- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
1602 ஹொன்னாவர்

தீபாவளிக்கு இரண்டு நாள் கழித்து ஹொன்னாவர் ரதவீதியில் நடமாட்டம் குறைந்த ஒரு பகல் நேரத்தில் சந்திரய்யாவின் பிடவைக் கடைக்கு முன் ஒரு டோங்கா வண்டி வந்து நின்றது. விலகு விலகு என்று வண்டியோட்டி வந்தவன் அரவம் இல்லாமல் இருந்த தெருக் கோடிக்குக் கேட்கச் சத்தமாகக் கூவி வண்டிக் கதவைத் திறந்தான். கோட்டையில் மகாராணிக்கு தாதியான மிங்கு மெல்ல இறங்க மரப்படி அடுக்கை வண்டி உள்ளே இருந்து எடுத்து கதவோடு பொருத்தினான். மிங்கு இறங்கிக் கடைக்குள் போனாள்.
”மாமா பாக உன்னாரா” என்று தெலுங்கில் நலம் விசாரித்தபடி அழகாகப் புன்னகைத்தாள் மிங்கு. பாகவுந்தி என்று நலம் சொல்லி கடையில் வேலைக்கு இருந்த பையனைக் கைகாட்ட, மண்பானைக்குள் இருந்து குளிர்ந்த நீர் கலந்த ஷர்பத்தில் வெட்டிவேர் போட்டு எடுத்து வந்தான் அவன். சிறியதாகப் பனிக்கட்டி இரண்டு அந்த ஷர்பத்தில் மிதந்ததை மிங்கு பார்க்கத் தவறவில்லை. மகாராணிக்குப் பிடித்த குளிர்பானம் இது.
“மழை சிறு விடுமுறை எடுத்து ஓய்ந்திருப்பதால் வெக்கை பொறுக்க முடியாதபடி அதிகமாகத் தெரிகிறது. நாளை அல்லது மறுநாள் மழை தொடர்ந்து பெய்ய ஆரம்பித்து விடும்”. மிங்கு சிரித்தபடி சொன்னாள்.
சந்திரய்யா உடனே ஆமோதித்தார். அரண்மனைக்காரி என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்.
”வீட்டில் எல்லோரும் சுகம்தானே? மாமி கால்வலி எப்படி இருக்கு இப்போ? மருந்து சாப்பிடறாங்களா?” மிங்கு கேட்க, நல்ல வார்த்தை சொன்னார்-
”சரியாயிடுத்து. நீ போனதடவை வந்தபோது சொன்னியே மிங்கு, உங்க வீட்டுக்காரர் கிட்டே மூலிகை வைத்தியமாக இலை, தழை, வேர், பழம்னு சாப்பிட்டதுலே உடனே சரியாயிடுத்து. செலவு கொஞ்சம் அதிகம்தான். ஆனால் குணம் ஆயிடுத்து”.
முகம் மலர்ந்து சொன்னார் சந்திரய்யா. ராஜ வைத்தியம்னா சும்மாவா என்றாள் மிங்கு பெருமையோடு பார்த்தபடி.
”மாமா, நீங்க போர்ச்சுகல் பெண்ணுங்க உடுப்புக்கான துணி வச்சு விக்கறீங்களாமே?” அவள் மெல்ல வினவினாள். விரோதம் உண்டோ இல்லையோ, சிநேகிதம் அவ்வளவாக இல்லாத திக்கில் பேச்சு நடக்கும் என்று தோன்ற சந்திரய்யா சுதாரித்துக் கொண்டார்.
”மிங்கு, தீபாவளி நேரத்திலே எல்லோரும் சந்தோஷமா இருக்கணும். அந்த நேரத்துக்காவது இல்லே அது போல நேரங்களிலாவது ஸ்கர்ட்டும் ப்ளவுசும் உன்னை மாதிரி குமருகள் உடுத்த ஆசைப்பட்டா, ரொம்பவும் கண்டிக்கக் கூடாது தானே. முழுக்க உடம்பு மூடின உடுப்பு அதெல்லாம்னு மிங்குவுக்கு தெரியும் தானே. அதுவும் துணியும் செய்நேர்த்தியும் மட்டும் தான் போர்ச்சுகீஸ். தைத்து உடுப்பாக்கி தந்தது நம்ம தையல்காரங்க. பிடவை கூட இடுப்பு தெரியும். ஸ்கர்ட் போட்டா முழுசாக மூடி இருக்கும்”.
மிங்கு தன் பிடவைத் தலைப்பை விருட்டென்று இடுப்பைச் சுற்றி மூடிச் செருகிக்கொண்டு தரையைப் பார்த்தாள். சொல்லியிருக்கக் கூடாது என்று சந்திரய்யாவுக்குத் தோன்ற அசட்டுச் சிரிப்பு சிரித்தார். மிங்கு சகஜமானாள்.
நிச்சயமாக நல்ல உடுப்புதான் என்று உடன்பட்டாள் மிங்கு. நான் அதை கேட்க வரலே என்று சொல்லி அவள் போர்ச்சுகல் துணி விற்பதில் சட்ட மீறுதல் பற்றிக் கேட்க வரவில்லை என்பதை வெளிப்படையாகவே சொல்லி விட்டாள்.
அங்கிருந்து வந்து இங்கே தையல்காரர்களுக்கு ஐரோப்பிய உடை தைக்கச் சொல்லிக் கொடுத்த போர்ச்சுகீசிய தையல்காரர்கள் பற்றியும் கேட்க வரவில்லை என்றும் தெரிவித்தாள். அந்தப் பயணிகள் வந்தது போல் போய்விட்டார்கள் என்று சந்திரய்யா வாயில் பதிலிருக்கத் தேவையில்லை.
மிங்கு சொன்னால் வேறே சொல் அதை மாற்ற இல்லை என்பதை கோட்டையில் அவள் செல்வாக்கு கொடிகட்டிப் பறப்பதில் சந்திரய்யா நன்கு அறிவார்.
”தீபாவளிக்கு வந்த காஞ்சிபுரம் பட்டுப் பிடவை நாலைந்து இருக்கு. விலை கொஞ்சம் அதிகம்னு வாங்க யோசிக்கறாங்க ஹொன்னாவர் பெண்ணுங்க. முழுக்க மயில்கண் போட்டு தலைப்பிலே ஊசி நெய்து நல்ல நீலமும் அரக்குமாக இந்தப் பிடவையைப் பாரேன், மனசுலே கிச்சுன்னு ஒட்டிக்கும்”
மிங்கு அந்தப் புடவையைக் கையில் எடுத்துப் பார்த்தாள். மென்மையாக, உறுத்தாத சரிகையும் கண்ணில் வெளீரென்று வர்ணம் பட்டுச் சிதறுவதும் தமிழ் நெசவுத் தறியிலிருந்து குறுக்கப்பட்ட தறி வாசனையுமாக மகாராணிகள் உடுத்தும் தோதில் இருந்தது அந்தப் புடவை.
”மகாராணி உடுத்தப் பாந்தமானது”. சொல்லியபடி அந்தப் புடவையைப் பிரித்துக் காட்ட முடியுமா என்று சந்திரய்யாவைக் கேட்டாள் மிங்கு.
“நிச்சயமாகச் செய்கின்றேனம்மா. இதேபோல் வந்த சரக்கில் இன்னும் இரண்டு புடவை உண்டு. மடித்து கை எதுவும் தீண்டாமல் புத்தம்புதுக் கருக்கோடு எடுத்து வரேன்”.
சந்திரய்யா உள்ளே போகும்போது ”போர்ச்சுகல்லில் மகாராணி எப்போதும் பாவாடையும் சட்டையும் தான் உடுத்திருப்பாங்களா?” என்று கேட்டாள் மிங்கு.
“அதெப்படி அலுத்துப் போகாதா? அசௌகரியம் வேறே” என்றார் சந்திரய்யா. ”ஐரோப்பியப் பெண்கள் உள்ளுடுப்பாக ஷெமி என்ற பருத்தி கௌன் அணிந்து மேலே நீளமான பாவாடை அணிவது வழக்கம். வீட்டிலிருக்கும்போது அதுதான் உடுப்பு, முழுக்க மூடிவிடுவதால் தனியாகச் சட்டை வேண்டாம்”.
சந்திரய்யா சொல்லியபோது மிங்கு ”உங்கள் போர்ச்சுகல் துணிகளில் நீளப் பாவாடைகளும் ஷெமியும் உண்டா?’ எனக் கேட்டாள்.
“தையல் அளவு என் உடம்பை விடக் கொஞ்சம் அதிகம், உயரமும் ஒரு கைப்பிடி அதிகம் என்னை விட” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே உள்ளே இருந்து சந்திரய்யாவும் கடைப் பையனும் ஒரு மலை ஐரோப்பிய துணிகளோடு வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொன்றும் ஒரு உடுப்பு தயாரிக்க வெட்டித் தைக்கப் போதுமானதாக இருக்கும். ஹொன்னாவர் தையல்காரர்களுக்கு வெகு விரைவாக துணி தைப்பது பழக்கமானது.
விற்று மீதியிருப்பதே இவ்வளவு என்றால் விற்பனை எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாள் மிங்கு. சந்திரய்யா தன் ரெண்டு மனைவிகளுக்கும் ஆளுக்கொரு மாளிகை கட்டித்தர முடியும் என்று தோன்ற அவள் சிரித்து விட்டாள்.
”என்ன மிங்கு இவ்வளவு ஐரோப்பியத் துணி இருந்தா எவ்வளவு வித்திருப்பான்னு பாக்கறியா? விற்று வந்த பணத்திலே ரெண்டு பொண்டாட்டிக்கு ரெண்டு வீடு கட்டிக்கொடுத்து சாரட் வாங்கிக் கொடுத்திருப்பானேன்னு நினைக்கறியா?”
கண்விழி வெளியே வரும் அளவு ஆச்சரியம் மிங்குக்கு. சாரட் தான் அவள் மனதில் வரவில்லை. அது சந்திரய்யா மனதில் இருந்து இறங்கியது.
”இந்த நீள கௌன்கள் இருக்கட்டும். உத்தியோக விஷயமாக வெளியே போகும்போது அணியத் தகுந்த பாவாடைகள், கவுன்கள் மத்தபடி கௌரவமான சட்டைகளுக்கான துணிகளைக் காட்டுங்க”.
மிங்கு கேட்க, இப்போது ஆச்சரியப்படும் முறை சந்திரய்யாவுக்கு.
”மிங்கு, எங்கே, எந்த உத்தியோகத்துக்கு போக, இப்போ மும்முரமா உடுதுணி தேடிட்டிருக்கே?”
”நான் போனால் தானா, ராணியம்மா வெளியே போகறபோது போட்டுக்கணும் இல்லே”.
”அவங்க பிடவைதானே கட்டி வருவாங்க?”
”அது இங்கே”.
மிங்கு அவசரமாகத் தன் வார்த்தையை நிறுத்தினாள்.
”என்ன மிங்கு ராஜாங்க ரகசியம்னா வேணாம்”.
குரலை திடீரென்று கிசுகிசு என்றாக்கி மிங்குக்க்கு பக்கமாக வந்து கேட்டார் – ”ராணியம்மா வாரணாசிக்கு போகிறதா காதுலே விழுந்ததே? அப்படியே தில்லிக்கும் போய் சுல்தானை பார்ப்பாங்கன்னு ஒரு பேச்சு. நீ வாங்கறதைப் பார்த்தா, லிஸ்பன் போறாங்களா என்ன?”
ஆவலோடு கேட்டபடி கையில் உள்ளூர் தையல்காரர் தைத்த நீள ஸ்கர்ட்டோடு நின்றார் சந்திரய்யா. யாருக்கான உடை என்று மிங்குவிடம் அவர் சொல்ல, ஆச்சரியம் ஒரு வினாடி காட்டி மீண்டாள் மிங்கு.
”அவ்வளவுதானா, நான் என்னமோ மூணாவது மாளிகை கட்டி இதை உடுத்திவிட்டு என்னை குடிவைக்கப் போறீங்கன்னு நினைச்சேன்”.
மிங்கு கையில் வைத்திருந்த துணியால் சந்திரய்யா முகத்தில் விசிறினாள். அவரை குறும்பாகப் பார்த்துச் சொன்னாள் –
”நமக்கெதுக்கு மாமா. வான்னா வரணும் போன்னா போகணும் அதுக்காகத்தான் மிங்கு”.
”அது சரி வான்னா எங்கே வரணும்னு தெரிய வேண்டாமா? போகறதுக்கும்தான்”. சந்திரய்யா கேட்டார் குறும்பாகப் பார்த்தபடி.
“அவங்க கூடப் போறதுக்கு எத்தனை பேருக்கு உடுப்பு வேண்டி வரும்? நீ போவே. கூட யாரு? ராஜகுமாரர் இருப்பாரோ? நஞ்சுண்டய்யா பிரதானியோ?” அவரும் போய்ட்டா யார் இங்கே கவனிச்சுக்கறது? ஒரு மாசம், ஒண்ணரை மாசம்னாலும் அப்பக்கா ராணியம்மாவோ நேமிநாதன் ராஜகுமாரரோ தவிர நம்ம ராணியம்மா வேறே யாரிடமும் பொறுப்பை தாற்காலிகமா ஒரு நாளைக்குகூட ஒப்படைக்க மாட்டாங்க”.
”மாமா, மகாராணி பயணம் போறதா யார் சொன்னாங்க? நீங்க ஏன் வேறே மாதிரி நினைக்கக் கூடாது?” மிங்கு கேட்டாள் சந்திரய்யாவை.
”வேறே மாதிரின்னா?”
”போர்த்துகல் அரசர் ஏன் இங்கே வரக்கூடாது? மிளகு ராணியை சந்திச்சு குறைந்த விலைக்கு அதிகம் மிளகு கொள்முதல் செய்யக்கூடாது?”
”தங்கமா வரட்டுமே. யார் வேணாம்னு சொல்லப் போறாங்க.. ஆமா அப்படி ஒரு வாய்ப்பு இருக்கு இல்லே?”.
சந்திரய்யா தலையை ஆட்டிக் கொண்டு கையில் எடுத்த நீளப் பாவாடையை மடித்து வைத்தார்.
”அவர், அதான், போர்ச்சுகல்லுக்கும், ஸ்பெயினுக்கும் ஒரே நேரத்திலே ராஜாவாமே”.
“ஆமா, ஆனா ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு ராணியை கல்யாணம் கட்டலே” அவர் என்றாள் குறும்பாகப் பார்த்தபடி மிங்கு. சந்திரய்யா வெட்கமும் பெருமையுமாக ஒரு சிரிப்பு சிரித்ததற்கே நேரில் வந்து அனுபவிக்க போர்த்துகீசு அரசர் ஓடி வந்து விடக்கூடும்.
”ராஜா தனியா வருவாரா, ராணி கூடத்தான் வருவார். கவனிச்சு நல்ல மரியாதையும், பரிசும் கொடுத்து அனுப்பறது நம்ம பொறுப்பாச்சே” என்றார் தன் திண்டு தலையணை ஆசனத்தில் உட்கார்ந்தபடி சந்திரய்யா.
”கவலையே படாதீங்க, பொறுப்பு எல்லாம் நீங்களும், ஜெருஸொப்பா ஜவுளிக்காரர் பிரசன்னராஜரும் போட்டி போட்டுக்கிட்டு கவனிச்சுக்குங்க. ராணியம்மா கிட்டே சொல்றேன்”.
”பொண்ணு, சும்மா இரு. ஜவுளிக்கடை வச்சு நிர்வாகம் பண்ணவே நேரம் போதலே. கூடுதல் பொறுப்பு அதுவும் ராஜாங்க பொறுப்பெல்லாம் நமக்கு எதுக்கு?”
சந்திரய்யா அவசரமாகப் பின்வாங்கினார். மிங்கு அதற்குள் மூன்று நீளப் பாவாடைகளும் உள்ளே உடுக்கும் ஷெமி மூன்றும் தைக்கத் துணி எடுத்து வைத்து ”கோட்டைக்கு ஆள் அனுப்பி காசு வாங்கிக்குங்க” என்று புறப்பட்டாள்.
”இருக்கறதிலேயே நல்ல தையல்காரங்க ரெண்டு பேரையும் போட்டு இதை என்னை விட இரண்டு அங்குலம் உயரத்துக்கு தச்சுக் கொடுங்க. இந்தாங்க”.
சந்திரய்யா பிளந்த வாய் பிளந்தபடி இருக்க, கையில் வைத்திருந்த சஞ்சியில் இருந்து மிங்கு ஒரு சற்றே பழகிய நீள போர்ச்சுகீஸ் உடுப்பை அவரிடம் கொடுத்து, இதுதான் அளவு துணி என்றாள். யார் உடுப்பு அது?
மிங்கு போன ஐந்து நிமிடங்களில் பெத்ரோ, சந்திரய்யா கடையில் ஆஜராகி விட்டார்.
”சந்திரய்யா நான் சொன்னதை கேட்டே, பார் உன் கடையிலே வருமானம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. அங்கே இருந்து பார்த்தாலே நீங்க இருக்கற ஐரோப்பிய துணியை எல்லாம் வாரி எடுத்து அந்தப் பொண்ணு கிட்டே காட்ட வந்து நின்னது தெரிஞ்சுது. அதென்ன, ராணி இதெல்லாம் வாங்கினாலே ஆச்சரியப்படுவோம். தாதிப்பொண்ணு, அது இப்படி ஐரோப்பா உடுப்புக்கு துணி வாங்கிட்டு. என்ன விசேஷம்?”
சந்திரய்யா உஷாராகி விட்டார். இன்றைக்கு இது இரண்டாவது முறை அவர் ஜாக்கிரதையாகப் பேச்சைக் கையாள்வது.
”செனார் பெத்ரோ, அந்தப் பொண்ணுக்குத்தான் நேரம் அதிகம் கிடைச்சு என்ன பண்றதுன்னு தெரியாம என் கிட்டே சிரமப்படுத்த வருதுன்னா துரையவர்கள் அதை ஒரு பொருட்டா மதிச்சு என்னன்னு கேக்கறீங்களே? இது நியாயமா? இந்தக் கடையே துரையவர்களோட யோசனைப்படி இந்த தீபாவளிக்கு நல்ல வருமானம் பார்த்தது. சென்ஹார்கள் மட்டுமில்லே, சென்ஹோரா துரைசானிகள் மட்டுமில்லே, உள்ளூர் பொண்ணுங்க எல்லாம் மதிமயங்கி இந்த உடுப்பை வாங்க எப்படி அலையலையா வந்தாங்க தெரியுமா?”
”மெத்த சந்தோஷம் சந்திரய்யா” என்று சிரித்தார் பெத்ரோ, சந்திரய்யா கையைக் குலுக்கியபடி.
”துரை, ஒரு நீள கவுன் வெளிர் நீல நிறத்துலே இன்னும் இருக்கு. போட்டுக்க வேண்டியவங்க போட்டுட்டா அம்சமா இருக்கும். மடிச்சு எடுத்துத் தரட்டுமா?”
”நான் போட்டுக்கணுமா, சகிக்காது” என்றார் பெத்ரோ சிரிக்காமல்.
”ஐயோ உங்களை நீளப் பாவாடை கட்டிக்கச் சொல்வேனா?”
”சரியோ இல்லையோ, மகாராணியே ஐரோப்பிய நீளப் பாவாடைத் துணி வாங்கி தச்சுப்போட தாதியை அனுப்பறாங்கன்னா உங்க கடை ஜெரஸுப்பா ஜவுளிக் கடைகளை விட அரண்மனை வகையிலேயே பெரிய பெயர் பெற்றுடுத்து போல. ரெண்டு கடை இப்படி பேர் வாங்கினது நாலு வருஷத்துலே – உங்க சந்திரய்யா ஜவுளி, ரோகிணி மிட்டாய் அங்காடி”.
”மிட்டாய்க்கடை கோட்டைக்கு நல்ல தொடர்பில் இருக்கு என்றால் ஏற்றுக்கலாம். ஆனா என் சின்னஞ்சிறிய ஜவுளிக்கடை ராஜகுடும்பத்துக்கு துணி கொடுக்கற அளவு நெருக்கம்னு சொன்னா யார் நம்புவாங்க சென்ஹோர்?”
”ஏன் நம்ப என்ன கஷ்டம்? இப்போதானே பார்த்தோம்.”
”ஒரு தாதி வாங்கினா கோட்டையும் அரண்மனையும் வாங்கினதா ஆகிடுமா?”
”தாதி வந்து வாங்கினா, ராணியே வாங்கின மாதிரி இல்லியா?”
பெத்ரோ சிரித்தார்.
இதற்கு மேல் இதை வளர்க்காமல், பெத்ரோ சந்திரய்யா கையைப் பற்றியபடி சொன்னார் – ”தாதி ராணிக்கு வாங்க வந்தாலும் ராணி தாதிக்கு வாங்க வந்தாலும் ரகசியமா வச்சுக்கறேன் போதுமா?”
“கோட்டை, மிட்டாய்க்கடைக்கு வாங்கினால்?” பெத்ரோ கேட்டார். ”அதுவும் ரகசியம்தான்” என்று பதிலையும் அவரே சொல்லிக் கொண்டார்.
பெத்ரோ சொன்னால் சொன்னதுதான் என்று சந்திரய்யாவுக்குத் தெரியும்.
”கவுடின்ஹோ பிரபு நேற்று இரவு வந்திருந்தார்” என்றார் சந்திரய்யா. ”
”அப்படியா, எவ்வளவு லாபம், யார் போட்ட முதல், யார் எல்லாம் மொத்தமாக வாங்கினது என்று குடைந்து குடைந்து கேட்டிருப்பாரே” என்று சிரித்தார் பெத்ரோ.
“ஆமாம், அவருக்கு இந்த ஜவுளிக்கடைக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று தெரிந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்து விடும் போல. அவர் யோசனை சொல்லிவிட்டுப் போனார்” – ’கடையின் ஓரமாக ஒரு மேஜையும் ஒரு நாற்காலியும் போட்டு மிளகு மொத்த வியாபாரம் நடத்தலாம். மிளகு மூட்டை இங்கே வராமல் விற்க வந்தவனுக்கும் வாங்க வந்தவனுக்கும் நம் ஆளை வைத்து தரகு செய்து இருந்த இடத்தில் இருந்தே லாபம் பார்க்கலாம்’.
“நான் எதுக்கு தரகனாகணும்? கவுடின்ஹோ பிரபு என்னிடம் ஏன் சொன்னார்?” சிரித்தார் சந்திரய்யா.
”நான் மகாராணியின் கடைநிலை ஊழியன். அவர் அனுமதி கொடுத்த வியாபாரம் மட்டும் தான் செய்யலாம் என்று சொல்லி விட்டேன். கஸாண்ட்ரா பெயரில் செய்யேன் என்கிறார். கஸாண்ட்ரா வந்தால் பெத்ரோ பிரபு வருவார், அவர் வந்தால் அவருடைய மாமனார் வருவார் என்கிறார். மன்னிக்க வேண்டும் இதெல்லாம் சொல்லாமல் இருந்தாலும் தப்பு, சொன்னாலும் ரசிக்காது” என்றார் தரையைக் குனிந்து பார்த்தபடி சந்திரய்யா.
பெத்ரோ மாளிகைக் கதவு திறந்து கஸாண்ட்ரா வெளியே வந்தாள். பெத்ரோ வீட்டு வாசலில் நின்று கஸாண்ட்ரா தேடியது பெத்ரோவை அல்லாது வேறு யாரையும் இருக்காது என்று தெரிந்த பெத்ரோ அவசரமாகத் தெருவைக் கடந்து வீடு திரும்பினார். வேகமாக வந்த சாரட் ஒன்று சந்திரய்யா கடை வாசலில் நின்றது.
”ஆண்கள் அணியும் ஐரோப்பிய மோஸ்தர் கால்சராய் தைத்துக் கொடுக்க தையல்காரர் உண்டா?” கேட்டு பலமாகச் சிரித்தபடி நேமிநாதன் படியேறி வந்தான்.
(தொடரும்)