கடவுள் தந்த வரிகள்
கடவுள் நிஜமாகவே கடவுளாக இருக்கும் அபூர்வ நொடிகளில்
அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர்களை
கௌரவப்படுத்துவதின் நிமித்தம்
மானுடத்துக்கான வரிகளை
அவர்களின் தலை அல்லது இதயத்துக்குள் விதைக்கிறார்
அவர்களும் அப்போது அதிசயமாகப் பூத்துக் கனித்துவிடுகிறார்கள்
என் கபாலத்துக்குள் அவர் விதைத்த வரிகளைத்
தோண்டி எடுத்து
நான் உங்களுக்குள் விதைக்கிறேன்
நாளைக்கு நீங்கள் அறிவு அல்லது ஜீவவிருட்சமாகியிருப்பீர்கள்
நான் அப்போதும் சாத்தானாகவே இருப்பேன்

செ.மீ. மேமத்
காலத்திலிருந்து – இரு வகையிலும் – தப்பித்து வந்தது போல
தத்ரூபமான அந்த லிலிபுட் ஆதியானை
அலங்கார அடுக்கறையின் உயர் மட்டத்தில்
தன்னந்தனியாக
தும்பிக்கை உயர்த்தி அது தேடிக்கொண்டிருக்கிறது
இணையை கூட்டத்தை
இனத்துக்குரிய ப்ரம்மாண்ட உருவை அடையாமல்போன
தனது மரபணுக் குளறுபடியை
வரலாற்றுக்கு முற்பட்ட புவியியலில்
மேமத்துகள் இந்த உலகை ஆண்டுகொண்டிருந்த காலத்தை
தேடலில் எதுவுமே கிடைக்காமல்
அது பிளிறுகிறது எதையோ
மீயொலியில்

வானவில் தவளைகள்
உனது வெறுப்பு மலர்ந்திருக்கிறது
வாழும் ஊதா நிறத்தில்
உனது கோபமோ மரணக் கருஞ்சிவப்பாகிவிட்டது
அன்போ வெறுப்போ கோபமோ
மலர்வது நல்லதுதான்; மூடிக் கிடப்பதை விட
ஆனால் ஏன் புறக் கதிர் வெளியிடுகிற அந்த தொலைதூர நிறம்
கருத்துக் கடுமையாகிற அகச் சிவப்பு
வாழும் ஊதா என்பது நடமாடும் பிணம்
வெறுப்பென்பதோ அன்பின் மறுபக்கம்
கோபம் உன் மனசாட்சி
நீயும் நானும் பைத்தியக்காரர்கள்
குறியீடு, படிமம், கவித்துவம், கேள்விகள், தார்மீகம்
யாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு
கண் மூடிப் பார்த்து ரசி
அவலங்களின் தெருக்களில்
வானவில் குடை பிடித்து
துள்ளிச் செல்லும் அந்தத் தவளைகளை
ஷாராஜ்