- அதிரியன் நினைவுகள்-1
- அதிரியன் நினைவுகள்-2
- அதிரியன் நினைவுகள் -3
- அதிரியன் நினைவுகள் – 4
- அதிரியன் நினைவுகள் – 5
- அதிரியன் நினைவுகள் – 6
- அதிரியன் நினைவுகள் – 7
- அதிரியன் நினைவுகள் – 8
- அதிரியன் நினைவுகள் – 9
- அதிரியன் நினைவுகள் – 10
- அதிரியன் நினைவுகள் – 11
- அதிரியன் நினைவுகள் – 12
- அதிரியன் நினைவுகள் – 13
- அதிரியன் நினைவுகள் -14
தமிழாக்கம் நா. கிருஷ்ணா

அதிரியன் நினைவுகள் அல்லது Mémoires D’Hadrien, புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியை மார்கெரித் யூர்செனார் (MargueriteYourcenar) என்பவரால் 1951 எழுதப்பட்ட ஒரு வரலாற்று நாவல். ரோமானிய அரசன் தமது முதிர்ந்த வயதில் தமக்குப் பிறகு முடிசூட்டிக்கொள்ளவிருந்த மார்க் ஒரேல்(Marc Aurèle) என்கிற வாலிபனுக்கு எழுதும் மடலாக சொல்லப்பட்டுள்ள இப்படைப்பு ஆசிரியரின் கற்பனை. ரோமானிய பேரரசன் அதிரியன் தனது வாழ்க்கையில் குறுக்கிட்ட அத்தனை அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதாக, விமர்சிப்பதாக நாவல் விரிகிறது. 2002ஆம் ஆண்டு நார்வே இலக்கிய வட்டம் எக்காலத்திலும் வாசிக்கப்படவேண்டியவையென உலகின் 54 நாடுகளைச் சேர்ந்த மிக முக்கிய 100 படைப்புகளை பட்டியல் இட்டுள்ளது, அவற்றில் இந்நாவலும் ஒன்று. இந்தியப் படைப்புகளில் சாகுந்தலம், இராமாயணம், மகாபாரதம், Thé Midnight’s Children ஆகியவை இடம்பெற்றுள்ளன, சிலப்பதிகாரம் இடம்பெறாதது எனக்குக் குறையாகப் பட்டது.
பத்தாண்டுகளுக்கு முன்பு இந்நாவலை வாசித்திருந்தேன், மொழிபெயர்க்கவும் விரும்பினேன். ஒருமுறை காலம்சென்ற கி. அ. சச்சிதானந்தத்தோடு பிரெஞ்சு இலக்கியங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, நாவலை தமிழில் கொண்டுவாங்களேன் என்றார். நொண்டிச் சாக்குகளை முனவைத்து தள்ளிப்போட்டுவந்தேன். அண்மையில் சொல்வனம் இதழ் நன்கறிந்த நண்பர் கிரிதரனிடம் பேசியபோது, சொல்வனத்தில் கொண்டுவருவோமென யோசனை தெரிவித்தார். தொடராக வரவாய்ப்பில்லையெனில் மேலும் தள்ளிப்போகும் ஆபத்தை உணர்ந்து ஒரு சொந்தப் படைப்புக்கிடையில் இதனையும் மொழிபெயர்ப்பது என தீர்மானித்தாயிற்று கிரிதரனுக்கும் சொல்வனம் இதழ் பொறுப்பாளர் நண்பர்களுக்கும் நன்றிகள்..
அன்புடன்
நா. கிருஷ்ணா
அதிரியன் நினைவுகள் – 1
எங்கும் திரிவாய்
இனிக்கத் தழுவுவாய்
என்னுயிரே !
அன்பினிய மார்க்,
இன்றைய தினம் என்னுடைய மருத்துவர் ஹெர்மோழேன் -ஐ காணச் சென்றேன். ஓரளவுக்கு நெடிய தம்முடைய ஆசிய பயணத்தை முடித்துக்கொண்டு அண்மையில்தான் தமது ஆடம்பரமான இல்லத்திற்குத் திரும்பியிருந்தார். சோதனைக்கு முன்பாக உணவெடுக்கக்கூடாது என்பதால் காலையில் சற்று வேளையாகச் சந்திப்பதென்பது இருவருமாக சேர்ந்தெடுத்த முடிவு. மேலங்கி மற்றும் பிற உடைகளைக் களைந்து, சோதனைக்குரிய படுக்கையில் கிடத்தப்பட்டேன். எனது உடல்குறித்த விரிவான தகவல்கள் வேண்டாம். மூப்படைந்து, நீர்கோர்ப்பினால் பாதித்த இதயத்துடன், இறக்கும் தறுவாயில் நானுள்ள நிலையில், அது பற்றிய கூடுதல் செய்திகள் எனக்கு ஒவ்வாததைப் போலவே உனக்கும் வெறுப்பை அளிக்கலாம், பதிலாக ஹெர்மோழேன் கேட்டுக்கொண்டபடி இருமிக் காட்டினேன், மூச்சை உள்வாங்கினேன், பின்னர் அதை அடக்கினேன் என்கிற தகவல்களத் தெரிவிப்பதில் பிரச்சனைகளில்லை. நோயின் தீவிரம் தானொரு மருத்துவர் என்பதையும் மீறி அவரை பதற்றமடையச் செய்தது, விளைவாக அவர் ஊரில் இல்லாத நாட்களில் எனக்குச் சிகிச்சையளித்த லொல்லா என்ற இளம்பெண்மீது பழி சுமத்தவும் தயாராக இருந்தார். மருத்துவர்களிடத்தில் ‘சக்கரவர்த்தி’ என்கிற சொல்லுக்கு எவ்விதப் பொருளுமில்லை, ஏன் ? மனிதர்களுக்கு என்றுள்ள அடிப்படை இயல்புகளுடன்கூட அவர்கள் முன்பு நாம் இருக்கவியலாது. வைத்தியர் கண்களுக்கு, பரிசோதனைக்கு வந்திருப்பவன் உணர்ச்சிகளின் குவியல், இரத்தம் நிணநீர் கலவையினாலான பரிதாபத்திற்குரிய ஓர் உயிர். இன்று காலை இத்தனை காலமாக இல்லாது முதன்முறையாக மனதில் தோன்றியது என்ன தெரியுமா ? விசுவாசம் மிக்கது, எனது நம்பிக்கைக்குப் பெரிதும் பாத்திரமானது, என்னுடைய ஆத்மாவைக் காட்டிலும் என்னை நன்கறிந்த தோழன் என்றெல்லாம் நினைத்திருந்த எனதுடல் இறுதியில் தனது எஜமானைத் தின்று சீரழிக்கும் கபடமிமிக்கதொரு மிருகம் என்கிற உண்மை. பொறு ! ……. எனதுடலை இன்றும் நேசிக்கிறேன். எனக்கென்று எல்லாவகையிலும் உழைத்துள்ளதை எப்படி இல்லையென சொல்ல முடியும், அதன் குறை நிறைகளை விவாய்திப்பதற்கான நேரம் இதுஅல்ல, தற்போதையை தேவை நல்லதொரு சிகிச்சை. அதற்கு வழிகளுண்டா, நம்பிக்கையில்லை. ஆனால் ஹெமோழேன் முடியும் என்கிறார், கீழை நாடுகள் பயணத்தில் கொண்டுவந்த அதிசய மூலிகைகளின் அபாரகுணங்களும், தாது உப்புக்களின் சரியான கலவையும் பலன் தரும் என்பது அவர் வாதம். மனிதர் தந்திரசாலி. எவரையும் எளிதாக ஏமாற்றவல்ல அடுக்கடுக்கான உத்தரவாதங்களைக் கேட்டு சலித்துபோன வார்த்தைகளில் அளிப்பதில் தேர்ந்தவர் ; ஆயினும், இது போன்ற பாசாங்குகளை எந்த அளவிற்கு நான் வெறுப்பவன் என்பதையும் அவர் அறிவார். மருத்துவ தொழிலில் முப்பது ஆண்டுகளுக்குமேலாக அனுபவம் என்கிறபோது, இதுபோன்ற குற்றம் குறைகளைத் தவிர்க்க இயலாது. எனது மரணத்தை என்னிடமிருந்து மறைக்க முயற்சிக்கிறார் என்பது தெரிந்தும், அவர் எனக்கொரு உண்மையான சேவகராக இருந்து வந்துள்ளார் என்பதற்காக மன்னிக்கிறேன். ஹெர்மோழேன் ஒரு மேதை, ஞானி ; தொழிலில் அவரிடமுள்ள நேர்மை எனது அரசவை பிற மருத்துவர்களினும் பார்க்க அதிகம். நோயாளிகளில் அதிக அக்கறையுடன் சிகிச்சை பெறும் பாக்கியசாலி அனேமாக நானாக இருக்கக் கூடும். ஆனால் நம் ஒவ்வொருவரின் எல்லைப்பரப்பும் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளது, அதை எங்கனம் மீற முடியும். வீக்கமடைந்த எனது கால்கள் ரோமானிய விழாக்களில் நீண்ட நேரத்தைச் செலவிட ஒத்துழைப்பதில்லை : எனக்கு வயது அறுபது, தவிர சுவாசிக்கவும் சிரமப்படுகிறேன்.
அச்சம்தரும் கற்பனைகள், நம்பிக்கை அளிக்கும் மாயத் தோற்றங்களைப்போலவே அபத்தமானவை, அவை மிகுந்த மன வேதனைகளை அளிக்கும் என்பதும் நிச்சயம். அதற்காக நீ என்னைச் சந்தேகிக்காதே ! அவற்றுக்கெல்லாம் இடம் தரும் அளவிற்கு நான் கோழை அல்ல. எனினும் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில், படும் வேதனைகளையேனும் குறைத்துக்கொள்ள வேண்டும், அதற்கான தீர்வு ஒன்றே ஒன்றுதான் : நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, என்னை நானே ஏமாற்றிக்கொள்வது, அதைத்தான் செய்ய இருக்கிறேன். எனது ‘முடிவு நெருங்கிவிட்டது’ என நான் கூறுவதால் அது உடனடியாக நிகழுமென்று எவ்வித கட்டாயமுமில்லை. இன்றைக்கும் ஒவ்வொரு இரவும் வைகறைப்பொழுதை காணமுடியும் என்கிற நம்பிக்கையுடனேயே உறங்கச் செல்கிறேன். சற்றுமுன்பு வரையறுக்கப்பட்ட எனது எல்லையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன், அதற்குள் இருந்தபடி எனதிருப்பின் ஒவ்வொரு அடியையும் தற்காத்துக்கொள்ள முடியும் ; ஏன், இழந்த சில அங்குல நிலத்தை மீட்கவும் கூடும். எது எப்படியோ, ஒவ்வொரு மனிதருக்கும் ‘ உயிர் வாழ்க்கையில் எங்கே தோல்விக்கான கட்டமோ அவ் வயதை நானும் எட்டிவிட்டேன். இருந்தும் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதற்கு எவ்விதப் பொருளுமில்லை, காரணம் இன்று நேற்றல்ல பலகாலமாக நம் அனைவருக்குமே நாட்கள் எண்ணப்பட்டே வந்திருக்கின்றன. ஆனால் எங்கே, எப்போது, எப்படி நேரும் என்பதிலுள்ள நிச்சயமற்றதன்மை, எந்த முடிவை நோக்கி இடைவிடாது பயணித்துக் கொண்டிருக்கிறோமோ அதனைச் சரியாக அடையாளம் காண அனுமதிப்பதில்லை, இந்த ஓயாத பயணம் காரணமாகவும் உயிக்கொல்லி நோயின் தீவிரத்தினாலும் நான் மிகவும் சோர்ந்து போகிறேன். எல்லையைத் தொட்ட முதல் நபருக்கு முடிவு உறுதி என்கிறபோதும், அது எப்போது என்பதுதான் இப்போதைய கேள்வி. எனினும்` சம்பந்தப்பட்ட நோயாளிக்கு அடுத்துவரும் பத்தாண்டுகளில் தனக்கு மரணம் நிச்சயம் என்பது நன்றாகத் தெரியும். எனது முடிவுக்கான கெடு என்பது வருடக் கணக்கிற்கு உரியதல்ல மாதக் கணக்கிற்குள் அடங்குவது. மார்பில் குத்துவாள் செருகப்பட்டோ, குதிரையிலிருந்து விழுந்தோ சாகும் வாய்ப்புகள் எனக்கு மிகவும் குறைவு; கொள்ளைநோயில் சாகவும் வாய்ப்பில்லை ; தொழுநோய் அல்லது புற்றுநோய் இரண்டும் நிரந்தரமாக என்னிடமிருந்து விலகியவை ; கலிதோனியன்(Caledonian)1 கோடரியால் தாக்குண்டோ அல்லது பார்த்தியன் (Parthians)2 அம்பு பாய்ந்தோ நாட்டின் எல்லையில் மடிவதற்கான ஆபத்தான செயல்களை எப்போதோ விட்டாயிற்று ; நீரில் மூழ்கி இறப்பதற்குச் சந்தர்ப்பம் இல்லையென்ற மந்திரவாதிப் பெண்மணியின் ஆரூடமும் பலித்திருக்கிறது, வாய்ப்புகள் கிடைத்தும் புயலும் காற்றும் என்னைக்கொல்ல தவறிவிட்டன. திபர்(Tibur)3, ரோம் இவ்விரண்டு நகரங்களில் ஒன்றில் நான் இறப்பது நிச்சயம், தவறினால் நேப்பிள்ஸ் நகரத்தில் அது நிகழக்கூடும், மாரடைப்பு அப்பணியை நிறைவேற்றும். பத்தாவது மாரடைப்பிலா?, நூறாவது மாரடைப்பிலா? என்பதுதான் இன்றைக்குள்ள கேள்வி. தீவுகள் கூட்டத்திடைப் படகில் பயணிக்கும் ஒருவன், அந்தி சாயும் வேளையில் ஒளிரும் மூடுபனியைத் தொடர்ந்து சிறிது சிறிதாக கரைவிளிம்பை காண நேர்வதைப்போல, மரணத்தின் முகச் சாயல் எனக்கும் தெரிகிறது.
இதற்குள்ளாகவே, வறுமையில் வீழ்ந்த ஒருவன் தமது மிகப்பெரிய மாளிகையை முழுமையாக பராமரிக்க முடியாதென்ற கட்டத்தில் சில பகுதிகளின் தளவாடங்களை அகற்றி, காலியாகப் போட்டிருப்பதைப்போல, எனது வாழ்க்கையையும் உணருகிறேன். வேட்டையாடும் உத்தேசமும் இல்லை, எத்ரூரியன்(Etrurian)4 மலைவாழ் மான்களின் விளையாட்டிற்கும், சாவகாசமாக நின்று அவை அசைபோடுவதற்கும் மட்டுமே இடையூறாக இருப்பேன் என்பதால் அவற்றுக்கும் இனி நிம்மதி. தமது நேசத்திற்குரிய உறவில் ஒருவன் எங்கனம் வாஞ்சையையும், அணுகுமுறையில் புது புது உத்திகளையும் வெளிப்படுத்துவானோ அவ்வாறே நம்முடைய வன தேவதை டயானா(Diana)5வுடன் நானும் கடைபிடித்து வந்தேன் : பதின் வயதில் – காட்டுபன்றி வேட்டை அனுபவம் முதன் முதலாக உத்தரவு என்றாலென்ன, ஆபத்தென்பது எத்தகையது போன்றவற்றை புரிந்துகொள்ளும் முதல் வாய்ப்பை எனக்கு அளித்தது. மிகவும் ஆக்ரோஷத்துடன் அவ்வேட்டையில் இறங்கியிருக்கிறேன். இதுபோன்றவற்றில் நிதானம் தேவையென என்னைக் கண்டித்தது எனது சுவீகாரத் தந்தை ட்ரோஜன்(Trojan).6 மரணம், துணிச்சல், உயிரினங்களிடத்தில் இரக்கம், அவை படும் வேதனைகண்டு அடைந்த சந்தோஷம் அனைத்தும் ஸ்பெய்ன் காடுகளில் வேட்டையாடிய விலங்குகளைக் இறைச்சிக்காக வெட்டுகிறபோது கிடைத்த ஆரம்பகால அனுபவங்கள். ஒரு மனிதனாக வளர்ந்த நிலையில், மூடர்கள்-புத்திசாலிகள் ; பலசாலிகள்-பலமற்றவர்கள் என, எதிரிகளின் தன்மைகேற்ப மோதுவதற்குரிய ரகசியங்களை வேட்டை விடுவிக்கக் கண்டேன். மனிதர்களின் அறிவுத் திறனுக்கும் விலங்குகளின் விவேகத்திற்கும் இடையிலான இச் சரிநிகர்யுத்தம், சூட்சிகள், தந்திரங்கள் அடிபடையிலான மனிதர் யுத்தத்துடன் ஒப்பிடுகிறபோது வழக்கில் இல்லாத ஓர் அப்பழுக்கற்ற யுத்தமாகும். அதைப்போல ஒரூ சக்கரவர்த்தியாக ஆட்சிபொறுப்பாளர்களின் மனோ திடத்தையும்,செயல்படும் திறனையும் தீர்மானிக்க, டஸ்க்கனி (Tuscany) வேட்டைகள் உதவின, விளைவாக அரசு நிர்வாகத்தில், ஒரு அதிகாரியை நியமனம் செய்யவோ, பதவிநீக்கம் செய்யவோ என்னால் முடிந்தது. பின்னர், ஆசிய காடுகளில் பித்தீனியாவிலும்(Bithynia), கப்படோசியாவிலும்(Cappadocia)7, இலையுதிர்கால கொண்டாட்டத்தைச் சாக்காகவைத்து பெரும்வேட்டைகளை நடத்தியதுண்டு. எனது இறுதிக்கால வேட்டைகளில் நெருங்கிய துணையாக இருந்தவன் மாண்டபோது மிகவும் இளம்வயது. அவன் இழப்பு வன்முறை இன்பத்தில் எனக்கிருந்த நாட்ட த்தைப் பெரிதும் பாதித்தது. இங்கு, தற்போது திபூரிலும்(Tibur) அடர்ந்த புதரொன்றில் மானொன்று திடீரெனக் கனைத்துச் செறுமினால் போதும், எனக்குள் நிகழும் நடுக்கம் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிடும், அஞ்சும் மானுக்கு நான் சக்கரவர்த்தியா அல்லது சிறுத்தைப்புலியா என்கிற குழப்பம் மட்டுமே மிஞ்சும். யார் அறிவார் ? நான் மனிதர் குருதியை சிக்கனப்படுத்தியதற்கும், விலங்கினங்களை அதிகம் இரத்தம் சிந்த வைத்தற்கும், இவ்விடயத்தில் மனிதர்களினும் பார்க்க எனது மறைமுகமான தேர்வு விலங்கினமாக இருந்தது காரணமாக இருக்கலாம். எது எப்படியோ, வேட்டைக் கதைகள ஓயாமல் சொல்வதும் வழக்கமாகிவிட்டது அதை தவிர்ப்பது மிகவும் கடினமாக உள்ளது, விளைவாக இரவு விருந்துகளில் கலந்துகொள்பவர் பொறுமையை அதிகம் சோதிப்பதாக நினைக்கிறேன்.. என்னைச் சுவீகாரம் எடுத்த நாளின் நினைவு மிகவும் இனிமையானதுதான், ஆனால் மொரித்தேனியாவில் (Mauretania)8 சிங்கங்கள் கொல்லப்பட்ட நாட்களின் நினைவும் என்னைப் பொறுத்தவரை மோசமானைது அல்ல.
குதிரையை துறப்பது இருக்கிறதே அது இன்னுமொரு வலிமிகுந்த தியாகம்: ஒரு கொடிய விலங்கு எனக்கு எதிரியாகா மட்டுமே இருக்கமுடியும், ஆனால் குதிரை எனக்கு நண்பன்.வாழ்க்கையில் உகந்த ஒன்றைத் தேர்வுசெய்ய எனக்கு சுதந்திரம் இருந்திருக்குமெனில் அனேகமாக ‘செண்ட்டோர்’(Centaur)9 என்கிற குதிரைமனிதனைத் தேர்வு செய்திருப்பேன். எனக்கும் என்னுடைய குதிரை போரிஸ்தெனெஸ்க்கும்(Borysthenes) உள்ள உறவு கணிதத்தைப்போல மிகத் துல்லியமானது : என்னை எஜமானாக அல்ல, தன் சொந்த மூளையாக நினைத்துக் கீழ்ப்படிந்தக் குதிரை அது. அவ்விலங்கு அளவிற்கு எந்த ஒரு மனிதனிடமிருந்தாவது எனக்குப் பலன் கிடைத்திருக்குமா ? என்றால் இல்லை. ஒரு அதிகாரம் முழுமையான அதிகாரமாக இருக்கும் பட்சத்தில் எந்தவொன்றிலும் இருப்பதைபோல இதிலும் தவறுகள், அபாயங்கள் உள்ளடங்கி இருக்கும், இருந்தும் இயாலாதது என்கிற தடையைப் பாய்ந்து கடக்கும் முயற்சியின்போது தோள்பட்டை பிசகினாலோ அல்லது விலா எலும்பு உடைந்தாலோ படும் துன்பத்தைக் காட்டிலும் இக்கடின முயற்சியில் பெறும் மகிழ்ச்சி, மிகப் பெரிது. மனிதர் நட்பை சிக்கலாக்குவதற்கென்றே ஒருவருடைய பட்டம், பணி, வகிக்கும் பதவியென்று ஆயிரத்தெட்டுத் தோராயத் தகவல்களின் தேவைகள் நமக்கு இருக்கின்றன, மாறாக என்னுடைய குதிரைக்கு என்னைப் புரிந்துகொள்ள எனது எடைமட்டுமே போதுமானது. பாய்ச்சலின்போது என்னுடைய உந்துசக்தியின் சரிபாதி அதனுடைய பங்களிப்பு. எப்புள்ளியில் எனது ஆர்வமும் ஆற்றலும் ஒத்துழைக்க மறுக்கின்றன என்பதை போரிஸ்த்தெனெஸ் நன்றாகவே புரிந்து வைத்திருந்தது, சொல்லப் போனால் என்னைக்காட்டிலும் கூடுதலாக. அதன் சந்ததி முதுகில் பிறர் உதவியின்றி, ஏறி அமர சக்தியற்ற ஒரு நோயாளியின் பலவீனமான உடலை சுமையாக்க இனியும் விருப்பமில்லை. எனது மெய்க்காப்பாளன் சேலெர் (Celer) தற்போது பிரேனெஸ்ட்(Praneste) பெருஞ்சாலையில் குதிரைக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறான். குதிரை வீரனுக்கும், குதிரைக்கும் இம்மாதிரியான நேரத்தில் கிடைக்க கூடிய பொதுவான மகிழ்ச்சியையும்; காற்று பலமாக வீச, சூரியனும் நன்கு பிரகாசிக்கிற ஒரு நாளில் முழுப்பாய்ச்சலில் குதிரை செல்கிறபோது மனிதன் அடையும் மனக்கிளர்ச்சியையும் புரிந்துகொள்ள வேகத்திற்கும் எனக்குமான அனைத்து கடந்தகால அனுபவங்களும் உதவுகின்றன. சேலெர் குதிரையிலிருந்து துள்ளலுடன் குதிக்கிறபோது, நானும் அவனுடன் சேர்ந்து பூமியில் காலூன்றுவதுபோல உணர்கிறேன். நீச்சலிலும் இதுதான் நிலமை. தற்போதெல்லாம் நீந்துவது இல்லை. ஆனால் நீரின் ஸ்பரிசம் எப்பொழுதெல்லாம் எனக்குக் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் நீச்சலிடும் வீரன் அடையும் மகிழ்ச்சி எனக்கும் கிடைக்கிறது. ஓடுவதும் இந்நாட்களில் இல்லை. மிகவும் குறுகிய தூரம் என்றாலும் சீசரின் கற்சிலையை ஒத்த கனத்த சரீரத் துடன் எங்கனம் ஓட முடியும். என்னுடைய பால்யவயதில் ஸ்பானிய நாட்டு வறண்ட குன்றுகளில் ஒடியது நினைவிருக்கிறது. போட்டிக்கு ஆளின்றி தனி ஒருவனாக மூச்சிரைக்கும்வரை ஓடியிருக்கிறேன். ஆனால் அதனை அப்போதைய குறைபாடற்ற இதயமும்,ஆரோக்கியமான நுரையீரல்களும் வெகுவிரைவாகச் சீராக்கிவிடும். இது தவிர அறிவுக்கூர்மை மட்டுமே தரமுடியாத இணக்கமான புரிந்துணர்வை, ஒரு விளையாட்டு வீரருடனான தடகள பயிற்சியில் அடைய முடிந்திருக்கிறது. ஆக ஒவ்வொரு வித்தையிலிருந்தும் ஒவ்வொரு வகையான அறிவை அதனதன் அப்பியாச காலங்களில் பெற்று, எனது சந்தோஷ இழப்புகளில் ஒரு பகுதியை ஈடு செய்ய முடிந்திருக்கிறது. இத்தகையை நடவடிக்கைகள் மூலம் பிறமனிதரின் உயிர்வாழ்க்கையில் என்பங்கை அளிக்க முடியுமென்று நம்பினேன், இன்றைக்கும் நம்புகிறேன். நாம் திரும்பப் பெறக்கூடிய குறைந்தபட்ச நிலைபேறுடைய பொருள் ஒன்று உலகில் உண்டெனில் அது சகமனிதரிடம் நாம் காட்டும் அக்கறையாக மட்டுமே இருக்கமுடியும். நீந்துபவனிடமிருந்து விடுபட்டு அலைகளுக்குள் அவன் சக்தி கலப்பதுபோல, இப்புபுரிந்துணர்வு சக்தி மனிதர் அனுபவத்தைக்கடந்து செல்ல முயற்சிப்பதுமுண்டு ; அத்தகைய நேரத்தில் தெளிவுபெற வாய்ப்பின்றி கனவுலகின் உருமாற்ற வெளியில் பிரவேசித்திருப்பேன்.
உரோமானியர்களான நமது பொதுவான குறைபாடு வயிறு புடைக்க உண்பது, மாறாக நான் குறைவாக உண்டு களிப்பவன். மருத்துவர் ஹெர்மோழேன் எனது உணவுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவர முகாந்திரங்கள் ஏதுமில்லை, அப்படி எனது விஷயத்தில் அவருக்குச் சொல்ல இருந்தால், நேரத்தையோ இடத்தையோ பொருட்படுத்தாமல் பசியின் தேவையைப் பூர்த்தி செய்ய கிடைத்ததை பொறுமையின்றி, உடனடியாக விழுங்கித் தொலைக்கும் குணம் என்னிடமுண்டு, இதில் ஒருவேளை அவர் தலையிடலாம். செல்வந்தர்கள் உணவைத் தவிர்ப்பதென்பது அவர்கள் விரும்பினால் மட்டுமே சாத்தியம் அவ்வாறில்லாதுபோனால் யுத்தம், பயணம் போன்றவற்றில் மும்முரமாக பங்கெடுக்கிறபோதும் தற்காலிகமாக உணவின்றி இருக்கும் நெருக்கடிக்கு அவர்கள் ஆளாகலாம், இதிலிருந்து தெரியவருவது செல்வந்தர்களுக்கு தாங்கள் மிதமாக உண்பது குறித்து பெருமைபேசும் வாய்ப்பு ஒருபோதும் கிடையாது என்கிற உண்மை. ஏழைகளைப் பொறுத்தவரை, வயிறார உண்பது அன்றாடச் சம்பவமல்ல, அவர்களுக்கு அதுவொரு கனவு. மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய அந்த அதிஷ்டத்தை அவர்களுக்குக் கொடுப்பது ஒன்றிரண்டு பண்டிகை நாட்கள் மட்டுமே. எனக்குத் தீயில் வாட்டிய இறைச்சிகள் மிகவும் பிடித்தமானவை. அதுபோல சமைக்கும் பாத்திரங்களை ஆயத்தப்படுத்தும் ஓசைகளையும் விரும்பியிருக்கிறேன். இராணுவ முகாம் விருந்துகள் (அல்லது விருந்திற்கென்றே ஏற்பாடு செய்யப்படும் படைமுகாம்கள்), பணி நிமித்தமாக இழந்த மகிழ்ச்சியையும் பிறவற்றையும் சரிசெய்துள்ளன, ஆம் அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். சாட்டர்னலியா(Saturnalia)10 என்கிற வேளாண்மைக் கடவுளுக்கான விழாக்களில், பொதுவெளிகளில் பொரிக்கும் உணவுகள் மணத்தை முடிந்தமட்டில் சகித்துக்கொண்டுள்ளேன். ரோமாபுரி விருந்துகள் வெறுப்பையும் சலிப்பையும் நிரம்பத் தந்துள்ளன. இராணுவப் படையெடுப்பு, கள ஆய்வு நடவடிக்கைகள் என ஈடுபடுகிறபோது, உயிருக்கு எதுவும் நேரலாம் என்கிற சந்தர்ப்பங்கள் அதிகம், அவ்வாறான தருணங்களில் என்னை நானே தேற்றிக்கொள்ளும் வகையில், நல்லவேளை, குறைந்தபட்சம் இன்னொரு விருந்தில் கலந்துகொள்ளும் ஆபத்து இனியில்லையென நினைத்துக்கொள்வேன். இதுபோன்ற கருத்துக்களால் நீ, என்னை எதோ உணவைச் சீண்டாத ஒரு தவசியாகக் கருதி அவமதித்துவிடாதே ! நாளொன்றிர்க்கு இரண்டு அல்லது மூன்றுமுறை நடைபெறும் உணவு எடுக்கும் நிகழ்வின் நோக்கம் உயிரின் ஜீவிதத்திற்கு உணவூட்டுவது, ஆகையால் நம்மிடம் அக்கறையுடன்கூடிய பராமரிப்பை எதிர்பார்க்கும் தகுதி உயிர்வாழ்க்கைக்கு இருக்கிறது. கனியொன்றை தின்பது, நம்மைப் போலவே பூமியால் ஊட்டியும் பேணியும் பாதுகாக்கப்பட்ட அழகும் விநோதமும் கொண்ட ஆனால் நம்மிடமிருந்து வேறுபட்ட அந்நிய ஜீவனொன்றை நம்முள் அனுமதிக்கும் செயல், அதாவது எதையாவது உண்டு பசியாறவேண்டிய நெருக்கடியில் நமக்கு நாமே உயிர்ப்பலிகொடுத்து பசியாறுகிறோம். படைமுகாம்களில் வழங்கப்படும் காய்ந்து இறுகிப்போன ரொட்டித்துண்டைக் கையிலெடுத்துக் கடிக்கிறபோதெல்லாம், அந்த ரொட்டியின் கலவை இரத்தமாகவும், வெப்பம் ஆகவும், ஏன் ? கடும் எதிர்ப்பு சக்தியாகவும் கூட உடலுக்குள் மாறும் விந்தையை எண்ணி அதிசயிக்காமல் இருந்ததில்லை. இருந்தும் உடல் கிரகித்த ஒட்டுமொத்த சக்தியில், தனது விசேஷ நாட்களில் கூட, என் மனம் தன்பங்கென்று எடுத்துக்கொள்வது மிகவும் சொற்பம், இதுதான் ஏன் ? என்பது என்னுடைய கேள்வி.
ரோம் நகர அரசு விருந்துகளில் கலந்து கொள்கிறபோது நம்முடைய மக்கள் அண்மைக்காலங்களில் ஆடம்பரமாக வாழமுற்பட்டிருப்பது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அதுபோல பூண்டும் பார்லியும் வயிற்றுக்குப் போதுமென சிக்கனத்தைக் கடைபிடித்த நமது குடியானவர்களும், எளிமையான உணவில் திருப்தியுற்ற நமது படைவீரர்களும், போரில் அடைந்த வெற்றிகள் காரணமாகவோ என்னவோ திடீரென ஆசிய உணவே கதியென கிடப்பது, இன்னதென்று பிடிபடாத அவற்றைக் கொண்டு அநாகரீகமாக வயிற்றைநிரப்புவது ஆகியவற்றைப் பற்றியும் நினைப்பதுண்டு. ஒர்த்தொலான்’களை(ortolans-ஒரு வகை சிட்டுக் குருவி)11 வயிறுமுட்ட உண்பது, சாஸ் வெள்ளத்தில் உணவை மூழ்கடிப்பது, தற்கொலை முயற்சியோ என சந்தேகிக்கும் வகையில் மசாலாக்களைச் சேர்த்துகொள்வது, இவைகளே நமது ரோமானிய மக்களின் இன்றைய உணவுமுறை. படாடோபமான வாழ்க்கைக்கு அறியப்பட்ட ஓர் அப்பீசியஸை (Apicius) பொறுத்தவரை பெரு விருந்துக்கென தயாரிக்கபட்ட நேர்த்தியான உணவுப்பட்டியல்படி அளவாக அல்லது தட்டுநிறைய, இனிப்பு புளிப்பென்று பரிமாறப்படும் உணவுத் தட்டுகளின் வரிசையும்; அவற்றைப் பரிமாறக் காத்திருக்கும் பரிசாரகர்கள் வரிசையும் பெருமை சேர்ப்பவை. இவற்றையே, ஒரே சமயத்தில் அன்றி தனித் தனியே உண்ணும் சந்தர்ப்பமும், நாவின் சுவை அரும்புகளை அதிகம் சேதப்படுத்திக் கொண்டிராத, பசியில்வாடும் உணவு அபிமானிக்குக் கிடைத்குமாயின் அவற்றின் அருமை பெருமைகள் அறிவுபூர்வமாகப் போற்றப்பட வாய்ப்புகள் உண்டு. பெருவிருந்துகளில் என்ன நடக்கிறது ? இதுதான் என்றில்லை ஒன்றுடன் ஒன்று கலந்து ஒருவிதமான கடும் மணம் வீசும் நாட்பொழுதில் மனிதன் உண்பது அவன் வயிற்றிலும் உதரவிதானத்திலும் ஒரு வெறுக்கத்தக்க குழப்பக் கலவையாய் உருமாறுகிறது, உண்டபொருட்களின் மணமும், சுவையும் தங்கள் மதிப்பை மட்டுமின்றி, உன்னதமான தங்கள் அடையாளத்தையும் இழக்கின்றன. எனது அனுதாபத்தைப் பெற்ற லூசியஸ்(Lucius)(13) என்பவனுக்கு அரிதான உணவுகளை பிரத்தியேகமாக எனக்கென்று சமைப்பதெனில் மிகவும் மகிழ்ச்சி. காட்டுக்குருவி இறைச்சியோடு மிகச்சரியான விகிதாச்சாரத்தில் பன்றி இறைச்சியையும், மசாலாக்களையும் சேர்த்து அவன் தயாரிக்கிற பத்தே (Pâté) இருக்கிறதே அது ஓர் இசை அல்லது ஓவியக் கலைஞனின் படைப்புக்கு நிகர், எனினும் மிகவும் அசலான அந்த இறைச்சியைச் உண்கிறபோது, அதற்குக் காரணமான இறத பறவையை நினைத்து வருந்துவேன். இதுபோன்ற விஷயத்தில் கிரேக்கர்கள் நல்ல ரசனைகொண்டவர்கள்: குங்கிலியம் மணக்கும் அவர்களின் ஒயின், எள் தூவிய அவர்களுடைய ரொட்டி, கடலோரப்பகுதிகளில் கம்பி வலைத் தகட்டில்வைத்து நெருப்பில் வாட்டியதில்-திட்டுத் திட்டாய் தீய்ந்த்திருக்கிற மீன்கள், அவற்றில் அங்குமிங்குமாக ஒட்டிக்கிடக்கும் பொடிமணல் என்று எல்லாமே கண்டதையும் சேர்க்காமல் ருசிப்பவை, அவை உண்பவரின் பசியைப் போக்குவதோடு எளிமைமிக்க சந்தோஷத்தையும் அளிப்பவை. ஏஜினா(Aegina),‘ஃபாலெரான்’(Phaleron)(14) இரண்டு தீவுகளும் உணவுண்ண ஏற்ற இடங்கள் அல்ல, தவிர அங்கு உணவு பரிமாறும் கைகளும் படுமோசம், அசுத்தமானவை. அவ்வாறிருந்தபோதும் அங்கு புத்தம்புது உணவுவகைகளை உண்டு மகிழ்ந்திருக்கிறேன். அவை மிகவும் சாதாரண வகைகள் என்றாலும், நம்மை என்றென்றும் சிரஞ்சீவியாய் வைத்திருக்கப் போதுமான அமுதம். வேட்டை முடித்த முன்னிரவுகளில் நெருப்பில்வாட்டும் இறைச்சிகள்கூட சுவையில் ஈடு இணையில்லாதவை. அவ்வனுபவம், நமது முன்னோர்களின் கற்கால வாழ்க்கையை நினைவுபடுத்தக்கூடியது. பிறகு நாம் அருந்தும் ஒயின்: பருகும்போதெல்லாம் பூமியின் பூகம்ப ரகசியங்களை போட்டு உடைக்க்கிறது, தாதுப் புதையல்கள் பற்றிய தகவல்களைத் தருகிறது: உச்சிவேளையில் கொளுத்தும் வெயிலில் அல்லது குளிர்கால இரவொன்றில் களைத்திருக்கும் வேளையில், ஒரு குவளை சமோஸ்(Samos) ஒயினை பருகிய அடுத்த கணம் குடற்சவ்வில் இறங்கும் வெப்பமும், இரத்த நாளங்களின் கொதிப்பும் – சராசரி மனிதனுக்கு அதிகப்படியான அனுபவம் என்கிறபோதும் உண்மையில் தனித்துவமானது. அத்தகைய தனித்துவ அனுபவத்தை ரோம்நகரில் ஆண்டுகள் வாரியாக அடுக்கிப் பாதுகாக்கப்படும் ஒயின் காப்பகங்களில் உள்ள பாட்டில்கள்கூட எனக்குத் தந்ததில்லை. ஒயின் குறித்த சகல சங்கதிகளையும் தெரிந்துவைத்திருக்கும் ரோமிலுள்ள விற்பன்னர்களாலுங்கூட இதற்கானக் காரணத்தை சொல்ல முடிவதில்லை, இதுவரை எனக்கு ஏமாற்றத்தையே தந்துவருகிறார்கள். பிறகு இன்னொன்று இருக்கிறது, ஆக உத்தமமானது, கைகளிலோ அல்லது நீருற்றிலோ முகர்ந்து குடிக்கும் நீர்தரும் அபூர்வ கைப்பு ; அது பூமிக்கும் வான்மழைக்கும் சொந்தமானது. தண்ணீர் பருகுவதற்கு மிகவும் இனிமையானதென்கிற போதிலும், நோயினால் அவதிப்படும் நான் அளவாகத்தான் தற்போது உபயோகப்படுத்துகிறேன். அதனாலென்ன? மரணத்தறுவாயிலும், என் அதரங்களில் விழுகிற நீர்த்துளிகளின் குளிர்ச்சித் தன்மையை சுவைத்தே தீருவதென்கிற உறுதியுடன் இருக்கிறேன்.
அனைத்துவகையான வாழ்க்கைமுறையையும் ஒரு தடவையாவது வாழ்ந்துபார்ப்பது நல்லது என்கிற எண்ணமிருப்பின் அத்தகு வாய்ப்பினை நமக்குத் தருவது தத்துவ பள்ளிகள். அங்கு சிறிதுகாலம் புலால் மறுப்பவனாக நான் இருந்தேன். பின்னர் ஆசியாவில், இந்தியத் திகம்பரர்கள்(Indian Gymnosphists), ஒசோரெஸ்(Osrës)(16) கூடாரங்களில் ஆவிபறக்க படைக்கப்படும் ஆட்டுத் தலைகளையும் புள்ளிமான் தொடைகளையும் கண்டு தலையைத் திருப்பிக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். இப்படியான கோட்பாடுகளில் ஈர்க்கபட்ட உணவு மறுப்பாளர்களுக்கு அதனைப் பின்பற்றுவதென்பது மிகக் கடினமானது, இத்ததகைய நெருக்கடிகள் உணவுப் பிரியர்களுக்கு இல்லை; குறிப்பாக சம்பிரதாயம் என்றபேரிலும் நட்பின் அடிப்படையிலும் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகளில், உணவுமுறைகளில் நமக்கு நாமே விதித்துக்கொண்டுள்ள நியமங்கள் இதர விருந்தினர்களோடு நம்மை அந்நியப்படுத்துகின்றன. ஒவ்வொரு விருந்திலும் எனது புலால்மறுப்பு விருந்தளிப்பவர்களால் விமர்சிக்கப்படுவதைக் காட்டிலும், ஆயுள் முழுக்க கொழுத்த வாத்தினையும், காட்டுக்கோழிகளையும் உண்டு நிம்மதியாக இருந்திருக்கலாமோ ? என நினைத்தது உண்டு. இந்த வகையில், எனக்கேற்பட்ட சங்கடங்கள் அதிகம்: விருந்தின்போது பதப்படுத்தபட்ட பழங்கள் அல்லது மதுநிரப்பிய கோப்பை, இரண்டிலொன்றை சுவைத்தபடி அதிதிகளிடம், எனது சமையல் வல்லுனர்கள் வகைவகையாகச் சமைத்தது உங்களுக்காகவன்றி எனக்காக அல்லவென்று நாசூக்காகக் கூறி சமாளித்துவிடுவேன் . ஒரு சில விருந்துகளில், ‘ஆர்வம் காரணமாக, கொஞ்சம் முன்பாக ருசிபார்த்துவிட்டேன், இனி உங்கள்பாடு’, என்று பொய்யைக் கூறி தப்பித்ததுமுண்டு. இந்தவகையில் ஒர் அரசகுமாரனுக்கு தத்துவவாதிகளைப் பார்க்கிலும் சுதந்திரம் குறைவென்று சொல்லவேண்டும்: அவன், அவர்களைப்போல ஒரே நேரத்தில் பலதுறைகளிலும் கருத்தியல் சுதந்திரம் கொண்டவனல்லன். எனக்கும் அம்மாதிரியான அபிராயபேதங்கள் ஆயிரக்கணக்கில் உண்டென்பதை கடவுள்கள் மொத்தபேரும் அறிவர், அவற்றுள் பலவற்றை நான் வெளிப்படுத்தியதில்லை என்று சொல்வது மற்றவர்களுக்குத் தற்பெருமையாகக்கூடத் தோன்றலாம். இரத்தம் சொட்டும் மாமிசத்தைக் கண்டவுடன் முகத்தைத் திருப்பிக்கொள்ளும், பாவபுண்ணியங்களை நம்புகிற மதவாதிகளான திகம்பரர்களின் மனப்பாங்கில் எனக்கு உடன்பாடில்லை, ஏனெனில் அம்மாதிரியான நேரங்களில் ‘தீவனத்திற்கென்று அறுபடும் புற்களின் வேதனை, இறைச்சிக்காக வெட்டப்படும் ஆட்டின் வேதனைக்கு எந்தவகையில் குறைந்தது?’ என்கிற கேள்வியை எனக்குள் நான் எழுப்பிக்கொள்வேன் அல்லது உணர்வுகள் அடிப்படையில் விலங்கும் மனிதனும் ஓர் உலகைச் சார்ந்தவர்களென்கிற சிந்தனை காரணமாக, விலங்கினை வெட்டும் காட்சியைக் கண்டு வெளிப்படும் நமது அருவருத்தலுக்கு எத்தகைய பொருளும் இல்லையென்றும் நினைத்துக்கொள்வேன். எனினும், அன்றாட வாழ்க்கையில் சில தருணங்களில், நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் இம்மாதிரியான நியதிகள் உதவவும் செய்கின்றன என்பதை ஏற்கவேண்டும், உதாரணத்திற்கு சம்பிரதாய சடங்குகளின்போது கடைபிடிக்கப்படும் விரதங்களையும் அவற்றினால் நமது ஆன்மாவிற்குண்டான பலாபலன்களையும் அறிந்துள்ளேன், ஏன் அதன் விளைவுகளையும் புரிந்துவைத்திருக்கிறேன். விரும்பியோ, விரும்பாமலோ பட்டினி கிடக்கிறபோது ஏறக்குறைய மயக்கநிலையில் இருக்கிறோம். இலேசாகிப்போன நமது சரீரத்தின் ஒருபகுதி நியதிக்கு மாறான உலகத்திற்குள் பிரவேசிக்கிறது, மரணத்தின் வாயில்வரை சென்று மீண்டதன் சாட்சியாக அவ்வமயம் உடலும் சில்லிட்டுப்போகிறது. சில தருணங்களில், அம்மாதிரியான அனுபவங்கள் மெல்ல உயிரைமாய்த்து கொள்வதென்கிற எனது எண்ணத்தோடு ஓடிப்பிடித்து விளையாட உதவின, அதனை, உயிரைத் துறக்க உண்ணாமலிருக்கும் வேதாந்திகளுடைய நிலமையோடு ஒப்பிடமுடியும். ஒருவகையில் நான் கொண்டிருந்த கட்டுபாடற்ற உணவுமுறைக்குப் பரிகாரம் தேடிய அம்முயற்சியானது நான் சோர்வுறும்வரை தொடர்ந்தது. இம்மாதிரியான கட்டுப்பாடுகள் நம்மை சங்கடத்தில் ஆழ்த்துகின்றன என்தால், கோட்பாடுகளை நான் உறுதியாக பின்பற்றுவதில்லை, உதாரணமாக விருந்தொன்றுக்குச் செல்கிறேன் அங்கே இறைச்சி உணவுகள் பிரதானமாக இடம்பெற்றிருக்கின்றன, அவற்றைப்பார்க்க எனக்கும் நாவில் நீர் ஊர்கிறது, அவ் அவாவிற்கு அல்லது விரும்பியதை உண்பதென்கிற எனது சுதந்திரத்திற்குப் புலால் மறுப்பின்மீதான எனது விசுவாசம், தடையாக இறுக்குமெனில் எவ்வாறதனை அனுமதிக்க முடியும்.
(தொடரும்……)
பின்குறிப்புகள்
1. அயர்லந்தின் பழைய பெயர்
2. கி.மு. 70க்கும் கி.பி 217க்கும் இடையில் வாழ்ந்த இந்தோ-ஈரானிய பரம்பரை மக்கள், நாடோடிகள்.
3. ரோமானியர்களின் மிகப் பழமையான நகரம்.
4. தற்போதைய இத்தாலியின் Toscane பகுதி
5. ரோமானியர்களின் வனதேவதை
6. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமானிய அரசன்(Marcus Ulpius Trajanus) கி.மு.98 – கி.பி.117, அத்ரியன் வளர்ப்பு தந்தை.
7. Bithynie, Cappadoce ஆசிய மைனரைச் சேர்ந்த பழங்கால அரசுகள்
8. Mauretanie ஆப்பிரிக்க நாடு.
9. Centaur – கிரேக்க புராணப்படி பாதி மனிதன், பாதி குதிரை வடிவங்கொண்ட விலங்கு
10 -Saturnalia was the feast at which the Romans commemorated the dedication of the temple of the god Saturn
11. Ortolan – ஒரு வித பறவை.
12. கி.மு 25ல் வாழ்ந்த Marcus Gavius Apicius, ரோமானியச் சக்கரவர்த்தி Tibereன் பிரத்தியேக சமையல்காரன்.
13. Lucius Aurelius Verus (161 – 169) அதிரியன் வளர்ப்பு மகன்
14. Egine, Phalere -சரோனிக்(Saronique)வளைகுடாவைச் சேர்ந்த சிறிய துறைமுகப் பட்டணங்கள்.
15. Samos- Wine – சமோஸ் -ஆசிய மைனரைச் சேர்ந்த சிறிய தீவு.
16. Osroes -(109-128).- பார்த்திய அரசன்.