அதிரியன் நினைவுகள்-2

This entry is part 2 of 25 in the series அதிரியன் நினைவுகள்

பிரெஞ்சிலிருந்து தமிழாக்கம் நா. கிருஷ்ணா

அத்தியாயம் 2

பாலுறவைச் சிற்றின்பங்களில் ஒன்றெனக் கருதுவதில் ஒழுக்கக்கேடர்களும், ஒழுக்க சீலர்களும் உடன்படுகிறார்கள், புணர்ச்சி இன்பத்தினை, (மது) அருந்தக் கிடைக்கிற இன்பத்திற்கும், உண்டுப்பெறுகிற இன்பத்திற்கும் இடைபட்டதென்கிறார்கள். மனிதர்கள் காதலில்லாமல் உயிர் வாழமுடியுமென்பதால், புணர்ச்சி தரும் இன்பம் ஏனையவற்றைப்போல முக்கியம் வாய்ந்ததில்லையென்றும் அபிப்ராயப்படுகின்றார்கள். ‘உத்தமர்கள்’ என்று அழைத்துக்கொள்பவர்கள் எதைப்பற்றியும், எப்படி வேண்டுமானாலும் கருத்துரைப்பார்கள் என்பதை நான் எதிர்பார்ர்த்தேன். ஆனால் ஒழுக்கக்கேடர்கள் இவ்விஷயத்தில் தவறுவது எனக்கு வியப்பு. இருதரப்பினருக்குமே பாலுறவு எனும் மாயப்பிசாசிடம் அச்சம் இருக்கிறதென வைத்துக்கொள்வோம், இந்நிலையில் அவர்கள் செய்யக்கூடியது ஒன்றுதான் : எதிர்த்து நிற்பது அல்லது சரணடைந்துவிடுவது. பாலுறவு சுகம் ராட்சஸ பலம் கொண்டது. இந்நிலையில் அதனால் தாங்கள் வீழ்த்தப்படுவதாகவும் அதன் விசித்திரமான புதிர்தன்மையில் தங்களைத் தொலைப்பதாகவும் நினக்கிற மனிதர்கள் பாலுறவு இன்பத்தினை விலக்கிவைப்பதற்கு  தங்கள் இச்சைக்கு அணைபோடுகிறார்கள். காதல் உடல்சார்ந்த இன்பத்தோடு மட்டுமே தன்னை இணைத்துக் கொண்டு செயல்படுவதாகவே இருக்க்ட்டும், அதை நானும் நம்புவதற்குத் தயார் ஆனால் அதற்கு முன்பு காதலனொருவன்-கண்களில் நீர் மல்க பரவசத்துடன் இளம் மார்பொன்றைத் தழுவுவதைப்போல, தனக்குப் பிடித்த உணவிடம் ஒருவன் ஏன் நடந்துகொள்வதில்லை என்பதற்கு காரணம் வேண்டும். பிற விளையாட்டினைப் போலன்றி, நெஞ்சத்தைத் தடுமாறச்செய்யும் ஆற்றல் காதலுக்கு மட்டுமே உண்டு, தவிர சரீரத்தின் இச்சைக்கென்று தன்னையே அர்ப்பணித்தும் கொள்ளும் வீரனையும் அவ்விளையாட்டிலன்றி வேறு விளையாட்டுக்களில் காணவியலாது. குடிப்பதற்கு ஒருவன் தமது நற்புத்தியை துறக்கவேண்டும் என்பது கட்டாம் அல்ல மாறாக தனது அறிவைத் துறக்காது காதலின்பம் தேடும் மனிதன்,  அந்த அறிவின் கட்டளைக்கு கடைசிவரை கீழ்ப்படிந்து நடபானா என்றால் இல்லை. எதிலும் அபரிதம் அல்லது கட்டுபாட்டுடனிருக்கும் மனிதர்களுள் டையோஜெனெஸ்(Diogens)(17) விதிவிலக்கானவர், அவரிடத்தில் ஓரளவிற்கு நம்பும்படி எதிலும் நிதானமும், குறைந்தபட்ச வரைமுறைகளும் இருந்தன, மற்றபடி குடிப்பவன் நன்மை தீமைகளை ஆய்ந்துபார்த்து முடிவெடுக்கவேண்டிய அவசியமில்லை. பொதுவாக மனிதன் புலன் இச்சைகளை பூர்த்தி செய்யவென்று நடத்தும் காரியங்களின் ஊடாக, ஆசைக்கும், விருப்பங்களுக்கும் தான் அடிமையானவன் என்பதை பிறர் அறியச் செய்கிறான். மனிதன் எடுக்கின்ற முடிவானது, எளிய காரணகாரியத்திற்கு உட்பட்டது அல்லது நெருக்கடிகளால் நேர்வது எனச் சொல்வதற்கில்லை. எடுத்த அம்முடிவின்படி இச்சைகொள்ளும் பொருளின் எடையும், அதனால் கிடைக்கவிருக்கும் சந்தோஷமும் சம எடையுடைதா என்பதும் தெரியாது, நிர்வாண உயிர்களை அளவிடுவது, ஒருவேளை அசாதரண மனிதர்களுக்குச் சாத்தியமாகலாம், எனக்குச் சரிவராது. கடந்தைவைகளை மரணத்தைப்போல கூட்டிக்கழித்து பார்க்கிறபோதும் ; தோல்வியோ பக்தியோ கற்றுத்தராத பவ்யமான நடத்தைகளும் ; ஒவ்வொரு முறையும்: எனது குழப்பம் மிகுந்த ஏற்பு அல்லது நிராகரிப்புகள், பரஸ்பர அக்கறைகள், பரஸ்பர பங்களிப்புகள், கூச்சமின்றி குற்றத்தை ஏற்கிற மனோபாவங்கள், மலிவான பொய்கள், புணர்ச்சியில் இன்னொரு உயிருடன் சந்தோஷங்களுக்கிடையில் அடைந்த நேச உடன்பாடுகள் என அனைத்தும் கைகோர்த்துக்கொண்டு என்னை உடலிச்சையில் பிணைத்துவிட்டன.  அறுத்து விடுதலைகொள்ள சாத்தியமற்ற தளையென்றாலும், விரைவாக தளர்ந்துபோகிறது. காமம் உடலில் ஆரம்பித்து உயிரில் முடிந்து, மனிதனை முழுமையாக வசீகரிக்கவல்ல ஓர் அபூர்வ விளையாட்டு, அத்தகையை மனிதனைவேண்டி எனது வாழ்க்கையின் ஒரு பகுதியை இழக்கவும் நான் தயார். காதற்பரவசத்தை விவரிப்பது கடினம், வார்த்தைளின்றி தவிக்கிறேன். புணர்ச்சி தரும் இன்பம் முரண்படுகளாலானது, அதில் வெப்பமுமுண்டு; குளிர்ச்சியுமுண்டு, நெருக்கமும் உண்டு; மூர்க்கமும் உண்டு, உடல்படும் வேதனைகளுமுண்டு, உயிர்களெழுப்பும் சப்த்தமுமுண்டு. இரு சதைப்பிண்டங்களின் தழுவல் குறித்து போசெடோனியஸ்(Poseidonius)18 எழுதிய, மோசமான சிறிய வாக்கியமொன்றை, நல்லபிள்ளைமாதிரி உனது பள்ளி கையேட்டில் நீ பதிவு செய்ததை ஒருமுறை பார்த்தேன், உண்மையில் அவ்வாக்கியம், வாத்தியக்கருவியில்  நரம்பெழுப்பும் அதிசய ஓசையில் அக்கறைகொள்ளாமல், தீண்டும் காரியத்தில் கவனம்செலுத்தும் விரல்போல – காதலின் குணாதிசயத்தைக் கணக்கில் எடுத்துகொள்ள தவறிய வாக்கியம். அவரது கூற்று சொல்லப்போனால் காதலினால் பெறுகின்ற இன்பத்தை அல்ல, காதலுக்குக் காரணமான சரீரத்தினை; ஆன்மாவை மின்னலாகக் கொண்ட சிவந்தமேகத்தை; அதன் பல்வேறு தசைகளை, குருதியை, மெல்லிய தோலினை, அவமதித்துவிட்டது. 

காதலென்கிற வியத்தகு மனித உறவிற்கு முன்பாக, அதிலும் குறிப்பாக மற்றொரு உடல் மீதான அதன் அவாவிற்குச் சொல்லப்படும்  நியாயங்கள்  குழப்பமானவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்புதிய மற்றொரு உடலும் குளிப்பாட்டுவது, உணவு தருவது, முடிந்தவரை அதன் இன்னல்களை தவிர்ப்பது இவற்றைத் தவிர பெரிதாக அக்கறைகாட்டாத நமது சொந்த உடலைப் போன்றதுதான், இருந்தும் புதிய உடலின் ஸ்பரிஸத்திற்குத்  தவிக்கிறோம். ஏனெனில் இப்புதிய உடல் வேறொர நபரால் இயக்கப்படுகிறதென்கிற எளிமையான காரணம் ஒருபுறம், இன்னொருபுறம் அவ்வுடலில் நாம் காண்கிற வசீகர அம்சங்கள். இவ்விஷயத்தில் மிகவும் நியாயவான்கள் எனக் கருதப்படும் நீதிபதிகள் கூட தமது அபிப்ராயத்தில் ஒருமித்தகருத்துக்கு வரமுடியாமற்போகலாம். சில புதிரான  அற்புத நிகழ்வுகளுக்கு முன்பு மனிதர் தருக்கம் கூனிக் குறுகுவதுண்டு, அது  இங்கும் அரங்கேறுகிறது. தொன்று தொட்டு வழக்கிலுள்ள பலரும் அறிந்த நம்முடைய மரபு,  இரகசியமும் புனிதமும்கொண்ட பலசந்திப்புகளின் துவக்கப் புள்ளியாக காதலைப் பார்ப்பதில் தவறிருக்க வாய்ப்பில்லை. சிற்றின்ப அனுபவம் இன்றைக்கும் ஒரு விளங்காத புதிர், காரணம் முதல் அனுபவம் அதனை முன்பின் அறிந்திராதவர்களுக்கு ஏறக்குறைய பயமுறுத்தும் சடங்காக அதாவது தாமறிந்த வாடிக்கையான உறக்கம், பருகுதல், உணவுண்ணல், எள்ளலுக்கு ஆளானவை, அவமானங்கள், அச்சங்கள்  ஆகியவற்றிலிருந்து பிறர் விமர்சிக்கின்ற வகையில் விலகி நெடுந்தூரம் சென்றதைப்போன்ற  முற்றிலும் புதியதொரு விளைவை அல்லது அனுபவத்தைத் தருகிறது. ‘மைனாட்’கள் (Maenades)19 நடனம் அல்லது ‘கோரிபன்’கள் (Corybantes)20 வேடிக்கைப் பேச்சுக்கு ஈடாக காதலுறவு நம்மை   வேறு பிரபஞ்சத்திற்கு அழைத்துச் செல்கிறது, இந்நிலை வேறு தருணங்களில் நமக்கு  மறுக்கப்பட்டது என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும். தவிர இதனையும் தொடர்ந்து நுகரமுடியாமல், துய்க்கும் இன்பமும் அதற்கான உற்சாகமும் அணைந்தவுடன் திசைமாறுவதும் நிகழ்கிறது. சிலுவையில் அறையப்பட்ட ஒருவனைப்போல,  நேசித்த உடலோடு  என்னை அறைந்துகொண்டு நானும் வாழ்க்கையைக் குறித்து ஒன்றிரண்டு ரகசியங்கள் அறிந்திருந்தேன், இன்று அவை எனது நினைவில்  மழுங்கிவிட்டன. இவ்விளைவுக்குக் காரணம்,  எந்த விதிமுறை ஓர் உல்லாபன் அல்லது நோயிலிருந்து குணமடைந்த ஒருவன் உடலைவருத்தி அதன் நம்பவியலாத உண்மைகளில் தன்னைத் திரும்பக் காண்பதைக் கைவிடவேண்டும் என விரும்பியதோ அதுவே  விடுவிக்கப்பட்ட கைதி தாம் அடைந்த வதைகளை மறக்கவும்  வேண்டும் என்கிறது, அல்லது ஜெயித்திருப்பின் அதை அடக்கத்தோடு கொண்டாடவும் வேண்டும் என்கிறது.

பாலுறவை அடிப்படையாகக் கொண்ட மனித அறிவு முறைமையொன்றை கட்டமைக்கும் கனவுடன்   சிற்சிலசமயங்களில் இருந்திருக்கிறேன். காரணம் இவ்வகை ஸ்பரிசம் அல்லது தொட்டுணர்வு கோட்பாட்டில் பொதிந்துள்ள மனித உயிர்பற்றிய பூடகமான பெறுமதிகள்  ‘பிறர்’ உலகை மிகத் துல்லியமாக புரிந்துகொள்ள நம்முடைய ‘தான்‘ என்ற இருத்தலுக்குத் துணைநிற்கக் கூடும். இவ்வகைத் தத்துவத்தில் இன்பம் என்பது முழுமையானது, அதுவே பிறருடனான அணுகுமுறையில் ஒரு தேர்ந்த படிவமாகவும் உள்ளது. ஒருவகையில் நாமற்ற அறிவின் சேவைக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்ட தொழில்நுட்பவியல் எனவும்  இக்கோட்பாட்டை கருதலாம். புலனின்பத்தைப் பிரதானமாகக் கொண்டிராத சாதாரண சந்திப்புகளில் கூட  மீண்டும் தொட்டுணர்வு குறித்து பேசவேண்டியுள்ளது. மனக்கிளர்ச்சியின் பிறப்பு அல்லது முடிவு  எதுவென்றாலும் நிகழுமிடம் ஸ்பரிசம்: உதாரணத்திற்கு  தனது குறைகளை முறையிடுவதற்கென்று வருகிற மூதாட்டியொருத்தியின் அருவருப்பூட்டும் கை, மரண வேதனையிலிருந்த எனது தந்தையின் வியர்த்த நெற்றி, காயமுற்ற வீரனின் சுத்தம் செய்த புண், அனைத்திலும் இதனை  அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். தொட்டுணர்வைப்போல, உடல் வெளிப்படுத்தும் சமிக்கைகளும் மிகவும் சாதுர்யமான உறவுகளுக்கு மட்டுமின்றி, சராசரி  பரிவர்த்தனைகளுக்கும்  காரணமாக இருக்கின்றன என்பதற்கு : அரசவை மக்கள் பிரதிநிதியின் கண்களில் திடீரெனத் தோன்றும் பிரகாசத்தில் தெரியவரும் அன்றைய யுத்தமுனை ராணுவ நடவடிக்கையைப் பற்றிய தகவல்;  அரண்மனையில் எனது பாதையில் குறுக்கிடும் ஊழியர் தமது பணிவைக் காட்டும் வகையில் தெரிவிக்கும் சம்பிரதாய மரியாதை; எனது தேவை உணர்ந்து ஒர் உணவுத் தட்டினைக் கொண்டுவந்ததற்காக அடிமைக்கு நன்றி தெரிவிக்க, அவன் கண்களில் தெரிந்த நேசமான பார்வை; பழைய சினேகிதன் ஒருவனுக்கு காமியோ(Cameo) என்கிற கிரேக்கப் சித்திரங்கள் பொறித்தப் பதக்கத்தை  பரிசாக அளிக்க அதனை முன்வைத்து அவன் வெளிப்படுத்திய முகச்சுளிப்பு என உதாரணங்களைக் கூறமுடியும். பெரும்பாலான மனிதர்களுடன் நாம் நெருங்கிப் பழகுவதில்லை, அவர்களுடன் நமது தொடர்பு என்பது  மிகவும் மேலோட்டமானது,  இருந்தும்  நமது அவாக்களைப் பூர்த்திசெய்ய  இத்தொடர்புகளே போதும், ஏன்? சிற்சிலசமயங்களில் அவை மிதமிஞ்சியும் போகலாம். இவ்விஷயத்தில் தனித்துவமான ஓர் உயிரியை நமது பிடிக்குள் முழுமையாகக் கொண்டுவரும்வரை ‘தொடர்புகள்’ ஓய்வதில்லை, தமது எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டு அந்நிய உயிரியை சுற்றிவளைப்பதோடு, நமக்கும் அத்தொடர்புகள் நெருக்கடியைத் தருகின்றன ; மனிதர் முகத்த்திற்குள்ள விசேஷ அம்சங்கள் ஓர் உடலின் ஒவ்வொரு பாகத்திலுமுண்டு, அவையும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை முகத்தைப்போலவே  சுமக்கின்றன ; ஒர் ஒற்றை உயிர் : எரிச்சல், இன்பம் அல்லது சலிப்பு ஆகிய ஏதோ ஒன்றால் நமது உணர்ச்சியைத் சீண்டுவதற்கு மாறாக இசையைப் போல நம்மைத் தொடர்ந்துவருகிறது, பெரும் பிரச்சனையாக உருமாறி நம்மை வாட்டுகிறது ; நமது பிரபஞ்சத்தின் புறஎல்லையிலிருந்து விடுவித்துக்கொண்டு அதன் மையத்தை அடைந்து, இறுதியில் நம்மை மறந்து  அதையே கதியென்று நினைக்கும் அளவிற்குத்  தன்னை  இன்றியமையாததாக நிலைநிறுத்திக்கொள்கிறது ; அத்தனையும் பருவுடலின் எளிய விளையாட்டு என்று நினைத்திருக்க. உடம்பை ஆன்மா ஆக்ரமித்து, கடைசியில்  வியக்கத்தக்க சம்பவமாக அது அரங்கேறுகிறது.  

காதல் பற்றிய இத்தகைய கருத்துக்கள், காதல் மன்னனாக தொழிற்படுவதற்குரிய வாய்ப்பினை எனக்கு அளித்திருக்க வேண்டும்,  தவறியுள்ளேன் எனில், காதல் விவகாரத்தை சரியாக கையாளவில்லை அல்லது அதனைத் தவிர்த்து வேறு செயல்களில் ஈடுபட்டிருக்கிறேன் என்று அர்த்தம். பிற துறைகளைபோல காதலையும் தொழிலாகக் கொள்ள மேதைமை அவசியம்.  மேதமை இல்லையென்கிறபோது சிற்சிலவிஷயங்களில் கவனமும் அக்கறைகளும் தேவைப்படுகின்றன, இன்னும் சொல்லப்போனால் நல்ல உத்திகளும் வேண்டப்படுகின்றன. ஆனால் இவற்றுக்கு நான் சரியான நபரல்லவென்றுதான் என் மனம் சொல்கிறது. இதற்கென உருவாக்கப்படும் கண்ணிகள் எப்போதும் ஒரே மாதிரியானவை, ஓயாத அணுகுமுறைகளின் கட்டுப்பட்டில் உள்ள இதன் நடைமுறையும், வெற்றி என்கிற அதன் எல்லைக்கோடும் எனக்கு அலுத்துவிட்டன. மிகப்பெரிய காதல் மன்னனாகத் தொழிற்படுகின்ற ஒருவன் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குத் தாவும் போக்கில் அலட்டிக்கொள்ளாத விருப்பு வெறுப்பற்ற குணத்தைக் கொண்டிருக்கவேண்டும், நான் அப்படி இருப்பதில்லை. எது எப்படியோ, நான் அவர்களை விட்டு விலகிச் சென்ற எண்ணிக்கையைக் காட்டிலும் என்னை விட்டு அவர்கள் விலகிச்சென்ற எண்ணிக்கையே அதிகம் ; ஒரு மனித உயிரியைக்கொண்டு நமது தாகத்தைத் தணித்துக்கொள்ளமுடியும் என்பதை நான் ஒருபோதும் விளங்கிக் கொண்டதில்லை. ஒவ்வொரு காதல் அனுபவமும் நமக்கு கொண்டு வரும் ஐசுவரியங்களை  துல்லியமாகப் பிரித்துணரவும்,  அவ்வனுபவத்தில் ஏற்படும் மாற்றத்தையும்,  ஏன் அதற்கு நேரும்  மூப்பினையும் கூட  கண்காணிக்கும் அவா  எனக்குண்டு, ஆனால் அடுத்தடுத்து  காதல் அனுபவங்கள் என்கிறபோது, இம்முயற்சிக்குச்  சாதகமாக  இருப்பதில்லை.  முன்பெல்லாம் அழகின் மீது  எனக்கிருந்த ஒருவகையான ரசனை எனது நல்லொழுக்கத்திற்கு இடமளிக்கும் என்றும், மிகவும் தவறான பாதைகளில் போகவிடாமல்  தடுக்குமெனவும் நம்பிக்கைக் கொண்டிருந்தேன்.  காதலைத் தொழிலாக அறிந்திராத இந்த அழகு உபாசகன், அக்குணத்தை இறுதியில் எங்கும் காணநேர்ந்ததுதான் சிக்கல், ஊத்தை பிடித்த நரம்புகளில் கூட தங்க இழைகளைக் கண்டது இவ்வகையில்தான். சமாளிக்க, பிறர் தூக்கி எறியும் வேகாத மண்பாண்டத்தைக்கூட, அதன் அருமை உணர்ந்த சேகரிப்பாளன் எடுத்து பாதுகாத்து அடையும் சந்தோஷதை, அழுக்காக அல்லது உடைந்து சில்லுகளாக இருப்பினும், அழகின் உன்னத படைப்புகளைக் கையாள்வதில் அடைந்திருக்கிறேன். அதேவேளை இவ்விஷயத்தில் தவறு செய்திருக்கிறேன் என்பதை மறுப்பதில்லை.  நல்ல ரசனைகொண்ட ஒரு மனிதருக்குள்ள மிக மோசமான தடங்கல் மனிதர் சார்ந்த விவகாரங்களிளில் அவனுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தைப் பொறுத்தது. இத்தகுதி ஏறக்குறைய ஒரு முழுமையான அதிகாரத்திற்கு இடமளிக்க, முகஸ்துதிகளுக்கும் பொய்களுக்கும் அவன் ஆளாகிறான். எந்த ஒரு மனிதனும் ஆகக் குறைந்த அளவிலென வைத்துக்கொண்டாலுங்கூட என் முன்பாக உண்மையற்றவகையில் நடந்துகொண்டு இரக்கத்தையும், வெறுப்பையும் நிந்தனைகளையும் சுலபமாக சம்பாதித்துக் கொள்ளமுடியும். இவ்விடயத்தில் எதுவுமற்ற பரம ஏழைக்குள்ள துயரத்தோடு, அதிகாரம் செல்வம் என்றிருக்கும் எனது பிரச்சனைகளை ஒப்பிடலாம். இன்னும் ஒருபடி மேலேபோய் சொல்வதெனில் ஏதோவொரு வகையில் நமது ஆதிக்கத்தை பிறர்மீது செலுத்த இயலுமெனில்  பிறரைக் கவரும் மனிதராக நாம் இருக்கிறோம், ஆனால் துரதிஷ்டவசமாக குமட்டலுக்கும், வெறுப்பிற்கும்   ஆரம்பமும் இதுதான். 

கடைசியில் பிறரை மயக்கும் விஷயத்தில் கையாளும் காலத்திற்குப் பொருந்தாத தந்திரங்களினும் பார்க்க, நாம் முன்னுரிமை அளிப்பது  பொய்யற்ற ஒழுக்க கேட்டின் எளிமையான உண்மைகள். கொள்கையளவில், விபச்சாரமும் தேகத்தைப் பிடித்து விடுதல், சிகையலங்காரம் போல ஒரு கலை என்பதை ஒப்புக்கொள்ள நான் தயார், உண்மையைச் சொல்வதெனில் சிகைஅலங்காரத்திலும்  தேகத்தை பிடித்து விடும் விவகாரத்திலும்   சந்தோஷம் என்பது மிகவும் அரிதாகவே எனக்கு வாய்த்திருக்கிறது. பல நேரங்களில் இவ்வகையான சந்தோஷத்திற்கு நமக்கு வேண்டியவர்களே இடையூறாக இருப்பதுமுண்டு. இளமைக் காலத்தில் ரோம் நகரத்து வேடிக்கை வினோதங்களில் எனக்குத் தீராத ஆர்வம், அதனைச் சோர்வடையச் செய்வதுபோல, எனக்கு வேண்டிய மதுச்சாலை உரிமையாளர் தம்முடைய வேறொரு வாடிக்கையாளர் பாதிக்கப்படுவார் என்பதைக்கூடப் பொருட்படுத்தாது, மிகச் சிறந்த ஒயினை எனக்கென எடுத்துவைத்துள்ளதை  கண் ஜாடையால் தெரிவிப்பார்.  ஒரு உயிரினம் என் சொந்த  விருப்பத்தில் குறுக்கிடுவதும், அந்த விருபத்திற்கென்றுள்ள பெறுமதியை குறைக்க முயல்வதும், முன்கூட்டியே அவ்விருப்பத்தை ஊகித்து எந்திரத்தனமாக அதனுடன் சமரசம் செய்துகொள்ளும் அந்நிய மனிதர்களின் குணமும் மகிழ்ச்சிக்குரியவை அல்ல. இதுபோன்ற நேரங்களில்தான், உருப்படாத பைத்தியக்காரத்தனமான எண்ணங்களையெல்லாம் மனிதர்மூளை தரும் என்பது என்விஷயத்திலும் உண்மையாகி, ஒர் துறவியின் நிலமைக்கு நானும் தள்ளப்படுவதுண்டு. ‘நீரோ'(Nero)21வினுடைய தகாதசெயல்களைக் குறித்தோ, திபேரியஸ் (Tiberius )22 ஞானத்தினைக் குறித்தோ புராணக்கதைகளில் சொல்லப்பட்டவையெல்லாம் கட்டுக்கதைகள் அல்ல என்கிற பட்சத்தில், அதீத இன்பம் நுகர்ந்த இவர்களுக்கு, மிகவும் சிக்கலான மனித உயிரியின் செயல்படத் தயங்கும் புலன்களை மிதமிஞ்சி உபயோகிக்க வேண்டிய நெருக்கடி இருந்துள்ளது, விளைவாக மனிதர்களில் இத்தகைய அவமதிப்புக்கு ஆளானவர் வேறொருவரில்லை என்கிற பரிதாப நிலையில் பிறர் இவர்களை எள்ளிநகையாட வாய்ப்பையும் அளித்தனர். என் தரப்பில் நடந்தது என்னவெனில், எந்திரத்தனமாக இன்பம் துய்ப்பதை பெரும்பாலும் மறுத்து வந்திருக்கிறேன் அல்லது இவ்விவகாரத்தில் அதிக ஆர்வமின்றி இருந்திருக்கிறேன், இதற்கு யாருக்கேனும் கடன்பட்டிருக்கிறேன் என்பது உண்மையெனில், அது என்னுடைய திடமற்ற மன உறுதிகு அல்ல, மாறாக   அவ்வாறான சந்தர்ப்பங்களை அதிகம்  ஏற்படுத்தி தராத அதிர்ஷ்ட்டத்திற்கு கடன் பட்டிருக்கிறேன். மனப்பாடமாக நன்கறிந்த பாடத்தை ஓயாமல் பிதற்றுவதுபோல, வயது கூடக்கூட குழப்பம் அல்லது சோர்வு தரும் சலிப்பின் அறிகுறிகள் எந்தவொரு உயிரியையும் போல என்னிடத்திலும் தெரியவரலாம். நோயும், அதைத் தொடர்ந்து வெகுசீக்கிரம் நிகழவிருக்கும் மரணமும் இந்த இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றும் என்பதுதான் தற்போதைய நம்பிக்கை . 

மெல்ல மெல்ல என்னை கைவிடும் விலைமதிப்பற்ற நற்பேறுகளில் உறக்கமும் ஒன்று. குறைந்த நேரத்தை உறக்கத்திற்கென ஒதுக்கி அதையும் சரிவர உறங்காமல் துன்பப்படும் மனிதன், ஒன்றுக்கு பலவாக தலையணைகளைக் கொடுத்து இக்குறிப்பிட்ட சுகத்தினை வேண்டி வெகு நேரம் தவமிருக்கிறான். இரு உடல்களில் பிரதிபலிக்கிற இணக்கமான துயில் மட்டுமே உடலுறவிற்கு   தவிர்க்கமுடியாத மிகச் சரியானதொரு பிற்சேர்க்கையாக இருக்கமுடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இங்கே எனக்கு ஆர்வமூட்டுகிற விஷயம் தன்னை நன்கு சுகிக்க வேண்டுமென்பதற்காக உறக்கத்தின் அணூகுமுறையிலுள்ள பிரத்தியேகப் புதிர்தன்மை : அதன் வண்ணம், அதன் அடர்த்தி, அதன் சுவாச ரிதம் அனைத்திலும் நிகழக்கூடிய மாற்றங்கள், இவைதவிர உறக்கத்தின்போது  கிடைக்கிற ‘இறப்பையும் சந்திக்கும் வாய்ப்பு எனப் பார்க்கிறபொழுது உறக்கத்தை ஒரு  பெருங்கடலோடு ஒப்பிடமுடியும். இந்த உறக்கமெனும் சமுத்திரத்தில்   ஆடையைக் களைந்து, தனியொருவனாக, நிராயுதபானியாக தவிர்க்க முடியாதது என்பதுபோல மனிதன் தலைகீழாகப் பாய்ந்து ஆபத்துடன் விளையாகிறான்.  உறக்கம் தரும் ஒரே நம்பிக்கை, அதிலிருந்து  மீண்டு நாம் வெளியில் வரமுடியும் என்கிற உண்மை. குறிப்பாக எவ்வித மாற்றமுமின்றி உறங்குவதற்கு முன்பாக எப்படி இருந்தோமோ அப்படி வெளியில் வரமுடியும். காரணம், வினோதமானதொரு தடையுத்தரவுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள், எனவே கண்டகனவுகளின் எஞ்சியவற்றை, முழுமையாக நம்முடன் கொண்டு வர சாத்தியமில்லை, அப்படி வரமுடிந்தால் ஒருவகையில் நாம் சிதைந்த மனிதர்கள். நமக்கு நம்பிக்கைதரும் பிறிதொரு  விஷயம், நம்முடைய சோர்வுக்கு உறக்கம் தரும் சிகிச்சை. இச்சிகிச்சை தற்காலிகமானது என்கிறபோதும், இனியும் அவ்வாறான நிலைக்குப் போகக்கூடாதென்று நம்முடன் ஒப்பந்த்ம் செய்துகொண்டதைப்போல, மிகவும் தீர்க்கமான வழிமுறைகளுடன்  அளிக்கப்படும் சிகிச்சை அது. இங்கும், பிற இடங்களில் நடைபெறுவதைப்போல ‘இன்பமும்’ ‘கலையும்’ பேரின்ப மயக்கத்தின்பொருட்டு உணர்வுபூர்வமாக சரணடைகின்றன,  தான்‘ஐ காட்டிலும் மிகவும் பலவீனமாகவும், திடமாகவும், இலகுவாகவும், தடுமாற்றத்துடனும் இருப்பதற்கு கலையும் இன்பமும் சாதுர்யத்துடன் சம்மதிக்கின்றன.  கனவுகளின் வியப்பிற்குரிய மக்களைக் குறித்து  பின்னர் பேசுகிறேன், அதற்கு முன்பாக மரித்தலுக்கும், உயிர்த்தெழுலுக்கும் நெருக்கமான  தூய உறக்கம் மற்றும் தூய விழிப்பு குறித்து பேச வேண்டும், குறிப்பாக பதின்பருவத்தின்போது உறக்கம் சட்டென்று நடத்திய தாக்குதலை இங்கே நினைவுகூர்கிறேன். நன்றாக உடுத்திய நிலையில் அவனிருக்க, கணிதம் அல்லது சட்டம் சம்பந்தமான பாடங்களிலிருந்து விடுவித்து திடீரென உறக்கம் அப்பையனை தன்வசமெடுத்துக் கொள்ளும். புத்தகம் கைநழுவ, அவன் உறக்கத்தில் வீழ்வான்.  அவ்வுறக்கம் ஆழமானது, செறிவானது, இதுவரை உபயோத்திராத சக்தியையெல்லாம் பிரயோகித்து செயல்படுகிறதோ என்றுகூட சொல்லக்கூடிய பரிபூரன அனுபவத்தினை, மூடிய விழிமடல்களின் ஊடாக பெற முயற்சித்த உறக்கம். பிறகு கானகத்தில் நாள்முழுக்க விலங்குகளை வேட்டையாடி அலுத்து, வெற்றுத்துரையில் கணத்தில் நித்திரைபோவதும், நாய்களின் குரைப்புச் சப்தம் கேட்டோ அல்லது எனது மார்பில் அவை பிறாண்டுவதாலோ விழித்துக்கொண்ட அனுபவங்களும் சொல்வதற்கு இருக்கின்றன.  என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்தியதோடு, மனவுளைச்சலை ஏற்படுத்திய அனுபவமென்று சொன்னால் அது, ஒவ்வொருமுறையும் கூடுவிட்டு கூடுபாய்ந்து புதிய அனுபவத்தினை எதிர்பார்க்கிறநேரத்தில், ஏதோவொரு சக்தி என்னை மீண்டும் இழுத்துவந்து எனது சொந்த சரீரத்திற்குள் சாமர்த்தியமாக அடைத்துவிடுகிறது.  அவ்வுடல் படுத்தவுடன் நித்திரைகொள்ளும் பாக்கியவான்களுக்கு, ஓர் அற்ப பிண்டம், எனக்கோ – அத்ரியன் என்ற அந்தச்கூடு – அதனைச் சிறிது நேரம் ரசிக்க நல்லதொரு சந்தர்ப்பம் அளிக்கும் ஜடம், அதாவது கடந்தகாலத்தை மறந்திருக்கும் சரீரம்  சரியா ?

இன்னொருபக்கம் நோயும் வயதும் தமக்கென சில அற்புதங்களைக் கொண்டிருக்கின்றன, அவை உறக்கத்தின் தயவால் பலவகை வடிவங்களில் ஆசீர்வதிக்கப்படுகின்றன. ஒரு வருடத்திற்கு முன்பு, மிகவும் கடினமான நாளொன்றிர்க்குப் பிறகு, இளைப்பாற எடுத்துக்கொண்டது சிறிது நேரமே என்கிறபோதும், அன்றையதின ஓயாதபணிகளால் வாட்டமுற்றிருந்த எனது உடலும், அதன் ஆற்றலும் பெற்ற அற்புதங்கள், விரயமின்றி எனது  சக்தியைப் பாதுகாத்து வைத்து பெறும் பலன்களுக்கு நிகரானவை. பொதுவாக நகரப்பகுதிக்கு நான் அடிக்கடிபோவதில்லை. அப்படி போகிறபோது, எல்லா வேலைகளையும் அந்த ஒருநாளில் முடித்துவிடும் எண்ணத்துடன் இருப்பேன். அன்றையதினமும் அலுப்பூட்டும் வகையில் எனக்கென பணிகள் குவிந்திருந்தன :  முதலில் ‘ செனட்’ என்கிற ஆட்சிப் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொண்டேன், பின்னர் ஒரு நீதிமன்ற அமர்வு, அடுத்து அரசவை உறுப்பினர் ஒருவருடன் வெகுநேரம் உரையாடல். அதனைத் தொடர்ந்து விரும்பும் நேரத்திற்கு முடித்துக்கொள்ள சாத்தியமற்ற ஒரு சமயச் சடங்கு, போதாதற்கு சடங்கின் போது மழை. அடுத்தடுத்து திட்டமிட்டிருந்த இந்நிகழ்ச்சிகளுக்கு நானே பொறுப்பு. ஒன்றுடனொன்று சம்பந்தமற்ற இந்த அனைத்துக் காரியங்களையும் இழுத்துபோட்டுக்கொண்டு  செய்ய சம்மதித்தது, அதாவது ஒர் அலுவலுக்கும், மற்றொன்றிர்க்கும் இடையில் நேர விரயம் கூடாது, தேவையற்ற தொல்லைகள் இருக்கக் கூடாது, தகாத முகப் புகழ்ச்சிகள், சிந்தனைகளுக்கு இடமளிக்ககூடாது எனத் திட்டமிட்டு அமைத்துக்கொண்ட அலுவல்கள். இறுதியாக குதிரையில் மாளிக்கைக்குத் திரும்பநேர்ந்ததும், அதற்காகத் தீர்மானித்த பாதையும்கூட முன்னதாகத் திட்டமிட்டவையே. அனைத்து அலுவல்களையும் முடித்துக்கொண்டு மாளிகைக்குத் திரும்பியபொழுது, ஒரு நோயாளிபோல இருந்தேன். நாளங்களில் இரத்தஓட்டம் நின்று உடல் குளிரால் வெட வெடத்தது.  நிலமையைப் புரிந்துகொண்ட உதவியாளர்கள் செலெர்(Celer), ஷப்ரியாஸ்(Chabrias) இருவரும் ஓடோடி வந்தார்கள், ஆனால் மனிதர்களின் இதுபோன்ற கரிசனங்கள் பொதுவில் நேர்மையானவை என்கிறபோதும்  அலுப்பைத் தருபவை.  மாளிகைக்குத் திரும்பியதும் எனக்கென்று ஒரு ‘கஞ்சியை’ தயாரித்து சில கரண்டிகள் கொதிக்க கொதிக்க விழுங்கினேன். நானே தயாரித்தேன் என்பதால் பிறர் சமைத்த உணவில் எனக்கு ஐயங்கள் இருந்தனவென்று நினைக்கவேண்டாம். உண்மையில் மனிதர்கள் தனித்திருக்கிறபோது சில சௌகரியங்கள் கிடைக்கின்றன, அதிலொன்றை பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவுதான். அதன்பின்னர் படுக்கையில் விழுந்தேன். எனது ஆரோக்கியம், இளமை, ஆற்றல் ஆகியவற்றைப்போல உறக்கமும் அன்று எட்டமுடியாத உயரத்தில்  இருந்தது.  பிறகு என்ன நேர்ந்ததோ, அயர்ந்து உறங்கினேன். உறங்கம் கலைந்து மணற்கடிகையைப் பார்த்தபோது ஒரு மணிநேரம்கூட ஒழுங்காக நித்திரைகொள்ளவில்லை என்று புரிந்துகொண்டேன். இடையூறின்றி உறங்கியது என்னவோ சிறிது நேரம் என்றாலும், என் வயதைக் கணக்கிற்கொண்டால்  அவ்வுறக்க நேரத்தை  விண்கோள்கள் தமது முழுமையான சுழற்சிக்கு எடுத்துக்கொள்ளும் கால அளவில் சரிபாதியோடு ஒப்பிட முடியும். இன்று எனக்கான காலங்கள் என்பவை அளவிற் சிறியவை. எனது ஒரு மணிநேர அமைதியான உறக்கம், கணிசமான நேரத்தை ஒதுக்கி உறங்கியதற்குச் சமம் : எனது எளிமையான உன்னதத்தை, குருதியின் வெப்பசலனத்தைக் கரங்களில் உணர்ந்தேன். எனது இதயமும் நுரையீரலும் உண்மையான ஆர்வத்துடன் செயல்படத் தொடங்கின. எனது ஜீவன் ஊற்று நீரென சுரந்துப் பெருக்கெடுத்தது, பெருவெள்ளமில்லை என்பதோடு நம்பிக்கைக்கு உரியதாகவும் இருந்தது. சிறிதளவு உறக்கம் என்கிறபோதும் இழிவானவற்றை சரிசெய்கிறபோது கடைபிடிக்கப்படும் கறாரான அணுகுமுறையை எனது அதிகப்டியான வேண்டாதப் பண்புகளை சரி செய்யவும் கடைபிடித்தது.   ‘புதுப்பித்தல்’ வினைக்கென  ஒரு தெய்வீகப் பண்பு உண்டு, பிரதிபலன் பார்க்காமல் எப்படி ஓர் ஊற்று நீர் தன்னை அருந்துகிறவர் நலனுக்கென்று உதவுகிறதோ அதைபோல உறங்கும் மனிதருக்கு தமது நற்பண்புகளை  ‘புதுப்பித்தல்’ அளிக்கிறது.  

ஆனால் உயிர் வாழ்க்கையின் மூன்றில் ஒருபகுதியை தனதாக்கிக்கொள்ளும் ஒரு நிகழ்வை – உறக்கத்தை-  நாம் அதிகம் பொருட்படுத்துவதில்லை. காரணம் அது தரும் நன்மைகளை புரிந்துகொள்ள எளிமையான அணுகுமுறை வேண்டும் அது நம்மிடமில்லை. உறங்கும்போது காயஸ் கலிகுலா (Caïs Caligula)வும் ஒன்றுதான் நீதிக்குப் பெயர்பெற்ற அரிஸ்டித் (le Juste Aristide)ம் ஒன்றுதான். உறங்கும் நிலையில் என்னுடைய முக்கியமான சிறப்புரிமைகள் பொருளற்றவைகளாகி விடுகின்றன. எனது அறைவாசலில் காவலுக்குப் படுத்துறங்கும் கருப்பனுக்கும் எனக்கும் பேதங்கள் இல்லை. நல்லது, உறக்கமின்மை என்றால் என்ன ? அடுக்கடுக்காக சிந்தனைகள், தொடர்ந்து விதர்க்கங்கள், அடையும் தெளிவு,  அதற்கேற்ப கட்டமைக்கும் விளக்கம், இமை மூடிய கண்களின் தெய்வீகமான மடமைக்கு ஆதரவாக  அல்லது கனவுகளின் பாண்டித்ய மூடத்தனத்திற்காக தனது மகுடத்தை துறக்க மறுத்து, நமது அறிவு பைத்தியக்காரத்தனமாக பிடிவாதம் காட்டுகிறது என்பதன்றி வேறென்ன ? ஆக, உறக்கமின்றி தவிக்கும் அம்மனிதன்(கடந்த சிலமாதங்களாக என்னிடம் அவனைக் காண்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள்) ஏறக்குறைய அநேக விஷயங்களை  வேண்டுமென்றே நம்ப மறுக்கிறான். ‘மரணத்தின் உடன்பிறப்பே…’ ஐசோகிரட்டீஸ்(Isocarate) உரையின் ஆரம்பமே தவறு, பேச்சாற்றல் மிக்க  கலைஞர் ஒருவரின், அலங்கார வார்த்தைகளாகவே இத்னை எடுத்துக்கொள்ள வேண்டும். அண்மையில்தான் மரணத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.  மரணத்திடம், இன்றைய மனிதர் சூழல் அறியத்தவறிய பலரகசியங்கள் உள்ளன. இருப்பினும், ஓரளவு மறக்கப்பட்டதும், அதிகம் புரிந்துகொள்ள முடியாததுமான மரணத்தின் இரகசியங்கள் மிகவும் சிக்கலானதும் ஆழமானதுமாகும். விளைவாக ஏதோ ஓர் இடத்தில் உறக்கமென்ற ஊற்றும், மரணமென்ற ஊற்றும் ஒன்றுடனொன்று நன்கு கலந்திருப்பதைப் போன்ற உணர்வு. என்னால் நேசிக்க்ப்பட்டவர்களை உறங்கும்போது ஒரு போதும் விரும்பிப் பார்த்ததில்லை; என்னிடமிருந்து அவர்களுக்கு ஓய்வுதேவை, என்பதை அறிவேன், உண்மையில் என்னிடமிருந்து அவர்கள் தப்பித்துமிருந்தார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது தூங்கிவழியும் முகம் குறித்த வெட்கம் இருக்கிறது. படிப்பதற்கும் வாசிப்பதற்கும் அதிகாலையில் எத்தனை முறை கண்விழித்திருப்போம், ஏன் நானே கூட வெறுமையுடனான எனது சந்திப்பின் அலங்கோல சாட்சியங்களாகவும், எனது இன்மையை ஒவ்வொரு இரவும் உறுதிசெய்யும் வகையில் கசங்கியும்  ஒழுங்கற்றும் கிடந்த தலையணைகளையும் படுக்கைவிரிப்புகளையும் சரி செய்திருக்கிறேன்.

(தொடரும்……)

பின்குறிப்புகள் 

17. Diogene – பிளாட்டோ காலத்திய தத்துவஞானி, மனிதர்களைத் தேடி பகலில் கூட விளக்குடன் அலைத்தவர்.

18. Posidonius (135 BC – 51 BC) கிரேக்க தத்துவஞானி. 

19 Menades:  கிரேக்கர்களின் பண்டைய வழக்குப்படி  Dionysos கடவுளின் தோழியர்

20. Corybantes கிரேக்கர்களின் வழக்குபடி போரினால் அடைந்த வெற்றியைக் கொண்டாட, கவச உடையில் மேளங்கொட்டி ஆவேச நடனமாடுகிற இளங்கலைஞர்கள்

21 நீரோ அல்லது திபேரியஸ் நீரோ (Tiberius Néron) கி.மு. 85 லிருந்து கி.மு. 33வரை வாழ்ந்துமறைந்த ரோமானிய அரசகுடும்பத்தைச் சேர்ந்தவன்.

22.  திபேரியஸ் (Tiberus Julius Cesar)  கிபி 14 முதல் கி.பி 37 வரை அரசாண்ட ரோமானிய மன்னர்.

23.  கைஸ் கலிகுலா (Caïs Caligila AD 37 -41)  மூன்றாவது  ரோமானிய அரசன்

24. அரிஸ்ட்டிட்  (Aelius Aristide Theodrous -AD 117 -185) கிரேக்க பேச்சாளர்

25. ஐசோசிரட் (Isocrate -B.C 436 – 338) கிரேக்க பேச்சாளர்.

26. ப்ளோகன்  (Phlegon) வரலாற்றாசிரியர், எழுத்தாளர், சக்கரவர்த்தி அதிரியன் கீழ்  பணியாற்றியவர், ஒலிம்பியாட் (Olympiad) என்கிற புகழ்பெற்ற வரலாற்றுத் தொகுப்பை எழுதியவர். 

27. லூக்கான் (Marcus Annoeus Lucanus – AD 39-65) ரோமானியக் கவிஞர்.

28. பெட்ரோனியஸ்(Petronius AD27-46) நீரோ காலத்தில் அரசவை அலுவலர்,எழுத்தாளர்;

   

Series Navigation<< அதிரியன் நினைவுகள்-1அதிரியன் நினைவுகள் -3 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.