ஆமிரா கவிதைகள்

1

இரவுகளின்
கோரப்பசி தின்று தீர்த்த உடலில் இருந்து விடுபட்ட
முகங்கள்
தார் பந்துகளைப் போல
காற்றில் மிதந்தபடி இருக்கின்றன
எட்டுக்கால் பூச்சிகளாக
சுவரில் ஊரத் துவங்குகின்றன பகல் பொழுதுகள்
பயம்
கருகிய சர்க்கரைப் பாகின் நெடியாக அறையெங்கும் விரவுகிறது
அங்கே
அகாலத்தில்
மரணித்தவர்களின் ஓலங்கள்
வியாதிகாரர்களின் பிரார்த்தனைகள்
சவ ஊர்வலத்தில் மிதிபட்டு மணத்தை
பீச்சியபடி கிடக்கும்
செவ்வந்தி மலர்கள்
இவற்றிற்கு இடையே
மெல்ல நெளிந்து செல்லும்
அந்தியின் மஞ்சளில்
சாரைப் பாம்பொன்று

***

2

மதிய வெயிலின் ருசியில் லயித்து திரும்பி
சப்போட்டா மரத்தினடியில்
கிடக்க இடம் தேடி
வாலிழந்த நாயொன்று வருகிறது
அங்கே
அதன் யவனமென
உதிர்ந்து கிடக்கும் இலைகளை கால்களால் தடவி புரட்டி தூரம் வீசி
குழி பறித்து
சுருண்டு படுக்கிறது
அது
தன் குட்டிகளை இழந்து
திரும்பியிருப்பதை
அறிந்தது போல்
சப்போட்டா மரம்
மெல்ல கிளைகளை அசைத்து
அணைத்துக் கொள்கிறது
தன் மலட்டு மலர்களால்

2 Replies to “ஆமிரா கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.