுத்துடு அவனுக்கு” என்றான். 

பர்ஸ்ஸை எடுத்து காசை எண்ணிப் பார்த்தேன். நானூறு ரூபாய் இருந்தது. “எனக்கு ஏதாவது குடு தம்பி, உனக்கு எவ்வளவு பண்ணிருக்கேன்” என்று கையை நீட்டினான் கான்ஸ்டபிள். நான்கு நூறு ரூபாய்த்தாள்கள் நடுவே ஒரு ஐம்பது ரூபாய்த்தாளை சிகரெட் வாங்குவதற்காக ஒளித்து வைத்துக்கொண்டு மீதம் இருந்த நாணயங்களைப் பொறுக்கி முப்பது ரூபாய் வழித்து கான்ஸ்டபிளிடம் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு நிமிர்ந்து நின்று டாக்ஸியின் பின்னே தட்டி “ஜாவோ ஜாவோ” என்றான்.

டாக்ஸி நகர்ந்தது. பெருமூச்சு விட்டேன். டாக்ஸி டிரைவர் சத்தமாக சிரித்து “இவனுங்களுக்கு இதே வேலை. புதுசா ஒருத்தன் வந்திடக் கூடாது” என்றான். நானும் சிரித்தான். 

சற்று தூரம் அமைதியாக சென்ற டிரைவர் ஒரு வளைவில் திரும்பியதும் கேட்டான், “சோனாகாச்சி எதுக்கு போகணும்? இங்க மாடல் பொண்ணுங்களே இருக்காங்க. நம்ம டாக்ஸிக்குள்ளயே ஒரு உலகம் இருக்கு.”

“மாடலா?”

“ஆமாம், சினிமா ஹீரோயினி மாதிரி. போன்ல போட்டோ இருக்கு, பாக்கறயா?”

வேண்டாம் என்று தலையை ஆட்டினேன். டிரைவர் அவன் கைப்பேசியை பின்னால் நீட்டி சொன்னான், “சும்மா வாங்கிப் பாருங்க.”

அவன் கையில் இருந்து கைப்பேசியை எடுத்தேன். டிரைவர் என்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சொன்னான், “சோனாகாச்சில எல்லாம் சஸ்தி பேயிமானி லோக். அங்க எல்லாம் சில்லறைகளா இருக்கும்.”  

**********

வி. விக்னேஷ் / நவம்பர் 2022

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.