1957 – 1 செம்பருத்தி

This entry is part 1 of 4 in the series 1950 களின் கதைகள்

ந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற அன்னி எர்னோவின் சமீபத்திய நாவல் ‘ஒரு இளம்பெண்ணின் கதை’யை வாசித்தேன். 

1958-ஆம் ஆண்டின் கோடை காலம். ஃப்ரான்ஸில் குறிப்பிட்டுச் சொல்லும்படி பிரமாதமாக ஒன்றும் நடந்துவிடவில்லை. டி கால் பதவிக்கு வந்தார். சார்லி கால் டூர் டி ஃப்ரான்ஸ் ஜெயித்தார். 

என்று கதை தொடங்குகிறது. அதே பாணியில்… 

1957-ஆம் ஆண்டில் கோடை வெயில்.

ஒரு ரூபாய்க்கு பதினாறு அணா, ஒரு அணாவுக்கு பன்னிரண்டு பைசா என்று பிரிட்டிஷ் அரசு, எல்லாருக்கும் பெருக்கல் வாய்பாடு தெரிந்திருக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில், உருவாக்கிய நாணயமுறைக்கு பதில், ஒரு ரூபாய்க்கு நூறு நயாபைசா என்ற கணக்கில் இந்திய அரசு புதுக்காசுகளை வெளியிட்டது. சட்டசபைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதிக்கு திரு அண்ணாதுரை வெற்றிபெற்றார். ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்’ தொடராக வந்தது. கேமரா மாயா ஜாலங்கள் நிறைந்த ‘மாயாபஜார்’ தமிழ் வருஷப்பிறப்புக்கு வெளியிடப்பட்டது. ஆசிய ஃப்ளு ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக இந்தியாவில் நுழைந்து இங்கிலாந்தில் புகுந்து அமெரிக்காவை எட்டியது.

பிற செய்திகள்…

செம்பருத்தி

டாக்டர் ஆசீர்வாதம் தன் இல்லத்தில் இருந்து மாதாகோவிலுக்கு சாவடி தெரு வழியாக நடப்பார். மாதச் சம்பளம் வாங்கும் கடைநிலை ஊழியர்கள், நிலையான வருமானம் இல்லாத தொழிலாளிகள், சில்லறை வியாபாரிகள். அவர்களில் பலரை அவருக்குத் தெரியும். சந்தின் திருப்பத்தில் கைத்தொழில் வாத்தியார் ஜெபநேசனின் வீடு. நுழைவிடத்தையும் சேர்த்தால் மூன்று அறைகள். பின்னால் குளிப்பதற்கு ஓலைகளால் ஆன ஒரு தடுப்பு. அவர் அறிந்து சுவருக்கு சுண்ணாம்பு பூசப்படவில்லை, தகரக்கூரை மாற்றப்படவில்லை. கழிவுநீரை வீணாக்காமல் கொல்லையில் கத்தரிக்காய், வெண்டைக்காய் என்று பல செடிகள் மற்றும் அவரைக்காய் பந்தல். அங்கே ஜெபநேசன் மண்ணைக் கொத்தி, வேண்டாத செடிகளைப் பிடுங்கியெறிவார். ஆசீர்வாதத்துக்கு கைகூப்பி நமஸ்காரம். வீட்டின் முன்புறத்தில் தோட்டம் என்று சொல்ல பிரமாதமாக ஒன்றும் இல்லை. மனம் இருந்தால் பூக்கும் முல்லைக்கொடிக்கு ஒரு கொம்பு. ஒன்றிரண்டு ரோஜாச் செடிகள். அவற்றின் பூக்களை பெண்கள் பறிப்பதற்கு முன்பே பையன்கள் இதழ்களைப் பிய்த்துத் தின்றுவிடுவார்கள். திண்ணையிலும் தெருவை ஒட்டிய கட்டாந்தரையிலும் குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்க்க நின்றிருக்கிறார். அவர் கண்ணில் முன்பே அது ஏன் படவில்லை? பட்டிருக்கும், ஆனால் அதில் ஒளிந்திருந்த தகவல் அவர் உணர்வுக்கு எட்டாததால் கவனித்திருக்க மாட்டார். 

சுவர் ஓரமாக ஒரு செழுமையான செம்பருத்தி. மூன்று நான்கு தண்டுகள். கூரையைத் தொட்ட உயரம். ஓரத்தில் வெட்டுப்பட்ட இலைகள், சாத்தானின் நாக்கைப்போல நீட்டிய இரத்தச்சிவப்பு பூக்கள். உள்நாட்டு வகை தானாக வளர்ந்திருக்கிறது. காலையிலேயே சூடு பிடித்த சூரியவொளியில் அதைப் பார்த்து நின்றார். வீட்டில் இருந்து வெளியே வந்த ஜெபநேசனின் மனைவி மேரியின் கவனம் செம்பருத்தி செடியின் மேல். வாளியில் எடுத்துவந்த சாணம் கலந்த நீரை செடிக்கு வார்த்தாள். அத்துடன் இதழ்கள் விரிந்து மலர்ந்த நாலைந்து பூக்களைப் பறித்து ஒரு கூடையில் உள்ளே எடுத்துக்கொண்டு போனாள். அவரை அவள் கவனிக்கவே இல்லை. 

அன்று முழுவதும் அவர் மனதில் செம்பருத்தியின் ஆதிக்கம். வேறு எந்த காரியத்திலும் கவனம் ஓடவில்லை. அதன் அழகினால் அல்ல. ஹிந்து கடவுளுக்குப் பிடித்தமான மலர்களை மேரி ஏன் அவரைக் கூடக் கவனிக்காமல் பரம சிரத்தையுடன் எடுத்துப்போக வேண்டும்? படங்களுக்கு ரகசியமாகச் சூட்ட என்று அவள் விசுவாசத்தை சந்தேகிப்பது சரியாகப் படவில்லை. வேறு எதற்கு? 

மாலையில் திரும்பிப்போனபோது தள்ளிநின்று நோட்டம்விட்டார். புதரில் மலர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தது. அடுத்த வீடுகளில் வசிக்கும் ஹிந்துப்பெண்கள் பறித்துப்போய் இருக்கலாம். வெளிச்சுவரில் சாத்திருந்த ஜெபநேசனின் பழைய சைக்கிள். பெரிய பையன் பைகளுடன் வெளியே வந்து அதில் ஏறிப்போனான். சாமான் வாங்குவதற்காக இருக்கும். மற்ற குழந்தைகள் விளையாட வந்தன. எல்லாருக்கும் அவர் ஞானஸ்னானம் செய்திருந்தார். கடைசியில் நான்கு வயது அஞ்சலி. அவளுக்குப்பிறகு… அடுத்ததாக… ஆகா. காரணம் தெரிந்துவிட்டது. அந்த எண்ணத்தை உறுதிசெய்ய வீட்டில் என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா. அவர் ஷிகாகோவில் வசித்தபோது பாஸ்டர் வின்சென்ட் பீல் அளித்த பரிசு. கப்பலில் வந்த பதினெட்டு தலையணைகள். 

ஹிபிஸ்கஸ். 

செடியின் விவரங்கள். உலகில் வளரும் இடங்கள். மலர்களின் படங்கள். கடைசியில் உபயோகம். அலங்காரத்துக்கும்… கடைசியில் அவர் தேடிய விவரம். 

மேரி பூக்களுக்குக் கொடுத்த மரியாதையினால் குழந்தை அஞ்சலியோடு குழந்தைகளுக்கு அஞ்சலி. 

நுண்மையான பிரச்சினை. 

மேரிக்கு முப்பதுடன் ஒன்றிரண்டு கூட இருக்கலாம். இன்னும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளை இவ்வுலகுக்குக் கொண்டுவர இறைவனின் ஆசி இருக்கிறது. அவளுக்கும் அது தெரிந்திருக்கும். ஆனால் நகராட்சி பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் சம்பளம் அவள் ஆசையைத் தடுத்திருக்கும். அவள் செய்வது ஜெபநேசனுக்குத் தெரியாமலும் இருக்கலாம். கணவன் மனைவி அந்தரங்கத்தில் தலையிடுவது தவறு. அதே சமயம் இந்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு மனித சட்டம். உலகில் கிறித்துவக் குழந்தைகளைப் பெருக்குவது அதற்கும் மேலான கடவுளின் ஆணை. அதை நிறைவேற்றுவது கடவுளின் பணியாளரான ஆசீர்வாதத்தின் கடமை. 

ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்து கும்பல் கலையத்தொடங்கியது. ஒவ்வொருவரும் ஆசீர்வாதத்தின் ஆசியை வாங்கிக்கொண்டு நகர்ந்தார்கள். 

“ஜெபநேசன்! ஒரு சின்ன விஷயம்.” 

மாதாகோவிலின் பராமரிப்பில் விசுவாசிகளின் உதவியை ஆசீர்வாதம் நாடுவது வழக்கம். அதனால், மனைவியையும் குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டுத் திரும்பிவந்தார்.  

அலுவலக அறை. ஒரு மூலையில் ஐபிஎம் டைப்ரைட்டர். அதை பிரமிப்புடன் பார்த்தபடி நின்றார். 

ஆசீரவாதம் ‘ஜெபநேசன் என்டர்ப்ரைசஸ்’ என்று ஒரு தாளில் அடித்து அதை எடுத்து நீட்டினார். 

“அச்சடிச்ச மாதிரி” என்று ஜெபநேசன் வியந்தார். 

ஆனால், வாசகத்தின் அர்த்தம் புரியவில்லை. 

“இது அமெரிக்கர்களின் சாமர்த்தியம், சாதனை.”  

 ஆசீர்வாதத்தின் அந்தப் புகழ்ச்சியை அவர் மேல் திரும்ப வைப்பது போல அவரை மதிப்புடன் பார்த்தார்.

“உக்காருங்க!” 

ஜெபநேசன் தயக்கத்துடன் அதைச் செய்தார். 

“எல்லாம் எப்படி போகுது?”  

அவரைப் போன்றவர்களுக்கு மாதசம்பளத்தில் முப்பது நாளை – சில மாதங்களில் ஒன்று கூட – ஓட்டுவது தான் ஒரே பிரச்சினை. 

“கடவுள் கிருபையில வரவுக்கும் செலவுக்கும் ஒத்துப்போகுது.”  

அதில் அடுத்த குழந்தைக்கு இடமில்லை. இடம் செய்வது ஆசீர்வாதத்தின் பொறுப்பு. 

“அப்ப அஞ்சலிக்கு அப்புறம்…”   

ஆசீர்வாதம் எதிர்பார்த்தது போல, இன்னொரு ஆறேழு மாசத்தில என்ற பதில் வரவில்லை. 

“தண்ணி ஊத்தறவர் அவர். நானா மரம் வைக்கமுடியுமா?”  

மேரி கணவனுக்குத் தெரியாமல் செய்யும் பாவம். அதை மன்னித்து அதன் பரிகாரத்துக்கு வழிசெய்து, அவளை பைபிள் கடவுளின் அடங்காத கோபத்தில் இருந்து காப்பாற்றுவது ஆசீர்வாதத்தின் கடமை. 

“நான் பத்து வருஷம் அமெரிக்காவில இருந்திருக்கேன். உலகப்போர் முடிஞ்சதும் என்ன வளர்ச்சி! என்ன மக்கள் பெருக்கம்! ஆறு பையன்களும் ஆறு பெண்களும் பெற்று ஒருவர் ‘டஸனாக எடுத்தால் மலிவு’ன்னு காட்டியிருக்கார்.”  

‘நம்மால அது முடியாது’ என்று மறுக்காமல் ஜெபநேசன் வெறுமையாகப் பார்த்தார். 

“இன்னிக்கி காடும் புல்வெளியுமா இருக்கும். நாளைக்கு அங்கே பத்துவீடு இல்ல ஒரு தொழிற்சாலை. அவங்களோட எல்லா நல்ல பழக்கங்களையும் நாம பின்பற்றணும். அப்பத்தான் நம்ம நாடு முன்னேறும். சும்மா காந்தி காந்தின்னு பேசிட்டிருந்தா குல்லா போட்டுக்க வேண்டிது தான்.”  

“உண்மைதாங்க.”  

“வக்கீல் சட்டம் செய்வான், வீட்டுக்கு சட்டமும் அடிப்பான். பியானோ டீச்சர் கேக் செய்து விப்பா. ஒரு வருமானத்தோட திருப்தி அடையக்கூடாது.”  

“நீங்க சொல்றது சரி தான். இப்ப… கணக்கு வாத்தியார் சத்தியசாமி சம்பளத்துக்குமேல ட்யுஷன்ல பணம் செய்யறார். கைத்தொழில் வகுப்பே இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கும்னு தெரியாது.”  

“கைவினைப் பொருட்கள்.”  

“அந்த அளவுக்கு கலைத்திறன் கிடையாதுங்க. நல்லா தறியடிப்பேன். இந்த ஊர்ல அதுக்கு எத்தனையோ பேர் இருக்காங்க.”  

ஆசீர்வாதம் யோசனை செய்தார். 

“பைன்டு செய்வேன். பழைய பாடப்புத்தகங்கள், இல்லை பத்திரிகையில வந்த தொடர்கதைகள். அளவா தைக்கணும். இரண்டு பக்கமும் அட்டை, முதுகில ரெக்ஸின் ஒட்டணும். கடைசியில ஓரங்களை வெட்டணும். உங்களுக்கு எதாவது பைன்டு…”    

“நான் கேக்கறது, அதில எவ்வளவு வரும்?”  

“மாசத்துக்கு நாலைந்து ரூபா.” 

இன்னொரு குழந்தையைக் கொண்டுவர அது போதாது. 

“பள்ளிக்கூடத்தில வேறு பொறுப்பு?”  

“நான், ட்ராயிங் மாஸ்டர்ஸ் ரெண்டு பேர், உடற்பயிற்சி கிருஷ்ணன். எங்களுக்கு பரீட்சை திருத்தறது, ஹோம்வொர்க் கொடுக்கது இந்த மாதிரி உபரி வேலை கிடையாது. அதனால புக்-ஸ்டோர் எங்க பொறுப்பு. ஒவ்வொரு வருஷமும் பாடப்புத்தகங்களை பள்ளிக்கூடம் திறக்கறதுக்கு முந்தியே ஆர்டர் செய்து வாங்கி வச்சிருவோம்.”  

“நோட்டுகள்?”  

“காம்போசிஷன் நோட் மட்டும். அதில ஸ்கூல் பெயர் போட்டிருக்கும். தமிழுக்கு ஒண்ணு, இங்க்லீஷுக்கு ஒண்ணு. ”  

“ஸ்டோர் யாருக்கு சொந்தம்?”  

“ஒருத்தருக்கு இவ்வளவுன்னு இல்ல. ஹெட்மாஸ்டர் சுந்தரம் எப்பவோ மூணு மாசம் ஜெயிலுக்குப் போனாராம். அதனால பள்ளிக்கூடம் ஆரம்பிச்சப்ப அரசாங்கத்தில நானூறு ரூபா கடன்கொடுத்தாங்க. அதை வச்சுத் தொடங்கினது.”  

“கோ-ஆபரேடிவ்னு சொல்லுங்க.”  

“சரி தான். நாலு வருஷத்தில கடன் அடைஞ்சிட்டுது.”  

“எவ்வளவு லாபம் மிஞ்சும்?”  

“புது புத்தகங்கள் வாங்கறவங்க ரொம்ப குறைச்சல். ஒரு புத்தகம் நாலைந்து கை மாறும். அதனால முதல் போக நூத்தம்பதுலேர்ந்து இருநூறுக்குள்ள தேறும்.” 

“அதில உங்க பங்கு…”  

“ஒண்ணும் கிடையாது. சுதந்திரதின கொண்டாட்டம், வருஷக்கடைசியில விளையாட்டுப் போட்டியில பரிசுகள், அடுத்த வருஷத்து புத்தகங்களுக்கு அட்வான்ஸ். – இதுக்கெல்லாம்…”  

“நீங்க நாலு பேர் உழைக்கறீங்க. வர்ற லாபம் எல்லாருக்கும் சொந்தம். என்ன முட்டாள்தனம்! என்னைக்கேட்டா கோ-ஆபரேடிவ், கம்யுனிசம் ரெண்டும் ஒண்ணுதான். உருப்படாத வழிகள். நம்ம ஊர் பொதுவுடமைவாதிகள் யாரும் ரஷ்யாவை நேர்ல போய்ப் பார்த்தது இல்ல. அதனால அதைத் தலையில வச்சு கொண்டாடறாங்க. ‘நேருவின் ரஷ்ய விஜயம்’ படம் பார்த்திருப்பீங்களே.”  

“பையன்களோட சேர்ந்து.” 

“அந்த இலவசப்படத்தில காட்டினது எல்லாம் சும்மா ஷோ. நான் அமெரிக்காவில வாழ்ந்திருக்கேன். அங்கே சும்மான்னு எதுவும் கிடையாது. இப்ப வக்கீல் ஒரு கேஸை எடுத்துக்கிட்டார்னா அதுக்காக புத்தகம் படிக்கிறது, கார்ல போறது எல்லாத்துக்கும் மணிக்கு இத்தனைன்னு கணக்குப்போட்டு வாங்கிடுவாரு. அதனால தான் அங்கே செல்வம் கொழிக்குது.”   

ஜெபநேசன் மனக்கண்ணில் ‘அமெரிக்காவில் ஆசீர்வாதம்’ படம் ஓடியது.

“இப்ப…” என்று ஆரம்பித்து ஆசீர்வாதம் நிறுத்தினார். ஜெபநேசன் காத்திருந்தார். 

“வர்ற வருஷத்துக்கு வேலையைத் தொடங்கிட்டீங்களா?”  

“ஈஸ்டருக்கு அப்பறம் தான்.”  

“நான் யோசிச்சு ஒரு வழி சொல்றேன்.” 

“அப்ப, நான் கிளம்பலாங்களா?”  

“ம்ம்.. நாளைக்கு என்னை வந்து பாருங்க! அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம்.” 

“சொல்லுங்க!” 

“உங்க வீட்டு வாசல்ல செம்பருத்திப் புதர் கண்ணை உறுத்துது. அதை வெட்டிட்டு நாலைஞ்சு ரோஜா வச்சிருங்க. நான் வேணும்னா நல்ல ஒட்டு ரகமா…” 

ஜெபநேசனின் தோளைத்தட்டி வழியனுப்பினார். 

பைபிளின் தீர்க்கதரிசனங்களைப்போல ஆசீர்வாதத்தின் மனதில் பத்து மாதங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் ஒரு தீர்க்கமான காட்சி. 

கல்வி ஆண்டு முடிவதற்குமுன் தலைமை ஆசிரியர் சுந்தரம் அடுத்ததற்குத் திட்டமிட வேண்டும். சம்பளம் கட்டும் சக்தியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, அரசாங்கம் ஒதுக்கும் ஆசிரியர்களின் சம்பளம். முக்கியமாக பாடப்புத்தகங்கள். ஆறாம் படிவத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்களை ஏன் அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றித் தொலைக்கிறது? மற்ற பாடங்களைப்போல நாலைந்து ஆண்டுகளுக்கு அப்படியே இருந்தால் ஏழை மாணவர்களுக்கு எவ்வளவு சௌகரியம்? சரி, மற்ற வகுப்புகளுக்கு. 

பள்ளிக்கூட நேரம் முடிந்ததும் தன் அறைக்கு ஜெபநேசனை அழைத்து ஒரு நீண்ட பட்டியலை நீட்டுகிறார். மற்றவர் அதை வாங்கிக்கொள்ளாமல், 

“எப்படி ஆர்டர் செய்யிறதுங்க?” 

“ஏன்?”

“கையிருப்பு தீர்ந்து போயிரிச்சே.” 

“பொதுவா இருக்குமே.” 

“இந்த வருஷம் செலவு கொஞ்சம் அதிகம்.” 

சுந்தரத்தின் முகத்தில் சந்தேகத்தைப் படித்து, 

“நீங்களே பாருங்க! எல்லா வரவு செலவுக் கணக்கும் இதில இருக்கு. நயா பைசா சுத்தமா எழுதியிருக்கேன்.” நாற்பது பக்க நோட்டை நீட்டுகிறார். 

‘என்ன மிஞ்சிப்போனால் வேலையைவிட்டு தள்ளுகிறேன் என்று சொல்லப் போகிறார். அதை நானே செய்வதாக இருக்கிறேன்’ என்று விறைப்பாக நிற்கிறார். 

சுந்தரம் பிரித்து நிதானமாகப் பார்வையை ஓட்டுகிறார். கடைசியில் ஒரே பூஜ்யங்கள். பிறகு, சத்தமாகப் படிக்கிறார். 

“ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புத்தகக்கட்டு எடுத்துவர எழுபத்தியைந்து நயா பைசா. 

“புத்தகங்களின் கட்டுகளைப் பிரித்து வகுப்பு வாரியாக அடுக்க ஒரு மணிக்கு ஒரு ரூபாய் இருபத்தியைந்து நயா பைசா. இதெல்லாம் என்னய்யா புதுசா இருக்கு?”    

“நாங்க மூணுபேரும் புள்ளகுட்டிக்காரங்க. விலைவாசி ஏறிட்டிருக்கு. ஆனா அதே சம்பளம். எப்படி சமாளிக்கறது?”  

“இதை நீங்க வருஷ ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தா பணத்துக்கு நான் வேற ஏற்பாடு பண்ணியிருப்பேன். இப்ப பெற்றோர்கள் புத்தகம் வாங்க வந்தா நான் என்னய்யா சொல்றது?”  அடங்கிய குரலிலும் கோபம் தொனித்தது. 

“உங்களுக்கு அந்தக் கவலையே இருக்காது.”  

ஐபிஎம் டைப்ரைட்டரில், அச்சிட்டது போல எழுத்துக்களுடன் ஒரு காகிதம். 

அமர்ஜோதி என்டர்ப்ரைசஸ் 

மாணவர்களின் எல்லா பாடப்புத்தகங்களும் கிடைக்கும். 

ஒவ்வொரு பாடத்துக்கும் நோட்ஸ். 

வாத்தியார் சரியாக நடத்துகிறாரா இல்லையா என்ற கவலை இனி வேண்டாம்.

தேர்வுகளில் வெற்றி நிச்சயம். 

பள்ளிக்கூடப் பெயர் போட்ட நோட்டுகள் எல்லாப் பாடங்களுக்கும்.

ஜெபநேசனிடம் இருந்து  வாங்கிப்பார்த்து அவரிடமே திருப்பித்தருகிறார். 

“இப்போதைக்கு புத்தகங்ளை விக்க ஷாப்கடை வாசல்ல இடம் வாங்கி இருக்கேன். பணம் சேர்ந்ததும் சொந்தமா…”  

பொதுவாக தலைமை ஆசிரியருக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் முகம். அதில் சுமுகத்தை வரவழைக்க, 

“நீங்க இதைப் பிரபலப்படுத்தினா லாபத்தில உங்களுக்கும் பங்கு. அதுவும் உரைநூல்களில நாற்பது சதம்.”  

அதைக் கேட்டும் முகத்தில் உணர்ச்சி வந்துவிடவில்லை. வறட்சியான குரலில், 

“அடுத்தவர ஹெட் மாஸ்டர் கிட்ட இதைச் சொல்லுங்கோ! சுதந்திரத்துக்கு முன்னாடி கல்வியை ஒரு சேவையாகச் செய்யணும்னு நினைத்தோம். அது வியாபாரமா மாறிண்டு வர்றது. எனக்கு அதில பங்கு வேண்டாம்.”  

ஒரு கணம், ஒரேயொரு கணம் ஜெபநேசனின் மனசாட்சி சுடுகிறது. அதைப் பிறக்கப்போகும் குழந்தையின், ஆண் பெண் வித்தியாசம் இல்லாத பெயர் – அமர்ஜோதி அணைத்துவிடுகிறது. 

***

Series Navigation1957-2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.