தோற்றங்கள்

சந்திரன் வாசலில் நின்றபடியே தெருவில் வருபவர்களையும் வீட்டினுள் கண்ணாடிப் பெட்டியினுள் கிடத்தப்பட்டிருந்த அம்மாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். சந்திரனின் மனைவி சுந்தரியும் பத்தாம் வகுப்பு பயிலும் மகள் அகல்யாவும் அம்மாவின் தலைமாட்டில் தரையில் அமர்ந்திருந்தார்கள்.

கல்லூரியில் பயிலும் மகன் பிரபா கடைகளுக்கு அலைந்து கொண்டிருந்தான். முதலில் கண்ணாடிப் பெட்டியை வரவழைத்தவன் சாமியானாவிற்கும் நாற்காலிகளுக்கும் சொல்லிவிட்டு வந்தான். இப்போது, இறுதிச் சடங்கிற்கான காரியங்களை செய்பவர்களை பார்த்துவிட்டு மயானத்திற்கும் சென்று பேசிவிட்டு வருவதற்காக சென்றுள்ளான்.

தெருவுக்கு குறுக்கே பந்தல் போடப்பட்டிருந்தது. தெருவின் இரு பக்கமும் நீளவாக்கில் நாற்காலிகளை பிரித்துப் போட்டிருந்தார்கள். தகவல் தெரிந்து வருபவர்கள் சந்திரனைப் பார்த்து, இவனுடனான அணுக்கத்திற்கேற்ப கையை குலுக்கியோ அல்லது தோளை அணைத்துவிட்டோ உள்ளே சென்றார்கள். சில விநாடிகள் கால்மாட்டில் நின்று அம்மாவை நோக்கிவிட்டு வெளியே வந்து நாற்காலிகளில் சிறிது நேரம் அமர்ந்தார்கள். அவர்களுக்கு, நாற்காலியொன்றில் வைத்திருந்த கேனில் இருந்து காபியை பேப்பர் குவளையில் பிடித்து கொடுத்தான். அமர்ந்திருந்தவர்கள் சொல்லிக்கொள்ளாமல் கிளம்புவதால் அடுத்தடுத்த ஆட்கள் வரும்போது அமர்வதற்கு ஏதுவாக நாற்காலி வெறுமையாக இருக்கும்.

வருகின்ற ஒவ்வொருவரையும் பார்க்கும்போது சந்திரனுக்கு உள்ளிருந்து துக்கம் வெடித்து வெளிவந்தது. அதுவரை எங்கிருந்தது என ஒவ்வொரு முறையும் சந்திரனுக்கு வியப்பு தோன்றும். ஆனாலும் அடுத்தவர் வந்தவுடன் மீண்டும் குமுறல் எழுந்து வருபவரையும் விழிநீர் சிந்தவைக்கும். அம்மா மேல் இத்தனை நேசமிருக்கும் என சந்திரன் இதுவரை அறிந்திருக்கவில்லை. நேற்றுக் கூட எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர் இனி இல்லை என்ற எண்ணம் மனதில் அறையும்போது விடுபட்ட பல்லியின் வால்போல உள்ளம் பதறுகிறது.

உறவினரோ நண்பரோ வரும்போது அவர்களோடு அம்மா கொண்டிருந்த பிணைப்பு, அவர்களுடனான சந்திப்பு எல்லாம் ஒருகணத்தில் நினைவுக்கு வந்தது. திரைப்படத்தில் நினைவோட்டத்தைக் காட்டும்போது ஒரு வினாடியில எப்படி இத்தனையும் ஞாபகம் வரும் என்று கேலியாக கேட்டிருக்கிறான். ஆனால் இப்போது, திரைப்படத்தில் குறைவாகவும் மெதுவாகவும் காட்டுவதாகத் தோன்றியது. சந்திரனுக்கு நினைவுக்கு வருபவை அனைத்தும் வருபவருக்கும் தோன்றும்போலும். அதனால்தான் இவன் அழும்போது அவருக்கும் கண்ணீர் வருகிறது.

ஆண்கள் கண் கலங்கி சில துளிகள் சிந்துவதோடு நகர்ந்து விடுவார்கள். பெண்கள் வரும்போதே “என்னப் பெத்த ஆத்தாஆஆ…” எனக் கூவியபடி வந்து கட்டிப்பிடித்து இவனது பனியனை நனைத்தபின்தான் உள்ளே செல்வார்கள். உள்ளே இவன் மனைவியை அணைத்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடத்திற்காவது ஒப்பாரி வைத்தபின்தான் சற்று இலகுவாவார்கள்.

அதிகாலை நான்குமணிக்கு விழிப்பு வந்து எழுந்த சந்திரன் கழிவறைக்கு செல்வதற்கு விளக்கை ஒளிர்ப்பித்தான். இரவில் படுத்தபின் சிறு ஓசை எழுந்தாலும் அகல்யாவுடன் படுத்திருந்த அம்மாவிடம் உடனே ஓர் அசைவு ஏற்படும். அது, கிராமத்திலேயே பிறந்து வாழ்ந்து வயதடைந்தவருக்கு உண்டாகும் எச்சரிக்கையுணர்வு. ஓசைக்கான காரணத்தை அறிந்தவுடன் உறக்கத்தை தொடர்வார். ஆனால் இன்று அசைவு எழாததை வியப்புடன் கவனித்து, ஆழ்ந்த உறக்கம்போலும் என்ற எண்ணத்துடன் சிறுநீர் கழித்துவிட்டு வந்தான். உடலின் அவசரம் விலகியபின்தான் மனம் தெளிந்து எதையோ உணர்ந்து பெரும் அச்சமடைந்தது. அம்மாஆ என மனம் கூவ அருகில் சென்று கையை தொட்டான். அது குளிர்ச்சியுடன் இறுக்கமாகயிருந்தது. பொங்கிய மனத்தை கட்டுப்படுத்தியபடி மகளை எழுப்பினான். அவள் மற்ற இருவரையும் எழுப்பினாள். அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளை மனம் வரிசையாக திட்டமிட்டது. இந்த திட்டம் இப்போது உருவானதில்லை. ஏற்கனவே பலமுறை திருத்தி ஒருங்கமைக்கப்பட்டது என்று தோன்றும் வண்ணம் துல்லியமாக இருந்தது. யார் யாருக்கு முதன்மையாக சொல்லவேண்டும் என்றும் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் தகவலை கடத்திவிடலாம் என்பதும் பணம் இதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்ததும் மனக்கணக்கின் முதன்மைப் பகுதி. பையன் ஆற்றவேண்டிய பணிகள் அடுத்த பகுதி. நிகழப்போவதை முன்பே கணித்து அதற்காக திட்டமிட்ட மனதின்மேல் ஒருவித அசூசையும் பிரியமும் ஒரே நேரத்தில் தோன்றின.

சொல்ல வேண்டியவர்களுக்குச் சொல்லி பிரபாவிடம் செய்யவேண்டிய பணிகளைக் கூறிமுடித்ததும் அதற்கெனவே காத்திருந்ததுபோல துக்கம் பேரெடையுடன் மனதில் மோதியது. அம்மாவைப் பற்றிய இத்தனை காட்சிகள் மனதிற்குள் உள்ளனவா என்ற வியப்பும் உள்ளுக்குள் தோன்றியபடி இருக்க அக்காட்சிகளின் இனிமையும், இனி அம்மா உருவாக இல்லாமல் சொல்லென்றே மாறிவிட்டார் என்பதும் பெருந்துயரை அளித்தது.

“எல்லாம் வாங்கியாந்தாச்சா…” என்று சற்று சத்தமாகக் கேட்டவன் முப்பது வயதிற்குள் இருந்தான். பழைய பச்சைநிறக் கைலியை கட்டியிருந்தான். பிரபா அவனிடம் அருகிலிருந்த மூட்டையைக் காட்டியபோது இறுதிச் சடங்கு செய்வதற்கு வந்தவன் என்பது தெரிந்தது. “நீங்க சொன்ன எல்லாம் இதுல இருக்கு… தண்ணியும் பாத்திரமும் வீட்லேர்ந்து எடுத்துத் தர்றேன்”.

“மூங்கில் இருக்கு ஓலை எங்க…”

“அனுப்பறேன்னு சொன்னாங்க”

“அப்பறம்… பங்காளிங்க பொறந்த வூட்டு ஆளுங்கல்லாம் அவங்கவுங்க பொருளுகளெல்லாம் வாங்கியாச்சா”

“வாங்கப் போயிருக்காங்க. இப்ப வந்திருவாங்க” என்று பிரபா கூறியதும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

எந்த இடத்திற்கு தான் வந்துள்ளோம் என்ற பிரக்ஞையில்லாமல் மாலைகள் விற்கும் கடையில் மலர்களைத் தொடுப்பவன் போலவும், உணவகத்தில் சமையல் செய்பவன் போலவும், தன் வேலையில் தானே நிறைவடையும் ஒருவித சாந்தமான முகபாவத்துடன் மூங்கிலை சிறு குச்சிகளை குறுக்கே வைத்துக் கட்டுவதும், சீயக்காய் கரைப்பதும் மற்ற பொருள்களை ஒழுங்குபடுத்துவதுமாய் தன் பணிகளை ஆற்றிக்கொண்டிருந்தான்.

சந்திரன், வருபவர்கள் கிளர்த்தும் அம்மாவின் நினைவுகளுடனும் தன்னுள்ளிருந்து ஈசல்கள்போல ஒன்றன்பின் ஒன்றாக எழுந்துவந்த காட்சிகளினாலும் துயருக்குள் மூழ்கியபடியே இருந்தான். துக்கத்தை தணிக்க வருபவர்களால் அது பெருகிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். உள்ளிருக்கும் நினைவுகளை எல்லாம் ஒரே நாளில் உருவியெடுத்து அம்மாவின் உடலுடன் அவற்றையும் சிதையேற்றத்தான் இந்த முறைமைகளோ என்ற எண்ணம் ஏதோவொரு மூலையில் தோன்றியது. ஒரே மனம் எனக் கூறுகிறார்கள் ஆனால் அது எத்தனையெத்தனை அடுக்குளாக விரிந்துகொண்டே செல்கிறது. வருபவர்களை கவனிக்கும்போதே யார்யார் இன்னும் வரவில்லை என்ற கணக்கையும் போடுகிறது. வருபவரின் கையை மென்மையாகத் தொடுகையிலேயே, அம்மாவின் மேலோ தன்மேலோ கொண்டுள்ள அவரின் பிரியத்தின் அடர்த்தியைக் கணிக்கிறது. உள்ளே மனைவி என்ன செய்கிறாள்… மகள் சோர்ந்திருக்கிறாளா இன்னொரு குவளை காபி அளிக்கலாமா என்று வினவுகிறது. மகன் தேவையான பொருட்களை வாங்கிவிட்டானா. கையில் வைத்திருக்கும் பணத்தைச் சரியாகக் கையாள்கிறானா எனக் கண்காணிக்கிறது. வேலை செய்பவன் சரியாகச் செய்கிறானா அல்லது போதையில் ஆழ்கிறானா என நோக்குகிறது. அத்தனைக்கும் மேல் அம்மாவின் நினைவுகளை வருபவருக்குத் தகுந்தாற்போல தனித்தனி அடுக்குகளாக எடுத்து விரிக்கிறது.

“டேய் முனியா.. ஏண்டா இன்னும் ஓலை வர்ல. என்னதாண்டா பண்ற. அதுக்காகத்தான் காத்திருக்கேன்”

” … “

“இனிமே மரத்துல ஏறி எப்படா வருவ. நேரம் வேற ஆயிடுச்சு. நீர்மால எடுக்கனும். குளிப்பாட்டனும். நீ வந்தாதான் அடுத்த வேலையே. இந்தக் கதிரோட வேலையில எந்தக் கொறையும் வந்திரக் கூடாது சொல்லிட்டேன். ம்…ம்.. சீக்கிரம் வா…” ஆழ்ந்த வசைச் சொல்லொன்றை வாய்க்குள் முனகியபடி அலைபேசியை அணைத்தவனிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. அவனே அத்தனை கோபத்துடன் கூறிய பிறகு இவர்கள் வினவுவதால் அவன் சினம் உயர்வதைத் தவிர வேறெதுவும் நிகழப்போவதில்லை என சந்திரனும் உணர்ந்தான். அங்கு இருந்தவர்களில் சற்று அனுபவசாலியாகத் தோன்றிய சந்திரனின் சித்தப்பாவை கதிரே அழைத்தான். “நீர் மாலை எடுக்குறது. குளிப்பாட்றது, மூதேவிய ஓட்றது, ஸ்ரீதேவிய வாங்குறது, பொறந்தவூட்டுக் கோடி போடறது அப்புறம் புகுந்தவீட்டுக் கோடி போடறது, நெய்ப்பந்தம் பிடிச்சுட்டு கடைசியா வாக்கியரிசி போடறது… இப்படித்தான் இங்க செய்ற மொற. ஒங்க மொறையும் இப்படித்தானா இல்ல வேற மாதிரியான்னு சொல்லுங்க… நீங்க சொல்ற மாதிரி செஞ்சிடலாம்” எனக் கூறினான். சித்தப்பா சந்திரனை நோக்கினார். இவனுக்குச் சடங்குகளைப் பற்றி சரியாகத் தெரியாது. “நீங்களே சொல்லுங்க சித்தப்பா” என்று கூறினான். சித்தப்பாவுக்குமே உறுதியாகத் தெரியாதுபோலும். உடனேயே திரும்பி “நீ சொன்ன மாதிரியே செஞ்சிடு… பெருசா ஒண்ணும் மாத்தமில்லை. சடங்குகள்ள தப்பா என்னயிருக்கப்போகுது” கடைசியாகக் கூறியது அவருக்கே அவர் கூறிக்கொண்டது என சந்திரனுக்குத் தோன்றியது.

வெயிலில் மிளிர்ந்த பசுந்தென்னையோலையுடன் இருபது வயது மதிக்கத்தக்க ஒருவன் டிவிஎஸ் வண்டியில் வந்து இறங்கினான். வெளிர் மஞ்சளில் அரைக்கை பனியன் அணிந்திருந்தவன் கரண்டைக் கால்வரை பேண்டை மடித்துவிட்டிருந்தான். விட்டேத்தியான பார்வையும் உடலில் ஒரு அடங்காத்தன்மையும் தெரிந்தது.

“வந்துட்டியா முனியா. லேட்டாயிடுமோன்னு பாத்தேன். சரியான நேரத்துக்கு வந்துட்டியேடா. சரி அப்படியே ஓரமாப் போட்டுட்டு நீர்மாலை எடுக்கறதுக்கு அவங்க கூட போயிட்டு வா” என்று கூறினான். ஓலையை வைத்துவிட்டு முனியன் நீர்மாலை எடுக்கும் பெண்களை நோக்கி நகர்ந்தான். கதிர் சென்று ஓலையின் மட்டையின் நடுவில் அரிவாளால் வெட்டி சரியாக இரண்டாகப் பிளந்தான். தடிமனான மேல் மட்டையையும் மெல்லிசான கீழ் கீற்றுகளையும் களைந்துவிட்டு இருபகுதிகளையும் திருப்பி கீற்றுகளை இணைத்துப் பின்ன ஆரம்பித்தான். அவன் விரல்கள் நாட்டிய முத்திரை பிடிக்கும் லாவகத்துடன் ஒரு தாளகதியில் இயங்குவது போலிருந்தது.

நூறடி தூரத்திலிருந்த அடிகுழாயில் மூன்று குடம் நீரை தலையில் ஊற்றிக்கொண்டான். உடன் வந்தவர்கள் உடலில் தெளித்துக் கொண்டார்கள். கற்பூரம் ஏற்றி வணங்கி திருநீறு பூசிக்கொண்டபின் நீர் நிரம்பிய சிறிய பித்தளைத் தவளையுடன் சந்திரன் முதலில் வர பின்னால் இவனுடைய சகோதரி முறையிலுள்ள பெண்கள் தண்ணீர் குடங்களை தலையில் தாங்கியபடி வந்தார்கள். இதுதான் அம்மாவின் கடைசிக் குளியல் என்ற எண்ணம் தோன்றியதும் தலையில் இருந்த சிறுகுடத்திலிருந்து வழிந்த நீரோடு சந்திரனின் கண்ணீரும் கலந்து நிலத்தில் விழுந்தோடியது. அப்போது சந்திரனுக்கு இரண்டு வயது இருக்கலாம். கிராமத்து வீட்டின் முற்றத்தில் உடையின்றி நிற்க வைத்து இளஞ்சூடான நீரை மேனியிலூற்றி அம்மா குளிப்பாட்டியதுதான் இவனுக்கு நினைவிலிருக்கும் முதல் குளியல். பின்னொரு நாள், அழுது அரற்ற இழுத்துச் சென்று கண்மாயில் முழுக்கியது. அம்மை போட்டிருந்தபோது மூன்று நாட்களும் வேப்பிலையால் உடலின் கொப்புளங்களால் உண்டாகும் தினவுகளை தடவிக் கொடுத்திருந்துவிட்டு, மூன்றாம்நாள் மஞ்சள் கரைத்து வேப்பிலையை உருவிப்போட்டு வெயிலில் வைத்திருந்த நீரை மேனியில் இதமாக ஊற்றியது. புளிய மரத்தில் பழம் உலுக்க ஏறி பிடிநழுவி விழுந்து காலில் மாவுக்கட்டு போட்டிருந்தபோது வெந்நீரில் துணியை நனைத்து உடல் முழுவதும் ஒற்றியெடுத்தது எல்லாமே பழைய புகைப்படங்கள் போலல்லாது நவீனத் திரைப்படம் போலவே துல்லியமான காட்சிகளாகவே நினைவுக்கு வந்தது. அத்தனையிலும் அம்மாவின் முகத்தில் மிளிர்ந்த வாஞ்சையும் பிரியமும் இவனின் அடிவயிற்றிலிருந்து விம்மலை வரவழைத்தன. இவனது தோளைப் பிடித்திருந்த இவன் சித்தப்பா “அம்மாவுக்கு நல்ல சாவுதான்டா… இந்த மாதிரி வலியில்லாம வைத்தியமில்லாம போறது பெரிய கொடுப்பினை. நீ கலங்காத… அம்மா ஒங்கூடவேதான் இருப்பாங்க” என்று கையால் அழுத்திக் கூறியதும் விம்மல் வெடிக்க அவரைக் கட்டிக் கொண்டு அழுதான்.

“என்னம்மா சொல்ற. இன்னைக்கு எப்டி வலி வரும். கொடுத்த தேதிக்கு இன்னும் பத்துநாள் இருக்கே…” கதிர் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

“பக்கத்து வீட்ல குமார் இருப்பான் பாரு. அவனுக்கு நைட் டூட்டிதான். அவன எழுப்பிக்கினு ஆட்டோ பிடிச்சு ஒடனே போம்மா…”

அழைப்பை துண்டித்து வேறு எண்ணைத்தேடி அழுத்தியவன் முகம் பதட்டத்தில் துடித்தது.

“டேய் குமாரு. கனிக்கு வலி வந்திருச்சான்டா. பத்துநாள் தள்ளிதான் தேதி கொடுத்திருந்தானுங்க. அதனாலதான் நான் வேலைக்கு வந்திருக்கேன். கொஞ்சம் அவள ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயேன்…”

“கனி வந்திருக்காளா… சரி சரி அவளோட போ.. போய் பாத்துக்கடா. எதாயிருந்தாலும் போன் பண்ணு. கையில பணமிருக்குதா… சரி … கனிக்கிட்ட சொல்லி பணம் எடுத்துக்கச் சொல்லு…”

கதிரின் பேச்சு சற்று உரக்க இருந்ததால் சந்திரனுக்கு தெளிவாகவே கேட்டது. ஆனால் அதன் பொருள் முழுவதுமாக மனத்தை எட்டவில்லை. அம்மாவைப் பற்றிய நினைவிற்குள் ஆழ ஆழச் செல்வதுபோல தோன்றியது. வெளியில் நடப்பது எதையும் உள்வாங்க சற்று நேரம் பிடித்தது. அவனை அங்கே இங்கே அழைப்பதற்கே சித்தப்பாவிற்கு பெரும்பாடாக இருந்தது.

அம்மாவை நீராட்டுவதற்கான ஆயத்தங்களை முனியனும் கதிரும் செய்தார்கள். நீண்ட விசிப்பலகையில் அம்மாவை தூக்கிக் கிடத்தி எண்ணெயும் அரப்பும் ஒவ்வொருவராக வைக்க கதிர் அறிவுறுத்தவும் வந்திருந்தவர்கள் வரிசையில் வந்து இரண்டையும் இடக்கையால் மும்மூன்று முறை வைத்து அருகில் ஏனத்திலிருந்த நீரில் கையை அலம்பி உதறாமல் நகர்ந்தார்கள்.

சந்திரன் கடைசியாகத்தான் வைக்கவேண்டும் என்பதால் நிகழ்வதில் கவனம் பதியாமல் ஓரமாக நின்றான். அலைபேசியில் அழைப்பு வரவும் கதிர், முனியனைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கூட்டத்திலிருந்து ஒதுங்கிவந்து பேச ஆரம்பித்தான்.

“என்ன குமாரு. ஆட்டோல ஏறிட்டீங்களா…”

“ஆட்டோக்காரன மெதுவா ஓட்டச் சொல்ல வேண்டியதுதானே… பனிக்கொடம் ஒடையிற அளவுக்கு ஏண்டா ஓட்டவிட்ட..”

“டிராபிக் இருக்காதுன்னு குண்டுங்குழியுமான ரோட்ல ஏண்டா போகவிட்ட.. கனி எப்படித் தாங்கிக்கிறாளோ தெரியலையே…” கதிரின் கண்கள் கலங்கி வெளிவந்த நீரை அரைக்கை சட்டையில் துடைத்துக் கொண்டான்.

“சரி ஆட்டோக்காரனுக்கு கொஞ்சம் சேத்துக்குடு. ஆட்டோவ வேற கழுவனும்ல… ஆஸ்பத்ரில சேத்துட்டு டாக்டரப் பாத்துட்டு எனக்குச் சொல்டா குமாரு. வேல முடிய இன்னும் ஒருமணி நேரமாவது ஆயிடும். கனியப் பத்திரமா பாத்துக்க குமாரு…”

கதிரின் பேச்சை அருகில் நின்று கேட்டதால் நடப்பதை உணர்ந்து கொண்டான் சந்திரன். “நீ போய் அந்தப் பொண்ணப் பாரு. இந்தப் பையன் இந்த வேலயப் பாத்துக்கட்டும்” என்று கதிரிடம் கூறினான்.

“இந்தப் பையனுக்கு முழுசாத் தெரியாது சார். அதோட அந்தக் குமாரு கனிய தன்சொந்த அக்காமாரி நெனைக்கறவன். நல்லாப் பாத்துப்பான். பாதியில எப்படிசார் போறது. வேலைய முடிச்சிட்டே போறேன் சார்” என்று கூறிவிட்டு முனியனின் அருகில் சென்றான்.

“எல்லாரும் எண்ணெயும் அரப்பும் வச்சாச்சா… மருமகளும் புள்ளையும் வாங்க” என சந்திரனையும் அவன் மனைவியையும் அழைத்தான்.

இவன் சென்று வைக்கும்போது அனைவரிடமிருந்தும் விசும்பல் எழுந்தது. சந்திரன் மீண்டும் துயருக்குள் ஆழ்ந்தபடியே எண்ணெயும் அரப்பும் வைத்தான். நீர்மாலையென கொண்டு வந்த தண்ணீரை ஒவ்வொருவராக தலை முதல் பாதம்வரை ஊற்றினார்கள். கடைசியாக சந்திரன், இவன் கொண்டுவந்த நீரை கதிர் கூறியபடி “காசி… காசி” என்று கூறி தலை முதல் பாதம்வரை மும்முறை ஊற்றினான். பின், பெண்கள் பிறந்த வீட்டுக் கோடியை உடுத்தியபின் அம்மாவைச் சிலர் சேர்ந்து தூக்கிவந்து புதுப்பாயில் கிடத்தினார்கள்.

கதிர், மூதேவியை ஓட்டுவதற்கும் ஸ்ரீதேவியை வாங்குவதற்குமான சடங்கை சந்திரனின் மனைவியைக் கொண்டு செய்து முடித்தான். வந்திருந்தவர்களில் சந்திரனை முதலில் விட்டு அவன் பின்னால் பங்காளிகளும் பிறந்த பெண்களும் நெய்பந்தமேந்தி அம்மாவை வலம் வந்தார்கள்.

புடவை ஒன்றை விரித்து அதில் பெண்களை மட்டும் வாய்க்கரிசி போடச் சொல்லி அதை சுருட்டி எடுத்துக் கொண்ட கதிர், உடலைத் தூக்கி வெளியே தயாராகயிருந்த பாடையில் வைக்குமாறு கூறினான். பெண்கள் அனைவரும் கதறியழ வெளியில் தூக்கிவந்து பாடையில் வைத்து, பாடையோடு உடலையும் சேர்த்துத் தூக்கி நிலைவெள்ளியில் உருவாக்கப்பட்டிருந்த தங்கரத வாகனத்தில் ஏற்றினார்கள். அம்மாமேல் போடப்பட்ட மாலைகள் வண்டிக்குள் ஏற்றப்பட்டிருந்தன.

ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த மின் மயானத்தை நோக்கி வண்டிக்கு முன்னால் மெல்லிய புகையெழுந்த அனல் இருந்த மண்பாண்டத்தை, அதில் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு சந்திரன் முன் செல்ல அவனுடன் சித்தப்பாவும் பிரபாவும் இருபுறம் நடந்தார்கள். நெருக்கமான உறவினர்களும் நண்பர்களும் மட்டும் வண்டிக்கு பின்னால் வந்தார்கள்.இருவர் மட்டும் வண்டியில் அமர்ந்து மாலைகளிலிருந்து பூக்களைப் பிரித்துச் சாலையில் நழுவவிட்டுக்கொண்டு வந்தார்கள். பிரபா தன் கையிலிருந்த நெல்பொரியைப் பாதையில் தூவியபடி வந்தான். ‘அதிகமா அள்ளித் தெளிச்சிடாத… மயானம் வரைக்கும் வரனும்” என்று கதிர் கூறினான்.

கதிரின் அலைபேசி ஒலித்தது. “சொல்லு குமாரு… டாக்டர பாத்தாச்சா…”

“ஏய்ய்ய் கனீஈஈ.. எப்டி இருக்க. இப்ப வலி பரவால்லயா… டாக்டர் என்ன சொன்னாங்க…”

“இல்லம்மா.. ஒனக்குத் தெரியாதா. இந்த வேலைய பாதில எப்படிம்மா விட்டுட்டு வரமுடியும்..”

“கனீ கனீஈ அப்படில்லாம் பேசாத. ஒன்கிட்ட முன்னாடியே ஒரு தடவ சொல்லியிருக்கேன்ல. அப்ப புரிஞ்ச மாதிரி தலைய ஆட்ன. இப்ப இப்டி சொல்ற பாத்தியா..”

“அப்படி இல்லம்மா… இப்ப ஆஸ்பத்திரில ஒன்னய பாக்குற டாக்டரு வீட்ல அவசர வேலையிருக்குன்னு போனா ஒன் நெலம என்னாகும்… அப்படித்தானே இங்கேயும்..”

“ஆமா ஒரு மாதிரிதான்… பிள்ள பொறக்கறது எப்படியோ அப்படித்தான் சாவுறதும். டாக்டரு பெத்துக்குறதுக்கு ஒதவியா வேல பாக்குறாரு. நான் செத்தவங்கள மேலேத்துறதுக்கு ஒதவியா வேல பாக்குறேன். என் வேலையப் புரிஞ்சிக்கிறாங்களா மதிக்கிறாங்களான்னுலாம் எனக்குக் கவலையில்ல. எனக்குப் புடிச்சிருக்கு செய்றேன் அவ்ளோதான். இன்னும் ஒரு அரைமணி நேரந்தான். முடிஞ்சதும் ஓடி வந்துருவேன். கவலப்படாம இரு..”.

கதிர் பேசி முடித்தபோது அவனிடம் பேச எத்தனித்த சந்திரன் மயானத்தின் வாயிலை அடைந்துவிட்டதால் அவ்வெண்ணத்தைக் கைவிட்டான். அம்மாவின் பிரிவின் மீதான துயர் சற்று குறைந்து, அந்தப் பெண்ணுக்கும் பிறக்கப்போகும் பிள்ளைக்கும் ஏதும் ஆகிவிடக் கூடாதே என்று லேசான பதட்டம் தோன்றியது. அங்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அப்பழியை அம்மாவல்லவோ சுமக்கவேண்டும். எதுவும் நிகழ்ந்துவிடாமல் காத்திடவேண்டுமென குலதெய்வங்களிடம் வேண்டிக் கொண்டான். வேண்டுதல் முடியும்போது அந்த தெய்வங்களின் வரிசையில் இயல்பாக அம்மாவும் வந்துவிட்டதை வியப்புடன் உணர்ந்தான்.

உள்ளேயிருந்த விசிப்பலகையில் உடலை தூக்கி வைத்தார்கள். சந்திரனின் தோளில் நீர் நிரம்பிய மண்குடத்தை வைத்து மூன்று முறை வலம் வரச் சொன்ன கதிர் ஒவ்வொரு சுற்றுக்கு முன்னும் நீர் வெளியேறும் வண்ணம் அரிவாளின் முனையால் ஒரு துளையிட்டான். மூன்றாவது சுற்று முடிந்ததும் குடத்தை உடைக்கச் செய்தான். வீட்டில் வாய்க்கரிசி வாங்கிச் சுருட்டி வைத்திருந்த புடவையை விரித்து வந்திருந்தவர்களை வாய்க்கரிசி போடச் சொன்னான். முனியன் “அம்மாமேல பாசமா இருக்கறவங்கல்லாம் தாராளமாப் போடுங்க” என திரும்பத் திரும்ப குரல் எழுப்பினான். எல்லோரும் வரிசையாகப் போட்டபின் கடைசியாக சந்திரன் பிரபாவிடம் நூறு ரூபாய் வாங்கி பணத்தோடு அரிசியை அள்ளி மூன்று முறை அதிலேயே போட்டான். முனியன் அந்தப் புடவையை அரிசியுடன் சேர்த்து எடுத்துக்கொண்டு நகர்ந்தான்.

உடலின் கால்மாட்டில் தரையில் கற்பூரம் வைத்து ஏற்றப்போனபோது கதிரின் அலைபேசியில் அழைப்பு வந்தது. சந்திரனுக்கு ஒரு பதட்டம் ஏற்பட்டது. கதிர் எவ்வுணர்ச்சியையும் காட்டாமல் அலைபேசுயை எடுத்து முனியனிடம் நீட்டி ஒலியை நிறுத்துமாறு சைகையிலேயே சொன்னான். முனியன் வாங்கிக் கொண்டபின் கற்பூரத்தை ஏற்றினான். அனைவரையும் வணங்குமாறு கூறியவன் சத்தமாக பாட ஆரம்பித்தான்.

"பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் 
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் 
உயிரை மேவிய உடல் மறந்தாலும் 
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் 
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் 
நல்தவத்தோர் உள்ளிருந்தோங்கும் 
நமச்சிவாயத்தை நான் மறவேனே " 

ஒவ்வொரு வரியையும் இருமுறை தன் கரகரப்பான குரலில் பாடியபோது அதன் கார்வை சுற்றி நின்றிருந்த சந்திரனின் ஆழுள்ளத்தை சென்று தொட்டு இழுத்தது. கதிர் பாடிய பாவனை சந்திரனின் அம்மாவிற்காகவோ அல்லது அவன் அம்மாவிற்கோ அன்றி அவனுக்காவே பாடியதைப் போன்று முகம் நெகிழ வேறெங்கோ இறைவனை இவன் மட்டும் தனிமையில் நேரிலேயே கண்டு வேண்டுவதுபோலத் தோன்றியது. அனைவரின் விழிகளிலும் நீர் துளிர்த்திருந்தது.

மயானப் பணியாளர் ஒருவர் நேரமாகிவிட்டதென அழைத்தார். சிலர் சேர்ந்து தூக்கிக் கொண்டு தகன அறைக்குள் சென்றார்கள். கதிரையும் முனியனையும் தவிர மற்றவர்கள் உள்ளே சென்றார்கள். உள்ளே கதிருக்கு வேலையில்லை போலும் என சந்திரன் எண்ணினான். தகனப் பணியாள், கடைசியாக முகம் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறி அனைவரையும் ஒருமுறை நோக்கிவிட்டு புடவையால் அம்மாவின் முகத்தை மூடினார். நெஞ்சுப் பகுதியில் ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து அதை ஏற்றிவிட்டு திரும்பிப் பாராமல் செல்லுமாறு சந்திரனிடம் கூறினார். காலையிலிருந்து இருந்த துயர் குறைந்து ஏதோவொரு வேலையை செய்வதுபோல கற்பூரம் ஏற்றிய போது வேறொரு பதட்டத்தில் மனம் துடித்துக் கொண்டிருந்தது. அல்லது அந்தப் பதட்டம்தான் துயரை மழுங்கச் செய்துள்ளதோ என்றும் தனக்குள்ளேயே வினவிக் கொண்டபடி திரும்பிப் பாராமல் வெளியே வந்தான்.

முனியன் மட்டும் தனியே நிற்க கதிர் போயிருப்பானோ என்று எண்ணியபடி வெளிவாயிலில் தேடியபோது பருத்த கல்யாணமுருங்கை மரத்தில் சாய்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவன் திரும்பி தின்றதால் குலுங்கிக் கொண்டிருந்த முதுகுதான் இவனுக்குத் தெரிந்தது. அச்சத்தில் கால்களில் மெல்லிய நடுக்கம் தோன்றியது. பலமைல் தூரத்தைக் கடக்கும் பிரயத்தனத்துடன் பெரும்பாரமென கனத்த உடலை இழுத்தபடி முப்பதடி தூரத்திலிருந்த அவனை அணுகித் தொட்டான். திரும்பிய கதிரின் முகத்தில் கண்ணீர் தடங்களுடன் மகிழ்ச்சி தெரிந்தது. “பொண்ணு சார்… நல்லா இருக்காங்க..” என்று கூறியவனை வேகமாக தோளைச் சேர்த்து அணைத்துக் கொண்டபின் விலகி கதிரின் கையைப் பிடித்து மென்மையாக அழுத்தினான். அப்போது கதிரை நோக்கிய அவனின் பார்வையிலும் அந்த தொடுகையிலும் சொற்களால் உரைத்திட இயலாத நன்றியும் ஆசியும் இருந்தது.

மயானத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி உயர்ந்து வளர்த்திருந்த மரங்கள் பருவம் வந்த பெண்ணின் மேனியைப்போல தளிர்களைச் சூடிப் பொலிந்து நின்றன. இவர்கள் கொண்டுவந்த மாலைகளை கிறக்கத்துடன் கடித்துக் கொண்டிருந்த பசு மாடுகளின் வாயோரங்களில் தோன்றிய வெண்நுரை சர்க்கரைப் பாகினையொத்த மெல்லிய கம்பிபோல வழிந்து கொண்டிருந்தது. ஒரு மாதத்திற்குப் பின் அந்தப் பிள்ளையைச் சென்று காணவேண்டும் என உறுதிகொண்ட சந்திரன் தன் முகம் மலர்ந்திருப்பதை உணர்ந்து, அம்மாவுக்குக் கொள்ளியிட்டு வருபவனின் முகத்திலிருக்கும் நிறைவைக் காணும் தன் மனைவியும் மகளும் காட்டப்போகும் முகபாவனைகளை எண்ணியபடி நடந்தான்.

***

2 Replies to “தோற்றங்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.