ஆ. ராஜம்மா எழுதிய நாவல் சம்பகமாலினி

தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

தெலுங்கு புதினப் பெண்கள் ஒரு பார்வை – பகுதி -5

1929ல் பிரசுரமான சம்பகமாலினி என்ற நாவலை எழுதிய ஆ ராஜம்மா அப்போtது திருவல்லிக்கேணி லேடி வெல்டிங்டன் பயிற்சிக் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியையாக இருந்தார். சமஸ்கிருதம், கன்னடம் இரு மொழிகளிலும்    சந்திரமௌலி, மதுவன பிரசாதம் முதலிய படைப்புகளை செய்திருந்தார். சம்பகமாலினி ஒரு வரலாற்று நாவல், ஜனமஞ்சி சுப்ரமண்ய சர்மா இந்த நாவலை எடிட் செய்தார். ஆந்திர நாரிமணிகளுக்கு இந்த நாவல் அர்ப்பணம் செய்யப்பட்டது. உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண்களானாலும் பிற பெண்களானாலும் அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை சாமர்த்தியத்தோடு உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த நாவலின் நோக்கம். அவ்வாறு உபயோகித்து கொண்டு வெற்றியடைந்த இரு பெண்களின் கதை இந்த நாவல். அவர்கள் தாயும் மகளுமாக இருப்பது சிறப்பு.

இந்த நாவலில் கதை நடக்குமிடம் உதயபூர். கதையின் காலம் மேவார் அரசன்  பிரித்விராஜ் சௌஹான் ராஜஸ்தானை வென்று அங்கிருந்து குஜராத், கிழக்கு பஞ்சாப் வரை ஆக்கிரமித்து அஜ்மீர், டெல்லி இரண்டையும் தலைநகரங்களாக ஆட்சி செய்த காலம். அதாவது 12-ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதி. அஜ்மீரும் டெல்லியும் அவனுக்கு தாய் வீட்டில் இருந்து வாரிசத்துவமாக வந்தன என்று ஒரு கதை உள்ளது. அவனுடைய தந்தை சோமேஸ்வரிடமிருந்து வாரிசத்துவமாக வந்தது என்று மற்றொரு கதை வரலாற்றில் பிரச்சாரத்தில் உள்ளது. ராஜம்மா, அம்மா வழி தாத்தாவிடமிருந்து வந்தது என்ற விவாதத்தை ஏற்று கதையைக்  கொண்டு செல்கிறார். அம்மா வழி தாத்தாவின் பெயர் அர்க்கபாலன் அல்லது மூன்றாவது அனங்கபாலன். அவன் டெல்லியை ஆண்டு வந்த காலத்தில் இந்த நாவலின்  பூர்வ கதை நடக்கிறது. நாவலின் கதை  என்ன என்பதை மித்ராநந்தன் மூலம் தெரிவிக்கிறார் ஆசிரியை.

அனங்கபாலனின் சமகாலத்தவனும் நெருங்கிய தோழனுமான பிரதாபசிம்மன் உதயபூர் அரசன். அவனுக்கு ரத்னா தேவி மூலம் பிறந்த மகன் விக்ரம சிம்மதேவன், ஆறு வயதில் தாயை இழந்தான். அனங்கபாலன் பிரதாபனை வற்புறுத்தி முரளாதேவியோடு திருமணம் செய்விக்கிறான். அவளோடு கூட அவளுடைய தம்பி மதனபாலனும் உதயபூர் வருகிறான். விக்ரம சிம்ம தேவனுக்கும் மதனபாலனுக்கும் ஒரே வயது. இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டு ஒன்றாக வித்யாபியாசம் கூட செய்தார்கள். விக்ரமசிம்மனுக்கு குவாலியர் இளவரசி ஹேமப்ரபாவோடு திருமணமானது. இளவரசுப் பதவியும் கிடைத்தது.      ஒரு மகள் கூடப் பிறந்தாள். அப்போது வந்தது ஒரு பெரிய ஆபத்து. தந்தையை கொலை செய்துவிட்டான் என்று குற்றம் சாட்டப்பட்டு டெல்லி அரசர்கள் விசாரணையில் அதை நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவனை யாரோ சிறையில் இருந்து தப்பிக்க செய்தது, மகளைத் தூக்கிக்கொண்டு அவன் ரத்னதீபத்தை அடைந்து அங்கு இருப்பவர்களோடு நட்பாகி நிலம் வீடு எல்லாம் சம்பாதித்து பூந்தோட்டம், பழத்தோட்டம் வைத்து வளர்த்து கப்பல் வியாபாரத்தில் இறங்கி செல்வம் சேர்த்து நிலை பெறுவது பூர்வகதை. 

அவ்வாறு நிலை பெற்று விட்டால் கதை எவ்வாறு நகரும்? அதில் பரபரப்பு ஏற்படுத்துவதற்கு மாளவ தேசத்த்தின் இளவரசன் லலிதகுமாரனின் தீர்த்த யாத்திரையை காரணமாகக் காட்டி காசி, கயா, பிரயாகை வழியாக கப்பலில் சென்று ரத்னதீபத்தில் வந்து இறக்குகிறார் ராஜம்மா.

கடலில் முகமூடி திருடர்களின் கூட்டத்திலிருந்து காப்பாற்றி இந்திராவை வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து அவளுடைய தந்தை மித்ரானந்தன் அவனுக்கு பிரியமானவன் ஆவது ஒரு புறம் இருக்க, தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் போது கூறிய உதயபூர் விவரங்களும் ஹேமப்ரபாதேவி பற்றிய விஷயங்களும் இந்திராவைக் காதலிப்பதாகவும் திருமணத்திற்கு அனுமதி அளிக்கும்படியும் வெளியிட்ட விருப்பமும் மித்ரானந்தனிடம் ஏற்படுத்திய பரபரப்பு கதையில் முதல் திருப்பு முனையாக பதிவு செய்யப்படுகிறது.

அவள் மேல் உள்ள களங்கம் தீர்ந்தால்தான் திருமணம் சாத்தியப்படும் என்று தந்தை சொல்வது, தீர்ந்த உடனே திருமணம் என்ற நம்பிக்கையை அறிவித்து லலிதகுமாரன் ரத்னதீபத்தை விட்டு செல்வது, அதன் பின்பு திருடர்களின் தலைவன் சந்திரசேனன் இந்திராவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கேட்டது, இனி அங்கு இருப்பது நல்லதல்ல என்று தந்தையும் மகளும் ரகசியமாக அங்கிருந்து கிளம்புவது – போன்றவை கதையில் பரபரப்புக்குத் தேவையான விதையை விதைக்கின்றன. அங்கிருந்து உண்மையான கதை துவங்குகிறது.

லலிதகுமாரனோடு திருமணத்திற்குத் தடை விதித்த தந்தை, “நீ களங்கம் படிந்தவள்” என்று தன்னைப் பற்றி கூறிய சொற்கள் உள்ளுக்குள் ஏற்படுத்திய மனப் போராட்டத்திலிருந்து வெளிவந்த இந்திரா, களங்கத்திற்கான காரணங்களைத்  தேடி, தான் களங்கமற்றவன் என்று நிரூபிப்பதற்கு களத்தில் இறங்கத்    தயாராகிறாள். தந்தையோடு நடந்த உரையாடலில் அவர் கூறிய பூர்வ கதைகள் மூலம் அவளுக்கு என்ன புரிந்ததென்றால் தன் களங்கம் விலகுவது, தன் பெற்றோரின் களங்கம் விலகுவதோடு முடிபட்டு உள்ளது என்பது. அவற்றை விலக்க வேண்டிய பொறுப்பு தன்னுடையது என்று தீர்மானித்து உதயபூருக்கு மாறுவேடத்தில் சென்று உண்மையான ரகசியத்தை கண்டுபிடிக்க வேண்டுமென்று நிச்சயம் செய்து தந்தையை அதற்கு சம்மதிக்கச் செய்கிறாள். இந்த இடத்தில் நாவலில் கதை மேலும் ஒரு பரபரப்பான திருப்புமுனைக்குச் செல்கிறது.

ஹேமப்ரபாவுடைய கணவன்  எங்கிருக்கிறான் என்று தெரியாமல் போன பின்பு  உதயபூரிலேயே அதற்கு முன்பு தன் தந்தை கட்டி வைத்த மாளிகை போன்ற வீட்டில் வசிக்கிறாள். முரளாதேவியின் தம்பி மதனபாலனை தத்து எடுத்துக்கொண்டு அரசனாக்குவது, விக்ரமாங்கதேவன் அரச தண்டனைக்கு பயந்து எங்கோ காணாமல் போய்விட்டதாலும் அவளுடைய மகள் புலி அடித்து கொல்லப்பட்டதாலும் மதனபாலனோடு அவளுக்கு விவாகம் நடந்தால் அவளுடைய செல்வமும் மதனபாலனுடைய செல்வத்தோடு சேரும் என்று கற்பனை செய்து மதனபாலனை அதற்கு உற்சாகப்படுத்துவது, அவன் அடிக்கடி அவளுடைய வீட்டுக்கு வந்து செல்வது, அவளுடைய அலங்காரமும் இனிமையான சொற்களும் – இவை அனைத்தும் மதனபாலனுக்கும்  ஹேமப்ரபாவுக்கும் இன்றோ நாளையோ திருமணம் நடந்து விடும் என்று அபிப்பிராயத்திற்கு காரணம் ஆயின.

கணவன் நாடு விட்டு சென்றுவிட்டபோது ஒரு பெண் மற்றொரு திருமணத்திற்கு தயாராவது சமுதாயத்தில் களங்கத்தை ஏற்படுத்தும் குணமே. தாய் அவ்விதமாக களங்கப்பட்டவள். தந்தையின் மீது கொலைகாரன் என்ற களங்கம் உள்ளது. இந்த இரண்டையும் சோதித்து உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு இந்திரா ஆண் உருவமணிந்து மாறு வேடத்தில் ஒரு வியாபாரக் குழுவோடு சேர்ந்து ஹேமப்ரபாவின் அந்தப்புரத்திற்கு பூமாலைகளை எடுத்துக் கொண்டு சென்று முதியவளிடம் அடைக்கலம் புகுந்து அங்கிருந்து ஹேமப்ரபாவுக்கு தாசியாக அந்தப்புரத்திற்கு சென்று கணவனுக்காகவும் குழந்தைக்காகவும் அவள் எத்தனை தவிக்கிறாள் என்பதை நேரடியாக அறிந்து கொண்டு மதனபாலனோடு நல்லவிதமாக இருப்பதென்பது அரசனின் கோபத்திற்கு ஆளாகாமல் என்றாவது ஒருநாள் கணவனை பார்க்க மாட்டோமா என்ற ஆசையோடு எதிர்பார்க்கும்  வியூகமே அன்றி வேறொன்று அல்ல என்பதை அறிந்து கொள்கிறாள்.

தான் அவள் மகளே என்ற விஷயத்தை தாய் அறிந்து கொண்டாள் என்பதை அறிந்தாலும், காரியத்தை சாதிக்கும் வரை ரகசியத்தை காப்பாற்றிக் கொண்டு தாயை தைரியமாக இருக்கச் சொல்லி எச்சரித்து வந்த தனித்தன்மையான குணம் அவளுடையது.

அங்கிருந்து முரளாதேவியின் பணிப்பெண்ணாக உண்மையான அரச மாளிகையை  அடைந்து தந்தை கொலைகாரன் அல்ல என்பதற்குத் தேவையான ஆதாரங்களை சேகரிப்பதிலும், முரளாதேவியும் அவளுடைய அந்தரங்க சேவகனான பல்குணனும் தன்னை எத்தனை சந்தேகப்பட்டாலும் அவர்களின் கண்ணை மறைத்து, எதிர்வந்த ஆபத்துகளில் இருந்து வெளிவந்து, தாரை போன்ற  பெண்களை அந்தரங்க சேவகர்களாகச் செய்து கொண்டு, லலிதகுமாரனின் உதவியோடு டெல்லி அரசன் பிரித்விராஜை உதயபூர் வரச்செய்து, தந்தை நிரபராதி என்று நிரூபித்ததில் அவள் சாமர்த்தியம் அழகாக இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

பெற்றோரைச் சந்தித்து முன்பிருந்த பூர்வ சுக, சௌக்கியங்களோடு அவர்களை  நிலைபெறச் செய்த ஆதரிசமான மகள் அவள். பிறந்த போது தாத்தா பிரதாபசிம்ஹன் அவளுக்கு வைத்த பெயர் சம்பகமாலினி. தன் மகனுக்குப் பிறகு அவள் அரசாள வேண்டும் என்று கூட தாத்தா ஆசைப்பட்டார். அவளுடைய புத்திகூர்மை, சதித் திட்டத்தை உடைத்து உண்மையை நிலைநாட்டுவதில் அவள்   காட்டிய பிடிவாதம் போன்றவை அதற்கு தகுந்தாற்போலத்தான் இருந்தன.

மனைவி மதனபாலனை திருமணம் செய்யப் போகிறாள் என்ற வதந்தியைக்  கேட்டு, புலி தூக்கிச் சென்று விட்டதாக நம்பச் செய்யும் ஆதாரங்களை ஏற்படுத்திவிட்டு, இரண்டு வயதுள்ள சிறிய பெண் குழந்தையை தன்னுடன் எடுத்துச் சென்ற விக்ரமசிம்ஹதேவன், உடலை நிறம் மாற்றக் கூடிய  மூலிகைகளின் சாரைப் பூசிக்கொண்டு, தன் பெயர் மித்ராநந்தன் என்றும் மகளின் பெயர் இந்திரா என்றும் மாற்றி, அஞ்ஞாதவாசத்தில் வாழ்ந்த காலம் இனி கடந்த காலமாகிவிட்டது. 

குற்றம் செய்த பல்குணனுக்கு டெல்லி அரசன் தூக்குதண்டனை விதிக்க முற்பட்ட  போது விக்ரமசிம்ஹன் அதனை ஆயுள் தண்டனையாக மாற்றச் செய்து,  குற்றத்திற்கு மூலகாரணமான சிற்றன்னை முரளாதேவியையும், அவள் சொன்னபடி எல்லாம் செய்த மதனபலனையும் கூட மன்னித்து ஆதரித்தத்தோடும்,    ஹேமப்ரபாதேவியின் மருமகள் விமலாவோடு மதனபாலனுக்கும், செம்பகமாலினியோடு லலிதகுமாரனுக்கும் திருமணங்கள் செயவித்ததோடும்     நாவலை சுபமாக முடிக்கிறார் ராஜம்மா.

இந்த நாவலில் பிரிதிவிராஜ் தவிர வேறு யாரும் வரலாற்று மனிதர்களாகத்  தெரியவில்லை. ப்ரதாபசிம்ஹன் என்ற அரசன் பதினாறாம் நூற்றாண்டைச்  சேர்ந்தவன். ஆனால் பிரிதிவிராஜின் சமகாலத்தவன் அல்ல. அவனுக்கு விக்ரமாங்கதேவன் என்ற மகனும் இல்லை. மகளுக்கு உதயபூரைப் பற்றித் தெரிவித்த மித்ராநந்தன், அந்த அரசர்களுக்கு முதலில் சித்தோட் தலைநகராக இருந்ததாகவும் பின்னர் உதயபூருக்கு மாற்றிக் கொண்டதாகவும் அதற்கு காரணங்கள் பல உள்ளன என்றும் கூறுகிறான். மொகலாயர்களின் படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே அவன் அவ்வாறு கூறியதற்கான உண்மையான காரணம்.

பிரதாபசிம்ஹனின் தந்தை உதயசிம்ஹன் 1558 ல் தாராவளி மலைகளின்  இடையில் பாணாநதிக் கரையில் அந்த நகரத்தை நிர்மாணிக்கிறான். பிபோலி   குளத்தை ஒட்டி அரண்மனை இருக்கிறது. இவை வரலாற்று உண்மைகள். இந்த விவரங்கள் கதையின் ஓட்டத்தில் நமக்குத் தெரிய வருகிறது. அந்த விதத்தில் பார்த்தால் நாவலில் கதைக்களம் பதினாறாம் நூற்றாண்டாக இருக்க வேண்டும்.

அந்தக் காலமாக இருந்தால் டெல்லி அரசர்கள் முகலாயர்களே தவிர பிரித்விராஜ் அல்ல.

ஆனால் பிரதாபசிம்ஹனுக்கு முரளாதேவியோடு இரண்டாவது திருமணம் செய்து வைத்தவனும், முரளாதேவி அனுப்பிய கடிதம் மற்றும் ஆதாரங்களைப் பார்த்து தந்தையைக் கொன்றவன் என்று விக்ரமசிம்ஹதேவனுக்கு தண்டனை விதித்தவனுமான அனங்கபாலனை தாத்தாவாகக் குறிப்பிட்டு அவர் செய்த தவறுகளை பேரன் ப்ருத்விராஜ் சரி செய்ததாக இந்த நாவலில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி ஹிந்து அரசர்களின் வசம் இருந்ததும், வரலாற்றில் பிரதாபசிம்ஹனின் வீரமும் அவரைக் கவர்ந்ததால் இடையில் இருந்த இருநூறு  ஆண்டு காலத்தை மறந்து கதையின் காலத்தை எடுத்துக் கொண்டுள்ளார் என்று எண்ண வேண்டும். 

சிம்மாசனத்திற்காக குற்றம் புரிவது அரசியலில் சர்வ சாதாரணமாக  இருப்பதால்தானோ என்னவோ அதனை கதைக் கருவாகக் கொண்ட இந்த நாவலுக்கு வரலாறு என்பது ஒரு பின்னணி மட்டுமே. அதனால் கதைப்  பொருளில் பிரிக்க முடியாத பாகமாக ஆக முடியாமல் போனது. அதனால் இந்த நாவல் ஒரு வரலாற்று விரிவாக்கம் என்ற இடத்தைப் பிடிக்கவில்லை.

வரலாற்று நாவல்கள் என்றால் சன்னியாசிகளும் மாறு வேடங்களும் என்பதாக   கதைகள் எழுதி வந்த சமகாலத்தவர்களின் தோரணையைக் குறிப்பிட்டு வரலாறு நம்மவர்களுக்கு பூட்டி வைத்த பெட்டி போன்றது என்றார் ஒரு கட்டுரையில் குரஜாட அப்பாராவு. 1915ல் இருந்த இந்த நிலையில் இருந்து பெண்களின் நாவல்கள் மாற்றாக இருக்கும் என்று கற்பனை செய்வது கடினம்.

துர்காபாய் தேஷ்முக் எழுதிய நாவல் லட்சுமி

துர்காபாய் தேஷ்முக் என்று பிற்காலத்தில் பிரசித்தி பெற்ற கும்மிடிதல துர்காபாய் சிறுகதைகளோடு கூட நாவல் எழுதுவதற்கும் முயற்சித்தார். அவர் எழுதிய நாவலின் பெயர் லட்சுமி. 1930 அக்டோபரில் இருந்து 1931 ஜனவரி வரை நான்கு  மாதங்கள் கிருகலட்சுமி பத்திரிக்கையில் அது தொடராக பிரசுரமானது. 

கான்பூர் ஜில்லா கங்கா நதி தீரத்தில் இருந்த கிராமம் கதை நடந்த இடம். அதனால் சொந்தமாக எழுதிய நாவல் அல்ல என்று தோன்றுகிறது. ஆனால் மூலப் படைப்பு எது என்று கதையாசிரியை குறிப்பிடவில்லை. 

சிந்திக்கும் திறனும் நினைத்ததை சாதிக்கும் சங்கல்ப சக்தியும் முழுமையாகப் பெற்றிருந்த லட்சுமி இந்த நாவலின் மையப்புள்ளி. கல்வியறிவு அவளுடைய சைதன்யத்திற்கு மூல சக்தி. ஆங்கில அரசாட்சியின் காரணமாக அவளுடைய ஊரில் துவங்கப்பட்ட பெண்கள் பாடசாலையில் சேர்ந்து படிக்கிறாள். முதலில் அந்த பாடசாலைக்கு பெண்களை அவ்வளவாக அனுப்பாமல் போனாலும், லட்சுமி போன்ற நான்கைந்து பெண்கள் கல்வி கற்றதால் அந்த  ஊக்கம் காரணமாக பிறரும் தம் பெண்களை பள்ளிக்கு அனுப்பினார்கள். அவ்வாறு படித்த பெண்கள் ராமாயணம் போன்ற இலக்கியப் படைப்புகளை ஊன்றிப் படித்து பாத்திரங்களின் குண விசேஷங்களை விவாதிக்கும் அளவுக்கு சைதன்ய உயர்வு பெற்றார்கள். அவர்களுக்குத் தலைவியாக லட்சுமி விளங்கினாள்.

கல்வியறிவால் பெற்ற விவேகமும் பிறருக்குப் பகிரும் ஞானமும் பெண்ணுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் தைரியத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்று லட்சுமியின் வாழ்க்கை மூலம் நிரூபிக்கிறார் துர்காபாய். கல்வி சுதந்திரமான எண்ணங்களுக்கும் அபிப்ராயங்களுக்கும் கூட காரணமாகிறது. 

திருமணத்தில் பணம் முக்கியமாக இருக்கக் கூடாது என்பது லட்சுமியின் எண்ணம். வரதட்சணை கொடுத்து செல்வந்தர் வீட்டில் சம்பந்தம் செய்து கொள்வதை விட சாமானியர்களின் சம்பந்தமே மேல் என்று கூறிய சொற்கள் அனைத்தும் கல்வியினால் மலர்ந்த சுய இருப்பின் சைதன்யத்திலிருந்து பிறந்தவையே.

ஆனால் தந்தைக்கு அந்த விஷயத்தைக் கூறி தன் முடிவை அறிவிக்கக்கூடிய நிலையில் அவள் இல்லை. பெண்கள் ஒரு புறம் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்து பொது வாழ்க்கையில் காலடி வைத்தாலும் குடும்ப கலாச்சாரத்தை காப்பாற்றும் பொறுப்பு மீண்டும் மீண்டும் பெண்கள் மீதே சுமத்தப்படுவது நவீனமயமாக்கலில் உள்ள ஒரு விந்தை.

அதன் எதிரொலியே புராண கதாபாத்திரங்களின் குணங்களை விவாதித்த சந்தர்பத்தில் லட்சுமி, தாய் தந்தையரை அவமதித்து நாமாகவே பிறருடைய சொத்தாக ஆவது மிகவும் தீய செயல் என்று அபிப்பிராயப்படுவதும், பெற்றோர் யோசித்து யாருக்கு கன்னிகாதானம் செய்கிறார்களோ அவரையே நாம் தெய்வமாக பாவித்து சேவை செய்து வாழ வேண்டும் என்று தீர்மானமாகக் கூறுவதும், 

படித்த பெண் எத்தனை பொறுமையோடு வீட்டை நிர்வகிக்க முடியும், வீட்டில் ஓரகத்திகள் முதலான பெண்களோடும் உறவுகளோடும் எத்தனை அழகாக நட்பை   வளர்த்துக் கொள்ள முடியும், பணியாளர்களிடம் எத்தனை தயவோடு நடந்து கொள்ள முடியும் போன்றவற்றை லக்ஷ்மியின் தனிப்பட்ட குணத்தில் ஒரு பகுதியாக நிரூபிக்கிறார் துர்காபாய்.

படிப்பினால் பெண்கள் சதி சாவித்திரி போன்றவர்களின் புண்ணியக் கதைகளை படித்து பதிவிரதைகளாக வாழ்வார்கள் என்று கந்தகூரி வீரேசலிங்கம் கூறிய சொற்களுக்கு அனுகூலமாக ‘பதியே சதிக்கு பரம தெய்வம்’ என்று நம்பி வாழ்ந்த பெண்ணாக லட்சுமியின் பாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

படித்த பெண் வீட்டைக்கு ஒளியூட்டுவதோடு அண்டை அயலாருக்குக் கூட   கல்வி அறிவை ஏற்படுத்தக் கூடியவள் என்றும் சிறுமிகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுபவள் என்றும் 1930 ல் இந்த சிறிய நாவல் மூலம் ஒரு நோக்கத்தையும்  ஆசையையும் ஏற்றி நிலைநாட்டியுள்ளார் துர்காபாய்.

ஆசண்ட சத்யவதி எழுதிய நாவல் சுநந்தினி

1931ல் ஆசண்ட சத்யவதி எழுதிய நாவல் சுநந்தினி வெளிவந்தது. அது கிடைக்கவில்லை. ஆனால் 1931 ஆகஸ்ட் கிருகலட்சுமி பத்திரிகையில் இது குறித்த நூல் மதிப்புரை வந்தது. நவீன இலக்கிய விமர்சனத்தில் முதன்மையானவரான கட்டமஞ்சி ராமலிங்க ரெட்டி இதற்கு முன்னுரை எழுதியது சிறப்பு. இந்தப் பீடிகை மூலம் சத்யவதி ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்தவர் என்றும் கல்வி கற்றவர் என்றும் தெரிகிறது. 

அற்புதமான ரசமயமான இலக்கியங்களைப் படித்த தாக்கத்தில் எழுதிய நாவல் என்றும் முழுமையான சுதந்திரப் படைப்பு அல்ல என்றும் கூறினாலும் இந்த நாவலில் ஆசிரியையுடைய திறமையின் சிறப்பு வெளிப்படுகிறது என்றும் எதிர்காலத்தில் சமகால கதைப்பொருள் ஏதேனும் எடுத்துக்கொண்டு சமுதாயத்தையும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும் சித்தரிக்கக்கூடிய படைப்புகளை இவர் செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என்றும் கூறுகிறார் கட்டமஞ்சு. அற்புத உலகங்களை விட உண்மையான உலகமே மக்களுக்கு விருப்பமானது என்று இதமாகக் குறிப்பிடுகிறார். ஹிந்து பெண்களின் எண்ணங்களையும் நோக்கங்களையும் சத்யவதி தேவி  நிறைந்த ஞானத்தோடும் பூரண மனதோடும் சித்தரித்திருப்பதாக மெச்சிக் கொள்கிறார். 

கதையின் கருப்பொருள் உயர்ந்த எண்ணங்களைத் தூண்டி நல்ல நடவடிக்கையை உற்சாகப்படுத்தும் விதமாக இருப்பதாகவும், அனைவரும் படித்து ஏற்கத்தக்க நிர்மலமான நீதிக்கதை போன்றது என்றும் கட்டமஞ்சி தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இரு தோழிகள் எழுதிய சேவாஸ்ரமம் நாவல்

1932-ல் வெளிவந்த ஞானாம்பா எழுதிய நாவல் ‘மைத்ரேயி’ கிடைக்கவில்லை. 1933ல் தாமெர்ல பிரமராம்பா, கொண்ட விஜயலட்சுமி பாய் என்ற இரு தோழிகள் இணைந்து சேவாஸ்ரமம் என்ற நாவலை இரண்டு பாகங்களாக வெளியிட்டார்கள். இது பிரேம்சந்த் எழுதிய சேவாசதனம் என்ற நாவலின் மொழிபெயர்ப்பு. 

இதற்கு சிலகமர்த்தி லட்சுமி நரசிம்ஹம் முன்னுரை எழுதியுள்ளார்.  ஆந்திரதேசத்தின் நாரீமணிகள் ஆண்களைப் போலவே நவீன நடவடிக்கைகள் மீதும் ஆந்திர மொழியின் மீதும் பாண்டித்தியம் பெற்று தேசத்தின் மேன்மைக்கு காரணமாகி சிறந்த சிந்தனையை ஏற்படுத்தும் நல்ல நூல்களை எழுதக்கூடிய  நல்ல நாட்கள் எப்பொழுது வருமோ என்று அந்த நல்ல நாளுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனக்கு இந்த புத்தகத்தை பார்த்ததும் முன்னுரை எழுதுவதும் சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறுகிறார்.  இந்த நூல் ரசமயமாகவும் மொழிபெயர்ப்பு போலன்றி சொந்தக் கற்பனை போல உள்ளத்திற்கு இதமாகவும் இருப்பதாக குறிப்பிடுகிறார். 

நூல் முழுவதும் இலக்கண மொழியில் எழுதியுள்ளார் என்று கூறுவதோடு    பாராட்டும்படி இருப்பதாகவும் நடுநடுவில் சந்தி சேராமல் போவது போன்ற தோஷங்கள் இருப்பதாகவும் கூறுகிறார். இந்த நாவல் 1949 ல் இரண்டாவது பதிப்பு கண்டது.

பாகவதுல சென்ன கிருஷ்ணம்மா எழுதிய நாவல் வித்யுத்பிரபா

வித்யுத்பிரபா, சாரதா விஜயம் என்ற இரண்டு நாவல்களும் 1934, 1935ம்  ஆண்டுகளில் வரிசையாக பிரசுரிக்கப்பட்டன. இவை இரண்டும் வரலாற்று நாவல்கள். இரண்டுமே இரண்டாவது பதிப்புகள். இரண்டுக்கும் முதல் பதிப்பு விவரங்கள் தெரியவரவில்லை.

வித்யுத்பிரபா நாவலை எழுதியவர் பாகவதுல சென்ன கிருஷ்ணம்மா. இவர் அரசாங்க பயிற்சி பாடசாலையில் ஆசிரியராக பணி செய்து பதவி ஓய்வு  பெற்றவர். அனந்தபுரம் அரசாங்க பயிற்சி பாடசாலை தலைமை ஆசிரியர் 

எம்.ஆர்.ரீ.ஒய்.எஸ். அனுமந்தராவு, வித்யுத்பிரபா அழகாக எழுதப்பட்ட ராஜபுத்திர பிரதேசத்தின் தொடர்புடைய வரலாற்று நாவல் என்றும் சிறந்த கவிதை நடையும்   நேர்மையான சௌந்தர்யமும் இந்த நாவலில் நிரம்பி உள்ளன என்றும் மூன்று நான்கு பாராக்கள் படிக்கும் மாணவர்களின் கல்விக்கு ‘நான்டீடைல்’ புத்தகமாக கொண்டு வருவதற்கு தகுதி வாய்ந்தது என்றும் குறிப்பிட்ட இந்த அபிப்ராயம் இந்த நாவலுக்கு பீடிகையாக சேர்க்கப்பட்டுள்ளது. எட்டாவது அல்லது ஒன்பதாவது நூற்றாண்டில் மேவார் ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த பப்பாராவலோடு   தொடர்புடைய, வழக்கத்தில் உள்ள கிராமியக் கதைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அவற்றுக்கு தன் கற்பனைச் சக்தியை இணைத்து சென்ன கிருஷ்ணம்மா இந்த நாவலை எழுதியுள்ளார்.

பப்பாராவல் 728 ல் மேவார் ராஜ்யத்தை ஸ்தாபித்து ஏக லிங்கர் கோவிலைக் கட்டினான். 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏக லிங்க மாகாத்மியம் என்ற புராணம் மற்றும் சாசனங்களை ஆதாரமாகக் கொண்டு அவனுடைய காலத்தையும் வம்ச வரலாற்றையும் நிரூபிப்பதில் வேறுபட்ட அபிப்ராயங்கள் உள்ளன. ஈதூர் என்ற வேட்டுவ ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து, வேடுவர்கள் எதிர்த்ததால் கொல்லப்பட்ட குஹலோட்டு வம்சத்தைச் சேர்ந்த நாகாதித்யனின் மகன் இவன். குஹலோட்டு வம்சம் வல்லபியை பரிபாலித்து, எதிரி அரசர்களோடு போரில் மரணித்த சிலாதித்தனின் மகன் கௌஹலனோடு தொடங்குகிறது என்றும் அவனுக்கு எட்டாவது பரம்பரையைச் சேர்ந்தவன் நாகாதித்யன் என்றும் மற்றொரு கதை உள்ளது.

நாவலின் கதை இந்த வரலாற்றின் மீதே நிறுவப்பட்டுள்ளது. வல்லபியின் அழிவு  770 ல் நடந்தது என்று சில ஆதாரங்கள் மூலம் தெரிகிறது. ஒரு தலைமுறைக்கு குறைந்தபட்சம் பதினைந்து ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டாலும் 120 ஆண்டுகள் கணக்கு வருகிறது. அதையும் சேர்த்துப் பார்த்தால் நாகாதித்யனின் காலம் 890 என்றாகிறது.  இதனைக் கொண்டு அவனுடைய மகன் பப்பாராவலின் காலம் 1020 ஆக இருக்கும். 

இந்தப் பின்னணியில் பப்பாராவல் 728 லேயே மேவார் ராஜ்யத்தை ஸ்தாபித்ததாகக் கூறுவது சரியாக இருக்காது. அப்படியானால் பாப்பாராவல் எட்டாவது நூற்றாண்டை சேர்ந்தவனா? பன்னிரெண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவனா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, அந்த பப்பாராவல் இந்த நாவலில் அப்பாஜி என்றழைக்கப்படுகிறான் என்பது மட்டும் உண்மை.

வேடுவர்கள் அரசனைக் கொன்று விடவே, ஒரு வேடுவ சேவகன் அரசனின்  மனைவியையும் சிறு மகனையும் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறான். விஷ்ணு சர்மா என்ற நாகேந்திர பட்டணத்தைச் சேர்ந்த பிராமணன் அவனுக்கு உதவியாக வந்து தாயையும் மகனையும் காப்பாற்றி அடைக்கலம் கொடுக்கிறான். அந்த தாயின் பெயர் குந்தி. பிள்ளையின் பெயர் அப்படு. இதுவே நாவலின் முதல் கட்டம். அதன் பின் அப்படுவுக்கு பதினாறு  வயதானபோது மாடுகளை மேய்க்கும் காலத்தில் அசல் கதை துவங்குகிறது. வீர சூரச் செயல்களால் தனித்துவமிக்க  ஆளுமையோடு வளர்ந்த அவனுக்கு ஏகலிங்க சுவாமி ஆலயத்தில் ஒரு சித்தர் மூலம் அவனுடையது ராஜ வம்சம் என்று தெரிகிறது. தாயிடம் கேட்டு தன்னுடைய வம்ச சரித்திரம் முழுவதும் அறிந்து கொண்டான். அந்த தாயின் கதை ஏறக்குறைய பப்பாராவலின் சரித்திரத்தோடு தொடர்புடையது. அதனால் பப்பாராவலே இந்த நாவலில் அப்படு ஆகி இருக்கலாம் என்பது தெளிவாகிறது. 

நாகேந்திர பட்டணத்தின் அதிபதியுடைய மகள் சம்பாவுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து ஜாதகம் காட்டிய போது அப்போதைக்கே அவளுக்குத்  திருமணம் ஆகி இருக்க வேண்டுமே என்று சித்தாந்தி கூறுவதால், அப்படு சிறுவயது குறும்பினால் ஊஞ்சல் கயிறு கேட்டு வந்த சம்பாவை கல்யாண விளையாட்டுக்கு சம்மதிக்கச் செய்து தலைப்பை முடிந்து கைத்தலம் பற்றி மரத்தை பிரதட்சிணம் செய்த விஷயம் வெளிப்படுகிறது. அந்த தீய சாகசத்திற்கு அவனை தண்டிக்க வேண்டும் என்று பட்டண அதிபதி எண்ணியதை அறிந்துகொண்ட விஷ்ணு சர்மா அவனை தாயோடு கூட ஊரைத் தாண்ட வைப்பதோடு நாவலில் திருப்பம் ஏற்படுகிறது.

அங்கிருந்து அவன் மேவாரின் தலைநகர் சித்தோடை வந்தடைகிறான்.  அமைச்சரான பூதிவர்மா, ஜாலபதானர் என்ற புரோகிதரோடு சேர்ந்து செய்யும் தவறான செயல்களையும், அரசன் ப்ரமாரனுக்கு எதிராக நடக்கும் குற்றங்களையும் அறிந்து கொண்டு, சதியை சதியால் அழித்து ராஜாவுக்கு விஜயம் சம்பாதித்துத் தருகிறான்.  அந்த அரசனின் திறமையற்ற இயல்பின் காரணமாக துஷ்டர்கள் முன்பு போலவே தொடர்ந்து சதிசெய்யும் வாய்ப்பு இருப்பதால் சர்தார்கள் அனைவரும் அப்பாஜியை உற்சாகப்படுத்தி ப்ரமாரனை நாடு கடத்துவது, அப்பாஜி குற்றவாளிகளை தண்டித்து ராஜ்யத்தை விஸ்தரிக்கச் செய்வது வரை நடந்த முழுக் கதைக்கும் பின்னால் உள்ளது விஷ்ணுசர்மாவின் வியூகமே,

நாவலின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் முதல் கதாபாத்திரம் விஷ்ணு சர்மா.  ப்ரமாரனாலும் விபூதிவர்மாவாலும் ராஜஸ்தானத்தில் நடந்த அவமதிப்புகளால் மனஸ்தாபம் அடைந்து சித்தோடில் இருந்து நாகேந்திர பட்டணத்தின் வழியாகச் செல்லும் விஷ்ணுசர்மா, இந்த அவமதிப்பிற்கு ஊரைவிட்டுச் செல்வதாவது என்று யோசித்து, போகக் கூடாது என்று நிர்ணயித்து பூபதி ராஜ்யம் துஷ்டர்களின் கைவசமானால் மக்களுக்கு வாழ்வு ஏது என்று வருந்தி, ராஜ்ஜியத்தையும், ராஜ்ய மக்களையும் இந்த துன்பத்திலிருந்து காப்பாற்றுவது தன் கடமை என்று தீர்மானத்திற்கு வந்த நேரத்தில், “தெய்வமே!  காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்ற பீதியான சொற்கள் காதல் விழுந்தன. சப்தம் வந்த திசையில் சென்று தாயையும் பிள்ளையையும் காப்பாற்றுகிறான். அதனால் தன் தீர்மானத்தை அமல் செய்வதற்குத் தோதாக மாடு மேய்ப்பவனாக வைத்தபடி அப்படுவை ஒரு விதத்தில் காத்தான் என்று சொல்லலாம். பப்பாராவலின் வாழ்க்கை இவ்வாறுதான் கழிந்தது என்று கூறும் வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இந்த நாவலின் கதைப்பொருளில் வித்யுத்பிரபாவின் கதை ஒரு அழகான கற்பனை. அப்படு சிறுவயது சேஷ்டையோடு விளையாட்டுக் கல்யாணம் செய்துகொண்டவளும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டபோது காப்பாற்றியவளுமான சம்பாவே வித்யுத்பிரபா. 

தந்தை தீரசிங் நல்ல சம்பந்தம் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்தபோது சிற்றன்னை அந்தப் பெண் மீது ஆசைப்பட்ட பூதிவர்மாவுக்கு அவளைத் திருமணம் செய்து வைப்பதற்கு முயற்சிப்பது, வீட்டில் இருந்து தப்பித்து போகும் போது பூதிசர்மாவிடமே பிடிபட்டு சிறைப்படுவது, ஜாலபதானரின் ரகசியங்களைத் தெரிந்துகொள்வதற்கு பின் தொடர்ந்த அரிபீஷணன் அவனுடைய வீட்டில் அவளைப் பார்த்து ஈர்க்கப்படுவது, அவள் மூலம் பூதிசர்மா மற்றும் ஜாலபதானரின் சதிகளில் இருந்து காப்பாற்றுவதற்கு திட்டம் தீட்டுவது போன்றவை இந்த நாவலின் முக்கிய கதையோட்டங்கள்.

அரிபீஷணன் என்ற பெயரில் பதுங்கி அலைந்து மேவாரை உள்நாட்டு எதிரிகளிடமிருந்தும் வெளி எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றி இறுதியில் மேவார்  ராஜாவான அப்பாஜி, வித்யுத்பிரபாவை திருமணம் செய்வதோடு இந்த நாவல் முடிகிறது.

பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவங்களின் வரிசையில் கற்பனையே பிரதானம். தேச விடுதலைப் போராட்ட காலத்தில் வந்தேறிகளுக்கு எதிராக உற்சாக சக்தியை ஒளியூட்டி ஏற்றுவதற்கு ராஜபுத்திர வரலாறு அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்டது. சென்ன கிருஷ்ணம்மாவும் அந்த மார்க்கத்திலேயே சென்று ராஜ்யங்களைப் பெற்று, இழந்து மீண்டும் பெறும் கிரமத்தில் தேசிய சரித்திம் எவ்வாறு வடிவெடுத்தது என்று காட்டுவதற்கு மேவார் ராஜ்ஜிய ஸ்தாபனம் என்ற வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு இந்த நாவலை எழுதினார் என்று கூறலாம்.

தெலுங்கில் வாசிக்க: நெச்சேலி

(தொடரும்)

Series Navigation<< பிராட்டம்மா எழுதிய நாவல் ‘சோபாவதி’அயிதம் இந்திரா, பாரதி தேவி, காவேரிபாய், தேவமணி சத்யநாதன் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.