காட்டு மல்லி

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

(தெலுங்கின் முதல் தலைமுறை எழுத்தாளரகளில் ஒருவரான இல்லிந்தல சரஸ்வதி தேவி 15 ஜூன் 1918 ல் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்தில் பிறந்தார். அவருக்கு 12 வயதில் கம்மம் மாவட்டம் மதிர அருகில் உள்ள தெலகவரம் கிராமத்தைச் சேர்ந்த இல்லிந்தல சீதாராம் என்பவரோடு திருமணமானது. சரஸ்வதி தேவி ஹைதராபாத்தில் படித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக 1935ல் நிறுவப்பட்ட ஆந்திர யுவதி மண்டலியின் நிறுவன உறுப்பினர்களில் சரஸ்வதி தேவியும் ஒருவர். இவர் பத்திரிகைகளுக்கு கட்டுரை, கதைகள், ரேடியோ பிரசங்கங்கள் எழுதினார். பத்திரிகைகளில் தொடர்கள் எழுதினார். இவர் எழுதிய கதைகள் ஸ்வர்ண கமலாலு (1982),துளசிதளாலு (1994)என்ற பெயர்களில் மிகப்பெரிய தொகுதிகளாக பிரசுரமாயின. 13 நாவல்கள் எழுதியுள்ளார். “பாஞ்சன் நீ காலு மொக்குதா” என்ற நாவலும், பால சாகித்தியமும் கூட எழுதினார்.)

ஏரி நீரில் முகம் கழுவிக் கொண்டு அதன் இனிய தூய்மையான நீரை இரண்டு கைகளாலும் அள்ளிப் பருகினான் சிவநாதம். ஏரிக்கரை மணலில் சற்று நேரம் அமர்ந்திருந்த போது அந்த தண்ணீரின் மீதிருந்து மிதந்து வரும் குளிர்ந்த காற்றில் உடலும் உயிரும் ஒன்றிணைந்ததை உணர்ந்தான். பல இனிய நினைவுகள் நினைவுக்கு வர, மனம் திறந்து வாய்க்கு வந்த ராகங்களை உரக்க பாடிய சிவநாதமுக்கு மணி எத்தனை ஆயிற்று என்று கூடத் தெரியவில்லை.

அவ்வாறு பாடியபடியே துண்டை மணல் மீது விரித்து தலையின் கீழ் கையை வைத்துப் படுத்தான். ஏழு குதிரைகள் மீது பவனி வரும் சூரியன் தன் வேலையை முடித்துக் கொண்டு திரும்பினான். ஆகாயத்தின் மீது மேகங்கள் பல வடிவங்களை எடுத்து நீல நிறத்தை ஒட்டியும் ஒட்டாமலும் பூசிக்கொண்டு விரைந்து சென்றன.

அவன் அவ்வாறு தனியாக உல்லாசமாக கவலையற்று இனிமையாக மனம் நிறைய பாடியபடி இருள் கவியும் நேரத்தில் எழுந்தான். துண்டை உதறி எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

ஏரிக்கரையில் மணல் பகுதியைத் தாண்டிய பின் சற்று தூரம் வரை பனங்காடு இருந்தது. அந்தக் காட்டில் அங்கங்கு தென்படும் ஒன்றிரண்டு குடிசைகளை தாண்டிய பின் தான் ஊர் வரும்.

சிவநாதம் பெரிய பெரிய அடியாக எடுத்து வைத்து காட்டித் தாண்டி வந்தபோது இடது காலில் ஏதோ தட்டுப் பட்டது. சுருக்கென்று குத்தியதால் அது ஏதாவது பூச்சியாக இருக்கும் என்று நினைத்து ஓவென்ற கூச்சலிட்டான்.

அந்தக் கூச்சலில் அங்கிருந்த குடிசைகளில் இருந்து சிறியவர்களும் பெரியவர்களும் பிலபிலவென்று வெளியில் ஓடி வந்தார்கள். அனைவரும் பார்த்துக்கொண்டு நின்றபோது, குருவய்யா மட்டும் குடிசையில் இருந்து ஒட்டமாக ஓடி வந்து, “என்ன ஆயிற்று?” என்று கேட்டு அருகில் வந்தான்.

சிவநாதம் தரையில் அமர்ந்து காலை மடியில் வைத்துக்கொண்டு இருட்டில் கண் தெரியாவிட்டாலும் காலை பிடித்து தடவிக்கொண்டே என்ன ஆயிற்றோ தெர்யவில்லையே என்று ஆராய்ந்து கொண்டிருந்தான்.

குருவய்யா தன் குடிசைக்கு ஓடி ஒரு சிம்னி விளக்கு எடுத்து வந்தான். அந்த வெளிச்சத்தில் அவனருகில் சென்று காலை பிடித்துப் பார்த்து, “கருவேல முள்ளுங்க சாமி” என்று கூறிக் கொண்டே பலமாக கையால் முள்ளை எடுத்துத் தூர எறிந்தான்.

சிவநாதம் காலைத் தடவி பார்த்துக்கொண்டு, “அப்பாடா!” என்றான்.

“எங்கள் குடிசைக்கு வாங்க சாமி. வலி தெரியாம இருப்பதற்கு மருந்து தடவுறேன்” என்று சொல்லி குருவய்யா சிவநாதத்தை அழைத்துச் சென்று ஒரு கோந்து போல் இருந்த பதார்த்தத்தை காயம்பட்ட இடத்தில் பூசினான்.

அவன் வேண்டாம் வேண்டாம் என்றாலும் கேட்காமல் சிம்னி விளக்கை எடுத்துக்கொண்டு பனங்காட்டைத் தாண்டும் வரை துணை வந்தான்.

சிவநாதத்திற்கு குருவனோடு அவ்வாறுதான் அறிமுகமானது. அது முதல் சிவநாதம் ஏரிக்கு வரும் போதும் போகும்போதும், “குருவா சௌக்கியமா?” என்று கேட்பது வழக்கமாகி விட்டது. அவர்கள் இருவரிடமும் அது பழக்கமாகி நட்பாக மாறியது.

அவனுக்கு அந்த ஏரிக்கரையும் குருவனோடான உரையாடலும் நித்திய வாழ்க்கையோடு கலந்து போனது.

ஆவணி, புரட்டாசி மாதங்களில் சிவநாதம் வீட்டிலேயே இருந்து விட்டான். அந்த ஆண்டு மழை பெரிதாகப் பெய்ய ஆரம்பித்தது. அதோடின்றி புதிதாக குடித்தனம் வைத்ததில் அவனுக்கு நேரமில்லாமல் போய்விட்டது.

மனைவி சகுந்தலா சமையல் பணியில் கூட அவனுடைய உதவியை எதிர்பார்த்து காத்திருப்பாள். அவன் உதவி செய்யாவிட்டால் சமையல் சாமான்கள் எல்லாம் அங்கங்கே கிடக்கும். துணிமணிகளும் தாறுமாறாக அங்கங்கே சுருட்டி எறிந்து கிடக்கும். அது என் வேலை இல்லை என்பது போல மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். ஆபீஸிலிருந்து வந்து அவற்றை எல்லாம் அவன்தான் அடுக்கி வைக்க வேண்டும்.

சிவநாதம் நீதிமன்றத்தில் சிறிய பணியில் இருந்தான். குறைந்த சம்பளம். இருப்பதைக் கொண்டு திருப்தியோடு வாழ வேண்டும் என்பது அவனுடைய எண்ணம். அவனுக்கு ஏதாவது பொருள் ‘இல்லை’ என்றோ ‘போதாது’ என்றோ சொல்வதற்குப் பிடிக்காது. ஆனால் சகுந்தலா அதற்கு நேர்மாறானவள்.

காலையில் எழுந்ததுமே, “எங்க மாமா வீட்டில் எங்க அத்தை எப்போது தூங்கி எழுந்தாலும் அவளுக்குப் பரவாயில்லை. எழுந்ததிலிருந்து யாருடனாவது வம்பு பேசிக் கொண்டு உட்கார்ந்திருப்பாங்க. மதியம் பன்னெண்டு ஆகும் அவுங்க குளிப்பதற்கு” எனபாள்.

அவள் சொல்வதை காதல் வாங்கிக் கொள்ளாமல் காலை ஒன்பது மணிக்கு ஆபீசுக்குச் செல்ல வேண்டிய சிவநாதம் அவளுக்கு சமையல் அனைத்திலும் உதவி செய்து எல்லாவற்றையும் எடுத்துக் கொடுப்பான். சமையல் ஆன பின் அவனுக்கு அழகாய் இலை போட்டு உடனே சாப்பாடு பரிமாறிவிட மாட்டாள்.

“உங்களுக்குத் தெரியுமா? என் அக்கா அழுக்கு புடவைகளை எல்லாம் சுருட்டி மூலையில் எறிவாள். ஆனாலும் அவளுக்கு ரெண்டு பீரோ நிறைய புடைவை இருப்பதால் என்ன செய்தாலும் அவளுக்கு செல்லும்” என்று புலம்பிக் கொண்டே கையில் அணிந்திருக்கும் வளையல்களை பார்த்துக் கொள்வாள்.

“தேஞ்சு போயிடிச்சுங்க… இதைப்பற்றி யார் கவலைப்படுறா?” என்று முணுமுணுத்தவாறு துவையில் அரைப்பதற்கு கிளம்புவாள். அதற்குள் சிவநாதம் தானே சாப்பாட்டை எடுத்து போட்டுக் கொண்டு சாப்பிட்டு ஆபீசுக்கு கிளம்பி, “போய்ட்டு வரேன். கதவை சாத்திக் கொள்” என்பான்.

“ஐயோ ராமா! அதற்குள் இத்தனை அவசரமா?” என்று புருவத்தைச் சுருக்கி முகத்தை தொங்கவிட்டுக் கொண்டு கதவை தாழிட்டுக் கொள்வாள்.

ஐப்பசி மாதத்தில் சிறு குளிர் நுழைந்தது. சிவநாதம் பழைய வழக்கப்படி ஏரிக்கரைக்கு சென்று தனியாக மணலில் படுத்து, இறுகிப்போய் பாரமான மனதை காற்றுக்கு ஆற வைத்து இனிமையாக உளம் குளிரப் பாடியபடி இருட்டும் வரை இருந்து விட்டு வீட்டுக்குத் திரும்பினான்.

அது சரத் கால இரவு. சந்திரனின் கிரணங்கள் குடிசைக்குள் நுழைந்து விந்தையான வெளிச்சத்தை அளித்தன. சிவநாதம் மெதுவாக அடி எடுத்து வைத்து பனங்காட்டிற்குள் நுழைந்த போது, சாமி!” என்ற ஒரு குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தான். “என்ன குருவய்யா, எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான்.

“உங்களை ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ரொம்ப நாளாக வரவே இல்லையே” என்றான்.

“என்ன விஷயம்?” என்று சிவநாதம் குருவய்யாவின் பக்கம் திரும்பினான்.

“என் மனைவி போச்சாலுவை ஊரிலிருந்து அழைத்து வர வேண்டும். நல்ல நாள் பார்த்து சொல்லுங்க சாமி” என்றான்.

சிவநாதத்திற்கு சிரிப்பு வந்தது. எனக்கு எல்லாம் தெரியும் என்று இவன் நினைக்கிறான் போலும். ஆனாலும் அவன் அத்தனை ஆசையோடு என்னை நம்பிக் கேட்கின்றான். எனக்கு தெரியாது என்று எதற்காக சொல்ல வேண்டும்? என்று எண்ணியபடி, “பார் குருவா! உனக்கு ரொம்ப சீக்கிரமாக அழைத்து வரவேண்டும் என்று உள்ளதா?” என்று கேட்டான்.

வெட்கத்தோடு சிரித்து கையைப் பிசைந்து கொண்டு, “ஆமாங்க சாமி” என்றான்.

“அப்படியானால் நாளை மறுநாள் புதன்கிழமை தசமி. நல்ல நாள்தான். போய் அழைத்து வர உன்னால் இயலுமா?” என்று கேட்டான்.

குருவன் எம்பி குதித்தான். “கும்பிடுறேன் சாமி. உங்களை மீண்டும் பார்க்கிறேன்” என்று அந்த ஒரே ஓட்டமாக அந்த இருட்டில் கலந்து போனான்.

அதன் பிறகு பதினைந்து நாட்கள் வரை சிவநாதம் எங்கும் நகர முடியாமல் போனது. ஆபீஸில் வேலை. வெளியில் சொல்ல முடியாத வீட்டுச் சண்டைகள். நடுநடுவில் ஓயாத மழை. இவற்றோடு சரியாகிவிட்டது. ஏரிக்கரைக்குச் செல்லாத நாளெல்லாம் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. மனம் ஏதோ விவரிக்க முடியாத பாரமாக இருந்தது. தனியாக மணலில் படுத்து அந்த விசாலமான எல்லையற்ற ஆகாயத்தைப் பார்த்து மினுக் மினுக்கென்று ஒளிரும் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு, பாம்பு போல் வளைந்தோடும் அந்த ஏரி நீரில் மன வேதனைகளையெல்லாம் தொலைத்து விட்டு வர வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். ஆனால பணம் செலவில்லாத அந்த கோரிக்கை கூட பதினைந்து நாட்களாக நிறைவேறவில்லை.

அன்று சிலுசிலுப்புக் காற்று இல்லை. ஆகாயமும் தெளிவாக இருந்தது. மனதைத் தெளிவாகிக் கொண்டு ஒரு பாட்டை சீட்டி அடித்து பாடியபடி மெதுவாக நடந்தான் சிவநாதம். அவன் எப்போதும் போகும் இடத்தைச் சென்றடைந்தான். துண்டைத் தரையில் விரித்து படுக்க நினைத்த போது குருவய்யா சத்தம் செய்யாமல் அங்கு வந்து சேர்ந்தான்.

“சாமி சாமி!” என்றழைத்தான்.

குருவனை பார்த்தவுடன் அவன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு வருவதற்கு தான் நல்ல நாள் பார்த்து கூறிய விஷயம் நினைவு வந்தது.

குருவன் வெட்கத்தால் சிரித்துக் கொண்டு, “சாமீ! நீங்க சொன்ன அன்றே போச்சாலுவை அழைத்து வந்து விட்டேன். யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை” என்றான்.

“அப்புறம் என்ன? நல்லது தானே!” என்றான் சிவநாதம்.

“அதுக்கில்லிங்க. நான் எப்போது போனாலும் இந்த வாரம் வேண்டாம் என்றோ மீண்டும் வா என்று என்னை துரத்தி விட்டுக் கொண்டே இருந்தார்கள். நீங்கள் சொன்ன முகூர்த்த விசேஷமோ என்னவோ உடனே என்னுடன் அனுப்பி விட்டார்கள். அப்போதிலிருந்து சுவையான ருசியான சாப்பாடு கிடைக்கிறது. என் அம்மா இறந்த பின்பு ருசியான சாப்பாட்டுக்கு ஏங்கிட்டிருந்தேன் தெரியுமா, சாமி”

“சரி. அப்புறம் என்ன? சுகமாக இருக்கிறாய்தானே?” என்றான் சிவனாதம்.

அவனுடைய சந்தோஷத்தைப் பார்த்து சிவநாதம் ஆனந்தமடைந்தான்.

“எல்லாம் உங்கள் ஆசி சாமி. நீங்கள் என்னுடைய குடிசைக்கு ஒருமுறை வர வேண்டும்”

“நீ எப்போது வரச் சொன்னாலும் வருகிறேன். எப்போது வர வேண்டும்?”

“இப்போதே வாங்க சாமி. என்னுடனே வாங்க” என்று வழிகாட்டிக் கொண்டு சென்றான் குருவன்.

சிவநாதன் உடனடியாக எழுந்து துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு குருவனின் பின்னால் நடந்தான். பனங்காட்டின் முதல் திருப்பத்தில் திரும்பிய உடனே அவனுடைய குடிசை தென்பட்டது. வலது பக்கமாகச் சென்றதும் வாயிற்படி எதிரானது. அதைத் தாண்டி கம்புகளால் கட்டப்பட்ட குடிசை. அதன் முன்புறம் இரண்டடி அகலத்தில் இரண்டு புறங்களிலும் திண்ணை. சிவப்பு மண்ணால் பூசப்பட்டு கோலமிட்டு இருந்தது. குடிசை வாசலிலும் அழகாக நான்கு கோடுகளில் கோலம் தென்பட்டது.

திண்ணையின் மீது சிவநாதத்தை உட்காரச் சொல்லி குருவன் உள்ளே சென்று நான்கு வாழைப்பழங்களை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தான். போச்சாலுவும் கருத்த முகத்தில் பெரிய பெரிய கண்களோடு ஒளிவிட்டபடி வெளியில் வந்தாள். தலையை எண்ணெய் தடவி படிய வாரி இருந்தாள். சிவப்பு கனகாம்பரத்தை தலையில் சூடி இருந்தாள். சந்திரகாந்தக் கல் நிறத்தில் கைத்தறி சேலையும் கடலைப் பூ நிறத்தில் ரவிக்கையும் அவளுடைய உடலின் பிரகாசத்திற்குப் பொருத்தமாக இருந்தன.

அவள் தலை குனிந்து குருவனின் அருகில் நின்றிருந்தாள். அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் அவனுக்கு வயிறு நிறைந்தாற்போல் இருந்தது. ஏதோ மிகப்பெரிய காரியம் செய்தது போல் சிவநாதத்தின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

“எப்போதும் ஆனந்தமாக இருங்கள்” என்று அவர்களை வாழ்த்தி விட்டு எழுந்தான்.

இருவரும் கை குவித்து சிவநாதத்தை வணங்கி வழியனுப்பினார்கள். காட்டில் மரக்கட்டைகளை வெட்டி மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்து ஊரில் சென்று விற்பதே குருவனின் தொழில். திரும்பி வரும்போது அன்றைய சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்து வீட்டில் கொடுப்பான். சிம்னி விளக்கு வெளிச்சத்தில் அந்த சாமான்களை சுத்தம் செய்து குருவன் ஏரிக்குப் போய் கைகால் கழுவிக் கொண்டு கயிற்றுக் கட்டிலை வாசலில் போட்டு சற்று படுத்து ஓய்வெடுப்பதற்குள் போச்சாலு சமைத்து முடித்து விடுவாள். இருவரும் கொஞ்சிப் பேசிக் கொண்டு ஒரே தட்டில் சாப்பிடுவார்கள். இந்த விஷயங்களை எல்லாம் குருவன் சிவநாதத்திதம கூறியபோது சிவநாதத்திக்ருச் சொல்ல முடியாத ஆனந்தம் ஏற்பட்டது.

தீபாவளி கழித்த நான்காம் நாள் சிவநாதம் அந்தப் பக்கம் சென்றபோது குருவனின் நினைவு வந்து அவர்களின் குடிசையைப் பார்த்து நடக்க ஆரம்பித்தான். குடிசைக் கதவு லேசாக மூடி இருந்தது. உள்ளே வெளிச்சம் தெரிந்தது. குருவனை அழைத்தான் சிவநாதம்.

போச்சாலு வெளியில் வந்து, “சாமி! அவரால எழுந்திருக்கவே முடியவில்லை” என்றாள்.

அவளின் பின்னால் சிவநாதமும் உள்ளே சென்றான். குருவன் கட்டிலில் படுத்து முனகிக் கொண்டிருந்தான்.

“இது என்ன குருவா? ஏன் படுத்து முனகிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.

“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது கையில் வெடித்துவிட்டது” என்றான் குருவன். முனகுவதை நிறுத்தி எழுந்து அமர்ந்து, “சாமிக்கு ஒரு பாயைப் போடு” என்று போச்சாலுவிடம் கூறினான்.

“சாமி ஏதோ உங்க தயவால வாழுறோம். போச்சாலு! உன்னுடைய புடவையை ஐயாவுக்கு காட்டு” என்றான்.

“உங்களைப் பார்த்ததும் இவருக்கு முனகல் கூட போய்விட்டது பார்த்தீர்களா, சாமி? நான் வேண்டாம் என்று சொன்னாலும் தீபாவளிப் பண்டிகைக்கு இந்த புள்ளி போட்ட புடவையும் புறாக் கண்ணு ரவிக்கையும் வாங்கி வந்தாருங்க. நான் இங்கே வந்தபின் தான் இந்த கொலுசும் கடிகையும் வாங்கித் தந்தாருங்க” என்று போச்சாலு எடுத்து வந்து காட்டினாள்.

“குருவா உன் சம்பாத்தியம் என்னை விட நன்றாக இருக்கிறது. என்னை விட நீயே மேல்” என்று சிவநாதம் கூறிய போது குருவன் புன்சிரிப்போடு தலையைக் குனிந்து, “சாமி! போச்சாலு செய்த வேலையை பார்த்தீங்களா? அது இங்கு வந்த அன்றைக்கு வளையல் வாங்கிக் கொள் என்று அவள் அம்மா பத்து ரூபாய் கையில் வெச்சாங்களாம். அதைக் கொண்டு எனக்கு வேட்டி வாங்கி விட்டாள். அதை கட்டிக் கொள்ளச் சொல்லி வறுபுறுத்திக் கொண்டே இருக்கிறாள்” என்றான்.

அந்த வீடு, அந்த சூழல், அந்த தம்பதிகள், பரஸ்பரம் அவர்களிடையே உள்ள காதல், அன்பு, ஒருவர் மீது ஒருவர் கூறும் உள்ள சரசமான குற்றச்சாட்டுகள், எல்லாம் சிவநாதத்திற்கு மதுரமாக இனித்தன.

சற்று நேரத்தில் அதிலிருந்து தெளிந்து, “உன் கை எப்படி இருக்கிறது? காட்டு” என்று கேட்டான் சிவநாதம்.

“விரல்கள் எல்லாம் மடிந்துவிட்டன சாமி. கையை முழுவதும் திறக்க முடியவில்லை” என்று கூறிக் கொண்டே கையைக் காண்பித்தான்.

“குருவா சீக்கிரம் கையை சரி செய்து கொள். உழைத்து சம்பாதிக்க வேண்டியவன் அல்லவா” என்று சொல்லிவிட்டு எழுந்து வீட்டை நோக்கி நடந்தான்.

அதன் பிறகு குருவன் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு சிவநாதத்திற்கு நேரமில்லாமல் போனது. ஆபிஸ் பணிகளின் அவசரத்தில் அவனைப் பற்றிய நினைவே வரவில்லை.

ஒரு நாள் சிவநாதம் நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்கு வரும்போது வழியில் சுள்ளிக் கட்டு மூட்டையை தலையில் சுமந்து கொண்டு போச்சாலு தென்பட்டாள். குருவனைப் பற்றி கேட்டான். அவனுக்கு இன்னும் கை சரியாகவில்லை என்றும் தானே கட்டைகளை வெட்டி தலையில் சுமந்து விற்று வருவதாகவும் கூறினாள். குருவன் சிவநாதத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பதாக கூறினாள். “சரி. ஒரு நாள் வருகிறேன்” என்று சொல்லி விட்டானே தவிர உடனே அவனைப் பார்ப்பதற்கு செல்ல முடியாமல் போனது.

இவ்வாறு இருக்கும் போதே எதிர்பாராமல் காலச்சக்கரம் ஒருமுறை சுற்றி வந்தது. அதற்குள் அவன் ஒரு குழந்தைக்குத் தந்தையானான். ஆறு மாதத்திற்குள் அவனுடைய தந்தை காலமானார். இரு தம்பிகளோடு தாய் அவன் வீட்டிற்கே வந்து விட்டாள். பொறுப்பு அதிகமாகி சம்சாரத்தில் மூழ்கி எழுந்து கொண்டிருந்தான் சிவநாதம்.

அன்று சிவநாதம் ஆபீசிலிருந்து ஒரு மணி நேரம் முன்பாகவே வீட்டுக்குக் கிளம்பினான். அந்த ஒரு மணி நேரத்தில் வீட்டில் ஏதாவது வேலை செய்யலாம் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் பாதி தூரம் வந்த பின்பு குருவனின் ஞாபகம் வந்து நேராக அங்கு சென்றான். குடிசை வாயிலில் நின்று பார்த்தான்.

குருவன் கட்டில் மீது உட்கார்ந்து கொண்டு பக்கத்தில் இருந்த தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தான்.

“எத்தனை நாளாயிற்று சாமி உங்களைப் பார்த்து. உள்ளே வாங்கய்யா” என்றான்

எழுந்து நின்று.

“சொல்லவே இல்லையே? மகனா மகளா?” குடிசைக்குள் நுழைந்து ஆச்சரியத்தோடு கேட்டான் சிவநாதன்.

“ஒன்று அல்ல சாமி. ரெண்டு. இரண்டும் பெண் குழந்தைகள்” என்றான்.

“ஆஹா நீ எத்தனை அதிர்ஷ்டசாலி. ஆமாம்… நீ ஏன் வீட்டில் இருக்கிறாய்? போச்சாலு எங்கே சென்றாள்?”

“என் கையைப் பார்த்தீங்களா சாமி. என் கை இப்படி ஆகிவிட்டது. நான் இந்த கையால் இனி விறகு வெட்ட முடியாது. என் காலைப் பார்த்தீர்களா? இழுத்து இழுத்து நடக்க வேண்டி இருக்கு. எனக்கு பதில் போச்சாலு கஞ்சித் தண்ணிக்காக விறகு வெட்டி பணம் சம்பாதித்து வருகிறாள். என்ன செய்வது? இந்த குழந்தைகளுக்கு கஞ்சியைத் தானே ஊற்றி வளர்க்கிறோம்”

சிவநாதம் பேசாமல் குருவனை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் குழி விழுந்து முகம் சுருங்கிக் கிடந்தது. நன்றாகக் கருத்து விட்டான். அதற்குள் போச்சாலு வந்தாள்.

“சாமி, ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள். குழந்தைகளை பார்த்தீங்களா” என்று ஒவ்வொரு குழந்தையாக எடுத்து வந்து காண்பித்தாள்.

போச்சாலுவிடம் இதுவரை இருந்த பளபளப்பு இல்லை. ஆனால் கண்களில் தேஜஸ் மாத்திரம் குறையவில்லை. சிவநாதம் பாக்கெட்டில் கையை விட்டு இரண்டு ரூபாய்களை எடுத்து போச்சாலுவின் கையில் வைத்து, “குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி கொடு” என்றான்.

அத்தனை தூரம் வந்தோமே என்று ஏரிக்கரைக்கு சென்றான். ஏழு மணியைத் தாண்டும் வரை அங்கு மணலில் படுத்துக் கிடந்தான். அன்று மாலை காய்கறி வாங்கி வருவதாக வீட்டில் சொன்னது திடீரென்று ஞாபகம் வந்தது. மெதுவாக எழுந்து கிளம்பினான்.

அவன் வீடு சிறியது. ஒரு சமையலறை, படுக்கையறை, வராந்தா. அதிலேயே இத்தனை பேர் வாழ வேண்டும். தம்பிகள் படிக்க வேண்டும். தாய் வந்ததிலிருந்து வீட்டு வேலை எல்லாவற்றையும் அவளே செய்கிறாள். வீட்டுப் பூசல் வெளியில் தெரியக்கூடாது என்று அவனுடைய தாய் சகுந்தலாவைப் பற்றி வாயே திறப்பதில்லை. வீட்டுக்கு வீடு இருக்கும் இல்லறச் சண்டைகள் ஒவ்வொரு நாளும் சிவநாதத்திற்கும் எதிர்ப்பட்டுக் கொண்டே இருந்தன. அந்த மாதிரி நாட்களில் அவன் தாமதமாக வீட்டிற்கு செல்வான்.

உகாதிப் பண்டிகையன்று மாலை ஆறு மணி அளவில் கிளம்பி குருவனின் குடிசை முன் நின்று பார்த்தான். கதவு வெறுமனே சாத்தியிருந்தது. அவன் திண்ணையில் அமர்ந்து அந்த வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த கோலங்களையும் வாயிலில் கட்டியிருந்த தோரணத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் உள்ளேயிருந்து ஏதோ பேச்சுக் குரல் காதில் விழுந்தது.

“என் பேச்சைக் கேள். முகத்தைக் கழுவி பொட்டு வைத்துக்கொள். பெட்டியிலிருந்து அந்த புடவையை எடுத்து கட்டிக் கொள். குழந்தைகளுக்கும் சாமி கொடுத்த பணத்தில் தைத்த அந்த சட்டைகளைப் போடு” என்று குருவன் கூறுவது சிவநாதத்தின் காதில் விழுந்தது.

“இதெல்லாம் நான் செய்கிறேன். ஆனால் நீ முதலில் எழுந்து நான் அப்போது வாங்கித்தந்த வேட்டியைக் கட்டிக் கொண்டால்தான் நானும் புதுப் புடவை கட்டுவேன்” என்றாள் போச்சாலு.

“நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு புதுத் துணி உடுத்துவேன்? ஒரு வருடமாக படுக்கையில் கிடக்கிறேன். உன் சம்பாத்தியத்தில் வாழ்கிறேன். பாதி உயிர் போனது போலத்தான் என் வாழ்க்கை”

“இதோ பாரு. அப்படி எல்லாம் பேசாதே” என்றது போச்சாலுவின் குரல்.

ஐந்து நிமிடங்கள் வரை அங்கிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. இருவரும் உடை மாற்றிக் கொள்கிறார்கள் என்று நினைத்தான் சிவநாதம்.

திடீரென்று போச்சாலு கதவைத் திறந்து குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தாள். சிவநாதத்தைப் பார்த்தவுடனே ஆச்சரியப்பட்டு, “எத்தனை நேரமாச்சு சாமி வந்து?” என்று கேட்டாள்.

அந்த சொற்களைக் கேட்டு குருவன் இன்னொரு குழந்தையை தூக்கிக்கொண்டு காலை இழுத்தபடி வெளியில் வந்து திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

“சாமி நிற்கும் போது நீ உட்காரலாமா?” என்றாள் போச்சாலு.

புதிதாக குடித்தனத்திற்கு வந்தபோது வாங்கிய புள்ளி வைத்த புடவையை குருவன் கூறியது போல் கட்டிக் கொண்டிருந்தாள். தலையில் சிவப்பு காகித பூக்களை வைத்திருந்தாள். குருவன் அப்போது வாங்கிய வேட்டியை கட்டி இருந்தான். அவர்கள் இருவரும் தீபாவளியன்று பார்த்தது போலவே இருந்தார்கள். இருவரின் முகங்களிலும் சிரிப்பு தாண்டுவமாடின. நடுநடுவில் குழந்தைகளைப் பார்த்து கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

“குருவா இன்று உகாதிப் பண்டிகை அல்லவா? இந்தா பூரணங்கள்” என்று வீட்டிலிருந்து எடுத்து வந்த இனிப்பை அவன் கையில் வைத்தான்.

“தின்னுங்க” என்று இனிப்பை எடுத்து குருவனின் வாயில் இட்டாள் போச்சாலு.

“நீ?” என்று அவன் கேட்டான்.

“நான் இருக்கட்டும். நீ தின்னு”

“இத பார்த்தீர்களா சாமி? இவள் எப்போதும் இப்படித்தான். எது இருந்தாலும் எனக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்து விடுவாள். காலையில் கூட எதுவும் சாப்பிடுவதில்லை. அவளுக்கு எதுவும் மீறுவதில்லை” என்றான்.

“அதையெல்லாம் ஏன் சொல்கிறாய்?” என்று போச்சாலு குருவனின் பக்கம் பார்த்து கோபித்தாள்.

ஆனால் குருவன் அவள் பக்கம் திரும்பவில்லை.

“அப்படி என்றால் நீங்கள் இருவருமே ஆளுக்கு கொஞ்சமாக சாப்பிடுங்கள்” என்றான் சிவநாதன்.

இருவரும் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு எழுந்தான்.. அவனை பனந்தோப்பு தாண்டும் வரை இருவரும் வந்து வழி அனுப்பினார்கள்.

அப்போது சிவநாதம், “குருவா! எனக்கு வேறு ஊருக்கு வேலை மாற்றம் ஆகிவிட்டது. நான்கு நாட்களில் நாங்கள் கிளம்பி விடுவோம்” என்றான்.

“இங்கயிருந்து போய்விடுவீர்களா?” என்று கேட்டு இருவருமே பரிதாபமாக பார்த்தார்கள்.

“அன்று முள்ளை எடுத்து விட்டதிலிருந்து எங்களுக்கு ஒரு தந்தை போல இருந்தீர்கள் சாமி” என்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தான் குருவன்.

சிவநாதத்திற்கும் கண்களில் நீர் நிரம்பியது. அவன் கண்ணில் இருந்து மறையும் வரை அவர்கள் பார்த்துக்கொண்டு நின்று விட்டு பின் திரும்பிச் சென்றார்கள்.

அன்று இரவு சிவநாதத்திற்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. இந்த ஊருக்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஆபீஸில் வேலை அதிகமானாலும் ஆபீஸர் திட்டினாலும் வீட்டில் சச்சரவுகளின் அழுத்தம் அதிகமானாலும் அந்த ஏரிக்கரைக்குச் சென்று மணிகணக்காக படுத்துக் கிடப்பதில் எல்லாவற்றையும் மறந்து போவான். அந்த ஏரிக்கரையை பார்த்த உடனேயே மனது அமைதியாகிவிடும். ஆனால் அவனுடைய அந்தராத்மா அவனைத் திருப்பி கேள்வி கேட்டது. “உனக்கு மனசாந்தி அளித்து கவலையை நீக்கியது குருவனின் குடும்பம். அவர்களுடைய மனப்பொருத்தமும் அவர்கள் திருப்தியோடு ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பும் உனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது அல்லவா?” என்று அவனை விமரிசித்தது.

ஆனால் இப்படிப்பட்ட பழங்குடியினரை சீர்திருத்த வேண்டும் என்பதற்காகத்தானே என்னை அரசாங்கம் வேலை மாற்றம் செய்கிறது? என்ற விஷயம் நினைவுக்கு வர, நீண்ட நேரம் படுக்கையில் புரண்டான் சிவநாதம்.

One Reply to “காட்டு மல்லி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.