தமிழாக்கம்: மைத்ரேயன்

பேட்டன் ஆஸ்வால்ட்டின் அறிமுகக் குறிப்பு:
அந்தத் தொள்ளாயிரம் பாட்டிகளிலேயே மூத்த பாட்டியம்மாவுக்கு பிரபஞ்சம் எப்படி ஆரம்பித்தது என்று தெரியுமா? இல்லை தெரிந்திருக்க வேண்டுமோ என்றுதான் கேள்வி. தவிர, அவருக்கு- அல்லது அவர்களுக்கு – சிரஞ்சீவியாக இருப்பது எப்படி என்றும் தெரியுமோ?
ஆர். ஏ. லாஃபெர்ட்டி, இந்த எளிய, சுவையான கனியை, அண்ட வெளிக் கொள்ளைக்காரரும், அத்தனை எளிமையானவரல்லாதவருமான மையப்பாத்திரத்தின் முன்னால் தொங்க விடுகிறார். பாத்திரத்தின் பெயர், சேரன் ஸ்வைஸ்குட். சேரன் என்னவோ தான் ஒரு ‘ஸ்பெஷல் ஆஸ்பெக்ட்ஸ்” ஆள் என்று நினைக்கிறார். அதாவது மேன்ப்ரேக்கர் (மனிதரை உடைப்பவன்) என்றோ பாரல்ஹௌஸ் (பீப்பாய் வீடு) என்று முரட்டுத் தனமான பெயர்களைக் கொண்ட தன் சகபாடிகளைப் போல அல்லாது, தான் பண்பட்டவன் என்றும் நினைக்கிறார். அவர்களோ அத்தகைய பெயர்கள், அடித்துப் பிடுங்கவோ, கொள்ளை அடிக்கவோ உதவுகின்றன என்று நினைக்கிறார்கள். ‘சேரன் ஸ்வைஸ்குட்’ என்ற பெயரோ, அதிசயமான…. கிடைப்பதற்கரிய பொருட்களைத் தேடிப் பிடிப்பவரான ஒருவருக்குப் பொருத்தமான பெயராக இருக்கும்.
ஆனால் குறுகிய கண்ணோட்டமும், பணம்- செல்வம் ஆகியனவற்றை இலக்காகவும் கொண்டு இயங்கும் அவரது சகபாடிகளை விட, அரியதை நாடும், போலித்தனமான (மேலும் பேராசையும் பீடித்த) அந்தத் தேடல்தான் சேரனைத் துரிதமாக ஒழித்துக் கட்டுகிறது. அறிவுச் சேமிப்பு அதிகாரத்திற்கு நேர், ஆனால் எட்ட்ட்டிப் பிடிக்க முடியாத அறுதியான அறிவு என்பது ஆத்மாவுக்கு விஷம் போல.
இந்தக் கதை சிரிப்பூட்டும் என்பதை முன்பே சொன்னேனா?
***
தொள்ளாயிரம் பாட்டிகள்
நல்ல எதிர்காலம் உள்ள ஒரு‘ஸ்பெஷல் ஆஸ்பெக்ட்ஸ்’i இளைஞன் சேரன் வைஸ்குட். ஆனால் எல்லா ஸ்பெஷல் ஆஸ்பெக்ட்ஸ்களையும்போல, அவனுக்கு எரிச்சலூட்டும் ஒரு பழக்கமிருந்தது. எப்போது பார்த்தாலும் இந்தக் கேள்வியைக் கேட்டபடி இருப்பான்: எல்லாம் எப்படி ஆரம்பிச்சது?
சேரனைத் தவிர அவர்கள் எல்லாருக்கும் முரட்டுப் பெயர்கள். மேன்ப்ரேக்கர் க்ராக் (ஆளுடைப்பான் கல்), ஹீவ் ஹக்கிள் (வீசு இடுப்பை), ப்ளாஸ்ட் பெர்க் (வெடிவை பாறை), ஜ்யார்ஜ் ப்ளட் (ஜ்யார்ஜ் குருதி), மூவ் மேனியான் ( நகரு முகக்கொப்புளம்; மூவ் “நகர்” என்று சொன்னால், நாம் நகர வேண்டும்), ட்ரபில் ட்ரெண்ட் (தொல்லை அத்துமீறல்). அவர்கள் முரடர்களாக இருப்பார்கள் என்று கருதப்பட்டது, அவர்களும் பெயர் வைக்கும் நேரத்தில் அப்படிப்பட்ட பெயர்களைத் தேர்வு செய்திருந்தனர். சேரன் மட்டும் தன் பெயரையே வைத்துக் கொண்டான் – அவனுடைய ஆணைத்தலைவர் மான்ப்ரேக்கருக்கு இது அருவருப்பூட்டிய செயல்.
”இப்படி சேரன் ஸ்வைஸ்குட்னு பேரை வச்சுகிட்டு யாரும் ஒரு ஹீரோ ஆக முடியாது!” மேன்ப்ரேக்கர் இடியாக முழங்குவார். “ஸ்டார்ம் ஷேனன்னு பேரை வச்சுக்கக் கூடாது நீ? அது நல்ல பேர். இல்லைன்னா கட்பாய் பாரல்ஹௌஸ் இல்ல ஸ்லாஷ் ஸ்டாகிள் இல்லை நெவல் நைஃப்? எத்தனை பேரெல்லாம் பட்டியலாப் போட்டுக் கொடுத்தோம், நீ அதை ஒரு தரம்கூட முழுசாப் பார்க்கல்லை.”
“நான் என் பேரையே வச்சுக்கறேன்,” எப்போதும் அதைத்தான் சேரன் சொல்வான், அங்கேதான் அவன் ஒரு தப்பு செய்தான். ஒரு புதுப்பெயர் என்பது ஒருத்தரைப் புது ஆளாகவே உரு மாற்றும். ஜ்யார்ஜ் ப்ளட்டுக்கு அப்படித்தான் நடந்தது. ஜ்யார்ஜோட நெஞ்சுல இருக்கற முடியெல்லாம் அங்கே ஒட்டப்பட்டதென்றாலும் கூட, அதுவும் அந்தப் பெயருமாகச் சேர்ந்து, ஒரு பையனாக இருந்த அவனை ஒரு ஆளாக ஆக்கியிருந்தன. கட்பாய் பேரல்ஹௌஸ்ங்கற மாதிரி நாயகத்தனம் உள்ள பெயரை வைத்துக் கொண்டிருந்தால் சேரனும் விறுவிறுப்பாக ஏதும் செய்ய முடிந்திருக்கலாம், அவனிடம் பழக்கமாக இருந்த அசட்டுச் சிரிப்போடு அவன் எடுக்கும் மசமச முடிவுகளும், அவன் காட்டுகிற வெத்து வேட்டுக் கோபங்களும் இல்லாமல், வளர்ந்த ஓர் ஆணுக்கு வரும் ஆத்திரமாகக் கொள்ள அவனுக்கு முடிந்திருக்கலாம்.
அவர்கள் ப்ரோயவிடஸ் என்ற விண்கல்லின் மீது இறங்கி இருந்தனர்- உலுக்கினால் கிணுகிணுத்தபடி லாபம் கொட்டக் கூடிய ஓர் உருண்டைக் கோள் அது. இந்த வேட்டை முயற்சியில் இறங்கியிருக்கும் முரட்டு ஆட்களுக்குத் தம் வேலை என்ன என்பது நன்றாகத் தெரியும். உள்நாட்டின் வெல்வெட் போன்ற மரப்பட்டைகளிலும், தங்களுடைய இணை நாடாக்களிலும் பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்கள். ப்ரோயவிடஸ் கோளத்தின் வாசிகள் மெலிய, எளிய மக்கள், அவர்களை இந்த முரடர்கள் பிரமிக்கச் செய்தார்கள், வஞ்சகமாக மயக்கினார்கள், ஓரளவு அச்சுறுத்தவும் செய்தார்கள். இந்த இடத்தில் ஒரு இரு வழிச் சந்தை அமைந்திருந்தது, அதன் சாத்தியப்பாடுகளை நினைத்து நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்தார்கள். அங்கிருந்த வினோதமான பொருட்களின் உலகம், பேரண்டச் சந்தைகளில் ஆடம்பரப் பொருட்களின் வியாபாரத்துக்கு வழி செய்யும் என்று தெரிந்தது.
அங்கே மூன்று நாட்கள் கழிந்த பின், “உன்னைத் தவிர, ஒவ்வொருத்தனும் எக்கச்சக்கமாச் சம்பாதிச்சுட்டான்,” மேன்ப்ரேக்கர் இடியாய் முழங்கினான், அவன் குரலில் பரிவு தொனித்தது. “ஸ்பெஷல் ஆஸ்பெக்ட்ஸ் ஆள் கூடத் தன்னோட பொழைப்பைத் தானேதான் பார்த்துக்கணும். எங்களோட விதிமுறைகள்படி உன்னை மாதிரி ஆள் ஒர்த்தனை நாங்க எல்லாப் பயணத்திலெயும் சுமந்துகிட்டுப் போகணும்னு இருக்கு, அதை வச்சுத்தான் எல்லாத்துக்கும் ஒரு பண்பாட்டுப் பூச்சு ஒண்ணைப் பூச முடியும்னு நினைப்பு. ஆனா அத்தோட நிற்கணும்னு ஏதும் இல்லை. பாருப்பா சேரன், நாம பயணம் போற ஒவ்வொரு தடவையும் எதுக்குப் போறோம், கொழுத்த பன்னி ஒண்ணோட பின்னாடிலேர்ந்து பெரிய துண்டமா ஒண்ணை வெட்டி எடுக்கணும், அதுக்குத்தான் போறோம் – நாங்க அதை ரகசியமால்லாம் வச்சுக்கல்ல. ஆனால் பன்னியோட வாலுல ஒரு சுருள் இருக்கே அதுக்கு ஏதோ ஒரு பண்பாட்டுத் திருகலைக் காட்ட முடியும்னா அது ஒரு சட்டத்தோட கட்டாயத்தைப் பூர்த்தி செஞ்சுடும். அந்த வளைசலை வச்சு நாங்க ஏதும் லாபம் பார்க்க முடியும்னாக்க, அதெல்லாத்திலயும் எங்களுக்குச் சந்தோஷம் இன்னும் அதிகமாவே இருக்கும். இங்கே ஏதோ உசிரோட இருக்கற பொம்மைங்கள் இருக்காமே, அதைப் பத்தி நீ ஏதாவது கண்டு பிடிச்சியா? அதுங்களுக்கு ஏதாவது பண்பாட்டு நோக்கமும் இருக்கும், கூடவே சந்தையிலயும் ஏதாவது மதிப்பு இருக்கும்.”
“அந்த வாழும் பொம்மைங்கள் வேற ஏதோ ஆழமான ஒண்ணோட பாகம்கிறாப்லத் தெரியுது,”சேரன் சொன்னான். “அதுல ஏகப்பட்ட சிக்கலா ஓர் உலகமே இருக்கு. அதைப் பிரிச்சுப் பார்க்கணும். ப்ரோயவிடோய் மக்கள் தாங்க சாகிறதில்லேன்னு சொல்றாங்களே, அதுலதான் இதுக்கெல்லாம் விடை இருக்கணும்.”
“அவங்க ரொம்ப இளம் வயசுலேயே செத்துடறாங்கன்னு நான் நினைக்கறேன் சேரன். வெளியில நாம பாக்கறவங்க எல்லாம் ரொம்ப சின்ன வயசுக்காரங்களாத்தான் இருக்காங்க. நான் பார்த்த மட்டும், தங்களோட வீட்டை விட்டு வெளியில போகாம இருக்கறவங்க எல்லாம் நடுவயசுக்காரங்க மாதிரிதான் இருக்காங்க.”
“அப்ப அவங்களோட கல்லறை எல்லாம் எங்கே போயிடுத்து?”
“செத்தப்பறம், அவங்களோட வயசானவங்களை எரிச்சுடறாங்கன்னு தோணுது.”
”அப்ப எரிச்ச சாம்பலை வைக்கிற இடமெல்லாம் எங்கே?”
“சாம்பலை எல்லாம் தூக்கிப் போட்டுடறாங்களோ இல்லை உடம்பையே வாயுவா மாத்திடறாங்களோ என்னவோ. முன்னொர்களை அவங்க ஒண்ணும் மதிக்கிறதில்லியோ?”
“மத்த சான்றுகளெல்லாம் பார்த்தா, இவங்க முன்னோர்களுக்கு ரொம்ப அதிகமான மரியாதை கொடுக்கறாங்கன்னுதான் காட்டுது.”
“நீ போய்க் கண்டு பிடிச்சுகிட்டு வா, சேரன். நீதானெ ஸ்பெஷல் ஆஸ்பெக்ட்ஸ் ஆளு.”
சேரன் தன்னைப் போல, மறுபக்கம் ப்ரோயவிடோய் மக்களுக்குப் பணி புரியும் மொழிபெயர்ப்பாளரான நோகோமாவிடம் பேசினான். இருவரும் நிபுணர்கள், அதனால் பேசும்போது பாதி தூரமாவது முன்னேறி, மற்றவரைப் புரிந்து கொள்ள முடிகிறவர்கள். நோகோமா அனேகமாக பெண்ணாக இருக்க வேண்டும். ப்ரோயவிடோய்களில் இரு பாலாருக்குமே ஒரு விதமான மென்மைக் குணம் இருந்தது, ஆனால் இந்த வேட்டைப் பயணத்தில் வந்த குழுவினர் தமக்கு அம்மக்களைச் சரியாகப் பிரித்து அடையாளம் காண முடிந்தது என்று நம்பினார்கள்.
“நான் உங்க கிட்டே நேரடியாச் சில கேள்விகள் கேட்டால் பரவாயில்லையா?” சேரன் அவரை வரவேற்கும்போதே கேட்டான்.
“அதனாலென்ன. வேறெப்படி நமக்கு நல்லபடியாப் பேச வரும், நாம் பேசினாத்தானே முடியும்?”
“ப்ரோயவிடோய்கள்லெ சில பேர் நாங்க சாகறதே இல்லைன்னு சொல்றாங்க, நோகோமா. அது உண்மையா?”
“எப்படி போகும் உண்மையில்லைன்னு? செத்தாங்கன்னா, இங்க நாங்க சாகல்லைன்னு சொல்ல இருக்க மாட்டாங்க அவங்க. ஓ, ஜோக் அடிக்கறேன், நான் ஜோக் ஆகச் சொன்னேன். நாங்க சாகறதில்லை, இல்லை. அது அன்னியர்களோட முட்டாள் பழக்கம், நாங்க அதை காப்பி அடிக்கக் காரணமே இல்லை. ப்ரோயவிடஸ்ல வெறும் பிராணிகள்தான் சாகும்.”
“நீங்க யாரும் சாகறதில்லியா?”
“இல்லையே, ஏன்? எதுக்கு யாரோ ஒர்த்தர் மட்டும் இதுல போய் வேற மாதிரி இருக்கணும்?”
“ஆனா, ரொம்ப வயசான பிறகு நீங்க என்ன செய்வீங்க?”
“அப்ப வேலை செய்யறத்தைக் குறைச்சுகிட்டே போவோம். சக்தி குறைஞ்சு போயிடற நிலைமை வரும். உங்களுக்கு அப்படி ஆகாதா?”
“அதேதான் நடக்கும். ரொம்ப அதிகமா வயசானப்புறம் எங்கே போவீங்க?”
“எங்கேயும் இல்லை. அப்போ வீட்டோட இருப்போம். வெளியில அலையறதெல்லாம் இளம் வயசுக்காரங்களுக்கும், உடல் வலு உள்ளவங்களுக்கும்தான்.”
“இப்போ இன்னொரு முனையிலேருந்து பார்க்கலாம்,” சேரன் சொன்னான். “உங்களோட அப்பாவும், அம்மாவும் எங்கே நோகோமா?”
“வெளியிலேதான் சுத்திகிட்டிருக்காங்க. அவங்களுக்கு அப்படி எல்லாம் வயசாயிடல்லை.”
“உங்களோட தாத்தாக்களும், பாட்டிங்களும்?”
“அவங்கள்லெ சில பேர் வெளியிலெ எல்லாம் போவாங்க. வயசானவங்க வீட்டோட இருக்காங்க.”
“இந்த வழியிலெ பேசிப் பார்ப்போம். உங்களுக்கு எத்தனை பாட்டிங்க இருக்காங்க, நோகோமா?”
“என்னோட வீட்டில எனக்கு தொள்ளாயிரம் பாட்டிங்க இருக்காங்கன்னு நினைக்கிறேன். ஓ, அது ஒண்ணும் பெரிய எண்ணிக்கை இல்லைன்னு எனக்குத் தெரியும், ஆனா நாங்க ஒரு குடும்பத்தோட இளம் கிளைதான். எங்க சொந்தக்காரங்கள்லே சிலர் வீடுகள்லே ரொம்ப நிறைய எண்ணிக்கைல முன்னோர்கள்லாம் இருக்காங்க.”
“இந்த மூத்தவங்க எல்லாம் உசிரோட இருக்காங்களா?”
“வேற எப்படி இருப்பாங்க? உசிரோட இல்லாத பொருட்களை எதுக்கு வச்சிருக்கணும்? அதெல்லாம் எப்படி முன்னோர்களா இருக்க முடியும்?”
சேரனுக்கு உற்சாகம் கூடிப்போய், தாங்க முடியாமல் குதிக்க ஆரம்பித்தான்.
“அவங்களை நான் பார்க்க முடியுமா?” அவன் படபடத்தான்.
“ரொம்ப மூத்தவங்களைப் பார்க்கறது உங்களுக்கு நல்லபடியா இருக்காது,” நோகோமா எச்சரித்தாள். “வெளியாட்களுக்கு அது ரொம்ப கலக்கத்தைக் கொடுக்கலாம். சில பத்துப் பேர்களை வேணும்னா நீங்க பார்க்கலாம்.”
அப்போது சேரனுக்கு, தான் வாழ்நாள் பூராவும் தேடிக் கொண்டிருந்தது இதுவாகத்தான் இருக்கலாம் என்று உறைத்தது. எதிர்பார்ப்பு எழுப்பிய அச்சத்தில் அவன் ஆழ்ந்தான்.
“நோகோமா, இதில்தான் மர்மத்துக்கு விடை இருக்கிறது!” அவன் கீச்சிட்டான். “நீங்கள் யாரும் செத்ததே இல்லை என்றால், அப்போது உங்களுடைய மொத்த இனமும் உயிரோடு இருக்க வேண்டும்!”
“நிச்சயமா அப்படித்தான். பழங்களை எல்லாம் எண்ணறாப் போலத்தான். நீங்க எதையும் எடுத்துக் கொடுக்கல்லைன்னா, உங்க கிட்டே எல்லாப் பழங்களும்தான் இருக்கும்.”
”உங்கள்லே முத முதல் ஆளு உயிரோட இருக்காருன்னா, அவருக்கு உங்களோட வேர் தெரிஞ்சிருக்கும்! எல்லாம் எப்படி ஆரம்பிச்சதுன்னு தெரிஞ்சிருக்கும்! அவங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா?”
“ஓ எனக்குத் தெரியாது. அந்தச் சடங்குக்கெல்லாம் போகிற அளவுக்கு எனக்கு வயசாகல்லை. எனக்கு ரொம்பவே இளம் வயசு.”
“ஆனா யாருக்குத் தெரியும்? யாருக்காவது தெரியாதா?”
“ஓ, அது சரிதான், எல்லா வயசாளிங்களுக்கும் அதெல்லாம் எப்படி ஆரம்பிச்சதுன்னு தெரியும்.”
“எவ்வளவு வயசானவங்க? எத்தனை தலைமுறை தாண்டிப் பின்னாடி போகணும், அப்படித் தெரிஞ்சுக்கறத்துக்கு?”
“பத்துதான், அதுக்கு மேலே இல்லை. எனக்குப் பத்துத் தலைமுறைக் குழந்தைகள் இருந்தாக்க, அப்போ நானும் அந்தச் சடங்குக்குப் போவேன்.”
“சடங்கா! அது என்னது?”
“வருஷத்துக்கு ஒரு தடவை, வயசானவங்க ரொம்ப வயசானவங்களைப் பார்க்கப் போவாங்க. அவங்களை எழுப்புவாங்க, எல்லாம் எப்படி ஆரம்பிச்சதுன்னு கேட்பாங்க. ரொம்ப வயசானவங்க ஆரம்பம் எப்படின்னு சொல்லுவாங்க. அது ரொம்ப முக்கியமான கட்டம். ஓ, அவங்க எப்படிக் கொண்டாடுவாங்க, சிரிப்பாங்க! பிறகு ரொம்ப வயசானவங்க தூங்கப் போவாங்க, இன்னும் ஒரு வருஷம் தூங்குவாங்க. இப்படித்தான் தலைமுறை தலைமுறையா இது கைமாத்திக் கொடுக்கப்படறது. அதுதான் அந்தச் சடங்கு!”
ப்ரோயவிடோய் மக்கள் மனித உரு கொண்டிருக்கவில்லை. அதையும் விட, அவர்கள் கொஞ்சமும் ’வானர முகமும்’ கொண்டிருக்கவில்லை, ஆனால் அந்த வர்ணனை இப்போது அண்டவெளியில் புதிய விஷயங்களைத் தேடிப் போவோர் நடுவே குடி கொண்டு விட்டிருக்கிறது. அந்த ஜீவராசிகள் நெடுக்கையில் நின்றார்கள், முழு உடை பூண்டு, பூராவும் போர்த்தியிருந்தார்கள், அவர்களுடைய ஆடைகளின் கீழே அவர்கள் இரு கால் ஜீவன்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், மேன்ப்ரேக்கர் சொன்னது போல, “ஒருவேளை அவங்க சக்கரங்களாலதான் நகர்ந்தாங்களோ என்னவோ, நமக்கென்ன தெரியும்.”
அவர்களுடைய கைகள் குறிப்பிடத்தக்க விதத்தில் நெகிழ்வும், அலைப்பும் கொண்டிருந்தன, எல்லாவிதமாகவும் இயங்கக் கூடிய விரல்களைக் கொண்டவை போலத் தெரிந்தன. அவர்கள் கருவிகளைக் கையாள முடிந்தவர்கள், அல்லது கைகளையே நுட்பமான கருவிகள் போலப் பயன்படுத்தக் கூடியவர்கள்.
ஜ்யார்ஜ் ப்ளட்டின் கருத்தில் ப்ரோயவிடோய் மக்கள் எப்போதும் முகமூடி அணிந்தவர்கள், லாபத் தேட்டத்திற்காக வந்திருந்த குழுவினர் அவர்களின் நிஜ முகத்தைப் பார்த்ததே இல்லை. நேராகத் தெரிகிற முகங்கள் சடங்குக்காக அணிந்த முகமூடிகள் என்றும், ப்ரோயவிடோய்களின் உடல்களில் அவர்களின் கைகளைத் தவிர வேறு எந்தப் பாகத்தையும் தாம் பார்த்ததில்லை, ஒருக்கால் அந்தக் கைகள்தான் அவர்களின் நிஜ முகங்களோ என்னவோ என்று அவன் சொன்னான்.
சேரன் தான் நிகழ்த்தவிருப்பது என்னவொரு அபாரமான கண்டுபிடிப்பு என்று விளக்க முயன்றபோது, அந்தக் குழுவினர் ஏளனமான நகைப்போடு அதை எதிர் கொண்டனர்.
“சின்னப்பய சேரன் இன்னமும் எல்லாம்-எப்படி-ஆரம்பிச்சதுன்னு பார்க்கிறதையெ பிடிச்சுத் தொங்கறான்போல,” மேன்ப்ரேக்கர் ஏளனம் செய்தான். “சேரன், கோழிக்குஞ்சா முட்டையா எது முதல்லெ வந்ததுன்னு கேட்கற வேலையை நீ விடப் போறதில்லைதானே?”
“அதுக்கு விடை ரொம்ப சீக்கிரமே எனக்குக் கிடைக்கப் போகுறது,” சேரன் பாடினான். “எனக்கு அபூர்வமான வாய்ப்பு கிடைச்சிருக்கு. ப்ரோயவிடோய்கள் எப்படி ஆரம்பிச்சாங்கன்னு நான் கண்டு பிடிச்சா, எல்லாம் எப்படி ஆரம்பிக்குதுன்னு தெரிஞ்சுக்க ஒரு துப்புக் கிடைக்கும். முத முதத் தலைமுறைலேர்ந்து எல்லா ப்ரோயவிடோய்களும் இன்னும் உசிரோட இருக்காங்க.”
“நீ இத்தனை ஏமாளியா இருப்பேங்கறதை நம்பவே முடியல்லை,” மேன்ப்ரேக்கர் முனகினான். “முட்டாள்களைப் பொறுமையா சகிச்சுக்க முடிஞ்சவன் வயசானப்புறம் தணிஞ்சு போயிருக்கிறவன்னு சொல்றாங்க. கடவுள் அருளால, நான் அப்படி ஒரு நிலைமைக்கு வர மாட்டேன்னு நம்பறேன்.”
ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு மேன்ப்ரேக்கர் இதே விஷயத்தைப் பற்றிப் பேச சேரன் ஸ்வைஸ்குட்டைத் தேடி வந்தான். மேன்ப்ரேக்கரும், தானே இதையெல்லாம் பற்றிக் கொஞ்சம் யோசித்ததோடு, அவனாகவும் ஏதோ தேடிக் கண்டுபிடித்திருந்தான்.
“நீ ஒரு ஸ்பெஷல் ஆஸ்பெக்ட்ஸ் ஆளு, சேரன்,” என்றான் அவன், “ஆனா நீ ஏதோ ஒரு தப்பான ஆஸ்பெக்டுக்குப் பின்னாலே ஓடிக்கிட்டிருக்கே.”
“என்னது அது?”
“எல்லாம் எப்படி ஆரம்பிச்சதுங்கறது ஒரு எழவுக்கும் பிரயோசனப்படாது. இதெல்லாம் முடிவே இல்லாம இருக்கலாங்கறதுதான் அதை விட நிசம்மா முக்கியமானது.”
“ஆரம்பம் எப்படின்னுதான் நான் கண்டு பிடிக்கப் போறேன்,” என்றான் சேரன்.
“முட்டாளே, எதுவுமே புரிஞ்சுக்க மாட்டியா நீ? ப்ரோயவிடோய்ங்கள்ட்டே அபூர்வமா எது இருக்கோ, அது அவங்களுக்கு எப்படிக் கிடைச்சுது, விஞ்ஞானத்தாலெயா, குருட்டு அதிர்ஷ்டத்தாலெயா, அதுதானே நமக்குத் தெரியாம இருக்கு?”
“ஓ, அவங்களோட விஞ்ஞானத்தாலதான்னு நான் நெனைக்கிறேன்.”
“நிச்சயமா. சேதன ரசாயனம் இங்கே முதிர்ச்சி அடைஞ்சிருக்கணும். ப்ரோயவிடோய்ங்க கிட்டே எல்லா விதமான தொடர்பிகளும், தணிப்பான்களும், கிரியா ஊக்கிகளும் இருக்கு. அவங்களாலெ வளர்க்கவும், சுருக்கவும், நீட்டவும், நீண்ட நாள் தாக்குப் பிடிக்க வைக்கறதும் சாதிக்க முடியறது. இந்த ஜீவன்கள் முட்டாள்கள்னுதான் எனக்குத் தோணுது; இதெல்லாம் இவங்களுக்கு உள்ளுணர்வாலெயே கிடைச்சிருக்குங்கற மாதிரி இருக்கு. ஆனா இவங்க கிட்டெ இதெல்லாம் இருக்கு, அதுதான் நமக்கு முக்கியம். இதையெல்லாம் வச்சுகிட்டு, நாம பிரபஞ்சம் பூரா காப்புரிமையுள்ள மருந்துகளுக்கு ராஜாக்களாயிடலாம். ப்ரோயவிடோய்ங்க எப்படியும் பயணம் போறதில்லே, வெளியுலகுல அதிகம் தொடர்பும் இவங்களுக்கு இல்லே. இந்த சங்கதியெல்லாம் எதை வேணா செய்ய முடியும் இல்லே அழிக்க முடியும். ப்ரோயவிடோய்களால உயிரணுக்களைச் சுருக்க முடியும்னு நான் சந்தேகப்படறேன், வேறெதை எல்லாமோ கூடச் செய்ய முடியும்னும் நினைக்கிறேன்.”
“கிடையாது. அவங்களாலெ உயிரணுவை எல்லாம் சுருக்க முடியாது. இப்ப நீங்கதான் அர்த்தமில்லாம பேசறீங்க, மேன்ப்ரேக்கர்.”
“அதை விடு. அவங்களோட பொருட்களெல்லாம் ஏற்கனவே நமக்குத் தெரிஞ்ச ரசாயனத்தை எல்லாம் அர்த்தமே இல்லாம ஆக்கிட்டுதுங்க. இங்கே நாம எடுத்துக்கிடற மருந்துப் பொருளை எல்லாம் வச்சுகிட்டா மனுசன் எவனும் சாகவே வேண்டாம். அந்தக் குச்சியத்தான் நீ குதிரையா ஓட்டிக்கிட்டிருக்கே, இல்லையா? ஆனா நீ அதைக்கூட பின்னாலே பார்த்துகிட்டு ஓட்டறே, உன் முகம் வால் பக்கம் பார்த்துகிட்டிருக்கு. ப்ரோயவிடோய் தாங்க சாகறதே இல்லைன்னு சொல்றாங்க.”
“தாங்க சாகறதில்லேன்னு அவங்க திட்டவட்டமாச் சொல்றாங்க. அப்படிச் செத்தா, நோகோமா சொல்றாப்ல, அவங்களுக்குத்தான் முத முதல்லெ தெரியும்.”
“என்னது? இந்தப் பிராணிங்களுக்கு நகைச்சுவையும் இருக்கா?”
“கொஞ்சம்.”
“ஆனாப் பாரு சேரன், இது எத்தனை பெரிய விஷயம்னு உனக்கு இன்னும் புரியல்லெ.”
“என் ஒர்த்தனுக்குத்தான் இதைப் பத்தி இத்தனை தூரம் தெரிஞ்சிருக்கு. அவங்க சொல்ற மாதிரி, ப்ரோயவிடோய் எப்பவுமே சிரஞ்சீவியா இருந்திருக்காங்கன்னா, அவங்கள்லெ எல்லாரையும் விட வயசானவங்க எல்லாம் இன்னும் உசிரோட இருக்காங்க. அவங்க கிட்டேயிருந்து அவங்களோட ஜீவராசி- ஏன் எல்லா ஜீவராசியுமே- எப்படி ஆரம்பிச்சுதுன்னு தெரிஞ்சுக்க முடியும்.”
மேன்ப்ரேக்கர் அப்போது செத்துப்போய்க் கொண்டிருக்கிற எருமை மாடு போல நடிக்க ஆரம்பித்தான். தன் தலை முடியை வேரோடு பிய்த்தான், காதுகளைக் கிட்டத்தட்ட கிழித்துப் போட்டு விட்டான். தன் கால்களைத் தரையில் உதைத்து, காளை மாடு மாதிரி பெருங்குரலில் எக்காளமிட்டான். “அது ஒரு எழவுக்கும் பிரயோசனமில்லை, எப்படி ஆரம்பிச்சதுங்கறது, மடப்பயலே! இதுக்கு முடிவு இல்லைங்கறதைத்தான் பார்க்கணும்.” அவன் பெருங்குரலில் கத்தியது மலைகளிலிருந்து எதிரொலித்தது.
“அது ஒரு எழவுக்கும்….- மடப்பயலே!”
சேரன் ஸ்வைஸ்குட் நோகோமாவின் வீட்டுக்குப் போனான், ஆனால் அவளுடைய அழைப்பில்லாமலே போனான். அவள் வீட்டில் இல்லை என்பது தெரிந்துதான், அவள் தன் கூட இல்லாமல் அங்கே போனான். அப்படிப் போவது திருட்டுத்தனம்தான், ஆனால் அந்த தேட்டைப் பயணத்து ஆட்கள் திருட்டுத்தனத்தில் பயிற்சி பெற்றவர்கள்.
வழிகாட்டுபவர் இல்லாமல் தொள்ளாயிரம் பாட்டிகளைப் பற்றியும், உயிரோடு இருக்கிற பொம்மைகள் பற்றியும், அவன் கண்டு பிடித்தாக வேண்டும். சாகாமல் இருக்கிறார்கள் என்றால் வயசாளிகள் என்ன செய்வார்கள் என்று அவன் கண்டு பிடிக்கப் போகிறான், தாம் முதல் முதலில் பிறந்தவர்கள் என்பதை யாராவது அறிந்திருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ளப் போகிறான். ப்ரோயவிடோய்கள் இயல்பாக மரியாதையாயோடு நடத்துகிறவர்கள், தன் அத்து மீறலை அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்பது அவன் எதிர்பார்ப்பு.
எல்லாரிலும், நோகோமாவின் வீடுதான், ப்ரோயவிடஸின் தலைநகரில், மேலே தட்டையாக இருந்த பெரியதொரு குன்றத்தின் மேலிருந்த வீடுகள் நடுவே இருந்தது. நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்த போதும், அவை எல்லாம் மண் வீடுகள், மலையிலிருந்து தாமாகவே வளர்ந்தவை போலவும், மலையின் ஒரு பாகம் என்பதாகவும் தோற்றமளித்தன.
சேரன் தட்டையான கற்களால் அமைக்கப்பட்டு, வளைந்து வளைந்து உயர்ந்து போகும் பாதைகள் வழியே மேலே ஏறினான். நோகோமா முன்பு ஒரு முறை சுட்டியிருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்தான். கள்ளத்தனமாக நுழைந்தான், தொள்ளாயிரம் பாட்டிகளில் ஒருவரை உடனே எதிர்கொண்டான் – தன்முன் யாருக்கும் கள்ளத்தனம் தேவையில்லை என்பது போல அவர் இருந்தார்.
உருவில் சிறியவரான, அந்தப் பாட்டி அவனைப் பார்த்துச் சிரித்தபடி அமர்ந்திருந்தார். சேரனுக்கு அவருடன் உரையாடுவது,அவனுடைய மொழியில் பாதி தூரம் வந்து உரையாடக் கூடிய நோகோமாவிடம் பேசுவது போல அத்தனை சுலபமாக இல்லை, ஆனால் அவர்கள் தங்குதடையில்லாமல் உரையாடினார்கள். அவருடைய அழைப்பின் பேரில், அங்கு ஒரு பாட்டனார் வந்தார், அவரும் சேரனைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார். வெளியில் வேலைகளில் இயங்கும் இதர ப்ரோயவிடோய்கள் போல இல்லாமல், இவர்கள் உருவில் ஓரளவு சிறியவர்களாகத் தெரிந்தார்கள். அன்பாகவும், அமைதியாகவும் இருந்தார்கள். அந்த நிகழ்வில் இருந்த சூழல், அங்கு ஏதோ சற்றே தவிர்க்கப்பட்ட ஒரு வாடை போலத் தெரிந்தது – துன்பம் தருவதாக இல்லை, தூக்கம் வரவழைப்பதைப் போல, எதையோ நினைவூட்டுவதைப் போல, கிட்டத்தட்ட துக்கமாகவும் இருப்பதைப் போலப் பட்டது.
“உங்களை விட வயதானவர்கள் இங்கே இருக்கிறார்களா?” சிரத்தை மிகுந்து தெரிய, சேரன் கேட்டான்.
“எத்தனை, எத்தனையோ பேர்கள்! எத்தனை பேர்களென்று யாருக்குத் தெரியும்?” என்றார் அந்தப் பாட்டி. தன்னை விட முதியோர்களாகவும், உருவில் சிறியவர்களாகவும் இருந்த பாட்டி, தாத்தாக்களை அவர் அழைத்தார். ஓடியாடி இயங்கும் ப்ரோயவிடோய்களின் உருவில் பாதி அளவுதான் இவர்கள் இருந்தனர்- சிறு உருவாக, சிரிப்போடு, தூங்கி வழிந்தபடி இருந்தார்கள்.
இப்போது சேரனுக்கு உறுதியாயிற்று, ப்ரோயவிடோய்கள் முகமூடி ஏதும் அணியவில்லை. வயது கூடக் கூட, குணநலன்களும், ஈடுபாடும் அவர்கள் முகங்களில் அதிகத் தெளிவோடு தெரிந்தன. முதிர்ச்சி அடையாத, உலகில் ஓடியாடி இயங்கும் ப்ரோயவிடோய்களைப் பொருத்துத்தான் ஏதும் ஐயம் இருக்கலாம். இத்தனை அமைதியை, சிரிப்பை எந்த முகமூடியாலும் காட்டி இருக்க முடியாது. வினோதமான நெய்வுடன் தெரிந்தவைதான் அவர்களின் நிஜ முகங்கள்.
அங்கு ஒரு டஜன் தலைமுறையினராவது இருந்திருப்பார்கள், இருப்பதில் மிக வயதானவர்களை, சிறியவர்களைப் பார்த்தால். அவ்வளவு முதுமை, நேசம், அத்தனை மெலிவு, தூக்கக் கலக்கம்.
முதல் பாட்டியிடம் சேரன் கேட்டான், “ரொம்ப வயசானவங்களுக்கு எத்தனை வயசிருக்கும்?”
“எல்லாரும் எப்போதும் இருக்கிறார்கள் என்பதால், எல்லாருக்கும் ஒரே வயசுதான்னு நாங்க சொல்வோம்,” பாட்டி அவனிடம் சொன்னார். “எல்லாரும் ஒரே வயசுங்கறது உண்மை இல்லைதான், ஆனால் எத்தனை வயசுன்னு கேட்கறது நாசுக்கு இல்லை.”
“உங்களுக்கு கடல் இறால்ங்கறது என்னன்னு தெரியாது,” நடுங்கியபடி சொன்னான் சேரன், “ஆனாப் பாருங்க, அந்தப் பிராணியைத் தண்ணியில கொதிக்க வச்சா கலங்காம இருக்கும், மெள்ளமாக் கொதிக்க வைக்கணும், அவ்வளவுதான். அது அதிர்ச்சியடையாமக் கிடக்கும், ஏன்னா எந்தக் கட்டத்துல அந்த உஷ்ணம் அபாயகரமாகும்னு அதுக்குத் தெரியாது. எனக்கு இங்கே அத்தனை நிதானமா ஏதோ நடக்கிறது. நான் ஒவ்வொரு படியா நகரறேன், என்னோட நம்பிக்கையுணர்வு கலங்காம இருக்கு. உங்களைப் பத்தி எந்தத் தகவல் கிட்டினாலும் அது கொஞ்சம் கொஞ்சமா என் கிட்டே வந்தா, நான் அது எல்லாத்தையும் நம்பற அபாயத்துல இருக்கேன். அப்படித்தான் எனக்குத் தகவலும் கிட்டப் போகிறது. நீங்க இங்கே இருக்கீங்க, நீங்க சொல்ற மாதிரியேதான் இருக்கீங்கன்னு நான் நம்பறேன், அதுக்குக் காரணம் நான் உங்களைப் பார்க்கறதும், உங்களைத் தொடறதும்தான். அந்த இறால் மாதிரி நானும் வெந்து போயிடுவேன், இங்கேருந்து நான் திரும்பிப் போகிறத்துக்கு முன்னாடி. இங்கே இருக்கிறவங்களை விடவும் மூத்தவங்க இந்த வீட்டிலேயே இருக்காங்களா?”
முதல் பாட்டி சேரனைத் தன் பின்னாலே வரும்படி சைகை செய்தார். ஒரு சரிவான பாதை வழியே அந்த வீட்டினுள் கீழ்ப் புறம் அவர்கள் சென்றார்கள். அது வீட்டில் மேலும் பழைய பகுதிகளுக்குள் சென்றது, அது தரையடியாக இருக்க வேண்டும்.
வாழும் பொம்மைகள்! அவை இங்கே அடுக்கடுக்காக அலமாரிகளில் இருந்தன, அவற்றுக்கான சிறு தடுப்பறைகளில் நாற்காலிகளில் அமர்ந்திருந்தன. பொம்மை அளவுதான் நிஜமாக, பல நூற்றுக் கணக்கில் இருந்தன.
இந்தத் தலையீட்டால் பலர் விழித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் தொட்டாலோ, அல்லது அவர்களிடம் பேசினாலோதான் விழித்தார்கள். பார்த்தால் தெரிந்தது அவர்கள் நம்ப முடியாதபடி பழைய காலத்து ஜீவர்கள், ஆனால் அவர்களின் பார்வையாலும், புரிந்து கொள்ளும் திறனாலும் உயிருடன் உள்ளவர்கள் என்பது தெளிவாயிற்று. அவர்கள் சிரித்தபடி நெட்டி முறித்தார்கள், மனிதர்களைப் போல இல்லை, ஆனால் வயதான நாய்க் குட்டிகளைப் போல. சேரன் அவர்களோடுபேசினான், வியப்பு தரும் விதமாக இரு தரப்பும் பரஸ்பரம் நன்கு புரிந்து கொண்டார்கள்.
கடல் இறால், கடல் இறால் சேரன் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான், தண்ணீரின் சூடு ஏற்கனவே அபாய நிலையைத் தாண்டி விட்டது. ஆனால் இன்னமும் எந்த வித்தியாசமும் உறைக்கவில்லை. உன் உணர்வுகளை இதற்கு நம்பினால், பிறகு உன் நம்பும் குணத்தால் நீ உயிரோடு வேக வைக்கப்பட்டு விடுவாய்.
உயிருள்ள பொம்மைகள் நிஜம் என்றும், அவை ப்ரோயவிடோய்களின் மூதாதையர்கள்தான் என்பதையும் அவன் இப்போது தெரிந்து கொண்டிருந்தான்.
அந்தச் சிறு ஜீவர்களில் பலர் இப்போது தூங்கத் தொடங்கி விட்டிருந்தனர். அவர்களின் விழிப்பு நேரம் சுருக்கமானது, ஆனால் அவர்களின் உறக்கமும் அப்படியேதான் இருந்தது. சேரன் அந்த அறையில் இருக்கும்போதே அந்த ஜீவர்களில் பலர் மறுமுறை விழித்தார்கள், குறுகிய நேரத் தூக்கத்தால் புத்துணர்ச்சி பெற்றவர்களாகத் தெரிந்தார்கள், மறுபடி பேசுவதற்கு விருப்பத்தோடு இருந்தார்கள்.
“நீங்க எல்லாம் நம்ப முடியாதபடி அற்புதமா இருக்கீங்க!” கிளர்ச்சியோடு குரலெழுப்பினான் சேரன், எல்லா சிறிய, மிகச் சிறிய, மேலும் சிறிய ஜீவர்கள் எல்லாம் புன்னகைத்தும், சிரித்தும் தங்கள் ஆமோதிப்பை வெளியிட்டனர். பிறகென்ன சொல்லி அவர்களை வருணிக்க முடியும். நல்ல ஜீவர்கள் எங்கே இருந்தாலும் அவர்கள் அற்புதங்கள்தாம், அதுவும் அவர்கள் எல்லாரும் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும்போது வேறெப்படி வர்ணிக்க? ஆனால் சேரனுக்குப் பேராசை. ஓரறை முழுதும் நிரம்பிய அற்புதங்கள் அவனுக்குப் போதவில்லை.
“இதை எத்தனை பின்னால் போக முடியுமோ அத்தனை தூரம் போய் நான் பார்க்க வேண்டும்!” ஆர்வம் பொங்கக் கத்தினான். “இன்னும் மூத்தோர்கள் எங்கே இருக்கிறார்கள்?”
“இங்கே மூத்தவர்கள் உண்டு, மேலும் இன்னும் மூத்தவர்கள், அவர்களை விட மூத்தோர் உண்டு,” என்றார் முதல் பாட்டி, “மேலும் மும்மடங்கு மூத்தோர்களும் உண்டு, ஆனால் ரொம்ப அதிகமாக ஞானத்தைத் தேடுவது அத்தனை புத்திசாலித்தனம் இல்லை. நீங்க போதுமான அளவு பார்த்துட்டீங்களே. வயசானவர்களுக்குத் தூக்கமா இருக்கும். நாம இப்போ மேலே போகலாம்.”
மேலே போகிறதா, இதை விட்டு விட்டா? சேரன் ஒத்துக் கொள்வானா? அவன் வழிகளும், கீழே இறங்குகிற சரிவுப் பாதைகளும், அந்தக் குன்றின் மையத்தை நோக்கிப் போகின்றன என்று கவனித்தான். அவனுக்குக் கீழே, அவன் பாதங்களின் அடியே மொத்த உலகங்களே அறைகளில் நிரம்பி இருந்தன. சேரன் கீழே கீழே என்று போய்க் கொண்டே இருந்தான். யார் அவனைத் தடுத்திருக்க முடியும்? பொம்மைகளாலும், பொம்மைகளை விடவும் மிகச் சிறிய ஜீவர்களாலும் தடுத்திருக்க முடியாது.
மேன்ப்ரேக்கர் தான் தன்னுடைய செல்வங்களின் ஓடையில் திளைக்கும் ஒரு பழைய கொள்ளைக்காரன் என்று அழைத்துக் கொண்டான். ஆனால் சேரன் ஒரு இளம் ரசவாதி, அவன் ஜீவரசக் கல்லையே கண்டு பிடிக்கப் போகிறவன்.
அவன் சரிவுப் பாதைகளில் நடந்து நூறாண்டுகளை, ஆயிரமாயிர ஆண்டுகளைக் கடந்தபடி சென்றான். மேல் தளத்தில் அவன் கவனித்திருந்த சூழல் இப்போது தெளிவாகவே ஒரு வாடையாகப் பரவியிருந்தது- தூக்கமாக, அரை நினைவுகளை எழுப்புவதாக, சிரிப்பும், சோகமும் கொண்டதாக, ஆனால் வலுவாக இருந்த வாடை. இப்படித்தான் காலம் சிரிக்கிறது.
தன் உள்ளங்கையில் ஏந்திய குறும் உருக் கொண்ட ஒரு பாட்டியிடம் சேரன் கேட்டான், “இங்கே இருக்கிறவங்க உங்களை விட மூத்தவங்களா?”
“அவ்வளவு வயசானவங்க, அத்தனை சின்னவங்க, அவங்களை என்னோட கையிலேயே ஏந்தி விட முடியும்,” என்றார் அந்தப் பாட்டி, அவர் பேசியது ப்ரோயவிடிய மொழியின் ஒருங்கிணைக்கப்படாத வடிவம் என்று நோகோமாவிடமிருந்து சேரன் தெரிந்து கொண்டிருந்தான்.
சேரன் அறைகளைக் கடந்து போய்க் கொண்டிருந்த போது, ஜீவர்கள் மேன்மேலும் சிறுத்து, மூத்தவர்களாக இருந்தனர். இப்போது அவன் முழுதும் வேக வைக்கப்பட்ட கடல் இறால் என்பது உறுதியாயிற்று. இதையெல்லாம் அவன் நம்பித்தான் ஆக வேண்டும்: அவன் அதையெல்லாம் பார்த்தான், உணர்ந்திருந்தான். சிறு குருவி அளவிருந்த ஒரு பாட்டி பேசினார், சிரித்தார், தலையசைத்தார், அங்கே அவரையும் விடப் பல மடங்கு வயசானவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னார், சொல்லும்போது தலையசைத்தபடியே உறங்கிப் போனார். சேரன் அவரை அந்தச் சுவரில் இருந்த சிறு பிறையில் திரும்ப வைத்தான், தேன் கூடு போல இருந்த அந்தச் சுவற்றில் பல்லாயிரம் பேர்கள் இருந்தனர், உருச் சிறுத்த தலைமுறையினர்.
அவன் இப்போது இருந்தது நிச்சயமாக நோகோமாவின் வீடு இல்லை. ப்ரோயவிடஸில் இருந்த எல்லா வீடுகளுக்கும் இதயமாக, அந்த வீடுகளுக்கெல்லாம் கீழே மையத்தில் இருந்த ஒரு குன்றுக்குள் இருந்தான், இவர்களெல்லாம் அந்த விண்கல்லில் இருந்த எல்லாருடைய மூதாதையர்கள்.
தன் விரல் நுனியில் ஏந்திய ஒரு சிறு பாட்டியிடம் சேரன் கேட்டான், “இங்கே இருப்பவர்கள் உங்களை விட மூத்தவர்களா?”
“மேலும் மூத்தவர்கள், மேலும் சிறிய வடிவினர்,” என்றார் அவர், “ஆனால் நீங்க இப்பொ முடிவுக்கு அருகில இருக்கீங்க.”
அவர் உறங்கிப் போனார், அவருடைய இடத்தில் சேரன் அவரைப் பொருத்தினான். அவர்களுடைய வயது கூடக் கூட, இன்னும் அதிகமாக அவர்கள் உறங்கினார்கள்.
அந்தச் சிறுமலையின் அடித்தளத்திலிருந்த உறுதியான பாறைக்கு அவன் வந்திருந்தான். அந்த உறுதியான பாறைக்குள் வெட்டப்பட்டிருந்த வழிகளுக்குள் போனான், ஆனால் அதற்கு மேலும், இன்னும் ஆழமாக அங்கு ஏதும் இருந்திருக்க முடியாது. அவனுக்குத் திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது. அந்த ஜீவர்கள் அவனால் பார்க்க முடியாத அளவுக்குச் சிறு உருவினராக ஆகி விடுவார்களோ, அவனால் அவர்களுடன் பேசக் கூட முடியாமல் போகுமோ? அப்படியானால் எல்லாவற்றின் துவக்கம் பற்றிய ரகசியத்தை அவன் அறிய முடியாமல் போகும் அல்லவா?
ஆனால் நோகோமா சொல்லவில்லையா, எல்லா வயசாளிகளுக்கும் இந்த ரகசியம் தெரியும் என்று? ஆமாம். ஆனால் இருப்பதில் மூத்தவரிடமிருந்து இந்த ரகசியத்தைக் கேட்க அவன் விரும்பினான். ஏதோ ஒரு வழியில், அவன் அதை அடைந்தே தீருவான்.
“யார் இருப்பதிலேயே மூத்தவர்? இதுதான் முடிவான இடமா? இதுதான் எல்லாவற்றுக்கும் ஆரம்பமா? விழிச்சுக்குங்க! விழிச்சுக்குங்க!” இருப்பதில் கீழ்த்தளம், மிகவும் பழைய அறை என்று அவனுக்கு நிச்சயமாக இருந்தபோது அவன் குரலெழுப்பினான்.
“இது சடங்கு நேரமா?” விழித்தெழுந்த ஒருவர் கேட்டார். மூஞ்சூறை விடச் சிறிய உருவினர், தேனீக்களை விடச் சிறியவர்கள், ஒருக்கால் அவற்றை விட முதியவர்கள்.
“இது விசேஷச் சடங்கு,” சேரன் அவர்களிடம் சொன்னான். “துவக்கம் எப்படி இருந்தது என்று எனக்குச் சொல்லுங்க.”
அது என்ன ஒலி- சத்தம் என்று கூடச் சொல்ல முடியாதபடி, மிகவும் மெல்லியதாக, மிகவும் பரவலானதாக இருந்தது. நூறு கோடி நுண்கிருமிகள் சிரிப்பது போலிருந்தது. கொண்டாட்டத்துக்கு விழித்தெழும் சிற்றுயிர்களின் குதூகலம்தான் அது.
“எல்லாரிலும் மூத்தவர் யார்?” சேரன் கேட்டான், அவர்களின் சிரிப்பு அவனுக்குத் தொந்தரவாக இருந்தது. “யார் இருப்பவர்களில் முதியவர், யார் முதல் நபர்?”
“நான் தான் மூத்தவள், கடைசிக் கடைசி பாட்டி,” ஒருவர் களிப்போடு சொன்னார். “மற்ற எல்லாரும் என் குழந்தைகள். நீயும் என் குழந்தைகளில் ஒருத்தனா?”
“அப்படித்தான்,” என்றான் சேரன், அந்தக் கூற்றில் நம்பிக்கையின்மை தெரிவிக்கும் சிரிப்புகளின் சிற்றொலி அங்கிருந்த ஏராளமானவர்களிடமிருந்து ஒலித்தது.
“அப்படியானால் நீதான் இறுதிக் குழந்தையாக இருக்கணும், ஏன்னா நீ யார் மாதிரியும் இல்லை. நீதான் இறுதின்னா முடிவும் துவக்கம் மாதிரியே ரொம்ப சிரிப்பா இருக்கும் போல.”
“ஆரம்பம் எப்படி இருந்தது?” சேரன் கெஞ்சினான். “நீங்கதான் முதல் முதல். நீங்க எப்படி வந்தீங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?”
“ஓ, ஆமா, ஆமா!,” உரக்கச் சிரித்தார் கடைசிப் பாட்டி, சிற்றுருக்களின் களிப்பு இப்போது நிஜமான சத்தமாக ஆயிற்று.
“அது எப்படி ஆரம்பிச்சுது?” எனக் கேட்டான் சேரன், தன் ஆர்வக்கோளாறால் எம்பிக் குதித்துக் கொண்டிருந்தான்.
“ஓ, எல்லாம் ஆரம்பமான விதம் அப்படி ஒரு அருமையான ஜோக், நீ அதை நம்பவே மாட்டே!” என்று கிளுகிளுத்தார் பாட்டி. “ஒரு ஜோக், ஒரு ஜோக்!”
“அப்ப அந்த ஜோக்கை எனக்கும் சொல்லுங்க. ஒரு ஜோக் தான் உங்களோட இனத்தையே உருவாக்கிச்சுன்னா, அந்த உலகமகா ஜோக்கை எனக்குச் சொல்லுங்க!”
”நீயே சொல்லு,” கிணுகிணுத்தார் அந்தப் பாட்டி. “நீ என்னோட குழந்தைகள்லெ ஒர்த்தன்னா, நீயும் அந்த ஜோக்குல ஒரு பங்குதான். ஓ, அது நம்பமுடியாத அளவுக்கு வேடிக்கையானது. முழிச்சுகிட்டு, சிரிச்சுட்டு மறுபடி தூங்கப் போறதுதான் எத்தனை நல்லா இருக்கு.”
பத்தி எரிய! இத்தனை நெருங்கி வந்தப்புறம் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிற தேனீ ஒண்ணாலெ எல்லாம் கெட்டுப் போகணுமா?
“மறுபடி தூங்கப் போயிடாதீங்க! எப்படி ஆரம்பிச்சுதுன்னு எனக்கு இப்பவே சொல்லுங்க!” சேரன் கூச்சலிட்டான், அவனுடைய கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் நடுவே அந்தப் பாட்டியைப் பிடித்திருந்தான்.
“இது சடங்கு இல்லை,” மறுப்பு தெரிவித்தார் பாட்டி. “சடங்காயிருந்தா மூணு நாளைக்கு நீ ஊகிக்கலாம், அந்த ஜோக் என்னதுன்னு. நாங்க சிரிச்சுட்டு சொல்லுவோம், ‘இல்லை, இல்லை, இல்லை, அது ஒம்பது மடங்கு இதை விட வேடிக்கையான ஒண்ணுன்னு சொல்வோம். இன்னும் ஊகிச்சுச் சொல்லு.”
“நான் மூணு நாள் யூகிக்க முடியாது! இப்பவே சொல்லுங்க, இல்லை உங்களை அப்படியே நசுக்கிப்புடுவேன்,” நடுங்கும் குரலில் சேரன் பயமுறுத்தினான்.
“நான் உன்னைப் பார்க்கிறேன், நீ என்னைப் பார்க்கிறே. நீ அதைச் செய்வியான்னு நான் யோசிக்கிறேன்,” கடைசிப் பாட்டி நிதானமாகச் சொன்னார்.
அந்த கொள்ளையடிப்புப் பயணத்தில் இருந்த மற்ற எவனுமே அதைச் செய்திருப்பான் – அவரை நசுக்கி இருப்பான், பிறகு இன்னொருவரை, வேறொருவரை, அடுத்தவரை என்று யாராவது சொல்லும் வரை அந்த ஜீவர்களை நாசம் செய்து கொண்டிருந்திருப்பான். சேரன் முரட்டு ஆள் மாதிரி ஒரு குணத்தையோ, முரட்டுப் பெயர் ஒன்றையோ எடுத்துக் கொண்டிருந்தால் அவனும் செய்திருப்பான். அவன் கட்பாய் பாரெல்ஹௌஸாக இருந்தால், கொஞ்சமும் தயக்கமின்றி அவன் அதைச் செய்திருப்பான். ஆனால் சேரன் ஸ்வைஸ்குட்டிற்கு அதைச் செய்ய முடியவில்லை.
”எனக்குச் சொல்லுங்க,” அவன் துடித்துக் கெஞ்சினான். “என் வாழ்நாள் பூராவும் இதெல்லாம் எப்படி ஆரம்பிச்சுதுன்னு தேடியிருக்கேன், எதுவுமே எப்படி ஆரம்பிச்சுதுன்னு தேடியிருக்கேன். உங்களுக்கோ தெரிஞ்சிருக்கு!”
“எங்களுக்குத் தெரியும். ஓ, எப்படி ஆரம்பிச்சுதுங்கறது எத்தனை வேடிக்கையானது. அப்படியான ஜோக்! அத்தனை கிறுக்குத்தனம், அத்தனை கோமாளித்தனம், அத்தனை விசித்திரமானது! யாராலுமே ஊகிக்க முடியாது, யாராலும் நம்ப முடியாதது.”
“எனக்குச் சொல்லுங்க! சொல்லிடுங்க!” சேரன் வெளுத்துப் போனான், மனப்பிராந்தி பீடித்தவன் போல ஆனான்.
“இல்லை இல்லை, நீ என்னோட வாரிசு இல்லை,” குலுங்கிச் சிரித்தார் அந்தப் பாட்டி. “அது ரொம்ப ஜோக், புது ஆள் ஒர்த்தர் கிட்டே சொல்லக் கூடிய ஜோக் இல்லை. ஒரு புது ஆள் கிட்டே இத்தனை வேடிக்கையா, இப்படி நம்பமுடியாதபடியான ஜோக்கைச் சொல்றது அவமதிக்கிறாப்ல ஆகும். புது ஆட்கள் செத்துக் கூடப் போயுடுவாங்க. ஒரு வெளியாள் சிரிச்சே செத்துப் போறதை நான் எப்படி என் மனச்சாட்சியில ஏத்துக்க முடியும்?”
“என்கிட்டே சொல்லுங்க! என்னை அவமானப்படுத்துங்க, பரவாயில்லை! என்னைச் சிரிச்சுக்கிட்டே சாக விடுங்க!” ஆனால் பத்து லட்சம் தேனீ அளவு ஜீவர்கள் சிரித்து, கூச்சலிட்டு, கெக்கலித்ததைப் பார்த்த ஏமாற்றம் அவனைத் தின்றது. சேரன் அப்படி வெறுத்துப் போய் அழுதே செத்துப் போகும் நிலைக்கு வந்திருந்தான்.
“ஓ, அது ஆரம்பிச்சதுதான் எத்தனை வேடிக்கையாக இருந்தது!”
அவர்கள் மேலும் சிரித்தனர். இன்னும் சிரித்தனர். சிரித்தபடியே இருந்தனர்…. கடைசியில் சேரன் ஸ்வைஸ்குட்டும் அழுது கொண்டே அவர்களோடு சேர்ந்து சிரித்தான், பிறகு தரையோடு ஊர்ந்து வெளியே போனான், இன்னும் சிரித்துக் கொண்டே விண் ஊர்திக்குத் திரும்பினான். அவனுடைய அடுத்த பயணத்தின்போது தன் பெயரை ப்ளேஸ் போல்ட் என்று மாற்றிக் கொண்டு, எம்-81 இல் ஒரு இனிமையான கடல் தீவில் தொண்ணூற்று ஏழு நாட்கள் அரசனாக ஆட்சி செய்தான். அதுவோ இன்னொரு, இதை விடவும் அதிகம் துன்பமான கதை.
***
i Special Aspects என்று லாஃபெர்ட்டி இந்த இரு சொற்களை capital letters உடன் கொடுக்கிறார். சமீபகாலத்தில் பல ‘தேடல்’ பயணங்களிலும் மானுடவியல் அல்லது அது போன்ற மனிதக் குழுக்களுடன் உறவுகள் பற்றிப் படித்த நபர்களை அழைத்துப் போவது அவசியம் என்று நிஜத்திலும், புனைவுகளிலும் உள்ள ஓர் எண்ணம். புனைவுகளில் இது ஒரு வகை மரபாகக் கூட ஆகியிருக்கிறது. இதை லாஃபெர்ட்டி இந்தக் கதையில் எழுதியபோது அது வருடம் 1966. எவ்வளவு தொலைநோக்கோடு எழுதியிருக்கிறார் என்று பார்த்தால் வியப்பு எழ வேண்டும். மேலும் விவரங்களுக்குப் பார்க்க: https://www.ralafferty.org/works/collections/nine-hundred-grandmothers/
இந்தத் தளத்தில் கதையின் மூலத்தைப் படிக்க வாய்ப்பு கிட்டுகிறது.
ஆன்டி டங்கனின் பின்னுரை
உர்சுலா லெ குவின், ப்ரையன் அட்டெபெரி மற்றும் காரென் ஜே ஃபௌலர் ஆகியோர் இணைந்து பதித்த ‘த நார்டன் புக் ஆஃப் சைன்ஸ் ஃபிக்ஷன் என்ற தொகுப்புப் புத்தகத்தில், ‘நைன் ஹண்ட்ரட் க்ராண்ட்மதர்ஸ்’ சிறுகதையை நான் முதல் முறை எதிர்கொண்டேன். அந்தத் தொகுப்பு என் புனைவெழுதும் வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. அது 1993 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் பிரசுரமானது, நான் அப்போது நார்த் காரலீனா ஸ்டேட் யூனிவர்ஸிடியில், படைப்பிலக்கியம் எழுதுவதைப் போதிக்கும் முதுநிலை வகுப்பில் முதல் வருடத்தில் இருந்தேன். உடனடியாக ஒரு பிரதியை வாங்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் ஜனவரி 1994 இல், நெபுலா பரிசு வாங்கிய ஜான் கெஸ்ஸெல்லிடம் ஒரு எழுத்துப் பட்டறை வகுப்பில் இருந்தேன். அவர் என் ஒரு கதையின் எழுத்துப் பிரதியை உற்றுப் பார்த்தார், பிறகு என்னை உற்றுக் கவனித்தார், பிரதியை மறுபடி உன்னிப்பாகப் பார்த்தார், பிறகு சொன்னார், “இந்த விஷயத்திற்கு ஒரு நீண்ட, வளமான வரலாறு இருக்கிறது. உனக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், நீயும் அதில் ஒரு பங்குதான்.”
அந்தக் கட்டத்திலிருந்து கெஸ்ஸெல் என் ஸென்ஸே i ஆக ஆனார், அவருடைய பரிந்துரையின்பால், நான் நார்டன் புத்தகத்தின் ஒரு பிரதியை உடனே வாங்கினேன் –அபாரங்கள் நிரம்பிய அந்தப் பெட்டி, துவக்கக் கட்டத்திலிருக்கும் ஒரு அறிவியல் புனைவு எழுத்தாளருக்குச் சொல்வது, “நீங்கள் எதையும் செய்யலாம், அது வினோதமாக இருக்கும் பட்சத்தில்.” க்ளாரியன் வெஸ்ட் எழுத்தாளர் பட்டறைக்கு அந்தக் கோடையில் நான் பறந்து போன போது, அதுவும் கெஸ்ஸெல்லின் பரிந்துரையால்தான், என் பெட்டியில் ஊக்கம் கொடுக்க இருந்த இரண்டு தடி அட்டைப் புத்தகங்களில் நார்டன் ஒன்று. (மற்றது ஃபாக்னரின் அப்ஸலாம், அப்ஸலாம்!, அதற்கு முன்னுரை எழுதும்படி நான் ஒருபோதும் கேட்கப்படப் போவதில்லை.)
அந்த நார்டன் தொகுப்பில் என்னிடம் நேரே உடனடியாகப் பேசிய கதைகளில், “நைன் ஹண்ட்ரட் க்ராண்ட்மதர்ஸ்” தான் இருப்பதில் உரக்கப் பேசியதாக இருக்கும். நார்டன் புத்தகத்துக்கு லெ குவின் எழுதிய ஒரு கட்டுரையில், அறிவியல் புனைவுகள் உருவகங்களை நிஜம் போலக் கையாள்வதை எப்படி ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று விவாதிக்கிறார். லாஃபெர்ட்டியின் இந்தக் கதை அப்படிச் செய்திருந்தது. தென் காரொலினாவின் கிராமப் புறத்தில் நான் வளரும்போது, அடித்தளமாகக் கொடுக்கப்பட்ட பல உருவகங்களில் ஒன்று, என் மூதாதையர்களின் நீண்ட சங்கிலித் தொடரில், வெகு காலம் முன்பிருந்தவர்கள், கால தூரம் அதிகமாக ஆக, உருவில் சிறியவர்களாகத் தெரிவார்கள் என்பது. அவர்களின் ரகசியங்கள் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டன, ஆனால் நான் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியைத் தடுமாறிக் கொண்டு கடக்கும்போது, அந்தத் தலைமுறைகளெல்லாம் பின்புலத்தில் அவ்வப்போது ஒலிக்கத் தொடங்குவார்கள். அவர்களின் ஒலிப்புகள் வசந்த காலத்துத் தவளைகளின் ஒலி போலத் தெரியும் ii; அவர்கள் சிரிக்கின்றனர் என்று எனக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. தவிர, என் மூதாதையரில் முக்கியமானவர்கள், குறிப்பாக பண்பாடு மற்றும் மொழியைக் கைமாற்றித் தருபவர்கள், பெண்கள் என்று தோன்றியது. லாஃபெர்ட்டியின் மறக்க முடியாத (ப்ரோயவிடஸ்iii கிரகத்தின்) “வாழும் பொம்மைகள்” ஃபாக்னரின் புகழ் பெற்ற வரி ஒன்றுக்கு நிகரான இருப்பைக் கொண்டவர்கள். அது அவருடைய ‘ரெக்வியெம் ஃபார் அ நன்’ என்ற நாவலின் வரி: “கடந்த காலம் எப்போதும் இறப்பதில்லை. அது கடந்ததாகக் கூட ஆவதில்லை.”
லாஃபெர்ட்டியின் கதையை இப்போது திரும்பப் படிக்கையில், ப்ரோயவிடோய் ஜீவர்களின் எதிர்காலத்தைப் பற்றி நான் யோசிக்கிறேன். கதையின் கடைசி இரண்டு வாக்கியங்களின் இடையே அவர்களுக்கு என்ன ஆகிறது? மேன்ப்ரேக்கர் க்ராக், தன் குழுவினர் ‘மொத்தப் பிரபஞ்சத்திலும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் அரசர்களாக’ ஆவதைக் கற்பனை செய்கிறான், ‘இங்கே நாம் கண்டு பிடிக்கக் கூடிய மருந்துப் பொருட்களை வைத்து ஒரு நபர் சாவே இல்லாமல் இருக்கலாம்,” என்கிறான். இந்த “மெல்லிய, எளிய மக்கள்,” மேன்ப்ரேக்கர் தான்ன் விரும்புகிற மாதிரி “அசேதன ரசாயனத்தை” அவர்களிடமிருந்து பிரித்து எடுத்தால், அதன் பிறகு பிழைத்திருப்பார்களா? லாஃபெர்ட்டி வாழ்நாள் பூராவும் ஓக்லஹோமா மாநிலத்தில் குடியிருந்தவர் என்பதை யோசியுங்கள் –மேன்ப்ரேக்கர் க்ராக் போன்ற எண்ணிறந்த நபர்களால், பழங்குடி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களால் ஆன மாநிலம் அது – தவிர, அவருடைய படைப்புகளில் பலவும் வட அமெரிக்காவின் பழங்குடி மக்கள் மீது சுமத்தப்பட்ட கொடுமையான வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பவை; அவற்றில் மொழிகளின் அழிப்பும் ஒன்று. அதுதான் அவருடைய சிறப்பான நாவலான, ஓக்லா ஹான்னா என்பதன் தவிர்க்க முடியாத மையக் கருவும் கூட.
ப்ரோயவிடோய்களுக்கு என்ன ஆயிற்று என்பது லாஃபெர்ட்டிக்கு துல்லியமாகவே தெரியும் என்று நான் நம்புகிறேன், ஆனால் நம்மை அதை அறிவதிலிருந்து, இறுதியில் அவர் காப்பாற்றுகிறார், நம் கவனத்தை, “அதுவோ இன்னொரு, இதை விடவும் அதிகம் துன்பமானதொரு கதை” என்று திருப்புகிறார். கடைசி பாட்டி சொல்லியிருக் கூடியதைப் போல, இதெல்லாம் மிக ஜோக்கானது, ஒரு புது ஆளிடம் சொல்ல முடியாத அளவு ஜோக்கானதாக ஒருக்கால் இருக்கலாம்; ஒரு வேற்றாளிடம் இத்தனை வேடிக்கையான, நம்ப முடியாததான ஒன்றைச் சொல்லி அவரை அவமதிக்க லாஃபெர்ட்டியால் முடியவில்லை.
***
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
இந்தக் கதையின் மூலம் ‘த பெஸ்ட் ஆஃப் ஆர்.ஏ.லாஃபெர்ட்டி’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. ‘நைன் ஹண்ட்ரட் க்ராண்ட் மதர்ஸ்’ என்பது அதன் தலைப்பு. 2019 இல் கொலான்க்ஸ் நிறுவனத்தால் பிரிட்டனில் வெளியானது. பிறகு 2021 இல் முதல் அமெரிக்கப் பதிப்பு, டோர் எஸென்ஷியல் புக் என்று டாம் டொஹெர்ட்டி அஸோசியேஷனால் வெளியிடப்பட்டது. பதிப்பாசிரியர்: ஜானதன் ஸ்ட்ரா(ஹ்)ன். (Jonathan Strahan)
i ஸென்ஸே என்பது சீன/கொரிய/ஜப்பானிய சமூகங்களில் மூத்தோர்களைக் குறிக்கப் பயன்பட்ட சொல். தற்காலத்தில் இது ஆசிரியர்கள், வழிகாட்டிகள், சிறப்பான தகுதி பெற்றவர்கள் போன்றாரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்று பொருளகராதிகள் சொல்கின்றன.
ii Spring Peeper என்ற சொல்லை ஆன்டி டங்கன் பயன்படுத்துகிறார். அவை பற்றிய விக்கிபீடியா குறிப்பில் அவை எழுப்பும் கீச்சொலியின் ஒலிப்பதிவு கிட்டும். இங்கே பார்க்க: https://en.wikipedia.org/wiki/Spring_peeper
iii ஆன்டி டங்கன் இங்கு ப்ரோயவிடஸ் என்பது ‘மூதாதையரின்’ என்பதற்கான லத்தீன் மொழிச் சொல் என்று அடைப்புக் குறிக்குள் கொடுக்கிறார்.
***