அயிதம் இந்திரா, பாரதி தேவி, காவேரிபாய், தேவமணி சத்யநாதன்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

தேவமணி சத்யநாதன் எழுதிய நாவல் சாரதா விஜயம்

1935இல் இரண்டாவது பதிப்பாக வந்த சாரதா விஜயம் (శారదావిజయము) நாவலை எழுதிய தேவமணி சத்யநாதன் (దేవమణి సత్యనాథన్), 1908ல் லலிதா என்ற சமூக நாவலை எழுதிய டி. சத்தியநாதன் இருவரும் ஒருவரே. சத்யநாதன் என்பது கணவர் பெயராக இருக்கலாம். வேங்கடகிரி குமாரராஜா எஸ்.கே கிருஷ்யாசேந்த்ர பஹத்தர் எழுதிய முன்னுரையோடு அச்சான அந்த நாவல் குறித்து 1934 ஜூலை ஆந்திரபூமி பத்திரிகையில் சிவராம கிருஷ்ணபிரசாத் பஹத்தர் என்பவரின் விமர்சனம் வந்துள்ளது. முதல் பதிப்பு வந்ததற்கான ஆதாரம், பாடபுத்தகங்களின் கமிட்டி அளித்த சம்மதம் இரண்டும் அவருக்கு இந்த நாவலின் இரண்டாவது பதிப்பிற்கான உற்சாகத்தை அளித்திருக்கலாம். சிறுமாமிள்ள எனபவரின் விமர்சனம், ‘சத் விமர்சனம்’ என்ற தலைப்பில் அச்சாகி உள்ளது. மதராசில் இது பிரசுரிக்கப்பட்டது

சாரதா விஜயம் வரலாற்று நாவல். 14 ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சங்கம வம்சத்தைச் சேர்ந்தவரான ஹரிஹராயரின் வாரிசுகள் ஆட்சி செய்த காலத்தில் பாமினி அரசர்களோடு நடந்த போர்கள், அரசாங்க விரிவாக்கம் ஆகியவற்றின் பின்னணியில் இந்த நாவலின் கதையம்சம் நடக்கிறது. வரலாற்றுப்படி பார்த்தால் தேவராய விஜயம் என்று இருக்க வேண்டிய நாவலின் பெயர் சாரதா விஜயம் என்றுள்ளதால் இந்த நாவலின் கதை முழுமையாக கற்பனை என்பது தெளிவு .

இரண்டாவது ஹரிஹராயரின் மரணத்திற்குப் பிறகு விரூபாக்ஷ ராயர், இரண்டாவது புக்க ராயர் ஆகியோரின் சிறு கால ஆட்சிக்குப் பிறகு அரசை ஏற்ற முதலாம் தேவராயரின் ஆட்சி காலத்தில் அதாவது 1406 லிருந்து 1422 இடைப்பட்ட காலத்தில் இந்த கதை நடக்கிறது.

டெல்லி சுல்தான்களை எதிர்த்து அலாவுதீன் பஹமன் ஷா ஏற்படுத்திய பாமினி சாம்ராஜ்யம் 1358 ல் தென் திசைக்கும் விரிவடைந்து விஜயநகரம், வாரங்கல் பகுதிகளைக் கைப்பற்றியது. 1406 ல் விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசர் முதலாம் தேவராயருக்கும் பாமினி சுல்தான் பிரோஜ் ஷாவுக்கும் இடையே முத்கல், ராய்ச்சூர் முதலான கோட்டைகள் தொடர்பாக நடந்த போர்களின் கதையே இந்த நாவல். 1422ல் பிரோஜ் ஷா மரணத்தோடு இந்த நாவலின் கதை முடிகிறது.

ஆனால் நாவலின் முடிவில் பிரோஜ் ஷா இறப்புக்குப் பிறகு சுல்தான் விருதோடு ராஜ்யத்திற்கு வந்த அகம்மது ஷாவை குறித்து குறிப்பிட்டு அவனுடைய அக்கிரமங்களை அடக்கி ஸ்ரீதேவராய சார்வபௌமர், ‘கர்நாடகா ராஜ்ய ரமாரமணர்’ என்ற விருதோடு சம்ஸ்கிருதம், ஆந்திரா, கர்நாடகா என்ற மூன்று மொழிகளின் வளர்ச்சிக்கும் பாடுபட்டு அரசாண்டார் என்று எழுதியுள்ளார் நூலாசிரியை.

ஆனால் ஸ்ரீதேவராய சார்வபௌமனின் அரசாட்சி 1422 லேயே முடிந்துவிட்டது என்பது வரலாற்று உண்மை. அதே ஆண்டு ராஜ்யத்திற்கு வந்த அகமதுஷா 1422 லிருந்து 24 வரை விஜயநகரத்தை ஆண்ட வீரவிஜய புக்கராயரின் மீது வெற்றி கொண்டான். அவனை எதிர்த்து நின்றவர் 1424 முதல் 1446 வரை விஜயநகரத்தை ஆண்ட இரண்டாம் தேவராயர். முதலாம் தேவராயருக்கும், இரண்டாம் தேவராயருக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறியாத இயல்பு கதையின் முடிவில் வெளிப்படுகிறது.

பிரோஜ் ஷாவை ஹிந்து மத வெறுப்பாளராக அறிமுகம் செய்து அவன் மீது முதலாம் தேவராயரின் வெற்றியை ஹிந்து மதத்தின் மேன்மையாக நிரூபிக்கும் வகையில் இந்த நாவலின் கதையம்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பலம் சேர்க்கும் கதையே சாரதாவின் கதை.

முத்கல் கோட்டையில் பாலிகா பாடசாலை மாணவியாக சாரதாவை அறிமுகப்படுத்தி பிரோஜ் ஷாவின் தம்பி இளவரசன் அகம்மது ஷா அந்த கோட்டைக்கு பயணம் செய்து பள்ளிக்குச் சென்று அவளைப் பார்த்து அவளுடைய பாடலையும் பேச்சையும் கேட்டு அவள் மீது மோகம் கொண்டதாக கதையைத் திருப்பி அங்கிருந்து ஆந்திர மகளிரின் சுய மத அபிமானம், சுய அபிமானம், தேசபக்தி முதலான குணங்களை நிரூபிப்பதன் மூலம் அவளுடைய தனித்துவத்தை நிர்மாணம் செய்து கொண்டு கதையம்சத்தை வளர்த்துச் செல்கிறார் நாவலாசிரியை.

அகம்மது ஷா அரச குடும்பத்தைச் சேர்ந்தவன் ஆனாலும் சரி அவனுடைய கழுத்தில் மாலை போடுவதற்கு சம்மதிக்காததால் பாமினிகளால் அவள் அடக்க வேண்டிய பெண்ணாகிறாள். விஜயநகரத்தின் மீது ஆதிக்கத்தையும் சாரதாவின் மீது அதிகாரத்தையும் சம்பாதிப்பதே லட்சியமாக நடந்த பாமினி சுல்தான்களின் அரசாட்சி அட்டகாசங்களை விஜயநகர அரசர்கள், ஆண் வேடத்தில் அவர்களின் படையோடு சேர்ந்து முக்கிய பங்கு வகித்த சாரதா, அவளுடைய தோழி ஜானகி, அவளுடைய காதலன் சிம்ஹாத்ரி ஆகியோர் எதிர்த்து நின்று சாதித்த விஜயமே சாரதா விஜயம் நாவல்.

காவேரிபாய் எழுதிய நாவல் பரிணாமம்

அதன் பிறகு சொல்லும்படியான நாவல் ஹவாயி காவேரிபாய் எழுதிய பரிணாமம். மாலபல்லி எழுதிய நாவல் எவ்விதம் தெலுங்கு நாவல் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சிக்குத் தொடக்கமோ, பெண்களின் நாவல் இலக்கிய வரலாற்றின் மலர்ச்சிக்கு பரிணாமம் நாவல் அதேவிதமாக மிகச் சிறந்த ஆரம்பம்.

பரிணாமம் நாவல் 1940ல் ஆந்திர பத்திரிக்கை என்ற வார பத்திரிக்கையில் தொடராகப் பிரசுரமானது. நாவலின் ஆரம்ப இதழ்கள் கிடைக்கவில்லை. 1940 செப்டம்பர் 18ம் தேதி வெளிவந்த இதழில் 43 வது அத்தியாயத்தில் இருந்து 1940 நவம்பர் இதழில் நாவலின் முடிவு வரை உள்ள பாகம் மட்டுமே கிடைக்கிறது. முழுமையும் கற்பனைப் பாத்திரங்களைக் கொண்ட அற்புதமான சமூக நாவல் என்று பத்திரிக்கை இதைப்பற்றி குறிப்பிட்டுள்ளது. நாவல் மொத்தமும் 58 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலின் கதாநாயகி லலிதா. அவள் தந்தை ஜனார்த்தனம். தாய் கமலம்மா. இரு அண்ணன்கள். பெரியவன் டாக்டர் அர்ஜுனன். அவனுடைய மனைவி சரோஜினி. சின்ன அண்ணன் சங்கரம். காங்கிரஸில் பணிபுரிகிறான். அவன் காதலித்து திருமணம் செய்ய முடியாமல் போன பெண் செல்லாயி. அவளும் காங்கிரஸில் பணி புரிந்தாள். லலிதாவின் தோழன் ராஜரத்தினம். லலிதா ஒரு விதவை. பெற்றோரையும் அண்ணன்களையும் அண்டி வாழ்வதில் அவளுக்கு விருப்பமில்லை. சுதந்திரமாக வாழ்வதை விரும்புவது அவளுடைய வாழ்க்கையின் இயல்பு. உத்தியோகம் செய்ய வேண்டும் என்றும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். தன்மீதுள்ள அண்ணன்களின் ஆதிக்கத்தை நிராகரித்து தான் எதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை தனக்கே இருக்க வேண்டும் என்பது அவளுடைய சிந்தனையின் இயல்பு. என் வாழ்க்கை என்ன, எத்தனை காலம்தான் இவனுக்கு டைப்பிஸ்ட்டாகவும், அவனுக்கு காம்பவுண்டராகவும், பேபிக்கு ஆயாவாகவும் என் வாழ்க்கை? ஐ காண்ட் ஸ்டாண்ட் இட் எனிமோர். ஐ மஸ்ட் பி ஃப்ரீ – என்று நினைத்து மருத்துவ படிப்பை பூர்த்தி செய்து டாக்டராக ப்ராக்டிசை தொடங்குகிறாள். அந்த நேரத்தில் சிறு வயதிலிருந்து நண்பனாக இருந்த ராஜரத்தினத்தைப் பார்க்கிறாள். அவனுடைய அக்கா விக்டோரியாவுக்கு மருத்துவம் செய்வதற்காக அவர்களின் வீட்டிற்கு செல்கிறாள். அவர்களின் தோழமையால் பைபிள் படிக்க விரும்புகிறாள். சிறிது சிறிதாக ராஜரத்தினம் மீது காதல் வளர்கிறது. திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள்.

லலிதா ராஜரத்தினத்தை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளாள் என்று அறிந்து அவன் தலித் கிறிஸ்தவன் என்று வீட்டில் அனைவரும் வேதனைப்படுகிறார்கள். அந்த விஷயத்தில் அவள் அவர்களோடு விவாதத்தில் ஈடுபடுகிறாள். ஒரு ஹ்யூமன் பீயிங் செய்யக்கூடியது எதையும் தான் செய்யவில்லை. பிராமின் விடோவுக்கு கிடைக்கும் இன்ஹ்யூமன் ட்ரீட்மென்ட்டை என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்று அழுத்திக் கூறுகிறாள். நான் சுதந்திரமானவள். நான் லவ் செய்த மேனை நீங்கள் இவ்வாறு அவமதிக்கக் கூடாது என்று அண்ணாவின் பேச்சுக்க்கு மறுப்பு தெரிவிக்கிறாள். (இதிலுள்ள ஆங்கிலச் சொற்கள் அந்த கட்டுரையில் உள்ளபடி)

நாவலின் கதையம்சத்தை தேசிய சீர்திருத்த போராட்டத்தோடும் சுதந்திர போராட்டத்தோடும் முடி போட்டு நடத்துவதில் காவேரிபாயின் அறிவுத்திறன் வெளிப்படுகிறது. சீர்திருத்த போராட்டத்தில் ஒரு பாகமாக ‘போகம் மேளா’ (நிலச்சுவான்தார் வீட்டுத் திருமணங்களில் நடக்கும் விலைமாதர் திருவிழா) போன்ற பிரச்சனைகள் பற்றி லலிதா சிந்திக்கிறாள். கன்யாசுல்கம் (பிள்ளை வீட்டார் கொடுக்கும் எதிர்ஜாமீன்) நாடகத்தைப் படிக்கிறாள். அந்த நாடகத்தின் காட்சிகளை நேராகவும் பார்க்கிறாள். குரஜாட அப்பாராவு அந்த நாடகத்தை தன்னைப் போன்றவர்களை ஏளனம் செய்வதற்கு எழுதினாரா என்று வருத்தப்படுகிறாள். ஒரு விதவைப் பெண்ணாக அவள் அதனை எவ்வாறு புரிந்து கொண்டுள்ளாள் என்பது முக்கியமான அம்சம். அந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும்போது பெண்ணீய இலக்கிய விமர்சனங்களில் கைனோக்ரிடிசிஸத்திற்கான (Gynocriticism) தொடக்கத்தை காவேரிபாய் மறைமுகமாக இந்த நாவலில் செய்துள்ளார் என்றே கூற வேண்டும். இதனை பிரத்தியேகமாக ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டியுள்ளது.

பரிணாமம் என்ற நாவலில் தண்டி யாத்திரை பற்றிய குறிப்பு வருகிறது. லலிதாவின் சகோதரன் சங்கரம் அந்த சத்தியாகிரக போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்குச் செல்கிறான்.

இந்த நாவலின் இறுதி அத்தியாயத்தின் தொடக்கம் மகாத்மா காந்தியின் பிராயோபவேசம்/ சாகும்வரை உண்ணாவிரதம் குறித்தும் வட்டமேஜை மாநாடு முடிந்தது என்பது குறித்தும் பேசுகிறது. வட்டமேசை மாநாடு நடந்தது 1932ல். தலித் போராட்டத்தில் இது முக்கியமான கட்டம். தலித் வர்க்கத்தினருக்கு பிரத்தியேக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது வட்டமேசை மாநாட்டில்தான். காந்திஜி அதனை எதிர்த்தார். தலித் வர்க்கத்தினருக்கு பிரத்யேக தொகுதிகள் ஒதுக்கும் திட்டம் தொடர்பான ஆலோசனையை பிரிட்டிஷ் அரசாங்கம் விட்டு விட வேண்டும் என்றும் அது குறித்த அறிவிப்பை வெளியிடும் வரை தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் காந்திஜி அறிவித்தது அப்போதுதான். தலித் வர்க்கங்களுக்கு பிரத்தியேக தொகுதிகளை ஒதுக்கினால், ஹிந்து சமுதாயம் துண்டு துண்டாகிவிடும் என்பது அவருடைய வருத்தம். தீண்டாமையை ஒழிக்க வேண்டும். அது குறித்து போராட வேண்டும். அதனை நீக்க வேண்டும். ஆனால் ஹரிஜனங்கள் ஹிந்து சமுதாயத்தில் ஒரு பாகமாகவே இருக்க வேண்டும் என்பது அவருடைய உத்தேசம். அதற்குத் தேவையான செயல்களான ஆலயப் பிரவேசம், பள்ளிகளில் பிரவேசம், கிணற்று நீரை இழுத்துக் கொள்ள வாய்ப்பு முதலான சீர்திருத்தங்களுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். அம்பேத்கரும் இது குறித்து விமர்சனம் செய்தார். ஆனால் நாவலில் காந்திஜியின் வழிமுறை மீது மட்டுமே ஆர்வம் தென்படுகிறது. காந்தியை ஆதரிசமாக நம்பி ஆலோசிக்கும் சங்கரம் இந்த நாவலில் இருக்கிறான். ஆனால் அம்பேத்கரின் ஆலோசனைகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் இல்லை.

வட்டமேசை மாநாடு நடந்து தலித் இனத்திற்கு சமூக, அரசியல் உரிமைகள் மீது சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்த சம காலத்தில் சங்கரம் விடுதலைப் போராட்டத்தில் செயல்வீரனாக தன் ஆதரிசத்திற்கும் செயலுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறித்து ஆத்ம விசாரணையில் ஈடுபட்டதாக இந்த நாவலின் கதையம்சத்தை காவேரிபாய் கொண்டு சென்றுள்ளார்.

மகாத்மாவின் தீண்டாமை ஒழிப்பிற்குத் தான் அனுகூலமாக நடக்க முடியாமல் இருப்பது எதனால் என்று கேள்வி கேட்டுக்கொள்கிறான் சங்கரம். தீண்டாமையை ஒழிக்காவிட்டால் தான் சுதந்திரப் போராட்டத்தில் எதனால் ஈடுபடுகிறேன் என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறான். பிற ஆண் பெண்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை கடவுள் விதவைகளுக்கு அளிக்கவில்லையா என்ற கேள்வியோடு லலிதாவிடம் தன் குடும்பத்தினர் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி ஆலோசனையில் ஆழ்கிறான். ஹரிஜனர்களின் துயங்களை நீங்குவதற்குப் பிறந்த தேசியவாதிகள், பிராமணர்கள், மற்றும் பிற உயர் குலத்தவர்கள் ஹரிஜனர்களைத் திருமணம் செய்வதற்கு தயாராகும்போது தன்னால் அதனை ஆமோதிக்க முடியாமல் போவது ஏன் என்ற விமர்சனத்தை சங்கரத்தின் ஆலோசனையின் மூலம் முக்கியமாக கொண்டு வருகிறார் காவேரிபாய்.

இவ்விதமாக சங்கரத்தின் ஆத்ம பரிசோதனை, ஒரு தனிமனிதனாக தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்வதற்கு உபயோகப்படுவதோடு, சுதந்திர போராட்டத்தின் முழுமையான வழிமுறை மீதும், தேசியவாதிகளின் நடத்தையின் மீதும் நடக்கும் விமர்சனமாகவும், சீர்திருத்தப்பட வேண்டிய போராட்டக் கண்ணோட்டத்தையும் நடைமுறையையும் பற்றிய எச்சரிக்கையாகவும் கூட வெளிப்படுகிறது

லலிதா கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிக்கொண்டு ராஜரத்தினத்தை திருமணம் செய்வதற்கு தீர்மானம் எடுத்துக் கொண்டதால் குடும்பம் மொத்தமும் அவளைத் தள்ளி வைத்து விட்டது. சுதந்திரப் போராட்ட செயல்வீரனாக இருக்கவேண்டிய பொறுப்பை உணர்ந்த சங்கரம் தனிமையில் ஆழ்ந்த லலிதாவின் பக்கம் சென்று, ராஜரத்தினத்தோடு கூட லலிதாவையும் ஏற்கத் தொடங்கினான்.

இந்த சம்பவத்தின் மூலம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுபவர் தலித் பிரச்சினைகள் மற்றும் தலித்துகளோடு சம்பந்தங்கள் ஆகியவற்றை புரிந்து கொள்ள வேண்டிய வழிமுறையை காவேரிபாய் ஒரு முற்போக்கான, நடைமுறைக்கு ஏற்ற, தர்க்கத்தோடு கூடிய, உண்மையான கண்ணோட்டத்தோடு குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது.

குலம் பிரச்சனை பற்றி காவேரிபாய் சிறிது அம்பேத்காரின் சிந்தனை பற்றிய புரிதலோடும் ஆத்ம கௌரவ சைதன்ய கோணத்தில் இருந்தும் சிந்திப்பதாகத் தெரிகிறது. பிராமணத்துவத்தின் உயர்வை இந்த காலத்தில் யாரும் அங்கீகரிக்காவிட்டாலும் சிலர் இன்னும் அதை வெளிப்படுத்தும் நிலையிலேயே இருப்பது பற்றி காவேரிபாய் இந்த நாவலின் கதையம்சத்தில் விமர்சனமாக குறித்துள்ளார். சூத்திரப் பெண்களின் கையால் சமையல் செய்து கொள்வதற்குத் தடை ஏதுமில்லாதவர்கள் சூத்திரர்களின் சேவைகளை ஏற்று சௌகரியமாக வாழ்பவர்கள் பிராமணர்களாக தாம் உயர்ந்த குலம் என்று கூறிக்கொள்வது நகைப்பிற்கிடமாக காவேரிபாய்க்குத் தோன்றுகிறது. இத்தகு சிந்தனை மூலம் குலங்களைப் பற்றி குறைவாகப் பேசுபவர்கள் குறித்து தலித்துகளிடம் வளர்ந்து வரும் நியாயமான எதிர்ப்பை அவர் இந்த நாவலின் கதையம்சத்தில் ஒரு பகுதியாக்கியுள்ளார்.

ஒரு டீச்சரம்மா கணக்குப் பாடம் சரியாக எழுதவில்லை என்று ஒரு பெண்ணைத் திட்டும்போது, “புல்லுக்கட்டை தலையில் வைத்துக்கொண்டு விற்க வேண்டியவர்களை பள்ளிக்கு அனுப்பினால் படிப்பு ஏறுமா?” என்று ஏளனமாகப் பேசுகிறாள். அந்த பேச்சுக்கு வருந்திய அந்த பெண் தன் வருத்தத்தை எமிலி என்ற தன் தோழியிடம் சொல்கிறாள். அந்தப் பெண்ணிடம் எமிலி, “தலையை மொட்டையடித்துக் கொண்டு வீட்டு வேலை செய்துகொண்டு பாத்திரம் தேய்க்க வேண்டியவர்களுக்கு படிப்பும் ஷோக்கும் வந்தால் புல் வெட்டி தலையில் வைத்துக் கொள்பவர்களுக்கு மட்டும் வராதா?” என்று சிரித்து டீச்சரம்மாவுக்கு பதில் கூறி இருக்க வேண்டியது என்று கூறுகிறாள். அந்த டீச்சரம்மா ஒரு பிராமண விதவை என்பது எமிலிக்குத் தெரியும். உழைக்கும் வர்க்கத்தையும் தலித்துகளையும் அவமதிக்கும் பேச்சு பேசிய அவள் மீது தன் கோபத்தை இவ்விதமாக காட்டிக் கொள்கிறாள்.

இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. பெண்கள் அனைவரின் பிரச்சனையும் சமமானது அல்ல. பிராமண வர்க்கத்தில் விதவை பெண்ணாக அந்த டீச்சரம்மா தன் மீது காட்டப்பட்ட வேறுபாட்டை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கலாம். அதனை ஏதோ ஒரு விதத்தில் தாண்டி வந்து படித்து வேலை பார்ப்பவளாக இருக்கலாம். ஆனால் அவளுக்கு உழைக்கும் வர்க்கம் பற்றியும் தலித்துகள் பற்றியும் எதுவும் தெரியவில்லை. சம்பிரதாய கலாச்சாரத்திலிருந்து உழைப்பை குறைத்துப் பார்க்கும் குணம் மட்டும் இயல்பாக இருக்கிறது. அதன் காரணமாகத்தான் தலித் இன மாணவியிடம் தயையுடனோ நட்புடனோ அவளால் நடந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் உயர் ஜாதி, தலித் இனப் பெண்களிடையே வெறுப்பாக இது வெளிப்பட்டது.

பெண்ணியம், தலித் பெண்களின் பிரச்சனைகளைத் தொடவில்லை என்று 2000 ஆண்டில் எந்த புரிதலோடும் அனுபவத்தோடும் தலித் பெண்கள் பேசத் தொடங்கினார்களோ அதற்கு மூலம், பரிணாமம் நாவலில் விதையாக காணப்படுகிறது. பெண்களின் பிரச்சனை, சுதந்திரப் போராட்டப் பிரச்சனை, குல பிரச்சனை இவற்றின் இடையில் உள்ள பரஸ்பர உறவையும் விரோதத்தையும் அடையாளம் கண்டு 1940 லேயே நாவலின் கதை அம்சமாக அழகாகத் தொடுத்து எழுதியுள்ளதைப் பார்க்கும்போது காவேரிபாய் காலத்தை விட முன்னேறிய எழுத்தாளராகத் தெரிகிறார்.

பரிணாமம் நாவலுக்கு ஒரு தனித்துவம் உள்ளது. வேறுபட்ட இருப்பு கொண்ட அறிவுத் தளங்களின் இடையில் மோதல், விவாதம், உரையாடல் போன்றவை நிகழும் நிகழ்கால வரலாற்று சந்தர்ப்பத்தில், வேறுபட்ட இருப்புகளைச் சேர்ந்த பெண்களிடையே சினேகம் வளர்வதற்கும், தோளோடு தோள் சேர்த்து சுதந்திரத்திற்காக நடப்பதற்கும் தாண்டுவதற்குமான அடிகள் எத்தனை என்று புரிந்து கொள்வதற்கும் இந்த நாவல் அழகாக உபயோகப்படுகிறது. இதனைப் பெற்று பிரசுரிப்பது தற்போது நடக்க வேண்டிய ஒரு பணி.

இரு தோழிகள் எழுதிய நாவல் ப்ரதிமாதேவி

சுதந்திரத்திற்கு முன்பு நாவல் எழுத்தில் இணை பெண் எழுத்தாளர்களின் சம்பிரதாயத்தை தொடங்கியவர் இந்திராவும் பாரதி தேவியும். அயிதம் இந்திரா, பாரதி தேவி என்ற பெயரோடு ஜோடியாக கவிதைகள் இயற்றினார்கள். நெல்லூர் மண்டலத்தில் உள்ள கூடுரைச் சேர்ந்தவர்கள் இவர்கள். 1946 ல் அவர்கள் பிரதிமாதேவி என்ற நாவல் எழுதினார்கள். அதற்கு முன்பே அந்த ஜோடிக் கவிஞர்கள் ஜனனீ சதகம், ஸ்ரீஅன்னபூர்ணா சுபாஷித ரத்னாவளி பத்ய காவியங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்கள். தந்தை அயிதம் காசிவரப்பிரசாதராயர் அளித்த ஊக்கம் அவர்களுக்குத் துணையாக இருந்தது. பிரதிமாதேவி ஒரு வரலாற்று நாவல். இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியாவில் பிரசுரமான அகமதுஷா பரிணயம் என்ற வியாசத்தை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் இந்த நாவலை எழுதினார்கள்.

ஜஹநாராபேகம் என்ற கதாபாத்திரம் மட்டுமே கற்பனை என்றும், வாதோஜி சகோதரர்கள், உகோஜி, ராணிபாய், லாலாபாய், சத்ரு சூல்ஜி போன்றோர் வரலாற்று மனிதர்களே என்றும் சத்ருசூல்ஜி மரணம் போன்றவை வரலாற்று சம்பவங்களே என்றும் முன்னுரையில் கூறியுள்ளார்கள்.

நாங்கள் சிறுமிகள் என்பதாலும் புதிதாக இலக்கிய படைப்பில் பிரவேசித்து உள்ளோம் என்பதாலும் முதிர்ந்த அறிவு கொண்ட உறவினரான ஆந்திரர்கள் எங்களின் இந்த சரஸ்வதி சேவையை மன்னித்து உற்சாகப்படுத்தி ஆசி கூறுங்கள் என்று முன்னுரையில் வாசகர்களிடம் பிரார்த்தித்துள்ளார்கள்.

இந்த நாவலுக்கு 1410 காலத்தில் குஜராத்தினை ஆண்ட அகம்மது ஷாவின் கொடுமைகளின் மீது தேசிய சமஸ்தானங்களின் ராஜ வம்சங்கள் காட்டிய எதிர்ப்பும் பகை தீர்த்தலும் வரலாற்று கதைக்கரு. அகம்மது ஷாவின் படையெடுப்பிற்கு தேசங்கள், பிரதேசங்கள் மட்டுமல்ல அந்தந்த பிரதேசங்களின் அரச குலப் பெண்கள் கூட இரையானார்கள். அவ்வாறு கைதாகி கொண்டுவரப்பட்டு சிவரிகதனின் மனைவியாக ஆன பிரதிமாதேவி ஜஹநாரா பேகமாக நாவலில் பெரும் மானசீக போராட்டத்தோடு நமக்கு அறிமுகமாகிறாள்.

ராஜ்ஜியங்களைப் போலவும், செல்வங்களைப் போலவும் பெண்களும் சுய சிந்தனையோடும், வெட்கம் மானத்தோடும் நிமித்தமில்லாமல் வெற்றி பெற்றவர்களின் சொத்தாக ஆகுகையில் தோற்றவர்களின் பிரதிநிதிகளாக அந்தப் பெண்கள் எதிர்கொள்ளும் இம்சைகளையும் ஆத்மகௌரவ சைதன்யத்தோடு செய்யும் போராட்டங்களையும் முக்கியமாக காட்டுவதற்காகவே இந்திராவும் பாரதி தேவியும் சேர்ந்து இந்த நாவலை எழுதியுள்ளார்கள்.

ஜஹநாரா என்ற கதாபாத்திரத்தை கற்பனை செய்து அவளை மையப் புள்ளியாக்கியுள்ளனர் நாவலாசிரியைகள். சொந்த தேசத்தின் மீது கொண்ட தேசபக்தியின் முன்னால், மனித நேயத்தின் முன்னால், பொதுக் குற்றங்களின் முன்னால், மனைவியாக கடைப்பிடிக்க வேண்டிய உரிமையையும் வினயத்தையும் துச்சமாகக் கருதித் தூக்கியெறியலாம் என்று தன் நடத்தையால் ப்ரதிமாதேவி நிரூபித்ததாக இந்த நாவலில் எழுதியுள்ளனர் அயிதம் இந்திரா தேவியும், பாரதி தேவியும்.

சுதந்திரப் போராட்டத்தின் சைதன்ய சக்தி இந்த நாவலுக்கு மூலம். பாரத தேசம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஐந்து மாதங்கள் முன்பு மார்ச் 1947ல் இந்த நாவல் பிரசுரமானது. சுதந்திர பாரதத்தை விரும்பி ஏந்திய தீவட்டியாக இந்த நாவலைக் குறிப்பிடலாம்.

இவ்விதமாக சுதந்திரத்திற்கு முன்பே இன்னும் எத்தனை பெண்கள் எத்தனை நாவல்கள் எழுதினார்களோ, எந்த சமூக வாழ்க்கை பரிணாமங்களை வியாக்கியானித்தார்களோ அவற்றையெல்லாம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தெலுங்கு நாவல் இலக்கிய வரலாற்றோடு சேர்த்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

தெலுங்கில் வாசிக்க: நெச்சேலி

Series Navigation<< ஆ. ராஜம்மா எழுதிய நாவல் சம்பகமாலினிமல்லாதி வசுந்தராதேவி எழுதிய நாவல் தஞ்சாவூர் பதனம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.