சொற்கீரன்
அழலேர் வாளின் ஒப்ப செயலை நீளிலை
அம்தழை அசைஇயும் மின்னிடை பேர்த்தும்
வெண்குருகு வெரூஉய் அடைகரை நீங்க
பைம்புனாலாடி பயிர்முகம் ஆங்கு
உள் உள் நகைப்ப ஒசியிடைத் தளிர்மகள்
விழிகள் உண்ட நெடுங்குன்றம் அனையான்
மெய்விதிர்த்தனன் ஆங்கு துறை புக்கோர் வீ அலர்
இறைபு மட நெடு நாரை ஒலி ஆர்த்தன்ன
முல்லை இவர் மன்றும் எதிர்தந்து ஒலிக்கும்.

_____________________________________________________________
பொழிப்புரை
தீக்கொழுந்து போன்ற நீண்ட இலைகளை உடைய அசோக மரத்து அழகிய தழையினை ஆடையாக உடுத்தியும் அந்த அழகில் மின்னல் போன்ற இடை அசைந்து வரவும் அதில் அச்சம் கொண்ட வெண் குருகுகள் அந்த பசுமை செறிந்த ஆற்றின் கரையை விட்டு நீங்கவும் பசுமையும் குளுமையும் நிறைந்த நீராடலில் திளத்த அவள் அவனைக்கண்டதும் முகம் மலர்ச்சியுற்று அதனால் வெட்கமும் கொண்டு தனக்குள் மென் நகை புரிகின்றாள். மெல்லிய தளிர்களை ஆடையாய் உடுத்தி குழைவு கொண்ட இடையுடன் நின்று அவனை நோக்கியதில் அவள் விழிகளால் அவன் உண்ணப்பட்டு விட்டான்.அவனும் உணர்ச்சியுள் ஆட்பட்டு நின்று விட்டான்.நெடுங்குன்றம் போல் நின்ற அவன் அவள் விழிகளில் வீழ்ந்து விட்ட இந்நிலையை அந்த ஆற்றங்கரைக்கு வந்தவர்கள் கண்டு விட்டனர்.இதனால் பற்றிக்கொண்ட அந்த ஊர்ப்பழி எனும் அலர் மெல்லிய சிறு சிறு பூக்கள் காற்றில் இறைவது போல் பரவிவிட்டது. மெல்லிய மடமை பொருந்திய நாரைகள் ஒலி கிளப்புவது போல் அங்கு ஒலிப்புகள் எழுந்தன.அவை முல்லை கொடி படர்ந்து நிற்கும் மன்றுகளிலும் பட்டு எதிரொலித்தன.
***
அகநானூற்றுப்பாடல் 188 ன் அழகிய சொற்கள் சில கோர்த்து நான் எழுதியது இது.
அவள் தழையுடையும் மின்னல் இடையும் கருவிழியும் அவனை மயக்கின.அவர்களுக்கிடையே நடந்த சந்திப்பு ஊரார் காணும்படி அலர் தூற்றும் ஒலிகளால் மொய்த்துக்கொண்டது. இதைப்பற்றி நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை இது.