வண்ணமும் எண்ணமும் ஆயிரம் – பகுதி 1

என்னுடைய பள்ளி ஆண்டுகளில், என் நண்பன் (பரம்) மூலம் எனக்குப் புகைப்படக்கலை அறிமுகம். அந்த காலத்தில், வண்ணப்படம் என்பது சினிமாவில் மட்டுமே. ஆரம்ப நாட்களில் ஒரு தொழில்நுட்ப மற்றும் ஒளி பெளதிக அணுகுமுறை த்ரில்லிங்காக இருந்தாலும், சில வருடங்களில், அதிலுள்ள கலையம்சம் புரிய ஆரம்பித்தது. 

பரம் வீட்டிற்குச் சென்றால், காமிராக்கள் பெரும்பாலும் அரை நிர்வாணமாகவே இருக்கும். அதைப் பிரித்து, பழுது பார்ப்பது பரமுக்கு ஏராளமான சந்தோஷம் அளிக்கும். இந்தக் கலையைக் கற்பவர்கள் பெரும்பாலும் காமிராவின் வெளியிலிருந்து பயணிப்பார்கள். என் பயணம் என்னவோ, காமிராவில் உள்ளிருந்து ஆரம்பித்தது. ஜப்பானியர்களின் நுண் எந்திரவியல் என்னை இந்த உலகிற்குள் இழுத்தது மறுக்க முடியாத விஷயம். அவர்களுடைய நுண் மோட்டார்கள், சின்னஞ்சிறு பல்சக்கரங்களின் கவர்ச்சி, இக்கலையின் பக்கம் என்னை இழுத்தது..

இந்த அணுகுமுறைக்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஃபிலிம் சுருள் என்பது விலை அதிகம் – அதுவும் ஒரு 35 மி.மீ. சுருளில், 24 முதல் 36 புகைப்படங்கள் வரைதான் எடுக்க முடியும். இன்று சகட்டு மேனிக்கு செல்ஃபி எடுப்பது போலல்லாமல், மிகவும் கவனத்துடன் படமெடுத்தல் அவசியம். டிஜிட்டல் உலகைப் போலல்லாமல், தவறுகளுக்கு விலை உண்டு. தயவு பார்க்காமல் தண்டிக்கப்படுவீர்கள்! இதனால், முழு ஒளி பெளதிகமும், நுண் எந்திரவியலும் உதவும் என்ற நம்பிக்கை, எங்களிடம் அசட்டுத்தனமாக நிலவியது.

புகைப்படக் கலை மிகவும் விலையுயர்ந்தது என்ற எண்ணம் எல்லோரிடமும் 1970 -லிருந்து 1990 -கள் வரை இருந்தது. கையில் அதிக காசில்லாத, ஆனால், தொழில்நுட்ப ஆர்வலர்களான பரம், நான் மற்றும் சில நண்பர்கள் இணைந்து, ஃபிலிம் சுருளை கழுவும் வேலை மற்றும் படங்களை அச்சிடுவது என்று ஸ்டூடியோ வேலைகளிலும் இறங்கினோம். இப்படித் தொடங்கியப் பயணம், மெதுவாக ஒரு கலைப் பாதை நோக்கி நகரத் தொடங்கியது உண்மை.

இதுவரை இந்தக் கட்டுரையை வாசித்தவர்கள், ‘சொல்வனத்தில்’, வண்ணப்படம் பற்றிய தொழில்நுட்பத் தொடர் ஒன்றை எழுத ஆரம்பித்துவிட்டதாக நினைக்கலாம். இந்தக் கட்டுரைகளின் நோக்கம் அதுவல்ல. வாசகர்கள், பெருவாரியாக ஆசைப்பட்டால், கமெண்டில் எழுதுங்கள். அதை ஒரு தனிக் கட்டுரைத் தொடராக எழுதலாம்.

’சதி லீலாவதி’ திரைப்படத்தில் வரும் கமல் மகனாக நடித்த பையனை வைத்து, க்ரேஸியின் ஜோக்கைப் போல, ‘முன் ஜென்மத்தில் பாம்பாக இருந்திருப்பேனோ’ என்று அடிக்கடி சந்தேகம் வரும். காமிரா தொழில்நுட்பம் வளர வளர, புதிய SLR (Single Lens Reflex) காமிராக்கள் வரத் தொடங்கியது. சற்று கனமான இவ்வகை காமிராக்களை கையாள்வது ஒரு கலை என்றாலும், அதில் எடுக்கும் படங்களின் துல்லியம் முன்னிருந்த TLR (Twin Lens Reflex) காமிராக்களை விட நன்றாகவே இருந்தது. கனமான காமிராக்களை அநாயாசமாக கையாள்வதில் என் போன்றோருக்கு அக்காலத்தில் (1990 -கள்) அவ்வளவு பெருமை! 

மெதுவாக வண்ணப்படம் எடுப்பது பட்ஜெட்டுக்குள் வந்தது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், சுருளைக் கழுவுவது மற்றும் அச்சடிக்கும் வேலையை ஸ்டூடியோ செய்யும் பொழுது, ஒரு கட்டுப்பாடு நம்மை விட்டுச் சென்ற மனநிலை எங்களைப் போன்றோரை அந்த நாட்களில் ஆட்டிப் படைத்தது. ஸ்டூடியோக்களைக் குறை சொல்வது எங்கள் அன்றாட வழக்கமாகியது!

இருபத்தியோராம் நூற்றாண்டு, வண்ணப்படக்கலையில் மிக முக்கிய முன்னேற்றங்கள் நிகழத் தொடங்கியது. சாதாரணர்கள் வாங்கக் கூடிய டிஜிட்டல் காமிராக்கள் அறிமுகமாயின. ஒரு புறம் ஃபிலிம் சுருள் SLR காமிராக்கள் கைவசம் இருந்தாலும், கவனம் டிஜிட்டல் காமிராக்கள் பக்கம் திரும்பியது. இதற்குப் பல காரணங்கள் உண்டு:

  1. படமெடுத்த உடனே அதைப் பார்க்க முடியும். இதற்கு முன்னர், போலராய்ட் காமிராக்களில் மட்டுமே அது சாத்தியம்
  2. சரியாக வராத படத்தை, நீக்க முடியும்
  3. பிடித்த, சரியான படங்களை மட்டுமே ஸ்டூடியோவுக்குச் சென்று அச்சடித்துக் கொள்ளலாம்
  4. அச்சடிக்கும் செலவும் சரியத் தொடங்கியது

சுருள் காமிராக்கள், அத்துடன் வந்த லென்சுகள் எல்லாம் தூசு அடையத் தொடங்கின. 21 -ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், டிஜிட்டல் காமிராக்கள் (2 முதல் 3 மெகாபிகஸல்) அவ்வளவு துல்லியத்தை அளிக்காவிட்டாலும், பல வசதிகளை அளித்ததால், என் போன்றோரின் கவனம் டிஜிட்டல் பக்கம் திரும்பியது.

மெதுவாக டிஜிட்டல் SLR, அதாவது, DSLR காமிராக்கள் வரத் தொடங்கின. SLR என்பது ஒரு படத்தை , 45 டிகிரி கண்ணாடி வைத்து, நமக்குக் காட்டும் முறை. எல்லாவற்றையும் சரி பார்த்து, க்ளிக்கினால், காட்சியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்கி, காமிரா அல்லது ஒளி உணர்வியில் பதிவாகும் முறை. இதில் உள்ள வசதி, காமிரா பார்ப்பதை, பதிவு செய்யும் முன்பு, நாமும் பார்க்கிறோம். இதற்கு முன்னம் இருந்த காமிராக்களில், யானையைப் பார்த்து படம் பிடித்து, ஃபிலிம் சுருளைக் கழுவி, அச்சடித்தபின், யானையில் வால் காணாமல் போவது சாதாரணம்! அந்தப் பிரச்சினை SLR உலகில் இல்லை. 

காமிராக்களில், மின்னணு சில்லைகள் ஏராளமான விஷயங்களை மேலும் கொண்டுவரத் தொடங்கின. மிக முக்கியமாக, எல்.சி.டி. திரைகள் சல்லிசாகக் கிடைத்ததால், எல்லா DSLR காமிராக்களும், காட்சியைத் தெளிவாகக் காட்டத் தொடங்கின. மெதுவாக, ஒளி உணர்விகள் முன்னேற்றமடைந்து, ஃபிலிம் சுருளின் துல்லியத்தைத் தொடத் தொடங்கின. மிக முக்கியமாக, ஃபிலிம் சுருள் காமிராக்களில் ஒரு பிரச்சினை இருந்தது. கடற்கறையில் படம்பிடிக்க ஒருவகைச் சுருள், குறைந்த ஒளியில், இரவில் படம் பிடிக்க இன்னொரு சுருள் என்று பலவகை உண்டு. இல்லையேல், ஃப்ளாஷைப் பயன்படுத்தி, அனைவரையும் ஒளியில் குளிப்பாட்டிப் படம் பிடிக்க வேண்டும். DSLR காமிராக்கள் இந்தக் குறையை அழகாகத் தீர்த்து வைத்தன. இவ்வகைக் காமிராக்களில், ஒளிக்குத் தகுந்ததாற்போல, சில settings (ISO) மூலம், கடற்கரை மற்றும் இரவுக் காட்சிகள் சாத்தியம். இந்த முன்னேற்றத்திலும், ‘என்னதான் இருந்தாலும், ஒரு 800 ASA  பிலிம் சுருள் போல வருமா’ என்று அழுதவர்கள் உண்டு!

என்னதான் எல்.சி.டி. திரை இருந்தாலும், பல பட்டன்களை இயக்க வேண்டியிருந்தது பலரையும் அச்சுறுத்தும் விஷயம். என்னுடைய முதல் DSLR காமிராவைப் பார்த்து, விமான காக்பிட் போல இருப்பதாகக் கிண்டலடித்தவர்கள் உண்டு. ஆனால், அதை நான் வைத்திருந்த கடைசி நாள் வரை, எந்த ஒரு பட்டனும் குறையில்லாமல் வேலை செய்தது ஜப்பானிய நுண் எந்திரவியலின் வெற்றி.

அடுத்தபடியாக வந்த பெரிய முன்னேற்றம், எல்.சி.டி. திரைகளில் கணினிகளில் இருப்பது போல வருடும் வசதி. இது, பல பட்டன்களைக் குறைத்தது. மெதுவாக, DSLR காமிராக்களில் விடியோ படம் எடுக்கும் வசதியும் வரத் தொடங்கியது. இந்த முன்னேற்றங்களை இங்கு சொல்லக் காரணம், ஒவ்வொரு முன்னேற்றப் படியிலும், நான் DSLR காமிராக்கள் வாங்கி,  நண்பர்கள் / உறவினர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதுதான்! ”வரவில் கணிசமான பகுதியை இப்படி வண்ணப்படக் கலைக்கே செலவழிக்கிறான்!”. ஏனென்றால், ஒவ்வொரு காமிராவுடன், சிலபல லென்சுகளும் வேண்டும். அதுவும், முதலில் யாஷிகா, பிறகு மினோல்டா, அப்புறம் ஒலம்பஸ் என்றால், ஒன்றுடைய லென்சு மற்றொன்றுடன் வேலை செய்யாது!

கடைசியாக வந்தூள்ள பெரிய முன்னேற்றம், கண்ணாடியற்ற டிஜிட்டல் காமிராக்கள். அதாவது, DSLR காமிராக்களில், உள்ள 45 டிகிரி கண்ணாடி, காமிராவை சற்று கனமாக்கியதுடன், பெரிதாகவும் ஆக்கியது. இன்றைய காமிராக்கள், Mirrorless வகையைச் சேர்ந்தவை. சின்ன உடலுடன், சின்ன லென்சுகளுடன் வரும் இவ்வகை காமிராக்களில், சிலபல லென்சுகளைப் பொருத்தலாம். ஏன், சினிமாவே எடுக்கலாம். ஆனால், பழைய DSLR காமிராக்களின் லென்சுகள் இந்த சன்னமான காமிராக்களுக்கு ஒத்து வராது. அதற்கென்று சில வஸ்துக்களைச் சேர்த்துப் பயன்படுத்தினால், கங்கை அமரன் படத்தை மனிரத்னம் டைரக்ட் செய்வதுபோல இருக்கும்!

காமிராக்களைப் பற்றியே சொல்லி, ஒரு மிக முக்கிய விஷயத்தைக் கவனிக்காமல் போவது வண்ணப்படக் கலைக்கே துரோகம். டிஜிட்டல் காமிராக்களுடன் பிறந்த ஜோடிக் குழந்தை, வண்ணப்படங்களை மெருகேற்றும் மென்பொருட்கள். ”எந்த மாற்றமும் இன்றி, துல்லியமாகப் படம் பிடித்த சூரர்” என்பதெல்லாம் அந்தக் காலம். இன்று பதிவாக்கப்படும் ஒவ்வொரு நல்ல வண்ணப்படம் மற்றும் விடியோவும் மென்பொருள் கொண்டு மெருகேற்றப்படுவது உண்மை. முகநூலில் துப்பப்படும் திறன்பேசி வண்ணப்படங்கள் தவிர நாம் பார்க்கும் அனைத்து நல்ல வண்ணப்படங்களும் ஏதோ ஒரு வகையில் மென்பொருள் கொண்டு உயிர் பெற்றவை. ஏன், பாஸ்போர்ட் வண்ணப்படத்திற்குக்கூட, சின்ன ஃபோடோஷாப் உதவி தேவை! எப்படி ஒரு கணக்காளருக்கு SAP அல்லது Oracle தெரிய வேண்டுமோ, அப்படி ஒரு வண்ணப்படக் கலைஞருக்கு, Adobe Lightroom, Affinity Photo, Dark Table போன்ற வஸ்துக்கள் தெரிந்திருக்க வேண்டும்.

இவ்வளவு தொழில்நுட்பம் (இதில் திறன்பேசி காமிராக்களை வேண்டுமென்றே ஒதுக்கி வைத்துள்ளேன்!) கடந்து வந்தாலும், அடிப்படை வண்ணப்படக் கலை என்னவோ ஒன்றுதான். ஒளியைப் பதிவு செய்யும் முறைகள் சற்று வேறுபட்டாலும், அடிப்படை எல்லாம் ஒன்றுதான். எந்தக் காட்சியை நாம் கண்ணால் காண்கிறோம், எப்படி அதை ஒரு காமிரா பதிவு செய்யும்? எந்தக் கோணத்தில், ஒரு வண்ணப்படம் அழகாக இருக்கும்? ஒரு வண்ணப்படத்தில் என்ன கதை சொல்லலாம்? எப்படி இயற்கையுடன் சேர்ந்து ஒளி விளையாட்டு விளையாடலாம்? எப்படி இயற்கை சரியான ஒளியை தராவிட்டாலும் சமாளிப்பது? எப்படி கண்ணால் பார்ப்பதை விட அழகாக ஒரு காட்சியைப் பதிவு செய்வது? எப்படி, நகரும் ஒரு நதியை, பறவையை, மிருகத்தை, காரை, மனிதரைப் பதிவு செய்வது? எப்படி ஒரு இயற்கை காட்சியில் டிராமா உண்டாக்குவது? எப்படி நிழலை ஒரு கருவியாக்குவது? எப்படி வண்ணத்துடன் கருப்பு வெள்ளையை இணைப்பது? எப்படி வண்ணங்களை கண்ணுக்கு இதமாக்குவது? இவை, சில அடிப்படை வண்ணப்படக்கலை சார்ந்த, தொழில்நுட்பத்தைத் தாண்டிய கேள்விகள். இவ்வகைக் கேள்விகளுக்கு பதில் காண்பதே இந்தக் கலையின் நோக்கம்.

இப்படி இயற்கையை வண்ணப்படங்களாய் பதிவு செய்வதை பல சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டினாலும், அதனால் எந்த விதப் பயனும் இல்லாமல் இருந்தது. ஓரளவு, இந்தக் கலையில் எல்லாம் நமக்கு தெரியும் என்ற பிரமையும் சில நேரங்களில் ஏற்பட்டதுண்டு. சமூக வலைத்தளங்கள் பிரபலமடைந்து, எல்லோரையும் போல, நான் எடுத்த வண்ணப்படங்களை மேலேற்றியவுடன் பலரும், ‘லைக்’ போடுவது வழக்கமானாலும், அதில் ஏதோ இடித்தது. கோணலாக எடுத்த திறன்பேசி வண்ணப்படங்களுக்கும் அதே ‘லைக்’ கிடைத்தது. நல்ல வேளை உஷாராகி, இதில் அர்த்தம் எதுவும் இல்லை என்று உடனே புரிய ஆரம்பித்தது!

2018 -ல் புதிய காமிரா மற்றும் லென்சுகள் பலவற்றையும் வாங்கியபின், அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று தீவிரமாகப் படிக்க மற்றும் காணொளிகளைப் பார்க்கத் தொடங்கினேன். இதுவரை வாங்கி, கற்றுத் தேர்ந்ததைவிடச் சிறப்பாக ஏதோ செய்ய வேண்டும் என்ற உந்துதல் என்னுடைய 6 -வது கேமரா வாங்கியபின் தோன்றியது விந்தைதான். 

எனக்குத் தேவையான காமிரா உபகரணங்கள் யாவையும் சேகரித்தபின் தோன்றியது ஒரு விஷப் பரீட்சை பற்றிய எண்ணம். ‘லைக்’ கை விட்டுவிட்டு, ஏன், உலகில் மிகச் சிறந்த வண்ணப்பட கலைஞர்களுடன் போட்டியிடக் கூடாது? இதுவரை என் வண்ணப்படங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டியவர்கள் எவரும், ஒரு பைசா கொடுத்து, அதை வாங்கவில்லை. ஏன் என் வண்ணப்படங்களை விற்கக்கூடாது? உண்மையாகவே ஒரு நல்ல வண்ணப்படக் கலைஞனாக இருந்தால், எடுத்த படங்களை யாராவது வாங்க மாட்டார்களா? 

இப்படித் தொடங்கியதுதான் என் வண்ணப்படங்களை விற்கும் முயற்சி. இதில், சில முக்கிய சில குறிக்கோள்களும் அடங்கும்.:

  • நல்ல காமிராக்கள் மற்றும் லென்சுகள் விலை உயர்வாக இருந்தாலும், அவை நல்ல படமெடுக்க உதவும் கருவிகள்
  • நல்ல வண்ணப்படங்கள் விலைக்குப் போனால், செலவழித்த பணத்தை மீட்கலாமே
  • இந்தக் கலையைப் பல்லாண்டுகளாகக் கற்றுத் தேர்ந்த நம்மால் இது நிச்சயம் முடியும்

இப்படிச் சற்று அசட்டுத்தன எண்ணங்களோடு தொடங்கியது என்னுடைய வண்ணப்பட விற்பனை முயற்சிகள். இந்தக் கட்டுரைத் தொடர், இந்த முயற்சியைப் பற்றிய அறிமுகம். இவ்வகைச் சுய தொழில்நுட்ப அனுபவக் கட்டுரைகள் தமிழில் அதிகம் எழுதப்படாததால், இது படிக்கச் சுவாரசியமாக இருக்கும் என்பது என் எண்ணம். இது ஒரு கோவிட் போல அலை அலையாய் சமாளிக்க வேண்டிய ஒன்று என்று ஆரம்பத்தில் எனக்குத் தெரியவில்லை. கோவிட்டைச் சமாளிக்கும் பொது மருத்துவர்கள் போல கடந்த 4 வருடங்களாக இந்தப் பயணத்தில், ஒரு மைல்கல்லை எட்டியதால் கட்டுரை எழுதலாமே என்று தொடங்கியுள்ளேன். இந்த முயற்சியின் பின்னணியை அடுத்த பகுதியில் விவரமாகப் பார்ப்போம்.

Series Navigationகையில் கேமிரா இருந்தால் வங்கியில் கோடிகள்! எப்படி? >>

4 Replies to “வண்ணமும் எண்ணமும் ஆயிரம் – பகுதி 1”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.