கங்கா தேசத்தை நோக்கி

This entry is part 1 of 12 in the series கங்கா தேசத்தை நோக்கி

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தாய்மண்ணில் கால் பதித்து உற்றார், உறவினர்களையும், கோவில் குளங்களையும் பார்த்து விட்டு வந்தால் தான் அடுத்த இரு வருடங்களை நிம்மதியாக கழிக்க முடியும் என்ற மனநிலையிலேயே இருந்து பழகி விட்டதால் 2018 மதுரை விசிட்டிற்குப் பிறகு 2020 கோடை விடுமுறைக்காக ஆவலாக காத்திருந்தோம். அந்தோ! கொரோனா கொடும்பாவியால் உயிருக்குப் பயந்து எங்கும் செல்ல முடியவில்லை. 2020 முடிந்து 2021 கூட வந்துபோய்விட்டது. 2022லாவது சாத்தியமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்க, நண்பர்கள் பலரும் மூட்டை முடிச்சுகளுடன் அவரவர் பிறந்தகத்துக்குச் சென்று டேரா போட்டு வந்தார்கள். நமக்கு என்று காலம் கனியுமோ என்று காத்திருந்தோம்.

ஒரு சிறு சந்தர்ப்பம் அமைந்தது. இதற்கு மேல் பொறுக்க முடியாது. 2020ல் போகவேண்டும் என முடிவு செய்திருந்த இடங்களுடன் பல யூடியூப் காணொளிகளில் கண்டு மனம் லயித்துப் போன மேலும் சில இடங்களுக்கு புண்ய யாத்திரை கிளம்பி விட முடிவு செய்தோம் நானும் கணவரும். மகனும் மகளும் மகிழ்ச்சியாக போய்வாருங்கள் என ஊக்கமளித்தார்கள். எங்கெங்கு போவது என்று திட்டமிடும் பொழுதே அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. சிறுவயதிலிருந்து கனவாக மனதிலேயே பதிந்துவிட்டிருந்த தலங்களை காணப்போகும் பரவசம். என்ன தான் தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வட இந்தியாவிற்குச் செல்லவே கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. மொழி ஒரு பெரிய பிரச்னை என்றால் உணவும் மக்களும் அந்த இடங்களைப் பற்றின அறியாமையும் தட்பவெப்பநிலையும் அதிகமாகவே சிந்திக்க வைத்தன. மொழி தெரியாத அயல்நாடுகளுக்குச் செல்லும் பொழுது கூட இத்தனை யோசிக்கவில்லை. ஆனால் நம் நாட்டிற்குள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல மனிதர்களை நம்பலாமா என்பதிலிருந்து எத்தனை மெனக்கெட வேண்டியிருக்கிறது! அதனால் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து தேர்வு செய்தோம்.

அந்த நாளும் வந்தே விட்டது. அதிக சுமைகள் வேண்டாம் என்று தேவைப்பட்ட துணிகளுடன் அதிகாலையிலேயே கிளம்பி விட்டோம். செருப்பு, ஷூ, பனிக்கால, கோடைக்கால துணிகள் என அதுவே இரண்டு பெரிய பெட்டிகள் ஆயிற்று! முதல் முறையாக மதிய நேர விமானப்பயணம். அதுவும் ‘ஏர் இந்தியா’வில்! ஆல்பனியிலிருந்து நியூயார்க் விமான நிலையம் செல்ல குறைந்தது நான்கு மணிநேரம் ஆகும். காலையில் ஆறு மணிக்குத் தயாராகி வாடகை வண்டியில் நியூயார்க் சென்றடைந்து வண்டியை கொடுத்து விட்டு பெட்டிகளுடன் ஏர் ட்ரெயின் மூலம் விமான நிலையமும் வந்தாயிற்று. மனதெல்லாம் குதூகலம். கூடவே கொஞ்சம் பயமும். சென்னையில் காய்ச்சல் பரவுகிறது வடக்கில் கொரோனா பீதி செய்திகளால் குழப்பமும் கூடவே இருந்தது. ஆரம்பித்திருக்கும் பயணம் இனிமையாக, உடல் நோயின்றி நினைத்தபடி எல்லா கோவில்களுக்கும் சென்று வர வேண்டும் என்று எல்லா கடவுள்களிடமும் வேண்டிக் கொண்டு ‘ஏர் இந்தியா’ கவுண்டருக்குச் சென்றால் நீண்ட வரிசை. வேகமாக வந்த பெண்மணி ஒருவர் “ஏர் சுவிதா விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தீர்களா செய்தீர்களா?” என்று கேட்டார்.

“அது என்ன?” என்றவுடன் வரிசையிலிருந்து ஒதுக்கி கோவிட் தடுப்பூசிகள் பற்றின விவரங்களை அவர் சொன்ன தளத்திற்குச் சென்று பதிவேற்றம் செய்யுமாறு கூறினார். இதை முன்கூட்டியே சொல்லியிருந்தால் வீட்டிலேயே செய்து முடித்திருக்கலாம். ஆரம்பித்து விட்டார்கள் என்று நொந்தபடி செய்து முடித்து மீண்டும் நீண்ட வரிசையில் ஐக்கியமானோம். பேரன்,பேத்திகளுடன் கோடையைக் கழித்து விட்டு ஊருக்குத் திரும்பிச் செல்லும் பல தாத்தா பாட்டிகள். பெரும்பாலும் தெலுங்கு பேசுபவர்கள் எங்களுக்கு முன்னும் பின்னும் நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் முறை வந்த பொழுது கவுண்டரில் இருப்பவர் என்னுடைய ஓசிஐ அட்டையைத் திருப்பித்திருப்பி பார்த்தவண்ணம் இருந்தார். யாரையோ அழைத்தார். அவர்கள் சிறிது நேரம் கணினியை நோண்டிக் கொண்டிருந்தார்கள். காரணம் என்னவென்று எனக்குத் தெரியும். எதுவும் சொல்லவில்லை. அவர்களுக்குள் ஏதோ தீர்மானத்திற்கு வந்து டிக்கெட்டைக் கொடுத்து அனுப்பினார்கள். வெளியில் வந்ததும் அவர்கள் ஏன் தாமதப்படுத்தினார்கள் என்று ஈஷ்வரிடம் விளக்கினேன். “பிரச்னை இல்லையே?” என்றவரிடம் அரசு விதிவிலக்கு அளித்துள்ளது. அதனால் பயம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு செக்யூரிட்டி அக்கப்போருக்காக காத்திருந்தோம். எல்லாம் முடிந்து சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளக் கூட நேரமில்லை. நேராக விமானத்திற்குள் ஏறி அமர்ந்து கொண்டோம். இருவருக்கும் வெவ்வேறு இடத்தில் அமர்ந்து கொள்ளுமாறு டிக்கெட் கொடுத்திருந்ததை மாற்ற முடியவில்லை. ஈஷ்வருக்கு பயங்கர கோபம். 14 மணிநேரப் பயணம். அதுவும் நேரடியாக டெல்லி செல்லும் விமானம். எதற்கு சிறுகுழந்தை போல புலம்புகிறார் என்று பெட்டிகளை வைத்து விட்டு என்னிடத்தில் அமர்ந்து கொண்டேன். அவரும் என்னைத் தாண்டி சென்று அவருடைய இடத்தில் அமர்ந்து கொண்டார் முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டு.

மக்களின் சலசலப்பு அடங்க, விமானம் புறப்படப் போவதை ஏன் இத்தனை அவசர அவசரமாக இந்த விமானிகள் சொல்கிறார்கள் என்பது எனக்குப் புரிவதே இல்லை. அவர்கள் சொல்வதில் பாதி புரிவதுமில்லை. அதைப்பற்றி யாரும் அலட்டிக் கொள்வதுமில்லை என்பது வேறு விஷயம். அவர் எதையோ முனகி விட்டு அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். விமானப் பணிப்பெண் ஒருவர் விமானத்தில் விபத்து ஏற்பட்டால் எப்படி குதிக்க வேண்டும், மூச்சு முட்டினால் என்ன செய்ய வேண்டும் என்று விலக்கிக் கொண்டிருந்தார். எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களும் ஏகாம்பரிகளும் அதனைப் பொருட்படுத்தவில்லை. இதைப் பார்த்தால் மனதில் சிறு சஞ்சலம் ஏற்படும் என்ற காரணமாக கூட இருக்கலாம் அல்லது விமானியின் மேல் அதீத நம்பிக்கையாக இருக்கலாம். எது எப்படியோ இங்கும் அங்கும் பரபரப்புடன் சென்று கொண்டிருந்த அம்மணிகளும் சமர்த்தாக அவர்கள் இருக்கையில் அமர்ந்து விட, விமானத்தின் வெளியே ‘காத்தாடி’ சுழல,  ‘கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்’ என்ற ஒலியுடன் விமானம் பின்னோக்கி நகர்ந்து  தன் முன்னோக்கிய பயணத்தை தொடங்கியது. 

என் அருகில் ஒரு வயதான தம்பதியர். அந்த வயதிலும் அந்தப் பெண்மணி மிகவும் கறாராக கணவரிடம் நடந்து கொண்டார். பாவம்! அந்த மனுஷன்! அம்மணியின் கைப்பையை அவர் வைத்துக் கொண்டு போர்வை போர்த்தி விடுவதும் கேட்டவற்றை எடுத்துக் கொடுப்பதுமாய் இருந்தார்! ஹ்ம்ம்! நமக்கு அந்த கொடுப்பினை இல்லை.

தரையில் போட்டிருந்த கம்பளம் சொல்லாமல் சொல்லிற்று அதன் வயதை! நீண்ட நேரப்பயணத்தில் படங்களைப் பார்த்துக் கொண்டே செல்வது என் வாடிக்கை. ஹைதர் காலத்து டிவி. உடைந்து போன ரிமோட். போர்வை கூட கேட்டால் தான் கொடுக்கிறார்கள். காலில் சுடுதண்ணீரைக் கொட்டியது போல் இங்கும் அங்கும் ஓடும் விமான பணிப்பெண்கள். “டிவி வேலை செய்யவில்லையா நாங்களும் முயற்சிக்கிறோம். சாரி” என்று பதிலை தயாராக வைத்திருந்தார்கள். அனைவரையும் முக கவசம் அணிந்திருக்குமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். ‘டாடா’ இந்த விமான நிறுவனத்தை வாங்கிய பிறகு மாறுதல் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். கழிப்பறையைச் சுத்தமாக வைத்திருந்தார்கள். பாராட்டப்படவேண்டிய விஷயம். இதற்கு முன் குழந்தைகளை அழைத்துச் சென்ற பொழுது விமானம் முழுவதும் ஒரே நாற்றம். அந்த கொடுமை இப்பொழுது இல்லை என்பதே பெரிய ஆசுவாசம் தான்.

பள்ளிகள் திறந்து விட்டதால் அந்த வயதினரும் அவர்களின் பெற்றோர் கூட்டமும் இல்லை. சிறு குழந்தையை ஊருக்கு அழைத்துச் செல்பவர்கள் என நான்கைந்து பேர். தொப்பையும் தொந்தியுமாய் அதிகளவில் சீக்கியர்கள். சீக்கிய அம்மாக்கள் சிலர் ‘சிக்’கென்று நவீன உடையில் நளினமாக இருந்தார்கள். பழம்பெரும் ஹிந்தி நடிகைகள் சிலரை நினைவூட்டினார்கள். நகைகள் நிறைய போட்டுக் கொண்டு அழகாக சேலை அணிந்த இளமையான தெலுங்கு பேசும் அம்மாக்கள் பலர். பனிக்காலத்திலிருந்து தப்பித்துச் செல்பவர்கள் கூட்டம். வெகு சில இளைஞர்கள். என் வயதினர் என்று கலவையான கூட்டத்தைச் சம்மந்தபடி, அழகிய நியூயார்க் நகரை வலம் வந்து வானில் பறக்கத் துவங்கியது விமானம். 

என் பக்கவாட்டில் அமர்ந்திருந்த இளம்பெண்மணி நிமிடத்திற்கொருமுறை தலையைக் கோதிக் கொண்டே இருந்தார். இதென்ன வியாதியோ! முன்வரிசையில் இருந்த இளைஞன் பணிப்பெண்களை நொச்சுக் கொண்டிருந்தான். பாவம் தான் இந்தப் பெண்கள் என்று தோன்றியது! 

சிறிது நேரம் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். கிண்டிலில் முன்னேற்பாடாக தரவிறக்கியிருந்த திரு.சுதாகர் கஸ்தூரி எழுதிய “நேரா யோசி” புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். எளிய தமிழ் நடையில் இன்றைய வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு நேர்மறையாக தீர்வு காண்பது எப்படி? நம்முடைய அணுகுமுறையில் தான் பிரச்னைகளுக்கான தீர்வுகள் இருக்கிறது என்பதை அவருடைய அனுபவங்கள் மூலமாக எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் பல புத்தக குறிப்புகளுடன் விளக்கியிருந்தது அருமை. நிச்சயம் இன்றைய மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் அந்தப் புத்தகம். 

அதைப் படித்து முடிக்கையில், ‘காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா’ என்று மொத்தமே பத்து கடலை போட்ட உப்பின நொறுக்குத்தீனி பாக்கெட் ஒன்று கொடுத்தார்கள். இப்பொழுதெல்லாம் பாக்கெட்டுகளில் அடைக்கும் காற்றுக்குத்தான் கட்டணமே! ‘என்னவோ போடா மாதவா’ என்று நொந்தபடி எப்படா சாப்பாடு வரும். தூங்கலாம் என்றிருந்தது. சே! டிவி வேறு இல்லாமல் போரடித்தது. ஃபோனில் சிறிது நேரம் வார்த்தை விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். தூக்கம் வர தூங்கியும் விட்டேன். என்னை எழுப்பி “சைவ உணவை கேட்டிருந்தீர்கள். இதோ” என்று அழகாக அடுக்கி வைக்கப்பட்ட தட்டை நீட்டியவரிடம் இருந்து வாங்கிக் கொண்டேன். தூங்கிக் கொண்டிருந்த என் பக்கத்து இருக்கை அம்மணியும் எழுந்து அவருடைய உணவுத்தட்டை வாங்கிக் கொண்டார். சாப்பாடு நன்றாகத்தான் இருந்தது. ரொட்டியைத் தவிர மற்றதையெல்லாம் சாப்பிட்டு முடித்தேன். அந்தப் பெண்மணி மிக அழகாக முள்கரண்டியில் சாப்பிடுவதைப் பார்த்தால் அடிக்கடி பயணிப்பவர் என்பது தெரிந்தது.

உண்ட மயக்கம் பயணியர்களை உறக்கத்தில் ஆழ்த்த தவறவில்லை. கண்விழித்துப் பார்த்தால் சிலர் நடந்து கொண்டிருந்தார்கள். பாதி தூரம் தான் கடந்திருக்கிறோம். இன்னும் ஏழு மணிநேரம் இருக்கிறது! மெதுவாக யாரையும் இடித்து விடாமல் தூங்கிக் கொண்டிருந்த மனிதர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நடக்கலாம் என்று நானும் நடந்து ஈஷ்வரைப் பார்த்தால் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அந்தப் பெரிய விமானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மொத்தமே நான்கைந்து வெள்ளையர்கள் மட்டுமே! மற்றவர்கள் எல்லோரும் இந்தியர்கள். இந்தியர்களில் தான் எத்தனை வகை மனிதர்கள்! தலைப்பாகை போட்டுக் கொண்ட சீக்கியர்கள், போடாதவர்கள், வெள்ளை, கறுத்த நிறத்தவர் என்று கலவையாக இருக்கிறது நம் தேசம்! உறக்கத்தில் பெரியவர்களின் முகத்தில் அத்தனை களைப்பு. சிறு குழந்தைகளோ சுகமாக அம்மாவின்தோளில், மடியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். தூங்காத குழந்தைகளைக் கையில் வைத்துக் கொண்டு அப்பாக்கள் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் ஒரு குழந்தையுடன் பேச, அழகாய் சிரிச்சது செல்லம். ‘பிள்ளையாய் இருந்துவிட்டால் தொல்லையேதும் இல்லையடா’ கவிஞரின் வார்த்தைகளில் எத்தனை உண்மை! பொழுது போகாமல் கையை காலை ஆட்டி இடுப்பை முறித்து விட்டு நிமிர்ந்தால் ஈஷ்வர் ! இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு மீண்டும் அவரவர் இடத்திற்குச் சென்று அமர்ந்தோம்.

இப்பொழுது திரு.ஹரன் பிரசன்னா எழுதிய ‘சாதேவி’ சிறுகதை தொகுப்பிலிருந்து இரண்டு கதைகளைப் படித்தேன். நன்றாக இருந்தது. மீண்டும் ஒரு குட்டித்தூக்கம். விழித்தவுடன் கொஞ்ச நேரம் நடை. அதற்குள் சாப்பாடு வண்டி வர, அப்படியென்றால் சீக்கிரமே ஊர் வந்து விடுகிறது என்று அர்த்தம். ஹையா! மீண்டும் விட்ட இடத்தில் இருந்து கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்கப் போவதால் அனைவரையும் அவரவர் இடத்தில் அமருமாறு விமானி கேட்டுக் கொண்டு டெல்லியில் மழைப்பொழிவதை அறிவித்தார். அடர் பஞ்சுப்பொதி மேகங்களுக்குள் விமானம் செல்லும் பொழுது ‘கிலி’யாகத்தான் இருந்தது. அடடா! கிளம்பும் பொழுதே ஈஷ்வரும் பயணம் முழுவதும் மழையாக இருக்கப் போகிறது என்று வருத்தப்பட, அதெல்லாம் சரியாகிடும் என்று சொல்லியிருந்தேன். இப்பொழுது இறங்கும் போதே மழையா என்றுகவலையாக இருந்தது.

வழக்கமான நேரத்தை விட அரைமணிநேரம் முன்பாகவே டெல்லி வந்து சேர்ந்து விட்டோம். இரவில் தான் பெரும்பாலும் இந்தியா வருவது அதுவும் சென்னை வந்திறங்குவது வாடிக்கை. பகலில் வந்திறங்குவது நன்றாக இருந்தது. சென்னை விமான நிலையத்தில் இறங்கியவுடன் வரும் உஷ்ணமோ மக்கிய வாடையோ இங்கு இல்லை. பெரிய விமான நிலையம். சுத்தமாக நன்றாக இருந்தது. குடியேற்ற பரிசோதனைகள் முடிந்து பெட்டிகளுக்காக காத்திருந்தோம் காத்திருந்தோம். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை! அவரவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு மக்கள் வெளியேற, எங்களைப் போல் சிலர் மட்டும் எங்கே எங்கே என்று தேடிக் கொண்டிருந்தோம். இதுவும் எனக்குப் புதிது. இறங்கியவுடன் பெட்டிகள் கிடைத்துவிடும். இன்றோ இவ்வளவு நேரமாகியும் வரவில்லை. எங்களுடன் வந்தவர்கள் பலரும் கிளம்பிவிட்டனர். என்னாச்சு எங்கள் பெட்டிகளுக்கு?

‘டை’ மாட்டிக் கொண்டு கையில் வாக்கி டாக்கி, டேப்லெட்டுடன்  இருந்த ஏர் இந்தியா நிர்வாகியிடம் பெட்டிகளைக் காணவில்லை என்று சொன்னால் “நியூயார்க்கில் இருந்து சில பெட்டிகள் வரவில்லை”என்று கூறவும் ஆஹா! ஆரம்பிச்சிடுச்சா என்று பதட்டமாகி விட்டது. நாங்கள் இப்பொழுதே டெல்லியை விட்டு கிளம்பிவிடுவோம் என்றவுடன் பயணச்சீட்டை வாங்கிச் சரிபார்த்து விட்டு உங்களுடைய பெட்டிகள் இங்கே தான் இருக்கிறது தேடுவோம் என்று பார்த்தால் யாரோ புண்ணியவான் பெட்டிகளை கன்வேயர் பெல்ட்டிலிருந்து எடுத்து கீழே வைத்திருந்தார். இந்த வேண்டாத வேலையை ஏன் செய்தார் என்று தெரியவில்லை. அதில் எங்கள் பெட்டிகள் இரண்டும் இருந்தது . அப்பாடா! என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டே முன்பதிவு செய்திருந்த வண்டிக்காரரைத் தொடர்பு கொண்டால் “மே ஆரா ஹூன். தும் பாஹர் ஆவோ.” என்று இரைச்சலுடன் பேசவும் இனி இருக்கிறது ‘ஏக் காவ்மே ஏக் கிஸன்’ கதை என்று சிரித்துக் கொண்டே விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தால் புயல்மழை என்பார்களே அப்படியொரு மழை!

வெளியே வந்த மொத்தக்கூட்டமும் ஸ்தம்பித்துப் பின் அவரவர் வழியே செல்ல ஆரம்பித்தது. பஞ்சாபியர்கள் கூட்டம் பேருந்துகளிலும், கார்களிலும் செல்ல போக்குவரத்து நெரிசல். அடாது மழை, மக்கள், வண்டிகள். ஆனாலும் ஏதோ ஒரு ஒழுங்கில் அனைத்தும் அதுபாட்டுக்குச் சென்று கொண்டிருந்தது. எங்கள் வண்டியை மட்டும் காணவில்லை. இறங்கி ஒரு காஃபி கூட குடிக்கவில்லை. மீண்டும் அழைத்தால் அதே பதில். சிறிது நேரம் கழித்து அவர் ஏதோ ஒரு இடத்தில் எங்களை வருமாறு சொல்ல, இடி, மின்னல், மழைச்சத்தத்தில் என்னவென்றே புரியவில்லை. “இதற்குத்தான் ஆங்கிலமும் பேசத்தெரிந்த வண்டி ஓட்டுநரைக் கேட்கச் சொன்னேன். இவரை எப்படி நம்புவது?” என்று எங்களுக்குள் ஒரு சின்ன சண்டை வருவதற்குள் உள்ளூர் விமான நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஒருவர் நாங்கள் போராடுவதைப் பார்த்து ஃபோனை வாங்கி விவரங்களைக் கேட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எங்கு செல்ல வேண்டும் என்று கைகாட்டி உதவினார். இதுதான் இந்தியா. தவிப்பதை அறிந்து உதவி செய்வது! அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஐந்து நிமிடங்களுக்கு நடந்து சென்று மீண்டும் அழைத்தால் மழைக்கு ஒதுங்கியிருந்த கூட்டத்தில் குட்டையாக ஒரு மனிதர் கையசைத்துக் கொண்டே வர, சிரித்த முகத்துடன் ‘நமஸ்தே’ சொல்லிவிட்டு பெட்டிகளை வாங்கிக்கொண்டு “வண்டி அங்கிருக்கிறது. வாருங்கள்” என்றார். சாலைகளில் மழைத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.விடாத மழையில் எப்படி வர முடியும் என்றவுடன் வண்டியை எடுத்துக் கொண்டு வந்து ‘கடகட’வென பின்சீட்டில் ஒரு கால் வைத்து பெட்டிகளை மேலே ஏற்றி ஒரு அழுக்கு பிளாஸ்டிக் துணியால் மூடி கயிறு கட்டி எங்களையும் ஏறுங்கள் என்றவுடன் ஓடிப் போய் ஏறினாலும் சிறிது நனைந்து விட்டோம். ஷூக்கள் தொப்பலாக நனைந்து அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது!

அதிக நேர காத்திருப்பு. மொழி புரியாமல் அலைய நேரிட்டதில் முகம் தெரியாத வண்டியோட்டியின் மீதிருந்த கடுப்பெல்லாம் அந்த குட்டையான ‘துறுதுறு’வென மனிதரை நேரில் பார்த்ததும் வண்டியில் ஏறியவுடன் ஆஞ்சநேயர், காயத்ரி, விநாயகர் உருவச்சிலைகளை வரிசையாக காரில் பார்த்ததும் அப்பாடா என்றிருந்தது. அவர் மேல் நம்பிக்கையும் பிறந்தது.

அவர் வேகமாக எதையோ கேட்க, நாங்கள் ‘திருதிரு’வென முழிக்க, மெதுவாக பேசுங்கள். கொஞ்சம் தான் ஹிந்தி தெரியும் என்றவுடன் அவர் முகத்தில் ஏகப்பட்ட குழப்பம். இனி எப்படி மொழி தெரியாத ஊரில் சுற்றப்போகிறோமோ என்ற நினைப்பே மலைப்பாக இருந்தது.

மழை இப்போதைக்கு நிற்பதாகத் தெரியவில்லை. விமானநிலையத்தை விட்டு வெளியே நகரின் போக்குவரத்து நெரிசலுடன் ஐக்கியமானோம். வண்டிகள் ஊர்ந்து கொண்டே செல்ல, தேசியக்கொடி பறக்கும் கட்டடங்களைக் கடந்து நெடுஞ்சாலையைத் தொடுகையில் மழையின் வீரியம் குறைந்திருந்தது. அனைத்துவித வாகனங்களும் முண்டியடித்துச் செல்லும் சாலைகளைக் கடந்து மீரட் பைபாஸைத் தொட, கருமேகங்கள் விலகி மழையும் நின்றிருந்தது. அமெரிக்க நேரப்படி இரவாகிவிட்டதால் உறக்கமும் கண்களைத் தழுவ, வேடிக்கை பார்ப்பதில் நாட்டம் கொண்ட மனமோ மறுக்க, உத்தரபிரதேச மாநில எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தோம்.

டெல்லி-உத்தரபிரதேச நெடுஞ்சாலை புதிது போல் ‘பளிச்’சென்று இருந்தது. ‘புதிய இந்தியா’வில் பயணிக்கிறோம் என்ற பெருமிதத்துடன் தேசியக்கொடி பறந்து கொண்டிருந்த கட்டடங்களைக் கடந்து ஒரு மணிநேரத்தில் க4ஸியாபாத் ஜில்லா வழியே சென்று கொண்டிருந்தோம். பல புதிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்கள் உருவாகி வருகிறது. நெடுஞ்சாலை என்றாலும் ஷேர் ஆட்டோ, கைவண்டி, சைக்கிளையும் பார்க்க முடிகிறது. சமயங்களில் எதிர்த்தாற்போல் வந்து மரணபயத்தையும் கொடுக்கிறார்கள்! எதையும் கண்டு கொள்ளாமல் வாயில் எதையோ மென்று கொண்டே மனைவியிடம் தான் எங்கிருக்கிறேன் என்று அப்டேட் பண்ணிக்கொண்டு வந்தார் எங்கள் டிரைவர். தாய்லாந்தில் வாடகை வண்டி ஓட்டுபவர்கள் அத்தனை மரியாதையாக வண்டியில் இருப்பவர்கள் முன் ஏதும் பேசாமல் கேட்ட கேள்விகளுக்குத் தட்டுத் தடுமாறி ஆங்கிலத்தில் பதில் சொல்லுவார்கள். ஆட்களும் படு சுத்தமாக உடையணிந்து ‘பளபள’ என்றிருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே எங்கு வந்து அழைத்துச் செல்ல வேண்டுமோ அங்கு வந்து காத்திருப்பார்கள். இங்கோ, பாக்கெட்டைத் திறந்து பான் போடுவதென்ன, சத்தம் போட்டு மனைவியிடம் பேசுவதென்ன? அயல்நாடுகளில் கஸ்டமர் தான் தெய்வம். இந்தியாவில் அதற்கு நேர்மாறு! இன்னும் நாம் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

நெடுஞ்சாலையிலிருந்து தெருக்கள் வழியாக செல்ல ஆரம்பித்தோம். க2ஜியாபாத் சாலையோரக்கடைகளைப் பார்த்தால் மதுரையில் 70களில் இருந்த கடைகள் போல இருந்தது! அழுக்கான மக்கள். வீடுகளும் கூட! . இங்குள்ள பல வீடுகளில் முகப்பு மட்டும் தான் வண்ணம் பூசப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் செங்கல் தெரிய சுவர்கள்! பணத்தைச் சேமிக்கும் வழியோ? வீடுகளின் முன் திறந்தவெளி சாக்கடைகள். ஆனந்தமாக சிறுவர்கள் விளையாட பெரியவர்கள் தீவிரமாக பேசிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்கள். தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்கள், பண்டங்கள் என வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அரசியல் பிரமுகர்களின் விளம்பர பலகைகள் பல அளவுகளில் பார்க்குமிடங்களில் எல்லாம் ஆக்கிரமித்திருந்தது. உயரமான பாலங்கள் கட்டும் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்க இப்பொழுது தான் இந்த மாநிலத்திற்கு விடியலே பிறந்திருக்கிறது! இனி நிலைமை மெல்ல மாறும். உத்தரப்பிரசதேசத்தின் விவசாய பூமிப்பகுதியில் பயணித்ததால் அப்படி தோன்றியதோ என்னவோ. ஆனால் நொய்டா, ஃபரிதாபாத் நகரங்கள் எல்லாம் அபரிதமான வளர்ச்சியுடன் பிரமிப்பைத் தந்தது.

தூக்கத்திலிருந்து விழித்த ஈஷ்வர் டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று வண்டியோட்டுபவரிடம் சொல்ல அவரும் பக்கத்தில் தான் கடை இருக்கிறது. அங்கே அழைத்துச் செல்கிறேன் என சொல்லிவிட்டார். போஜ்புர் வழியெங்கும் பச்சைப்பசேலென விளைநிலங்களில் கரும்புத் தோட்டங்கள். கல்லூரிகள், தொழிற்சாலைகள் பலவற்றையும் கடந்து ‘ஜெயின் ஷிகன்ஜி’ உணவகத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்தப் பகுதியில் பிரபலமான உணவகம் போலிருக்கிறது. இங்கே ‘சா2ய்’ அருமையாக இருக்கும். வேறு ஏதாவது சாப்பிட வேண்டுமென்றால் கூட சாப்பிடலாம் என்று சாலையோரக் கடையில் நிறுத்தினார். அருகிலேயே ஒரு ‘குப்தாஜி’ கடையும் இருந்தது!

வாசலில் ஒரு நாய் எங்களை வரவேற்க, கடையில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது! “இங்கேயா” என நான் கேட்கவும் “வேற வழி?” என்று ஈஷ்வரும் ‘தீன் சாய்’ சொல்லிவிட்டு சுற்று முற்றும் பார்த்தால் இங்கு எப்படி சாப்பிடுகிறார்கள் என்று தோன்றியது! பெரிய பாத்திரத்தில் மூன்று பேருக்கு டீ போட பாலை ஊற்றி , எங்கிருந்தோ தண்ணீரை எடுக்கவும் எனக்குப் பயமாக இருந்தது. மூடி வைத்திருந்த பாத்திரங்களின் மேல் எல்லாம் கொத்து கொத்தாக ஈக்கள்! கடவுளே! உடம்புக்கு ஒன்றும் ஆகாமல் இருக்க வேண்டுமே. டீத்தூளுடன் மசாலா சேர்த்து நன்றாக கொதிக்க வைத்தார். எத்தனை கரண்டி சர்க்கரையைப் போட்டோரோ தெரியாது. இனி கவனமாக இருக்க வேண்டுமோ? அழகாக அடுக்கி வைத்திருந்த மண் குவளையில் ஊற்றிக் கொடுக்க, ஆஹா! மசாலா டீ திவ்யமாக இருந்தது. ஏன் இருக்காது? கொஞ்சநஞ்சமா சர்க்கரையைப் போட்டார்?

அங்கு எண்ணையில் பொரித்த பிரட், கிழங்குகள் கொண்டு செய்த பலகாரங்கள் அடுக்கப்பட்டு கண்ணாடி மூடிய மேஜையில் வைத்திருந்தார்கள்.. சாப்பிடத் தான் கொஞ்சம் தைரியம் வேண்டும் அதுவும் பயணிகள் மிகவும் கவனத்துடன் தான் வெளியிடங்களில் சாப்பிட வேண்டும். சுகாதாரம் சொல்லிக்கொள்வது போல் இல்லை. சுற்றி இருப்பவர்கள் பலரும் துப்பிக் கொண்டே தான் இருந்தார்கள். என்ன தான் பாரதப் பிரதமர் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தைக் கொண்டு வந்து குப்பைகளை நீக்கினாலும் துப்பிக் கொண்டே இருக்கும் இந்தியர்கள் வாயைத் தைக்கும் திட்டம் ஒன்றையும் கொண்டு வந்தால் தான் நல்லது. அந்தளவுக்கு எரிச்சலைத் தந்தது இந்த எச்சில் விவகாரம். மூத்திரச்சந்து மதுரையும் இதற்கு சளைத்தது இல்லை.

வரும் வழிதோறும் வண்ண வண்ண விளக்குகளுடன் நிறைய இருக்கைகள் போட்ட பெரிய உணவகங்கள் சாலையோரம் தென்பட்டன. ஆனால் சாப்பிடும் ஆட்கள் ஒருவரைக் கூட பார்க்கவில்லை. வார இறுதியில் கூட்டம் இருக்குமாம். எப்படி கட்டுப்படியாகிறதோ என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு மணிநேரப் பயணம். வழியில் கிராமத்துக் காட்சிகளுக்கு குறைவே இல்லை. எருமைமாடு பூட்டிய வண்டிகள், காளை மாடுகள், வயல்வெளிகளைப் பார்த்துக் கொண்டே வந்தோம். நல்ல வேளை மழை இல்லை. கங்கையின் கால்வாய் பகுதியில் புதிய பாதை அமைக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. மழைநீர் பொங்கிப் பெருகி கங்கையுடன் ஓடிக்கொண்டிருந்ததைக் காண அழகாக இருந்தது. “கங்கா ஜி” என்று அன்போடு விளித்து வணங்கினார் எங்கள் டிரைவர். அங்கே குட்டி ஹரித்வார் இருக்கிறது. அப்பகுதியில் பயணிப்பவர்கள் தவற விட வேண்டாம்.

நடுவில் தம்பியிடமிருந்து அழைப்பு வர, நாங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிச் சொன்னவுடன் அலுவல் நிமித்தமாக அங்குள்ள ஆலைகளுக்கு பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் அவன் வந்திருந்த பொழுது அங்கிருந்த நிலைமையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறினான். சுதந்திரம் கிடைத்த பொழுது இந்தியா எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்ததாகவும் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்தார்கள். இப்பொழுது நிலைமை மாறியிருக்கலாம் என்று சொன்னான். இன்னும் நிறைய மாற வேண்டும். எங்களுக்கும் இந்த இடத்தைப் பார்த்து அப்படித்தான் தோன்றுகிறது. தென் இந்தியாவைப் போல வர இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ? ஆனால் யோகிஜியின் ஆட்சியில் முன்னேற்றங்கள் இருப்பதாக நாங்கள் பேசிய சிலர் மகிழ்ச்சியுடன் கூறியதை நானும் தம்பியிடம் பகிர்ந்து கொண்டேன்.

ஒரு மணிநேரத்தில் முசாஃபர்நகர் வந்து சேர்ந்தோம். மாலை நேரமாகி விட்டிருந்தது. டிரைவருக்குப் பசித்திருக்கிறது போல. உணவகத்தின் அருகே நிறுத்தினார். அங்கிருந்த கடையில் ரொட்டிகள் வாங்கி நாய்களுக்குப் போட்டோம். இந்தியாவில் திரும்பிய பக்கமெல்லாம் நாய்கள் இருக்கிறது! அருகிலிருந்த பான் விற்கும் கடையில் வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிட விதவிதமான பொருட்களை வைத்திருந்தார்கள்! உணவகத்தில் ‘சுடச்சுட’ சமோசா, பூரி தயாராகிக் கொண்டிருந்தது. சாப்பிடுவதற்கும் மக்கள் இருந்தார்கள். எப்படா ஹரித்வார் போய் கங்கா ஆரத்தி பார்ப்போம் என்று ஆவலாக இருந்தது எங்களுக்கு.

“இங்கிருந்து ஒரு மணி நேரத்தில் ரூர்க்கீ. அங்கிருந்து அரைமணி நேரத்திற்குள் ஹரித்வார். அவ்வளவு தான். கங்கா ஆரத்தி பார்த்துடலாம்.” சொல்லிவிட்டு வண்டிக்கு காஸ் போடணும் என்று பெட்ரோல் நிலையத்திற்குள் வண்டியை விட்டார் ட்ரைவர். ரூர்க்கீ கேட்ட பெயராக இருக்கிறதே என்று யோசிக்கையில் தான் பிரபலமான ஐஐடி இருப்பது நினைவிற்கு வந்தது.

பெட்ரோல் நிலையத்திற்குள் வரிசையாக வண்டிகள் காத்திருக்க யாரும் நகருவது போல் தெரியவில்லை. எங்கள் வண்டியை நடுவழியிலேயே குறுக்காக நிறுத்தி விட்டு என்ன ஏது என்று கேட்க போய்விட்டார் டிரைவர் . “கொஞ்ச நேரமாகுமாம்.” சொல்லிவிட்டு பக்கத்து வண்டிக்காரருடன் அரட்டை வேறு! “ஹ்ம்ம்… ஊர் போய்ச் சேர்றதுக்குள்ள இருட்டிடும் போலிருக்கு.” மழை இல்லை என்ற ஆறுதல் மட்டும் தான் அப்போதைக்கு. எனக்கென்ன என்று அந்த களேபரத்திலும் ஒரு நாய் நிம்மதியாக அங்கே தூங்கிக் கொண்டிருந்தது! பைரவர்கள் இல்லாத இடமே இல்லை! ஒரு அலங்கார மினி வேன் நிறைய மக்கள்! வட இந்தியாவில் லாரிகள், டூரிஸ்ட் வேன்கள் எல்லாம் வண்ணமயமாக அலங்காரங்களுடன் இருக்கிறது. நம்மூர் லாரிகள் அப்படி . இல்லாததால் வித்தியாசமாக தெரிந்ததோ என்னவோ!

இது என்ன வழக்கமோ தெரியவில்லை. வாடகை வண்டி எடுத்தால் பெட்ரோல்/காஸ் போட நம்மிடமே காசு வாங்கித் தான் போடுகிறார்கள் இந்த வண்டிக்காரர்கள்! 3000 ரூபாய் வாங்கிக் கொண்டு காரில் காஸ் போட்டு கிளம்பினோம். சூரியன் விடை பெற காத்திருந்தது. உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து உத்தர்காண்ட் மாநிலத்தில் ஹரித்வார் நகரை வந்தடையும் பொழுது இரவு மணி ஏழரை. நன்கு இருட்டி விட்டிருந்தது. ரூர்க்கீ-ஹரித்வார் நெடுஞ்சாலையில் நாங்கள் முன்பே பதிவு செய்திருந்தாக நினைத்திருந்த ‘ஹோட்டல் கிரிஸ்டல் கங்கா ஹயிட்ஸ்’ வந்து சேர்ந்தோம். முன்பதிவில் ஏற்பட்ட குழப்பம் நீங்கிய பிறகு கங்கா நதியைப் பார்த்தபடி இருக்கும் அறையைக் கேட்டு வாங்கி ஜன்னலின் திரைச்சீலையைத் திறந்தால் சிறிது தொலைவில் ‘சலசல’வென கரைகள் தொட்டு ஓடிக்கொண்டிருந்தாள் கங்கா.ஜெய் மாதா! சுற்றிலும் மலைகள். ‘மினுக்மினுக்’ ஒளியில் ஆங்காங்கே கோவில்கள். திவ்யமாக இருந்தது. எங்களின் புண்ய யாத்திரையின் முதலாம் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம்.

சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு கங்கையைக் காணும் ஆவலுடன் அங்கு செல்லும் வழியைக் கேட்டுக் கொண்டு கிளம்பி விட்டோம். விடுதியிலிருந்து ஐந்து நிமிட நடை தான். சாலையைக் கடந்தால் ‘ஷங்கராச்சார்யா சவுக்’. எதிரே பெரிய சிவன் சிலை. தலையிலிருந்து கங்கை பீறிட்டு வருவது போல் செய்து வண்ண விளக்கு அலங்காரங்களுடன் திவ்யமாக இருந்தது அந்த இடம். ஹரித்வாரில் நாங்கள் கங்கை அன்னையை தரிசித்த முதல் இடம் ‘அம்ரப்பூர்’ படித்துறை. படிகளில் இறங்கி அன்னையை வணங்கி தலையில் கங்கை நீரை தெளித்துக் கொண்டோம். உடல் சிலிர்த்துக் கொண்டது. கரையோரச் சுவர்களில் கங்கை, சிவன், முனிவர்கள் திருவுருவச்சிலைகளை வைத்திருந்தார்கள். சமீபத்திய தொடர் மழையால் மண்ணோடு கலந்து அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தாள் உள்ளூர் மக்களால் அன்போடு அழைக்கப்படும் “மா கங்கா”. நதியின் மறுகரையில் கோவில்களும் ஆசிரமங்களும் தெரிந்தது. கரையோரம் மாலை நேர தீபங்களை ஏற்றி வைத்திருந்தது அழகு. சிறிது நேரம் படிகளில் அமர்ந்து கரைபுரண்டு ஓடும் இந்தப் புண்ணிய நதியைக் காண தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தோமோ! மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு இளஞ்ஜோடியும் இளைஞர்கள் குழாமும் அங்கு வந்து அமர்ந்து கொண்டார்கள். சிலர் வேகவேகமாக இரவு நடை நடந்து கொண்டிருந்தார்கள். நாளை விடிந்த பிறகு மீண்டும் வந்து பார்க்கலாம் என்று கிளம்பினோம். தெருக்களில் ஜன நடமாட்டம் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளூர் மக்கள் நின்று கொண்டிருந்தனர். ஒரே ஒரு சாப்பாட்டுக் கடை. பழங்கள் ஏதும் கிடைக்கவில்லை. நாங்கள் தங்கியிருந்த விடுதி உணவகத்தில் பால், பழங்களை உண்டு மறுநாள் போக வேண்டிய இடங்களைத் திட்டமிட்டு பகலில் ஹரித்வாரைக் காணும் கனவுகளுடன் உறங்கச் சென்றோம்.

Series Navigationதினந்தோறும் சித்திரைத் திருவிழா: ஹரித்வார் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.