சோசலிசத்துக்கான நேரம்

தமிழாக்கம் : கோரா

நூல் ஆசிரியர் தோமா பிகேட்டி அறிமுகம்:

ஃபிரெஞ்சு பொருளியலாளர். 1971-ல் பிறந்தவர். பாரிஸில் உள்ள மேம்பட்ட சமூக அறிவியல் கல்விக்கான பள்ளியின் பொருளாதாரப் பேராசிரியராக இருப்பவர். பொதுப் பொருளாதாரம் மற்றும் பொருளாதார வரலாறு ஆகிய துறைகளில் வல்லுநர். நோபல் பரிசு பெற்றவர்.

எழுதிய நூல்கள்: Time for Socialism:Dispatches from a World on Fire , Capital in the Twenty-First Century ,Capital and Ideology

1791-ல் பிரெஞ்சு பேரரசின் கரீப்பியன் (Caribbean) காலனிகளின் மகுடமணியாக செயின்ட் டாமிங் ( Saint Domingue) மிளிர்ந்து கொண்டிருந்தபோது அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் 1804-ல் ஹைட்டி தற்சார்புக் குடியரசை உருவாக்கினர். ஆனால் பிரான்ஸில் இருந்து பிரிவதற்கான நிபந்தனைகள் வெகு காலம் வரை விவாதிக்கப்பட்டு வந்தன–பிரான்ஸ் தேசம் திரும்பவும் பறித்துக் கொள்ளக் கூடும் என்ற பயமுறுத்தல்களுடன். ஹைட்டியர்கள் இறையாண்மை பெற வேண்டுமானால், (10-ஆம் சார்லஸ் தீர்ப்பாணையின் அதே வார்த்தைகளில்)இழந்த (human property) மானிட சொத்துரிமைக்கு இழப்பீடு கேட்கக் கூடிய குடியேறிகளுக்கு (colonists) ஈட்டுறுதி செய்ய வேண்டும் என ஹைட்டியர்கள் 1825-ல் வற்புறுத்தப் பட்டார்கள். 150 மில்லியன் தங்க பிராங்க் மொத்த இழப்பீடு என கணக்கிடப்பட்டது. புதிய கரீப்பியன் நாடு மிகப் பெரிய கடன் வாங்கி இத்தொகையை செலுத்தியது. பின்னர் அவர்கள் கடன் தொகையை வட்டியுடன் மெதுவாக பல தசாப்தங்களில் கட்டி முடித்தார்கள் . ஹைட்டியர்கள் தலைமுறை தலைமுறையாக- 20ஆம் நூற்றாண்டின் இறுதிகளிலும் கூட – தம் வாழ்வாதாரத்தின் கணிசமான பகுதியைக் கொடையாக அளித்து கடனைக் கட்டி முடித்தார்கள்–ஆப்பிரிக்காவில் இருந்து தம் மூதாதையர்களை பல நூறுகள் ஆயிரங்கள் எண்ணிக்கையில் கடத்தி வந்து, இன அழிப்புச் சூழலில் கடுமையாக உழைக்க வைத்தவர்களின் வாரிசுகளுக்கு.

அமெரிக்கக் குடியரசு குறித்து முன்னறிவிக்கும் உள்ளொளிகளுக்காக (prophetic insights) சிறப்பாக நினைவுகூரப்படுபவர் பிரெஞ்சு செல்வந்தரும் அறிவுஜீவியுமான அலெக்ஸி- ட-டொக்வில் (Alexis De Tocqueville). ஆனால் அவர் 1843-ல் ஹைட்டி பக்கமாகத் தன் கவனத்தைத் திருப்பினார். பிரான்ஸ்-ல் இழப்பீடு ஏற்பாடு மீண்டும் விவாதிக்கப்பட்ட போது, டொக்வில் அது “பங்கேற்கும் அனைத்து தரப்பினருக்கும் நியாயமானதுதான் ” என்று கூறி இந்த நடவடிக்கைக்கு தன் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்தார். இது அடிமை முதலாளிகள் (Slave holder) அனைவரின் (மானிட) சொத்து இழப்பை ஈடு செய்வதோடு, கிளர்ச்சியால் மிக மோசமாக பலவீனப்படுத்தப்பட்ட சமூக ஒழுங்கும் மீட்டெடுக்கப் பட்டுவிடும் என்று வாதித்தார். மேலும் இது விடுவிக்கப்பட்ட மக்களிடம் அதிகமாக எதிர்பார்க்கப்படும் உழைப்புக் கட்டுப்பாடுகளை மனதில் ஆழப் பதிய வைக்கும் என்றார். அடிமை முறையில் நிலைமையை கட்டுக்குள் வைக்கப் பயன்படும் சவுக்கின் (whip) இடத்தில், இந்த புதுமையான கருவி – கடன் திருப்பிக் கொடுத்தல் கால அட்டவணை- மக்கள் பண்ணை வேலைக்குத் திரும்ப வைத்து சர்க்கரை ஏற்றுமதிகளை உயிர்ப்பிக்க நிர்ப்பந்திக்கும்.

இந்த ஒப்பந்தம் பிரெஞ்சு வங்கி அமைப்புக்கு முட்டுக் கொடுத்து உதவியது. ஆனால் அதே நேரம் ஹைட்டி வறுமை துரிதமாக அதிகரிக்கும் சுருள் வட்டத்தில் தள்ளப்பட்டது. பாரிஸ் பணக்காரர்களை மட்டுமே குறிக்கும் குறுகிய மேட்டுக்குடியினரின் பைகளில் கடனுக்கான வட்டி குவிந்ததால், பிரான்சுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வு முன்னிலும் மோசமானது. இவ்வாறாக கிளர்ச்சியின் பின்விளைவு, அடிமை முறையின் எச்சங்கள் (legacy) பிரெஞ்சுப் பொருளாதாரத்தினுள் சலசலப்பைக் கொண்டுவந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது. அப்போது தோன்றிவிட்ட புதிய சமூக அடுக்கில் சொத்து புனிதப் படுத்தப்பட்டுவிட்டது. இழப்பீடுகள் அந்த புனிதத்தையே எடுத்துரைக்கின்றன :சொத்து மட்டுமல்ல, மனித அசையும் சொத்துக்களும் கூட, பறிமுதல் செய்யப்படக் கூடியவை

அடிமை முதலாளிகளுக்கு இழப்பீடு குறித்த விவாதம் மற்றும் அக்கருத்துக்கு டொக்வில்-ன் ஆதரவு அனைத்தும் மேற்குலக வரலாறுகளில் ஓரங்கட்டி விடப்பட்டிருக்கின்றன. ஆனால் பிரெஞ்சு சமூக அறிவியல் உயர்கல்வி நிலையத்தில் (Ecole des Hautes en Sciences Sociales) ஒரு பேராசிரியராகப் பணியாற்றும் தாமஸ் பிகெட்டி என்னும் மற்றொரு பிரெஞ்சு சிந்தனையாளரின் எழுத்துகளில் அது விரிவான கவனம் பெற்றுள்ளது. கடந்த தசாப்தத்தில் பிகெட்டியின் பெயரும் ஏற்றத்தாழ்வுப் பிரச்னையும் ஒரே பொருள்படுவன போலாகி இருக்கிறது. அதைவிட அவருடைய சுய மறு உருவாக்கம் (self reinvention) அதிக கவனத்திற்குரியதாகி இருக்கிறது. மிதியடி அணியாத வெறுங்கால் பட்டறிவுக்கொள்கை வாதி- காலக்கிரமமாக ஏற்றத்தாழ்வுகளில் ஏற்படும் மாறுதல்களின் அளவுகளை அட்டவணைப் படுத்தத் தேவையான பெரும் தரவுத் தொகுப்புகள் அமைப்புநர்- மாறுதல்களின் மூல காரணங்களை நாடிச்செல்கையில் கோட்பாட்டாளராகி விடுபவர்- வெகு அண்மைக் காலமாக, நீண்ட வரலாற்றுக் கடமையை உணர்ந்த ஒரு கூர்மையான அரசியல் சம்பந்தப்பட்ட குரல் . தற்போது அவர் புது தாராளமயக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவரவும், உலகளாவிய சோசலிச புதிப்பிப்புக்கும் அழைப்பு விடுக்கிறார்.

பிகெட்டி 2013-ல் தான் எழுதி வெளியிட்ட Capital in the Twenty-First Century என்ற நூலின் மூலம் நினைவில் நிற்கும்படியாக பரந்த நனவோட்டத்தில் (consciousness) குறுக்கிட்டார். அந்நூல் 2008-ன் உலகளாவிய நிதி நெருக்கடியைத் தொடந்த வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்று” (Occupy Wall Street) இயக்கம் மற்றும் உலகெங்கும் பெரு நகரங்களில் அதிகரித்து வந்த பிற கண்டன இயக்கங்கள் அனைத்திற்கும் தேவையான வாசிப்புப் பொருளானது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் முதல் கண்டிராத ஏற்றத்தாழ்வு நிலைகள் இப்போது எட்டப்பட்டு விட்டன என்று அடிப்படை நிலைப் போராளிகள் உள்ளுணர்ந்திருக்கும் நிலையில், அவர்களுக்கு படிப்பறிவு மற்றும் பட்டறிவு சார்ந்த பக்கபலத்தை இவரது நூல் கொடுத்தது. எதிர்பார்த்திராத பெரிய அளவு விற்பனை சாதனை படைத்த இந்நூலைத் தொடரும் விதமாக அதிக பக்கங்கள் கொண்டதாக எழுதப்பட்ட பிகெட்டியின் அடுத்த நூலான Capital and Ideology(2020) ஆர்வம் நிரம்பிய, சக்தி வாய்ந்த படைப்பாக இருந்த போதிலும் அது ஆரவாரம் குறைந்த வரவேற்பையே பெற்றது. அவர் Le Monde-ல் தொடராக எழுதி வந்த Time for Socialism என்னும் அரசியல் பத்திகளின் திரட்டு, முதன் முதலாக இங்கிலிஷ் மொழிபெயர்ப்பாகக் கிடைக்கிறது.

தரவுகள் சேகரிப்பிலும் யூரோப் மற்றும் US நாடுகளில் நிலவிய கடந்த 200 ஆண்டுகளுக்கான ஏற்றத்தாழ்வுகளை வரைப்படமிடலிலும் Capital in the Twenty-First Century, பெருஞ் சாதனையாகக் கருதப்படுகிறது. வருமான வரித் தாக்கல் சான்றிதழ்கள், சான்றளிக்கப்பட்ட உயில் ஆவணங்கள் மற்றும் அரசு அறிக்கைகள் போன்ற வரலாற்று ஆவணங்களைப் பயன்படுத்தி,பிகெட்டி மற்றும் குழுவினர், 20-ஆம் நூற்றாண்டின்

நடு தசாம்சங்கள் ,1930 முதல் 1980 வரை, சார்பு சமத்துவம் (relative equality) கொண்ட சகாப்தமாக இருந்தது ஒரு வரலாற்றுப் பிறழ்வு என்று காண்பித்தார்கள். நீண்ட வரலாற்றுப் பார்வையில், சந்தைப் பொருளாதாரம் ஏற்றத் தாழ்வை மட்டுப்படுத்துதலை விட ஆழமாக்கும் போக்கு கொண்டது என்பது வெளிப்பட்டது. தலைமுறை தலைமுறையாக செல்வம் நீடித்து வந்தது. பயன்பாட்டு மூலதனத்தின் மீதான வருவாய் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விஞ்சியது. இதை பிகெட்டி சுண்டக் காய்ச்சி வடித்து ‘r > g’.(r=revenue ; g=growth). (வளர்ச்சியை விட வருவாய் அதிகம்) என்கிற சுருக்கமும் சாரமும் கொண்ட சூத்திரமாகக் கொடுத்தார் மூலதனத்தின் மீதான வருவாய்க்கும் பொருளாதார வளர்ச்சி விகிதத்துக்கும் இடையே வெளிப்படையாகத் தெரிகின்ற சிறு இடைவெளிதான் சமூக ஏற்றத்தாழ்வின் கட்டமைப்பு மற்றும் இயங்காற்றல் மீது சக்திவாய்ந்த மற்றும் சீர்குலைக்கும் தாக்கங்களை ஏற்படுத்தினஎன்று வாதிட்டார். இச் சிறு இடைவெளி வளர்ந்து கொண்டே இருக்கும் பொருளாதாரப் பொதிகளை சமூகத்தின் ஒரு சிறு பகுதியான செல்வந்தர்கள் தம் உடைமையாக்கிக்கொள்ள அனுமதித்தது.

பெருமளவான தற்காலத்திய பொருளாதார சிந்தனை நடுநூற்றாண்டுப் பிறழ்வு (1930-1950) காலத்தில் உதித்ததோடு பிறழ்வு நோயின் பாதிப்பையும் ஏற்றிருந்தது. அதனால் சைமன் குஸ்னெட்ஸ் (Simon Kuznets) மற்றும் ராபர்ட் சோலோ (Robert Solow) போன்ற அமெரிக்கப் பொருளியலாளர்கள் எந்திரத் தொழில் சமூகங்கள் காலப்போக்கில் வருமான ஏற்றத்தாழ்வுகள் குறையும் விதமாகப் பக்குவமடையும் என்று ஊகித்தார்கள். அமெரிக்க சமூகத்தின் போருக்குப் பிந்திய ஆண்டுகளுக்குரிய மட்டிட்ட (limited) தரவுகளை நீட்டிப்பு-கணிப்பு (extrapolate ) செய்து, முதலியம் அதன் மேம்பட்ட நிலையில், ஆதாயமும் ஊதியமும் ஒருசேர பெருகுவதால் அது சமச்சீர் வளர்ச்சியை உண்டாக்கும் என்று வெளிப்படையாக அறிவித்தனர். அதே தரவுகள் வருமான ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக செயலாற்றும் மரபுரிமையாகப் பெற்ற செல்வம் மற்றும் செல்வ நிலை ஏற்றத்தாழ்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பொதுவாக அடக்கி வாசித்தன. பனிப்போர் சூழலில் உள்நாட்டு அமெரிக்கர்களையும் வளர்ந்து வரும் நாடுகளையும் தன் அதிகார வரம்புக்குள் வைத்திருக்க விரும்பிய அமெரிக்காவின் வசீகரமான முன்மொழிவுகள் இவை. பிகெட்டியின் படகு நிறைக்குமளவு தரவு இந்த முன்மொழிவுகளைத் தகர்த்தெறிந்து விட்டன . மேலும் போருக்குப் பிந்திய காலத்தில் தோன்றி அண்மைய தசாப்தங்களில் வெற்றியடைந்து நடப்பு கருத்தியலாகிவிட்ட மற்றொரு பரிச்சயமான முதலிய கருத்துருவாக்கத்தையும் அவர் முடிவுகள் புறமுதுகு காட்டி ஒடவைத்தன: அது ஜோசப் ஷும்பேட்டர் (Joseph Schumpeter) கோட்பாட்டளவில் உருவாக்கியது. அவரைப் பொறுத்தவரை முதலியம் என்பது படைக்கும் திறமையுள்ள அழிமானத்தின் (Creative Destruction) சோர்வில்லாத செயல்முறை என வரையறுக்கப்படுகிறது. பிகெட்டி குறிப்பிடும் முதலியம் என்பது தொழில் முனைவோரும் சீர் குலைப்போரும் (disrupters) நிலைநிறுத்தப்பட்ட ஒழுங்கை எதிர்த்து செய்யும் நிலையான கலகமல்ல என்று அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கப் பட்டது. அவர் சுட்டும் முதலியம் மிகச் சிறிய செல்வந்தர் வர்க்கத்தால் ஆளப்படும் மிகுதியான அதிகாரப் படிநிலைகளைக் கொண்ட ஒரு அமைப்பு அதில் கடந்த காலம் எதிர்காலத்தை கபளீகரம் செய்தது. ஏற்றத்தாழ்வை ஆழமாக்கும் போக்கைக் கொண்ட முதலிய மனோபாவம் பெருந்தொய்வின் (Great Depression) பின்விளைவாக தற்காலிகமாக தலைகீழ் மாற்றம் பெற்று அகண்ட நடுத்தர வர்க்க உருவாக்கலை சாத்தியமாக்கியது. ஆனால் பின்னர் வந்த உலகமயமாக்கல் (globalisation)காலத்தில் முதலியம் பழிவாங்கும் விதமாகத் திரும்பி வந்து தன் வழக்கமான போக்கைத் தொடர்ந்தது.

(பிகெட்டியின் நூலான) Capital in the Twenty-First Century செல்வம் மற்றும் வருவாய்களின் பெயர்வுப் பாங்கை (shifting pattern) உன்னிப்பாக ஆவணப்படுத்தியது. ஆனால் இந்த வரலாற்றுத் தொடர்புடைய நகர்வுகளை விளக்கக் கூடிய கோட்பாடு சார்ந்த கட்டமைப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. உண்மையில் இது ஒரு மகத்தான புள்ளி விவரத் தொகுப்புதான் என்று குற்றம் காணும் தொனியில் குறிப்பிடும் அனுஷ் கபாடியா என்கிற மானிடவியலாளர், இதை மாதிரி சமூக அறிவியல் சம்பந்தமான விசாரணை என்று கொள்வதை விட உசாத்துணை நூல் என்றே கருதவேண்டும் என்கிறார். ஆம், பிரெஞ்சுப் புரட்சி மற்றும் சுதந்திரம் , சமத்துவம், மற்றும் சகோதரத்துவம் குறித்த பேரார்வம் இறுதியில் செல்வந்தர்கள் ஏழைகள் இடையே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுக்கே இட்டுச் சென்றது. ஆனால் ஏன்? மேலும் ஏனிந்த ஏவுபாதை (trajectory) 20-ஆம் நூற்றாண்டில் தலைகீழ் மாற்றம் அடைந்தது? மற்றும்

ஏன் ஒப்பு நோக்கத்தக்க சமத்துவம் மீண்டும் ஆழமாகி வரும் ஏற்றத்தாழ்வுக்கு வழி விட்டது? பகுத்து ஆய்கிற அறிவுக்கு r>g மேற்செல்ல முடியாத ஒரு முட்டுச் சந்தாகவே இருந்தது. இந்த சூத்திரம் வரலாற்று எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எக்காலத்துக்குமான பொருளியல் சட்டத்தை நிலை நாட்டியது- 20ஆம் நூற்றாண்டின் இடையே உலகப் போரின் அதிர்ச்சி துளைத்து மீண்ட காலம் தவிர. r>g என்னும் சூத்திரம் கடந்த காலம் பற்றிய செயலறிவு சார்ந்த கருத்தா அல்லது எதிர்காலம் பற்றி ஊகித்த அறிக்கையா? மிகப் பெரிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நிலை மாற்றங்கள் நிகழ்ந்து வரும் போதிலும் எப்படி காலங்காலமாக உறுதியாக முதலீட்டின் மேல் அதிக வருவாய் ஈட்டல் சாத்தியமானது? போரால் நேர்ந்த அழிவு உண்மையில் ஒரு வெளிப்புற நிகழ்வு, பொருளாதார ஏவு பாதைக்கு சம்பந்தப்படாதது தானே? மேலும் அந்நிகழ்வுகள் எந்த அளவுக்கு பகிர்மானத்தில் அடிப்படை மாற்றம் உண்மையில் நிகழ்த்தக் கூடும்? பொருளியல் வழிமுறைகள் மூலம் இவ்வளவு தான் அணுக முடியும் என்று பிகெட்டி ஒப்புக் கொண்டார். பிற ஆய்வுப் பிரிவுகள் மீதுள்ள வெறுப்பு, உயர் அறிவியல் சான்றுறுதி (legitimacy) பெற்றவர் என்று அபத்தமாக பாவனை செய்தல் ஆகியவற்றை விலக்கிக் கொள்ளுமாறு சக பொருளியலாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். அதிக வரலாறு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பிற சமூக அறிவியல் துறைகளுடன் உயர் தர இணைவு ஆக்கம் ஆகியவற்றை அவர்கள் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். பல தசாப்தங்களாக வெற்றியியம் (triumphalism) வழிபாடு நடத்திவந்த பொருளியலாளர்களுக்கு இது போன்ற தன்னடக்க உரையாடல் காட்சி ஒன்றே தெளிவான அறிவாற்றல் மாறுபாடாகத் தெரிந்தது.

மூலம்: ‘தோமா பிக்கெட்டியின் நூல்கள்-சோசலிசம்’

கட்டுரை ஆசிரியர்:நோம் மக்கோர்

Series Navigationசமூக ஒழுங்குகளும் அரசியல் நிறுவனங்களுமே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம்? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.