மந்தமான செவ்வாய்க் கிழமை இரவு

தமிழாக்கம் : மைத்ரேயன்

முன்மொழிவு: மைக்கெல் டிர்டா

அறிவியல் புனைவாளர் என்று பொதுவாக அறியப்பட்டாலும், ஆர். ஏ. லாஃபெர்ட்டி அவரளவில் தனி வகையானவராகவே இருந்தார். எதார்த்தத்தின் மீது அத்து மீறல்களை நிகழ்த்தும் கதைத் திட்டங்களும், கனவேகமான ஓட்டமும் கொண்ட அவருடைய கதைகள் அளப்பரிய மிகையும், கணக்கில்லாத இடைவெட்டுகளும், கட்டுப்பாடென்பதே இல்லாது எல்லா வித அதிகற்பனைகளும் கொண்டிருப்பதில் பெரும் குதூகலம் காட்டுகின்றன. அவருடைய பெரும் அளப்புகள் எங்கே போகின்றன என்பது பற்றி லாஃபெர்ட்டியின் விசிறிகளுக்குப் பெரும்பாலும் கொஞ்சம்தான் தெளிவாயிருக்கும், ஆனால் என்ன? அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? நாமெல்லாமே அந்த சாகசப் பயணத்திற்காகத்தான் வந்திருக்கிறோம்.

“லாஃபெர்ட்டி” கதை ஒன்றை முதல் முறையாகப் படித்த தருணத்தை நினைத்துப் பாருங்கள். அது “லாண்ட் ஆஃப் த க்ரேட் ஹார்ஸஸ்” ஆக இருக்கலாம், அது ஜிப்ஸிகளின் வேர் மூலத்தை விளக்குகிறது, புதுப் பாதை ஒன்றை வகுத்துக் கொடுத்ததும், ஹார்லன் எல்லிஸனால் பதிப்பிக்கப்பட்டதுமான ‘டேஞ்சரஸ் விஷன்ஸ்’ புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. ஒருகால் நெபுலா பரிசை வென்ற கதைகளின் தொகுப்பு ஒன்றில்“யுரேமாஸ் டாம்” கதையை நீங்கள் படித்திருக்கலாம். அல்லது வீணான நிலையில் உள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில், இஃப் பத்திரிகையின் பழைய பிரதி ஒன்றை அகழ்ந்தெடுத்து, அதில் பிரசுரமான “பூமர் ஃப்ளாட்ஸ்” கதையைக் கண்டிருக்கலாம். அந்தக் கதையில் பிரபலமான மூன்று அறிவியலாளர்கள், டெக்ஸஸ் மாநிலத்தின் வளர்ச்சி பெற்றிராத ஒரு மூலைக்குப் பயணம் போகிறார்கள், அங்கே மானுட வரலாற்றில் இதுவரை கிட்டாத ஒரு கணுவைத் தேடிப் போயிருக்கிற அவர்கள், அங்கே முடியடர்ந்த, பேருருவாளர்களைக் காண்கிறார்கள், க்ரேயோலா காட்ஃபிஷ் என்ற பெயர் கொண்ட பேரழகி ஒருத்தியைப் பார்க்கிறார்கள், அனேகமாகச் சாவென்பதையே அறியாத ஒரு மக்களினத்தைப் பார்க்கிறார்கள், அது தவிர த காமெட் என அழைக்கப்படும் ஒரு விண்வெளிப் பயணியையும் பார்க்கிறார்கள்.

எனக்கு லாஃபெர்ட்டி பற்றித் தெரிய வந்தது ஜீன் ஓல்ஃப் மூலமாக, அது 1980களின் துவக்கத்தில். ஜீன் ஓல்ஃப் அப்போது பூர்த்தி செய்திருந்த புத்தகமான ‘புக் ஆஃப் த நியூ ஸன்’ பற்றி அவரைப் பேட்டி காணச் சென்றிருந்தேன், அவரிடம் சமகால எழுத்தாளர்களில் அவருக்குப் பிடித்தமானவர்களைப் பற்றிக் கேட்டேன். உடனே, ‘ஆர். ஏ. லாஃபெர்ட்டி.’ என்று பதிலளித்தார். அதனால் அங்கிருந்து வெளியேறியதும், புத்திசாலித்தனமாக உடனடியாக, ஏஸ் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் ஸ்பெஷல் ஆன ‘நைன் ஹண்ட்ரட் க்ராண்ட்மதர்ஸ்’ புத்தகத்தின் பிரதி ஒன்றை வாங்கினேன். ஏதோ காரணத்தால் – அந்தத் தலைப்பு என்னைக் கவர்ந்திருக்கலாம் – நான் படிக்க ஆரம்பித்த முதல் கதை, ‘ஸ்லோ ட்யூஸ்டே நைட்’ தான். அது ஒன்றே போதுமானதாக இருந்தது. அதைப் படித்தபோது எனக்கு எழுந்த குதூகலம், நான் பதின்ம வயதினனாக இருக்கையில் லார்ட் டன்ஸேனியின் ‘ஜார்கென்ஸ் ரிமம்பர்ஸ் ஆஃப்ரிக்கா’, அல்லது ‘த மோஸ்ட் ஆஃப் எஸ்.ஜே.பேர்ல்மான்’ என்ற புத்தகங்களைத் திறந்தபோது எனக்குக் கிட்டியிருந்த உவகையை ஒத்திருந்தது. அது உங்களுக்கும் தெரிந்திருக்கும்: இத்தகைய தருணங்களில் கிட்டும் சந்தோஷத்தில் நம்மை நாமே இறுகக் கட்டியணைத்துக் கொள்ளலாம் போல உணர்வோம், சில நேரம் சிரித்துக் கொண்டும், சில நேரம் “இதுதான் எவ்வ்வளவு அருமை,” என்று முணுமுணுத்துக் கொண்டும் படிப்போம்.

எந்தக் கதைச் சுருக்கமும் ‘ஸ்லோ ட்யூஸ்டே நைட்’ கதையின் கிளர்ச்சியூட்டும் மொழிவளத்தை நமக்குக் கொடுக்கவியலாது. லாஃபெர்ட்டி மரியாதை நிறைந்த பேச்சு முறையை, காமிக்-தொடர்களில் வரக்கூடிய பெயர்களோடு கலக்கிறார், நம் எதிர்பார்ப்புகளை உயர்த்துகிறார், உடனடியாக அவற்றை அடிவெட்டுகிறார், பிறகு அவர் படிப்படியாக விரிக்கும் உலகு நமக்கு இப்போது நிறையவே பரிச்சயமான உலகாகத் தெரிகிறது. 1965 இல், ‘ஸ்லோ ட்யூஸ்டே நைட்’ முதலில் காலெக்ஸி பத்திரிகையில் வெளியிடப்பட்ட போது, அதில் லாஃபெர்ட்டி,வேகத்தைப் பற்றி அமெரிக்காவுக்கு இருக்கும் தீவிர முனைப்பைப் பயன்படுத்தி, அமெரிக்கர்கள் செல்வம், அந்தஸ்து மேலும் நட்சத்திர ஸ்தானம் ஆகியவற்றைப் பீடமேற்றி வழிபடுவதை விமர்சித்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்று படிக்கும்போது, இதே கதை மர்மமான விதத்தில் இன்றைய இண்டர்நெட்டின் விஷ ஜுரப் பண்பாட்டை முன் அனுமானித்திருக்கிறது.

அதன் துவக்கக் காட்சியில், ஒரு நடைபாதை யாசகன் தெருவோடு நடை போகும் ஜோடி ஒன்றை அணுகுகிறான்: “‘இந்த இரவை நமக்குப் பாதுகாப்பாக்குங்கள்,’ என்றபடி குல்லாயைத் தொட்டு அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவன் மேலும், ‘நல்ல மனிதர்களான நீங்கள், என் செல்வங்களை நான் மீட்டெடுப்பதற்காக ஓராயிரம் டாலர்களை முன் தொகையாக எனக்களிப்பீர்களா?’”

இந்தப் பேச்சுவழக்கு டபிள்யு.ஸி.ஃபீல்ட்ஸின் கள்ள மரியாதையுள்ள நடத்தையை, அல்லது பாப் ஐ- யின் நண்பனான ஜே. வெலிங்டன் விம்பியின் எத்தும் பிச்சையெடுத்தலை ( “இன்று கிடைக்கும் ஒரு ஹாம்பர்கருக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று மகிழ்ச்சியோடு நான் பணம் கட்டுவேன்”) நமக்கு நினைவூட்டும். அந்த ஜோடியோ, அல்லது யாசகனோ ஆயிரம் டாலர்களை ஒரு பிச்சைக்காரன் கேட்பதை அசாதாரணமாக நினைப்பதில்லை. நமக்கு சீக்கிரமே தெரிகிறது அது ஏனென்று: நம் மூளைகளிலிருந்து “ஏப் பயோஸ் தடை”யை நீக்கிய பிறகு, மக்களுக்குத் தெரிகிறது, “முன்பு மாசக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் நேரம் பிடித்த விஷயங்களுக்கெல்லாம் இப்போது நிமிடங்கள் அல்லது மணிகள் அவகாசம்தான் தேவைப்பட்டன. எட்டு மணி நேரத்தில் ஒருவர் மிக சுவாரசியமும், நுட்பமும் கொண்ட பணிகளில் ஒன்றோ அல்லது சிலதோ மேற்கொண்டு விட முடியும்.”

சீக்கிரத்தில் எல்லாம் – முழுதாக எல்லாமே – மிக,மிகத் துரிதமாக நடக்கின்றன, இதன் மறுபக்கம் என்னவென்றால், எதுவும் அதிக நேரம் நிலைத்திருப்பதில்லை. அந்த யாசகன் – அவன் பெயர் பேஸில் பேகல்பேக்கர்- “உலகத்திலேயே பெரிய பணக்காரனாக ஆக ஒன்றரை மணிகள்தான் தேவைப்படும். எட்டு மணி நேர இடைவெளியில் அவன் நான்கு பெரும்செல்வக் குவியல்களைத் திரட்டவும், இழக்கவும் செய்வான்; அவையோ சாதாரண மனிதர் திரட்டும் சிறு செல்வங்கள் அல்ல, பிரமாண்டமான செல்வக் குவிப்புகள்.”

ஒரே மாலை நேரத்தில், நகரத்திலேயே மிக்க அழகியான இல்டெஃபோன்ஸா இம்பாலா, மறுபடி மறுபடி மணம் புரிந்து கொள்கிறாள். தன் புத்தாக்கங்கள் மூலம் திடீரென்று பெரும்பணக்காரராகும் ஃப்ரெடி ஃபிக்ஸிகோவுடன் நடக்கும் அவளுடைய தேனிலவு முழுதுமே அகடவிகடமான ஒரு சம்பவம் – “விரிபின்னலாக விழும் புகழ் பெற்ற நீர்வீழ்ச்சியின் மொத்த நீர்ப்பெருக்குமே தங்க நிறமாக வண்ணம் பூசப்பட்டிருந்தது, அருகிலிருந்த பாறைகள் எல்லாம் ராம்பிள்ஸால் (பெயர்பெற்ற வடிவமைப்பாளர்) உருவாக்கப்பட்டிருந்தன; குன்றுகள் ஸ்பால் (இன்னொரு வடிவமைப்பாளர்) என்பாரால் செதுக்கப்பட்டிருந்தன.” ஒரு மணி நேர அபாரமான கொண்டாட்டத்திற்குப் பிறகு, இல்டெஃபோன்ஸா அப்போதைய சமூகப் போக்கின் மானியைப் பார்க்கிறாள், ஃப்ரெடியின் கண்டு பிடிப்பு சீக்கிரமே பழையதாகி விடும், அவனுடைய பெருஞ்செல்வம் அழிந்து விடும் என்று தெரிந்து கொள்கிறாள், அதனால் அவனை உடனடியாக விவாகரத்து செய்து விடுகிறாள். “நான் அடுத்தது யாரை மணந்து கொள்வது?” அந்த மந்தமான செவ்வாய் இரவில் இல்டெஃபோன்ஸா தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறாள்.

இதற்கிடையில், பேஸல் பணச்சந்தையில் உருட்டிப் புரட்டி ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார். “கடந்த இரண்டு மணிகளுக்குள் எழுந்து உயர்ந்த சில தொழில் சாம்ராஜ்யங்களை அவர் சரிந்து விழச் செய்தார். அப்படி நொறுங்கியவற்றைத் திரும்ப ஒன்றிணைத்து நல்லதொரு அமைப்பை உருவாக்கினார்.” அதனால் இயற்கையாகவே அவருடைய மனைவி, ஜூடி, “சுமார் இரண்டு மணிக்கு அங்கு நிலவிய ஃப்ரூ-ஃப்ரூ மோஸ்தரில் சிறப்பாக உடை உடுத்திய பத்துப் பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.” இப்படி ஒரு விட்டில் பூச்சி உலகில், நாடகங்களும் திரைப்படங்களும் ஆறு நிமிடங்களுக்கு மேல் ஓடுவதில்லை, ஸ்டான்லி ஸ்கல்டக்கருக்கு “நள்ளிரவு நேரத்தில் தலைசிறந்த நட்சத்திர நடிகர்” என்று தேர்வு கிடைக்கிறது. தத்துவத்தில் ஒரு தலையாய நூலை எழுதத் தீர்மானித்த மாக்ஸ்வெல் மௌஸர், அந்த வேலைக்கு ஏழு நிமிடங்களை முழுதாகச் செலவழிக்கத் தயாராக இருக்கிறார். “கருத்துகளின் தொகுப்புப் பட்டியலை” எடுக்கிறார், எத்தனை சொற்கள் வேண்டுமென்று “செயலூக்கி”க்குக் கட்டளை பிறப்பிக்கிறார், கொஞ்சம் கூடுதலான பளபளப்புக்காக, தன் குறிப்பிட்ட “ஆளுமை”யின் முத்திரைக்காக “கவர்ந்திழுக்கும் உருவகக் கலவை”யைத் தூண்டச் செய்கிறார். இதிலிருந்து கிட்டும் ஒரு தனிக் கட்டுரை துரிதமாக வெளியில் விரிந்து பரவுகிறது – “இது உண்மையிலேயே, இரவுக் காலத்தின் துவக்க மற்றும் இடைப்பட்ட மணி நேரங்களில் வெளியிடப்பட்ட தலை சிறந்த தத்துவ நூல்களில் ஒன்று,” என்று அழைக்கப்படுகிறது- ஆனால் விடிகாலைக்குள் இது உதாசீனப்படுத்தப்பட்டு மறக்கப்பட்டு விடும்.

“மந்தமான செவ்வாய் இரவில்” லாஃபெர்ட்டி- அரசியலில் மரபுவாதியும், சமய நம்பிக்கையில் ஒரு கேத்தலிக்குமானவர் இவர்- அர்த்தமே இல்லாத அலைப்பு கொண்டதும், நீடித்தல் என்பதே இல்லாததுமான ஒரு சமூகத்தை வருணிக்கிறார். அங்கு “வாழும் நகரம்” என்று ஏதும் இல்லை, ஒரு வகை ஆன்மீக உந்துதலும் இல்லை. மக்கள் கடந்து போகும் கணங்களுக்குத் தம்மை விட்டுக் கொடுக்கிறார்கள், எதுவுமே ஒரு பொருட்டில்லை, ஒரு இதயமும் நிரந்தரமாக நொறுங்குவதில்லை. இருந்தும் இந்த ஆழமற்ற ஆடம்பரமெல்லாம் ஓர் எளிய ஆனால் திகழ்ச்சியுள்ள நாடகத்தின் மூலம் நமக்குப் புரிய வைக்கப்படுகிறது: உலகை (சமூக வாழ்க்கையைப்) போதுமான அளவு வேகமாக்கினால், எல்லாமே கீஸ்டோன் காப்ஸ் கேலி நாடகத்தில் i தலைதெறிக்க ஓட்டமாக ஓடும் இறுதிக் கட்டம் போல ஆகி விடும்.

“ஏழு நாள் பயங்கரம்” என்ற கதையில் லாஃபெர்ட்டி, “அந்த விடுதியின் களேபரமான அறை ஒரு குடிகார சுல்தானுக்குச் சொந்தமானது போல இருந்தது,” என்று எழுதுகிறார். அது ஒரு வித்தியாசமான உவமானம், அதே நேரம் லாஃபெர்ட்டியின் எழில் செறிந்த, ஒழுங்கற்ற அபரிமிதத்துடைய நேரான ஒரு வர்ணனையும் கூட. லாஃபெர்ட்டியின் கதைகளில் நாம் விரும்புவது அவற்றைச் சொல்வதில் தெரிகிற குதூகலம், விளையாட்டுத்தனமிக்க குரல், கதையின் போக்கில் கிட்டும் தலைகீழ்ப் புரட்டலான வியப்புகள், மற்றும் கதாசிரியர் நம்மை நோக்கி வீசும் குறும்பான கண்சிமிட்டல்கள். அவற்றிலிருந்து ஓர் அதிசயக் கனவுலகைத் தவிர வேறெந்த விதமான தர்க்க ஒழுங்கையும் எதிர்பார்ப்பது அவை நமக்கு முன் விரிக்கும் கேளிக்கையான விருந்தை இழப்பது போலாகும். “ஒன் அட் எ டைம்” கதையின் ராபெலேசியii நாயகன் சொல்வது போல், எதார்த்தமும், முழு அறிவு பூர்வமான விளக்கமும் தேவை என்று சொல்வீர்களானால், அது “ஒரு கதை மீது செயற்கையான நியதிகளைத் திணிப்பதாகும்.” அந்த நாயகனைப் படைத்தவர் இந்தக் கருத்தோடு முழுதும் ஒப்புவார் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

***

i Keystone Kops – திறமையும் இல்லாது பயிற்சியும் இல்லாத பொலீஸ் படை ஒன்றின் மோசமான செயல்களை நகைச்சுவைப் படமாக இதை எடுத்திருந்தனர். இது ஒலியில்லாத மௌனத் திரைப்படக் காலத்து பட வரிசை. இன்று இதே படவரிசையைப் பற்றி எழுதுவோர் இவை ஒரு வகையில் அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்க்கும் மனோபாவம் கொண்ட நாட்டார் கலையில் வேர் கொண்டவை என்று பார்க்கிறார்கள்.

ii ராபலெய்ஸ்- 15-16 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு ஃப்ரெஞ்சு கிருஸ்தவத் துறவி. ரசாபாசமான கேலி நாடகங்கள், பாடல்கள் எழுதியவர். பொதுவாக மரபு கிருஸ்தவத்தைக் கேலி செய்ததோடு, அதை முழுதும் எதிர்த்தவர். குறிப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட சர்ச்சை எதிர்த்து, திறந்த கிருஸ்தவத்தை, மக்கள் மையமான ஒரு மதத்தை ஆதரித்தவர். கிரேக்க ரோமப் பண்பாட்டின் நற்குணங்களைத் திரும்பப் புழக்கத்தில் கொணரவேண்டும் என்று விரும்பியவர்.

மந்தமான செவ்வாய்க் கிழமை இரவு

ஒரு யாசகன் இரவு நேரத்துத் தெருவில் ஓய்வாக நடந்து போன இளம் ஜோடி ஒன்றை வழிமறிக்கிறான்.

”இந்த இரவை நமக்குப் பாதுகாப்பாக்குங்கள்,” என்றபடி அவன் தன் குல்லாயைத் தொட்டு அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தான்,“அப்புறம் நல்ல மனிதர்களான நீங்கள், என் செல்வங்களை நான் மீட்டெடுப்பதற்காக, ஓராயிரம் டாலர்களை முன் தொகையாக எனக்குக் கொடுப்பீர்களா?”

“போன வெள்ளிக்கிழமை உனக்கு ஆயிரம் டாலர்கள் நான் கொடுத்தேனே,” என்றான் அந்த இளைஞன்.

“கொடுக்கத்தான் செய்தீர்கள்,” யாசகன் பதில் சொன்னான், “நள்ளிரவுக்குள் அதைப் பத்து மடங்காக நான் திருப்பிக் கொடுத்தேனே?”

“அது சரிதான், ஜ்யார்ஜ், அவன் கொடுத்தான்,” என்றாள் அந்த இளம் பெண். “அவனுக்குக் கொடுங்க, டியர். அவன் நல்ல மாதிரி என்று நான் நம்புகிறேன்.”

அதனால் அந்த இளைஞன் யாசகனுக்கு ஆயிரம் டாலர்களைக் கொடுத்தான், யாசகன் தன் குல்லாயைத் தொட்டு அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு, தன் செல்வங்களை மீட்டெடுக்கச் செல்கிறான்.

அவன் பணச்சந்தைக்குள் செல்லும் வழியில், நகரிலேயே மிக்க அழகியான இல்டெஃபோன்ஸா இம்பாலாவைக் கடக்கிறான்.

உற்சாகத்தோடு, “இன்று இரவு என்னை மணந்து கொள்வாயா, இல்டி?” என்று கேட்கிறான்.

“ஓ, அப்படி நடக்குமென்று நான் நம்பவில்லை, பேஸல்,” என்கிறாள் அவள். “நான் உன்னை அடிக்கடி மணந்து கொள்கிறேன் இல்லை என்கவில்லை, ஆனால் இன்று இரவு எனக்கு ஏதும் திட்டங்கள் இல்லை. இருந்தாலும் உன்னுடைய முதல் அல்லது இரண்டாவது வினாடியில் நீ எனக்கு ஏதும் அன்பளிப்பு கொடுக்கலாம், அது எனக்கு எப்போதுமே பிடிக்கும்.”

ஆனால் அவர்கள் பிரிந்த போது, அவள் தன்னையே கேட்டுக் கொள்கிறாள், “ஆனால் நான் இன்று இரவு யாரை மணம் புரிந்து கொள்ளப் போகிறேன்?”

அந்த யாசகன் பேஸல் பேகல்பேக்கர், அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் உலகத்திலேயே பெரிய பணக்காரனாகி விடுவான். அடுத்த எட்டு மணிகளில் அவன் நான்கு பெரும் செல்வங்களை வென்று, இழப்பான்; அவையோ சாதாரண மனிதர் ஈட்டும் சிறு செல்வத் திரட்டு இல்லை, பெரும் ராட்சசக் குவிப்புகள்.

ஏப் பயோஸ் தடையை மனிதரின் புத்திகளில் இருந்து நீக்கியபின், ஜனங்கள் முடிவுகளை வேகமாக எட்டினார்கள், அனேகமாக அவை மேலானவையாகவும் இருந்தன. முன்பு பல மாதங்களோ, வருடங்களோ தேவைப்பட்டவற்றை, இப்போது நிமிடங்களிலோ, சில மணிகளிலோ முடிக்க முடிந்தது. எட்டு மணி நேர இடைவெளியில் ஒருவர் பல நுட்பமான தொழில் வாழ்க்கைகளைப் பெற முடிந்தது.

ஃப்ரெட்டி ஃபிக்ஸிகோ அப்போதுதான் ஒரு மானெஸ் மாட்யூலைக் கண்டு பிடித்தான். ஃப்ரெட்டிக்கு இரவு நேரத்தில் கண் தெரியாது, இந்த மாட்யூல்கள் அந்த மாதிரி நபர்களின் குணாம்சங்கள். ஜனங்கள் தங்களைத் தாமே வகைப்படுத்திக் கொண்டார்கள் – அரோரியன்கள், ஹெமெரோபியன்கள், மேலும் நிக்டலோப்கள் என்ற பிரிவுகள் அவை- அதாவது விடிகாலையர்கள், காலை 4 மணியிலிருந்து நண்பகல் வரை ஊக்கத்தோடு செயல்படுவோர்; பகல் நேர விட்டில்கள் – நண்பகலிலிருந்து இரவு 8 மணி வரை செயலாற்றுபவர்கள்; இரவுச் சித்தர்கள், இரவு 8 இலிருந்து காலை 4 மணி வரை இவர்கள் சமூகங்கள் பணி செய்யும். பண்பாடுகள், கண்டுபிடிப்புகள், சந்தைகள், மற்றும் நடவடிக்கைகளில் இந்த மூன்று வகை மக்களும் வேறுபாடுகள் கொண்டிருந்தன. ஒரு இரவுச் சித்தனான ஃப்ரெட்டியின் தன் வேலை நாளை இரவு 8 மணிக்குத் துவங்கியிருந்தான் அந்த மந்தமான செவ்வாய் இரவில்.

ஃப்ரெட்டி ஒருஅலுவலகத்தை வாடகைக்கு எடுத்திருந்தான், அதை மரக்கலன்களைப் போட்டு வசதி செய்து கொண்டான். இதற்கு ஒரு நிமிடம்தான் ஆகியது, பேரம், தேர்வு, மற்றும் நிறுவுதல் கிட்டத்தட்ட உடனடியாக நடந்து விட்டன. பிறகு அவன் ஒரு மானெஸ் மாட்யூலைக் கண்டு பிடித்தான்; அதற்கு இன்னொரு நிமிடம் ஆகியது. அதை உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்தான், சந்தைக்கு அனுப்பினான்; மூன்று நிமிடங்களில் அவை முக்கியமான நுகர்வாளர் கைகளைச் சென்றடைந்திருந்தன.

அது பரபரப்பாயிற்று. அது ஒரு கவர்ச்சிகரமான மாட்யூல். முப்பது வினாடிகளில் அதை வாங்கும் ஆணைகள் பெருகின. இரவு எட்டு மணிக்குப் பிறகு பத்தே நிமிடங்களில் எல்லா முக்கியமான நபர்களிடமும் ஒரு புது மாட்யூல் சேர்ந்து விட்டிருந்தது, சந்தையில் இதன் போக்கு உறுதியாகி விட்டிருந்தது. மிலியன்களில் இந்த மாட்யூல் விற்கத் தொடங்கியது. அன்று இரவின் மிக சுவாரசியமான மோகங்களில் இது ஒன்றாக இருந்தது, அல்லது குறைந்தது இரவின் முதல் பாகத்தில் அப்படி இருந்தது.

மானெஸ் மாட்யூல்களுக்கு ஒரு பயன்பாடும் இருக்கவில்லை, சேம்கி குடுவைகளைப் போலவேதான் இவையும். அவை கவர்ச்சிகரமாக இருந்தன, மனதைத் திருப்திப்படுத்தும் வடிவங்களிலும், அளவுகளிலும் கிட்டின, அவற்றைக் கைகளில் பிடித்துக் கொள்ளலாம், அல்லது மேஜையில் வைக்கலாம், அல்லது எந்தச் சுவரிலும் ஒரு பிறையில் பொருத்தலாம்.

விளைவு, ஃப்ரெட்டி அபாரமான பணக்காரனானான். நகரின் பேரழகி, இல்டெஃபோன்ஸா இம்பாலா, எப்போதுமே புதிதாகப் பணக்காரர்களாவோர் மீது ஆர்வம் கொள்பவள். ஃப்ரெட்டியை சுமார் எட்டரை மணிக்குப் பார்க்க வந்தாள். மனிதர் அதிவேகமாக முடிவுகள் எடுக்கிறார்கள், இல்டெஃபோன்ஸா அங்கே வரும்போதே ஒரு முடிவோடுதான் வந்திருந்தாள். ஃப்ரெட்டியும் துரிதமாக முடிவெடுத்தான், ஜூடி ஃபிக்ஸிகோவை சிறு வழக்கு மன்றத்தில் விவாகரத்து செய்தான். ஃப்ரெட்டியும் இல்டெஃபோன்ஸாவும் ஓய்வு ஸ்தலமான பரெய்ஸோ டொராடோவிற்கு தேனிலவுப் பயணம் செய்தார்கள்.

அதெல்லாம் அருமையாக இருந்தது. இல்டியின் எல்லாத் திருமணங்களும் அப்படித்தானிருந்தன. அங்கு அருமையாக ஒளிவெள்ளத்தில் குளித்த இயற்கைக் காட்சி இருந்தது. சுழற்சியில் பெறப்பட்ட நீர்ப்பெருக்கால் வெள்ளமோடிய புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி தங்க நிறத்தில் ஒளி பெற்றிருந்தது: அருகிலிருந்த பாறைகளை ராம்பில்ஸ் வடிவமைத்தார், சுற்றி இருந்த குன்றுகளை ஸ்பால் செதுக்கி இருந்தார். கரைகளோ மியர்வேலின் கரைகளுடைய கச்சிதமான பிரதியாக இருந்தன, அன்று இரவு பரவலாக அருந்தப்பட்ட பானம் நீல அப்ஸந்த்.i

இயற்கைக் காட்சியோ- முதல் தடவை பார்க்கப்படுகிறதோ, சில கால இடைவெளிக்குப் பிறகு பார்க்கப்படுவதோ எதானாலும் – திடீரென்று ஆழ்ந்து நோக்கப்பட்டால் உணர்ச்சிகளைத் தூண்டவே செய்யும். அதைப் பார்த்தபடியே நிறைய நேரம் கழிக்கக் கூடாது. உணவும், தேர்ந்தெடுக்கப்பட்டு உடனடியாகத் தயாரிக்கப்பட்டால், துரிதமான கிளர்ச்சியோடு நுகரப்பட வேண்டும்; நீல அப்ஸந்தோ அதன் புதுமை நீடிக்கும் நேரம் தாண்டி தாக்கமிழக்கிறது. இல்டெஃபோன்ஸாவுக்கும், அவளுடைய காதலர்களுக்கும், காதல் என்பது வேகமானது, நம்மைக் கரைப்பது; அவளைப் பொருத்து, மறுபடி அதில் ஈடுபடுவதென்பது அர்த்தமற்றது. தவிர இல்டெஃபோன்ஸாவும், ஃப்ரெட்டியும் ஒரு மணி நேரத்துக்குத்தான் அந்த லக்சுரி தேனிலவைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

ஃப்ரெட்டி அந்த உறவைத் தொடரவே விரும்பினான், ஆனால் இல்டெஃபோன்ஸா மோஸ்தர் மானியைச் ii சோதித்தாள். மானெஸ் மாட்யூல் அந்த இரவின் முதல் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு நேரம்தான் பரபரப்பாக இருக்கும் என்று தெரிந்தது. ஏற்கனவே முக்கியஸ்தர் என்று கருதப்படுவோரால் அது விலக்கப்பட்டு விட்டிருந்தது. ஃப்ரெட்டி ஃபிக்ஸிகோ வழக்கமாக வெற்றி பெறுவோரில் ஒருவனும் இல்லை. வாரத்தில் ஒரு நாள் போலத்தான் அவனுக்கு தொழில்வாழ்வில் வெற்றி கிட்டியது.

அவர்கள் நகருக்குத் திரும்பினர், ஒன்பதரை மணி அளவில் சிறு வழக்கு மன்றத்தில் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். மானெஸ் மாட்யூல்களில் மிஞ்சியவை ஒதுக்கப்பட்டு, தள்ளுபடி விலையில் வாங்கும் விடிகாலையர்கள் சிலரிடம் விற்கப்பட்டன, அவர்கள் எதையும் வாங்குபவர்கள்.

“அடுத்தது யாரை நான் மணப்பது?” இல்டெஃபோன்ஸா தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். “இது மந்தமான இரவாகத் தெரிகிறது.”

“பேகல்பேக்கர் வாங்குகிறான்,” பணச்சந்தையூடே வதந்தி பரவியது, ஆனால் அது முழுதும் சுற்றி வருமுன்னரே பேகல்பேக்கர் விற்றுக் கொண்டிருந்தான். பெஸல் பேகல்பேக்கர் பணம் பண்ணுவதை ரசித்தான். சந்தையில் கூடத்தில் ஓடியாடி வர்த்தக ஆணைகளைப் பரிமாறும் தூதர்களையும், திறமையுள்ள ஊழியர்களையும் அவன் சேகரித்து வாய் வழிக் கட்டளைகளால் இயக்குவதையும், அவன் வேலை செய்தபடி அந்தக் கூடத்தில் கோலோச்சுவதையும் பார்க்கவே மகிழ்ச்சி எழுந்தது. உதவியாட்கள் யாசகனின் கந்தலாடைகளை உருவினார்கள், அவனை பெரும்பணக்காரருக்கான மேலங்கியால் போர்த்தினார்கள். தனக்கு ஆயிரம் டாலர்கள் முன்பணம் கொடுத்த இளம் தம்பதியருக்கு இருபது மடங்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க ஒரு தூதனை அனுப்பினார். அதை விட மதிப்பு மிக்க ஒரு அன்பளிப்பை, இல்டெஃபோன்ஸாவுக்கு இன்னொரு தூதன் மூலம் அனுப்பினார், அது அவர்களிடையே இருந்த உறவை அவர் மதித்ததால். பேஸில் நடப்பில் என்ன பாணி நிலவுகிறது என்பதைச் சுட்டும் ட்ரெண்ட் இண்டிகேஷன் காம்ப்லெக்ஸ் என்பதற்கான உரிமையை பேஸில் வாங்கினார், அதில் சில பொய்ச் சுவடுகளை நுழைத்தார். கடந்த இரண்டு மணி நேரத்தில் உயர்ந்தெழுந்த சில தொழிற்துறை சாம்ராஜ்யங்களைச் சரியச் செய்தார், அவற்றின் சிதிலங்களை ஒன்றிணைப்பதைத் திறமையோடு செய்தார். இப்போது சில நிமிடங்களாக உலகின் மிகப் பெரும் பணக்காரராக அவர் ஆகி விட்டிருந்தார். ஏராளமாகப் பணம் குவிந்ததால் கனமாகிப் போன அவரால், ஒரு மணி நேரம் முன்பு அவர் காட்டிய வேகத்தை இப்போது காட்ட முடியவில்லை, அத்தனை லாகவமாக சந்தையில் புகுந்து ஆட்டம் காட்ட முடியவில்லை. பருமனான ஆண் மானைப் போல ஆகிப் போனார், சாதுரியமான ஓநாய்களின் கூட்டம் ஒன்று சுழ்ந்தது, அவரைத் தாக்கி வீழ்த்தவிருந்தது.

சீக்கிரமே அந்த மாலையில் அவர் குவித்த முதல் செல்வக் குவியலை இழப்பார். பேஸல் பேகல்பேக்கரின் ரகசியமே அவர் வெடிக்கும் அளவுக்குத் தான் குவித்த செல்வத்தை பெரும் களேபரமாக இழப்பதை அனுபவித்து ரசிப்பார் என்பதுதான்.

யோசிக்கத் தெரிந்த மனிதனான மாக்ஸ்வெல் மௌஸர் அப்போதே ஒரு ஆக்டினிக்iii தத்துவ நூலை முடித்திருந்தார். அதை எழுத அவருக்கு ஏழு நிமிடங்கள் பிடித்தன. அப்போது தத்துவ நூல்களை எழுத ஒருவர் இளக்கமான செயல் திட்டம் ஒன்றைக் கொண்டிருப்பார், கருத்துகளின் தொகுப்புப் பட்டியல் இருக்கும்: ஒவ்வொரு கிளைப் பகுதியிலும், செயல்படுத்தப்பட வேண்டிய வார்த்தைகளின் பட்டியல் ஒன்றைத் துவக்க வேண்டும்; அனுபவம் உள்ளவர்கள் முரண்-புதிர்களை ஆங்காங்கே தூவும் முறையைச் சேர்ப்பார்கள்; பளிச்சிடும் உபமானங்களைக் கலக்க ஏற்பாடு செய்வார்கள்; குறிப்பிடத் தக்க சாய்வு ஒன்றைச் சேர்த்து, ஆளுமையின் முத்திரையாகவும் சேர்க்கக் கட்டளை இடுவர். இறுதியில் கிட்டும் பொருள் நல்லதாக இருக்க வேண்டும், ஏனென்றால் இத்தகைய உற்பத்திகளுக்குத் தரம் அபாரமாக இருக்க வேண்டியது குறைந்தபட்ச அவசியமாகி இருந்தது.

”மேலே சர்க்கரைப் பூச்சில் சில பருப்புகளைத் தூவி வைக்கிறேன்,” என்றார் மாக்ஸ்வெல், அதற்கான விசையை அழுத்தினார். இது சில சொற்களைச் சலித்தெடுத்து அங்கங்கே தூவியது – அந்தச் சொற்கள் தானிக், ஹ்யூரிஸ்டிக், மற்றும் ப்ரொஸிமைடிஸ் ஆகியன. இவற்றைப் படிப்பவர் எவரும் இது ஒரு தத்துவ நூல் என்பதை மறுக்க மாட்டார்கள்.

மாக்ஸ்வெல் மௌஸர் அந்தப் படைப்பை பிரசுரகர்களுக்கு அனுப்பினார், ஒவ்வொரு முறையும் மூன்று நிமிடங்களில் அது திரும்பி வந்து விட்டது. அந்தப் படைப்பின் அலசலும், அதை மறுப்பதற்கான காரணமும் ஒவ்வொரு முறையும் கொடுக்கப்பட்டன – அனேகமாக இந்த விஷயம் ஏற்கனவே யாராரோ கையாண்டு விட்டனர் என்பதும், அதை அவர்கள் இன்னும் மேலாகவே செய்திருந்தனர் என்பதும் கிட்டிய விளக்கங்கள். மாக்ஸ்வெல் முப்பது நிமிடங்களில் பத்து முறை திரும்பப் பெற்றார், அதனால் சற்று துவண்டிருந்தார். அப்போது ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டது.

லேடியானின் ஆக்கம் முந்தைய பத்து நிமிடங்களில் அதிகம் கவனிக்கப்பட்டதாகி இருந்தது. அதற்கு ஒரு பதிலாகவும், அதை மேலும் வலுப்படுத்துவதாகவும் மௌஸரின் ஆக்கம் இருந்தது என்று இப்போது அறியப்பட்டது. எனவே மௌஸரின் ஆக்கம் ஏற்கப்பட்டு, இந்தத் திருப்பம் நடந்து ஒரு நிமிடத்தில், பிரசுரிக்கப்பட்டது. முதல் ஐந்து நிமிடங்களில் கிட்டிய விமர்சனங்கள் ஜாக்கிரதையாக இருந்தன;பிறகு நிஜமான உற்சாகம் காட்டப்பட்டது. இரவு நேரத்தின் துவக்க மற்றும் நடு மணிகளில் வெளியான தத்துவ நூல்களில் தலைசிறந்தவற்றில் இதுவும் ஒன்றாக இருந்தது என்று கருதப்பட்டது. அடுத்த நாள் காலையில் எழப்போகும் விடிகாலையர்கள் நடுவே கூட இது கவனம் பெறக்கூடும் அளவு காலத்தில் நிற்கும் படைப்பு இது என்று சொல்பவர்கள் சிலரும் இருந்தனர்.

இயற்கையாக இதனாலெல்லாம், மாக்ஸ்வெல் பெரும் பணக்காரர் ஆனார், அதன் பின்விளைவாக, இல்டெஃபோன்ஸா அவரை சுமார் நள்ளிரவு நேரத்தில் பார்க்க வந்தாள். ஒரு புரட்சி தத்துவாளராக அவர் இருந்ததால், மாக்ஸ்வெல் தான் ஒரு திறந்த ஏற்பாட்டை உருவாக்கி விட முடியும் என்று நினைத்தார். ஆனால் இல்டெஃபோன்ஸாவோ அது திருமணமாகத்தான் இருக்க முடியும் என்று வலியுறுத்தினாள். அதனால் மாக்ஸ்வெல் தன் மனைவி ஜூடி மௌஸரை சிறு வழக்காடுமன்றத்தில் விவாகரத்து செய்தார், பின் இல்டெஃபோன்ஸாவுடன் போனார்.

இந்த ஜூடியோ, இல்டெஃபோன்ஸா அளவுக்கு அழகி இல்லை என்றாலும், நகரிலேயே மிக வேகமான வேட்டைக்காரி. அவள் க்ஷணங்களின் நாயகர்களை அந்த க்ஷணங்களுக்கு மட்டுமே விரும்பினாள். அவள் எப்போதுமே இல்டெஃபோன்ஸாவை முந்திக் கொண்டிருந்தாள். இல்டெஃபோன்ஸா தான் அந்த ஆண்களை ஜூடியிடமிருந்து தான் கவர்ந்து கொள்வதாக நினைத்துக் கொண்டாள்; ஜூடியோ இல்டி தன் மிச்சம் மீதியைத்தான் எடுத்துக் கொள்கிறாள், வேறேதும் இல்லை என்றாள்.

“நான் தான் அவரை முதலில் வைத்திருந்தேன்,” என்று சிறு வழக்காடு மன்றத்தினூடே விரைந்து சென்றபடியே ஏளனம் செய்வாள் ஜூடி,

“ஓ, அந்த நாசமாப் போன சிறுக்கி,” இல்டெஃபோன்ஸா முனகுவாள். “என் முடியைக் கூட எனக்கு முன்னால் அவள் அணிந்து கொள்வாள்.”

மாக்ஸ்வெல் மௌஸரும் இல்டெஃபோன்ஸா இம்பாலாவும் தேநிலவுக்கு ம்யூஸிக்பாக்ஸ் மலைக்குப் போனார்கள். அது ஒரு வாசஸ்தலம். அருமையாக இருந்தது. டன்பாரும் ஃபிட்டிலும் அதன் சிகரங்களைச் செய்திருந்தார்கள். (இதே நேரம் நகரத்தில் பணச் சந்தையில் பேஸல் பேகல்பேக்கர் அன்றிரவில் மிகப்பெரியதானதும், அவரது மூன்றாவதுமான செல்வத்தைச் சேகரித்துக் கொண்டிருந்தார். அது அளவில் முந்தைய வியாழக்கிழமை அவர் குவித்த நான்காவது பெரும் செல்வத்தை விடவும் பெரியதாக இருக்குமென்று சொல்லப்பட்டது.) தங்கும் விடுதிகள் நிஜ ஸ்விஸ் விடுதிகளையும் விட ஸ்விட்சர்லாந்துக் குணம் கொண்டிருந்தன, ஒவ்வொரு அறையிலும் நிஜ ஆடுகள் இருந்தன. (ஸ்டான்லி ஸ்கல்டக்கர் அன்றிரவின் நடுப்பகுதியில் உச்சிக்குப் போன நட்சத்திர நடிகராக உயர்ந்து கொண்டிருந்தார்.) ரோஸ் நிற ஐஸ் கட்டிகள் மீது ஊற்றப்பட்ட க்ளாட்ஸெங்லப்பர்,ஈவ் சீஸ், மற்றும் ரைன் ஒயின் ஆகியவற்றின் கலவை, இரவின் நடுப்பகுதியில் மிகப் பரபரப்பாகக் கவனிக்கப்பட்ட பானமாக இருந்தது. (நகரிலோ மாலைக்கண் கொண்ட நிக்டலோப்புகளில் பிரமுகர்கள் தங்களுடைய நள்ளிரவு இடைவேளையை வெற்றி பெற்றவர்களுக்கான குழுமத்தில் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.)

வெறெப்படி இருக்கும், அது அருமையாகத்தான் இருந்தது, இல்டெஃபோன்ஸாவின் எல்லாத் தேநிலவுகளும் அப்படித்தான் இருந்தன – ஆனால் அவளுக்குத் தத்துவத்தில் எல்லாம் எந்த ஈடுபாடும் இல்லை, அதனால் அவள் சிறப்புத் தேநிலவுக்கான முப்பது நிமிடங்களைத்தான் ஏற்பாடு செய்திருந்தாள். எதற்கும் மோஸ்தர் மானியைச் சோதித்தாள். அவளுடைய தற்போதைய கணவருடைய அந்தஸ்து காலாவதி ஆகிவிட்டதென்று தெரிந்து கொண்டாள், அவருடைய படைப்பு இப்போது மௌஸரின் மூஞ்சூறு என்று இளக்காரமாகப் பேசப்படுவதை அறிந்தாள். இருவரும் நகருக்குத் திரும்பி, சிறுவழக்காட்டு மன்றத்தில் விவாகரத்து செய்து கொண்டனர்.

வெற்றி பெற்றவர்களின் குழுமத்தில் உறுப்பினராக இருப்பது கலவையாக இருக்கும். வெற்றி பெறுவது அங்கு சேர அடிப்படைத் தகுதி. பேஸல் பேகல்பேக்கர் அங்கு சேர அனுமதி பெறலாம், அதன் தலைமைக்குக் கூட உயர்த்தப்படலாம், ஆனால் ஒரே இரவில் மூன்றிலிருந்து ஆறு தடவைகள் கூட ஓட்டாண்டி ஆனதற்காக வெளியே தள்ளப்படுதலும் நடக்கும். ஆனால் நிஜமாக முக்கியமானவர்கள்தான் அங்கே அனுமதிக்கப்படுவர், அல்லது சிறு நேரம் முக்கியத்துவத்தை அனுபவிப்பவர்களாகவாவது இருக்க வேண்டும்.

“இன்று விடிகாலையர்களின் காலத்தில் நான் உறங்கப் போகிறேன் என்று நினைக்கிறேன்,” என்றார் ஓவர்கால். “இந்தப் புது இடத்துக்கு, கோய்மோபொலிஸுக்கு ஒரு மணி நேரம் போகலாம் என்றிருக்கிறேன். அது நல்ல இடமென்று சொல்கிறார்கள். நீங்க எங்கே தூங்கப் போறீங்க பேஸல்?”

“தோற்றவர்களுக்கான விடுதியில்.”

“நான் ஒரு மணி நேரம் மிடியன் முறையைப் பயன்படுத்தித் தூங்கப் போகிறேன் என்று நினைக்கிறேன்,” என்றார் பர்ன்பானர். “அவங்க ஒரு அருமையான க்ளினிக் வச்சிருக்காங்க. இன்னொரு மணி நேரம் ப்ரசென்கா முறையிலும், ஒரு மணி நேரம் டொர்மிடியோ iv முறையிலும் தூங்கப் போகிறேன்.”

“க்ராக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு மணி நேரம் இயற்கையான முறையில் தூங்குகிறார்,” என்றார் ஓவர்கால்.

“நான் இப்பத்தான் கொஞ்ச முன்னாடி அரை மணி நேரம் தூங்கினேன்,” என்றார் பர்ன்பானர். “அதுக்கு ஒரு மணி நேரம் கொடுக்கறது ரொம்பவே அதிகம்னு நினைக்கிறேன். பேஸல், நீங்க இயற்கை முறைல தூங்கியிருக்கீங்களா?”

“எப்போதும் அப்படித்தான். இயற்கையான முறையும் ஒரு பாட்டில் ரெட்-ஐ யும்.”

ஸ்டான்லி ஸ்கல்டக்கர் ஒரு வாரமாக விண்கல் போலப் பிரகாசமாக எழுந்த ஒரு நட்சத்திர நடிகராக இருந்தார். விளைவாக, அவர் பெரும் பணக்காரராக ஆகி இருந்தார், இல்டெஃபோன்ஸா அவரைப் பார்க்கப் போளாள், அப்போது காலை 3 மணி இருக்கும்.

“நான் முதல்லெ அவரைப் பிடிச்சுட்டேன்,” என்று ரீங்கரித்தது சிறு வழக்காட்டு மன்றத்தில் விவாகரத்தை நடத்திக் கொண்டிருந்த ஜூடி ஸ்கல்டக்கரின் கெக்கலிக்கும் குரல். இல்டெஃபோன்ஸாவும், ஸ்டான்லி-பையனும் தேநிலவுக்குப் போனார்கள். ஒரு வேளையை அந்த வியாபாரத்தில் அதிகம் நாடப்படும் ஒரு நட்சத்திர நடிகரோடு முடித்துக் கொள்வது என்பது எப்போதுமே கிளர்ச்சி தருவதாக இருந்தது. அந்த நபர்கள் இன்னும் வளராத பதின்ம வயதினர் போலவும், பண்படாதவர்களாகவும் இருந்தார்கள்.

தவிர, அதில் ஏராளமாக விளம்பரம் கிட்டியது. இல்டெஃபோன்ஸாவுக்கு அது பிடித்திருந்தது. வதந்தி எந்திரங்கள் ஏகமாக வேலை செய்தன. அது இன்னும் பத்து நிமிடங்கள் தாக்குப் பிடிக்குமா? முப்பது நிமிடங்களா? ஒரு மணியா? அல்லது இரவு பூராவும் நீடித்து அடுத்த நாள் காலையில் பகல் நேரத்திலும் தொடரும் அபூர்வமான நிக்டலோப் திருமணங்களில் ஒன்றாக இருக்குமா? வேறு சில திருமணங்களைப் போல அடுத்த நாள் இரவிலும் தொடருமா?

நிஜத்தில் அது நாற்பத்தைந்து நிமிடங்கள் நீடித்தது, அது கிட்டத்தட்ட அந்த வேளையின் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது.

அது மந்தமான செவ்வாய் இரவாக இருந்தது. சந்தையில் சில நூறு பொருட்கள் ஒரு சுற்று ஓடியிருந்தன. சில டஜன் நாடகங்கள் பெரிதாக விற்றன, மூன்று நிமிடங்கள், ஐந்து நிமிடங்கள் ஓடும் சுருக்கக் காட்சிகள் அவை, ஒரு சில நீண்ட நாடகங்கள், ஆறு நிமிடங்கள் ஓடுபவையும் வெற்றி பெற்றிருந்தன. நைட் ஸ்ட்ரீட் நைன் – முழுதுமே இருண்ட படைப்பு – வேறேதும் வெற்றி நாடகம் மீதமிருக்கும் நேரத்தில் வராமலிருந்தால், அது வரை கடந்திருந்த இரவு நேரத்தின் பெரும் வெற்றி நாடகமாகக் கருதப்பட்டது.

நூறு மாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு, மக்கள் குடியேறி, பழசு என்று கருதப்பட்டு, இன்னும் புதிய வகைக் குடியிருப்புகளுக்கு இடம் கொடுக்க இடிக்கப்பட்டிருந்தன. விடிகாலையர்கள் அல்லது பகல்நேர விட்டில்கள், இல்லை முந்தைய இரவுடைய நிக்டலோப்புகள் விட்டுச் சென்ற கட்டடத்தை பயன்படுத்த தரமென்பது என்னவென்று தெரியாத மத்திமர்களால்தான் முடியும். அந்த நகரம் இரவு முடிவதற்குள் மூன்று முறையாவது புதியதாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்தது.

அந்த வேளை ஒருவாறாக முடிவுக்கு வரவிருந்தது. பேஸல் பேகல்பேக்கர், உலகிலேயே பெரும் பணக்காரராக ஆகியிருந்தவர், உச்சிக்கு வந்தவர்களின் குழுமத்தின் தலைவர், தன் சகபாடிகளுடன் கொண்டாட்டத்தில் இருந்தார். அவரது நான்காவது பெரும் பணக் குவியல், முழுதும் காகிதத்தால் ஆன பிரமிட் திட்டம், அபாரமான உயரத்திற்கு எழுந்திருந்தது. அதை நடத்தத் தான் செய்த தில்லுமுல்லுகளை எண்ணி பேஸல் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டிருந்தார்.

அந்தக் குழுமத்தின் வரவேற்பாளர்கள் மூவர் உறுதியான காலெட்டுகள் எட்டி வைத்து அவரை நோக்கி வந்தனர்.

பேஸலிடம், “இங்கேயிருந்து ஓடிப் போயிடு, பரதேசிப் பயலே,” என்றார்கள் கடுமையாக. பெரும் செல்வந்தருக்கான மேலங்கியை அவரிடமிருந்து கிழித்துப் பறித்தார்கள், மூன்று பேரும் ஏளனமாகச் சிரித்தபடி அவரிடம் யாசகனுக்கான அழுக்குத் துணிகளை விசினார்கள்.

“எல்லாம் போயிடுத்தா?” பேஸல் கேட்டார். “இன்னும் அஞ்சு நிமிஷம் தாங்கும்னு கணக்குப் போட்டேனே.”

“எல்லாம் போயிடுச்சு,” பணச்சந்தையிலிருந்து வந்த தூதுவன் சொன்னான். “ஒன்பது பில்லியன் ஐந்து நிமிஷங்கள்லெ போச்சு, போகிற போக்கில வேற சில பேரையும் நிஜமாகவே கீழே தள்ளிட்டுப் போச்சு.”

“தோற்றுப் போன தோசிப் பயலை அள்ளி வீசுங்க தெருவுல,” ஓவர்கால், பர்ன்பானர் மற்றும் இதர ஜால்ராக்களும் கூச்சல் போட்டார்கள்.

“கொஞ்சம் இருப்பா, பேஸல்,” என்றார் ஓவர்கால். “உன்னைக் கீழே தள்றத்துக்கு முந்தி, தலைவர் பதவிக்கான செங்கோலைத் திருப்பிக் கொடு. எப்படியானாலும், அதை நாளைக்கு ராவுல பல தடவை நீ மறுபடி வாங்கிக்கிட்டிருப்பே.”

அந்த வேளை முடிந்தது. நிக்டலோப்கள் தூக்கத்துக்கான க்ளினிக்குகளுக்கோ, இல்லை ஓய்வு நேர ஒளிவிடங்களுக்கோ போய் தங்களுடைய ஓய்ச்சல் நேரத்தைக் கழிப்பதற்கு கலைந்து போனார்கள். அரோரியர்களான விடிகாலையர்கள், முக்கியமான விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இப்போது நீங்கள் நிறைய நடவடிக்கைகளைப் பார்க்கலாம்! இந்த விடிகாலையர்கள் நிஜமாகவே அதிவேகமாக முடிவெடுக்கிறவர்கள். ஒரு தொழிலைத் துவங்க அவர்கள் ஒரு முழு நிமிஷமெல்லாம் தேவைப்படாதவர்கள்.

தூக்கக் கலக்கத்தோடிருந்த ஒரு யாசகன் இல்டெஃபோன்ஸாவைப் போகிற வழியில் பார்த்தான்.

“இன்றைய காலையை நமக்குப் பாதுகாப்பானதாக்கு, இல்டி,” என்றான். “இன்னிக்கு வரப்போகிற ராவுல என்னைத் திருமணம் செய்துப்பியா?”

“ஒரு வேளை செய்தாலும் செய்வேன், பேஸல்,” என்றாள் அவள். “நேத்திக்கு ராத்திரி நீ ஜூடியைக் கல்யாணம் செய்துகிட்டியா?”

“எனக்கு அது தெளிவாத் தெரியல்லை. எனக்கு ரெண்டு டாலர்கள் கொடுக்கறியா, இல்டி?”

“அதெல்லாம் நடக்காது. ரெண்டு மணிக்கு இருந்த ஃப்ரூ ஃப்ரூ மோஸ்தர்லெ சிறப்பா உடை உடுத்தின பத்துப் பெண்கள்லெ ஜூடி பேகல்பேக்கர் ஒருத்தின்னு போட்டிருந்தாங்க. உனக்கு எதுக்கு ரெண்டு டாலர்?”

“ஒரு டாலர் ஒரு படுக்கைக்கு, ஒரு டாலர் ஒரு ரெட் ஐக்கு. என்னோட ரெண்டாவது குவியல்லேருந்து உனக்கு நான் ரெண்டு மிலியன் அனுப்பினேனே, இல்லியா?”

“என்னோட கணக்குகளை ரெண்டு வகையாப் பிரிச்சு வச்சிருக்கேன். ஒரு டாலர் இதோ, பேஸல். இப்ப காணாமப் போயிடு. அழுக்கு யாசகன் ஒருத்தனோட நான் பேசிக்கிட்டிருக்கிறதை யாரும் பார்க்கக் கூடாது.”

“தாங்க் யூ இல்டி. நான் ஒரு ரெட்-ஐ யை வாங்கிக்கிட்டு, ஏதாவது சந்துல படுத்துத் தூங்கிக்கிறேன். இன்னிக்குக் கார்த்தால நாம நல்லா இருக்கணும்.”

பேகல்பேக்கர் “மந்தமான செவ்வாய் இரவு” என்று ஒரு பாட்டை விஸில் அடித்துக் கொண்டு மெல்ல நடந்து போனான்.

ஏற்கனவே விடிகாலையர்கள், புதன் கிழமை காலையைத் துள்ளி ஓடச் செய்திருந்தார்கள்.

***

இங்கிலிஷ் மூலம்: ’ஸ்லோ ட்யூஸ்டே நைட்’ சிறுகதை. புத்தகம்: ’த பெஸ்ட் ஆஃப் ஆர். ஏ. லாஃபெர்ட்டி’ பதிப்பாசிரியர்: ஜானதன் ஸ்ட்ராஹான்/ பிரசுரகர்கள்: டோர் எஸென்ஷியல்ஸ், நியூயார்க். / வருடம்: ஃபிப்ரவரி, 2021.

i Absinthe- https://www.tasteofhome.com/article/what-is-absinthe/

ii மோஸ்தர் மானி = current trends monitor

iii Actinism= சுருக்கமாக photochemistry என்று சொல்லலாம் என விக்கிபீடியா கருத்து.

iv Dormidio என்ற சொல்லை லாஃபெர்ட்டி உருவாக்கி இருக்கலாம், அல்லது அவருக்குப் பரிச்சயமான பல நாடுகளின் மொழிகளிலிருந்து உருவியிருக்கலாம். ஆனால் தற்போது டார்மிடியோ என்ற பெயரில் உறங்குவதற்கான மெத்தைகள் கிட்டுகின்றன. இங்கே பார்க்க: https://houseofnuke.com/home/opinions-about-dormideo-elixir/

ப்ரசென்கா என்ற சொல் ஹங்கேரிய மொழிப் பெயராக இருக்க வாய்ப்பு உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.