
நிகழ்வு
எனது கனவுகளை
நான் பார்க்கும்
உலகின் மீது
போர்த்திவிட்டேன்.
எப்பொழுது என்று
எனக்குத் தெரியாது
நடந்துகொண்டிருக்கும்
போரின் கட்டளைக்கு
இன்னும் நான் அடிபணிகிறேன்.
சொல்லியும் சொல்லாமலும்
நான் பேசுகிறேன்,
எனது எண்ணங்களை
அறுத்து எடுத்தவர்கள்
என் முன்னே நகர்கின்றார்கள் .
அகமும் புறமும்
பின்னிய பின்னலில்
காட்சிகள் தெரிகின்றன.
மாபெரும் கடலின்
கரை ஓரத்தில்
உயிர்ப்புடன் பறக்கும்
பறவையின் சத்தத்தில்
விடிந்தது மடிந்தது
வானில் சூரியன்.
வாக்குமூலம்
பொழுதைப் போர்வைபோல்
போர்த்திக்கொண்டேன்.
காற்றில் நீந்தும் பறவை
உடலுக்குள் பறக்க,
கடிகார சத்தத்தில்
காலம் விரயமாக,
வானின் நீலம்
காணும் கண்கள்.
தன்னை மறந்து பாடியது
அசையாத மலைபோல்.
ஆடாத அலை இல்லையென
எண்ணத்திற்குள் எண்ணம்
தெளிவு பெறத் தோன்றுவதை
வார்த்தையாக்கித் தருகிறேன்.
அக்குகை வாயிலில்
காத்திருக்கும் போது
வாக்குமூலம் தருகிறேன்.
அவனொரு நாள்
அவன் ஒன்றை
எழுத எத்தனித்தான் .
தனிமையிலிருந்தான்,
தேவை இருந்தது.
அவனை அடைய அதுவே வழி.
இப்பொழுது மொழி மட்டுமே அவன்.
அவன் சொல்தான் அவனது காலம்.
முன்பு இருந்ததும்
தற்போது எழுதப்போவதும்
ஒன்றல்ல என்று
நிரூபணம் செய்ய முற்பட்டான்.
புதிது என்பது
பிறந்த ஒன்று மட்டுமல்ல,
தொற்றும் நோயும் கூட .
மாற்றத்தினால் நம் வாழ்க்கை
இரண்டு காலங்களில் மோதிக்கொள்கிறது.
நெருப்பின் ஒளி
வெட்டிக்கொள்வதைப் போல்
அவன் மனம்
அவனை வழிநடத்தியது.
பயணம்
இனி ஒருபோதும்
இல்லை என்று
சொல்லிவிடமுடியாது
இருக்கிறது என்றால்
எங்கே என்று தெரியவில்லை
நான் பயணம் செய்யும்
பாதைகள் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது
அல்லது நான் வீழ்ந்து
எழுந்துகொண்டிருக்கிறேன்
என் விலா எலும்பில்
தங்கி சற்று இளைப்பாறுகிறேன்
இது என் வேலை
மற்றும் என் கடமை
இதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை
நான் தாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்
ஆனாலும் நான்
என்னைத் தூக்கிச் சுமந்துகொண்டு
நடந்து செல்கிறேன்
அர்த்தமற்ற அதை
மற்றவர்களுக்குப் புரிவதை
மட்டும் சொல்லிக்கொண்டு