ஏகபோகம்

This entry is part 3 of 4 in the series 1950 களின் கதைகள்

1958 -1

1958 முதுவேனில் காலம். 

சோவியத் யுனியன் ஸ்புட்னிக்கை வானத்தில் செலுத்தியதில் இருந்து அதற்கும் யு.எஸ்.ஏ.க்கும் விண்வெளிப் போட்டி தொடங்கியது. 

மில்கா சிங் பல 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கங்கள் வென்றார். அத்துடன், ‘ஆர் யு ரிலாக்சிங்?’  ‘நோ, ஐ அம் மில்காசிங்‘ என்ற அபத்த ஜோக்கை விளையாட்டாக எடுத்துக்கொண்டார். 

இவை எல்லாவற்றைம் விட தமிழ் மக்களின் கவனத்தில் நின்றது, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் பத்மினிக்கும் வைஜயந்திமாலாவுக்கும் நடந்த நடனப்போட்டி. அதில் வென்றது யார்?

கோடை விடுமுறையின் ஆரம்பத்திலேயே குமரநாதனுக்கு பகல்பொழுதை எப்படிக் கழிப்பது என்கிற கேள்வி. ஆறாம் வகுப்பின் இறுதித்தேர்வுகளை முடித்து முந்தைய தினம் அவன் உயிர்த்தோழன் அம்பாலாவில் இருந்த தன் பெற்றோர்களைப் பார்க்க ரயில் ஏறினான். திரும்பிவர ஒரு மாதமாவது ஆகும். 

அப்பா வேலைக்குக் கிளம்பத் தயார். விதவை அத்தையின் பெண்களில் சின்னவள் (சங்கரி) அவருடைய சாப்பாட்டுக் கேரியரைப் பையில்வைத்து காத்து நின்றாள். பெரியவள் (சௌந்தரம்) அவர் சைக்கிளைப் படியில் இறக்கி வாசலில் நிறுத்தினாள். திரும்பி குமரநாதனின் சோக முகத்தைப் பார்த்து, 

“பொழுது போறதுக்கு எதாவது படியேன்!”  என்றாள். 

“(சிறுவர் பத்திரிகை)’கண்ணன்’ல எல்லாம் வாசிச்சாச்சு.”  

“அப்படின்னா…”  

அவனைப் பெரியவர்கள் கதைக்கு உயர்த்த, சௌந்தரம் முன்னறையில் இருந்து ‘கலைமகள்’ எடுத்துவந்தாள். அவள் பிரித்துக்காட்டிய பக்கத்தில்… 

” ‘புலராத பொழுது.’ அப்படின்னா கதை முழுக்க இருட்டா இருக்குமா?” என்று அவனுக்கு சந்தேகம். 

“அப்படி இல்ல. அது உருவகம்.”  

அவனிடம் தருவதற்கு முன் சௌந்தரம் இரண்டாம் பக்கத்தின் இடது பாதியில் பென்சிலால் ஒரு சின்ன கோடு போட்டாள். கடைசிப் பக்கத்தில் கால் பகுதிக்குக் கீழே இன்னொன்று. 

“முதல் கோட்டிலிருந்து இரண்டாம் கோடு வரை வாசிக்கணும். அப்புறம் முதலிலேர்ந்து முதல் கோடு வரைக்கும்.” 

“கடைசியில கடைசிப் பக்கம்” என்று தலையை ஆட்டினான்.

அவள் சொன்ன வரிசைப்படியே குட்டித்திண்ணையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தான். 

அப்பா வேலைக்குக் கிளம்பினார். 

“என்ன வாசிக்கறே?” 

அட்டையைக் காட்டினான். 

“படி! படி!” 

இந்தப்பக்கம் அந்தப்பக்கம் பார்க்காமல் சுவாரசியமாக ஒரு மணி. கதாநாயகியின் ஏமாற்றத்துக்கு கதையின் தலைப்பு உருவகம் என்பது சுமாராகப் புரிந்தது. சௌந்தரத்திடம் பத்திரிகையைத் திருப்பிக்கொடுத்து,  

“கால வரிசைப்படியே எழுதியிருக்கலாம்” என்றான். 

“சரித்திரப் புஸ்தகம் இல்ல. கதை பின்னும் முன்னுமா போனாத்தான் வாசிக்க சுவாரசியம்.”  

த்தியான சாப்பாட்டுக்கு இன்னும் மூன்று மணி. அம்மாவும் அத்தையும் தாழ்வாரத்தில் பல்லாங்குழி ஆடத்தொடங்கினார்கள். அதாவது பழங்காலம், பால் கணக்கு, பிற்பகல் சமையல் என்று அரட்டை. யாருக்கு வெற்றி என்பதெல்லாம் முக்கியமே இல்லை. சௌந்தரமும் சங்கரியும் முந்தைய வகுப்பு நோட்டுகளில் எழுதிய பகுதிகளைப் பிரித்தார்கள் – பழைய பேப்பர் காரனுக்கு. மீதி காகிதங்கள் வரும் ஆண்டில் ‘ரஃப்’ நோட்டு. அவர்கள் வேலையில் குறுக்கிடாமல் குமரநாதன் தெருவில் நடந்தான். சூரியநாராயண ஐயர் வீட்டின் திண்ணையில் வாசு, தியாகு, மற்றும் கிழக்கே இருந்து வந்த இரண்டு பெரிய பையன்கள். தள்ளி நின்று பார்த்தான். 

நால்வருக்கும் நடுவில் விளையாட்டு அட்டை. நீளமான தாயக்கட்டைக்கு பதில் இரண்டு கன சதுரப் பகடைகளை உருட்டினார்கள். காய்களுக்கு பதில் பிளாஸ்டிக் வட்டுகள். வண்ணக் காகிதங்கள் கைமாறின. நடுநடுவே முனகல், வில்லனின் அலட்சிய சிரிப்பு. வாசு ஆட்டத்தின் எல்லா ரூபாய் நோட்டுகளையும் அள்ளிக்கொண்டு, “எல்லாம் எனக்குத்தான்” என்று வெற்றிச் சிரிப்புடன் ஆட்டத்தை முடித்தான். குமரநாதனும் அக்காக்களும் ஆடும்போது தாயக்கட்டத்தில் யார் தோற்றாலும் கடைசியில் எல்லா காய்களும் வீட்டில் ஏறிவிடும். இது அப்படி இல்லை. ஒருவனுக்கே எல்லா பணமும்.

“இன்னொரு ஆட்டம்?”  

எல்லாருக்கும் நேரம் இருந்தது. தோற்றுப்போனவர்கள் விளையாட்டு அட்டையில் இருந்து எல்லாவற்றையும் விலக்கி அதைத் தயார் செய்தார்கள். வாசு ஒவ்வொருவரிடமும் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அதே அளவு தன்னிடமும் வைத்துக்கொண்டான். ஒவ்வொருவராகப் பகடைகளை எறிந்து அவர்களின் வட்டுகளை நகர்த்தினார்கள். அட்டையின் சதுரத்தை இரண்டுமுறை சுற்றியிருப்பார்கள். அப்போது தியாகுவின் தங்கை தூரத்தில் இருந்தே, 

“ஏண்டா தடியா! எங்கெல்லாம் உன்னைத் தேடறது?” 

“அத்திம்பேர் ஊருக்குக் கிளம்பறார்” என்று அவன் எழுந்துபோனான். 

“குமா! நீ ஆடறியா?” 

‘எப்படி ஆடறது?’ என்று தன் அறியாமையை வெளிப்படுத்தாமல் தியாகுவின் இடத்தில் உட்கார்ந்தான். 

போகப்போக விதிமுறைகள் புரிபட ஆரம்பித்தன. அத்துடன் பகடைகளின் அதிருஷ்டம். ‘சான்ஸு’க்கு ஏழு போட்டு வந்தபோது 2500 ரூபாய் பரிசு. அவனிடம் ‘பரேல்’ உட்பட நான்கு நீல அட்டைகளும், இரண்டு மஞ்சள் அட்டைகளும். பணம் சேரத்தொடங்கியது. வரிசையாக மூன்று நீல இடங்களில் – தோபிதலாவ், கிர்காவோன், கல்பாதேவி – வீடு கட்டினான். மற்றவர்கள் முகம் ரசிக்கும்படி இல்லை. வாசுவின் அண்ணன் ரேழியில் நின்று, 

“சாப்பிட வா!” என்று அவனைக் கூப்பிட்ட அடுத்த கணமே கிழக்கில் இருந்து வந்த நண்பர்கள் இடத்தைக் காலி செய்தார்கள். 

“குமா! எல்லாத்தையும் ஒழுங்கா அடுக்கிவை!”  

ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டதற்குக் கூலி. 

பிளாஸ்டிக் வீடுகளையும், வர்ண வட்டுக்களையும் ஒரு குழியில் வைத்தான். ரூபாய் நோட்டுகளை பத்தில் இருந்து பத்தாயிரம் வரை மதிப்பின்படி பிரித்து அடுக்கினான். கட்டங்களின் விவரங்கள் அடங்கிய அட்டைகளை நிறம் பார்த்து சேர்த்தான். இரண்டு பகடைகள். கடைசியில் விளையாட்டு அட்டை. மடக்கி பெட்டியில் எல்லாவற்றுக்கும் மேல் வைப்பதற்குமுன் சில நிமிடங்கள் அதை ஊன்றி கவனித்தான். ஸ்டார்ட், வெர்சோவா, ஜுஹு … க்ரான்ட் ரோட்… மெரீன் ட்ரைவ்… சைளபாதி… 

பகல் நேரம் முழுக்க அதே நினைவு. வடுமாங்காயுடன் தயிர் சாதம் சாப்பிட்ட மயக்கத்தில் கண் மூடியபோது பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளாகக் கனவு. 

மாலை விளையாட்டிலும் இரவுச் சாப்பாட்டிலும் மனம் பதியவில்லை. இத்தனைக்கும் அவனுக்குப் பிடித்த பருப்புத் துவையல். அதைக் கவனித்த அவன் அப்பா, 

“குமா! ஏன் என்னமோ மாதிரி இருக்கே?” 

“இன்னிக்கி வாசுவோட ‘ட்ரேட்‘னு ஒரு விளையாட்டு ஆடினேன். அதில நிலம் வாங்கலாம். நிலத்தில வீடு கட்டலாம். வீட்டுக்கு வாடகை வசூல் பண்ணலாம். தாயக்கட்டத்தை விட விஷயம் அதிகம்.”   

“பேர் என்ன சொன்னே?” 

“ட்ரேட்.” 

“எங்கே வாங்கினான்னு தெரியுமா?” 

குமரநாதன் உதட்டைப் பிதுக்கினான்.

“நாளைக்கு வேலைலேர்ந்து வர்றப்ப குப்தா கடையில இருந்தா வாங்கிண்டு வரேன்.”  

“குப்தா கடையில கேரம் போர்ட் கூட வச்சிருப்பான்” என்று அந்தக் கடை வாசல் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு நடந்ததை சங்கரி ஞாபகம் வைத்திருந்தாள்.

றுநாள் அப்பாவின் வருகைக்கு ஆவலுடன் காத்திருந்தான். ஐந்து மணியில் இருந்தே வாசற்படிக்கட்டு அவனை ஒட்டிக்கொண்டது. 

சைக்கிளின் பின்னால் செய்தித்தாளில் சுற்றிய பெட்டி. 

“ஆகா!” 

“சௌந்தரம்! ஜாக்கிரதையாப் பிரி!”  

உள்ளே. செக்கர்ஸ்-பாக்கேமன். மடிக்கும் அட்டையின் இரு பக்கங்களில் இரண்டு ஆட்டங்கள். தேவையான காய்கள், பகடைகள். 

குமரநாதனுக்கு அழுகை வரும்போல இருந்தது. 

“இதை ஆடினா மூளைக்கு நல்லதுன்னு சொல்லிக்கொடுத்தான். செஸ் மாதிரி அவ்வளவு கஷ்டமா இருக்காதாம்.”  

சாப்பிட்டதும் அப்பா விவரங்களைப் படித்து விளக்கினார். 

முதல் ஆட்டத்தில் அக்கா தங்கையை வென்றதில் அதிசயம் இல்லை. அவளே வெற்றியின் ரகசியங்களை வெளிப்படுத்தினாள். அப்பாவுக்கு ஏமாற்றம் தராமல் இன்னும் சில ஆட்டங்கள்.

மறுநாள் காலை சாப்பாடு ஆனதும், 

“செக்கர்ஸ் ஆடலாமா?” 

“நான் வாசுவோட ட்ரேட் -” வாக்கியத்தை முடிக்காமல் குமரநாதன் வெளியே ஓடினான்.

அங்கே பெரிய கும்பல். யாரையும் அழைக்க தங்கையோ அண்ணனோ வராததால் அவனை யாரும் சீந்தவில்லை. தொங்கிய முகத்துடன் திரும்பிவந்தான். 

“கடையில கிடைக்காட்டா என்ன? நான் பண்ணித்தரேன்” என்று சௌந்தரம் அவனைத் தேற்றினாள். 

“நிஜம்மா?”

“நிஜம்மாத்தான். எப்படி இருக்கும்னு சொல்லு!” 

“செக்கர்ஸ் அட்டை மாதிரி தடியா அகலமா…”

பழைய நோட்டுகளின் அட்டைகளை ஒன்றாக்கி, ஒரு வெள்ளைக் காகிதத்தை மேல் பரப்பில் ஒட்டினாள். 

“நாலு மூலையிலும் சதுரங்கள்.”  

தடியான நிப்புடன் பேனாவில் கறுப்பு மையை நிரப்பி வரைந்தாள். 

“என்ன எழுதணும்?” 

“ஒண்ணில ஸ்டார்ட். அது ஆட்டம் ஆரம்பிக்கிற இடம். அப்புறம் – ஆஷ்ரம், ஓட்டல், ஜெயில்.”  

சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாடியுடன் ஒரு முகம். 

“ஜெயில்ல மாட்டிண்டா மூணு ஆட்டம் கிடையாது.”  

ஒவ்வொரு ஓரத்திலும் சதுரங்களுக்கு நடுவில் எட்டு கட்டங்கள். ஸ்கேலால் அளந்து பென்சிலால் குறித்து வாட்டர் கலர் ப்ரஷால் தீட்டி… நடுவில் குறுக்காக கொட்டை எழுத்துக்களில் ‘வியாபாரம்’.

“சிவப்பு நீலம் பச்சை மஞ்சள் – ஒண்ணொண்லியும் ஐந்து. மொத்தம் இருபது இடங்கள்.”  

“என்ன பெயர்?”  

“ம்ம்.. ஜுஹு, வெர்சோவா, மலபார் ஹில் …” 

“இதெல்லாம் பம்பாய்ல இருக்கு. நாம மெட்றாஸ் ஊர்களை வச்சுப்போம்.”  

சூரியநாராயண ஐயர் வீட்டில் மாவு அரைக்கப்போகும்போது, சௌந்தரம் அவர்கள் எறிந்த பழைய பத்திரிகைகளில் கதைகள் வாசிப்பாள். அந்த ஞானத்தில் பாரீஸ், சைனா பஜார், மயிலாபூர், மாம்பலம். 

“இன்னும் வேணும்.” 

சங்கரி அப்பாவின் ரயில் அட்டவணையை எடுத்துவந்தாள். சென்னை புறநகர் இருப்புப் பாதையில் – தாம்பரம், பல்லாவரம், கிண்டி, எழும்பூர், பூங்கா, கோட்டை, கடற்கரை. பெரம்பூர். 

“இடம் சொந்தம்னு காட்டறதுக்கு ஒரு சின்ன அட்டையில அதனோட பேர், விலை.” 

“ம்ம்..  உன்னோட சிகரெட் பெட்டி அட்டைகள்.”  

“ரூபா நோட்டுக்கு?” 

“ட்ராயிங் நோட்டுல மிச்சம் இருக்கும் தடியான காகிதம்.”  

அதை மாவிலை அளவுக்கு வெட்டி கலர் பென்சிலால் வர்ணம் தீட்டினார்கள். பத்துக்கு மஞ்சள், ஐம்பதுக்கு ஆரஞ்சு… பத்தாயிரத்துக்கு பச்சை. 

“வீடு கட்டியிருக்குன்னு காட்டறதுக்கு?” 

“குந்துமணி.” 

“தாயக்கட்டை மாதிரி இல்லை. பகடையின் ஆறு பக்கத்திலும் புள்ளிகள்.”

“பாக்கேமன் ஆட்டத்தோட வந்ததே.” சங்கரிக்கு ஞாபகம் இருந்தது.  

நான்கு நாட்கள், மூன்று குழந்தைகளின் உழைப்பு. “என்ன உருப்படாத நச்சுப்பிச்சு வேலை இது?” என்ற பெரியவர்களின் சலிப்பு. 

ஐந்து ரூபாய் மதிப்புள்ள அட்டை விளையாட்டு தயார். 

டுத்தநாள் காலை கூடத்தில் பரப்பி ஆட ஆரம்பித்தார்கள். தாயக்கட்டத்தில் பயன்படுத்தும் சோழி குமரநாதனுக்கு, புளியங்கொட்டையும் கிளிஞ்சலும் அக்கா தங்கைக்கு. விளையாட்டைக் கட்டிய போதே சௌந்தரமும் சங்கரியும் அதன் விதிகளை ஓரளவு புரிந்துகொண்டார்கள். ஏற்கனவே ஆடியதால் குமரநாதனுக்கு பணபலம். 

ஆட்டத்தின் பின் பகுதி. சங்கரியின் முறை. அவள் வீசிய பகடைகளில் நான்கு, இரண்டு. 

ஆறு கட்டங்களைத் தாண்டி ‘பாரீஸி’ல் விழப்போவதை அவள் அறியவில்லை. கட்டத்தின் தலையில் மூன்று குன்றிமணிகள். குமரநாதனின் அந்த இடத்துக்கு மொத்த வாடகை பத்தாயிரம் ரூபாய். அவளிடம் இருந்த ஒரு சில நூறு ரூபாய் நோட்டுகளையும், அவளுக்கு சொந்தமான பல்லாவரம், பெரம்பூர் கட்டங்களை விற்றுவரும் பணத்தையும் சேர்த்தால் அவ்வளவு தேறாது. ஓட்டாண்டியாக ஆட்டத்தில் இருந்து விலக வேண்டும். தாயக்கட்டத்தில் சங்கரி பல தடவை அவன் பழக்காய்களை வெட்டி இருக்கிறாள். அவன் ஒரு முறை கோபத்தில் அவள் கிளிஞ்சல்களை வீசி எறிந்து இருக்கிறான். ஆட்டத்தில் நடக்கப்போவது தெரிந்ததும் அவள் முகம் கோணுவாள், நிச்சயம் அழமாட்டாள். இது வெறும் விளையாட்டு என்று அவளுக்குத் தெரியும். ஏன் குமரநாதனுக்கும் தான். ஆனாலும் அதைத் தொடர அவனுக்கு மனம் வரவில்லை. ஏன்? 

சங்கரியின் உடமைகளை எடுத்துக்கொண்டு ஆட்டத்தில் இருந்து வெளியே தள்ளுவது, அவர்கள் ஆதரவில் வளரும் அவளை வீட்டைவிட்டுத் துரத்துவதற்கு உருவகமாக அவனுக்குப் பட்டது. மனச்சித்திரம் கண்ணீராக மாறுவதற்கு முன்னால் குமரநாதன் அட்டையை மூடினான். பல சிறு பொருட்கள் சிதறியோடின. 

“இதை நாம செஞ்சப்ப இருந்த சந்தோஷம் ஆடறப்ப இல்ல. ஆட்டம் ரொம்ப நீளம். செக்கர்ஸ் ஆடுவோம். அது சீக்கிரம் முடிஞ்சிடும்.” 

***

[சிறுவயதில் ‘ட்ரேட்’ ஆடியவர்கள் இந்தக்கதையை வாசிக்கும்போது இளமையைத் திரும்பப் பெறுவார்கள் என நம்புகிறேன்.]

அமர்நாத்/ நவம்பர் 2022

Series Navigation<< 1957-2அத்திம்பேர் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.