க்ளிக், க்ளிக், பயோ க்ளிக் (Click, Click, Bio Click)

எனக்கெல்லாம் ‘க்ளிக்’ என்றால் படமெடுப்பது நினைவில் வரும்; அல்லது இருக்கைப் பட்டையை இறுக்கமாக அந்தக் கொக்கியில் பொருத்தும் போது எழும் ஓசை ‘க்ளிக்’ எனக் கேட்கும்.

2000த்தின் தொடக்கத்திலிருந்தே இந்த சப்தத்தை வேதியியல் துறையில் ஆய்விற்கு உட்படுத்திய மூவருக்கு 2022 ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது- கரோலின் பெர்டோஸி, (Carolyn Bertozzi) மார்டன் மெல்டால், (Morten Meldal) பேரி ஷார்ப்லெஸ் (Barry Sharpless) .

மூலக்கூறுகள் இணைந்து பெரும் மூலக்கூறாக மாறுவது இயற்கையில் நடக்கும் ஒன்றுதான். தண்ணீர், ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டின் மூலக்கூறுகளும் இணைந்து உருவாகிறது. நாம் பயன்படுத்தும் உப்பில், சோடியமும், குளோரினும் இணைந்து உள்ளன. நம் குருதியில் ‘ஹீமோக்ளோபின்’ (Hemoglobin) இருக்கிறதே- அது உயிர்வாயு, இரும்புடனும், க்ளோபின் என்ற புரதச் சங்கிலியுடன் இணைவதால் உண்டாகும் சிக்கலான மூலக்கூறு.

ஆய்வகங்களில் இத்தகைய இணைந்த மூலக்கூறுகளை அமைக்கத் தேவை இருக்கிறது. இயந்திர உழவிற்கான  (Industrial agriculture) அதிக அளவில் தேவைப் படும் உரங்கள்  யூரியா போன்றவை பெரும் தொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகின்றன. அவை மூலகங்களின் கூட்டே. ஃப்ரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) அம்மோனியாவை, ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் கூட்டாக உருவாக்கினார். பின்னர் கார்ல் பாஷ், (Carl Bosch) அதிக அளவில் உற்பத்தி செய்யும் முறையை ஏற்படுத்தினார். இதற்கான தேவைகள் அதிகமாக இருந்த போதிலும், உற்பத்தியில் அதிக அளவில் சக்தி செலவாகிறது, கழிவுகளால் சுற்றுச் சூழலும் மாசடைகிறது. எனவே  ‘பசுமை அம்மோனியா’  (Green Ammonia) உற்பத்தி செய்யும் ஆர்வம் எழுந்தது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பெரும் மூலக்கூறுகளை, திறமைமிக்கதாக, செலவு குறைந்ததாக, கழிவுகள் அற்றதாகச் செய்ய வேண்டுமெனில், ‘இயற்கை மூலக்கூறுகளை’ விட்டுவிட்டு சிறிய அளவில் அவைகளை இணைக்கப் பார்க்க வேண்டும் என்று பேரி 2001ல் நோபல் முதல் முறையாக வாங்கும் போதே சொன்னார். (இப்போது இரண்டாம் முறையாகக் கிடைத்திருக்கிறது.) இது மருந்துகளின் உற்பத்தியில் பெரும் பங்காற்றுகிறது. கரிம மூலக்கூறுகளின் (Organic molecules) அமைப்பில் கார்பன் இருக்கிறது- ஆனால், அதை மற்ற மூலக்கூறுகளோடு ஒத்துப் போகுமாறு தாஜா செய்வது கடினம். எனவே இதற்குப் பதிலாக சிறிய மூலக்கூறு ஒன்றில் (அதிலும் கார்பன் உண்டு) ஆக்ஸிஜன் அல்லது நைட்ரஜன் அணுக்களின் பாலம் அமைத்து அதே பலனைப் பெறலாம்.

மூலக்கூறுகளை இணைப்பது ‘க்ளிக் வேதியியல்’. செம்பு க்ரியா ஊக்கியாக (Catalyst)) ‘அசைட்’ மற்றும் ‘அல்கெய்னின்’ சுழற்சிச் சேர்க்கையைச் (Cycloaddition) செய்யும்போது ஏற்படும் இரசாயன விளைவை ‘க்ளிக் வேதியியல்’ என்று சொல்கிறார்கள். இதற்கு நமக்கு 1‘அசைட்’ (Azide) மற்றும் 2‘அல்கெய்ன்’ (Alkyne) பற்றி கொஞ்சம் தெரிய வேண்டும். அசைட் என்பது பல அணுக்களின் எதிர் மின்மம் (Polyatomic anion). அல்கெய்ன் என்பது சமபகுதிச் சேர்க்கை (Isomeric). செம்பு பொதுவாக இவைகளின் இணைப்பில் வினையூக்கியாகப்  பயன்படுகிறது. க்ளிக்காகும் அசைட்டை நெகிழியில் செலுத்தி அதன் மூலம் மின்சக்தியை கடத்தலாம். இந்த முறை உயிரற்றப் பொருட்களுக்குச் சரி. செம்பு அயனிகள் (Copper ions) உயிர்களின் திசுக்களில் வேதியியல் வினை புரிந்து தகாத விளைவுகளைக் கொண்டு வரும்..

இதை உயிர் உள்ளவைகளுக்குப் பயன் தருமாறு செய்ய முடியுமா என்று சிந்தனை செய்தவர் கரோலின். குறிப்பிட்ட க்ளைகான், (Glycon) நிண நீர் முனைகளுடன் (Lymph nodes) தன்னைப் பிணைத்துக் கொள்ளுமா என அவர் ஆய்வு செய்தார். க்ளைகான் என்பது சிறப்பான ஒரு கார்போஹைட்ரேட். அது நம் நோய் எதிர்ப்பு சக்தி முதல் பல உயிராற்றல் செயல்பாடுகளுக்கு அவசியமான ஒன்று. க்ளைகானின் ஒரு அங்கம் சியாலிக் அமிலம் (Sialic Acid). ஒளிரும் மூலக்கூறு (Fluorescent Molecule) ஒன்றுடன் அசைட்டைப் பிணைத்து உடல் திசுக்களில் செலுத்திய போது பயோமூலக்கூறு எப்படி திசுக்களில் பயணிக்கிறது என்பதை அறிய முடிந்தது. இது பாதிக்கப்பட்ட திசுக்களை, முக்கியமாக புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கான மருந்தை நேரடியாக, பாதிப்புள்ள இடத்திற்குச் செலுத்த உதவும். பயோமாலிக்யூல்ஸ் (Biomolecules) மருந்து மற்றும் மருத்துவத் துறைக்கு மிகத் தேவையான ஒன்று. உதாரணமாக, பிறப்பொருள் எதிரி (Antibodies) புற்று கட்டியைப் பிணைத்தபின், இரண்டாவது மூலக்கூறு அந்தப் பிறப்பொருள் எதிரியுடன் ‘க்ளிக்’ செய்து கொள்ளும்; அது அந்தக்கட்டியின் வளர்ச்சியைக் கண்காணிக்க உதவும்; அல்லது தேவையெனில் கதிர்வீச்சை அந்தப் பகுதிக்கு மட்டுமே செலுத்துவதற்கு உதவும்.

இந்தத் தருணத்தில் நம் இந்திய அறிவியலாளர்கள், தங்க நுண் துகளை, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுண்ணி பூஞ்சையுடன்  இணைத்து சாதனை செய்துள்ளார்கள். இது அளவில் சிறிய ஆற்றலில் பெரிதான ஒன்று. நான்கு அறிவியல் அமைப்புகள் இதை அமைப்பதில் பங்கேற்றன போடோலேன்ட் பல்கலை, கோவா பல்கலை,, ஸ்ரீ புஷ்பா கல்லூரி, தஞ்சாவூர், விலங்கு நோய்கள் அமைப்பு, போபால் ஆகியவற்றைச் சேர்ந்த பயோடெக்னாஜிஸ்ட் உருவாக்கிய இதற்கு ஜெர்மனி, சர்வதேச காப்புரிமை தந்திருக்கிறது. அந்தக் கூட்டுப் பொருள் Cordy gold nanoparticles- (Cor-AuNPs). மருந்து தயாரிப்பில் இது மிகப் பெரிய இடம் வகிக்கும்.

சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கான  தடுப்பு மருந்தாக ஒரு பாடல் இருக்கிறது.

“மூளைக்கு வல்லாரை, முடி வளர நீலிநெல்லி, ஈளைக்கு முசுமுசுக்கை, எலும்பிற்கு இளம்பிரண்டை, பல்லுக்கு வேலாலன், பசிக்கு சீரகமிஞ்சி, கல்லீரலுக்கு கரிசாலை, காமாலைக்கு கீழாநெல்லி, கண்ணுக்கு நந்தியாவட்டை, காதுக்கு சுக்குமருள், தொண்டைக்கு அக்கரகாரம், தோலுக்கு அருகுவேம்பு, நரம்பிற்கு அமுக்குரான், நாசிக்கு நொச்சிதும்பை, உரத்திற்கு முருங்கைப் பூ, ஊதலுக்கு நீர்முள்ளி, முகத்திற்கு சந்தன நெய், மூட்டுக்கு முடக்கறுத்தான், அகத்திற்கு மருதம்பட்டை, அம்மைக்கு வேம்பு மஞ்சள், உடலுக்கு எள்ளெண்ணை, உணர்ச்சிக்கு நிலப்பனை, குடலுக்கு ஆமணக்கு, கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே, கருப்பைக்கு அசோகுபட்டை, களைப்பிற்கு சீந்தலுப்பு, குருதிக்கு அத்திப் பழம், குரலுக்கு தேன்மிளகே, விந்திற்கு ஓரிதழ் தாமரை, வெள்ளைக்கு கற்றாழை, சிந்தைக்கு தாமரைபூ, சிறு நீர் கல்லுக்கு சிறுகண்பீளை,…” இப்படி நீள்கிறது இந்தப்பாடல். பட்டியலில் இன்னும் பல உள்ளன. (அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுத்துத் தொகுத்தவர் சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்.)

1Azide is N=N=N with centre Nitrogen carrying positive charge and the two end negative charges.

2 Alkyne contains positive and negative charges in the same molecule.

Ref: 1.TNPSL, (TamilNadu Popular Science Lecture) 2. RI, (Royal Institution) 3. Article by Jacob Koshy in ‘The Hindu’ dtOct 9,2022 and other videos.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.