பூனை- வித்தியாசமான பார்வைகளில்

(1) என் பூனை

வெர்லேயினின் அல்லது போதலேரின் பூனை போன்றன்றி, என் பூனை பிசாசமல்ல; ஸ்பிங்ஸுமல்ல
மடி மீதோ நாற்காலி மீதோ
சரிசமமாய்ச் சுகித்திருந்தாலும்,
அது தடவப்படுவதில்லை;
அது தளுக்குவதுமில்லை.

ஒற்றை மனோநிலை அதற்கு;
வெறுமனே சலிப்பில் அது.
கொட்டாவி விடுகிறது; தூரச் செல்கிறது;
துயில் கொள்ள ஒதுங்கி விடுகிறது.
மீன்கள் சேமிப்பிலுள்ள இடம் எங்கென்று
மோப்பம் பிடித்ததில்லை.
பாலைச் சுவைத்ததாய் அறியப்பட்டதில்லை.
கூடுதலாக செம்மறியாடாய், குறைவாகவே பூனையாய் .

எலியைத் துரத்த தன் பெருமிதத்தினின்று
கீழிறங்கி அது வருவதில்லை.
கம்பளி நூற்பந்துகளுடன் விளையாடுவதில்லை.
சீண்டும் விருந்தினரிடம் தன் கூர்நகங்களைக் காட்டுவதில்லை.
ஆனால் என் அடித்தள அடுக்குவீட்டில் விருப்பு வெறுப்பின்
அனைத்து விலங்கு, மனித விதிகளையும் மீறி அது.

ஓரிரவில் நான் இப் பூனையை நீரில் மூழ்கடிப்பேன்.

-Nissim Ezekiel
Source: Twelve Modern Indian Poets, Chosen and Edited by Arvind Krishna Mehrotra

குறிப்பு. தன் அவதானிப்பில் பூனையாயில்லாத பூனையோடான தன் உறவைப் பரிசீலிக்கும் மனித அவசத்தின் ஆழ்மன எதிர்வினையாய் உளவியல் நோக்கிலான கவிதை.

  • Paul Verlaine: பிரெஞ்சுக் கவிஞர்(1844-1896). இவரின் பெண்ணும் பூனையும் என்ற கவிதையில் வரும் பூனை இங்கு சுட்டப்படுகிறது
    ** Charles Baudelaire:பிரெஞ்சுக் கவிஞர் (1861-1867); இவரின் பூனை என்ற கவிதையில் வரும் பூனை இங்கு குறிக்கப்படுகிறது.
    *** Spinx

நிஸ்ஸிம் இசக்கியேல்(1924-2004) : ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். பின்காலனிய நவீன இந்திய ஆங்கிலக் கவிதையுலகின் முக்கிய பங்களிப்பார்களில் ஒருவர். நாடகாசிரியர். கலை விமர்சகர். சாகித்திய அகாதெமி விருதாளர்(1983). யூதராய் இஸ்ரேலுக்கு புலம்பெயரும் வாய்ப்பிருந்தும் இந்தியாவிலே தங்கி இலக்கியப் பணியாற்றியவர்.

(2) பெண்களுக்கு அறிவுரை

காதலரின் ’மற்றமையைச்’
சமாளிக்க நீங்கள் கற்க விரும்பினால்
பூனைகளைப் பேணுங்கள்.
மற்றமை எப்பொழுதும் அலட்சியமல்ல-
பூனைகள் தேவைப்படும் போது தம்
கழிவுத் தட்டுகளுக்கு திரும்பி வரும்.
சன்னலின் வெளியே தம் எதிரிகளைச்
சபிப்பதில்லை அவை.
அப் பெரிய பச்சை விழிகளில் தெரியும்
அந் நிலைத்த வியப்பின் வெறித்தல்
தன்னந்தனியாய் இறப்பதை
உங்களுக்கு கற்றுத் தரும்.

-Eunice De Souza

Source: Twelve Modern Indian Poets, Chosen and Edited by Arvind Krishna Mehrotra

குறிப்பு: தன் வாழ்க்கைத் துணைவரின் மற்றமையால்- அலட்சியத்தால்- தனிமையை உணரும் பெண்களுக்கு பூனைகள் மற்றமைக்கு பதிலியாய் மட்டுமல்ல, தனிமையை எதிர்கொள்ளவும் தன்னந்தனியாய் இறக்கவும் கற்றுத் தருகின்றன. பெண்ணிய நோக்கிலான கவிதை.
யூனிஸ் டிசௌஸா (1940-2017): தன் கவிதைகளின் செறிவுக்கும், எதிர்பாராத் தன்மைக்கும் சிறப்பிக்கப்படுபவர். பெண்களின் தனிமையையும், அந்நியமாதலையும், இழப்பையும் தம் கவிதைகளில் பதிவு செய்தவர். குழந்தைகள் இலக்கியத்திற்கு பங்களித்தவர்; நாவலாசிரியர்; இலக்கிய விமர்சகர்.

(3) ஒரு காலி அடுக்குமாடி வீட்டில் பூனை

இறத்தல்- நீ அதை ஒரு பூனையிடம் செய்யக் கூடாது.
ஏனெனில், ஒரு காலி அடுக்குமாடி வீட்டில்
ஒரு பூனை என்ன செய்ய முடியும்?
சுவர்களின் மேல் ஏறுவதா?
மேசை நாற்காலிகளை உரசுவதா?
இங்கு எதுவும் வித்தியாசமாய்த் தோன்றவில்லை.
ஆனால் எதுவும் ஒரே மாதிரியாயில்லை.
எதுவும் நகர்த்தப்பட்டிருக்கவில்லை.
ஆனால் அதிக இடமிருக்கிறது.
இரவு நேரத்தில் விளக்குகளும் ஏற்றப்படவில்லை.

மாடிப்படிகளில் காலடியோசைகள்,
ஆனால் அவை புதிதாயுள்ளன.
சிறு தட்டின் மீது மீனை வைக்கிற
கை கூட மாறியுள்ளது.

ஏதோ ஒன்று, அதனின்
வழக்கமான நேரத்தில் தொடங்கவில்லை.
ஏதோ ஒன்று, அது
நடக்க வேண்டுமென்றபடி நடக்கவில்லை.
யாரோ ஒருவர் எப்போதும், எப்போதும் இங்கிருந்தார்.
பிறகு சட்டென்று மறைந்தார்;
பிடிவாதமாக மறைந்தபடியே இருக்கின்றார்.

ஒவ்வொரு அலமாரியும் ஆராயப்பட்டு விட்டது.
ஒவ்வொரு அடுக்கும் தேடப்பட்டு விட்டது.
கம்பளத்தின் கீழ் தோண்டிய அகழ்வாய்வுகள்
ஒன்றும் பயனற்றவையாகி விட்டன.
கட்டளையொன்று கூட மீறப்பட்டு விட்டது:
எங்கும் இறைந்து கிடக்கும் செய்தித் தாள்கள்.
என்ன செய்ய இருக்கிறது மீதி?
சற்று உறங்கு ;காத்திரு.

அவன் திரும்பி வரும் வரை சற்று காத்திரு.
அவன் தன் முகத்தைச் சற்று காண்பிக்கட்டும்.
ஒரு பூனைக்கு என்ன செய்யக் கூடாதென்பதில்
ஒரு படிப்பினையை எப்போதாவது அவன் தேர்ந்து கொள்வானா?
பக்கவாட்டில் பதுங்கிப் போ அவனை நோக்கி-
ஏதோ விருப்பமில்லாதது போல-
புலப்படப் பிறாண்டும் பாதங்களின் மீது
மிக மிக மெதுவாக-
குறைந்தபட்சம் தொடக்கத்திலாவது
தாவல்களும் கீச்சல்களுமின்றி.

குறிப்பு: இறந்து போன உரிமையாளனின் பூனையின் நோக்கிலிருந்து எழுதப்பட்ட வித்தியாசமான கவிதை. பூனை உணரும் வெறுமையையும், காத்திருத்தலையும் அடங்கிய தொனியில், சிக்கனமான சொற்களில் கவிதை வெளிப்படுத்துகிறது. சாவின் வியாபகமும், சாவின் பிரிவில் எவ்வுயிரும் தவிக்கும் உணர்தலும், உயிரிரக்கமும் கவிதையில் உட்குறிப்பாகின்றன.
விஸ்லாவா ஸிம்பார்ஸ்கா (1923-2012): கவிதையின் மொஜார்ட்( Mozart of Poetry) என்று சிறப்பிக்கப்படுபவர். சாதாராண நிகழ்வுகளில் அசாதாரண உண்மைகளை ஆராய்வன அவர் கவிதைகள். 1996 –ல் இலக்கியத்திற்கான நோபல் விருதினைப் பெற்ற போலந்துக் கவிஞர். கட்டுரையாளர்; மொழிபெயர்ப்பாளர்.

Wislawa Szymborska
Source:Wislawa Szymborska ,Poems New and collected, A Harvest book, Harcourt, Inc.

One Reply to “பூனை- வித்தியாசமான பார்வைகளில்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.