மொழிபெயர்ப்பினாலான பயனென்கொல்?

ரு படைப்பை மொழி பெயர்ப்புக்குத் தக்கதாகத் தேர்ந்தெடுக்கப் பல காரணிகள் பயன்படுகின்றன. அப் படைப்பு நமக்குப் பிடித்திருக்க வேண்டும், நம் மனதில் இதைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அது உசுப்ப வேண்டும். அதன் பிறகு இது தமிழ் வாசகர்களுக்கு உவப்பானதாக இருக்குமா என்ற கேள்வி எழவே செய்யும். இதற்குச் சரியான பதில் கிட்ட, நாம் தொடர்ந்து தமிழ்ச் சூழலைக் கணிப்பவர்களாகவும், அதில் ஈடுபட்டு பல வகை நடவடிக்கைகளால் ஓரளவு நாடித் துடிப்பை அறியக் கூடியவர்களாகவும் இருத்தல் பயன்படும். அப்படி ஒரு நிலை அனேகருக்குக் கிட்ட வாய்ப்பில்லை. இருப்பினும் பலரும் பல வகைப் படைப்புகளை மொழி பெயர்ப்பதில் இறங்குகிறார்கள். அதற்குத் தன்னிலையின் உந்துதல் மையக் காரணமாக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். 

என் தேர்வுகளில் பெரும்பாலும் இந்த வகை உந்துதலே செயல்படுகிறது என்பதை நான் அறிவேன். ஆயினும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மொழி பெயர்ப்புகள் செய்து வரும் நான் வேறு சில காரணிகளையும் கருதுகிறேன். 

அவற்றில் ஒன்று, இது தமிழில் அதிகம் காணப்படாத வகைப் படைப்பா, அல்லது கருத்து வெளிப்பாடா என்பது. இன்னொன்று, ஏற்கனவே பிரபலமாகி தமிழ்ச் சூழலில் ஆட்சி செய்யும் சில கருத்துகளை அல்லது மதிப்பீடுகளை இது கேள்விக்குள்ளாக்குகிறதா, அல்லது அவற்றுக்கு ஆதரவாக வாதங்கள் அல்லது சான்றுகளை முன்வைக்கிறதா என்ற யோசனை. தவிர எந்தத் துறையிலாவது புதுப்பரிமாணங்களைக் காட்டுகிறதா, அல்லது சமுதாய வளர்ச்சி/ மேம்படல் போன்ற நல்ல பாதைகளுக்கு இட்டுச் செல்கிறதா, அல்லது இந்தியப் பண்பாடு/ சமுதாயம் குறித்து தீர்க்க சிந்தனைகளைத் தூண்டுகிறதா போன்ற கேள்விகளையும் சல்லடையாகப் பயன்படுத்துகிறேன்.

புதுமை என்பதை மட்டும் நம்பி எதையும் மொழி பெயர்க்கக் கிளம்புவதில்லை. தரம் என்பது பற்றி நிறைய சர்ச்சைகள் உள்ளன. வெகு காலமாகவே தரம் என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு நபரின் தன்னிலை- மனச்சாய்வு, மதிப்பீடுகள், எதிர்காலத்துக்கான விழைவுகள் என்று பற்பல இதை உருவாக்குகின்றன – அதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது என் கருத்து. கூடிய மட்டில் புறவயப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்க நாம் விரும்புகிறோம், அப்போதுதான் பிறருடன் தொடர்பு கொள்ள இயலும் என்பதால் அப்படி இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்து, நான் பெருமளவு சமுதாய விளைவுகள் என்பனவற்றைக் கருதியே தேர்வுகளைச் செய்வதால், புறவயப் பார்வை என்று ஒன்றைத் தேடிப் பிடிக்க அவசியம் இல்லை என்று கருதுகிறேன். இயல்பே புறவயத் தாக்கத்தைப் பற்றிய யோசனையால் பீடிக்கப்பட்டிருக்கும்போது தனியே அதைத் தேட அவசியம் என்ன? 

சில நேரம் வேறொரு பண்பாடு அல்லது நாகரீகச் சூழலில் நிலவும் சில நல்ல அம்சங்களை நேரடியாகவோ அல்லது பூடகமாகவோ சுட்டும், முன்வைக்கும் சில படைப்புகளை மொழி பெயர்க்கத் தூண்டுதல் எழுகிறது. அப்படியும் ஒரு காரணி இருக்கிறது. 

இன்று, இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கட்டுரைகள் அந்தக் காரணத்துக்காக மொழி பெயர்க்கப்படுகின்றன. 

இரண்டு கட்டுரைகளில் முதல் கட்டுரையை நீல் கெய்மான் என்ற பிரபல அதிபுனைவுக் கதையாளர் எழுதியிருக்கிறார். கெய்மான் ஒரு அதிபுனைவு எழுத்தாளரான ராஃபெயெல் அலோய்ஸியஸ் லாஃபெர்ட்டி (அல்லது) ஆர். எ. லாஃபெர்ட்டி என்பவரின் சிறுகதைகள் தன்னை எப்படிப் பல பத்தாண்டுகளாகக் கவர்ந்திழுத்துப் பிடித்து வைத்திருந்தன, அவர் எத்தகைய அபாரமான கதைகளை எழுதினார் என்பதை விளக்கிச் சொல்லி இருக்கிறார். 

இரண்டாவது கட்டுரையை மைக்கெல் டிர்டா என்கிற இலக்கிய விமர்சகர் எழுதியுள்ளார். இது ஆர். எ. லாஃபெர்ட்டி எழுதிய ஒரு கதையை முன்மொழிகிறது.  அந்தக் கதையையும் மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். காரணம் டிர்டாவின் கட்டுரையில் தெரியும், தவிர அக்கதையைப் படித்தாலே அது இன்றைய நம் வாழ்வை எப்படிப் பல பத்தாண்டுகள் முன்பே, 1965 இலேயே எதிர்பார்த்து இந்த வகை வாழ்வின் அபத்தங்களையும் எதிர்நோக்கியிருக்கிறது என்பதை உடனடியாக அறிவோம். அந்த அளவிலேயே அக்கதை ஓர் ஆச்சரிய நிகழ்வுதான் என்பது விளங்கும். 

ஆனால், இவற்றில் பூடகமோ, வெளிப்படையோ, என்ன இருக்கிறது? 

நீல் கெய்மான் இன்றைய இலக்கிய உலகில் பிரபலமான ஓர் அதிபுனைவாளர். புத்தகங்கள் மட்டுமன்றி, திரைக்கதை, சித்திரக் கதைப் புத்தகங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் என்று பல வடிவுகளில் எழுதுகிறவர். ஒவ்வொரு வடிவிலும் தன் பாதிப்பைச் சுவடாக்கியவர். 

ஆனால் முந்தைய தலைமுறை எழுத்தாளர்களில், தன்னை உந்தியவர்கள், தனக்கு உற்சாகமும் கொடுத்து, வழியும் காட்டியவர்கள், தன்னை அவ்வப்போது ஆற்றுப்படுத்தியவர்கள், தன்னுடன் சேர்ந்து படைப்புகளை உருவாக்கியவர்கள் என்று பல தரப்பட்ட எழுத்தாளர்களை அடையாளப்படுத்தி, முன்னிலைப் படுத்தி, தான் ஒரு வாரிசு என்பதை வெளிப்படையாகச் சொல்கிறார். தான் சுயம்பு என்றும், முந்தையோர் எல்லாம் கிஞ்சித்தும் போதாதவர்கள் என்றும் நிறுவுதலையே முதல் நோக்கமாகக் கொண்டு திரியாமல், அல்லது இன்றைய பண்பாட்டு அரசியல், சமூக மதிப்பீடுகளை ஆயுதமாக ஏந்தி முந்தைய தலைமுறை எழுத்தாளர்களைக் கிழித்தெறிவதைத் தன் உயர்வுக்கு ஒரு வழியாகக் கருதாமல் செயல்படுபவர். இங்கு கொடுக்கப்படும் கட்டுரையில் தன் பிள்ளைப் பிராயத்திலிருந்து பல பத்தாண்டுகளுக்குத் தன் படைப்புகளாலும், தனி நபர் கடிதப் போக்குவரத்தாலும் உந்துதலாகத் திகழ்ந்த ஆர். ஏ. லாஃபெர்ட்டி என்ற எழுத்தாளரை முன் நிறுத்தி அவருடைய லட்சணங்களை நமக்கு ஒளியூட்டிக் காட்டுகிறார். 

மைக்கெல் டிர்டாவோ தொழில் முறை விமர்சகர். இங்கிலிஷில் இன்று கிட்டக் கூடிய ஏராளமான அதிபுனைவுப் புத்தகங்கள், படைப்புகள், பத்திரிகைகள் போன்றவற்றைக் கருதினால் ஆர். ஏ. லாஃபெர்ட்டி என்ற எழுத்தாளர் அத்தனை அதிகம் எழுதியவரல்ல. அறிவியல் நவீனங்கள், அதிபுனைவுகள் என்று எப்படி நோக்கினாலும் லாஃபெர்ட்டி பெரும் புகழ் ஈட்டியவரோ, நாயக ஸ்தானத்தை அடைந்து விட்டவரோ இல்லை.

ஆனால் சமூகம், நாகரீகம், இலக்கியம், பொருளாதாரம், அறிவியல் போன்றன எவையுமே ஒரு தலைமுறையால் ஆக்கப்படுபவை இல்லை, சில பெருநாயகர்களால் கட்டி எழுப்பப்படுபவையும் இல்லை. பல பத்துத் தலைமுறைகளின் பாடு இல்லாது எவையும் உயர எழுவதில்லை. சில தலைமுறைகளின் கேடு அப்படி உயர்த்தப்பட்டனவற்றை அழிக்கக் கூடும், ஆனால் மறுபடி மறுபடி உயிர்த்து உயர்த்தப்படும் ஒவ்வொரு நாகரீகமும், இலக்கியமும், பொருளாதாரமும், சமூகமும், அழிக்கப்பட்டவற்றின் எச்ச சொச்சங்களிலிருந்தே கட்டி எழுப்பப்படுகின்றன. விமர்சகராக இதை அறிந்தவராகத் தெரிகிற டிர்டா, லாஃபெர்ட்டி என்ற சொல் சித்தர், கற்பனை வித்தகர் எப்படித் தம் சிறுகதைகளால் பின்னால் வருகிற பல தலைமுறை அதிபுனைவாளர்களுக்கு ராஜபாட்டையை நிர்மாணிக்க வழி சொல்லிக் கொடுக்கிறார் என்பதைத் தன் கட்டுரையில் சுட்டுகிறார். 

பாரம்பரியத்தை அழிப்பதே பகுத்தறிவு என்று அலையும் தற்குறிகள் நாயகர்களாக வலம் வரும் இந்நாளில், அவர்கள் தமது ஆதர்ச பூமி/ நாகரீகம் என்று அடிக்கடி விளம்பரப்படுத்தும் அந்த நாகரீகங்கள்/ பூமிகள் உண்மையில் எப்படி இருக்கின்றன என்று இவை சுட்டும் என நினைக்கிறேன். 

இனி மொழி பெயர்ப்புகளைப் பார்க்கலாம். 

மைத்ரேயன்/ ஆகஸ்ட், 2022

***

ஆர். ஏ. லாஃபெர்ட்டியைச் சொல்லாமல் விட முடியுமா: ஒரு தனிப்பட்ட அறிமுகம்

நீல் கெ(ய்)மன்

தமிழாக்கம் மைத்ரேயன்

புறவயப் பார்வை என்பது நல்லதொரு விஷயம். நாம் நமது கருத்தாளர்கள், நம் பார்வையாளர்கள், நம் விமர்சகர்கள் ஆகியோரிடம் புறவய நோக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதுதான் சீர்தூக்கும் ஒரு நபரை நல்லதொரு தீர்ப்பாளராக ஆக்குகிறது. புத்தகங்கள், திரைப்படங்கள், இசை மற்றும் எழுத்தாளர்களைப் பற்றி நமக்குக் கருத்துகள் சொல்ல அத்தகைய விமர்சகர்களை நாம் நம்பி இருக்கிறோம். 

ஆர். ஏ. லாஃபெர்ட்டியைப் பற்றி உங்களிடம் நான் அப்படி ஏதும் சொல்வேன் என்று நீங்கள் நம்பி விட முடியாது. ஜி என்ற சுரத்தை ஒலிக்கச் சுருதி கோர்க்கப்பட்ட ஒரு கம்பியிடம் அதை விடக் கீழ் ஸ்தாயியில் ஒலிக்க என்று அமைக்கப்பட்ட கம்பிகளைப் பற்றி அபிப்பிராயம் கேட்பது போல அது இருக்கும். இன்னொரு ஜி ஒலியை அது கேட்டால், மகிழ்ச்சியோடு அந்த ஒலியை அங்கீகரித்து அது அதிரும். அப்படித்தான் அதன் வழி. அதெல்லாம் அப்படித்தான் இருக்கும்.

எனக்கு ஒன்பது வயதாகி இருந்தது, யாரோ ஒருவர் ஜூடித் மெர்ரில் தொகுத்திருந்த ‘எஸ் எஃப் 12’  என்ற புத்தகத்தை எங்கள் வீட்டில் விட்டுச் சென்றிருந்தார். யாரென்று எனக்குத் தெரியவில்லை. அது என் அப்பாவுடையதாக இருந்திருக்கலாம். யாருடையதாக இருந்தாலும், நான் அதை எடுத்து என்னுடையதாக்கிக் கொண்டேன், பிறகு அதைக் கொண்டு என் புத்தியைப் புரட்டிப் போட்டு, உள்ளிருப்பதை வெளியே கொணர்ந்தேன். வில்லியம் பர்ரோஸ், சாமுவெல் ஆர். டிலேனி, கேரொல் எம்ஷ்வில்லர், மேலும் கிட் ரீட், ப்ரையன் ஆல்டிஸ், மேலும் ஹார்வி ஜேகப்ஸ், மற்றும் ஜான் அப்டைக்கும் டொமாஸோ லண்டோல்ஃபியும், இவர்களில் யாரையும் ஒன்பது வயதுச் சிறார்களுக்கு யாரும் சிபார்சு செய்ய மாட்டார்கள். நான் அதைப் பொருட்படுத்தவில்லை. புனைவுகள் எப்படி இருக்க முடியும் என்பதைப் பற்றி இப்போது எனக்குப் புது விதிகள் கிட்டியிருந்தன. அந்த ப்ரையன் ஆல்டிஸ் கதை, ‘கான்ஃப்லூயன்ஸ்’ என்பது ஓர் அகராதியாக இருந்தது. மற்றும் ஆர்.ஏ.லாஃபெர்ட்டியின் இரண்டு கதைகளில் ஒன்று கல்வித் திட்டமாகவே இருந்தது. 

அதன் பெயர், ‘த ப்ரைமரி எஜுகேஷன் ஆஃப் த காமிரோய்’, அது ஓர் அன்னிய உலகத்தினரின் பள்ளிக்கான கல்வித் திட்டத்தைப் பற்றியது. அந்த அன்னிய உலகின் பள்ளி மாணவர்கள், கிரகங்களை அண்ட வெளியில் உற்பத்தி செய்து, அவற்றை இயக்குவதை, தமது பள்ளிப் படிப்பின் பகுதியாகக் கொண்டிருந்தனர். அது உண்மையில் சிரிப்பைத் தூண்டுவதாக இருந்த கதை. ஆனால் என்னுள் பல அதிர்வுகளை அது தூண்டியது. எப்படியுமே அந்த மாதிரி விஷயங்களை, நம் பள்ளிகள் மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டுமென நான் உறுதிப்பாட்டுக்கு வந்திருந்தேன். 

இரண்டாவது கதையான, ‘நேரோ வேலி’, அந்தப் புத்தகத்தில் இருந்த சிறப்பான விஷயங்களில் ஒன்றாக இருந்தது, இன்று வரையிலும் அது என் அபிமானச் சிறுகதைகளில் ஒன்றாக உள்ளது. அது ஒரு அதீதமான கற்பனை கொண்ட கதை, ஓர் அழகான பள்ளத்தாக்கைப் பற்றியது, அது, எப்படிச் சொல்ல இதை, குறுகியதாக இருந்த இடம். இந்தக் கதை அமெரிக்காவையும், இங்கிருந்த பழங்குடி மக்களையும், மற்றும் அறிவியலாளர்கள் எனப்படுவோரைப் பற்றியும், உலகைப் பார்க்கும் வழிகளில் சிலவற்றைப் பற்றியும், மாயாஜாலங்களைப் பற்றியும் கூட, பல விஷயங்களை எனக்குச் சொன்னது, அவை என்னுடன் பேசின, என்னை சந்தோஷப்படுத்தின. 

எனக்குப் பத்து வயதிருக்கையில், என் அப்பா, கார்-வோல்ஹைமின் ‘வோர்ல்ட்ஸ் பெஸ்ட் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன்’ உடைய மூன்று தொகுப்புகளையும் அத்தனை தூரத்தில் உள்ள அமெரிக்காவிலிருந்து எனக்குக் கொணர்ந்தார். நான் “நைன் ஹண்ட்ரட் க்ராண்ட்மதர்ஸ்” மற்றும் “இன் அவர் ப்ளாக்” என்ற இரு சிறுகதைகளையும் படித்தேன். “தஸ் வி ஃப்ரஸ்ட்ரேட் ஷார்லிமான்” கதையையும் படித்தேன். (லாஃபெர்ட்டியின் கதைகள் மீது) காதல் கொண்டேன். 

நான் அதிர்ஷ்டக்காரனாகவும் இருந்தேன். டென்னிஸ் டாப்ஸன் அண்ட் கோ பிரசுர நிறுவனம் யுனைடட் கிங்டம் நாட்டில் பிரசுரித்திருந்த, ஆர். எ. லாஃபெர்ட்டி எழுதிய எல்லாப் புத்தகங்களும், நான் வசித்த சஸெக்ஸ் பகுதியிலிருந்த சிறு நகரத்தின் நூலகத்து அலமாரிகளில் ஏன் இருந்தன என்பது எனக்கு இன்னமும் புரியாத மர்மம்.  நல்ல ரசனை உள்ள யாரோ இவற்றை வாங்க உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். ஆனால் அவர்களிடம் இவை இருந்தன. நான் படித்து விட்டு, மேலும் காதலில் ஆழ்ந்தேன். அந்தக் கதைகள்-  ‘ஃபோர்த் மான்ஷன்ஸ்’ (ரகசிய சமூக அமைப்புகளும், மிருகங்களும், காதுகளில் முடியடர்ந்த மனிதர்களும் கொண்ட கதை),  ‘த ரீஃப்ஸ் ஆஃப் எர்த்’ (பூமியில் பின்னே தங்க விடப்பட்டு அபலைகளான அன்னிய கிரகத்துக் குழந்தைகள் பற்றிய கதை), மேலும்  ‘ஸ்பேஸ் ஷாண்டி’ (அண்டவெளியில் நடத்தப்படும் ஒரு நெடும் சாகஸப் பயணம்) ஆகியன. (இந்த விவரிப்புகள் எல்லாமே முழுமை பெறாதவை மட்டுமல்ல, ஒருக்கால் தவறான விளக்கமாகக் கூட இருக்கலாம்.) த ரீஃப்ஸ் ஆஃப் எர்த் கதையின் உள்ளடக்கப் பக்கத்திலிருந்த அத்தியாயத் தலைப்புகள், நிஜத்தில் சந்த வரிசையோடு இருந்தன என்பதோடு, ஒட்டு மொத்தமாக அவை ஒரு கவிதையாகவும் ஆயின.  இதில் எனக்கு வந்த சந்தோஷத்தை நான் நினைவு வைத்திருக்கிறேன். 

 பெர்விக் தெருவில் இருந்த ‘டார்க் தே வேர் அண்ட் கோல்டன் ஐய்ட்’  என்ற புத்தகக்கடையிலிருந்து, லாஃபெர்ட்டியின் முதல் சிறுகதைத் தொகுப்பான, ‘நைன் ஹண்ட்ரட் க்ராண்ட்மதர்ஸ்’ புத்தகத்தின் மென்னட்டைப் பிரதி ஒன்றை எனக்கென, நான் வாங்கினேன். என் நண்பர்கள் எல்லாரையும் அதைப் படிக்க வைத்தேன். அப்போது என்னைப் பொறுத்தவரையிலும் லாஃபெர்ட்டிதான் அன்றிருந்த எழுத்தாளர்கள் அனைவரிலும் மிக சுவாரசியமானவர்: அவர் வார்த்தைகளை வைத்து என்ன செய்தாரென்பதை நான் மிகவும் ரசித்தேன். வாக்கியங்களின் இசையை நேசித்தேன், அவை எப்படிப் பாடின, ஆடின என்பதையும் வார்த்தைகளில் அந்த எழுத்தாளர் கொண்டிருந்த குதூகலத்தையும் நான் மிக விரும்பினேன். 

1978 ஆம் ஆண்டு கிருஸ்த்மஸ்ஸுக்கு என் பெற்றோர், பீட்டர் நிகொல்ஸும், ஜான் க்ளூட்டும் பதிப்பாசிரியர்களாக இருந்து வெளியிட்ட ‘த என்சைக்ளோபீடியா ஆஃப் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன்’ புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்தனர். பீட்டரும் ஜானும் அவர்களுக்கே உரிய வழிகளில், எனக்கு நெருங்கிய, மதிப்புள்ள நண்பர்களாக ஆவார்கள் என்பது அன்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ‘த என்சைக்ளோபீடியா ஆஃப் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் ‘புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் லாஃபெர்ட்டி பற்றிய பதிவை ஜான் க்ளூட்டுடன் சேர்ந்து நான் எழுதுவேன் என்பதையும் நான் அறிந்திருக்கவில்லை. அன்று எனக்குத் தெரிந்திருந்ததெல்லாம், லாஃபெர்ட்டியின் புத்தகங்களில் நிறைய நிறைய அதில் பட்டியலில் கொடுக்கப்பட்டிருந்தன என்பதும், அவற்றை நான் படித்திருக்கவில்லை என்பதும்தான். அவை இருந்ததே கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவற்றைத் தேடி அலைவதில் நான் பலவருடங்கள் செலவழித்தேன், அன்று எனக்குத் தெரியாதது என்னவென்றால், அவற்றில் அனேகம் இன்னமும் புத்தகங்களாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான். இது க்ளூட்டிற்கும், நிகொல்ஸுக்கும் நிறைய உளைச்சலைக் கொடுத்திருந்தன. 

எனக்கு இருபத்தியோரு வயதாகியிருந்தது, நான் என்னவாக விரும்பினேன் அல்லது செய்ய விரும்பினேன் என்பது எனக்கு இன்னமும் தெரியவில்லை, ஆனால் நான் எழுத்தாளனாக விரும்புகிறேன் என்று எனக்கு ஒரு சம்சயம் இருந்தது. அதுவரை நான் எழுதி முடித்திருந்த ஒரே ஒரு கதை, லாஃபெர்ட்டியை நகலெடுத்த மாதிரி இருந்தது. நான் லாஃபெர்ட்டியின் புத்தகங்களைக் கண்டு பிடித்த அதே நூலகத்தின் பின் அறையில், யார் யாரெல்லாம் எழுத்தாளர்கள் என்ற விவரங்களைத் தரும் புத்தகம் ஒன்று கிட்டியது. லாஃபெர்ட்டிக்கான பதிவை அதில் தேடிப் பார்த்தேன், அவர் பற்றிய பதிவு ஏதும் அதில் இருக்காது என்று நினைத்திருந்தேன். அதில் ஒரு முகவரி கொடுக்கப்பட்டிருந்தது, ஓக்லஹாமா மாநிலத்தில் டல்ஸா நகர் முகவரி அது. ஒரு முகவருக்கோ, அல்லது பிரசுரகருக்கோ எழுதத் துணிந்திருக்க மாட்டேன், ஆனால் இது வீட்டு முகவரியாக இருந்தது. 

அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன், கூடவே என் கதையையும் அனுப்பினேன். 

அந்த முகவரி பழையது, ஆனால் ஒருவாறாக என் கடிதம் முன்செலுத்தப்பட்டு அவரைச் சென்றடைந்தது, எனக்கு உண்மையிலேயே ஆச்சரியம் தரும் வகையில் அவர் எனக்குப் பதிலும் எழுதினார்.  எனக்கு நன்றி தெரிவித்து விட்டு, அவர் மேலும் எழுதியது இது – “தலைப்பு இதை ஒரு சிறுகதை என்று சொல்கிறது என்றாலும், இது சிறுகதை இல்லை, ஆனால் நல்லதொரு நடைச் சித்திரம் அல்லது நகல் அல்லது அது போல ஒன்று. நீங்கள் இதை அனுப்பும்போது சந்தையில் என்ன மனநிலை நிலவுகிறது என்பதைப் பொறுத்து, இது விற்பனையாகக் கூடியதாக இருக்கலாம். நல்லதான எழுத்து எல்லா மனத்திலும் அடையாளம் காணும்படி ஒரு பொறியைத் தூண்டும் என்று யாரோ ஒருமுறை சொன்னார். அதேபோல, இதுவும் ஒரு தனிவகையான தூண்டுதலை ஒரு புரிதலுக்கான தூண்டுதலை உசுப்புகிறது.” அவர் மேலும் சொல்லியிருந்தார், “நீங்கள் இன்னும் ஒன்றிரண்டை ஏன் எழுதக் கூடாது? இவை போன்றனவற்றை எழுதுவது மகிழ்ச்சி தரும் வேலை, எழுத வேறொரு காரணமும் தேவையில்லை.”

என் அபிமான எழுத்தாளர் நான் மேலும் எழுத வேண்டும் என்று சொன்னார், நான் அதன்படியே மேலும் தொடர்ந்து எழுதினேன்.

அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுத விரும்பினேன், ஆனால் அன்று, யாரும் அதைப் பிரசுரிக்க விரும்பவில்லை. இருந்தும் நாங்கள் தொடர்ந்து கடிதப் பரிமாற்றம் செய்து கொண்டோம், எழுதுவதைப் பற்றி துடுக்குத்தனமாகக் கேள்விகளை நான் கேட்டேன், அவற்றுக்கு தன்னால் முடிந்த வரை அவர் பதிலும் எழுதினார். 

எனக்கு நேரடியாகச் சந்தோஷம் கொடுக்கும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. சில எழுத்தாளர்கள் என்னை யோசிக்கச் செய்வார்கள், அல்லது நல்ல விதமாக என்னைத் தொந்தரவு செய்வார்கள், அல்லது அவர்களின் பாத்திரங்களுக்காக என்னைக் கவலைப்படச் செய்வார்கள். லாஃபெர்ட்டி இவை எல்லாவற்றையுமே செய்தார், அவற்றை எல்லாம் மிகவும் நன்றாகவும் செய்தார். ஆனால் அவர் அதற்கு மேலும் ஏதோ செய்தார். ஒரு லாஃபெர்ட்டி கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நான் சந்தோஷத்தால் புன்னகைக்கத் துவங்குகிறேன். அந்தக் கதை சொல்லப்படும் விதம், சொல்லும் நபரின் குரல் இவை எல்லாமே எனக்கு அத்தனை குதூகலத்தைக் கொணர்கின்றன. 

இப்போதுள்ள எந்த எழுத்தாளரையும் லாஃபெர்ட்டியோடு சுலபமாக ஒப்பிட முடியாது: ஆவ்ரம் டேவிட்ஸன் இன்னதென்று வரையறுக்க முடியாதவையும், அபாரமானவையுமான கதைகள் எழுதினார், அவருக்கு உலகைப் பற்றியும் கூடுதலாகவே தெரிந்திருந்தது, ஆனால் அவருடைய கதைகள் பெரும் கட்டுக் கதைகள் போலத் தெரியவில்லை, (ஆசிரியர்) ஒரு தயக்கமும் இல்லாது பெரும் பொய்களை நேரடியாகச் சொல்லும் கதைகளாகவும் அவை இல்லை. ஐரிஷ் நாவலாசிரியரான ஃப்ளான் ஓ’ப்ரையன் (அல்லது மைல்ஸ் இல்லை கோபாலீன், நிஜப்பெயர் ப்ரையன் ஓ’நோலன்) பெரும் கட்டுக் கதைகளை, (கதாசிரியர்) தயக்கமே இல்லாமல் பெரும் பொய்களைச் சொல்லும் கதைகளை எழுதினார், ஆனால் நம்மை இந்த உலகை விட்டு அசாத்தியமான தொலைவுக்கு இட்டுச் செல்லவில்லை. ஜீன் ஓல்ஃபின் ஆழம் சமமாக இருக்கும், ஆனால் அவரிடம் நகைச்சுவையை அரிதாகவே பார்க்கலாம். 

எனக்குக் கிட்டிய அனைத்து லாஃபெர்ட்டியையும் படித்தேன். அவருடைய எழுத்து வரவர இருண்டதாக ஆனபோதும், அந்தரங்கத்தைப் பற்றியதாக ஆனபோதெல்லாமும் தொடர்ந்தேன். அவருடைய பிரசுரங்கள் பெரிய பிரசுரகர்களிலிருந்து சிறு பிரசுரகர்களுக்கு மாறிய போதும், பிறகு கையேடுகளாகவும் ஆனபோதும் படித்தேன். அவர் படைப்புகளில், என்னால் புரிந்து கொள்ள முடிந்தவற்றையும், புரியாததையும் படித்தேன் (அது ஒரு வாசகருக்காக, அவர் ஒருத்தருக்காக மட்டுமே எழுதப்பட்டது என்று நான் ஊகித்தேன்,  இருந்தும், அதன் வாக்கியங்களிலும், அதில் இருந்த உலகிலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன்). நான் லாஃபெர்ட்டியின் அலுவலகத்தின் கதவைப் பார்த்திருக்கிறேன், அது ஓக்லஹாமா மாநிலத்தில், டல்ஸா நகரில் ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 

வேறென்ன தெரிய வேண்டும் உங்களுக்கு? இதை எழுதும்போது, இந்த மாதிரி ஓர் அறிமுகத்தில் உங்களுக்குத் தெரியவேண்டிய முக்கியமான வாழ்க்கைச் சரிதையெனும் தகவல்கள் அனைத்தையும் விட்டு விட்டேன் என்று எனக்குத் தெரிகிறது. 

ராஃபெயேல் அலொவூசியஸ் லாஃபெர்ட்டி, நண்பர்களுக்கு வெறும் ரே, ஓக்லஹோமா மாநிலத்தின் டல்ஸா நகரைச் சேர்ந்தவர்.  எலெக்ட்ரிகல் எஞ்சினியராகப் பயிற்சி பெற்று, எலெக்ட்ரிகல் சப்ளை நிறுவனம் ஒன்றில் தான் ஓய்வு பெறும் வரை, அதாவது 45 ஆவது வயது வரை, அவர் பணி புரிந்தார். அப்போதிலிருந்து, மறுபடி ஓய்வு பெறும் வரை அவர் முழு நேர எழுத்தாளராக இருந்தார். அவர் ஒரு கேத்லிக்கர். ( “கதாலிஸிசம் என் வாழ்வில் பெரும் பங்காற்றுகிறது. அதில்லாமல் நான் முழுதுமே சாக்கடையில் கிடப்பேன். அது இருக்கையில், என் ஒரு கால்தான் சாக்கடையில் இருக்கிறது.”) குடிகாரர் ( “குடிப்பழக்கம் என் எழுத்தை எல்லா விதமாகவும் தவறான திக்கில் இழுத்துப் போயிருக்கிறது. நான் ஒரு குடிகாரன், நான் குடிக்கவே கூடாது. ஆனால் வருடத்துக்கு ஓரிரு தடவை இதை நான் மறந்து போய் விடுகிறேன், விளைவுகள் மிக வருத்தம் தருவனவாக ஆகின்றன. என் எழுத்தில் மேம்படுதலை விட அதிகமாக வீணாகப் போனதுதான் குடியின் விளைவு. இருந்தாலும் அங்கே எப்போதும் ஏதோ பயனற்ற முயற்சியாகவே, காட்டு வாத்தைத் துரத்துவதாகவே இருக்கிறது, எங்கோ, எங்கோ புத்தியை விகசிக்கச் செய்யும் அபூர்வமான ஒரு பானம் இருக்க வேண்டும்! “தேடு ஆனால் கண்டு, பிடித்து விட முயலாதே” என்ற கருத்தின் ஒரு பகுதிதான் அது. இப்படிச் சில மனமயக்கங்கள் வாழ்க்கையின் ஒரு பங்கு. இளைஞனாக நான் இருக்கையில், குடிப்பதால் எனக்கு நிறைய நட்புகளும், சந்தோஷமும் கிட்டி இருந்தன, ஆனால் அனேகமாக படைப்புக்கான எந்த உந்துதலும் கிட்டியிருக்கவில்லை.”)

அவர் இரண்டாம் உலக யுத்தத்தில் படைவீரராக இருந்தார். தெற்கு பஸிஃபிக் பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தார், ஆனால் தனக்கு அப்போது 28 வயது, அந்த அனுபவத்தை ரசிக்கவோ, அனுபவிக்கவோ தேவையான வயதை விடப் பத்து வயது கூடுதலாக ஆகி இருந்தது, என்று அவரே சொல்கிறார். 

அவர் தன் முதல் அறிவியல் புனைவை, “டே ஆஃப் த க்ளேஸியர்,” என்ற கதையை, 1960 ஆம் வருடம், அவருக்கு நாற்பத்து ஆறு வயதாகிறபோது, ஒரிஜினல் சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஸ்டோரீஸ் என்ற பத்திரிகையில் பிரசுரித்தார். “நான் சுமாராக வெற்றி பெற்றிருந்தேன்,” தன் எழுத்து வாழ்வைப் பற்றி அவர் சொன்னது இது, “எனக்கு வசதியான பாட்டையை அது உருவாக்கவில்லை, ஆனால் வசதியான சந்து ஒன்றைக் கொடுத்தது.”

1973 இல் ‘யூரேமா’ஸ் டாம்’ என்ற கதைக்கு ஹ்யூகோ பரிசைப் பெற்றார். அது நல்ல கதைதான், ஆனால் அதை விடச் சிறந்த கதைகளை எழுதியபோது அவை பரிசுத் தேர்வுகளில் வெல்லவில்லை, அவருடைய மிக அருமையான சில கதைகள் வெளியானபோது, பரிசுகளுக்குப் பரிந்துரைப்பவர்களால் கவனிக்கப்படாமல் போயின. அவர் 1984 ஆம் வருடம் எழுத்துலகிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார், அது வரை இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும், இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதி இருந்தார். 

1994 இல் அவருக்கு ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டது, இறுதி ஆண்டுகளில் அவருக்கு அல்ஸைமர்ஸ் தாக்குதல் வந்திருந்தது. 2002 இல் ஓக்லஹோமா மாநிலத்தில், ப்ரோகன் ஆரோ என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார், அது டல்ஸாவிலிருந்து இருபது நிமிட தூரத்தில் இருந்தது. 

1985 இல் பேட்டி பெர்ரெட் வெளியிட்ட  ‘த ஃபேஸஸ் ஆஃப் சைன்ஸ் ஃபிக்‌ஷன்’ என்ற புத்தகத்தில், அவருடைய படமொன்றுடன் வெளிவரவிருந்த சுயக்குறிப்பை எழுதுகையில் லாஃபெர்ட்டி சொல்லி இருந்தார்,  “எனக்கு நாற்பத்தி ஐந்து வயதானபோது நான் எழுத்தாளன் ஆக முயன்றேன். உலகத்திலேயே சிறந்த சிறுகதை எழுத்தாளனாக ஆனேன். இதை நான் இருபது வருடங்களாக ஜனங்களிடம் சொல்லி வருகிறேன், ஆனால் சிலர் என்னை நம்பவில்லை.” 

நான் நம்பினேன். 

இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்தபின், நீங்களும் நம்புகிறவராவீர்கள் என்பது நடக்கவியலாத ஒன்றில்லை. 

***

கட்டுரையின் இங்கிலிஷ் மூலம் பற்றிய விவரங்கள்: 

கட்டுரையாசிரியர்:  நீல் கெய்மான்: நாட் டு மென்ஷன் ஆர். ஏ. லாஃபெர்ட்டி: எ பெர்ஸனல் இண்ட்ரொடக்‌ஷன் 

இக்கட்டுரை பிரசுரமான புத்தகம்:

த பெஸ்ட் ஆஃப் ஆர்.ஏ.லாஃபெர்ட்டி/ பதிப்பாசிரியர் ஜானதன் ஸ்ட்ராஹ்ன்/ டோர் எஸென்ஷியல்ஸ் புக், நியூயார்க். 

பிரசுர வருடம்: 2021 (அமெரிக்காவில் முதல் பதிப்பு) [2019 இல் க்ரேட் பிரிட்டனில் கொலான்க்ஸ் பிரசுரத்தால் பிரசுரிக்கப்பட்டது.]

தமிழாக்கம்: மைத்ரேயன்/ ஆகஸ்ட் 2022/ பெர்க்லி, கலிஃபோர்னியா

குறிப்புகள்

  1.  1968 ஆம் ஆண்டு வெளியான இந்தத் தொகுப்பு பற்றிய விவரங்களை இங்கே காணலாம். http://www.isfdb.org/cgi-bin/title.cgi?33516
  2. ஆதர்ஸ் ஹூஸ் ஹூ (Authors’ Who’s Who) புத்தகம். இதில் அகர வரிசையில் எழுத்தாளர்களின் சொந்த விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பல சமயம், அவர்களின் தொடர்பு விவரங்களும் கிட்டும்- யார் அவர்களுக்கு முகவர், தொடர்புக்கு முகவரி, தொலைபேசி எண் போன்றன கிட்டும். இந்நாளில் மின்னஞ்சல் முகவரிகளும், சொந்த வலைத்தள முகவரிகளும் கிட்டும். ஆனால் இப்போது கூகிள் தேடலிலேயே இவை கிட்டுவதால் இந்த வகைப் புத்தகங்களின் பிரசுரம் குறைந்து போயிருக்கவே வாய்ப்பு அதிகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.