
பல நேரங்களில் நம்மை நாம் நேசிப்பதும், நம்மை நாமே வெறுப்பதும் நடக்கிறது. தன் கோட்பாட்டிற்கும், அதையே வேறு விதக் கோட்பாடாகச் சொல்லி தன்னுடன் தானே சண்டையிட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டென். பொது சார்பியல் கோட்பாட்டில் 1915ல் அவர் காலவெளியில் சக்தியையும், ஆற்றலையும் பற்றிப் பேசினார். சூரியன், பூமி போன்ற பெரிய பொருட்கள், தாம் நின்று கொண்டு சுழலும் காலவெளியை, தம் எடையினால் கீழ் நோக்கி வளைப்பதால் ஏற்படுவதே ஈர்ப்பு விசை என்பது அந்தத் தேற்றம். அவரே 1905ல் குவாண்டம் இயக்கவியலின் அடிப்படையைச் சொன்னவர். மரபார்ந்த இயற்பியல் விதிகளை அசைக்கும் கோட்பாடுகள் குவாண்டம் இயற்பியலில் உள்ளதால், அவர் சொன்னதை அவராலேயே ஏற்க முடியவில்லை. “கடவுள் பகடை ஆடுவதில்லை” என்பது அவரது கூற்று. அவரது சுய முரண் 1935-ல் அவர் வெளியிட்ட கட்டுரையால் பெரிதும் பேசப்பட்டது. அவரும் நேதன் ரோசனும் (Nathan Rosen) இணைந்து எழுதிய கட்டுரையில், பொது சார்பியல் கோட்பாட்டின் படி கருந்துளைகள் இணைகளாக, குறுக்கு வழியில் காலவெளியினால் இணைக்கப்பட்டு (ஐன்ஸ்டென்- ரோசன் பாலம்- புழுத் துளைகள்- Einstein-Rosen bridges — “wormholes.”) உருவாகும் எனக் கூறப்பட்டிருந்தது. அப்போது கருந்துளை என்ற பெயர் கிடையாது. (கருந்துளை என்ற பெயர் வைத்தவர் ஜான் வீலர்.) மற்றோர் கட்டுரை இவர்கள் இருவரும் போரிஸ் பொடோல்ஸ்கியுடன் (Boris Podolsky) இணைந்து எழுதியது- குவாண்டம் இயற்பியலின் நிலையாமை தத்துவத்தின் படி, தொடர்பிலுள்ள ஒரு ஜோடித் துகள்கள், பல்லாயிர ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும், என்றென்றும் இணைந்திருக்கும் என்பதால், குவாண்டம் இயற்பியல் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை என்ற சித்தாந்தம் கொண்டது அந்தக் கட்டுரை. அத்தகைய ஒரு துகளின் குணத்தை நீங்கள் அறிகையில், பிரிந்துள்ள அதன் இணையின் குணம் தானாகவே புலப்பட்டுவிடும். சுண்டிய நாணயத்தின் பார்க்கப்படும் பகுதி தலை என்றால், மற்றொன்று வாலல்லவா? இந்தத் தன்மையைத்தான் ‘பயப்படுத்தும் ஒன்று’ அவர் சொன்னார். இல்லை அதுதான் குவாண்டப் பிணைப்பு அல்லது சிக்கல் என இன்று சொல்கிறோம்.
‘அணுவில் அணுவை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங்கூறிட்டு அணுவில் அணுவை அணுகவல்லார்கட்கு அணுவில் அணுவை அணுகலுமாமே’ என்று சொல்கிறது திருமந்திரம்.
இன்றைய இயற்பியலில் நாம் அணுவை ப்ரோட்டான், ந்யூட்ரான், எலெக்ட்ரான் எனப் பகுத்து, பின்னர் குவார்க்குகளுக்குள் புகுந்து அதைக் கூர்மையாக அறிகிறோம். ஒரு ப்ரோட்டானில் இரண்டு மேல் குவார்க்குகளும், ஒரு கீழ் குவார்க்கும் இருக்கின்றன. ந்யூட்ரானில் இரண்டு கீழ் குவார்க்க்குகள், ஒரு மேல் குவார்க் இருக்கிறது. இவை உருவாக்குபவையே ஹாட்ரான். மிக அதிக சக்தியுடன் இவை மோதும் போது ஈர்ப்பு சக்தியில் சிறிதளவு, அந்த இடத்திலிருந்து மறைந்து போகுமெனவும், அப்படி மறைந்து போவது இந்த அகிலத்தில் வேறு பரிமாணங்களைக் கொள்ளலாம் எனவும் அது ஒரு இணை அண்டமெனவும் அறிவியல் சொல்கிறது. நம் கவனம் அந்த மர்மமான முறையில் மறையும் அந்த ஈர்ப்பு விசையின் மீது தான். அதைத்தான் கருந்துளை- புழுத் துளை என்ற சொற்களால் விளக்கப் பார்க்கிறோம். இன்று வரை ஈர்ப்பு விசையை அளக்கும் கணிதம் இல்லை. அதன் மாதிரிகள்- அதாவது கணித மாதிரிகள் முயலப்படுகின்றன.
ஈர்ப்பு விசை, வெளியை, பேரண்டத்தை, விண்மீன் மண்டலத்தை ஆட்சி செய்கிறது. ஆனால், உள்வெளியை, அடிப்படைத் துகள்களை ஆள்கிறது குவாண்டம் இயக்கவியல். இவ்விரண்டும், உற்றவர்களோ, அயலவர்களோ என்றே அரசாள்வதாக நினைத்திருந்தோம். அதனால், பேருலகின் பிறப்பைப் பற்றி அறிவது மிகக் கடினமாக இருந்தது.
கடந்த பத்தாண்டுகளில் பனிப்புயல் வேகத்தில் நடை பெற்று வரும் ஆய்வுகள், அண்டவியலின் இந்த இரு வேறுக் கூற்றுக்கள் உண்மையில் சார்புள்ளவை எனக் காட்டுகிறது. இதன் அர்த்தம் அச்சம் தரும் வியப்புதான்; முப்பரிமாணமுள்ள இந்த உலகம்- ஏன் நாமும் கூட முப்பரிமாணப் படிமங்கள் ( holograms) என்ற கருத்தை இது ஏற்படுத்துகிறது. அண்டவியலின் இந்தக் கோட்பாட்டின் படி, ‘இதற்கும்’, ‘அதற்கும்’, ‘அங்கேக்கும்’, ‘இங்கேக்கும்’ ‘இப்போதைக்கும்’, ‘அப்போதைக்கும்’ ‘காரணத்திற்கும்,’ ‘விளைவிற்கும்’ வேறுபாடுகள் கிடையாது எனச் சொல்ல முயலலாம். ‘மரத்தில் மறைந்தது மாமத யானை, மரத்தை மறைத்து மாமத யானை!’
அப்படியென்றால், ஈர்ப்பு விசையும், குவாண்டம் இயக்கமும் ஒன்றா? ஸ்டான்போர்ட் பல்கலையைச் சேர்ந்த லேனர்ட் சஸ்கின்ட் (Leonard Susskind of Stanford University) இவை இரண்டும் பிரிக்க முடியாதவை, ஒன்றை மட்டும் அறிவதில் முழுச் சித்திரம் கிடைப்பதில்லை என்று தன் கட்டுரையில் 2017-ல் எழுதினார். ஈர்ப்பு விசையையும், குவாண்டம் ஈர்ப்பினையும் இணைக்கும் ஒரு தேற்றம் உருவானால், ஒருக்கால், இந்த உலகம் எப்படித் தொடங்கியது என்று அறியக்கூடும் என்று அவரும் அவரது சகஆராய்ச்சியாளர்களும் கருதுகின்றனர்.
குவாண்டம் போடும் சித்திரங்களின் விசித்திரங்களை ‘மேஜிக்’ என்றும், அதைப் புரிந்து கொள்ள நாம் முயல வேண்டுமென்றும் இயற்பியலாளர் டேவிட் மெர்மென் (N. David Mermin) கருதுகிறார்.
“குவாண்டச் சிக்கலில் இருப்பவைகளுக்கான குணம் என்பது அது ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இருப்பதுதான். ஒரு குடுவையில் பாதி அளவில் ஒரு திரவம் இருந்தால், நாம் அதை பாதி காலியாக உள்ளது என்றே நினைக்கப் பழகியிருக்கிறோம்; அதாவது பொருள் சார்ந்த சிந்தனைகள் புரிபவையாகவும், எளிதான ஒன்றாகவும் இருக்கிறது.” எனச் சொல்கிறார் டேனியல் கேபேட் (Daniel Kabat) என்ற அறிவியலாளர்.
1935-ல் வெளியிட்ட இரு கட்டுரைகளுக்கும் இடையில் பொதுவான விஷயங்கள் இருக்கக்கூடுமென்று ஐன்ஸ்டென் நினைக்கவில்லை; ஆனால், சஸ்கின்ட் மற்றும் இதர அறிஞர்கள் ‘புழுத் துளைகளும், பயமுறுத்தும் (குவாண்ட) நிகழ்வும், ஒரே மாயத் தந்திரத்தின் இரு அம்சங்களாக இருக்கலாம் என ஊகிக்கிறார்கள். இந்தச் சிந்தனை அண்டத்தின் முரண்களை விளக்கக்கூடுமெனவும் எதிர்பார்க்கிறார்கள்.
இருட்டில் வீசப்பட்ட பகடை
வானியலாளர்களுக்கு கருந்துளை என்பது, விண்மீன்களை உண்ணும், விண்மீன் மண்டலங்களைச் சிதைக்கும், ஒளியையும் சிறைபிடிக்கும், கரும் அசுரர்கள். கருந்துளையின் விளிம்பில் காலம் நின்றுவிடுகிறது. அதன் மையத்தில் பொருட்கள் சுருங்கி முடிவிலா அடர்த்தி கொள்கின்றன. நாமறிந்த இயற்பியல் விதிகள் இங்கே தோற்கின்றன. ஆனால், அடிப்படை விதிகளை விளக்க முயலும் இயற்பியலாளர்கள், கருந்துளைகளை மர்மம் நிறைந்தனவாகவும், கற்பனைகளாகவும் காண்கின்றனர்.
1974-ல் அண்டவியலாளர் ஸ்டீபன் ஹாகிங்,( Stephen Hawking) தன் கணக்கீட்டை வெளியிட்டார்- அதன்படி, குவாண்ட இயற்பியலைக் கருத்தில் எடுத்துக் கொண்டு கருந்துளைகள், கருப்பாகவோ, நிரந்தரமாகவோ இருப்பவை அல்ல என்று அறிவியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். பல யுகங்களில், துணைஅணுத் துகள்களையும், சக்தியையும், தன்னிடமிருந்து ஒழுகச் செய்து, சுருங்கி, தாங்க முடியாத வெப்பமடைந்து முடிவில் கருந்துளைகள் வெடிக்கும் என்றார். அப்படி நிகழ்கையில், தான்தோன்றித் தனமாக (சீரான முறையில்லாமல்) தன்னிலிருந்து கதிர்வீச்சாகவும், துகள்களாவும், பலகாலமாகத் தான் முன்னே உண்டவற்றை (பலகாரங்களை!) வெளிஅகிலத்திற்கு அது திருப்பிக் கொடுக்கும் என்றும் கூறினார்.
இது நல்ல செய்திதானே? அண்டம் உயிர்த்தெழுதல் இன்பமான விஷயம் அல்லவா? ஆனால், இயற்பியலின் விதிகளுக்கு அது உட்பட்டதாக இல்லையே? அடிப்படையே ‘செய்திகள்’ சேதமடையாது என்பதல்லவா? பில்லியர்ட் விளையாட்டில் குவிந்து கிடக்கும் பந்துகள், விசையை ஒத்து பல திசைகளில் ஓடும்; ஆயினும், அவை முன்பிருந்த நிலை, தற்போதுள்ள நிலை, இவற்றின் அடிப்படையில் நாளை என்னவாகும் என்ற கணிப்பு, அது கருந்துளைக்குள் விழுந்தாலும், அறியத் தர வேண்டும். ஒரு கருந்துளைக்குள் விழும் பூனையின் நிறமும், பெயரும், குணாதிசயங்களும் கருந்துளை சீரற்ற முறையில் வெளியிடும் துகள்களில் காணக்கிடைக்காதே? இதுதான் ஹாகிங் தேற்றத்தின் முரண் எனக் கொள்ளப்படுகிறது- அதாவது இயற்பியல் விதிகள் இங்கே செல்லுபடியாகவில்லை. அவர் 1976ல் சொன்னார்-கடவுள் பகடை விளையாடுவது மட்டுமில்லை, கட்டைகளை மனம் போன போக்கில் விட்டெறிகிறார்!
இது சஸ்கின்ட்டிற்கு ஏற்புடையதாக இல்லை. ஸ்டீபன் என்ன சொல்ல முயல்கிறார் என்பதே எனக்குப் புரியவில்லை என்றார் அவர்.
உண்மையைக் குறியாக்கம் செய்தல்
ஒரு நாள் தன் வளாகத்திலுள்ள இயற்பியல் கட்டிடத்தின் நடைபாதையில் ஒரு இளம் பெண்ணின் முப்பரிமாணப் படத்தை அவர் பார்த்தார். ஹோலோகிராமென்பது ஒரு பொருளை ஒளியால் வடிவமைப்பது. கிளர்கதிர் (லேசர்) வழியே ஒரு பொருளுக்கு ஒளியூட்டி அதன் பிரதிபலிப்பு வகைமுறைகளை ஒரு படத்தட்டில் பதிவு செய்து, அந்தப் படத்தட்டில் மீண்டும் ஒளி பாய்ச்ச, முப்பரிமாணத்தில் அந்தப் பொருளைப் பார்க்கலாம்.
அவருக்கு உடனடியாக இது தோன்றியது “இந்தச் சூழலில் தகவல் என்பது இரு வேறு வழிகளில் மீள்படைப்புச் செய்யப்படுகிறது. ஒரு பக்கம் கண்ணெதிரே தோன்றும் ‘நிஜமெனத் தோன்றும் பொருள்’; மறு புறத்தில் அதே தகவல் முப்பரிமாணப் படத்தில் குறியாக்கமாக இருக்கிறது. மிக அருகில், அது கீறல்களின் கொத்து எனவும், மிகச் சிக்கலான குறியாக்கமெனவும் தோன்றுகிறது. அந்தப் படத்தின் கீறல்களைச் சரியாகக் கோர்த்தால், எதையும் முப்பரிமாண வடிவில் கொண்டு வர முடியும். அப்படியென்றால், கருந்துளை ஒரு ஹோலோகிராமமாகவும், அதன் நிகழ்வுப் பரப்பெல்லை (Event Horizon) ஃப்லிமாக, கருந்துளையின் உள்ளே என்ன இருந்ததென்று குறியாக்கம் செய்கிறதோ என்று எண்ணமிட்ட அவர், ‘எத்தனை விசித்திரமாக, நகைப்பிற்குரியதாக தனக்கு கருத்துக்கள் உதிக்கின்றன’ என்றும் வியந்தார்.
அட்லாண்டின் மறு முனையில் நெதர்லாந்திலிருந்த டச்சு இயற்பியலாளரான ஜெராடஸ் ஹூஃப்ட் (Geradus’t Hooft) இதையே நினைத்தார். பொது சார்பியல் கோட்பாட்டின் படி, கருந்துளையோ, முப்பரிமாணமுள்ள எதுவுமோ, கற்பனையாக அவற்றைச் சுற்றியுள்ள மேற்பரப்பு கொள்ளக்கூடிய தகவல்கள் எத்தனை துணுக்குகளைக் குறியாக்கம் செய்ய முடியும் என்ற எல்லை இருக்கிறது. ப்லேங்க் நீளம் (Planck Length) என்று அழைக்கப்படும் இது மிக மிகச் சிறிய அளவிலான கணக்கீடு. அது 10_33 என்ற படத்துணுக்கு அளவை. ஒரு சதுர சென்டிமீட்டரில் குவார்ட்ரில்லியன் (Quadtrillion- one followed by 15 zeroes) மெகாபைட் (Megabytes- 10 lakhs bytes) தகவல்கள் என்பதே மலைப்பு தருவது-ஆனால் முடிவிலாத ஒன்றல்ல. ஜேக்கப் பெக்கென்ஸ்டைன் (Jacob Bekenstein) என்ற இயற்பியலாளர், எந்த ஒரு பரப்பிலும் சேகரமாகும்/ நாளடைவில் சேகரமாகும் தகவல்களுக்கு உச்ச வரம்பு ஒன்று உண்டு- அது அதன் வரையறுக்கப்பட்ட இடத்தின் சாத்தியக்கூறுகளுள்ள சக்திக்கு உட்பட்டது என்று காட்டினர். 1993-ல் அவர் எழுதினார் “இதை இயற்கையின் கணக்குப் பேரேட்டு முறை எனச் சொல்கிறோம்; தகவல் மேற்பரப்பில் எழுதப்படலாம்- அந்தப் பேனாவிற்கோ வரைமுறைக்குட்பட்ட அளவு இருக்கிறது.”
சூப்-கலன் உலகம் (Soup-can Universe)
இந்த அகிலம் ஒரு முப்பரிமாணமுள்ள ஹோலோகிராம் எனும் கருத்து இதன் பின்னர் வலுப் பெற்று வந்தது. துணைஅணுத்துகள்களை மணி இழைகள் (Spring Theory- The theory of everything- An assumption) என்று ஊகித்த ஹாகிங் கோட்பாட்டினைக் கொண்டு, பிரின்ஸ்டனிலுள்ள, மேல்படிப்பு அமைப்பில் கோட்பாட்டு இயற்பியலாளராகப் பணியாற்றிய ஜ்வான் மால்டசேனா (Juan Maldacena) இந்த உலகத்தை ஒரு ஹோலோகிராமாக, கணித மாதிரியில் அமைத்துக் காட்டினார். அவரது புரிதலின் படி, இடத்தின் சில பகுதியில் நடப்பவை, அதன் எல்லையில் குவாண்டப் புலம்களாகக் குறியாக்கமாகின்றன. இவரது இந்த மாதிரியை சூப்-கலன் உலகம் என்று அறிகிறோம்- அதாவது, நான், நீங்கள், விண்மீன் மண்டலம், கருந்துளைகள், ஈர்ப்பு விசை, விண்மீன்கள் மற்ற இன்ன பிறவும் கலனுக்குள் இருப்பவை. வெளிப்புறத்தில் உட்புறத்தில் இருப்பவை பற்றிய பட்டியல் இருக்கிறது! ஹார்லிக்ஸ் பாட்டிலில் நீங்கள் மால்ட், சர்க்கரை, கோதுமை இவற்றை இணைத்துப் பொடியாக்கப்பட்ட ஒன்றைப் பார்க்கிறீர்கள்- அதன் உட்பொருள்கள் என்னென்ன என்பதை அதன் லேபிளில் அறிகிறீர்கள். கலனுக்குள் இருப்பது திடப் பொருள்- கலனும் திடப் பொருள்; அந்தப் பொருள் ஒரு எல்லைக்குள் அடங்கியுள்ளது- இவை ஒன்றை ஒன்று சார்ந்த, ஒன்றுகொன்று துணையான நிகழ்வு.
உள்ளேயிருக்கும் ஹார்லிக்ஸ் துகள்கள், அதன் செய்திகளைத் தன்னுள் கொண்டிருப்பது அது குவாண்ட விதிமுறைகளைப் பின்பற்றுகிறது என்பதற்குச் சான்று. எனவே, உள்ளிருக்கும் ஈர்ப்புப் புலம்களும் செய்திகளைப் பாதுகாத்து வைத்திருக்கும். அப்படியிருக்கையில், ‘செய்திகள்/தகவல்கள் அழியாது’ என்று மால்டசேனா 2004ல் ஒரு அறிவியல் அரங்கில் எடுத்துரைத்தார். ஹாகிங் அதை ஒத்துக் கொண்டார்- ‘ஈர்ப்பு விசை ஒரு பெரிய அழிப்பானில்லை’.
‘உலகம் பொருள்படுகின்றது’ என்று தன் நேர்காணலில் சஸ்கின்ட் சொன்னார். “பித்தெனத் தோன்றுவதுதான் இந்த ஹோலோகிராம் சிந்தனை; தரத்தில் மேம்பட்ட ஒரு ஆய்வகத்தை, அதனுள்ளே ஒரு பெரிய வெற்றுக் கோளத்தைக் கற்பனை செய்யுங்கள். அந்த வெற்றுக் கோளமானது சிலிக்கான் போன்ற சில விசேடப் பொருட்களால் ஆனது. அதில் பொருத்தமான குவாண்டப் புலம்கள் இருக்கட்டும். பின் இந்தக் கோளத்துடன் வினை செய்யுங்கள், பரிசோதனையில் இறங்குங்கள்; அதன் உள்ளிருப்பவைகள் என்ன பதில் சொல்கின்றன என்பதற்குக் காத்திருங்கள். இதை விடுத்து, அதன் மேலோட்டைக் களையுங்கள்; அதில் நீங்கள் எதையும் பார்க்க மாட்டீர்கள். உள்ளே இருக்கும் நம்மால் அந்த முப்பரிமாணத்தைப் படிக்க முடியாது; ஏனெனில் நாமேதான் அந்த முப்பரிமாணம்.
எங்கும் எங்கும் புழுத்துளை
நமது நிஜ உலகத்திற்கு எல்லைகள் இல்லை. மால்டசேனாவின் கணித மாதிரி எல்லைகளைக் கொண்டது. இருந்த போதிலும், ஒரு தெளிவை, அவரது கணித மாதிரி இயற்பியலாளர்களுக்குத் தந்தது. ஈர்ப்புவிசையும், குவாண்ட இயக்கமும் ஒன்றுக்கொன்று இணக்கமாக உள்ளன; நம் உலகம் இயங்கும் விதத்தைப் பற்றிய சில நுண்விவரங்கள் புரிபடலாயின. ஆயினும் அவர் ஒன்றை எடுத்துச் சொன்னார்-“ என் கணித மாதிரி, கருந்துளையிலிருந்து ‘அப்படியே’ தகவல் எவ்வாறு வெளியாகிறது என்பதைப் பற்றியோ, 1974-ல் வெளியான ஹாகிங் கோட்பாடு எவ்விதத்தில் தவறாகியது என்பதைப் பற்றியோ விளக்கவில்லை.’
தற்போது ஆல்பெர்டாவிலுள்ள டான் பேஜ் (Don Page) என்பவர் 1990களில் மாற்றுக் கருத்தைச் சொன்னார். ஒரு கருந்துளை ஆவியாகும்போது தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன என வைத்துக் கொள்வோம்; அப்படியென்றால், அந்தக் கருந்துளை தனக்குத் தோன்றும் விதத்தில் (தந்தோனித்தனமாக) துகள்களை வெளியிடாது- இது ஹாகிங் கூற்றிற்கு மாறுபட்டது. கதிர்வீச்சு ‘ரேன்டமாகத்’ (Random) தொடங்கும்; காலப் போக்கில், தற்போது வெளியாகும் துகள்கள் முன்னர் வெளியான துகள்களுடன் அதிகளவில் தொடர்பு கொண்டு, விட்டுப் போன செய்திகளை இட்டு நிரப்பும். பலகோடிப்பலகோடி ஆண்டுகளுக்குப் பின் மறைந்திருந்த தகவல்கள் முழுமையாகக் கிட்டும்.
குவாண்ட மொழியின்படி, இப்போது கருந்துளயிலிருந்து வெளியாகும் துகள், முன்னரே வெளியானதுடன் குவாண்டச் சிக்கலில் (பிணைப்பில்) உள்ள ஒன்று. இது சிக்கலாயிற்றே! துகள்கள் ஜோடிப் பிணைப்புகள், அவ்வாறிருக்கையில், இப்போது வெளிவரும் ஒன்று, முன்னரே கருந்துளையில் விழுந்திருந்த ஒன்றுடன் பிணைப்பில் இருந்திருக்குமே? துகள்கள் ஜதைகளாகத்தான் குவாண்டச் சிக்கலில் இருக்கும் என்பதை இது இடக்குமடக்காகத் திருகுகிறதல்லவா? பேஜின் தகவல்-பரப்பு முறை வேலை செய்ய வேண்டுமென்றால், எப்படியாவது உள்ளிருக்கும் பொருள், இப்போது வெளியேயுள்ள பொருளாக இருக்க வேண்டும்!
இது எப்படி சாத்தியம்? புழுத் துளை என்னும் காலவெளி குறுக்கு வழியில் கருந்துளையின் உள்ளும் புறமும் இணைகின்றன என்று 1935-ல் ஐன்ஸ்டெய்னும், ரோசனும் சொன்னார்கள்.
“பயமுறுத்தும் குவாண்டச் சிக்கலும்”. “புழுத்துளையும்” ஒரே நிகழ்வின் இரு முகங்களாக இருக்கக்கூடும் என்று மால்டசேனாவும், சஸ்கின்டும், 2012ல் சொன்னார்கள். அதை அவர்கள் “ER = EPR.” (Einstein, Rosen= Einstein, Podolsky, Rosen) என்று சொன்னார்கள். மிக விநோதமாக உட்புறமும், வெளிப்புறமும் ஒன்றேயான க்ளெய்ன் குடுவை போல கருந்துளையும் இருக்கிறது என்பது இதன் அர்த்தம்.
ஒரே சமயத்தில் ஒரு தகவல் இரு இடங்களில் எப்படி இருக்க முடியும்? நீங்கள் பௌதீகமாக சென்னையில் இருக்கிறீர்கள்- அதே சமயம் பௌதீகமாக பெங்களூருவில் இருப்பதெப்படி? ஒளி என்பது, அளவையைப் பொறுத்து, அலையாகவோ, துகளாகவோ இருக்கிறது என்ற கருதுகோளைப் போல, ஒன்று ஒரே நேரம் இரண்டிடத்திலும் ‘அப்படியாகவே’ இருக்கிறது என்பது தலைசுற்றும் விஷயமல்லவா?
குவாண்டம் கணிப்பில் நிபுணரான ஜான் ப்ரஸ்கில், (John Preskill) “கருந்துளையின் உள்ளும், புறமும், புழுத் துளையால் இணைக்கப்பட்டிருந்தால், தகவல் இரு புறத்திலும் ‘உள்ளே-வெளியே’ விளையாட்டை ஆடலாம்” என்றார். பித்துக்குளித்தனமான கருத்து என்றாலும், நாம் எப்படியாவது கருந்துளையின் கதிர்வீச்சை கூச்சப்படுத்துவதின் மூலம் அதன் உட்புறத்திற்கு செய்தி சொல்ல முடிந்தால் தெளிவு சிறிது கிடைக்கலாம் என்றார் அவர்.
கருந்துளையிலிருந்து தப்பிய கதிர்வீச்சைக் கையாண்டு, கருந்துளையினுள் ஒரு பூனையை உருவாக்க முடிந்ததென்று அபு தாபி இயற்பியலாளர் அகமது ஆல்(ம்)ஹிரி (Ahmed Almheiri) சமீபத்தில் சொல்லியிருக்கிறார். “நாம் இதற்கெல்லாம் பழக வேண்டும்” என்றும் சொன்னார்.
இந்த மீபொருண்மை கொந்தளிப்பு 2019ல் ஒரு திசை நோக்கித் திரும்பியது. புழுத் துளைகளின் வழி கசியும் தகவல்கள், பேஜ் கணித்த வகையில் இருந்ததை கலிஃபோர்னியா பல்கலை பேராசிரியர் ஜெஃப் பெனிங்டன் (Geoff Penington) தன் கட்டுரையில் எடுத்துச் சொன்னார். நெட்டா ஏங்கல்ஹார்ட், (Netta Engelhardt) டான் மெரோப், (Don Marolf) சேன்டா பார்பரா, அகமது ஆல்(ம்)ஹிரி ஆகியோரும் அதே நேரத்தில் வெளியான கட்டுரையில் இதைச் சொன்னார்கள்.
பெனிங்டன் சொன்னார்: “உங்கள் ஈர்ப்புவிசை கோட்பாட்டில், புழுத்துளைகளுக்கு இடம் உண்டு என்றால், தகவல் வெளி வரும்; இல்லையெனில் தகவல் வெளி வருவதின் சாத்தியங்கள் குறைவு என அனுமானிக்கலாம். ஹாகிங் புழுத் துளைகளை சேர்த்துக் கொள்ளவில்லை; ஆனால், நாங்கள் அதை கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.”
இந்தக் கோட்பாட்டை அனைவரும் ஏற்கிறார்களா என்பது முக்கியக் கேள்வி. இதை ஆய்வகங்களில் பரிட்சித்துப் பார்க்க மிகுந்த சக்தி வாய்ந்த துகள் முடுக்கிகள் (Particle Accelerator) தேவை. குவாண்டக் கணினி ஒருக்கால் உதவலாம் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த இயற்பியல் செய்தி துல்லியமான ஒன்றாகக் கருதப்படக்கூடும் என்றாலும், மெர்மென்னின் ‘தந்திரத்திற்கு’ எல்லை இருக்கிறது. ஒளியின் வேகத்தைக் காட்டிலும் அதி வேகத்தில் புழுத் துளைகளோ, குவாண்டச் சிக்கல்களோ செய்தி அனுப்ப இயலாது. காலப் பயணம்? இரு விஞ்ஞானிகள் தாங்கள் கண்காணிதத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அவை பொருந்திப் போவதை அறியும் போது இந்த வித்தியாசத்தை உணர முடியும்; இது மரபார்ந்த இயற்பியல் தன்மை என்பதால், ஐன்ஸ்டெனின் ‘ஒளி எல்லைக்கு’ உட்பட்டதாகி விடுகிறது.
“அந்தப் பூனையை, கருந்துளையிலிருந்து ஒளி வேகத்தைவிட அதிகமான வேகத்தில் வெளியில் குதிக்கச் செய்ய முடியாது.” (இன்று அது குதிக்கவில்லை; நாளை..?)
நம் சித்தர் மரபில் கூடு விட்டு கூடு பாய்தல், இரச வாதம் ஆகியவை இடம் பெறுகின்றன. திருமூலர் திரவ பாதரசத்தை திடப் பொருளாக்கி அதில் கருந்துளையை ஏற்படுத்தி, நுண் புழுத்துளை உருவாக்கி, தனது உடம்பை ஒளியுடலாக்கி அகில அண்டத்திலும் பயணம் செய்ததை பாடி வைத்திருக்கிறார். வேதியியலின் மறைக்கூறுகள் அப்பாடல்களில் காணக் கிடைக்கின்றன. கமலினி மற்றும் சொரூப குளிகைகள் பற்றிச் சொல்லி அதன் மூலம் இந்த அண்டவெளிப் பயணம் சாத்தியமென்றும், பிரபஞ்ச இரகசியத்தை அறிய முடியும் என்றும் சொல்கிறார்.
“ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள், ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம், ஓங்கார அதீதத்து உயிர் மூன்றும் உற்றன, ஓங்கார சீவன் பரசிவனாமே.” – திருமந்திரம் 2640. மாணிக்கவாசகர் தம் 10 வது திருவெம்பாவையில் பாடுகிறார்: பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன் கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். உலகின் பிறப்பைத் தேடுவோம்- அது விஞ்ஞானத்தில் கிடைத்தாலும், மெய்ஞானத்தில் கிடைத்தாலும்.
It From Bit is a famous quote of John Wheeler. I e universe is of particles.
It from bit From Chit is the essence of Adwaitha. (There is a great talk on this by Swamiji Sarvapriyananda)
உசாவிகள்:
https://www.nytimes.com/2022/10/10/science/black-holes-cosmology-hologram.html? By Dennis Overbye Oct 12, 2022
காணொளிகள், திருவாசகம், திருமந்திரம்.