கொடிவழிச் செய்தி

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
名にしおはば
逢坂山の
さねかづら
人に知られで
くるよしもがな

கனா எழுத்துருக்களில்
なにしおはば
あふさかやまの
さねかづら
ひとにしられで
くるよしもがな

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: கவிஞர் சதாகத்தா

காலம்: கி.பி. 873-932.

ஜப்பானிய மன்னரின் வலங்கைப் பிரிவு அமைச்சராக இருந்தவர். ஜப்பானிய இலக்கியத்தில் இவரது பங்களிப்பாக 19 செய்யுள்கள் இடம்பெற்றிருக்கின்றன. யமாதோவின் கதைகள் எனும் தொகுப்பில் பல கதைகளில் இவர் இடம்பெற்றிருக்கிறார். இத்தொடரின் 18வது பாடலை இயற்றிய கவிஞரும் ஓவியருமான தொஷியுக்கி, 16வது பாடலை இயற்றிய யுக்கிஹிரா, 17வது பாடலை இயற்றிய நரிஹிரா, இன்னும் பிறரைப் போன்று இவரும் ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்தவர். அரசராக முடிசூட்டிக்கொள்ளாமல் அரசகுடும்பத்துடன் மணவினைகள் மட்டுமே கொள்ளும் குடும்பமாதலால் இவரது தமக்கை தனேகோ பேரரசர் உதாவின் மனைவியருள் ஒருவராக இருந்தார். தனேகோவுக்குப் பிறந்த தாய்கோ உதாவுக்கு அடுத்து அரசராகப் பதவியேற்றார்.

பாடுபொருள்: காதலியைச் சந்திக்க ஏங்குதல்.

பாடலின் பொருள்:

சந்திப்புச் சரிவில் இருக்கும் கஜுரா செடியின் படர்கொடியைச் சுருட்டி நீட்டினால் அதன்வழியே நான் ஏங்கும் செய்தி கடத்தப்படும் என்ற நம்பிக்கை உண்மையானால் பிறர் அறியாவண்ணம் அது உன்னை என்னிடம் கொண்டு சேர்க்குமன்றோ?

சந்திப்புச் சரிவு. இத்தொடரின் 10வது பாடலான “பிறத்தலே இறத்தலின் முதல்படி” நினைவுக்கு வருகிறதா? பிறர் அறியாவண்ணம் சந்தித்தல் 18வது பாடலான “கனவிலேனும் வாராயோ?”வை நினைவூட்டுகிறதா? ஆம். அதே நிகழிடம். அதே பொருள். அதே சொல்விளையாட்டு. இதுவும் சிலேடை விளையாட்டுகள் நிறைந்த ஓர் அகப்பாடலே.

பழங்கால ஜப்பானிய வழக்கத்தில் திருமணம் முடிந்தபின் மனைவி தன்வீட்டில் இருக்கத் தலைவன் அங்குச் சென்றுவருவான் என்று பார்த்தோமல்லவா? இப்பாடலில் உன்னை என்னிடம் அழைத்துவரும் எனக் குறிப்பிட்டிருப்பது பாடியவர் ஆணாக இருந்தாலும் தன்னைப் பெண்ணாகப் பாவித்துப் பாடுவதுபோல் இயற்றப்பட்டிருப்பதால்தான். கொசென்ஷூ தொகுப்பில் இப்பாடலுக்கு எழுதப்பட்டிருக்கும் முன்னுரையும் இதை உறுதிப்படுத்துகிறது. 

வருதல் என்பதை ஜப்பானிய மொழியில் 来る – kuru என்று சொல்வார்கள். (கொடியைச்) சுருட்டுதல் என்பதையும் 繰る – kuru என்று சொல்வார்கள். ஒரே ஒலிப்பை உடைய இருவேறு சொற்களான கொடியைச் சுருட்டுதலையும் தலைவன் தலைவியைத் தேடி வருதலையும் குறிக்கச் சிலேடையைப் பயன்படுத்தி இருக்கிறார்.

நாம் 10ம் பாடலில் பார்த்ததுபோல் தற்போதைய கியோத்தோ மாகாணத்தையும் ஷிகா மாகாணத்தையும் இணைக்கும் இடம்தான் இந்தச் சந்திப்புச் சரிவு. பாடல் நிகழும் இடத்தையும் (逢坂) காதலியைச் சந்திப்பதையும் 逢ふ – au என்ற பொதுச்சொல்லால் குறிக்கிறார். இந்தச் சந்திப்புச் சரிவில் இருக்கும் ஒரு கொடியைச் சுருட்டி மீண்டும் காதலர் இருக்கும் திசையை நோக்கி நீட்டினால் அதன் நீண்ட தண்டு வழியே காதலரின் ஏக்கம் தன் இணைக்குக் கடத்தப்படும் என்றொரு நம்பிக்கை அக்காலத்தில் நிலவிவந்தது போலும். இந்தத் தண்டுக்குக் கஜுரா (かずら) என்றும் சனேகஜுரா (さねかずら) என்றும் இரு பெயர்கள் உள்ளன. சனே (さね) என்ற சொல்லுக்குக் காதலர்கள் கூடிக் களித்திருத்தல் என்றும் ஒரு பொருளுண்டு. காதல் ஏக்கத்தைக் கடத்தும் தண்டு என்பதால் கஜுராவுக்குப் பதிலாக சனேகஜுரா என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தது கவிஞரின் கவித்திறத்தைக் காட்டுகிறது.

வெண்பா:

பிரிவின் வலியது செப்பும் குலவற்
சரிவிற் படரும் கொடியின் - விரிவில்
கடக்கும் தவிப்பு உதவ அணங்கைக்
கொணருமோ என்துயர் மீட்டு?
Series Navigationகாணும் பேறைத் தாரீரோ? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.