
மீன்
முதல் நொடிக்கும்
அடுத்த நொடிக்கும்
இடையே
நழுவிய நதியில்
காலம்
கரை புரண்டோட
முடிவில்லாது
நீந்துகிறது
மீன்.
கொடுக்காய்ப்புளி மரம்
வேகாத வெயிலில்
கொடுக்காய்ப்புளி மரத்தின்
பசும் இலைகள் நிழலாட-
நிழல் இலைகளை
நிஜ இலைகளென்று
கடிக்கப் பார்த்து
முடியாமல்,
மண்ணில் உகுந்து கிடந்த
உலர் இலைகளைப்
பசும் இலைகளாய்த்
தின்று போனது ஒரு
கறுப்பாடு.
ஏமாந்தது கறுப்பாடென்று
இறுமாந்து
இறும்பூதெய்திய
பசும் இலைகள்
அறியவில்லை,
ஒரு நாள் அவையும்
உலர்ந்து உகுந்திட-
நிழல் இலைகளை
நிஜ இலைகளென்றும்
நிஜ இலைகளை
நிழல் இலைகளென்றும்
ஏமாறாது
நிழல் இலைகளை
நிழல் இலைகளென்றும்
நிஜ இலைகளை
நிஜ இலைகளென்றும்
அறிந்து
அதே கறுப்பாடு
உலர் இலைகளாம் அவற்றை
உலர் இலைகளாய்க் கண்டு
அவற்றைத் தின்ன
அவை ஏமாறுமென்று.
எவ்வளவு நம்பகமானது
கறுப்பாட்டின் நிறச்
சாவின் நிழல்!
புற்று
கடவுள் தரத் தவறிய வரமாய்க்
கீமோ மருந்து சொட்டுச் சொட்டாய்
கைநரம்பினுள் இறங்குகிறது-
உயிரைக்
கொட்டுகிறது
உடலில்
புற்று கட்டி
குளவி
நோய்.
போரில்
துண்டிக்கபட்ட
தேசமாய்த்
துடிதுடிக்கிறான்
குட்டிப் பையன்
கட்டியின்
வலியில்.
வலி உருகி வழிகிறது அவன் விழிகளில்
கடவுள் விடத் தவறிய கண்ணீராய்.
அன்பின் வழியது உயர்நிலை
வியப்பில் உச்சியை அண்ணாந்து நோக்கி
முதலடி எடுத்து வைத்ததுமென்னைச்
சிறுகுழந்தையைத் தூக்குவது போல்
தூக்கிக் கொண்ட மலை, மேல்
செல்லச் செல்ல, மெல்ல மெல்லத் தூக்கி,
கடைசி அடி எடுத்து வைத்ததும்
தன் தோள் மீது உயர்த்தியென்னை இருத்தி
வைத்துக் கொள்வதற்குள் நேரமாகிக் களைத்துப்
போதும் போதுமென்றாகி விட்டது எனக்கு.
எப்படி என் அப்பா, சிறுகுழந்தையில் நான்
சற்று அவரை ஏறிட்டு நோக்கி, கைகளிரண்டைத்
தூக்கியதும் தான் தாமதம், தூக்கித் தன் தோள் மீது
தலையைப் பிடித்து வசதியாய் நான் உட்கார
வைத்துக் கொள்வார் என்னை!
எவ்வளவு உசத்தி என் அப்பா அன்பில்-
முகில் துஞ்சும் மலையை விட!