வாக்குமூலம் – அத்தியாயம் – 13

அவள்

ரவிக்கு அடுத்த வாரம் பரிட்சை இருக்கிறது. எங்கிருந்தோ ஜலதோஷத்தை இழுத்துக்கொண்டு வந்திருந்தான். அச்சு, அச்சு என்று தும்மலும் போட்டுத் தள்ளினான். ரெண்டு நாளைக்கு முன்னால் பக்கத்து வீட்டு மாமி, ”என்ன ராத்திரி ரொம்ப நேரம் வெளக்கு எரியறதே?” என்று என்கிட்டேதான் கேட்டா. மாமி ஒன்றும் புது மனுஷி இல்லை. பதினெட்டு வருஷப் பழக்கம். எந்த நேரம் கதவைத் தட்டுவாங்கன்னு சொல்ல முடியாது. ரொம்ப யதேச்சையா கதவைத் தட்டும் அல்லது காலிங் பெல்லை அடிக்கும். கதவைத் திறந்தால், ”என்ன பண்ணிண்டிருக்கே?” என்று கேட்கும். மகன் பம்பாயில் இருக்கிறார். மருமகள் ஆபீஸுக்குப் போய்விட்டால் மாமிக்குப் பொழுதே போகாது. புராணக் கதை, பாரதக் கதை என்று எதையாவது படித்துக் கொண்டிருக்கும். அது அலுத்துப் போனால் என்கிட்டே பேச வந்துரும். அப்படித்தான் அன்னைக்கி, ராத்திரி ரவி ஹாலில் விளக்குப் போட்டுப் படிப்பதைப் பற்றிக் கேட்டது. நான், ”ரவிக்கு பரிச்சை வருது. அதுதான் படிக்கிறான்” என்றேன்.

”இப்போ என்ன பரிச்சை?”

”ஏதோ மிட்டேர்ம் டெஸ்டாம் மாமி.”

”மிட்டேர்முக்கா

இப்பிடி விளுந்து விளுந்து படிக்கறான்?”

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. சிரித்தேன். மிட்டேர்முக்கா இப்பிடி விளுந்து விளுந்து படிக்கிறான்னு மாமி கேட்டது அத்தையின் காதில் விழுந்துவிட்டது.

அத்தைக்கு மாமியைப் புடிக்காது. அவ நாக்கு தீ நாக்கு. கண்ணு தீக் கண்ணு. கண்ணு போட்டாப் போச்சுன்னு அத்தை மாமியைப் பத்திச் சொல்லுவாங்க. எனக்கும் சமயா சமயத்துல அத்தை சொல்லுதது சரியோன்னு தோணும். எங்க வீட்டுல என்ன நடக்குன்னு தெரிஞ்சிக்கிடுததுல்ல மாமிக்கு ரொம்ப ஆர்வம். யாரும் வீட்டுக்கு வந்துட்டுப் போனா கூப்புட்டு வச்சு விசாரிக்கும். யாரு, எந்த ஊருன்னு துருவித் துருவி விசாரிக்கும். இதையெல்லாம் கேட்டு அதுக்கு ஒண்ணும் ஆகப் போறதில்ல. ஆனா ஆர்வக் கோளாறும்பாங்களே… அந்த ரகம் மாமி. அதுக்கு நேரம் போகலை, ஏதோ பேசுதுன்னு விட்டுருவேன். ஆனா, அத்தைக்கி மாமியக் கண்டா அறவே ஆகாது. அன்னைக்கி ராத்திரி ஏன் ரொம்ப நேரம் வீட்டுல வெளக்கு எரியிதுன்னு மாமி கேட்ட ரெண்டு நாள் கழிச்சு ரவிக்கு ஜலதோஷம் பிடிச்சு, தும்மலா விளுந்து படிக்க முடியாமே போச்சு. ஒடனே அத்தை ரவிக்கு ஒடம்பு படுத்ததுக்குக் காரணம் அன்னைக்கி மாமி கேட்டதுதான்னு சொல்லி, கர்ப்பூரத்தை எடுத்து ரவிக்கு திருஷ்டி சுத்திப் போடுன்னு சொன்னாங்க.

அத்தை சொன்ன மாதிரியே ரவிக்கு கர்ப்பூரம் சுத்திப் போட்டேன். அப்பறமும் ஒரு ரெண்டு நாள் ஜலதோஷம் இருந்துது. அத்தை எல்லாரையும் குடும்பத்தோட ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாலே நிறுத்தி வச்சு சுத்திப் போடுவாங்க. சில நாள் மொளகா வத்தலும் உப்பும் சுத்திப் போடுவாங்க. மனுஷங்களுக்கு நம்ம ஒடம்பப் பாதிக்கிற அளவுக்கு சக்தி இருக்கான்னு கீதா அத்தைகிட்டே கேப்பா. ”ஒனக்கு என்ன தெரியும்? நீ சின்னப் புள்ள”ன்னு சொல்லி அத்தை அவளப் பேச விடாம செஞ்சிருவாங்க. மாமாவுக்கு இதுல எல்லாம் நம்பிக்க கெடையாது. இவங்க அப்பா மாதிரிதான்.

திருநவேலியில, நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ எங்க அம்மைக்கி இந்த நம்பிக்கை எல்லாம் இருந்திச்சு. தெக்கு வளவு சங்கரம் பிள்ளப் பெரியப்பா வீட்டை விட்டு வெளியில கெளம்புனா சகுனம் பாக்காமக் கெளம்ப மாட்டா. காக்கா இடமிருந்து வலம் போனாத்தான் தெருவுல எறங்குவா பெரியப்பா. வெள்ளச் சேலை கட்டுன தாலியறுத்த பொம்பள தெருவுல போனா, எதிர்த்தாப்பல பெரியப்பா போக
மாட்டா. பெரியப்பாவுக்கு ரெண்டும் ஆம்பளப் பிள்ளைகதான். ஏதாவது நல்ல காரியத்துக்காகக் கெளம்பினா, அவுஹ வளவுல இருக்க செம்பகக்காவைக் கூப்பிட்டு, தான் வீட்ட விட்டுக் கெளம்பும்போது எதுத்தாப்பல வரச் சொல்லுவா. செம்பகத்தக்கா சமஞ்சு வீட்டுல இருந்தா. ஒரு நல்ல காரியத்துக்குப் போகும்போது, சமஞ்ச பொண்ணு எதிர்த்தாப்புல வந்தா நல்லதாம். எதிர்தாப்பல ஐயர் யாராவது வந்தாலும் பெரியப்பா போக மாட்டா. எங்க அம்ம ராத்திரி யாரும் பாலு, மோரு கேட்டா குடுக்க மாட்டா. அது எல்லாம் ராத்திரி கடன் குடுக்கக் கூடாதாம். சுமங்கலி தண்ணிக் கொடத்தோட எதிரே வந்தால் நல்ல சகுனமாம். பால்காரர் செவ்வாக் கெழமையோ, வெள்ளிக் கெழமையோ பால் காசு வாங்க வந்தா அம்ம பணம் குடுக்க மாட்டா. வெள்ளி, செவ்வாயில யாருக்கும் துட்டு, பணம் குடுக்கக் கூடாதாம். இந்த மாதிரி ராகு காலம், சூலைன்னு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு. இதை எல்லாம் இந்தக் காலத்துல நேரம் காலம்னு பாத்துகிட்டு இருக்க முடியுமா? எட்டுல இருந்து ஒம்பதரை மணி வரை ராகு காலம்னா, அந்த நேரத்துல ஒலகமே ஸ்தம்பிச்சா போக முடியும்? தெக்க சூல, வடக்க சூலங்கிறாங்க. அன்னைக்கி அந்தத் தெசைகள்ள காரு, ரயில், பஸ் எல்லாம் போகாமலா இருக்க முடியும்? ஏதோ நல்லது, பொல்லாததுக்கு நேரங்காலம் பாக்க வேண்டியதுதான். அதுக்காக பொழுதன்னக்கியும் பஞ்சாங்கத்தைப் பாத்துக்கிட்டு ஒலகத்துல வாழ முடியுமா?

நல்லா ஞாபகம் இருக்கு. நான் நாலாவது படிக்கிறபோது எங்க ஊருக்குப் போயிருந்தேன். அப்பம் ஊர்ல அம்மங் கோயில்ல கொடை நடந்துச்சு. கொடை அன்னைக்கி ராத்திரி சாமக் கொட பாக்க வீட்டுல பெரிய ஆட்கள் எல்லாம் போனாங்க. அண்ணனையும் என்னையும் பொம்பளை ஆட்களையும் சாமக் கொட பார்க்கக் கூட்டிட்டுப் போகலை. சாமியாடி வேட்டைக்குப் போவாராம். அதை எல்லாம் சின்னப் பிள்ளைக பாக்கக் கூடாதாம். பயந்துருவோமாம். நானும் சாமக் கொடன்னா என்னமோ ஏதோன்னு பயந்து போயிருந்தேன். ஆனா, அண்ணன் பெரியவனா ஆன பெறவு அதையெல்லாம் பாத்துட்டு வந்து, ”அதெல்லாம் ஒண்ணுமில்லை. சாமி கொண்டாடி ஆள் நடமாட்டம் இல்லாத எடத்துல, இருட்டுல போயி ஏதோ கொஞ்ச நேரம் நின்னு ஏதோ செஞ்சுட்டு வாராரு. அப்பம் அவருக்கு எதிர்க்கப் போனா சாமி அடிச்சிரும், சாமி குத்தம்னு சொல்லுதாங்க. இதத்தான் சாமி வேட்டையாடப் போகுதுன்னு சொல்றாங்க”ன்னு அண்ணன் சொன்னான்.

சபரி மலைக்கிப் போறாங்க. மகர ஜோதி பாக்கப் போறாங்க. எதிர்த்த மலை உச்சியில ஆட்கள், ஜோதி தெரிய வேண்டிய அந்தக் கருக்கல் நேரத்துல, தீப்பந்ததைக் கொழுத்திக் காட்டுதாங்க. அந்த இருட்டுல ஆட்கள் இருக்கது தெரியாது. அந்த நெருப்பத்தான் மகர ஜோதின்னு சொல்லுதாங்கன்னு இவங்க அப்பா சொல்லுதாஹ. மகர ஜோதி அன்னைக்கி எதிர்த்த மலையில என்ன நடக்குன்னு ஆட்கள் போயிப் பாத்திருக்காங்க. அங்க போயிப் பாத்தா இதுதான் நடந்திருக்கு. கடவுள் நம்பிக்கையை வளர்க்கிறதுக்காக, நம்பிக்கை ஏற்படுகிறதுக்காக இதெல்லாம் செய்தாங்கன்னு ரவியோட அப்பா சொல்லுதாங்க. இது நெசமோ, பொய்யோ? யாரு கண்டது? நமக்கு அடியும் தெரியாது, முடியும் தெரியாது. ஒலகத்துல ஒவ்வொன்னையும் பல விதமாச் சொல்லுதாங்க.

இவுஹ அப்பா, ரவி, கீதாவோட அப்பாதான், ஒவ்வொன்னுக்கும் வியாக்கியானம் சொல்லுத மாதிரி இதுக்கும் சொல்லுதாஹ. ஒலகம் பூரா இந்த மாதிரித்தான் இருக்குங்கிராஹ. எல்லா மதத்லேயும் அற்புதங்க இருக்கு, நம்ப முடியாத நம்பிக்கைகள் இருக்குங்கிறாங்க. இப்பிடி இருக்கும்போது என்னத்தச் சொல்லக் கெடக்கு?

இவுஹ கூட வாழ்ந்து வாழ்ந்து எனக்கே இதுல எல்லாம் ஒரு புடிப்பு இல்லாமப் போச்சு. ஆனா டிவியில செல நேரம் கவர்மெண்டு நடத்துற பங்ஷன்களைக் காட்டுதாங்க. அதுல மந்திரிமார்க, அதிகாரி எல்லாம் குத்து வெளக்கு ஏத்துறாங்க. ஏதோ ஒண்ணு இருக்கப் போயிதான வெளக்கு எல்லாம் ஏத்துதாங்க. கவர்மெண்டு கட்டடத்துக்கு பூமி பூச எல்லாம் போடுதாங்க. இதை எல்லாம் பாத்தா சடங்கு, சம்பரதாயம் எல்லாம் இருக்கத்தான செய்யுதுன்னு தோணுது. கவர்மெண்டே நம்புதபோது நாம நம்பக்கூடாதா?

நூத்துக்குத் தொண்ணூரு அரசியல்வாதிகள், மந்திரிமார்கள் கடவுள் நம்பிக்க உள்ளவங்கதான். ரொம்பப் பேரு அத வெளியில காம்பிச்சுக்கிட மாட்டாங்க. அவ்வளவுதான். மந்திரிமார்க எல்லாம் ரொம்பப் படிச்சவங்க இல்ல. ஜனங்க சப்போர்ட்டுல எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரின்னு ஆயிருதாங்க. இவங்கள விடப் படிச்ச அதிகாரிக எல்லாம் இவங்க கிட்ட கையக் கட்டி நின்னு வேல செய்யுதாங்க. அதனாலே ஏதோ அதிர்ஷ்டத்தால மந்திரி ஆயிட்டோம்ன்னு நெனைக்கிறாங்க. அந்த அதிர்ஷ்டம் கடவுளாலே நடக்குதுன்னு நெனைக்கிறாங்க. வியாபாரிங்களுக்கு ஒரு நாள் நல்லா வியாவாரம் நடக்கு. ஒரு நாள் டல்லா இருக்கு. இதுக்குக் காரணம் அதிர்ஷ்டம்னுதான் வியாபாரிங்க நெனைச்சுக்கிறாங்க. அந்த மாதிரித்தான் அரசியல்வாதிகள், மந்திரிமார்கள் எல்லாம் நெனைக்கிறாங்க. நிச்சயமில்லாத தொழில்ல, வேலையில இருக்கிறவங்க எல்லாரும் கடவுளை, அதிர்ஷ்டத்தை நம்புறாங்க. நெரந்தர வருமானம் உள்ளவங்க, இந்த வருமானம் போயிரக்கூடாது, இது நெலைச்சு நிக்கணும்னு சாமி கும்பிடுதாங்க. பயத்துனால கும்புடுதாங்கன்னு ரவியோட அப்பா வியாக்யானம் சொல்லுதாங்க.

ஆனா, இங்க மெட்ராஸ்ல தீபாவளி ஒண்ணுதான், வெடி எல்லாம் வெடிக்கிறதால பெரிசாத் தெரியுது. திருநவேலியில ஆவணி ஞாயித்துக் கெழமைகள்ள பொங்கல் விடுதது, வைகுண்ட ஏகாதசிக்கி வெரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு வளவோட போறது, சிவன் ராத்திரிக்கி முழிப்பு இருக்கிறதுன்னு இந்த மாதிரி சின்னச் சின்ன கொண்டாட்டம் எல்லாம் இருக்கும். பிள்ளையார் சதுர்த்தி, கார்தியக் கூட பெரிசாத் தெரியும். ஆனா இந்த ஊரிலே எதுவுமே தெரிய மாட்டேங்குது.

Series Navigation<< வாக்குமூலம் – 12வாக்குமூலம் – அத்தியாயம் 14 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.