- வாக்குமூலம் – அத்தியாயம் 1
- வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்
- வாக்குமூலம் – அத்தியாயம் 3
- வாக்குமூலம் – அத்தியாயம் 4
- வாக்குமூலம் – அத்தியாயம் 5
- வாக்குமூலம் – அத்தியாயம் 6
- வாக்குமூலம் – அத்தியாயம் 7
- வாக்குமூலம் – அத்தியாயம் 8
- வாக்குமூலம் – அத்தியாயம் 9
- வாக்குமூலம் – அத்தியாயம் 10
- வாக்குமூலம் – அத்தியாயம் 11
- வாக்குமூலம் – 12
- வாக்குமூலம் – அத்தியாயம் – 13
- வாக்குமூலம் – அத்தியாயம் 14
- வாக்குமூலம் – அத்தியாயம் 15
- இறுதி வாக்குமூலம்

அவன்
அன்றைக்கு தாயப்பன், “நீ பொன்னியின் செல்வன் பார்க்கலியா”ன்னு கேட்டான். “இல்லே” என்றேன். “ஏன்” என்று கேட்டான். “பார்க்கணும்னு தோணலை.”
“நாவல் படிச்சிருக்கியா?”
“படிச்சிருக்கேன். அதனாலேதான். ஏழாவது படிக்கும்போது வாசிச்ச பொன்னியின் செல்வன் அப்படியே, அந்தப் பால்ய கால நாள் பாதிப்புகளோட அந்த நாவல் மனசிலே இன்னும் இருக்குது. படத்தப் பார்த்து அந்த ஞாபகங்களை அழிச்சுக்கிட விரும்பல… நான் கற்பனை பண்ணி வச்சிருக்கிற வந்தியத்தேவன், பூங்குழலி, ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், பழுவேட்டரையர் எல்லாரும் அப்படியே மனசுல இருக்கட்டும்.”
“ஏன் படம் நாவல் மாதிரி அமைஞ்சிருக்காதுன்னுதான் படத்தப் பார்க்கப் போகலையா?”
“நாவலோட பிரம்மாண்டம் தனி தாயப்பா. சினிமா அதுக்கு ஒறை போடக் காணாது… பாஷை மூலமா கல்கி எழுதி உருவாக்கி வச்சிருக்கிற அந்தச் சோழ சாம்ராஜ்யத்தை செட்டா, நடிப்பா பார்க்கப் பிரியப்படலை.”
“கல்கி இலக்கியவாதியா?”
“இங்கிலீஷ் டிக்ஷ்னரி அர்த்தப்படி இலக்கியம், லிட்டரேச்சர்னா விரிந்த அர்த்தம்தான். ஆனா இன்னைக்கி தமிழ் இலக்கியம்ன்னா சில எழுத்தாளங்க, கவிஞர்கள் எழுதுறதுதான் இலக்கியம்னு குறுகிப் போயிருக்கு. இதுபடி பார்த்தா கல்கி இலக்கியவாதி இல்லே…”
“ஒனக்கு இதுல வருத்தமா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…”
“புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் பிடிக்காதாம் இல்ல? தெரியுமா?”
“ஆமா… புதுமைப்பித்தன் கல்கிய ஏத்துக்கலை. அவர் மணிக்கொடி பரம்பரையிலே வந்தவர். மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு இலக்கியத்தைப் பற்றி தனிப் பார்வை இருந்திருக்கு. அவங்க அளவுகோலுக்குள்ள கல்கி எல்லாம் வரமாட்டார்.”
“ஆனா ஒனக்கு கல்கியப் பிடிக்குதே…” என்று இடித்துக் காட்டுவது போல கேட்டான் தாயப்பன்.
“சோவுக்கு தேவனைத்தான் ரொம்பப் புடிக்கும். ஆனா, எனக்கு கல்கிய புடிக்கும். அவருடைய பன்முகப்பட்ட எழுத்துக்காகப் புடிக்கும். வெர்ஸட்டைலா, நகைச்சுவை உள்பட எல்லா மாதிரியாவும் கல்கி எழுதியிருக்கார். ஜர்னலிஸ்ட்ன்னு பார்த்தா தேவனைவிட கல்கிதான் திறமையான ஜர்னலிஸ்ட். அரசியல் தலையங்கங்கள், தொடர் கதைகள் தவிர, கர்நாடகம் என்ற பேர்ல சங்கீத விமர்சனம் எல்லாம் எழுதியிருக்கிறார். ஜெயிலுக்குப் போனதை கேலி, கிண்டலோட தொடர் கட்டுரையா கல்கி எழுதியிருக்கார். தமிழ் இசையை ஆதரிக்க இயக்கமெல்லாம் நடத்தியிருக்கார். பாரதியாருக்கு எட்டயபுரத்துல மண்டபம் கட்டுறதுக்கு ரொம்ப முயற்சி எல்லாம் எடுத்திருக்கார்…”
“தேவனோட அளவுக்கு கல்கிக்கு ஹியூமர் வருமா?”
“வராதுதான்.”
“இலக்கியத்திலே நகைச்சுவை எழுத்துக்கு ஏன் இடமில்லாமேப் போயிட்டுது?”
“எல்லா நாடுகளோட இலக்கியத்திலேயும் நகைச்சுவை எழுத்து, இலக்கியமா மதிக்கப்படலைதான். புதுமைப்பித்தனுடைய கதைகளிலே குத்தல், எள்ளல் இந்த மாதிரிதான் இருக்கு. நகைச்சுவை இல்லே. இலக்கியம்னா ஸீரியஸாத்தான் எழுதணும். எழுத்தை, எழுதுறதை புதுமைப்பித்தன், ‘சோகக் கதை என்றால் சோடி ரெண்டு ரூபா, காதல் கதை என்றால் கை நிறையத் தரவேண்டும்’னு கிண்டல் பண்ணியிருக்கிறார்.”
“கிண்டல், கேலி பண்றது ரொம்பக் கஷ்டம்தான். சினிமாவிலே காமெடி ஸீன் எல்லாம் வருது. இங்லீஷ்லே சார்லி சாப்ளின், லாரல் – ஹார்டி, ஜெர்ரி லூயிஸ், மிஸ்டர் பீன்ல நடிக்கிற ரோவன் அட்கின்ஸன், தமிழில் என்.எஸ்.கே. காலத்திலே இருந்து இன்றைய சூரி வரை நகைச்சுவைக் காட்சிகள் எழுதப்படுகின்றன. ஆனால் நகைச்சுவை நாவல்கள் இல்லை” என்றான் தாயப்பன்.
“முப்பது, நாற்பதுகள்ள எழுதின எஸ்.வி.வி.யோட பல சிறுகதைகள் நகைச்சுவைக் கதைகள். ஆனால் அவருடைய நாவல்களிலே சிறுகதை அளவுக்கு ஹியூமர் இல்லை. தேவனின் ராஜத்தின் மனோரதத்தில் ஓரளவு நகைச்சுவை இருக்கு. சினிமாவிலே அந்தக் கால சபாபதி, ஶ்ரீதரோட காதலிக்க நேரமில்லை மாதிரி சில காமெடிப் படங்கள் இருக்கு.”
“பத்திரிகைகளில் கார்ட்டூன்களில் கிண்டல் இருக்கு. முன்னாலே அமெரிக்காவிலே இருந்து ‘மேட்’ன்னு ஒரு கிண்டல் பத்திரிகையே வரும். இந்த மேட் பெங்களூரிலே இருந்துகூட வந்திருக்கு. இப்போ வர்றதாத் தெரியலை. டிஸ்னியோட கார்ட்டூன் படங்கள் மாதிரி இங்லீஷ்லே சில இருக்குது. கர்ட் வான கட்டுங்கிற அமெரிக்க எழுத்தாளர் ப்ளாக் ஹியூமர் நாவல்கள் மாதிரி எழுதியிருக்கார்.”
“ஆமா படிச்சிருக்கேன்.”
கால் வலிக்காக ஆர்த்தோ செருப்புப் போடுவது ஞாபகத்துக்கு வந்தது. உலகத்திலே என்னென்ன மோசடி எல்லாமோ நடக்குது. அதில் இந்த ஆர்த்தோ செருப்பும் ஒண்ணு.
1950-ல் இருந்து 1980 வரைக்கும் ஏன் ஈ.வெ.ரா. பெரியார் இறக்கிற வரைக்கும்கூட, அவர் கடவுள் மறுப்பு பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தாரு. முதல்ல பிராமண எதிர்ப்பு பேசியிருக்காரு. ஆனா தாழ்த்தப்பட்டவங்களுக்கு ஆதரவா அவர் பேசினதே இல்லைன்னு தலித் எழுத்தாளர் வெங்கடேசன்னு ஒருத்தர் ஆதாரத்தோட எழுதியிருக்காரு. ஆனா இப்போ திருமாவளவன் பெரியாரை சமூக நீதி காப்பாளர்ன்னு சொல்லுதாரு. தி.மு.க.வும் சமூக நீதியையும் பெரியாரையும் முடிச்சுப் போட்டுப் பேசுது. 1980 வரைக்கும் கூட சமூக நீதிங்கிற சொல்லாடல் தமிழ்நாட்டிலே இல்லை. இதெல்லாம் புதுசா இருக்கு.
கடவுள் மறுப்புங்கிறது கூட பிற மதக் கடவுள்களைப் பற்றி அவர் பேசலை. ஹிந்து கடவுள்கள், புராணங்களை எதிர்த்துதான் அதிகமாப் பேசியிருக்கிறாருன்னு தீவிர ஹிந்து ஆதரவாளர்கள் சொல்றாங்க. கடவுள் நம்பிக்கை, பக்தி உள்ள ஹிந்து யார் என்ன சொன்னாலும் தனது வழிபாட்டை நிறுத்த மாட்டான். ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி, பெரியார் மண் அப்படி இப்படின்னெல்லாம் தமிழ்நாட்டைச் சொல்றாங்க. ஆனா திருச்செந்தூர், மதுரை, பழனின்னு எந்த ஊர்ல பார்த்தாலும் கோயில்களிலே, கோவில் திருவிழாக்களிலே லட்சக் கணக்கிலே கூடறாங்க. திருப்பதியிலே தரிசனம் செய்ய முப்பது மணி நேரம் ஆகுதுங்கிறாங்க. திருவண்ணாமலையிலே கிரிவலம் பெருசா நடக்குது.
“ஆனா 2021-லே பெரியாரை ஆதரிக்கிற தி.மு.க.வைத்தான் தமிழ்நாட்டை ஆள ஜனங்க தேர்ந்தெடுக்கிறாங்கன்னு என்னோட பத்திரிகையிலே வேலை பார்க்கிற சண்முகம் சொன்னான். தமிழ்நாட்டிலே ஜனங்க தி.மு.க.வுக்கோ, அ.தி.மு.க.வுக்கோதான் மாறி மாறி ஓட்டுப் போட்டுட்டு வராங்க. தி.மு.க.வை, கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க தலைவரா இருக்கிற கட்சின்னு ஜனங்க நெனைக்கிறது இல்லை. அ.தி.மு.க. ஊழல் அதிகமாகிப் போச்சுன்னு மீடியா சொல்றது, தி.மு.க. சொல்றது எடுபட்டுச்சுன்னா தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுதாங்க. தி.மு.க. சரியில்லேன்னு நெனச்சா அ.தி.மு.க. பக்கம் போறாங்க. இதுதான் நடக்குது. தேசியக் கட்சி, பிராந்தியக் கட்சிங்கிற சிந்தனை எல்லாம் தமிழ்நாட்டிலே எலைட், சிறுபான்மை மத்தியதர வர்க்கத்து கிட்டேதான் இருக்குது. பெரும்பான்மையான ஜனங்கள் தி.மு.க.வையோ, அ.தி.மு.க.வையோ தேசிய சிந்தனை இல்லாத, வெறும் பிராந்தியக் கட்சின்னு பார்க்கிறதில்லை. ஓட்டே அதிகபட்சமா அறுபது, அறுபத்தஞ்சு சதவீத ஓட்டுதான் விழுது. மீதிப் பேர் என்ன நெனைக்கிறாங்கன்னு தெரியலை.
அதுவும் தவிர, அணை மாதிரி பெரிய கட்டடங் கட்டுற வேலை எல்லாம் முடிஞ்சு போச்சு. பெரிய அணைகள் எல்லாம் கட்டி முடிச்சாச்சு. பெரிய கட்டட வேலைன்னா கல்லூரிகள், கவர்மெண்ட் ஆபீசுகள் கட்டுறதுதான். இது தவிர ரோடு போடுறது வருஷம் பூரா நடக்க வேண்டிய வேலை. சில ஊர்கள்லே தண்ணீர் வசதி வேணும். இந்த மாதிரி வேலைகள்தான் இப்போ இருக்கு. இதில் எந்த கவர்மெண்ட் வந்தாலும், காண்ட்ராக்ட்டர் பத்து பர்ஸண்ட், பனிரெண்டு பர்ஸண்ட்னு, அவங்களாவே தேடி வந்து குடுத்திடுதாங்க. புதுசா ஏதாவது கம்பெனி ஆரம்பிச்சாலும் இந்தப் பர்ஸண்டேஜ் மந்திரி, கட்சி, அதிகாரிகளுக்குப் போயிடும். சென்ட்ரல் கவர்மெண்ட்ல வேணும்னா இது கம்மியா இருக்கும். மாநில அரசுகள்ள இதுதான் நெலவரம்.
அரசியல் நல்ல பிஸினஸ்ன்னு யாரும் புதுசா சொல்ல வேண்டியதில்லை. எம்.எல்.ஏ., எம்.பி. ஆனா பென்ஷன் எல்லாம் வரும். மந்திரியா இருந்தா கேக்கவே வேண்டாம். மீடியாக்காரங்கதான் ஊழல், நேர்மை, நாணயம்னு பேசி, எழுதிக்கிட்டு இருப்பாங்க. இதை எல்லாம் ஜனங்களும் கண்டுக்கிடுதது இல்ல, அரசியல்வாதிகள், அரசு ஊழியர்களும் கண்டுக்கிடுதது இல்ல. இதெல்லாம் வாழ்க்கை மொறையாவே ஆயிப் போச்சு. அரசியல்ல காமராஜ், லால்பகதூர் சாஸ்திரி, கக்கன், அண்ணாதுரை, நல்லகண்ணு மாதிரி ரொம்ப சில பேரு நேர்மையா இருந்திருக்காங்க. மற்றபடி வார்டு கௌன்ஸிலர் கூட கோடீஸ்வரர்தான்.
கட்சி நடத்த, தேர்தல் செலவுக்கு ஏகப்பட்ட பணம் வேணும். ஒரு தெருமுனையில கூட்டம் போடணும்னாக் கூட லட்சக் கணக்கிலே பணம் செலவாகும். ஒலகத்துல பணம் இல்லாமே செத்த பொணத்தை எரிக்கக்கூட முடியாது. பொறப்பு முதல் இறப்பு வரை பணம் தேவைன்னு ஆயிட்ட பெறவு எது பணமில்லாம முடியும்? கடவுள் வந்தாருன்னா, ஒலகத்துல வாழ அவருக்குக் கூடப் பணம் வேணும். பணம் இல்லாதவன் பொணம்ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க?
தொறவரம் பூண்டு சாமியாராப் போனாக்கூட காவி வேட்டிக்கும், சோத்துக்கும் பணம் இல்லாமே முடியாது. இந்தக் காலத்துலே கார்ப்பொரேட் சாமியாருங்கிறாங்க. நாடு பூரா ஏகப்பட்ட ஆசரமங்கள் பெருத்துக் கெடக்கு. நூத்துக் கணக்கான ஏக்கரா நெலங்களை வளைச்சுப்போட்டு, பிரம்மாண்டமா கட்டடங்களைக் கட்டி ஆசரமங்களை நடத்துதாங்கன்னா சும்மாவா? எத்தனை கோடி முதலீடு பண்ணியிருப்பாங்க. தியானம், யோகான்னு பைத்தியக்கார ஜனங்களை வளைச்சுப் போடுதாங்க. ஏழ-பாள தெருவுல இருக்க பிள்ளையாரைக் கும்புட்டுட்டு வேலைக்குப் போயிருவான். ஆனா, கொஞ்சம் வசதியா இருக்கிறவன் ஆன்மீகம், யோகான்னு செலவளிக்கத் தயாரா இருக்கான். காசி, பத்ரிநாத், கேதார்நாத் போறது, மெக்கா போறது, ஜெருசலேம் போறதெல்லாம் யாராலே முடியும்?
கையிலே ஐவேசு இருந்தாத்தான் இதெல்லாம் முடியும். ஐவேசு இருந்தாத்தான் ஜக்கி வாசுதேவ் பின்னாலேயும், ரவிசங்கர் பின்னாலேயும் போக முடியும். இல்லாதவன் முத்தாரம்மன் கோவில் பூசாரி குடுக்க கயத்தைக் கையிலே கட்டிக்கிட்டு பொழப்பப் பாக்க வேண்டியதுதான். துட்டுக்குத் தகுந்த தோசங்கிற மாதிரி, துட்டுக்குத் தகுந்த கடவுள், நம்பிக்கை, ஆன்மீகம் எல்லாந்தான்.
ஒலகத்திலே எல்லாமே கணக்குத்தான். நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போலன்னு சிவவாக்கியர் சொல்லுதாரு. சூரியன், பூமி, இந்தக் கெரகங்கள் எல்லாமே ஏதோ ஒரு கணக்குலதான் சுத்திக்கிட்டு இருக்கு. வேகம் கூடினாலும் போச்சு, வேகம் கொறைஞ்சாலும் போச்சு. ஒடம்புச்சூடு கூடிரவும் கூடாது, கொறைஞ்சிரவும் கூடாது. இந்த மாதிரித்தான், எல்லாமே கணக்குதான்.
***