மங்களாம்பிகை

சோழன் எக்ஸ்பிரஸ்  எழும்பூர் ரயில் நிலையம் ஐந்தாவது நடைமேடையில் தனது வேகத்தைக் குறைத்து மூச்சு வாங்க நின்றது.

அவரவர் உடைமைகளை எடுத்துக் கொண்டு அரிபரியாக இறங்கி கொண்டிருந்தனர். சென்னை வந்து இறங்கிய உடனே ஒரு வித பதற்றம் எல்லோருக்கும் தொற்றிக் கொள்கிறது. சென்னையின்  வேகமே அதன் பலம் பலவீனம்.எங்கு தான் எதற்கு தான் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? என்ற எண்ணம் தோன்றும். நானெல்லாம்  இத்தனை வேகமாக ஓடினால் தலை குப்புற விழுந்துவிடுவேன்.வேகம் என்றாலே எனக்கு ஒரு வித அலர்ஜி. அதற்குச் சில காரணங்கள் உண்டு.

காலைச் சூரியனின் பொன்னொளி பட்டு ரயில் தாமிர நிறத்தில் ஜூவலிக்கிறது அதன் அழகை யாரும் ரசிப்பதாகத் தெரியவில்லை. அதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. 

ஒரு கணத்தில் வசந்த காலத்தில் துளிர்க்கும் அரச இலைககளின் தாமிர நிறம் கண்ணில் தோன்றி மறைந்தது. சூரியனின் இயல்பு பட்டு எதிரொளிப்பது. காலையில் இப்படி பார்க்க மனம் பால்ய காலத்து நினைவுகளில் மூழ்கியது. இன்னும் கூட இது போன்ற அழகியல் சார்ந்த நிகழ்வுகளில் இருந்தெல்லாம் சட்டென்று விடுபடமுடியவில்லை.மனம் என்பதும் கூட ரயிலின் வேகத்தை விட, சென்னை போன்ற பெரு நகரங்களின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லக் கூடியது தான். மனதின் பாய்ச்சலை எல்லாம் கணக்கிட்டு கொண்டிருந்தால் ஒரு வேளை எல்லோரும் மன நல மருத்துவமனையில் தான் அனுமதிக்க வேண்டி வரும். நல்ல வேளை தமிழ் சமூகம் அந்த அளவுக்கு கணக்கீட்டு முறை எல்லாம் செய்வதில்லை.                   

பிளாட்ஃபார்மில் டீ விற்கும் ஆசாமி உற்சாகமான மன நிலையிலிருந்தார். அவரின் குரலிலே அந்த உற்சாகம் தெரிந்தது. மகனைத் தோளில் தூக்கிக் கொண்டு கணவரும் நானும் பிளாட்ஃபார்மை கடந்து வந்து, ஆட்டோ பிடித்து மருத்துவமனை வந்துவிட்டோம். தமிழ்நாட்டில் நோயுற்ற எல்லா குழந்தைகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து தான் நோய்மையைச் சரி செய்து கொண்டு செல்கிறார்களோ என்று நினைக்கும் அளவுக்கு கூட்டம் அதிகமிருக்கும் குழந்தைகள் நலமருத்துவமனை அது. சென்னை நகரத்தின் மையத்திலிருந்தாலும் கொஞ்சம் அதிகம் இரைச்சல் இல்லாத பகுதியில் இருக்கிறது. ஆனால் ஆம்புலன்ஸ் சப்தம் சதா கேட்டுக் கொண்டே இருக்கும். நுழைவுவாயிலில் பிள்ளையார் அருள்பாலித்துக் கொண்டிருப்பார், எத்தனையோ பிரார்த்தனைகளில் எதற்கும் செவிசாய்த்தும் சாய்க்காத மாதிரியும் அவர் பாட்டுக்கு அபிஷேகத்திலும் பஞ்சாமிருத சுகத்திலும் உட்கார்ந்து கொண்டிருப்பார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. கடவுள் என்ற பெயர் தாங்கிய அனைத்து உருவங்களும் மனிதர்களால் இப்படி தான் கையாளப்படுகிறார்கள். 

   கணவரிடம்,  ‘இந்த மானுடப் பதர்களுக்கு கடவுளை எப்படி நடத்துவது என்று தெரியாமல் நம்மை இப்படி சித்திரவதை செய்றாங்கப்பா என்று தமக்குள் பேசி நம்மை கடவுளர்கள் நம்மை கலாய்த்து கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டுதானே,’ என்றேன்.

 ‘ஹேமா இங்கப்பார் மனிதர்கள் நினைக்கும் எண்ண ஓட்டங்களையே சக மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடியாத போது கடவுளர்களின் எண்ண ஓட்டங்களை எப்படி புரிந்து கொள்ள முடியும் ? உனக்கும் கடவுளுக்கும் அப்படி என்ன தான் வாய்க்கால் வரப்பு தகறாரோ என்னமோ?’

 ‘அதெல்லாம் இல்லங்க’

இந்த கேள்விகள் எல்லாம் பிள்ளையார் அரைக்காலில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றும், அதுவும் மருத்துவமனை வாசலில் அமர்ந்திருக்கும் பிள்ளையார் என்றால் எனக்குக்  கேள்விகள் இன்னும் ஒருபடி மேலே கேட்கத் தோன்றும். 

 ‘சரி பேசாம வா. இவன் தூங்கி எந்தரிக்கறது முன்னாடி உள்ள போய் உட்காரந்திடனும்.’

    ‘ஹம் சரி,’ என்று கணவரிடம் சொல்லிவிட்டாலும் மனது அதைச் சுற்றியே இருந்தது. பிள்ளையாரைத் தாண்டினால் மருத்துவமனைக்கு உள்ளே செல்லும் வழியில் முதலில் இருப்பது தகவல் மையம், அடுத்து கட்டண மையம்,  மற்றவை எல்லாம் அடுத்து அடுத்து மேலே நீண்டு செல்லும். கிட்ட தட்ட அது ஒரு நோயாளிகளின்  மாய  உலகம் .     வலிகளும் துயரங்களும் நிறைந்த உலகம். 

முதல் மாடியில் முதலாம் அறையில்தான் வாழும் கடவுளைச் சந்திக்க நிறைய பேர் காத்திருப்பார்கள் அவரை டாக்டர். வி என்றே அழைக்கலாம்,  நரம்பியல் மருத்துவர், அவருக்கே நரம்புக் கோளாறு இருக்க கூடும் என்ற பிரமை அவரை பார்க்கும் போதெல்லாம் தோன்றும். ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களாக மாதம் ஒரு முறை அவரை பார்த்து வருகிறேன். அவருடைய ஒவ்வொரு அசைவும் கூட எனக்கு பழகிவிட்டது. டாக்டர்.வி எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார், ஒற்றை நாடியில் உயிரை வைத்துக் கொண்டிருப்பார். அவரைச் சந்திக்கும் முன் அவரது இரு ஜூனியர் மருத்துவர்களைச் சந்திக்க வேண்டும். அவர்கள் அந்த குழந்தையின் கோளாறுகளை எல்லாம் சிறு கதை போல எழுதி, கணினியில் சேமித்து, டாக்டர். வி க்கு அனுப்பிவிடுவார்கள்,  டாக்டர்.வி அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும். 

      அதுவரை நோயாளிகள் துயருறும் உலகை, விடுதலை உணர்வை வேண்டும் மனிதர்களை,  குழந்தைகளைப் பார்க்க நேரிடும். டாக்டர் வி க்கு காத்திருக்கும் நேரம் நீங்கள் சராசரியான உள மாற்றத்தை விரும்பக்கூடியவராக இருப்பின் நிச்சயம் இந்த சமூகத்தின் மறுபக்கத்தை உணர்ந்து கொள்வீர்கள். வரிசையாகப் போடப்பட்ட நாற்காலியில் மகனையோ மகளையோ இழுத்துப் பிடித்து உட்கார வைத்திருக்கும் அனைவரின் முகங்களிலும் துக்கத்தின் சாயல் படிந்திருக்கும்.சில குழந்தைகள் அம்மாவின் முடியைப் பிடித்து இழுத்து அவர்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையை உருவாக்கி விடுவார்கள். இன்னும் சில குழந்தைகள் மிகவும் மூர்க்கமாக நடந்து கொள்வார்கள்,  இங்கு வந்திருக்கும் எல்லா குழந்தைகளும் அசாதரணமான குழந்தைகள் தாம், அவர்களின் அன்றாட இயல்பான வேலையைக் கூடச் செய்ய முடியாதவர்கள், எனக்குள் இருந்த கலக்கம் மற்ற குழந்தைகளை பார்க்கும் போது கொஞ்சம் குறைந்தது போலிருந்தது.அந்தநேர மாற்றம் எப்பொழுதும் நிகழ்வது தான். மற்ற குழந்தைகளோடு மகனை ஒப்பிட்டு திருப்தி அடைந்து கொள்வேன்.

      எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும் எனது மகனை இழுத்துப் பிடித்து மடியில் வைத்துக் கொண்டு இறுகிய முகத்தோடு பதற்றத்தோடு நானும் கணவருமாக அமர்ந்திருந்தோம். எங்கள் எதிர் சாரியில், வளர்ந்த பெண் குழந்தை ஒருத்தி உட்கார்ந்து இருந்தாள். இரண்டு கால்களும் இரண்டு கைகளும் முன்பின்னாக அதாவது கன்றுக்கு லாடம் அடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. குழந்தையை ஒரு கையால் இறுகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தார் அந்த பெண்ணின் அப்பா, அவளது அம்மா அங்கு இல்லை. நான் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அழகான பாவாடை சட்டையில் குதிரைவால் சடை பின்னப்பட்ட தலையை ஆட்டி ஆட்டி அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.  ஆசை ஆசையாக எதையோ அசைக்க முடியாத கையால் எதையோ காண்பிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

     குழந்தைகளைத் திசை திருப்பும் விதமாக மருத்துவமனையின் சுவரில் கார்ட்டூன் பொம்மைகள்,  புராண கதைகள் சிலவற்றை  சுவர் ஓவியங்களாக  வரைந்திருப்பர்கள். அதில் கோவர்த்தன மலையை ஒற்றைக் கையால் தூக்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணன் சிலையும் ஒன்று, அதைத்தான் அவள் காண்பிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.அவளுக்கு என்னவோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வேளை அவள் ராதே இல்லையா என்று கேட்டிருக்கக் கூடும். எனக்கு அது காதில் விழவில்லை, அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் ஒரு இருக்கை காலியாக ஆனதும் அங்கு சென்று அமர்ந்து கொண்டேன், அவள் அப்பா லேசாகப் புன்னகைத்தார்.

     அவளுக்கு சிறு நீர் கழிக்கப் போக வேண்டும் என்று சொல்லவும் எதிர் சாரியில் இருக்கும் கழிவறைக்கு அழைத்துச் சென்றார். மேற்கத்திய கழிவறை தான். ஆனால் ஒருவர் மட்டுமே உள்நுழையக் கூடிய குறுகிய கழிவறை,  இன்னொரு நபர் உள்ளே செல்லமுடியாத படியாகத் தான் இருந்தது.  அவர் கழிவறையின் கதவை மூடாது ஒருபக்கமாக நின்றவாறு பெண்ணை மறைத்துக் கொண்டு, வலது கையால் அவளது உடம்பைப் பிடித்து, இடது கையால் அவள் பாவடையை இடுப்பின் மேல் தூக்கிப் பிடித்து உட்கார வைத்தார். சிறுநீர் கழித்து விட்டு அரை நிர்வாணமாக அப்பா முன்பு வளைந்த படியே அப்பாவின் பிடிமானத்தில் நிற்கிறாள், மயிர்கள் அடர்ந்த அல்குல் காடு போலிருக்கிறது, வெளியே யாரும் பார்க்காதவாறு அவளின் முன்பக்கமாக நின்று கொண்டு பாவாடையை இறக்கிச் சரி செய்து பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்து அவரின் முறைக்காக காத்திருக்கிறார் அவர் முகத்தில் எந்த அசூயையும் இல்லை. எந்த சலனமும் இல்லை.நான் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்ததால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் குனிந்து நிமிர்கையில் குமிழி போல் மார்பகங்கள் தெரிகிறது, நிர்வாணம் தான் என்ன?என்ற கேள்வி என் மனதில் அலைக்கழிந்தது.

என் மகனுக்கு மருந்து கொடுத்ததில் அவன் அப்பாவின் மடியில் நன்கு உறங்கி விட்டான்., அதனால் அவன் தொந்தரவு அந்த நேரம் எனக்கில்லை, அவரிடம் பேச வேண்டும் போலிருந்தது, மெல்ல அந்தப் பெண்ணிடமும் அவள் அப்பாவிடமும் பேச்சு கொடுத்தேன்.

 ‘இப்போதான் முதல் முறையா உங்களை இங்க பார்க்கிறேன், இதுக்குமுன்ன இங்க வந்து இருக்கீங்களா?’ 

 ‘இல்லம்மா  இப்போ தான் இங்க வரோம். இதுக்கும் முன்ன வேற டாக்டர் கிட்ட  பார்த்திட்டு இருந்தேன், இந்த டாக்டர் நல்லா பார்க்கிறாருனு  சொன்னாங்க அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்.’

 ‘எந்த ஊருங்க ஐயா ?’

 ‘நாங்க கும்பகோணம்’

 ‘நீங்க எந்த ஊர் மா?’ 

 ‘நாங்க மாயூரம்’  

 ‘பக்கத்து ஊர் கார பொண்ண இங்க பார்க்கிறதில் சந்தோஷம்மா.’ வெற்றிலை போட்டுக்  காவிக்கறை ஏறிய பல் தெரிய சிரித்தார்.

 ‘பாப்பாவுக்கு அம்மா வரலையா ?’ 

 ‘அவ அம்மா இருந்தா தானே வாரதுக்கு? 

‘அவ அம்மாவுக்கு குடல்ல கான்சர் வந்து போயிட்டா. அவளுக்குக் கொள்ளி வச்சி வருஷம் பத்து ஆச்சிது , அந்த மங்களாம்பிகைக்கு கண் இருக்குனு தான் இவளுக்கு மங்களாம்பிகைனு பேர் வச்சேன்; அவ குருடி ஆயிட்டா. அவள கோயிலுக்கு போய் பார்த்து இருவத்தி ஐந்து வருசம் ஆச்சி.

 ‘ஆனா அவளுக்கு தெரியும் ஏதோ விட்ட குறை தொட்ட குறைனு என்ன வெள்ளோட்டம் பார்க்குறா. நானும் அவ ஆட்டத்துக்கு ஈடு கொடுத்திட்டு இருக்கேன், இந்த மாதிரி பிள்ளையைக்  கொடுத்திட்டு கூட இருக்கவங்க எல்லாரையும் தான் சோதிக்கிறா மங்களாம்பிகை. இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, என் காலத்துக்கு அப்பறம் இந்த பிள்ளைய யார் பார்த்துப்பா என்ற வருத்தம் தான் எனக்கு அதிகமா இருக்கு. அதுக்கும் மங்களாம்பிகை ஏதாவது வழி வச்சி இருப்பா,’ என்று சொல்லிக் கொண்டே மகளை வருடிக் கொடுக்கிறார். அவள் அவ்வளவு அழகாகச் சிரிக்கிறாள். கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு. 

 ‘மங்களாம்பிகை பெரிய பொண்ணு ஆகிட்டாங்களா?’

 ‘அவ அம்மா செத்து போன சில மாசத்திலே ஆகிட்டா.’  

 ‘அவளுக்கு மாச விலக்கு  ஆனா யார் பார்த்துப்பா’? 

 ‘அவளுக்கு எல்லாமே நான் தான்,  நாப்கின் வைச்சு விடுவேன், சில நேரங்களில் போக்கு அதிகமா இருக்கும்,  அவ கை கால் தான் பிரச்சனையை ஒழிய உடம்பு மனசு எல்லாம் சரியாத்தான் இருக்கு.’ 

எனக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து விட்டது. மேற்கொண்டு அவரிடம் ஒரு வார்த்தை கூடப் பேச தைரியம் வரவில்லை. மங்களாம்பிகையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன். மீண்டும் மனதில் கடவுள் பற்றிய கேள்வியும் உயிர்கள் படைக்கப்படுவதன் நோக்கம் பற்றியும்,  நிர்வாணம் பற்றிய கேள்வியும் என்னை தொந்தரவுக்கு உள்ளாக்கின.குழப்பமான மனநிலையில் இருந்தேன். பையன் மெல்ல உறக்கம் கலைந்து எழுந்திருந்தான்.    

எங்கள் முறை வந்தது, டாக்டர். வி அழைத்தார். 

ஹாய் ராக்கி பாய் !

அவன் சிணுங்கி கொண்டே, ’நான் ராகேஷ்’ என்றான்,  

 ‘ஓஹோ எனக்கு தான் ஏபிசிடி சரியாக தெரியலையா?

 ‘எனக்கு தெரியுமே அங்கிள், எங்க சொல்லு பார்க்கலாம்,’ 

ஆனால் அவன்  சொல்லவில்லை, அவனின் பார்வை அவர் பரிசோதிக்க வைத்திருக்கும் அந்தக் கருவிமீது தாவியது. நிலையில்லாப் பார்வை அவனது பிரச்சனைகளில் ஒன்று.

 ‘டாக்டர் இவன் இப்படித்தான் ஒன்றிலிருந்து ஒன்று தாவிக்கொண்டே இருக்கிறான். இல்லையே அவன் நன்றாகத் தான் இருக்கிறான்,’ என்றார். 

எனக்கு அவர் மீது எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும், ஒரிரு நிமிடங்களில் அவர் எப்படி அவன் சரியாகத்தான் இருக்கிறான் என்று கணிக்க முடிகிறது ?

அவர் அதற்குள்ளாக  அவனின் வயிற்றை கிள்ளி  ‘எத்தனை பூனைக்குட்டிகள் இருக்கிறது?’ என்றார். 

அவன் ஆயிரம் பூனைக் குட்டிகள் என்றான். அவர் சிரித்துக் கொண்டே,  ‘ஓஹோ பூனைக்குட்டிக்கு யார் சாப்பாடு கொடுப்பாங்க?’ 

 ‘நான் சாப்பிட்டுக்குவேன் அங்கிள்’ என்றான். 

 ‘எங்கே உன் கையை காட்டு, இப்போ பாரு, உன் பூனைக்குட்டி கத்தப் போகிறது.’     

     மியாவ் மியாவ் என்று சொல்லிக்கொண்டே மணிக்கட்டு எலும்பின் அனிச்சை செயல்பாடுகளைச் சுத்தியல் கொண்டு தட்டித் தட்டிப்  பார்த்தார் . 

ராகேஷ் அந்த சுத்தியலை பிடுங்கிக் கொள்வதிலேயே குறியாக இருந்தான்.

      மியாவ் மியாவ் என்று அவர் அத்தனை முறை சப்தமெழுப்பிய போதும் அவன் அந்தக் குரலைக் கண்டுகொள்ளவே இல்லை. டாக்டரிடம் எப்பொழுதும் கேட்கும் கேள்விகள் எதையுமே இந்த முறை நான்  கேட்கவில்லை. கணவர் தான் அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவன் நிறைய மாறிவிட்டான் டாக்டர் , நன்றாக சாப்பிடுகிறான். நன்றாக தூங்குகிறான். தூக்கத்தில் உடம்பு அதிர்வது குறைந்து இருக்கிறது டாக்டர்.

 ‘பள்ளியில் ஏதும் குறை சொல்கிறார்களா?’ 

 ‘ஆமாம் டாக்டர் பள்ளிக்குப் போனதும் தூங்கி விடுவதாக சொல்றாங்க, சிறப்புப் பள்ளியில் சேர்த்து விடசொல்றாங்க டாக்டர்.’

 ‘அவன் நன்றாகத் தான் இருக்கிறான். இனி பெரிய தொந்திரவுகள் எதுவும் இருக்க வாய்ப்புகள் இல்லை,  ஒன்று செய்யுங்கள் மூளையின்  நுண் அதிர்வு செயல்பாடுகள் முன்பு போல இருக்கிறதா?அல்லது அதிர்வுகள் குறைந்து இருக்கிறதா? என்று மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு மாத்திரையின் அளவை குறைத்து விடுகிறேன்,’ என்றார். 

‘அடுத்தமுறை வரும் போது இந்தப் பரிசோதனையைச் செய்து எடுத்துட்டு வாங்க ராக்கி அப்பா.’ 

 ‘ஓகே டாக்டர் நன்றி.’

 ‘ராக்கி அப்பா சொல்லாதீங்க, அங்கிள் நான் ராகேஷ்.’

 ‘ஓகே ஓகே நீ சமர்த்து பையன். 

 ‘அங்கிள் உனக்கு மிட்டாய் மாத்திரை மட்டும் தருவேன் அதை மட்டும் சாப்பிடணும்.

 ‘அம்மாவுக்கு தொந்திரவு செய்ய கூடாது. 

 ‘அப்படி நீ தொந்திரவு செய்தா நான் உனக்கு பெரிய மாத்திரை எல்லாம் தந்துடுவேன். 

 ‘சரியா ராகேஷ்?’

 ‘தாங்க்யூ அங்கிள்,’ என்றான்.

 ‘பை டா குட்டி பையா’ 

அவன் மரியாதையாக நடந்து கொண்டான் என்பதே எனக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. 

அவனுக்கு ஒன்றுமில்லை என்றது உள்மனது.

இஇஜி எடுப்பதற்கு எழுதித் தந்தார். இஇஜி அறை இரண்டாம் தளத்தில் இருக்கிறது, மேலே செல்ல வேண்டும். தேதி வாங்கி கொண்டு சென்று விட்டால் எளிதாக இருக்கும், அடுத்த முறை நிறைய நேரம் காத்திருக்க வேண்டியது இல்லை. அதற்குள் மங்களாம்பிகை அப்பாவிடம் சொல்லிக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மீண்டும் அவர்கள் அருகில் வந்தோம்,  மங்களாம்பிகை ராகேஷைப் பார்த்துப் புன்னைகைத்தாள், அவன் பதிலுக்குத் தலை ஆட்டினான், 

 ‘அக்கா உனக்கு சாக்லேட் பிடிக்குமா’? 

அவள் தலை ஆட்டினாள்.  

 ‘அப்போ எல்லா சாக்லேட்டும் உனக்குத் தான் எடுத்துக்கோ,’ என்று சொல்லிக் கொண்டே ஒரு  சாக்லேட்டை பிரித்து எச்சில் ஒழுகிக் கொண்டிருக்கும் வாயில் வைத்தான். 

அவளுக்கு சாக்லேடை வாயில் போட்டதும் இன்னும் உமிழ் நீர் சுரந்தது. 

அவனுக்கு அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, கொஞ்ச நேரத்தில் அவளோடு பழக ஆரம்பித்துவிட்டான். 

அவள் சிரித்துக்கொண்டே இருந்தாள், இவர்கள் இருவரையும் நாங்கள் மூவரும் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தோம்.

அவர்களின் அழகான உலகத்தில் நாமெல்லாம் வெறும் தூசு தான் என்று அந்த நேரம் தோன்றியது, 

   டால்ஸ்டாய் சிறுகதை ஒன்றில் இவர்களைப் போன்ற கதாபாத்திரங்கள் வரும். விளையாட்டு மைதானத்தில் .உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை மகிழ்ச்சியுறச் செய்த அந்த பதினெட்டு விளையாட்டு வீரர்கள் நினைவுக்கு வந்தனர். அது போல இவன் மங்களாம்பிகையை அதீத மகிழ்ச்சியில் இந்த நிமிடம் வைத்திருக்கிறான்,  

அவளின் அப்பா அவனை கையிலெடுத்து முத்தம் கொடுத்தார். ‘மகள் இவ்வளவு சந்தோஷமா இருந்து இன்னிக்கு தான் பார்க்கிறேன் மா.’ 

கையெடுத்துக் கும்பிட்டார், அவர் கண்களில் ஈரம் கசிவதை கண்டேன். 

கணவர் அவரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார்.இது போன்ற சிறப்புக் குழந்தைகளை படைக்கும் இறைவன் சக மனிதர்களிடம்  கருணை இருக்கிறதா மானுடம் தழைக்க உதவுவார்களா என்பதை எல்லோரிடமும் சோதித்துப் பார்க்கிறாரா ? 

இப்படிப் பல எண்ணங்கள் மீண்டும் என்னை தொந்தரவு செய்ததும் மனம் மீண்டும் கடவுள் பக்கம் திரும்பியது. அவனுக்கு இருக்கும் பிரச்சனைகள் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல் அந்த கணம் இருந்தது. இன்று அவன் நடந்து கொண்ட விதம் எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

      ராகேஷுக்கு ஆறு வயது நிறைந்து விட்டது, அவன் பிறந்து மூன்று நாட்கள் ஆன போது காய்ச்சல் கண்டு, உடம்பிலுள்ள நீர்ச் சத்து முழவதுமாக வடிந்து செத்துப் பிழைத்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவனது பாட்டி மஞ்சள் துணியில்  காசு முடிந்து வைத்திருந்தாள்,  அவளது நம்பிக்கையைக் குறை சொல்ல ஒன்றுமில்லை, அந்த காய்ச்சல் தான் அவனை இன்று வரை அலைக்கழிக்கிறது,  

   ஒரு வயதிலிருந்தே அவன் உடம்பில் ரயிலின் தடதடப்பு  இருக்கும், சதா ஓடிக்கொண்டே இருப்பான், காரணமே இல்லாமல் ஓடுவான். நிலையில்லாது ஓட்டம்। பூமியில் கால்பாவாத ஓட்டம். அவனின் கால்களில் ரத்தம் வராத நாட்களே இல்லை,  அவனால் கட்டுப்படுத்த முடியாத ஓட்டம். உறக்கமில்லா இரவுகள், உறக்கத்திலும் கூட எழுந்து ஓடிவிடுகிறார் போன்ற பாவனையில் தான் இருப்பான்.

மருந்து கொடுக்காமல் உறங்கவைக்க முடியாது என்ற நிலை. கை சுகத்தில் இறுகக் கட்டிக் கொள்வேன், பறக்க நினைக்கும் பட்டாம்பூச்சியின் இறக்கைகள் முறிவதைப்போல் திமிறி எழுந்துவிடுவான்.

பிறந்ததிலிருந்து மாதம் தோறும் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கமான ஒன்றாகி விட்டது.

எவ்வளவோ மருந்துகள் மாத்திரைகள், இவை எல்லாவற்றையும் தாண்டி, மாதம் தோறும் மருத்துவமனைக்கு வந்து செல்வது மன உளைச்சலாக இருந்தது. துயரப்பட்ட ஆன்மாக்களை அவர்களின் கண்களின் வழியே அறிந்து கொள்வது என்பது அகமனத்தைத் துயருறச் செய்வது. நெடுநாளாக இந்த துயரம் எங்களுக்கு இருந்தது. ஒவ்வொரு முறை இங்கு வந்து செல்லும் போதெல்லாம் துயரமானவைகளை மட்டுமே எதிர் கொள்ள வேண்டி இருந்தது.

ராகேஷை  புரிந்து கொள்வதில் சில சிக்கல்கள் ஆரம்பத்திலிருந்தன, யாரோடும் சேர்ந்து விளையாட மாட்டான். தனியாகவும் விளையாட மாட்டான்.  ஒன்றிலிருந்து ஒன்று தாவிக் கொண்டே இருப்பான்.

பள்ளியில் சேர்த்தபொழுது மருந்தின் வீரியத்தில் உறங்கிவிடுவான், அல்லது உட்கார்ந்து இருப்பதில்லை, ஓடிக் கொண்டே இருக்கிறான் என்பதே பிரதான புகாராக இருந்தது. அவர்கள் சொல்வது சிறப்புப் பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்பது தான்.

ஒரு முறை மிகுந்த ஆவேசத்தில் கோபமாக பிரின்சிபாலிடம் பேசிவிட்டேன்.  ‘அவன் படிக்கவே இல்லை என்றாலும் பரவாயில்லை, சக குழந்தைகளோடு விளையாடினால் போதுமானத . உங்கள் ஒத்துழைப்பு இல்லாமல் ராகேஷை சரி செய்ய முடியாது. 

’ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை பார்த்துக் கற்றுக் கொள்வது தான் கற்றலியல் செயல்பாட்டின் முதல் நோக்கம். நீங்களே இப்படி சொன்னால் எப்படி?’ என்று கேட்டேன்.

இவனுக்கு இருக்கும் குறைபாடுகள் சீக்கிரம் சரியாக கூடியது தான். நீங்கள் உதவி செய்தால் மட்டுமே சாத்தியம் ஆகும் என்று அவர்களிடம் மன்றாடிய பிறகு சரி என்று சொன்னார்கள்.

காலம் எத்தனை வேகமாகச் சுற்றுகிறது? அவன் இன்று இன்னொரு வளர்ந்த, ஆனால் செயலிழந்த பெண்ணுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனாக மாறி இருக்கிறான். குணமாகிக் கொண்டுவருகிறான் என்பதே எங்கள் இருவருக்கும் ஆகப்பெறும் சந்தோஷம்.

மங்களாம்பிகையின் அப்பா கேட்டார்,  ’உனக்கு என்ன வேண்டும் ராகேஷ்?’

 ‘எதுவுமே வேண்டாம் மாமா’ 

 ‘உனக்கு வீடியோ கேம் வாங்கித் தரவா?’ 

 ‘இல்லை மாமா அதெல்லாம் வேண்டாம்.’  

அவன் பதில் சொல்லச் சொல்ல சிரிப்பும் அழுகையுமாக கணவரும் நானும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டோம், 

அவன் மற்றொருவர் கேள்விக்குப் பதில் சொல்வதே பெரிய ஆச்சரியமாக இருந்தது.

 ‘அக்கா நீ மருந்து சரியா சாப்பிடு, உனக்கும் கால் எல்லாம் சரி ஆகிடும். அப்பறம் நீயும் அம்மா மாதிரி வேலைக்கு போகலாம் அப்போ எனக்கு கார் வாங்கித் தருவியா?’

மங்களாம்பிகை,  ‘சரி டா தம்பி’ என்று குழறிக் குழறிச் சொன்னாள்,  வாயிலிருந்து எச்சில் ஒழுகியது.  

அவளிடமிருந்தும் கண்ணீர் கசிந்தது. 

விடைபெற்று கீழிறங்கிக் கொண்டிருக்கும் போதே வேகமாக ஓடிக் கீழே விழுந்துவிட்டான்,  பிள்ளையார் பார்த்துக் கொண்டுதானிருந்தார், வழக்கம் போல் அவர் வேலையில் மும்மரமாக இருக்கிறார், பாவம் அவர் தான் என்ன செய்ய முடியும்?

இரவு ரயிலில் ஏறி அமர்ந்ததும் முடிவே  இல்லாத துயரத்தின் பாதையில் இந்த உலகம் ஊர்ந்து செல்வது போன்ற பிரமை ஏற்பட்டது.

ஜன்னலோர இருக்கை, ராகேஷை மடியில் கிடத்தி நகரும் மரங்கள் பற்றிய கதைகளைச்  சொல்லிக் கொண்டு வந்தேன். மாத்திரையின் வீரியத்தில் அரைமயக்கத்தில் இருந்த அவன்,  ‘அம்மா இனி அந்த அக்கா கிட்ட நாம அடிக்கடி பேசலாம் தானே,’ என்று கேட்டான்.

 ‘பேசலாம் டா தங்க புள்ள.’

அவன் உறங்கி விட்டான். 

காலச்சுழற்சியில் சிக்காதவர்கள் யாரேனும் உண்டா என்ற கேள்வி எனக்கு எப்பொழுதும் உண்டு. காலச் சுழற்சியில் சிக்கி வெளியே வந்து பார்ப்பதற்குள் ஒரு மாமாங்கம் ஆகிவிடுகிறது.

டாக்டர் வியிடம் தொடர்ந்து பார்த்து வந்ததில் ஒரு வருடம் மாத்திரைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொண்டதும், ராகேஷ் ஓரளவுக்குச் சரியாகி விட்டான்.ஆனாலும் கொஞ்சம் துடியாக இருப்பான். மருந்து மாத்திரைகள் எல்லாமும் நிறுத்தி இரண்டு வருடங்கள் ஆகின்றன..

சென்னைக்கு மருத்துவ மனையின் நிமித்தம் செல்வது இல்லை என்ற நிலையில் இருப்பது அத்தனை ஆசுவாசமாக இருந்தது. 

அவசரமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். மூன்று வருடங்களுக்குப் பிறகு அன்று அழைத்திருந்தார்.

எனக்கு மனம் குற்றவுணர்ச்சியில் தவித்தது.

 ‘எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய வேண்டும்.’ 

’என்ன செய்யணும் சொல்லுங்க?’ 

’உங்கள் மகனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள் மங்களாம்பிகை. அவளது இறுதி ஆசையை நிறைவேற்றுவீங்களா?’

 ‘ஐயோ மங்களாம்பிகைக்கு என்ன ஆச்சு?’

 ‘அவளுக்குக் காலம் நெருங்கிடுச்சு.’ 

 ‘அதெல்லாம் அவளுக்கு ஒண்ணும் ஆகாது, நீங்க தைரியமா இருங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போங்க நான் பையனை அழைச்சிட்டு வந்திடறேன்.’ 

விலாசம் கேட்டு வாங்கிக் கொண்டு ஃபோனை வைத்து விட்டேன். 

மனம் முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது, அவர்களைச் சந்தித்து மூன்று வருடங்களுக்கும் மேலாகி விட்டது, ராகேஷ் எந்த அளவுக்குப் பழகுவான் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை, வேலைக்கு ஃபோன் செய்து விடுப்பு சொல்லி விட்டு பள்ளிக்கூடம் சென்று அவனுக்கு விடுப்பு வாங்கி கொண்டு கணவருக்குத் தகவலை தெரிவித்து விட்டு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். அவளுக்கு ஏதும் நேர்ந்து விடக்கூடாது என்று மனம் பதறியது. 

 ‘ராகேஷ் உனக்கு ஞாபகம் இருக்கா?

’அந்த அக்காவிடம் பேசியது எல்லாம் நினைவில் இருக்கா?’

’கொஞ்சமா இருக்கும்மா. 

 ’அவ அன்னைக்கு முழுக்க சிரிச்சிக்கிட்டே இருந்தா.’

’நீ தான் அவ கிட்ட அவ்வளவு அன்பா நடந்து கிட்ட

’அதை ஞாபகம் வைச்சுக்கிட்டு தான் உன்னப் பார்க்கக் கூப்பிடறா.’

 ‘இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்குமா. 

’அந்த அக்கா சிரிச்சிட்டே இருந்தாங்க; அவங்க கால் நடக்க முடியாததை பார்த்திட்டு தான் அவங்க கிட்ட பேசினேன்.அப்போ ரகசியமா என் கால் அப்படி வளையாம இருக்கானு பார்த்தேன் தெரியுமா உனக்கு ?’

 ‘அதெல்லாம் எப்படா நடந்தது ? அப்பாவும் நீயும் அழுதீங்களே அப்போ தான்’ 

 ‘அடப்பாவி நீ அப்பவே விவரமா தான் இருந்திருக்க’ 

என் தாடையை பிடித்துச் செல்லமாகக் கிள்ளி முத்தமிட்டான். 

நேரம் செல்லச் செல்ல எனக்குள் இருந்த பதட்டம் அதிகமாகியது. மங்களாம்பிகைக்கு எதுவும் ஆகக் கூடாது என்று மனதுக்குள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேன்.

அவர் கொடுத்த முகவரியை ஆட்டோ ஓட்டுனரிடம் கொடுத்து அந்த முகவரிக்கு அழைத்துச் செல்லும் படி சொல்லி விட்டு ஏறி உட்கார்ந்து கொண்டோம். பழமையை முழுவதும் தொலைத்து விடாத ஊர் கும்பகோணம். அங்கிருந்த வீடுகளைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றியது. நகரத்தின் சத்தங்களிலிருந்து தள்ளி இருந்தது அந்த தெரு. வீடுகள் தள்ளித்தள்ளி தனி வீடுகளாக இருந்தன. அந்த தெருவின் கடைசி வீடு அவர்களுடைய வீடுதான் என்று சொல்லிக்கொண்டே ஆட்டோவை நிறுத்தினார். 

ஆட்டோ சத்தம் கேட்டதும் அவள் அப்பா வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அந்த இடமே துக்கத்தின் சாயலை அள்ளிப் பூசியிருந்தது. துணியை வாயில் வைத்தபடியே உள்ளே அழைத்துக் கொண்டு போனார். அதிகம் வெளிச்சம் இல்லாத அறையில் கட்டிலில் பிறந்த குழந்தையைப் போலப் படுத்துக் கிடந்தாள். 

      அருகே சென்று மங்களாம்பிகை என்று அழைத்தேன்.பறவை கண் திறந்து பார்ப்பதைப் போல மெல்ல கண்களை திறந்தாள். இத்தனை சௌந்தரியம் எப்படி இவளுக்கு வந்தது ? மரணிக்கும் முன் முகம் சௌந்தர்ய ரூபத்தை ஏன்  அடைகிறது ?அதன் தாத்பரியம் என்ன? 

‘அக்கா அக்கா இங்கப் பாரேன் யார் வந்து இருக்கா?’

அவள் மெல்ல அசைந்தாள். ராகேஷை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள். 

 ‘நான் தான் உன்  ராகேஷ். எனக்கு கார் எல்லாம் வாங்கித் தரேன்னு சொன்னதை மறந்திட்டயாக்கா?’         

சருகு போலிருந்தது அவள் உடம்பு. 

உதிரத் தயாராக இருந்தாள். 

 ‘அக்கா அக்கா என்னைப் பாரேன்’ 

 பூ மலர்வதைப்போல் அவளின் உதடு மலர்ந்தது. வாயிலிருந்து நீர் ஒழுகி கொண்டிருந்தது.  

 ‘நீ ஏன் பேச மாட்டேங்கிற?

 ‘உனக்கு ஒன்னும் ஆகல. நீ நல்லாதான் இருக்க .பார், உன்னால அழகா சிரிக்கக் கூட முடியுது. என்கிட்ட பேசு எல்லாம் சரியாகிடும்.’

 அவள் ஏதோ சொல்ல முயற்சித்தாள், 

கைகளை அவளால் தூக்க இயலவில்லை.

 ‘கடந்த நான்கு மாதமாக இப்படிதான் இருக்கிறா.சாப்பாடு தள்ளிட்டு. நாடி நரம்பு எல்லாம் இறுக்கமாகிடுச்சு.’

 ‘டாக்டர் மருந்து எல்லாம் கொடுத்தார். ஆனாலும் இதுக்குமேல் ஒன்னும் என்னால செய்ய முடியல.’ 

அவருக்கு  அழுகை பீறிட்டது . 

ஆறுதல் எல்லாம் சொல்லவே முடியாத தருணம் வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கவே கூடாத தருணம் என்றால் இந்த நாளைத் தான் சொல்வேன். 

  ‘அக்கா அக்கா இங்கப் பாரேன்’ 

அவள் மெல்ல கண் திறந்து கைகளை மேலே தூக்கினாள். ராகேஷ் அவளது கைகளை பிடித்துக் கொண்டான். கைகளை முத்தமிடுவது போல அவளது பாவனை இருந்தது. இவன் முத்தமிட்டான்.

மெல்ல உதட்டை அசைத்தாள். இத்தனை நாள் உயிரின் ஒவ்வொரு அணுவும் சுருங்கி கொண்டே வந்தது இருக்கிறது. நிறைவான ஒன்றை அவள் அடைந்ததும் அவள் கண்களை மூடிக் கொண்டாள். 

     அன்பின் முத்ததிற்காக நெடுநாளாகக் காத்திருந்திருக்கிறாள் போலும். அடர்ந்த வனம் தனது அத்தனை இலைகளையும் உதிர்த்து விட்டது. மரணம் தான் அவளுக்கான மீட்பு போலிருந்தது .அதனால் அதன் அத்தனை சௌந்தர்யங்களையும் அவளது முகம் சூடிக் கொண்டது.

ராகேஷ் திரும்பி மீண்டும் ஒரு முறை முத்தமிட்டான். கைகளை மெல்லப் பிரித்து வைத்து விட்டு அவளின் மூடப்பட்ட கண்களின் மீது அவனது பார்வை பதிந்தது.

’அம்மா…..

அக்கா சாமி கிட்ட போயிட்டா. இல்லைனா இவ்ளோ அழகான கண்களை இத்தனை சீக்கிரம் மூடிக் கொள்வாளா என்ன?’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.