அந்துப் பூச்சி

கோட்டாறில் இருந்து வேப்பமூடு ஜங்ஷனுக்கு இடையேயான இந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தை அரை மணி நேரமாக இஞ்ச் இஞ்ச்சாக கடந்து இப்போது தான் சர்.சி.பி பூங்காவை வந்து சேர்ந்துள்ளேன். சாலை விரிவாக்கப் பணி வேறு ஒருபுறம் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. இருபது வருடங்களில் எவ்வளவு மாற்றங்கள்.  கோட்டாறு சந்தையை மையமாகக் கொண்டு உருவாகிய சிறிய ஊர் இன்று மாநகரமாக தன்னை விஸ்தரித்துக் கொண்டதில், பூங்காவின் முன்னால் அமர்ந்து கொண்டு பொடி முந்திரி வறுத்துக் கொண்டிருந்த பெண்கள், கவிழ்ந்த குடையில் கலர் கலர் கைக்குட்டைகளை ரொப்பிக் காத்திருக்கும் வியாபாரிகள், சட்டையில் பாச்சா உருண்டை, குஞ்சக் கொத்துகள், சிலேடு சரங்கள் என்று தொங்க விட்டபடி கலர் ரிப்பன்களை காற்றில் வீசி நிற்பவர்கள், பழுத்த கொய்யாக் கனிகளை அறுத்து உப்புமிளகுப் பொடி தூவிக் கொண்டிருக்கும் கிழவிகள் என யாவரும் மாயமாகிவிட்டனர். 

ஒருவகையில் இந்தப் பூங்கா என் தாத்தாவின் நினைவிடம். பார்க்கும்போதெல்லாம் அம்மாவின் கண்கள் நிறையும் இடம். அக்கம்பக்கத்துக்காரர்களிடம் அழுது கால்பிடித்து மூச்சுத் திணறல் கண்ட தாத்தாவை கோட்டாறு பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போட்டுக் கொண்டு வந்த டாக்சியில் நானும் இருந்தேன். இந்தப் பூங்காவின் முன் வைத்து வந்த ஒரு பெரிய இருமலில் அவரின் ஆவி அடங்கியது. 

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து விடுபட நடந்த எல்லைப் போராட்டக் கலவரத்தில் தாத்தாவிற்கு ஒரு கால் ஊனமாகிவிட்டது. அவர் என்றைக்காவது குடித்துவிட்டால் தெருவில் யாரும் தூங்க முடியாது. இரவு முழுவதும் உரக்கப் புலம்பியபடி இருப்பார். 

“பட்டந்தாணு…ஹார்..த்தூ..தாயிலி.. போலிசக்கொண்டு பன்னிரண்டு வாட்டி வெடி வைச்சான். துள்ளத் துடிக்க  எத்தூன மனுசர்க்கு வாய்க்க்கரி அள்ளிப் போட்டான்… கால்முட்டி தோக்கடி கொண்டு முறிஞ்சப்போலும்  கரைஞிலா.. செங்கொடி முறுக்கிப் பிடிச்சோண்டு நிந்நு…ஹாங்..நமக்கு பேரொந்தும்  வேண்டே.. பாவங்ஙள் கேரி வந்நா மதி”

விளையாடச் செல்லுகிற இடத்தில், “சுத்தி ஆட்க ஒறங்காண்டாமா.. ஓந்தாத்தன் சப்பக்காலருக்கு என்ன வேணுமாம்?” என்று  பயல்கள் கிண்டல் செய்யும் போது அவமானமாய் இருக்கும். 

ஓர் இரவு புலம்பிக் கொண்டிருத்தவரிடம் “ஓய் சப்பக்காலா, மிண்டாதக் கிடயும்” என்றேன். அடுப்படியில் நின்று கொண்டிருந்த அம்மா ஆவேசத்துடன் ஓடி வந்தாள். அவள் கையில் இருந்த தென்னம் பாளை முறிய முறிய அடி கிடைத்ததில் கதறி தெவங்கி உறங்கிப்போனேன்.  அந்நடு சாமத்தில் என் கை கால்களில் காயத்திருமேனி தைலம் தடவி அழுது கொண்டிருந்த தாத்தாவின் முகம் மங்கலாக நினைவிருக்கிறது.

ம்… எல்லாம் பழங்கதை. 

இன்னும் முப்பது நிமிடங்களில் மீட்டிங் என்கிற அறிவிப்புடன் கையில் கட்டியிருந்த ஆப்பிள் சிணுங்க ஹார்னை அலறவிட்டபடி முன்னகர்ந்தேன்.

கழிந்த சில நாட்களாகவே அலுவலகம் வருவதற்கே வெறுப்பாக உள்ளது. ஏதோ துக்க வீட்டில் நுழைவது போன்றதொரு உணர்வு. வடசேரியில் ஒரு பழைய பங்களாவில் வெறும் பத்து பேரைக் கொண்டு தொடங்கிய நிறுவனம் இன்று எழுநூறு பேருடன் உலகின் முன்னணி நிறுவனம் ஒன்றின் கிளையாக வளர்ந்து நிற்கின்றது. எங்களை அவர்களுக்கு விற்ற தொகைக்கு எங்கள் பழைய முதலாளிகளின் ஏழு தலைமுறைகள் உட்கார்ந்த இடத்தில் இருந்து காலாட்டிக் கொண்டே ராஜா போல வாழலாம் என்று வெளியில் பேசிக்கொண்டனர். பெருநகரப் பணியாளர்களுக்கு நிகரான திறமை, சல்லிசான செலவீனம், தொடர் வளர்ச்சி அந்த வகையில் வாங்கியவர்களுக்கு லாப முதலீடு.

ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கிளையாகிப் போனதில் எங்கள் அனைவருக்கும் பெருமை. புதிய சலுகைகள், பணியாளர் நலத்திட்டங்கள், சிறப்பு பயிற்சி வகுப்புகள் என தொடர்ந்து உற்சாகப்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தோம். எங்கள் முன்னாள் நிறுவனத்தில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த பன்னாட்டு சேவைப் பிரிவினை சுருக்கி, மென்பொருள் தயாரிப்புப் பிரிவினை விரிவுபடுத்தும் வகையில் தன்மயமாக்கும் (Automation) சூழலுக்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருந்தோம். 

அடுத்த கட்ட வளர்ச்சி வேண்டுமெனில் பெருநகருக்குச் செல்லவேண்டும் அல்லது மேல் நிலையில் உள்ளவர்கள் நகரவேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. வாய்ப்புகள் விரியத் தொடங்கியிருக்கின்றன. பெருநகரங்களில் செயல்படும் நிறுவனங்களில் இருந்து எனக்கு நேர்காணலுக்கான அழைப்புகள் வராமல் இல்லை.  உள்ளுக்குள் ஒரு வைராக்கியம். வக்கத்த குடும்பம் என்று சொல்லடி தந்த உறவுகள் கண்பட வாழ்தல் தருகிற போதை. 

வீடெல்லாம் கூட போட்டுவிட்டேன். உள்ளே வைப்பதற்கு தாத்தாவின் புகைப்படம் ஒன்று கூட இல்லாமல் போனதுதான் குறை. ஆனால் அம்மாவோ விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டிற்குள் நுழையும் அந்துப் பூச்சிகளை தன் தகப்பனாக எண்ணி மனதிற்குள் வணங்குவது மூலம் நிறைவுற்றுக் கொள்கிறாள்.

இன்று துறை மேலாளராக உயர்ந்திருக்கிறேன். அதற்காக நான் கடன்பட்டிருப்பது எனக்கு கிடைத்த குழுவிற்கும், வழிகாட்டியாக இருந்து வரும் அபிக்கும் தான்.  அபி எங்கள் கிளை நிறுவனத்திற்கு இயக்குனராக பொறுப்பேற்றிருப்பவர். சேஞ்ச் மானேஜ்மென்டில் வித்தகர் என்று தான் சொல்ல வேண்டும். நாகர்கோவிலுக்கு புதியவராக வந்தவரை கன்னியாகுமரி பீச், மாத்தூர் தொட்டிப் பாலம், திற்பரப்பு அருவி, காளிகேசம் என்று கூட்டிக் கொண்டு சுற்றியதில் எங்களுக்குள் நல்ல நட்பு. இப்போதெல்லாம் அவருடன் அதிக நேரம் செலவிடுகிறேன். பெரும் பணம் செலவழித்து சிறந்த பல்கலைக் கழகங்கள் வழியாக கற்றுக் கொள்ளப் படவேண்டிய மேலாண்மை நுணுக்கங்களை அவருடன் நேரம் செலவிடுவது மூலமாக உள்வாங்கிக்கொள்ள பிரயாசித்துக் கொண்டிருக்கிறேன். அவரையும் கடந்து செல்ல வேண்டும் என்பதே மனதிற்குள் வகுத்துள்ள இலக்கு. 

என்னோடு வேலைக்கு சேர்ந்தவர்கள் கூட என் குழுவில் உண்டு. “அபிக்கு குண்டி குடுத்தே மேல வந்துட்டாம்ல” என்று முதுகிற்குப் பின்னால் கேட்ட நாழியோடு அவர்களோடு இருந்த அணுக்கம் அறுந்து என் குழுவின் வெறும் வளர்ச்சி அலகுகளாக மாறி விட்டனர். சென்றவாரம் வேலையை விட்டு விலகிய என் பால்யகால சிநேகிதன் சபீர் “கொஞ்சம் மனசாட்சியோடு நடந்துக்க டே” என்றான். தண்ணீர்ப்பூச்சிகள் மத்தியில் இருந்து தட்டானான கதையாகிவிட்டது என் நிலை.  

எல்லாம் கழிந்த ரிவியூ மீட்டிங்கில் தான் தொடங்கியது. என் ரிப்போர்ட்டை ஆராய்ந்த அபி,

“அருண் உங்களின் PPT டெக் பிரமாதமாக இருந்தது. உங்கள் குழுவிற்கு நீங்கள் பரிந்துரை செய்திருக்கும் சம்பள உயர்வினையும் அதற்கு கொடுத்துள்ள நியாயங்களையும் ஆமோதிக்கிறேன். கொடுத்து விடலாம்.”

“நன்றி அபி”

“இதோ, இந்த பட்டியலில் இருக்கும் உங்கள் குழுவினர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”  என்று மானிட்டரை என் பக்கம் திருப்பினார்.    

“பெரும்பாலானவர்கள் நிறுவனத்தின் ஆரம்ப கால வளர்ச்சியில் இருந்தே துணை நிற்பவர்கள் அபி” என்று உற்சாகத்துடன் கூறினேன். 

“நல்லது. இந்த நாற்பது பேரையும் வேலையில் இருந்து அனுப்பிவிடுங்கள்” 

“ஏன் அபி.. கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடித்து விடக்கூடியவர்கள் தானே அவர்கள்.”

“மிக சரி, கொடுக்கும் வேலையை செய்து முடிக்கும் புதியவர்களின் இலக்கை கணக்கில் கொள்ளும் போது நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சியில் தற்போதைய செலவீனங்களுடன் இவர்கள் சோபிப்பது ஐயமே. அவர்கள் தங்கள் பங்களிப்பின் உச்சத்தை ஏற்கனவே தொட்டு விட்டனர், தேக்க நிலையிலுள்ள இவர்கள் வீழ்ச்சியுறவே சாத்தியமிருக்கிறது.”  

“ஆனால் அவர்கள் அனைவரும் நம் நிறுவனத்துடன் உளப்பூர்வமான பிணைப்புள்ளவர்கள். நாம் ஏன் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க கூடாது அபி?” 

“நேர விரயம்”

அவர்கள் ஒவ்வொருவருடன் கழித்த நல்ல பொழுதுகளும் அவர்களின் சொந்தவாழ்க்கைப் பொறுப்புகளும் கண் முன் வந்து நிற்கவே குமையத் துவங்கினேன்.   

என் மனதைப் படித்தவராய் “லிஸன், மாத இறுதிக்குள் இவர்களை அனுப்பியாக வேண்டும்” என்றார்.    

மீட்டிங்கிற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கின்றன. காலையில் ஒன்றும் சாப்பிடாமல் வந்தது வயிறு வேறு கொழுவிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. காபி மெஷினில் இருந்து ஒரு கோப்பையை நிரப்பி எடுத்துக்கொண்டு ஹெச்.ஆரை (Human Resources) தயாராக இருக்கும் படி சொன்னேன். முப்பது பேர்களையும் வெற்றிகரமாக ராஜினாமா செய்ய வைத்திருந்தாலும் உணர்ச்சி வசப்படக்கூடிய சிலரை நேரிட ஹெச்.ஆர் என் உதவிகோரவே ஒத்துழைக்க வேண்டியதாயிற்று. ஒரு உயிருள்ள கொலைக்கருவியைப் போன்று அழுகையையும், மன்றாட்டுகளையும், கேவல்களையும், மிரட்டல்களையும் எதிர் கொண்டபடி இருக்கிறேன்.

வேலைக்குப் புறப்படும் நேரத்தில்  அம்மாவிடம் வேறு நன்றாக கோபப்பட்டு விட்டேன். “ராத்திரியும் ஒன்னும் திங்கல, இப்பவும் ஒன்னும் வேண்டாம்னா எப்புடி மக்ளே..” என்றவளிடம் “ஆமா, நான் பட்டினியே இருந்ததில்ல பாரு” என்று கத்திவிட்டு அவசரமாக காரை எடுத்து கொண்டு வந்துவிட்டேன். பாவம் அவளின் கடந்த கால இயலாமையை பரிகாசிப்பது போன்று ஆகிவிட்டது. பிறகு நான் என்ன தான் செய்வது? உணர்ச்சிகளைக் கொட்ட எனக்கும் ஒரு வடிகால் வேண்டும் இல்லையா.

சந்திப்பறைக்குள் நுழைந்து மொபைல் போனை மேஜையில் வைத்தேன். ஹவுஸ் கீப்பிங் பணியாளரை அழைத்து இரண்டு தண்ணீர் போத்தலும் டிஸ்ஸு பேப்பர் பாக்ஸையும் எடுத்து வரச் சொன்னேன். எதிரில் கிடந்த இரண்டு நாற்காலிகளில் ஒன்றை மேசையின் வலது ஓரத்திற்கு நகர்த்தினேன். 

ஒரு சந்திப்பில் காரியம் சாதிக்க திறமையுடன் உளவியலுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. இந்த சந்திப்பு முடியும் வரை கோமதியின் நாடி என் கையில் இருக்க வேண்டும். அதற்கான ஒரு சிறிய ஏற்பாடு.

சில நிமிடங்களிலேயே இருவரும் உள் நுழைந்தனர். கோமதியை எனது வலப்பக்க இருக்கையில் அமர கைகாட்டிவிட்டு எதிரில் கிடந்த நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டாள் எச்.ஆர். கோமதியின் மனதில் இருக்கும் கடைசி நம்பிக்கையை உடைக்கும் நாசூக்கில் தான் இச்சந்திப்பின் வெற்றியே இருக்கிறது.

“சொல்லுங்க கோமதி” என்றதும் கண்ணீர் பொங்க கொட்டித் தீர்க்க ஆரம்பித்தாள்.  

“அருண்..நாம ஒன்றாத் தான வேலைப் பார்த்தோம். நான் எப்புடி வேல செய்வேன்னு தெரியும்ல. நீ டீம் லீடரா இருந்தப்ப உன் கையால எத்தனை வாட்டி Pat on the back award வாங்கிருப்பேன். இப்போ ப்ராஜெக்ட் இல்ல, பெர்பார்மன்ஸ் பத்தலைன்னா என்ன செய்யுறது?”

உதட்டிற்குள் முன்பற்களை இறுகக் கடித்துப் பிடித்துக் கொண்டு சலனமற்ற முகத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

“என் வீட்டுச் சூழல் தெரியும்ல. இந்த வேலைக்காகத் தான் என் கல்யாணமே நடந்துச்சு. இப்போ, நான் போய் வேல இல்லனு எப்புடி போய் நிக்கது”  

மேசையில் இருந்த டிஸ்ஸு பேப்பர் பாக்ஸை அவள் பக்கம் நகர்த்தி. கண்ணாடிக் குவளையின் மூடியை விலக்கி  தண்ணீர் நிரப்பினேன். 

“புதுசா வேலைக்கு சேர்ந்தவங்க எல்லாம் இருக்காங்க… நான் மட்டும் என்ன?” என்று விக்கத் துவங்கியவள் முகத்தை அழுந்தத் துடைத்தபடியிருந்தாள்.

அழுது முடிக்கும் வரை பொறுமை காத்தேன். அமைதியான அவ்வறையில் என்   தலைக்கு மேல் இருந்த மின்விளக்கில்   டங்.. டங் என்று பூச்சியெதோ மோதும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

சிறுது நேர மௌனத்திற்குப் பிறகு “ஸாரி, ரெஸ்ட் ரூம் போய் வருகிறேன்” என்றபடி வெளியேறினாள்.

“நேற்றும் ஒரே அழுகை, நான் சாகத்தான் செய்யணும்னு என்னவெல்லாமோ சொல்லிட்டு இருந்தாங்க.” 

“ஹ்ம்ம்…எனிவே இன்றைக்கு கிளோஸ் ஆகணும், லெட்ஸ் ஸீ”

சில கண நேர அமைதிக்குப் பிறகு, செய்வதறியாது மொபைலினை எடுத்து முன்பக்க கேமராவை ஆன் செய்தேன். சவக்களையில் இருந்த முகத்தில் கருவிழிகளுக்குக் கீழ் மட்டும் மென் நீர்த்திரை போன்று தெரிந்தது. என்னை நானே சபித்துக் கொண்டேன்.

தலைக்கு மேலே மீண்டும் டங்…டங்.. என்ற சத்தம். அந்துப் பூச்சி.. கருத்த சிறகுகளில் வெளுத்த பெருவிழிகளுடன் மெதுவாக மூச்சு வாங்குவது போல இறக்கைகளை திறந்து மூடிக் கொண்டிருந்தது. சட்டென்று அம்மாவின் நம்பிக்கையும் பழைய வாழ்க்கையின் நினைவுகளும் கணப்பொழுதில் நெஞ்சில் வெட்டிச் சென்றன. சாணி மெழுகிய எங்கள் வீடு, அண்டிக் கறைபடிந்த அம்மாவின் கைகளில் இருக்கும் பொள்ளல்கள். சன்னலின் வழி சூனியத்தை வெறித்துக் கிடந்த தாத்தாவின் பார்வை என எல்லாம்.  

“கோமதி..உன் சூழ்நிலை புரியாமல் இல்லை. என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். வேறு வழியில்லை, புரிந்துகொள்.”

“உடனே நீ வேலையை விட்டு நிற்பதாய் இருந்தால் உனக்கு மூன்று மாத கால ஊதியத்தையும் உடனடியாக கையில் தருவதற்கு ஏற்பாடு செய்கிறேன். அல்லது நீ இப்போது ராஜினாமா செய்துவிட்டு இரண்டு மாதகாலம் அலுவலகம் வந்துகொண்டே உன் வீட்டில் உள்ளவர்களை புரியவைக்க முயற்சி செய்.. அதிகபட்சம் என்னால் அவ்வளவே செய்ய முடியும்.”

“உன் முடிவு எதுவாக இருந்தாலும்..நான் காத்திருக்கிறேன்” என்று தீர்க்கமான குரலில் கூறினேன். 

மாலை ஆறு மணிக்கு அவளின் ராஜினாமா இ-மெயில் கிடைத்தது. 

நாற்பது பேரின் ராஜினாமா மற்றும் அவர்களின் கடைசி வேலை நாள் பற்றிய விவரங்களை அபிக்கு அனுப்பிவிட்டு சந்திப்பு அறைக்குள் நுழைந்தேன். 

“யூ ஆர் தி மேன்” என்று முதுகில் தட்டி ஒரு கோப்பைக் காபியுடன் என் முன்னால் அமர்ந்தார். 

“அந்த ட்ராமா குயினை எப்படி சமாளித்தாய்?”

“ஜீரணிக்க முடியவில்லை அபி. ரத்தமும் சதையுமாக இவ்வளவு காலம் உடன் பயணித்தவர்களை.. நெஞ்சில் ஈரம் இல்லாமல்.. ஜஸ்ட் லைக் தட் எப்படி நம்மால்..” கண்கள் கலங்கின.

“இன்னும் அதையே நினைத்துக் கொண்டிருக்கிறாயா அருண்? டேக் இட் ஈஸி.” 

அபி மெலிதாக புன்னகைத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது.

“அருண், ஒன்றைப் புரிந்து கொள். ஒரு நல்ல நிர்வாகி நிறுவனத்தின் முதலீட்டு இலக்கங்களையும் அதற்கான உற்பத்தி இலக்குகளையும் சீர்தூக்கிப் பார்த்தபடியே இருப்பான். அது இந்த மேஜையானாலும் சரி உணர்ச்சியும் உயிருமுள்ள மனிதனாக இருந்தாலும் சரி.” 

“உனக்குப் புரியும் மொழியிலேயே சொல்கிறேன்.  நீயும் நானும் இளைப்பாறிக் கொண்டிருப்பது ஒரு ராட்சத ராஜாளி சிறகுகளின் நிழலில். அதனால் தூக்கிவிழுங்க முடியாத வளர்ச்சியை தன்னளவில் அடைந்து கொண்டே இருக்கும் வரை தான் நமக்குப் பாதுகாப்பு.”

நீண்ட பெருமூச்சு உள்ளிருந்து வந்தது. எழுந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காபி மெஷினில் கோப்பையை வைத்தேன். மூலையில் பதுங்கியிருந்த அந்துப்பூச்சி படபடத்தது, மது குடித்த தாத்தாவின் சரீரத்தைப் போல. 

“மக்ளு நன்னாய்ட்டு படிக்கணம். படிச்சு நல்ல நிலையில் எத்தனம். எங்கிலே  ஈத்தாழ்ச்சகளொக்க மாற்றி எல்லாவர்க்கும் எல்லாம்..” தலைக்குள் கேட்டுக் கொண்டிருந்த எதிரொலி “வாட்ஸ் தட் அருண்?” என்கிற அபியின் குரலில் கரைந்தது.

“நத்திங்..just a fly…மாத்.”  

சன்னலை மெதுவாகத் திறந்து வைத்தேன். அந்துப்பூச்சி தட்டித் தடுமாறியெழுந்து வெளியே பறந்து விழுவதை காபியை உறிஞ்சியபடி பார்த்து நின்றேன். 

***

சார்பினோ டாலி/ நவம்பர் 2022

2 Replies to “அந்துப் பூச்சி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.