காணும் பேறைத் தாரீரோ?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
小倉山
峰のもみぢ葉
心あらば
今ひとたびの
みゆき待たなむ

கனா எழுத்துருக்களில்
をぐらやま
みねのもみぢば
こころあらば
いまひとたびの
みゆきまたなむ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: இளவரசர் ததாஹிரா

காலம்: கி.பி. 880-949.

ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த இவர் இளவரசுப் பட்டத்தை வகித்தாலும் கி.பி 930ல் 9 வயதே நிரம்பிய சுஜாகு அரசராகப் பட்டம் சூடியபோது அவருக்கு 16 வயது ஆகும்வரை 7 ஆண்டுகள் அரசரின் பிரதிநிதியாக நிர்வாகம் செய்துவந்தார். இவரது உடன்பிறந்த தங்கை ஒன்ஷிக்கும் பேரரசர் தாய்கோவுக்கும் பிறந்த மகன்தான் சுஜாகு. இவரது தந்தை மொதொட்சுனேவின் இன்னொரு மனைவியான சோஷிக்குப் பிறந்த மகள் ஒருவரைப் பேரரசர் தாய்கோவின் தந்தை பேரரசர் உதா மணந்திருந்தார். இதன்மூலம் மூன்று தலைமுறை அரசர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக கொசென்ஷூ தொகுப்பில் 7 பாடல்களும் தெய்ஷின்கோக்கி எனப்படும் தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கிறது.

பாடுபொருள்: ஒகுரா மலையின் இலையுதிர்கால அழகு.

பாடலின் பொருள்: ஓ! ஒகுரா மலையில் அடர்சிவப்பு நிற இலைகளைக் கொண்டிருக்கும் மேப்பிள் மரங்களே! உங்களுக்கு இதயம் இருந்தால் எங்கள் பேரரசர் தாய்கோ உங்களை வந்து காணும்வரை இலைகளை உதிர்க்காமல் காத்திருப்பீர்களா?

இயற்கையை வியக்கும் இன்னோர் எளிய பாடல். பேரரசர் உதா அரசபதவியைத் துறந்த பின்னர் ஓய் ஆறு ஓடிக்கொண்டிருக்கும் ஒகுரா மலைக்குப் பயணம் செல்கிறார். அவரது உடன்கூட்டத்தில் ஒருவராக இப்பாடலின் ஆசிரியரும் செல்கிறார். இலையுதிர்காலத்தில் ஜப்பானில் மேப்பிள் மரங்களின் இலைகள் அடர்சிவப்பு நிறத்தில் அழகாகக் காட்சியளித்துப் பருவ முடிவில் உதிர்ந்து பனிக்காலம் தொடங்கும்.

பேரரசர் உதா தான் கண்ட அழகு தன் மகனுக்கும் பார்வை விருந்தாக அமையவேண்டும் என ஒரு தந்தையாக எண்ணுகிறார். உடன்வந்த கவிஞர் ஓர் அழைப்பிதழ்போல இப்பாடலை இயற்றித் தூதரிடம் கொடுத்து அனுப்புகிறார். இயற்கை யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எனவே, இலைகள் உதிரும் முன்னர் வந்து கண்டால் மகிழலாம் என்ற மறைமுகக் குறிப்பும் இதில் ஒளிந்திருக்கிறது.

இதேபோல் இயற்கையுடன் உரையாடும் இன்னொரு புகழ்பெற்ற பாடலும் ஜப்பானிய இலக்கியத்தில் உண்டு. கொக்கின்ஷூ தொகுப்பில் புலவர் கமுட்சுகே மியேனோ எழுதிய 832வது பாடல்தான் அது. இப்பாடலின் ஆசிரியர் ததாஹிராவின் தந்தை மொதோட்சுனே கி.பி 891ல் இறந்து விடுகிறார். சக்குரா எனப்படும் செர்ரிப் பூக்கள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் ஊதா கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக்குலுங்கும். ஃபுகாகுசா சமவெளியில் பூத்திருக்கும் செர்ரிப் பூக்களைத் துக்கத்தை அனுசரிக்கும் பொருட்டு அந்த ஆண்டு மட்டும் கறுப்பாக மலர மாட்டீர்களா எனக் கேட்கிறார் புலவர் மியோனே. சமுதாயத்தில் மொதோட்சுனே பெற்றிருந்த முக்கியத்துவத்தை இது காட்டுகிறது.

இப்பாடல் இயற்றப்பட்ட பிறகு ஒவ்வோர் ஆண்டும் பேரரசர் உதா இந்த மலைக்கு வந்து மேப்பிள் இலைகளின் அழகைக் கண்டு வியந்ததாக “யமாதோவின் கதைகள்” குறிப்பிடுகிறது.

வெண்பா

பனிவரும் முன்னே உதிரும் எழிலை
இனிவரும் மன்னர் பருகி - இனிமை
நுகரவே காத்து நிலைத்து இருக்குமோ
பூத்துக் குலுங்கும் அழகு?
Series Navigation<< புல்நுனியில் பனிமுத்து<< கொடிவழிச் செய்திசொல்லாத காதல் எல்லாம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.