கையில் கேமிரா இருந்தால் வங்கியில் கோடிகள்! எப்படி?

இந்த அசட்டு முடிவுக்குப் பின்னல் இருந்த காரணம் விநோதமானது. 2018 -ல் ஒரு வண்ணப்படம் சார்ந்த கட்டுரையில், வந்த வரிகள் என்னை ஈர்த்ததுதான். ”உங்களது வண்ணப்படங்கள், நீங்கள் கடற்கரையில், ஜாலியாகப் படுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, தீவிரமாக, உங்களுக்காக சம்பாதித்துக் கொண்டிருக்கும்!”. முதலில், இது நைஜீரியாவில் மண்டையைப் போட்ட சர்வாதிகாரியின் பல மில்லியன் டாலர் ஏமாற்று வித்தை போலத் தோன்றினாலும், இதில் ஒரு உலகமே அடங்கியிருப்பது, பிறகு தெரிய வந்தது!

இணைய உலகில், பல கோடி தளங்கள் மற்றும் ப்ளாக் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர, பெருவாரியான செய்தித் தளங்களும் இருக்கின்றன. இவ்வகைத் தளங்கள் யாவற்றிற்கும் பல வண்ணப்படத் தேவைகள் உள்ளன:

 1. முகப்பு வண்ணப்படம் (title images)
 2. பின்னணி வண்ணப்படம் (background patterns)
 3. கட்டுரையை மேம்படுத்தும் படங்கள் (illustrative images)
 4. விளம்பரப் படங்கள் (advertising images)
 5. செய்திப் படங்கள் (news images)
 6. பிரத்யேகமான விவரணப் படங்கள் (special documentary images)
 7. சுற்றுலா தளப் படங்கள் (tourism images)
 8. வருடாந்திரக் காலண்டர் (calendar images)
 9. பெரிய/சிறிய நிறுவனங்களின் உள்தொடர்பு சார்ந்த படங்கள் (internal communication images for small and large companies)
 10. க்ராபிக்ஸ் தொழிலிற்கு தேவையான படங்கள் (imaging for graphics industry)

இது ஒரு சின்னப் பட்டியல்தான். ஆழமாக ஆராய்ந்தால், குறைந்தபட்சம் 40 முதல் 50 வகைகள் இதில் அடங்கும். இந்தத் தேவையை எப்படி பூர்த்தி செய்வது? எங்கு தேவை இருக்கிறதோ, அங்கு, ஒரு வியாபாரம் உருவாவது

இயற்கை, வண்ணப்படக் கலையை இவ்வகை தேவைகளுக்கு கொண்டு சேர்க்க உருவானதுதான் microstock என்னும் தொழில். இன்று, பல பில்லியன் டாலர்கள் புழலும் ஒரு பெரிய வியாபாரம் இது. இவ்வகை நிறுவனங்கள், microstock agency , அல்லது சுருக்கமாக agency என்று அழைக்கப்படுகிறது. இக்கட்டுரைத் தொடரில் ஏஜன்சி என்று இவ்வகை நிறுவனங்களை குறிப்பிட்டு எழுத உத்தேசம்.

இந்த வியாபாரம் எப்படி நடக்கிறது?

 1. தேர்ந்த வண்ணப்படக் கலைஞர்கள் தங்களது படைப்புகளை ஏஜன்சியின் இணையதளத்தில் மேலேற்றிவிட வேண்டும்.
 2. மேலேற்றிய படங்களை இந்த நிறுவனங்களின் ஆய்வுக் குழுக்கள் சரிபார்த்து, அந்த வண்ணப்படங்களை உலகில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்று விடுவார்கள்.
 3. விற்ற வருமானத்தில் ஒரு சிறு பங்கை (royalty) வண்ணப்படக் கலைஞருக்குக் கொடுப்பார்கள்.
 4. வண்ணப்படங்களின் வியாபாரச் செலவை (marketing initiatives) ஏஜன்சி ஏற்றுக் கொள்ளும். விற்ற வருமானத்தில் பெரும் பங்கு ஏஜன்சிக்குப் போகும். வண்ணப்படக் கலைஞர்கள் அவர்களது கலையில் கவனம் செலுத்தலாம். விற்பனையைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். ஒவ்வொரு முறை உங்களது வண்ணப்படம் தரவிறக்கம் செய்யப்படும் பொழுதும், உங்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.

அட, நன்றாக இருக்கிற்தே இந்த அமைப்பு என்று தோன்றலாம். நானும் அப்படித்தான் 2018 -ல், நினைத்தேன். இன்னும் சில ஆண்டுகளில், நம்முடைய வண்ணப்படங்களை உலகெங்கும் தரவிறக்கம் செய்து, இந்தத் தொழிலில் நாம் பெரிதாக கவனம் செலுத்தலாமே! குறைந்தபட்சம், விலையுயர்ந்த லென்சுகள் மற்றும் காமிரா உபகரணங்களை வாங்கலாமே! இப்படி கனவுகளோடு ஆரம்பித்ததுதான் என் வண்ணப்பட வியாபாரப் பயணம். நடுவில் தெரியாமல் இருந்த பல விஷயங்கள் பற்றியதே இக்கட்டுரைத் தொடர்.

பெரும்பாலான ஏஜன்சிகள், உங்களது 8 முதல் 10 வண்ணப்படங்களை ஒரு ஆரம்ப தேர்விற்காக முதலில் கேட்பார்கள். எல்லோரையும் போல, நானும், என்னுடைய மிகச் சிறந்த 10 வண்ணப்படங்களைத் தேர்வுக்காக சமர்ப்பித்தேன். சும்மா 10 வண்ணப்படங்களை மேலேற்றினால் மட்டும் போதாது. அத்துடன், சில தேடல் சார்ந்த விஷயங்களையும் நீங்கள் செய்ய வேண்டும். சில விஷயங்கள் ஏஜன்சிக்கு ஏஜன்சி சற்று மாறுபட்டாலும், அடிப்படை விஷயங்கள் எல்லா ஏஜன்சிக்கும் பொருந்தும் (*):

 1. படத்தின் பெயர் விளக்கம்*
 2. படத்தைப் பற்றிய விரிவான சில வாக்கியங்கள்
 3. படத்தின் வகை* (உதரணம், ‘இயற்கை’, ’கட்டிடம்’, ‘நகரம்’, ‘மிருகம்’, ‘பறவை’, ‘நீர்வீழ்ச்சி’, ‘பயணம்’, ‘பொருட்கள்’)
 4. படமெடுக்கப்பட்ட நாடு, ஊர்
 5. படமெடுக்கப்பட்ட தேதி*
 6. சமர்ப்பண வகை* (இது பற்றிய விவரம் பின்னே)
 7. தேடல் சொற்கள்* (இது ஒரு கலை – வாடிக்கையாளர் எந்த சொல்லைக் கொண்டு வேண்டுமானாலும் படங்களைத் தேடலாம்!)

கடற்கரையில் படுத்துக் கொண்டே சம்பாதிக்க, ஏராளமான வேலை செய்ய வேண்டும் போலிருக்கிறதே என்று தோன்றலாம். மிக உண்மை! சில ஏஜன்சிகள், ஒவ்வொரு வண்ணப்படத்திற்கும் குறைந்தபட்சம் 40 தேடல் சொற்களை (search words) எதிர்பார்க்கின்றன. இதை வேறு விதமாகச் சொன்னால், விற்பனையை நீங்களே செய்யாவிட்டாலும், அதற்கான உபரி வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டும். இதில், மிகவும் சோர்வளிக்கும் வேலை, சரியான தேடல் சொற்களை படத்துடன் மேலேற்றுவது.

ஆரம்ப காலங்களில், இது மிகவும் கடினமாக இருந்தது உண்மை. பல்வேறு இணையதளங்கள், ‘இப்படிச் செய், அப்படிச் செய்’ என்று மானாவாரியாக அறிவுரைத்தன! ஒரு பத்து வண்ணப்படம் என்றால், இந்த யோசனைகளைப் பின்பற்றலாம். ஆனால், அதுவே 100 வண்ணப்படங்கள் என்றால், மிகவும் அலுத்து போய்விடும். நல்ல வேளையாக, செயற்கை நுண்ணறிவு கொண்டு, சில ஏஜன்சி தளங்கள் உங்களது வண்ணப்படத்தில் என்னென்ன விஷயங்கள் உள்ளன என்று பார்த்து (?), சில தேடல் சொற்களை சிபாரிசு செய்கின்றன. ஆனால், இவை முற்றிலும் நம்பத் தகுந்தவை அல்ல. அத்துடன், மென்பொருள், சில சமயம் தவறாகவும் அடையாளம் கண்டுகொண்டு தப்பான தேடல் சொற்களை முன்வைப்பதும் உண்டு. அத்துடன், உங்களுக்கு 30 தேடல் சொற்கள் தேவை என்றால், இந்த மென்பொருட்கள், அதைவிட குறைவான சொற்களையே முன் வைக்கும்!

இந்த வண்ணப்படங்களின் தேக்க அளவு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலாக இருக்க வேண்டும். பழைய காமிராக்கள் (5 மெகாபிக்ஸலுக்கு குறைவானவை) எடுத்த படங்கள் சின்னதாக (தேக்க அளவு) இருக்கும். 4 மெகாபைட்டிற்குக் குறைவான வண்ணப்படங்களை இன்றைய ஏஜன்சிகள் ஏற்றுக் கொள்வதில்லை,

பொதுவாக, இந்தத் தொழிலில் உள்ள இன்னொரு தேவை, மேலேற்றும் வசதிகள். சில ஏஜன்சிகள் மற்றவற்றைவிட முன்னேறி விட்டன. ஒரு நேரத்தில், 200 வண்ணப்படங்களை மேலேற்ற வேண்டுமென்றால், அதற்கான பிரத்யேக மென்பொருட்கள் உள்ளன. இவை FTP மூலம் இயங்கும் மென்பொருட்கள். மிகவும் பழைய ஏஜன்சிகள் சில இன்னும் இந்த வசதியை அளிப்பதில்லை. வண்ணப்படத்தை மேலேற்றிய பின் இரு பெரும் வேலைகள், இந்தத் தொழிலில்:

 1. தேடல் சொற்கள், படங்களுக்கு தகுந்தாற்போல உருவாக்குதல்
 2. பல்வேறு ஏஜன்சிகளுக்கு மேல் சொன்ன படங்களை மேலேற்றி மீண்டும் தேடல் சொற்கள்

நல்ல வேளை, இந்த இரு வேலைகளுக்கு உதவும்படியான மென்பொருட்கள் இன்று உள்ளன. ஆயினும், இது மிகவும் நேரம் பிடிக்கும் செயல் என்பது மறுக்க முடியாது. இந்த மென்பொருளில், ஒரு முறை தேடல் சொற்களை உருவாக்கிவிட்டால் போதும். அதே தேடல் சொற்களை எல்லா ஏஜென்சிகளுக்கும் மேலேற்றி விடலாம்.

இப்படி அல்லாடுகையில், யுடியூப்பில் பார்த்த ஒரு விடியோ மேலும் கடுப்பூட்டியது. 2008 -களில், இந்த ஏஜன்சிகள் சிலவே இருந்தனவாம். புதிய வீடுகள் கட்டும் நிறுவனங்கள், ஒரு வீட்டைத் தயார் செய்து, அதில் பளிச்சென்று ஒளியுடன், மிகவும் அழகு படுத்துவது ஒரு வட அமெரிக்க வீட்டு விற்பனை வியாபாரப் பழக்கம். இதை Model Home என்று சொல்லுவார்கள். இந்த யுடியூப் ஆசாமிகள், யாரும் இல்லாத பொழுது, மாடல் வீட்டிற்குள் நுழைந்து படமெடுத்து, ஏஜன்சி தளத்திற்கு மேலேற்றி, காசு பண்ணியிருக்கிறார்கள்! இன்று, இது எதுவும் சாத்தியமில்லை. அப்படி ஒரு வேளை படமெடுத்து, மேலேற்றினால், இந்தக் கேள்விகள் சரமாரியாக உங்களை நோக்கிப் பாயும்:

 1. கட்டிடம் எந்த ஊரில் உள்ளது?
 2. கட்டிட உரிமையாளரிடம் ‘எந்த வியாபாரக் கோரிக்கையும் இல்லை’ என்ற சான்றிதழ் எங்கே? (property release)
 3. இந்த அறைக்குள் இருக்கும் சாம்சுங் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள வியாபாரக் குறியை ஏற்க இயலாது!

இப்படி இன்னும் சில விஷயங்களைச் சொல்லி, மறுத்து விடுவார்கள். இதே போல, ஒரு ஷாப்பிங் வளாகத்திற்குச் சென்று, புதிதாக வெளி வந்திருக்கும் ஷூ, நகை, வாட்சுகள், மின்னணுவியல் பொருட்கள், என்று பலவற்றையும் வண்ணப்படம் எடுத்து காசு பண்ணிய ஒரு கூட்டமே இருந்தது. ஏஜன்சிகள் விழித்துக் கொண்டு, இதை முற்றிலும் தடை செய்துவிட்டன.

சில நல்ல விஷயங்களும் இந்த ஏஜன்சி விஷயத்தில் அடங்கும். உங்களுக்கு வண்ணப்படக் கலையில் ஆர்வம் என்பது மட்டுமே முக்கியம்:

 1. வண்ணப்படக் கலையில் கல்லூரி டிகிரி எதுவும் தேவையில்லை
 2. உலகின் மிக விலையுயர்ந்த காமிராக்கள் ஒன்றும் தேவையில்லை
 3. சில ஏஜன்சிகள், திறன்பேசி வண்ணப்படங்களைக் கூட ஒப்புக் கொள்கின்றன
 4. எந்த ஒரு தொழில் ரீதியான வண்ணப்படக் கலை சார்ந்த அமைப்பிலும் நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டியதில்லை
 5. எந்த ஒரு வண்ணப்படக் கலை சார்ந்த விருதும் பெற்றிருக்கத் தேவையில்லை
 6. வியாபாரத்திற்குத் தகுந்த வண்ணப்படங்கள் மட்டுமே ஏஜன்சிக்கு முக்கியம்
 7. உலகெங்கும் பயணம் செய்து படம் பிடிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை
 8. உங்களது கற்பனைத் திறன் ஒன்றே முக்கியம். ஆனால், உங்களது கற்பனைத் திறன், வியாபாரத்திற்கும் தோதாக இருக்க வேண்டும்

எட்டாவது புள்ளியில் சொன்ன விஷயத்தை சில உதாரணங்களுடன் சொன்னால் மேலும் பிடிபடும். ட்ரம்ப் கால அமெரிக்காவில், அரசாங்கம் செலவிற்கு காசின்றி, சில வாரங்கள் முடங்கியது. அமெரிக்காவின் மிகப் பெரிய தேசியப் பூங்காவில் வேலை பார்த்தவர்கள் சம்பளம் கிடைக்காததால், வேலைக்குப் போகவில்லை. பார்த்தார் ஒரு வண்ணப்படக் கலைஞர் – இவ்வகை தேசிய பூங்கா ஒன்றின் முன்னால் பிதுங்கித் தவித்த ஒரு குப்பைத்தொட்டியைப் படம்பிடித்து மேலேற்றினார். எல்லா செய்தி ஏஜன்சிகளும் இந்தப் படத்தை தங்களுடைய கட்டுரை மற்றும் செய்திக்காக வாங்கின! இதே போல, அமெரிக்காவின் இன்னொரு முக்கிய அரசியல் பிரச்சினை துப்பாக்கி வைத்துக் கொள்வது. எல்லா அரசியல் கட்சிகளையும் ஆட்டிப் படைக்கும் அமைப்பு NRA என்ற தேசிய துப்பாக்கிச் சங்கம். இவர்களது வாஷிங்டன் தலைமையகம் முன்பு போராட்டம் நடத்திய ஒரு கூட்டத்தை, கட்டிடப் பின்னணியுடன் ஒரு வண்ணப்படக் கலைஞர் படம் பிடித்தார். இன்றும், அமெரிக்க துப்பாக்கி அரசியல் சார்ந்த செய்திகள் மற்றும் கட்டுரைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வண்ணப்படம் இது!

காலமறிந்து, தொலைநோக்குடன் நீங்கள் செயல்பட்டால், வெற்றி பெறலாம். மேடைப் பேச்சாளர்கள் சொல்லுவதைப் போல, ‘வெற்றி நிச்சயம்’ என்று இங்கு சொல்லவில்லை! ஆனால், ஏஜன்சிகளுக்கும் வண்ணப்படக் கலைஞர்களுக்கும் நடக்கும் சில போராட்டங்கள், படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், கலைஞனை குலைத்து விடும் சக்தி படைத்தவை. அடுத்த பகுதிகளில், இவற்றைப் பற்றிய சில விவரங்களைப் பார்ப்போம்.

Series Navigation<< வண்ணமும் எண்ணமும் ஆயிரம் – பகுதி 1“இதை எவன் வாங்குவான்?” >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.