மித்ரோ மர்ஜானி – 1

This entry is part 1 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

1. சுமித்ராவந்தியும் குடும்பத்தினரும்

புழுதி வண்ண, பரந்த ஆகாயத்தின்  சிறு துண்டொன்று, கூரையில் வெளிச்சத்ற்காக பதிக்கப்பட்டிருந்த சதுரக் கண்ணாடியின் வழியாக இறங்கி அறைக்குள் விழுந்து சிதறியிருந்தது.  ஆழ்ந்த உறக்கத்திலிருந்த குர்தாஸ், துணுக்குற்று எழுந்து,  நாற்புறமும் மலங்க மலங்கப் பார்த்தார். கையை நீட்டி,  ஜன்னலருகே வைத்திருந்த கண்ணாடியை எடுத்து  அணிந்து கொண்டு,   அடையாளம் காணும் விதமாக, அறையைக்  கூர்ந்து கவனித்தார். அதோ, மூலையில் அவரது குடை, ஆணியில் மாட்டப்பட்டிருக்கும் அவரது நீண்ட கோட், சந்தேகமில்லை,  என்னுடைய வீடு தான்.

வீட்டில் சாமான்கள் வைத்த இடத்திலேயேதான்  இருக்கின்றன. எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். நானுந்தான். மதியம் லேசாகக் கண்ணயர்ந்திருக்கிறேன் போல. தலையணையை மடக்கி கைக்கடியில் வைத்துக்கொண்ட போது, கடைவாயில் திடீரென எழுந்த வலியைத் தாங்க முடியாமல் மறுபடியும் படுக்கையில் விழுந்தார்.. அட! இதென்ன! நேற்றைக்குத்தான் பால் பற்கள் முளைத்த மாதிரி இருந்தது,  இன்று அவை ஆட்டங்கண்டு, ஒருசேர விழ ஆரம்பித்து விட்டனவா? கொஞ்ச நேரம் பல் டாக்டரின் முகம் கண்களுக்கெ திரே மின்னி,  பின்னர் சொட்டு சொட்டாக வழிந்த கண்ணீரில் அழிந்து போனது. இவ்வளவு நீண்ட பயணம்,  இத்தனை சீக்கிரமாக முடிந்து விட்டதா?

நேற்று தான் ஆடிக் கொண்டிருந்த முன் பக்கப் பல்லை,  அம்மாவிடம் காண்பித்தது  போலிருக்கிறது.

அம்மா மோவாயைப் பிடித்துக் கொண்டு, வாஞ்சையுடன் “சின்னக்கண்ணா, பல் விழுந்துவிட்டால், அந்த இடத்தை நாக்கால் நெருடாதே மற்ற பற்கள் கோபித்துக் கொண்டு விடும்” என்றதும் நேற்று  தான் போல இருக்கிறது.  சமையலறை மசாலாக் கறைகள் படிந்த, பாதி அழுக்கான துப்பட்டாவுக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் அம்மாவின் முகம்…. உயிருடன் கண்ணெதிரே நடமாடிய சாட்சாத் மகாலட்சுமி போன்ற அம்மா, கலைந்து போன கனவைப்போலஎங்கே சென்று  ஒளிந்து கொண்டுவிட்டாளோ? அந்த அற்புதமான நாட்கள் எங்கே காணாமல் போய்விட்டன?அம்மாவும் அப்பாவும் எங்கே மறைந்துவிட்டார்கள்? சொர்க்கத்தில் வாசம் செய்யும் அவர்களை இந்த துரதிதிர்ஷ்டசாலியோ நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. ஒவ்வொரு கணமும்,  ஒவ்வொரு மூச்சும்,  பாசத்தோடு வளர்த்து ஆளாக்கிய 

வர்கள் கண்ணை விட்டு மறைந்த வுடனேயே அவர்கள் மீது இருந்த  பாசமும் மறைந்து விட்டதோ!

இல்லை. இல்லை. அப்படியெல்லாம் இல்லை. போன வருடம் கூட அப்பாவின் திவசத்தின்போது பிராமணர்களை அழைத்து சாப்பாடு போட்டு பாத்திரம் துணிமணி எல்லாம் கொடுத்தேனே! விதிப்படி செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தோமே. ஆனால் கடவுளைப் போன்ற அந்த அப்பாவை இந்த வீட்டில் யார் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? தன்வந் தியோ, பொழுதெல்லாம் அடுப்பறையிலேயே உழன்று கொண்டிருக்கிறாள். மருமகள்கள், இதுதான் சாக்கென்று, பட்டும் படாமல், தத்தம் வேலையை கவனிக்கப் போய் விடுகிறார்கள்! மகன்கள். அவர்களுக்கு தன் அப்பாவின் நினைப்பே இல்லாத போது,  அப்பாவின் அப்பாவை குறித்து என்ன கவலை இருக்கப் போகிறது?  பகல் முழுவதும் வெளியில் கேளிக்கையும் கொண்டாட்டமும்!  இரவு வீட்டில் கொட்டம்! கடல் போன்ற இந்த பெரிய வாழ்க்கையை ஏதோ இவர்கள் மட்டுமே வாழ்வதாக எண்ணிக்கொண்டு திரிகிறார்கள்! இந்த கரையிலும்  தான் இளமை  வெள்ளம் போல வந்தது. ஆனால்  ஏறிய வேகத்திலேயே வடிந்தும் விட்டது. பாவம் தன்வந்தி! இந்த குடும்பச் சுழலில் சிக்கி,  அவளுக்கு தன்னைக் குறித்த நினைப்போ,  இந்த கிழவன் குரர்தாசை குறித்த நினைப்போ இல்லாமல் போனது. 

மதியம் தான் பல்லை பிடுங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் மனைவிக்கோ வலி எப்படி இருக்கிறது என்று கேட்கவோ, சற்று நேரம்  அருகே வந்து அமரவோ கூட நேரமில்லை. அவள் இந்தக் கட்டிலையே இரவும் பகலும் சுற்றி வந்த ஒரு காலமும் இருந்தது. இப்போது என்னவென்றால் அனைத்தையும் மறந்து விட்டு மகன்களோடும் மருமகளோடும் குடும்பச் சுழலில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறாள். கணவனைப் பற்றி நினைக்கக் கூட அவளுக்கு நேரமில்லை. படுத்துக் கொண்டிருந்த குர்தாஸ் எழுந்து உட்கார்ந்து கொண்டார். வாசல் பக்கம் பார்த்து மனைவிக்கு குரல் கொடுத்தார். ஓ! பன்வாரியின் அம்மா….

கையில் இருந்த வேலையை போட்டுவிட்டு தனவந்தி உடனடியாக கணவனின் அறைக்கு வந்தாள். விளக்கை பொருத்திவிட்டு அருகில் வந்து  – “வலி கொஞ்சமேனும் குறைந்திருக்கிறதா? சூடாக ஒரு வாய்ப் பால் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.

 ஒளி மங்கிய கண்களில் கோபம் பளபளக்க, குர்தாஸ் சற்று நேரம் தனவந்தியை முறைத்துப் பார்த்து விட்டு கோபத்துடன் “பால் இல்லாமல் நான் ஒன்றும் இறந்து விட மாட்டேன்” என்றார்

தன்வந்தி உள்ளூர பயந்தபோதிலும்,  போலியாக கோபத்தை  வரவழைத்துக் கொண்டு, “நல்ல வார்த்தையாக பேசக்கூடாதா? மகன்கள் கேட்டால் என்ன நினைத்துக் கொள்வார்கள்?” என்றாள்.

குர்தாஸ் வெறுப்பில் தலையசைத்தவாறு “மகன்கள் சுய நினைவோடிருந்தால்தானே இதையெல்லாம் கேட்கப்போகிறார்கள்” என்றார்.

“உரக்கப் பேசி ஏன் தலைவலியை வலிய வரவழைத்துக் கொள்கிறீர்கள்? மகன்கள் ஒவ்வொருவரும் உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று விசாரித்துவிட்டு தான் போனார்கள்”

” அவர்கள் பெருமையை என்னிடம் பீற்றாதே தனவந்தி. நானும் அவர்களுடைய தகப்பன் தான்”

தனவந்தி, அருகே சென்று குனிந்து, போர்வையை சரி செய்தவாறே குர்தாஸை கூர்ந்து பார்த்துவிட்டு, “நான் சொல்வதை கேளுங்கள். ஒருவாய் சூடாக பால் குடியுங்கள். தலைவலி குறையும்” என்றாள்.

குர்தாஸ் மறுப்பு எதுவும் கூறாமல் இருந்தது, தனவந்திக்கு நிம்மதியளித்தது.

சமையலறைக்குச் சென்று பாலை சுட வைத்தாள். பாலை ஆற்றிக் கொண்டிருக்கும்போது, கடைசி மருமகள் வாயிற் படியருகே வந்து நின்றாள். மாமியாரை ஒரு முறை கூர்ந்து பார்த்துவிட்டு, லேசான முறுவலுடன்,  “அம்மா,  பால் உறையூற்றப் போவதாக இருந்தால் நன்றாக ஆறிய பிறகு கொஞ்சமாக தயிர் விட்டு உறை யூற்றுங்கள். நேற்று தயிர் புளித்திருந்தது” என்றாள்.

பாலை ஆற்றிக் கொண்டிருந்த தனவந்தியின் கைகள் ஒரு கணம் செயலிழந்து நின்றன. பதிலுக்கு எதையாவது சூடாகச் சொல்ல வேண்டும் போல இருந்த போதிலும், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். இந்தக் கேடு கெட்டவளோடு சேர்ந்து நானும் தரம் தாழ்ந்து போகணுமா என்ன?

“மருமகளே,  உன் மாமனாரின் உடல்நிலை சரியில்லை. வலியில் துவண்டு படுத்திருக்கிறார். அவருக்காகத்தான் பாலை சூடாக்கி  கொண்டிருக்கிறேன்”

தன்வந்தியின் கடைசி மருமகள் பூலாவின் கண்கள் மின்னின.

“அம்மா,  அவர்தான் தனது வலிக்கிற கடைவாய் பல்லை பிடுங்கிக் கொண்டு வந்துவிட்டாரே? இப்போது  வலி குறைந்திருக்குமே!” என்றாள்.

தனவந்தி எதுவும் பேசாமல் மருமகளின் முகத்திலிருந்து பார்வையை அகற்றி கொண்டாள். முந்தானை நுனியால் பால் டம்ளரை மூடிப் பிடித்துக் கொண்டு சமையல றையை விட்டு வெளியே வந்தாள்.

மனம் வலித்தது. வீட்டு முதலாளிக்கு ஒரு டம்ளர் பால் கொடுப்பதற்குக் கூட எத்தனை கட்டுப்பாடு! எத்தனை காவல் கண்கள்!

பாலை கொடுத்துவிட்டு குர்தாசின் கால்ருகே அமர்ந்து கொண்டு, அவரது கால்களை பிடித்து விட்டவாறு தன்வந்தி மெல்லிய குரலில் அழுதாள்.

தனவந்தி அடிக்கடி தன் கண்களை துப்பட்டாவால் துடைத்துக் கொள்வதைப் பார்த்த குர்தாஸ் ஒருவேளை அவள் தங்கள் இளமைக் காலத்தை நினைத்து அழுகிறாளோ என எண்ணினார்.

தனவந்தி,  உன்னுடைய மூத்த மகனுடைய முடியே வெள்ளியைப் போல மினுங்கும் போது,  நான் மட்டும் கிழவனாகாமல் இருக்க முடியுமா?

ஒன்றல்ல,  பல பழைய இனிமையான நினைவுகள் அவளது கண்களின் முன் சுழன்றன. இன்பத்திலும் துன்பத்திலும் சமமாகத் தோள் கொடுத்த தன் கணவனின் கால்களை பிடித்து விட்ட வாறே,  தனவந்தி எதையோ நினைத்து நினைத்து அழுதாள்.

குர்தாஸ் மனைவியின் மடியில் தனது கால்களை நீட்டிக் கொண்டார். வெகு நேரம் வரை தனவந்தியை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு  லேசாக  சிரித்தார். “தனவந்தி, காலம் மாறிப்போச்சு. எல்லாமே மாறிப்போச்சு ஆனாலும் உன்னுடைய கூர்மையான மூக்கு மட்டும் மாறவே இல்லை” என்றார். தனவந்தி தழுதழுத்த குரலில், துக்கம் தொண்டையை அடைக்க,  பெருமூச்சு விட்டுக் கொண்டே, “நீங்கள் கொடுத்த பொருட்களால் என் கருவூலம் நிரம்பி வழிகிறது. எனக்கு எந்த குறையும் இல்லை. ஆனால்,  பழைய மூக்கு மட்டும் தான் இப்போது என்னிடம் இல்லை” என்றாள்.

குர்தாஸ் இதைக் கேட்க விரும்பவில்லை. என்னுடைய துணைவிக்கும் வயதாகிக் கொண்டு வருகிறது என்று மனதிற்குள்ளேயே நினைத்தார்.

அவர் சொன்னதென்னவோ அவளுக்கு இயல்பாக அமைந்திருந்த கூர்மையான மூக்கைக் குறித்து. ஆனால் அவளோ அதை வேறு எதனுடனோ இணைத்துக் கொண்டு வருந்தி அழுகிறாள். ஒரு கணம் எரிச்சலோடு கால்களை இழுத்துக் கொண்ட போதிலும்,  மறுகணமே அவருக்கு மனைவியின் மீது அளவு கடந்த பாசமும் பரிவும் பொங்கியது. தலையை அசைத்தவறே, “வந்தி,  நீ  இந்தக் குடும்பத்திற்காகஉன் கடமையை தவறாது செய்தது போல, வேறு யாரால் செய்துவிட முடியும்?

உழைப்பு என்பது உன் விதியிலேயே எழுதியிருக்கிறது தோழி” என்றார்.

கணவனிடமிருந்து கிடைத்த மட்டற்ற பரிவினால்,  தனவந்தி, புது மணப்பெண் போல நாணினாள். நெற்றியை மூடியிருந்த முந்தானையை நெகிழ்த்தி, கலைந்திருந்த வெண் முடியை துப்பட்டாவுக்குள் ஒதுக்கிக்கொண்டு, மிகுந்த வெட்கத்துடன்,

“இந்த பாராட்டுக்கெல்லாம் எனக்கு என்ன தகுதி இருக்கிறது? எல்லா பெருமையும் உங்கள் அம்மா –  என் மாமியாரைத்தான் சேர வேண்டும். தப்பித்தவறி ஏதேனும் தவறு செய்ய நேரிடும் போது கூட,  என்னை அன்போடு நிதானமாக வழி நடத்தி புரிய வைப்பார். ” மகளே, இந்த உடலின் மூலமாக எதையெல்லாம் அனுபவிக்க முடியுமோ அவை மட்டுமே உண்மையான வருமானம்” என்பார்.  இந்த குலத்தின் ஆதிப் பெண் கற்றுத் தந்த பாடத்தை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளையே, அவரை தினந்தோறும் நினைத்தபடி, கடவுளிடம் வைக்கிறேன்” என்றாள்.

இதைக் கேட்ட குர்தாஸ் தனவந்தியை, இறுக அணைத்துக் கொண்டார். இருமை மறைந்து,  அங்கு இருவரும் ஒன்றெனத் தோற்றமளித்தனர். சற்றுமுன் அவர் நினைவு கூர்ந்த அவருடைய அம்மாவையே தனவந்தியும் நினைத்துக் கொண்டிருந்தாள். ஒரு கணம், அவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள் போலவும்,  இருவரும் ஒருசேர மறைந்த தங்களது தாயாரை நினைவு கூர்வது போல வும் அவருக்குத் தோன்றியது.

குர்தாஸ் மனைவியை அழைத்து எதையோ சொல்ல முற்படுகையில், நடுமருமகள் மித்ரோவின் அறையிலிருந்து வந்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டார். தனவந்தி  கையை பிசைந்து கொண்டு நின்றாள். கடவுளே! திரும்பவும் அதே அடி உதை அமர்க்களமா?

இவர்கள் இருவர் நடுவே நான் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன். இது பழைய குளிர் காலக் காய்ச்சல். லேசில் ஓயாது. நேற்றில்லையேல் இன்று. இன்றில்லையேல் நாளை. நாளை இல்லையேல் மறுநாள். தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். என் மகன் சர்தாரிலால்  பாவம் ! எத்தனைக்கெத்தனை அவன் சூது வாது தெரியாதவனோ,  அத்தனைக்க த்தனை அவனை அடாவடியாகத் துன்புறுத்துபவளாக  வாயாடி மருமகள் வந்து வாய்த்தி ருக்கிறாள்!

தனவந்தி வெளியே சென்று மகனின் அறைக்குள் எட்டிப் பார்க்க முயற்சித்தாள். கடவுளே! இது என்ன சோதனை? மனதால் கூட ஒருவருக்கும் நான் தீங்கு நினைத்ததில்லையே, பிறகு இதெல்லாம் எப்போது செய்த பாவத்திற்கான தண்டனை?

கலைந்து போன முடியுடன், பைத்தியக்காரியைப் போல, மித்ரோ,  அவளை எட்டி உதைத்துக் கொண்டிருந்த சர்தாரிலாலிடமிருந்து, தன் கையை விடுவித்துக்கொண்டு,  தப்பிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

தன்வந்தி திடுக்கிட்டு,  சில நொடிகள் அவர்களைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தாள். என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டதும் உரத்த குரலில் “சர்தாரி லால்,போதும் நிறுத்து” எனக் கூவினாள்.  சர்தாரிலாலின் காதில் எதுவும் விழவில்லை.இறுக மூடிய முஷ்டியால், மனைவியின் முதுகில் ஓங்கி இன்னும் ஒரு குத்து விட்டுவிட்டு, ” என் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச என்ன தைரியம் உனக்கு? பார்வையைத் தாழ்த்தப் போகிறாயா இல்லையா? என உறுமினான்.

மித்ரோ அப்படி எதுவும் செய்து விடவில்லை. தன் பெரிய பழுப்பு நிற கண்களால் கணவனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்தபடி நின்றாள்.

தொண்டையை விட்டு வெளி வர மறுத்த, வலுவற்ற குரலில்,  விரக்தியாக தலையை அசைத்தவறே, “அடுத்தவர் வீட்டு பெண்ணின் மீது கை வைக்கிறாயே சர்தாரிலால்,  இந்தக் காட்சியை காண்பதற்கு பதிலாக,  நான் குளத்திலோ குட்டையிலோ விழுந்து  உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம்” என்றாள்.

தாயின் தழுதழுத்த குரலைக் கேட்டு,  சர்தாரியின் முகத்தில் சோகம் மண்டியது. கைகளை காற்றில் வீசியபடியே வெறுப்பு நிறைந்த குரலில், ” எல்லாம் என் தலையெழுத்து. இந்த குப்பை தான் என் பங்காக வந்து சேர்ந்தது. இவளுக்கு பதிலாக தெருவை கூட்டிப் பெருக்குகிறவள் கூட நன்றாக நடந்து கொண்டிருப்பாள்” என்றான்.

தனவந்தி, கையை உயர்த்தி,  அவனைத் தடுத்து, “வாயை மூடடா, மதி கெட்டவனே,  இவள் உன் மனைவியா இல்லை உன் பரம விரோதியா? சீ …ச்சீ”என்றாள்.

பிறகு பக்கத்தில் வந்து,  மருமகளின் முதுகை வாஞ்சையுடன் தடவி வியவாறே,”சுமித்ரா வந்தி, இவன்தான் திமிர் பிடித்து கொழுத்துத் திரிகிறான் என்றால்,  நீயாவது கொஞ்சம் பார்வையை தாழ்த்திக் கொள்வதுதானே. மகளே, ஆண் என்பவன் முதலாளி. அவனை எதிர்த்து, நம்மைப் போன்ற துரதிருஷ்டசாலிகள்   ஏன் வலியப் போய் துக்கத்தை தேடி கொள்ள வேண்டும்? என்றாள்.

மித்ரோ தலையை இன்னும் நிமிர்த்திக் கொண்டு, முன்பை விடவும் தீவிரமாக அவனை எதிர்க்க தயாராக நின்றாள்.

மாமியார் மருமகளிடம் மறுபடியும் முறையிடுகிற குரலில், ” இந்த ஒன்றுக்கும் உதவாத பிள்ளையை கட்டிக்கொண்டு அழ எனக்கு துளியும் விருப்பமில்லை மகளே.  இதற்கு நீயே ஏதாவது ஒரு வழியைச் சொல்” என்றாள்.

மித்ரோவின் மை தீட்டப்பட்ட பழுப்பு நிற கண்கள் ஒளிர்ந்தன. ” பிள்ளையைப் பற்றி கவலைப்பட்டு உடம்பை உருக்கிக் கொள்ளாதீர்கள் அம்மா. கவலை வேண்டாம்,  இவனுடைய செயல்களே இவனை நரகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும்” என்றாள்.

சர்தாரி லால் பாய்ந்து வந்து மனைவியின் மணிக்கட்டை பிடித்து, ” முதலில் உன்னை அந்த நரகத்திற்கு அனுப்புகிறேன் பார்” என்று கறுவினான்.

தனவந்தி மகனைப் புறந்தள்ளிவிட்டு,  மருமகளின் கையைப் பிடித்துக் கொண்டு, மகனிடம்  எச்சரிக்கும் விதமாக,  “இந்த அறை வாசற்படியை விட்டு நீ வெளியே  இறங்கினால், என் பிணத்தைத்தான்  பார்ப்பாய்” என்றவாறே அறையை விட்டு வெளியேறினாள்.  பக்கத்து அறையிலிருந்த மூத்த மகனுக்கு “பன்வாரி,  அறையை விட்டு கொஞ்சம் வெளியே வா” என்று குரல் கொடுத்தாள்.

*******

தாயுடன் தம்பியின் மனைவியை பார்த்ததில்,  பன்வாரி துளக்குற்று “என்ன ஆயிற்று அம்மா? என்று கேட்டான்.  “பன்வாரி உன் தம்பி கோபத்தில் பைத்தியம் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறான். போய் அவனை கொஞ்சம் சமாதானப்படுத்து மகனே” என்றாள்.

பன்வாரிலால், தன் தம்பி மனைவியை ஒரு முறை பார்த்து விட்டு, அதட்டலான குரலில், மனைவியிடம் “சுஹாக்,  நடுமருமகளை உள்ளே அழைத்துச் செல்” என்று கூறிவிட்டு தம்பி சர்தாரியின் அறையை நோக்கி நடந்தான்.

சுஹாக்,  மாமியாரை கட்டிலின் மீது அமரச் சொல்லி விட்டு, இரண்டு மணைகளை இழுத்துப் போட்டு,  ஓரகத்தியின் கையைப் பிடித்து அமரச் செய்து,   வாஞ்சையுடன், ” “மித்ரோ,  மாலை வரை நீ நன்றாக சிரித்து பேசிக் கொண்டுதானே இருந்தாய்? என்றாள்.

தனவந்தி மூத்த மருமகளின் கையைப் பிடித்துக் கொண்டு, ” நம் வீட்டு பாண்டம் சரியில்லை என்றால், நாம் யாரை குறை சொல்ல முடியும் ?” என்றாள்.

மித்ரோ, ஒரு முறை ஓரகத்தியை கண் விரியப் பார்த்துவிட்டு, பின் தன் பின்னலை அவிழ்த்து விட்டுக் கொண்டு,  கூந்தலில் சொருகி இருந்த ஊசிகளையும் அவிழ்த்து கீழே எறிந்தாள்.

அலமாரியிலி ருந்து சீப்பை எடுத்துக்கொண்டு சுஹாக், மித்ரோவின் பின்னால் சென்று அமர்ந்து கொண்டாள். அவளது கூந்தலை மெதுவாக வாரி சிக்கெடுத்து பின்னலிட்டாள்.

தனவந்தியின் மனதிலிருந்து விரற்கடை அளவு பாரம் அகன்றது. பன்வாரியின் மனைவி,  நல்ல மனம் படைத்தவள் மட்டுமல்ல,  புத்திசாலியும் கூட என்று நினைத்துக் கொண்டாள்.

வெளியே வந்து,  வாசல் அருகே இரு மகன்களும் ஒருசேர நிற்பதை பார்த்து, தனது பார்வையை தாழ்த்திக் கொண்டாள். கடவுளே! இதென்ன! இந்த மாதிரியான சண்டையும் சச்சரவுகளும் நிறைந்த கலவர நேரத்தில் கூட,  இந்த கண்கள்  மகன்களின் ஆஜா நுபகுவான தோற்றத்தை பார்த்து பெருமிதப்படுகின்றனவே!

“பன்வாரிலால் நீ புத்திசாலி. இவையெல்லாம் மரியாதையான குடும்பத்தில்  நடக்கக்கூடிய விஷயங்களா? இதோ,  உன் தம்பி எதிரில் தான் நிற்கிறான்,  விளக்கமாகக் கேள் அவனிடம். தினம் தினம் இந்த அடிதடியும் அமர்க்களமும் நல்லதற்கில்லை என்று தெளிவாக சொல்லிவிடு. 

சர்தாரி  அம்மாவைப் பார்ப்பதைத் தவிர்த்து,  கூரையைப் பார்த்தபடி, உதட்டை கடித்துக் கொண்டான்.

“தம்பி,  நானும் ஒன்றல்ல இரண்டு முறை திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் இப்படி ஒருபோதும் நடந்ததில்லை. உன்னுடைய மனைவி மட்டும் ஏன் தினந்தோறும் உன்னோடு சண்டை போடுகிறாள்?

சர்தாரி, இந்த முறை,  ஒன்றும் செய்வதற்கில்லை என்னும் விதமாக கைகளை விரித்து, ” என்ன சொல்லட்டும் அண்ணா… இவளுடைய கேவலமான நடவடிக்கை…..அவள் நடத்தை கெட்டவள்… என்றான்

“பன்வாரிலால், இந்த மூளை கெட்டவன் என்ன உளறிக் கொண்டிருக்கிறான்? என் மருமகளை தெருவில் போகிறவர்களோடு ஒப்பிடுகிறானே? இவனுக்கென்ன புத்தி பேதலித்து விட்டதா?”

சர்தாரி தன்னுடைய சோழி போன்ற கண்களை உருட்டி,  அம்மாவை பார்த்து, ” நான் சொல்வதை கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள். இந்த தட்டுவாணிச்சிறுக்கி, இந்த வீட்டு மானம் மரியாதை எல்லாவற்றையும் கப்பலில் ஏற்றிவிட்டு  என்னையும் சிறைக்கு அனுப்பி விட்டுத்தான் ஓயப்போகிறாள்” என்றான்.

மூத்தவனுக்கு என்ன புரிந்ததோ, அவனுக்கு மட்டுந்தான் வெளிச்சம். புடைத்த நெற்றி நரம்புகளை அழுத்திக் கொண்டு, வறண்ட குரலில்,   “அம்மா,  நீங்கள் அப்பாவிடம் போய் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்றான்.

தான்  அவனது தாய் என்பதை மறந்து விட்டு, மகனின் மகளாக மாறி,  அவனுடைய கட்டளையை சிறமேற் கொண்டு  தனவந்தி உடனடியாக எழுந்தாள். வாயில் வரை சென்று திரும்பி,  கெஞ்சுகிற குரலில் “தம்பிக்கு நீ தான் நல்ல புத்தி சொல்லணும் மகனே” என்று  கூறினாள்.

தனவந்தி அறைக்குள் வந்தபோது குர்தாஸ் உறங்கி விட்டிருந்தார். விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் அமர்ந்தபடியே தன்னைச் சூழ்ந்திருக்கும் கவலைகளில் தனவந்தி மூழ்க ஆரம்பித்தாள். இந்த உளுத்துப்போன உடம்பை நம்புவதற்கில்லை. இன்று இருப்பது நாளை இல்லாமல் போகக்கூடும். இந்த குடும்ப வாழ்க்கையும் கைவிட்டுப் போகும். உலகம் என்னையும் கடவுளுக்கொப்பான என் கணவனையும் எள்ளி நகையாடும்!

உட்கார்ந்தபடியே கண்ணயர்ந்துவிட்டு, சற்று நேரம் கழித்து விழிக்கையில், கால் மாட்டில் மூத்த மருமகள் சுஹாக் அமர்ந்திருக்கக் கண்டாள்.

“என்ன சுஹாக்வந்தி? என்ன விஷயம்? ஒன்றும் தவறாக நடக்கவில்லையே” என்று கேட்டாள்.

சுஹாக் மாமியாருக்க ருகே அமர்ந்து கொண்டு  “உங்கள் மூத்த மகன் மித்ரோவை உள்ளே அழைத்துக்கொண்டு, என்னை வெளியே போக சொல்லி விட்டார். கடவுள் நல்லதே செய்ய வேண்டும்! என்று கிசுகிசுத்தாள்.

” மருமகளே,  என் மூத்த மகன் புத்திசாலி. அனுபவம் வாய்ந்தவன். ஆனால் இந்த கோவக்காரி மித்ரோ அவனிடம் கூட பயப்பட மாட்டாள்”

சுஹாக் உட்கார்ந்தபடியே மாமியாரின் காலை பிடித்து விட தொடங்கினாள். தனவந்தி மகிழ்ச்சியுடன், “சபாஷ் மருமகளே! பன்வாரியைக் குறித்து எனக்கு எந்த கவலையுமில்லை.

எங்கள் குடும்பத்திற்காக உன்னை பெற்றெடுத்துத் தந்த உன் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள். பெரும் புண்ணியம் தேடிக்கொண்டவர்கள்” என்றாள். பிறகு, மருமகளின் கையை வாஞ்சையுடன் தடவி  ” மருமகளே, மித்ரோவின் விவகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும்,  ஆனால் உன் கடைசி ஓரகத்தி யின் நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? மனதுக்குள்ளேயே சுருங்கிப் போகிறேன். வந்த எல்லா நல்ல சம்பந்தங்களையும்களையும் விட்டுவிட்டடு, எப்படி இங்கே போய் மாட்டிக் கொண்டேன்? அந்த இடம் அவ்வளவு சரியில்லை என்று சொந்தக்காரர்கள் அரசல் புரசலாக சொன்னார்கள். நான்தான் அவர்கள் வீட்டு ஆடம்பரத்தையும் பகட்டையும் பார்த்து மதி மயங்கிப் போனேன்.

மருமகள் எழுந்து  வெளியே போனாள். திரும்பி வந்து, “அறைக்குள் நடுமருமகள் சிரிக்கிற சத்தம் கேட்கிறது அம்மா என்றாள்.

தனவந்தி மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. மருமகளின் கையை உதறிவிட்டு தூங்கிக் கொண்டிருந்த கணவனை உலுக்கி எழுப்பினாள்.

“எழுந்திருங்க! இன்று இரண்டு மகன்களும் நடுமருமகளை த்வம்சம் செய்ய போறாங்க”

குர்தாஸ் துணுக்குற்று எழுந்தார்.

“அடக்கடவுளே! அர்த்த ஜாமத்துல இது என்ன கூத்து? என்ன நடக்கிறது இந்த வீட்டில்? என்றார்.

தனவந்தி கைத்தாங்கலாக அவரைப் பிடித்து எழுப்பி உட்கார வைத்து சர்தாரியின் அறை வாசலுக்கு நடத்திச் சென்றாள்.

“தனவந்தியின் மகன்களே! உலகமே தூங்கிக் கொண்டிருக்கிற வேளையில்,  நீங்கள் என்ன ராக்கூத்து கட்டுகிறீர்கள்?

கதவு திறந்ததும், கண்ணில் பட்ட காட்சியில் அவர் கண்களை மூடவும் மறந்தார்.

நடு மருமகள், துப்பட்டாவால் தலையை மூடிக்கொள்ளாமல், கட்டிலில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள். மூத்த மகன் பன்வாரி மார்பில் குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு பல்லை கடித்துக் கொண்டிருந்தான்.

“சர்தாரிலால், உனக்கென்ன புத்தி பழுதாகி விட்டதா? உன் மனைவியிடம் தலையை மூடிக்கொள்ளச் சொல்” என்று குர்தாஸ் உறுமினார்.

சர்தாரிலால்,  மனைவியை நோக்கி,  சிறுத்தையை போல பாயமுற்படுகையில்,  மூத்தவன் பன்வாரி,  அவனை  தடுத்து நிறுத்தினான்.

குர்தாசின் உடல் கோபத்தில் நடுங்கியது.

 “உன் உதவாக்கரை மகன்களை நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன். ஆனால் நடு மருமகள், தலையை  மறைத்துக் கொள்ளாமல், இந்த ராட்சசர்களின் நடுவே  உட்கார்ந்துகொண்டு என்ன செயாகிறாள்?” 

என்ன செய்வதென்று புரியாமல்,  மூத்தவன் அம்மாவைப் பார்த்து, ” இவளுக்கு யாரும் எந்த அறிவுரையும் சொல்ல முடியாது. இவளை எதுவும் பேச வைக்காதீர்கள் அம்மா. இவள் பேசுகிற பேச்சில் ஒரு வார்த்தையைக் கூட அப்பா கேட்க நேர்ந்தால் நம் வீட்டில் நாளைய பொழுது விடியாது” என்றான்.

“ஹே ராம்! ஹே ராம்! அப்படி என்ன ஆகிவிட்டது பன்வாரி? உன் அப்பாவால் கேட்க முடியாத வார்த்தைகளை கேட்பதற்கு,  நான் மட்டும் உயிரோடிருக்க என்ன பாவம் செய்தேன்?”

“அம்மா, அப்பாவை அறைக்கு அழைத்துச் செல்லுங்கள். இந்த சண்டை சச்சரவெல்லாம் அவரால் சமாளிக்க முடியாது” என்றாள் மூத்த மருமகள்.

தனவந்தி கணவரின் கைகளை பிடித்துக் கொண்டாள்.

“இது கலியுகம்! கண்ணில் இருக்கும் நீர் வற்றி விட்டால் வீட்டு மான மரியாதையையோ அல்லது சமூக மரியாதையையோ குறித்து யார் கவலைப்பட போகிறார்கள்? என்றார் குர்தாஸ்.

மாமனார் மாமியாரை சமாதானப்படுத்தி அறைக்கு அனுப்பி விட்டு திரும்பிய சுஹாக், அறை வாயிலில் இரு சகோதரர்களும் மௌனமாக நின்று கொண்டிருப்பதை பார்த்து லேசாக கலவரம் அடைந்தாள். அறைக்குள் நுழைந்து மித்ரோவிடம், ” மித்ரோ, என்ன தகராறு உங்களுக்கிடையே?  என் கொழுந்தன் சொல்வதை கொஞ்சம் கேட்டு தான் பாரேன்” என்றாள்.

நடு மருமகள் முதலில் சர்தாரியையும் பிறகு பன்வாரியையும் பார்த்துவிட்டு, ” என் புத்திசாலி அண்ணியே! இந்த காதல் கதைகள் உங்களுக்கு எப்படி புரியப்போகிறது? என்றாள்.

மித்ரோ பேசுவதை கேட்க விருப்மி ல்லாமல் பன்வாரி தன் தம்பியை இழுத்துக் கொண்டு அறைய விட்டு வெளியே வந்தான். மித்ரோவை தன்னோடு படுக்க வைத்துக் கொள்ளும்படி மனைவியிடம் கூறினான்.

******

சகோதரர்கள் பக்கத்து அறைக் கதவை திறந்து கொண்டு செல்கையில், நடு மருமகள் தலையில் அடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

” அட மூளை கெட்டவர்களே, நீங்கள் உண்மையான ஆணாக இருந்தால் சப்புக்கோட்டி என்னை அணுவணுவாக ரசித்திருப்பீர்கள் அல்லது சிங்கம் போலப் பாய்ந்து பச்சையாக கடித்து துப்பி இருப்பீர்கள்” என்றாள்.

சுஹாக் ஓரகத்தியை  திரும்பிப் பார்க்கவில்லை. படுக்கையை விரித்து போர்வையை போட்டுவிட்டு  ” மித்ரோ, இரவு வெகு நேரம் ஆகிவிட்டது இப்போது எந்த கவலையும் இல்லாமல் கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடு” என்றாள்.

மித்ரோ உதடுகளை சுழித்தபடி, “கவலையா? யாருக்கு கவலை?  கவலைப்படுகிறவளின் வயிற்றில் நான் பிறக்கவில்லையே! என்றாள்.

Series Navigationமித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.