மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு

1999  அம்பலப்புழை

காலாற நடந்துட்டு வரேன் என்று சொல்லி பிஷாரடி வைத்தியர் தெருவில் இறங்கியபோது அந்திப் பொழுது விடைபெற்றுக் கொண்டிருந்தது. 

மிகச் சமீப நேரத்தில் மழை பெய்து ஓய்ந்த அடையாளங்கள் தெரு ஓரத்தில் தேங்கிய தண்ணீராகவும், கோவில் வாசலில் சுருட்டி வைக்கப்பட்டு இரு புறமும் துவாரபாலகர்கள் மேல் சாய்ந்திருந்த குடைகளாகவும், மழையை வழிப்படுத்தி தரைக்குக் கீழே சேமித்து வைக்க வழி செய்யும் வாய்க்கால்களில் நீர் பாய்ந்துகொண்டிருக்கும் சத்தமுமாக நீடித்தன. 

இன்றைக்கு செண்டையும் எடக்காவும் மாராரின் சோபான சங்கீதமும் சற்று முன்னரே ஒலித்துப் போயிருக்கலாம். பிற்பகல் மூன்றரை மணிக்குக் கண் அசந்தால் எழுந்திருக்கப் பின்மாலைப் பொழுது ஆகிவிட்டது. 

கோவில் ஒலிபெருக்கியில் பி.லீலாவின் நாராயணியம் கணீரென்று ஒலித்துக் கொண்டிருந்தது. கோவிலுக்குப் போகும் பாதையில் ஓரமாக நிற்கிறவர்கள் புதிதாக வருகிறவர்களை பால்பாயசம் வாங்கிண்டு போங்கோ என்று சுமாரான தமிழில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

”பால்பாயசம் மதியம் ஒரு மணியோடு முடிஞ்சுடும் அப்புறம் அடுத்த நாள் வந்து தான் அந்த நாளுக்கான பாயசத்தை வாங்கணும்னு பாலக்காட்டுலே கிளம்பும்போதே சொன்னாளே!” வெளியூரிலிருந்து வந்த பக்தர் சொன்னார்.

சண்டை பிடிக்க இல்லை, தனக்குக் கிடைத்த தகவலை இங்கே நிலவும் சூழலோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தெளிவு பெறல். 

“அதுவும் சரிதான். அது தேவஸ்வம் என்ற தேவஸ்தானம் உண்டாக்கும் பாயசம். இது கோவில் தந்த்ரியும் மேல்சாந்தியும் ஆசிர்வதிச்சுத் தரும் பாயசம். கிருஷ்ணன் பாதத்திலே வச்சு வாங்கிண்டு போகலாம். தேவஸ்வம் பாயசத்தை Chief Minister முக்ய மந்திரி பாதத்துலே தான் டென் டு ஃபைவ்   ஆபீஸ் நேரத்திலே வச்சு வாங்கிண்டு போகலாம்”. 

அவர் சிரிக்க, பால்பாயசம் நேரம் கெட்ட நேரத்தில் கிடைக்கும் என்ற நப்பாசை முன்னுக்கு வர, “ஒரு லிட்டர் வாங்கினா, விஜயவாடா போற வரை அப்படியே இருக்குமா” என்று அபத்தமான கேள்வியை அந்த ஆணுடைய கூட வந்த பெண்மணி கேட்கிறார்.  

“அது நீங்க எப்போ விஜயவாடா  போறேள்ங்கங்கறதைப் பொறுத்தது. எதுலே போவேள்னு அடுத்த கேள்வை. பொதுவா சொன்னா, இப்போ சாயந்திரம் ஆறு மணிக்கு வாங்கினேளா, ராத்திரி பந்த்ரெண்டு வரை சௌகரியமா குடிச்சுக்க வேண்டியது. அதுக்கு மேலே கிருஷ்ணார்ப்பணம். அவர் பாதத்திலே வச்சு எடுத்ததாலே கூடுதல் நேரம் நன்னாயிருக்கும்னு நினைக்க வேண்டாம்”. 

அந்த தெலுகு கோஷ்டிக்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர் ஜெரிகேனில் அம்பலப்புழை பால் பாயசம் என்று அவசர அவசரமாக தயார் செய்து விற்று விட்டு நிம்மதியாகப் போய்க் கொண்டிருக்கும் கோவில் உத்தியோகஸ்தரைப் பார்த்துப் புன்னகைக்கிறார் பிஷாரடி. 

அர்ஜுனனான அவர் சந்தேகத்தைத் தீர்த்த கிருஷ்ணன். அதெப்படி கஸ்டமர் கேட்ட அரை மணி நேரத்திலே பாயசம் வந்துடறது என்று கேட்டால், மனைக்கு வரச்சொல்லி அங்கே வரிசையாக வைத்திருந்த நாலு ரெப்ரிஜிரேட்டரில்  பால்  பொடியும், கண்டென்ஸ்ட் மில்க்கும் பொடித்து வைத்த ஏலமும், வேகவைத்த முந்திரியும், ஊற வைத்த குங்குமப்பூவும், பிசினாக வைத்த பச்சைக் கற்பூரமும், வேகவைத்த பாலடையும், பல நிலையில் பாகு வைத்த வெல்லமும், சீனியும் பசும்பாலும், எருமைப் பாலும்,  விதவிதமாக பால்பாயசத்தின் முன்வடிவங்கள் என்று அறிமுகப்படுத்தினார். 

மூன்று மடங்கு கட்டணத்தில். பத்தே நிமிஷத்தில் பால் பாயசம் சுடச்சுட உண்டாக்கக்க, எலக்ட்ரிக் அடுப்பும் இதர மின்சார சாதனங்களும் கூட அதோ உண்டு.  எதை எதை எவ்வளவு கலந்து எவ்வளவு சூடாக்க வேண்டும் என்று தெரிந்தால் போதும். சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் நிபுணர்கள் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார் பிஷாரடி.

கோவிலுக்குத் தவறாமல் தினம் சாயந்திரம் போகும் ரிடையர்டு ஆண்களின் கூட்டம் ஒன்று உண்டு என்று பிஷாரடி கவனித்து வைத்திருந்தார். இவர்களால் காலை உறக்கத்தைத் துறக்க முடியாது என்பதால் விசேஷ நாட்கள் தவிர மற்ற தினங்களில் காலையில் கோவிலுக்கு தரிசனத்துக்குப் போவது அபூர்வம் தான். 

அதை ஈடுசெய்ய கோவில் குளத்தில் தினசரி பிற்பகல் மூன்றரை மணிக்கு தந்த்ரியோ மேல்சாந்தியோ முழுக்குப் போடும்போது செருப்பில் காலை நுழைத்துக்கொண்டு ஒவ்வொருவராக வழியில் வந்து சேர, அடியார்கள் கூட்டமாக கோவிலுக்கு நடக்கத் தொடங்குவார்கள். 

தொடங்குவது சரிதான். ஆனால் நேரே போக முடிகிறதா? ஜான் கிட்டாவய்யர் சைவ உணவகத்தில் படி ஏறி ஒரு காப்பி. காப்பியைத் தனியாகக் குடிக்க முடிகிறதா? கீரைவடை, மிளகு வடை, மைசூர் போண்டா, சமோசா என்று பக்கவாத்தியம் சுடச்சுட தயாராக இருப்பதாக ஓட்டல் பரிமாறிகள் ஆசை காட்ட, ஆளுக்கொரு காரம் இப்படி முஸ்தீபோடு காப்பி. எல்லாம் முடிந்து கோவில் வாசலுக்குப் போகும்போது ஐந்து மணி அடிக்க ஐந்து நிமிடமாக இருக்கும். 

கோவில் வாசலில் வாட்ச்மேன் இவர்கள் வருகைக்காக ஒரு முக்காலியில் மன அழுத்தத்தோடு  கைநடுங்க உட்கார்ந்து இவர்கள் வரும்வழியில் கண்பதித்து இருப்பான். 

“சாரே, ஷர்ட் தரிச்சு அகத்து கேரான் பாடில்ல. சார் சட்டை போட்டுக்கிட்டு கோவிலுக்குள் போவதற்குத் தடை இருக்கு ஆண்களுக்கு. ஷர்ட் அழிக்கணும்”

தினசரி சொல்லும் பழக்கம் வாட்ச்மேனுக்கு. 

“கோவில் ஆரம்பம் இங்கே இல்லே. இது கடைவீதி ஆரம்பம். இங்கே இஷ்டம் போல சட்டை போட்டுக்கலாம். இன்னும் நூறு அடி நடந்தா கோவில் துவாரபாலகர்கள் பக்கம் வருவோமே, அங்கே தான் கோவில் தொடங்கறது. அங்கே போய் சட்டை அழிச்சுக்கறோம் ராமுண்ணி. நீ மிண்டாதிரு”.

பிரம்புத் தடியை எந்தவிதமான விரோதமோ அதிகாரமோ காட்டாமல் கையில் வைத்து உருட்டியபடி ’பாடில்ல பாடில்ல பாடில்ல’ என்று பழைய மலையாளப் படத்தில் கதாநாயகி கதாநாயகன் வரம்பு மீறி முத்தம் கொடுக்க முன் வரும்போது எச்சரிப்பது போல் எச்சரிப்பார் ராமுண்ணி. 

“சரி இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நாங்க சட்டை அழிச்சு தோளில் பாதியைப் போட்டுட்டுப் போறோம். நீர் எதுக்கும் தேவஸ்வம் ஓஃபீசர்மார்கிட்டே கேட்டு வையும். நாளைக்கு இந்த தாவா இல்லாம போகணும்”. 

இந்த தினசரி சமாதானம் அடுத்த நாள் தினசரி சச்சரவாகி பின்னால் புது சமாதானத்தில் முடிகின்றது. குழந்தைகள் விளையாட்டு போல் இவர்கள் ஒருவரை ஒருவர் வம்புக்கிழுக்க, அதுவும் ராமுண்ணியை தனித்தனியாக சச்சரவில் ஈடுபடுத்த அவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஒருவர் ஒருநாள் வராவிட்டால் மற்ற தரப்பு துடித்து விடும். 

திலீப் ராவ்ஜி வீட்டு வாசல் வந்திருந்தது. கூட வந்த பால் பாயசமும் சாயந்திர அடியார் கோஷ்டியும் மனதில் இருந்து இறங்கிப் போக பிஷாரடி அழைப்பு மணியை அழுத்தினார்.

பெரியவர் பரமன் தாங்குகட்டைகளை எடுத்துத் தரையில் ஊன்றும் சத்தம். வந்துட்டேன். கொஞ்சம் தாமதமாகும். நான் நடக்க சிரமப்படுகிறேன் என்று வழக்கமாகச் சத்தமாகச் சொல்லும் வார்த்தைகளோடு வாசலுக்கு வந்தார் அவர். 

பரமன் கதவைத் திறந்தபோது பிஷாரடி வைத்தியரை பெயர் நினைவு வைத்து அழைக்க சிரமப்பட்டார்.    கேட்டு விடலாம்.

”வரணும் வரணும். சார் பெயர் சட்டுனு நினைவு வராம, சாரி”. 

“நான் நாராயண பிஷாரடி”. 

“ஓ நினைவு வந்துடுத்து. லண்டன்லே இருந்து வந்திருக்கேள். சாக்லெட் நிறையக் கொண்டு வந்தேளே. திலீப் டாட்டர் கல்பா கொடுத்து விட்டாள்னு:

ஆமாம் என்று சிரித்தபடி தலையசைத்தார் பிஷாரடி,

”ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி கௌரவ சரித்திர ப்ரபசர். இதே அம்பலப்புழையில் நூற்றைம்பது இருநூறு வருஷம் எட்டு பத்து தலைமுறையா இருக்கற குடும்பம். வைத்தியர் குடும்பம். நான் தொழில்முறை வைத்தியர் இல்லேன்னாலும் வம்சப்படி வைத்தியர்” ப்ரபசர் பிஷாரடி மெய்க்கீர்த்தியை வரி விடாமல் ஒப்பித்தார் பரமன், பிஷாரடி சந்தோஷப்பட .

உள்ளே அழைத்து ரெப்ரிஜிரேட்டர் திறந்து குளிர்பானம் கொடுத்து உபசரித்தார் பரமன். உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது என்று கேட்டார் பிஷாரடி. ”நன்றாகத்தான் உள்ளது. நான் முழிச்சுண்டிருக்கற நேரம் நன்னாப் போறது. உறங்கப் போனாத்தான் தொந்தரவா இருக்கு” என்றார் பரமன்.

“பல பேருக்கு முழிச்சிட்டிருந்தா தொந்தரவு. உறங்கினால் நல்லா இருக்கும். உங்களுக்கு தலைகீழே” என்றார் பிஷாரடி. “அதுவும் ஐநூறு வருஷ தூக்கம்” என்றார் பரமன்.

பிஷாரடி குறுஞ்சிரிப்போடு பரமனைப் பார்த்தபடி குளிர்பானத்தில் லயித்திருந்தார். 

“சார், ஒரு சின்ன ஹெல்ப்”. 

பரமன் பிஷாரடிக்கு அடுத்து சோபாவில் போய் அமர்ந்தபடி கேட்டார். 

“சொல்லுங்கோ. என்னை சார்னு கூப்பிட வேண்டம். பிஷாரடின்னே கூப்பிடுங்கோ. இல்லே, நாராயணான்னாலும் அதிசிரேஷ்டம். ஓடி வந்துடுவேன்”. 

”பிஷாரடி சார், ஜெரஸோப்பா தெரியுமா?” 

பரமன் விஷயத்துக்கு வந்து விட்டார். உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார் வைத்தியர். 

“நினைவில் தெரியாது. கனவிலே ரொம்ப தெரிஞ்ச, ரொம்ப பழக்கமான இடமா வருது. அது ஒரு ஊர்ப்பெயர்னு தெரியறது. எங்கே இருக்கு, எனக்கு ஏன் கனவிலே வரணும்னு ஒண்ணும் தெரியலே. திலீப் அது   சிவிலைசேஷன் அல்லது  நாகரிகம் சம்பந்தப்பட்ட பெயர்னு சொல்றான். எனக்கு அப்படீன்னு தோணலை”. 

“கரெக்ட், அது  நாகரிகத்துக்கு தொடர்பான ஊர் இல்லே. இங்கே நம்ம விஜயநகரப் பேரரசு காலத்திலே கிருஷ்ணதேவராயன் காலத்துக்கு சற்றே பிந்திய காலகட்டத்துலே பெயரும் புகழுமா இருந்த ஊர். வடக்கு கன்னட பிரதேசம். கொங்கண கடற்கரையிலே  கோழிக்கோடு, மால்பெ, ஜெருஸப்பா, ஹொன்னாவர், பட்கல், உள்ளால், கோவா இப்படி தொடர்ந்து ஏகப்பட்ட துறைமுகம் வரிசையா வரும். இல்லே வந்திருந்து இப்போ ஒண்ணுமில்லாமல் போயிருக்கும். ஜெருஸப்பா மிளகுராணி சென்னபைரதேவியோட குறுநிலதேசத்தின் தலைநகர். உலகம் முழுவதுக்கும் மிளகு ஏற்றுமதி செய்த ராணி அவங்க. இந்தியாவிலேயே, உலகத்திலேயே அறுபத்து மூன்று வருஷம் ஆட்சி செய்த ஒரே அரசர், அதுவும் பெண் அந்த சென்னபைரதேவிதான். சொல்லுங்க, அவங்க உங்க கனவிலே வராங்களா?”

பரமன் பிரமித்துப்போய் உட்கார்ந்திருந்தார். ”அது ஒண்ணும் பெரிய சாதனை இல்லே சார். இண்டர்நெட்டிலே தகவல் இருக்க வாய்ப்பு இருக்கு. புத்தகம் கிடைக்காட்டாலும் நெட்டுலே தேடினா சுமார் நம்பக்கூடியதாக தகவல் குவிஞ்சிருக்கு இப்போ எல்லாம். திலீப் கிட்டே சொல்லி வீட்டுலே ஒரு கம்ப்யூட்டர் நெட் கனெக்‌ஷனோடு வாங்கச் சொல்றேன்” என்றபடி எழுந்தார் பிஷாரடி.

”பிஷாரடி, ஜெருஸப்பா, சொல்றேன்னு சொல்லிட்டு கிளம்பறீங்களே”. 

பரமன் ஆவலோடு கேட்டார். 

“உங்களுக்கு நேரம் இருக்கா?” 

“இதைவிட வேறே எதுக்கு நேரம் செலவழிக்கப் போறேன்? உங்களுக்குச் சொல்ல நேரம் இருந்தா சொல்லுங்க. ப்ளீஸ்”

பிஷாரடி சொல்லத் தொடங்கினார்.

குருக்‌ஷேத்ரப் போர்நிலத்தில் அத்தனை அமளிதுமளிக்கு இடையில் இரண்டு பேர் அவரவர் செய்யும் காரியத்தில் லயித்திருந்தார்கள். அது அறிவுறுத்துகிறவருக்கும் ஞானம் பெற்றுத் தெளிவடைகிறவருக்கும் இடையில்   வந்து கனமாகச் சூழ்ந்திருக்கும் அலாதியான உறவு. ஒரு தகப்பன், மகனாக, ஒரு மூத்த சகோதரன், இளளைய சோதரனாக, மூத்த சகோதரி, இளைய சகோதரனாக, இன்னும் வினோதமாக, வயதின் இளையவன் சொல்லச் சொல்ல, முதியவன் தெளிவடைந்து கொண்டே இருப்பதாகத் திடமாகத் தோன்றும் உறவு. நூறு வருட உறவுகள் நிரந்தரமாகாத உலகத்தில் இன்று காலை உறவு உண்டாகி யுகம் யுகமாக அது தொடரப் போவதை ஞானம் பெற்றவன் உணர்ந்திருக்கவில்லை. ஞானம் வழங்குபவனுக்குத் தெரியாதது ஏதுமில்லை.

அம்பலப்புழையில்  கோவில், ஹோட்டல், தெருமுனையில் அரட்டை, நண்பர்கள் வீட்டில் படியேறி ஒரு காப்பி என்று நகரும் சாயங்காலம் பிஷாரடி வைத்தியர் மெல்லிய குரலில் பதினாறாம் நூற்றாண்டு உத்தர கன்னடப் பிரதேசத்தை, அங்கே வாழ்ந்திருந்தவர்களை, அவர்களின் உறவை, பகையை, மாறி மாறி வரும் நட்பை, அவர்களின் கலை, இலக்கியத்தை, உணவை, பயணத்தை, மதத்தை எல்லாம் சித்தரித்து சரம்சரமாக வார்த்தைகள் வந்து நாவில் நடனமிட்டுப் போக, பிரமிப்போடு அதையெல்லாம் கேட்டபடி பரமன் அமர்ந்திருக்கிறார். பிஷாரடி நின்று கொண்டிருக்கிறார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் வகுப்பு எடுக்கிறதாக பிஷாரடி மனம் கற்பனை செய்கிறது. ஒரே ஒரு மாணவர், கிருஷ்ணனுக்கு அர்ஜுனன் போல.

நடு இரவுவரை அந்த உரையாடல் நடந்துகொண்டிருக்கிறது. திலீப் ராவ்ஜி அவர்களின் உரையாடலுக்குத் தொந்தரவு இல்லாமல் தன் படுக்கையறையில் குந்தர் கிராஸின் தகர முரசு நாவலைப் பாதியில் விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறார்.  அதற்கு முன் ஜான் கிட்டாவய்யர் சைவ உணவகத்திலிருந்து மூன்று பொட்டலம் நாலு நாலு இட்டலிகளும் காரச் சட்டினியும் மட்டும் கடை எடுத்து வைக்கும் பதினொன்றரை மணிக்குக் கொடுத்து விடச்சொல்லி தொலைபேசியில் கேட்டிருக்கிறார்.   இதுவரை அவர் கேட்டு வராமல் போனதில்லை. திலீப் இல்லாத நேரத்திலும், அந்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற ஒன்றுக்கு இரண்டு பேர் சேர்ந்து அதற்கான செயலாற்ற வேண்டும் என்று விதித்திருக்கிறாள் சாரதா தெரிசா. சாரதாவின் ஹோட்டலில் பங்காளி அவர்.

பதினொன்றரை மணிக்கு சுடச்சுட   ராச்சாப்பாடு இட்டலிப் பொதிகளாகக் கட்டி வர, அர்ஜுனனும் கிருஷ்ணனும் சற்றே பேச்சை நிறுத்தி சாப்பிட திலீப்போடு உட்கார்கிறார்கள்.  பிஷாரடி வைத்தியரின் வீட்டுக்குச் சொல்லி விட்டிருக்கிறார் திலீப். அவர்கள் வீட்டுப் பெரியவர் இன்றைக்கு திலீப் வீட்டில் தங்கியிருக்கப் போகிறார். அவருடைய ராத்திரி உணவும் இங்கேதான். பிஷாரடி வைத்தியர் அந்த அறிவிப்புக்காக திலீப்புக்கு நன்றி சொன்னார். இட்டலிகளுக்காகவும்  பிஷாரடி மனதில் நன்றி உண்டு என்று திலிப்புக்குத் தெரியும். 

”இன்னிக்கு நம்ம ஓட்டல் இட்டலி ஒரு மாறுதல் இருக்கு நோட் பண்ணிணேளா” என்று திலீப் கேட்டார். பிஷாரடி வைத்தியர் சிரித்தபடி சொன்னார்   – ”ஏதோ சேஞ்ச் இருக்குன்னு தெரியறது. என்னன்னு தான் மனசிலாகலே”. பரமன் கூறியது – “இது இட்லியை ஊத்தப்பம் மாதிரி செஞ்சு கொடுத்ததுன்னு தோணறது. கொஞ்சம் லேசாவும் இருக்கு இட்டலி”.  

அதேதான் என்று பாராட்டினார் திலீப். நூற்றுப்பத்து வயதில் சொந்த மகனிடமிருந்து நடுராத்திரிக்குக் கிடைத்த பாராட்டு மனதுக்கு இதமானது, அது அற்ப விஷயத்துக்காக என்றாலும். 

“இந்த இட்டலி பாலக்காட்டுத் தயாரிப்பு. ராமஸ்ஸேரி இட்டலி. தோசைக்கும் இட்டலிக்கும் இடைப்பட்டது. டேஸ்ட் ஒரு தடவை சாப்பிட ஒரு மாதிரி இருக்கும். ராமஸ்ஸேரி இட்டலி தலைமுறை தலைமுறையா ஒரு குடும்பத்தோட கிளைகளுக்குள்ளே ரகசிய கலவை, செய்முறை வச்சிருந்தது இப்போ வெளியில் எல்லோருக்கும் தெரிஞ்ச ரெசிபி. என்றாலும் புளியோதரையை வைஷ்ணவன் தான் சமைக்கணும். இல்லே, சமைச்சதை வைஷ்ணவன் தான் தொட்டுத் தரணும் அப்படின்னு தமிழ்லே சொல்வா அது மாதிரி ராமஸ்ஸேரி இட்டலியை எட்செட்ரா.. எட்செட்ரா..” என்றார் திலீப்.

“அம்பலப்புழையிலே தமிழ் ஸ்கூல்லே படிச்சீங்களா?” பிஷாரடி கேட்க இல்லை என்றார் திலீப். 

“நான் எவ்வளவோ ஆசையா இருந்தேன் தமிழ் படிக்க. இனிமேல் எங்கே? அறுபத்தேழு வயசு  sunset years” என்றார் பிஷாரடி. 

“அறுபத்தேழே சன்செட் அப்படீன்னா நான் நூற்றுப்பத்து.. சூரியன் ரிடையராகிற வயசு..” என்று சிரித்தார் பரமன். ”நான் இவனை பம்பாய்லே தமிழ் ஸ்கூல்லே முதல் ஐந்து வகுப்பு படிக்க வச்சேன். அப்படித் தமிழ் படிச்சதுதான்” என்றார் பரமன் பெருமையோடு திலீப்பைப் பார்த்தபடி. 

“ஆமா, ஆனா வீட்டிலே தமிழ் இல்லே. அம்மா மராத்தி. நானும் அப்பாவும் அதேபடி மராட்டி பேசியே பழகிட்டது. அகல்யாவை கல்யாணம் செஞ்சுண்ட பிறகு, இங்கே அம்பலப்புழை வந்தபிறகு வீட்டிலே முழுக்க முழுக்க தமிழ்தான். மலையாளம் தான். பத்திரிகை கூட சரளமாகப் படிக்கப் பழக்கமாயிடுத்து”  என்றார் திலீப்.

”திலீப், பிஷாரடி சார் எனக்கு உத்தரகன்னட பிரதேசம் வரலாறு, ஜியாக்ரபி, சோஷியாலஜி எல்லாம் குளிகை வகுப்பு – capsule course – வகுப்பு எடுத்துக்கிட்டிருக்கார். நான் உறக்கத்திலே கண்டதை ஒரு மாதிரி fuzzy ஆக, முக்கியமா ஜெருஸப்பாவை அது என்ன மாதிரி ஊர், யார் இருந்தாங்க எல்லாம் சொல்றார். அதெல்லாம் இண்டர்நெட்டுலே இருக்கலாமாம். ஆனால் அதிலே எவ்வளவு சத்தியம்னு தெரியாது. இது straight from the mouth of Oxford Socialogy Professer – I think tonight I’ll go to bed much knowledgeable than I would ever have gone”. 

“அட நான் ஏதோ எனக்குத் தெரிஞ்சதை எடுத்து விட்டுட்டிருக்கேன். அலுப்பு வரும்போது சொல்லுங்க, நிறுத்திக்கறேன்” என்றார் பிஷாரடி. 

“நீங்க வகுப்பெடுக்கவே பிறந்த வம்சம்” என்றார் திலீப். 

“அது என்னமோ நிஜம்தான். இதே அம்பலப்புழையிலே இந்த பெயர் இருக்கே ஜான் கிட்டாவய்யர் அவரோட மாமனார் ஆலப்பாட்டு வயசர் தான் பறக்கற வியாதிஸ்தரா இருந்தவர். எங்க எள்ளுப் பாட்டனர் அதாவது ஏழு தலைமுறைக்கு முந்தியவர் அப்படிப் பறந்தவரை கீழே இறக்கி மருந்து கொடுத்து குணப்படுத்தியவர்”.

 திலீப் அவரை சுவாரசியமாகப் பார்த்து, ”அந்த வயசர் தான் புதையல்லே கிடைச்ச திரவத்தை பசு மாட்டுக்கு கூளத்தோடு கொடுத்து அதை இங்க்லீஷில் தப்பும் தவறுமா பேச வச்சவரா?” என்று கேட்டார். 

“இல்லே அவர் சாவக்காட்டு வயசன். வேறே ஒருத்தர். First generation convert”. 

திலீப் உறங்கப் போக, பிஷாரடியும், பரமனும் மறுபடியும் ஹாலில் மிளகு ராணியின்  ஊமத்தைச் சாறு போர்த் தந்திரம் பற்றித் தொடர ஆரம்பித்தார்கள். திலீப் தட்டில் இரண்டு கப் சூடான காப்பியோடு வந்து, உபசரித்தார். 

நீங்களும் கேட்கலாம், ஒரு ரகசியமும் இல்லே நாங்க பேசறது என்று வைத்தியர் சொல்ல, அடக்கமாக ”அது சுவாரசியமாக இருக்கும் நிச்சயமாக. அப்பாவுக்கு கனவுத் தொந்தரவு இருப்பதால் அவருக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கலாம். எனக்கு ப்ரபசர் சார் கிட்டே  ஸ்காட்டிஷ் ஹிஸ்டரி கேட்கத்தான் ஆவல்” என்று சொல்லி கப்களை எடுத்துக் கொடுத்தார். 

“நிச்சயம் ஒரு நாள் விரைவில், அதுவும் History Study Circle தொடங்கி எல்லா வரலாறும் பேசலாம்” என்றார் பிஷாரடி.

”ஆக அதுதான் ஜெருஸப்பாவும், ஹொன்னாவரும், பட்கல்லும், புட்டிகேயும், உள்ளாலும், மிர்ஜான் கோட்டையும், கோகர்ணமும் சொல்லக் கூடிய ஹிஸ்டரி. இன்னும் நிறைய இருக்கு என்றாலும் இந்த ராத்திரிக்கு இது போதும். சரி, எனக்கு சில சந்தேகங்கள். பரமன் சார் உதவி செய்தால் அது இல்லாமல் போகும்”. 

“நானா? நீங்க பெரிய ஆக்ஸ்போர்ட் ப்ரபசர், நீங்க எங்கே, வெட்டியா ரெண்டு லைப் காலம் வீணடிச்ச பழைய மார்க்சிஸ்ட் நான் எங்கே.” 

“ரெண்டு பேரும் ஒரே இடத்திலே, இங்கே தான் இருக்கோம். அதுலே என்ன சந்தேகம். எனக்கு உங்க கனவுகள் பற்றி கொஞ்சம் தகவல் வேணும்”. 

 சொல்லியபடி ’ஸ்வப்னங்கள் ஸ்வப்னங்கள் நிங்ஙள் ஸ்வர்க்க குமாரிகள் அல்லோ’ என்று பி.லீலா குரலில் பாடினார் பிஷாரடி. 

“பிரமாதம்” என்றார் பரமன்.

”உங்க கனவுகள்லே சட்டுனு ரொம்ப வித்யாசமா எதாவது நடக்கறதா தோணியிருக்கா?” 

“ஆமா, இந்த தாங்குகட்டை ரெண்டும் கிடையாது. கால் ரெண்டும் சாதாரணமா இருக்கு. நடக்கறேன், ஓடறேன், குதிக்கறேன்.” 

“அது நல்ல விஷயம். வேறே என்ன வித்தியாசம்?” 

“ரொம்ப இளைஞனா இருக்கேன்” என்றார் பரமன். திலீப்பின் படுக்கை அறையைப் பார்த்துவிட்டுக் குரல் தாழ்த்தி, ”நாலைந்து இளவயசுப் பெண்கள் என்மேல் ஆசை வச்சிருக்காங்க”. 

“வாவ், that is fascnating. அவங்களோடு செக்ஸ் வச்சுக்கிட்டிருக்கீங்களா?”

 பரமன் தயங்கி, ”அது வேணுமா ப்ரபசர் சார்” என்று தர்மசங்கடத்தோடு சொல்கிறார். 

“வேணாம்னா வேணாம். ஆனா, நீங்க காஸநோவாவா கனவிலே இருந்தா அது வேறே எங்கேயாவது நம்ம தேடலை எடுத்துப் போகும். சீக்கிரம் ப்ராப்ளம் சால்வ் ஆகும்”. 

“நோட்டட் ப்ரபசர். எனக்கு நினைவு இருக்கறவரை நோ செக்ஸ். இருந்தா துணி நனைஞ்சிருக்குமே”. 

“அது valid argument தான். எல்லா ஸ்த்ரிகளும் ராஜ வம்சமா?” 

“இல்லே, அப்படி நினைவு இல்லே. சிவராத்திரி கனவிலே இவங்களை தனித்தனியாகப் பார்த்த நினைவு. முகம் புகை மாதிரி இருக்கு. சாம்ப்ராணி வாடை எங்கே இருந்தோ வந்தது. கோவில்தானா, வேறே பிரார்த்தனைக் கூடமா தெரியலே”. 

“அப்புறம்?” 

“எல்லோரும் தமிழ்லே தான் பேசறாங்க, என் கிட்டேயும் சரி அவங்களுக்குள்ளேயும்”. 

“என்ன காலம்னு கேலண்டர் வேணாம் இருந்தாலும் எந்த வருஷம்னு தெரியறதா கனவிலே?” 

“மகாசிவராத்திரி வருது”. 

“அது போறாதே. எந்த ஊர்னு தெரியறதா? ஜெருஸப்பா சொன்னீங்க, அதோடு கூட?” 

“ஜெருஸப்பா கூட முழுக்க வரலே. அங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

மறந்து விட்டிருந்தது இதற்கு மேல் எந்தத் தகவலும் நினைவு இல்லை பரமனுக்கு. 

“மிர்ஜான் கோட்டை ஞாபகம் இருக்கா?” 

“விருந்துலே ஜெய்விஜயின்னு புது இனிப்பு செஞ்சு கொடுத்தேன்”.

“கொடுத்தீங்களா, கொடுத்தாங்களா?” 

“கொடுத்தாங்க”. 

“இல்லே, எனக்காக மாற்ற வேண்டாம். நீங்க இனிப்பு விற்கற கடைக்காரரா அல்லது இனிப்பு செய்து தர ஸ்வீட் ஸ்டால் சமையல் வேலையிலே இருக்கப்பட்டவரா?” 

“நினைவு இல்லையே”. 

“கடைவீதி, கோவில், தெரு ஏதாவது ஞாபகம் இருக்கா? இல்லே. வண்டி?” 

“சாரட் வண்டி”. 

“நீங்க ஓட்டறீங்களா”? 

“தெரியலே”. 

“என்ன மாதிரி வண்டி?” 

“குதிரை வண்டி”. 

“என்ன மாதிரி குதிரை?” 

“நல்லா உயரமா, கறுப்புக் குதிரை”. 

“அது இந்தக் கனவிலே வந்ததா வேறு எப்போவாவது வந்ததா?” 

“நினைவு இல்லே”. 

“கனவிலே நீங்க வேறே காலத்திலே இருந்து வந்தவர்னு   நினைவு இருக்கா?”

“அந்தக் காலத்துக்குத் திரும்பணும்னு ஆர்வமும் அவசரமும் இருக்கா?”

“அதொண்ணும் தெரியலே வைத்தியர் சார்”. 

“ஆக நீங்க நாக்பூர்லே வச்சு தில்லி பம்பாய் ப்ளேன்லே போகும்போது காணாமல் போனது நினைவு வரல்லே”. 

“ஆமா டாக்டர். ஆரம்பத்துலே ஒரு கனவு நான் நாக்பூர் ரன்வே பக்கமா தாங்குகட்டைகளோடு போறபோது விமானம் இறங்க வந்துட்டிருக்கிறது போல கனவு. பயங்கரமான ஒண்ணு அது. உசிருக்குப் பயந்து ஓடறது. ஆனா அந்தக் கனவிலே இந்தப் பழைய காலம் எதுவும் வரல்லே”. 

“பழைய காலம்னா எப்படி?” 

“எல்லாரும் வேஷம் கட்டிண்டு ஆடற மாதிரி, பெரிய மீசை, தாடி, பொண்கள் உடுப்பு ஓவியத்திலே பார்க்கற மாதிரி. அப்புறம் நினைவு வரலே”. 

“கனவிலே பேப்பர் வந்துதா? புரியலே, நியூஸ்பேப்பரா?” 

“இல்லே சார், காகிதம் வந்ததா? எப்படி எல்லோரும் எழுதினான்னு சூசகம் இருக்கா?” 

“நினைவு இல்லே சார். அப்புறம் வெளிநாட்டார்கள் முக்கியமா வெள்ளைக்கார யூரோப்பியர்கள் வந்தது நினைவு இருக்கா?” 

“ஐரோப்பியர் வரலே. ஆப்பிரிக்கா கருப்பர் ஒருத்தர் கருப்புக் குதிரையிலே போனது இந்தக் கனவுகளா தெரியலே”.

”அடுத்த கனவு வந்துதுன்னா, கட்டாயம் வரும், உடனே முழிப்பு தட்டறது இல்லேயா? நாலு வரியாவது டயரியிலே எழுதி வச்சுக்குங்க. இல்லே எத்தனை மணின்னாலும் சரி, எனக்கு ஃபோன் பேசுங்க. யார் யார்கூடப் பேசறீங்க, அவங்க பெயர் எல்லாம் நினைவு வந்தவரைக்கும். அவங்களோட என்ன உறவு எல்லாம் மறந்துடாமே நினைவு வச்சு எழுதுங்க. அந்த டயரி எனக்கும் படிக்கக் குடுத்தா ரொம்ப நல்லா இருக்கும். சீக்கிரம் உங்க பிரச்சனை தீர்ந்து போயிடும். சரியா? நான் எறங்கறேன்”. 

“ராத்திரி ரெண்டு மணி ப்ரபசர். போய்த்தான் ஆகணுமா? Reconsider please”.

 படுக்கை அறைக்கதவு திறக்க திலிப் உள்ளே இருந்து வருகிறார். ப்ரபசர், 

“உங்களை நான் கொண்டுபோய் விட்டுடறேன். Let me have the pleasure of driving you home”. 

நன்றி சொன்னார் ப்ரபசர். நானும் வரட்டுமா என்று உற்சாகமாகச் சொல்லியபின் அதன் பின்னால் இருந்த அபத்தம் மனதில் பட, பரமன் கைகாட்டி விட்டுத் தன் படுக்கை அறைக்கு நடந்தார். 

இன்றைக்கு ஜெருஸப்பா கனவு வருமோ. வந்தால் அதில் பிஷாரடி வைத்தியரும் இருப்பார்.

Series Navigation<< மிளகு  அத்தியாயம் முப்பத்தொன்றுமிளகு  அத்தியாயம் முப்பத்திமூன்று >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.