தம்பதிகளின் முதல் கலகம்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

(தெலுங்கில் கலைக்களஞ்சியம் எழுதிய கொமர்ராஜு வெங்கட லட்சுமணராவு என்பவரின் சகோதரியான பண்டாரு அச்சமாம்பா 1874 ல் பிறந்தார். பெற்றோர் வெங்கடப்பையா, ரங்கமாம்பா. அச்சமாம்பா சிறுவயதில் நல்கொண்டா மாவட்டம் தேவரகொண்டாவில் வளர்ந்தார். 1901 ல் அபலா சச்சரித்ர ரத்தினமாலா என்ற நூலை இயற்றினார். 1898 முதல் 1904 வரை 12 கதைகள் எழுதினார். தன த்ரயோதசி, சத்பாத்ர தானம், பீத குடும்பம், தம்பதுல பிரதம கலகம் என்ற கதைகளை பெண் கல்வி, பெண்களின் தன்மானம் ஒன்ற அம்சங்களில் படைத்துள்ளார். தெலுங்கின் முதல் சிறுகதை இவர் எழுதிய தனத் திரயோதசி என்று கருதப்படுகிறது. ஹிந்து சுந்தரி, தெலுங்கு ஜனானா என்ற இதழ்களில் அவருடைய கதைகள் பிரசுரமாயின. அவர் ஒரு சமூக சேவகியாக விளங்கினார்.)

“நான் திருமணம் செய்த மனைவியே தவிர பணிப்பெண் அல்ல. திருமணம் செய்ததால் கணவருக்கு தாசியாவேனா என்ன?”

“லலிதா! நீ சின்னப் பெண். முதியவள் நான் சொல்கிறேன். என் பேச்சைக் கேள். நீ இது போல் பேசக்கூடாது”

“பாட்டி! நான் என் கணவருக்கு விற்கப்பட்ட வேலைக்காரியா? நியாயமாக யோசித்து பதில் சொல்”

“நீ உன் கணவனின் பட்டமகிஷி. கிருகலட்சுமி. தாசி அல்ல”

“ஆனால் அவர் என்னை வீட்டின் எஜமானியாக ஏற்று அன்பு செலுத்த வேண்டும் அல்லவா? அவ்வாறின்றி இஷ்டத்திற்கு வேலை ஏவி என்னை செய்யச் சொல்வதும் நான் செய்வதுமா?”

“நீ இப்போது பேசும் விதத்தை சிறிதாவது உன் கணவன் கேட்டான் என்றால் அவனுக்கு உன் மீது அன்பு வளருமா?

“ஏற்கனவே அன்பு வளர்ந்திருக்கிறதா என்ன? பாட்டி! இது உங்கள் காலமல்ல. இப்போதைய காலத்தில் விவாகம் ஆனவுடன் நாங்கள் இல்லறத்தாள் பதவியை ஏற்றுக் கொள்கிறோமே தவிர நாங்கள் பணம் கொடுத்து வாங்கிய தாசி அல்ல. எங்களைப் போன்ற மனைவிகள் புருஷர்களின் அகம்பாவத்தைச் சற்றும் சகிக்க மாட்டோம்”

“லலிதா! உன்னை சமர்த்திசாலி என்று நினைத்தேன். ஆனால் இப்படிப்பட்ட பைத்தியக்காரி என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. உன் முட்டாள் தனத்திற்குத் தகுந்த பிராயசித்தம் அனுபவிக்காமல் போக மாட்டாய். இப்போதைய தகராறில் தப்பெல்லாம் என் பேரனுடையது தானா? அல்லது உன் தப்பு ஏதாவது உள்ளதா? உனக்கு உன் சுதந்திரம் பற்றித் தெரிந்த அளவுக்கு உன் கடமை பற்றி தெரிந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். கடமையை உணர்ந்தவர்கள் இப்படிப் பேசவே மாட்டார்கள். அவன் எத்தகைய கோபக்காரன் ஆனாலும் நீ உன் சாந்த சுபாவத்தால் அவனுடைய தாமச குணத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். உன்னை அவன் அவமதித்தது எனக்கும் சம்மதமில்லைதான். ஆனால் முதலில் அவனுக்குக் கோபமூட்டும் வார்த்தைகளை நீ சொல்லாமல் இருந்தால் உன்னை அவன் கோபிக்கும் அளவுக்கு தகராறு வளர்ந்திருக்காது. அதனால் முதல் தவறு உன்னுடையது என்றே தோன்றுகிறது.”

“நான் சொல்வதைக் கேளேன். இன்று நான் உன்னைப் பார்க்க வருவதாக தீர்மானித்திருந்தேன் அல்லவா? அதைக் கண்டுகொள்ளாமல் என்னைத் தன்னோடு சேர்ந்து நாடகம் பார்க்க வரும்படி அவன் பலவந்தப்படுத்தலாமா? நான் ஒரு முறை முடிவெடுத்த செயலை கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் மாற்ற மாட்டேன் என்ற சங்கதி உனக்குத் தெரிந்தது தானே?”

“சரி விடு. உன் கணவனின் சுபாவமும் உன் சுபாவத்தைப் போலவே இருக்கிறது. இப்படிப்பட்ட சமயங்களில் நீங்கள் இருவரும் உங்கள் சுதந்திரங்களை அதிகரித்துக் கொண்டே போனால் கலகம் முதிர்ந்து வீடு ஒரு காடு போல மாறி துயரத்திற்கு வழிவகுக்கும். அதனால் உங்களில் யாரோ ஒருவர் அமைதியாகி அடுத்தவரின் பேச்சைக் கேட்டால் அவரும் ஒரு நாள் உன் முடிவுக்குத் தடை கூற மாட்டார். நீ முதலில் அடங்கிப் போனால் உனக்கு என்ன குறைவு வந்து விடப் போகிறது?”

“நீ என்னைச் சேர்ந்தவள் என்பதால் இதையெல்லாம் உன்னிடம் சொன்னேன். அதற்கு நீ எனக்கு ஆறுதல் கூறித் தேற்றுவதற்கு பதில் என்னையே திட்டத் தொடங்கிவிட்டாய். என் துரதிர்ஷ்டம் அப்படிப்பட்டது. யாருமே எனக்கு அனுகூலமாக பேசமாட்டார்கள்,” என்று கூறிய லலிதா அழ ஆரம்பித்தாள்.

நாடக அரங்கிற்குச் சென்று நாடகம் பார்த்துக் கொண்டிருந்த நாராயண ராவின் மனம் நிலையாக இல்லை. நாடகம் மிகுந்த மனோரஞ்சகமாக இருந்தாலும் அவன் மனதை அது ஈர்க்கவில்லை. நாராயண ராவு மனைவியோடு சேர்ந்து குடித்தனம் செய்யத் தொடங்கி இரண்டு மாதங்களே ஆயின. அவன் பட்டப்படிப்பு தேறிய பின் ராஜமகேந்திரவரத்தில் மாதம் 100 ரூபாய் சம்பளத்தில் வேலையில் சேர்ந்தான். அவனுடைய தந்தையார் செல்வந்தராக இருந்ததால் மகனுக்கு வருடத்திற்கு சிறிது பணம் அனுப்பி வந்தார். நாராயண ராவின் வீட்டில் ஒரு சமையல் பிராமணரும் ஒரு பணியாளும் இருந்தனர். அதனால் லலிதாவுக்கு வேலை எதுவும் இல்லாமல் சுகமாக இருந்து வீட்டை பார்த்துக்கொண்டு கணவனோடு பேசி மகிழ்வதே வேலையாக இருந்தாள். அத்தனை சௌகரியமாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் தன் பேச்சே ஜெயிக்க வேண்டும் என்று குழந்தை போல் பிடிவாதம் பிடிக்கும் குணம் உள்ள லலிதாவால் அவளுக்கோ அவள் கணவன் நாராயண ராவுக்கோ சந்தோஷம் இல்லாமல் போனது.

ஒன்றாகச் சேர்ந்து நாடகம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து தான் மனைவியோடு வருவதாகவும் நண்பர்களும் தம் தம் மனைவிகளோடு வரும்படியும் கூறி அத்தனை நாற்காலிகளையும் ஏற்பாடு செய்து டிக்கெட் வாங்கி, அந்த விஷயத்தைச் சொன்னால் தன் மனைவி மகிழ்ச்சியடைவாள் என்று நினைத்து நிறைந்த மனதோடு வீட்டுக்கு வந்தான்.

அப்படி வந்த நாராயண ராவு, “இன்று ஒரு புது நாடகம் பார்க்கப் போகிறோம். விரைவில் போஜனம் ஏற்பாடு செய்யச் சொல். நாடகத்திற்கு நாம் இருவரும் சேர்ந்து போக வேண்டும்” என்ற மகிழ்ச்சியோடு மனைவியிடம் தெரிவித்தான்.

லலிதா கோபத்தோடு, “என்ன? நாடகம் பார்க்கப் போகணுமா? யார் போக வேண்டும்?” என்று எரிச்சலோடு வினவினாள்..

அதைக் கேட்ட நாராயணராவின் மகிழ்ச்சி அனைத்தும் வடிகட்டப்பட்டு ஒரு விதமான சிறுமை உணர்வோடு, “நாம் இருவரும் போக வேண்டும்” என்றான்.

லலிதா, “நீங்கள் தனியாகப் போகலாம். நான் வரமாட்டேன்” என்று விட்டேத்தியாக பதிலளித்தாள்.

நாராயண ராவு: நீ வரத்தான் வேண்டும். வேறு வழி இல்லை. நம் இருவருக்கும் சேர்த்து டிக்கெட்டுக்கு செலவு செய்து விட்டேன்.

லலிதா: நீங்கள் மட்டுமே போகலாம். என்னைக் கேட்டு டிக்கெட் வாங்கினீர்களா? இன்று என்னால் வர முடியாது. நான் வேறு ஒரு இடத்திற்குப் போக வேண்டும்.

நாராயணராவு: நீ கூறுவது உண்மைதான். ஆனால் நான் டிக்கெட் வாங்கி விட்டதால் நீ கட்டாயம் என்னுடன் வரவேண்டும். நீ போக வேண்டிய இடத்திற்கு நாளை போகலாம்.

லலிதா: நான் உங்களோடு வரமாட்டேன். நான் நினைத்த இடத்திற்கே செல்வேன்.

நாராயண ராவின் கண்கள் கோபத்தால் சிவந்தன. “இவள் மூர்க்கமானவள்” என்றான்.

லலிதா முகத்தைச் சுருக்கி, “என் இஷ்டம்” என்றாள்.

நாராயணராவு மீண்டும் அமைதியாக மனைவியைப் பார்த்து: “நான் செய்த இந்த செயலைப் பார்த்து நீ அதிகம் மகிழ்வாய் என்று நினைத்தேன். நாடகம் விரைவில் தொடங்கிவிடும். நீயும் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு என்னோடு கிளம்பு. என் நண்பர்கள் தங்கள் மனைவிகளோடு சேர்ந்து இங்கே வந்துவிடுவார்கள்”.

லலிதா: உங்கள் விருப்பத்தை என்னால் நிறைவேற்ற இயலாது. உங்கள் விருப்பப்படி மட்டுமே நடந்து கொள்வதற்கு நான் உங்கள் அடிமை இல்லை.

மனைவியின் இத்தகு சொற்களைக் கேட்டவுடன் நாராயணராவுக்கு கட்டுக்கடங்காது கோபம் வந்தது. உடனே அவன் டக்கென்று எழுந்து உடைமாற்றிக்கொண்டு நாடக அரங்கை நோக்கிச் சென்றான்.

கணவன் வீட்டை விட்டுச் சென்ற உடனே லலிதாவும் அமைதி இல்லாத மனதோடு எழுந்து அந்த கிராமத்திலேயே இருந்த பாட்டியின் வீட்டுக்குச் சென்றாள்.

அங்கு அவள் பாட்டியோடு பேசிய உரையாடலை இந்தக் கதையின் தொடக்கத்திலே எழுதி உள்ளேன்.

பாட்டியின் பேச்சுக்களால் லலிதாவுக்கு ஏற்பட்டிருந்த துக்க ஆவேசம் கொஞ்சம் குறைந்த பின் அவளைப் பார்த்து இப்படி கூறினாள் பாட்டி:

“லலிதா! இன்று நடந்த விஷயம் உனக்கு பெரியதாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் அதுவே உனக்கு மிகப்பெரும் துயரத்திற்கு காரணமாகக் கூடும். குற்றம் யாருடையதானாலும் அதன் பலன் இவருடைய சுகத்தையும் கெடுத்துவிடும். இப்படிப்பட்ட அற்பமான காரணங்களால் சில குடும்பங்கள் அழிந்தே போயின என்பதை நீ அறிவாயா? சம்சாரத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடும். தெரியுமா?” என்று கூறி நிறுத்திய அந்த முதிய பார்வதம்மாவுக்கு துயரத்தால் கண்களில் நீர் நிறைந்தது.

அதனை துடைத்துக் கொண்டு மேலும் கூறினாள் பார்வதம்மா. “லலிதா! முன்னர் உன்னைப் போன்ற ஒரு பிடிவாதக்காரி இருந்தாள். அவளுடைய கணவன் நல்ல நற்குணமும் திட சங்கல்பமும் கொண்டவன். அந்த தம்பதிகள் இருவரும் முதலில் சிறிது காலம் ஆனந்தமாக வாழ்ந்தார்கள். ஆனால் அவள் மட்டும் அவன் கூறியது எதையும் கேட்காமல் இருப்பதே தன் கௌரவம் வளர்வதற்கு வழி என்று எண்ணி அது போல் நடந்து கொண்டாள். அதனால்….” என்று சொல்லிவிட்டு நிறுத்திய அந்த முதியவள் துயரத்தால் பேச இயலாமல் துக்கத்தை விழுங்கிக் கொண்டு மேலும் பேசத் தொடங்கினாள்.

“முன்பொருமுறை அவனுக்கு அவளுடைய பணிவின்மை காரணமாக எரிச்சலும் கோபமும் ஏற்பட்டு வீட்டை விட்டுச் சென்று விட்டான். அவர்கள் இருவரும் மீண்டும் ஒருவரையொருவர் சந்திக்கும் பாக்கியமே இல்லாமல் போனது…” கடைசி வாக்கியத்தை உச்சரிக்கும் போது அந்த முதியவளுக்கு ஏற்பட்ட அதிக வருத்தத்தால் குரல் தழுதழுத்தது.

அந்த செய்தியைக் கேட்டதும் லலிதாவின் மனத்தில் பலவித கவலை அலைகள் வீச ஆரம்பித்தன. அப்போது அவள் பார்வதம்மாவிடம் வினவினாள்.

“அந்த தம்பதியினர் கடைசிவரை ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவே இல்லையா?”

பார்வதம்மா நிச்சயமான குரலில் பதிலளித்தாள். “இல்லை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவே இல்லை”

“ஏன்?” என்று கேட்டாள் லலிதா.

“சண்டை நடந்த நாளன்று அவன் விரக்தியால் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் கோபமும் ஆவேசமாக பரதேசத்திற்குச் செல்ல எண்ணி கிளம்பி காசிக்குச் சென்றான். அதன் பின்னர் அவன் மனைவிக்கு மிகுந்த பச்சாதாபம் ஏற்பட்டது. ஆனால் காலம் கடந்த பின் ஏற்படும் பச்சாதாபத்தால் என்ன பிரயோஜனம்? அவள் வாழ்நாள் முழுவதும் வருந்தி கொண்டே கழித்தாள்” என்று பார்வதம்மா துக்கத்தை அடக்க இயலாமல் விக்கி விக்கி அழத் தொடங்கினாள்.

அவள் கண்களில் இருந்து வெள்ளமாக கண்ணீர் வழிந்தது. அதனைக் கண்டு லலிதாவுக்கு பயத்தால் உடல் நடுங்கத் தொடங்கியது.

“பாட்டி! நீ கூறிய இந்தக் கதை உண்மையாக நடந்ததா? சொல்லு!” என்று கேட்டாள்.

“உண்மையில் நடந்ததைத்தான் உனக்குச் சொல்கிறேன். அந்த துர்பாக்கியப் பெண் நான்தான். அதற்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்திருந்ததால் நான் உன்னைப் பார்த்து உனக்கு இந்த விஷயத்தைக் கூறும் பாக்கியத்தை பெற்றேன். அப்போதைய எங்கள் கலகமும் இப்படித்தான் அற்பமானது. அதனால் நீ என் உண்மையான அனுபவத்தைக் கேட்டு புத்தியோடு நடந்து கொண்டு உன் கணவரிடம் வேண்டிக் கொண்டு இனி எப்போதும் இப்படிச் செய்ய மாட்டேன் என்று மன்னிப்புக் கேள்! நீயும் உன் கணவன் கூறிய பணிகளைச் செய்ய முன் வருவாயானால் உன் கணவனும் உன் பேச்சைக் கேட்டு உன்னை கௌரவமாக நடத்துவான். நாம் பிறரை மன்னிக்காவிட்டால் அவர்கள் மட்டும் நம்மை எவ்வாறு மன்னிப்பார்கள்?”

லலிதா அச்சத்தோடு, “பாட்டி! என் கணவர் இன்றிலிருந்து எனக்கு தரிசனம் அளிக்காமல் இருப்பாரோ என்னவோ” என்றாள்.

“நீ இத்தனை துயரப்பட தேவையில்லை. உன் கணவன் கட்டாயம் உன்னிடம் வருவான். முதல் கலகத்திலேயே சம்சாரத்தை விட்டு விலகி ஓடுபவர் மிகச் சிலரே. ஆனால் இதே போல் கலகங்கள் இன்னும் நடந்தால் ஒருநாள் அப்படி அவன் ஓடிப் போவது நடக்காமல் போகாது. அப்படி ஆகாமல் இருப்பதற்காகத்தான் நான் உனக்கு இத்தனை தூரம் அறிவுரை கூறுகிறேன். என் பேரன் வீட்டுக்கு வந்த உடனே நீ அவனிடம் உன்னை மன்னித்து விடும்படி வேண்டிக்கொள். நீ இன்று என்னைத் தேடி வராமல் அவன் சொன்னதைக் கேட்டிருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்!” என்று ஆறுதல் கூறினாள் பார்வதம்மா.

“நீ கூறுவது உண்மைதான். நானே இன்று சண்டைக்கு காரணமாகிவிட்டேன். இனி எப்போதும் இப்படிச் செய்ய மாட்டேன்” என்றாள் லலிதா.

கணவன் வீட்டை விட்டுச் சென்று விடுவானோ என்ற பீதி மனதை வாட்டியதால் லலிதாவின் மனம் நிலையாக நிற்கவில்லை. பாட்டி கூறிய அறிவுரையாலும் மனதிற்கு அமைதி ஏற்படவில்லை. அந்த பயங்கரக் கவலையால் அவளுடைய துக்கம் இருமடங்கு ஆகி கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

அதனால் அந்த அர்த்தராத்திரியில் கிளம்பி தன் வீட்டிற்கு வந்து கணவனின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தாள். அப்போது அவளுக்கு ஒவ்வொரு கணமும் ஓராண்டு போலத் தோன்றியது. அவள் நிமிடத்திற்கு நிமிடம் கதவைத் திறந்து அங்கும் இங்கும் பார்த்து நிராசையோடு உள்ளே திரும்பினாள்.

அங்கு நாராயண ராவு நாடக அரங்கில் அமர்ந்திருந்தானே தவிர நாடகத்தைப் பார்த்து ரசிப்பதில் அவனுக்கு உற்சாகம் ஏற்படாததால் சோர்வாக உணர்ந்தான். அவன் மனதில் இவ்வாறு சிந்தித்தான், “நான் என் மனைவியின் மேல் அதிக அளவு அன்பு கொண்டிருந்தாலும் அவள் இந்த சின்ன சொல்லைக் கூட கேட்கக் கூடாதா?” என்று யோசித்து அங்கிருந்து எழுந்து கோதாவரி நதியின் கரைக்குச் சென்றான். ஆனால் அங்கிருந்த குளிர் காற்றாலும் அவனுக்கு மன அமைதி கிட்டவில்லை.

“நான் இனி வீட்டுக்குப் போக மாட்டேன். அங்கு செல்வதால் என்ன பலன்? ஒவ்வொரு விஷயத்திலும் தன் சொற்படித் தான் கேட்க வேண்டும் என்று கூறும் மனைவியோடு சண்டையிடவா? நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு வருகிறேன் நீங்களும் உங்கள் மனைவிகளை அழைத்து வாருங்கள் என்று கூறியதால் என் நண்பர்கள் தவறாமல் தத்தம் மனைவிமார்களை அழைத்து வந்தார்கள். நான் கூறியதை கட்டாயம் கேட்டு என்னோடு சேர்ந்து வருவாள் என்று எண்ணிய என் மனைவியே என்னை இப்படி அவமதித்துவிட்டாள். இப்படிப்பட்டவளோடு சேர்ந்து குடித்தனம் செய்வதை விட இங்கேயே சிறிது நேரம் இருந்துவிட்டு எங்கேயாவது போகலாம்” என்று நாராயணராவு சிந்தித்து வருத்தத்தில் ஆழ்ந்தான்.

வீட்டில் இருந்து கொண்டு கணவனின் வருகைக்காக பார்த்திருந்த லலிதாவும் அவன் வருவது நிச்சயம் இல்லை என்று தீர்மானித்து அவளும் நாடக அரங்குக்குச் சென்று கணவனைத் தேட நினைத்தாள். ஆனால் அந்த இரவு நேரத்தில் தனியொருத்தியாக அங்கு எவ்வாறு செல்வது என்று தயக்கமாக இருந்தது.

தன் கணவன் தன்னை விட்டுப் போய் விடுவான் என்று கவலையில் அவளுக்கு சந்தேகமும் பிரமையும் தோன்றலாயிற்று. இன்று அவன் வீட்டுக்கு வந்தால் என் முழு சக்தியையும் உபயோகித்து என் கணவனின் கோபத்தை ஆற்றி இனி என்றுமே இப்படிப்பட்ட சம்பவம் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாள்.

வீட்டில் இருந்த பணியாளர்கள் அனைவரையும் எஜமானனைத் தேடுவதற்கு அனுப்பியதால் அவளும் போய் தேட வேண்டுமானாலும் அவளுக்குத் துணை வருவதற்கு யாரும் இல்லை.

கடைசியில் சோர்ந்து போய் சற்று நேரம் கட்டிலில் படுத்தாள். அதற்குள் அவளுக்கு ஒரு பயங்கரமான கனவு வந்தது. பயத்தால் அரற்றியபடி விழித்துக் கொண்டாள்.

இன்னும் நாராயண ராவு வரவில்லை. அவனுடைய வருகை தாமதமானதால் லலிதாவின் கவலையும் அதிகமானது. அவள் மெதுவாக எழுந்து தீபத்தை ஏற்றி அதனைக் கையில் பிடித்துக் கொண்டு சேவகர்கள் யாராவது வந்து சேர்ந்திருப்பார்கள் என்றெண்ணி கதவைத் திறந்து வெளி வராந்தாவுக்கு வந்தாள். அங்கு இருந்த பெஞ்ச் பலகையில் யாரோ படுத்திருப்பதை கவனித்து தீபத்தை அந்த பெஞ்சின் அருகில் எடுத்துச் சென்றாள். அந்த வெளிச்சத்தில் அங்கு படுத்து உறங்கிக் கொண்டிருந்தது தன் கணவனே என்று அறிந்தாள்.

மிகுந்த தீனக் குரலில், “என் தவறை மன்னியுங்கள். இனி என்றுமே இப்படி தவறு செய்யமாட்டேன்” என்று அவன் பாதங்களைப் பணிந்தாள்.

அவள் பாதத்தை தொட்டவுடன் நாராயணராவு விழித்துக்கொண்டு அவளுக்கு ஆறுதல் கூறினான்.

கோதாவரிக் கரையில் நடந்து கொண்டிருந்த நாராயண ராவுக்கு ஏற்பட்ட மனக்கவலை அவனுடைய சுபாவமான விவேகத்தால் நல்ல யோசனையாக மாறி மீண்டும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று புத்தி பிறந்தது. அதனால் அவன் வீட்டுக்குத் திரும்பி, தான் கோபமாக இருப்பதை லலிதா உணர வேண்டும் என்பதற்காக வெளி வராந்தாவில் இருந்த பெஞ்ச் மீது படுத்துக்கொண்டான். அப்போதுதான் லலிதா வந்து அவனைப் பார்த்து மன்னிப்புக் கோரினாள்.

அன்றிலிருந்து லலிதா தன் சுபாவத்தை மாற்றிக் கொண்டதால் மீண்டும் என்றுமே அவர்களிடையே எப்படிப்பட்ட கலகமும் எழாமல் அவர்கள் சுகமாக வாழ்ந்தார்கள். அதனால் அவர்களின் முதல் கலகமே இறுதிக் கலகம் ஆனது.

(ஹிந்து சுந்தரி, 1902-ல் பிரசுரமானது)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.