பார்வையின் கட்டுமானம்

சாம்பல் நிறக் கைப்பெட்டியைக் கொடுத்து முதியவரை வீட்டிலிருந்து தினமும் வெளியே அனுப்பிவிடுகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகவே அவரைப் பார்த்து வருகிறேன். பகலில் எந்த இடத்திலும் சூரியன் குறுக்கிடுவது போல, அவர் ஏதாவது ஒரு தெருவில் தென்பட்டுவிடுவார். அவருடைய வாழ்வின் பிடிமானமே அந்தப் பெட்டிதான் என்பதைப் போல, அதை இறுகப் பற்றிக்கொண்டு, நிதானமாக யாருக்கும் முகம் கொடுக்காமல் தனக்குத்தானே பேசிக் கொண்டே செல்வார். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்பதைத் திறந்து பார்க்க முடிந்தால் அல்லது அந்தப் பெட்டி அவருடைய கையிலிருந்து தவறி கீழே விழுந்து திறந்து கொண்டால் என்பது போலவே ஒரு பெண்ணிடம் சொல்லாமல் வைத்திருக்கும் காதலைப் போல உடலெங்கும் ரசவாதம் செய்துகொண்டே இருக்கும். ஆனால், இன்று காலை நடைப்பயிற்சியில் இருந்தபோது அம்மா கைபேசியில் அழைத்து, “டீச்சர் இறந்துட்டாங்க. போய்ட்டு வந்தேன்’’ என்றபோது, அந்த முதியவரும் எதிரே வர, அவர் வைத்திருந்த பெட்டியைத் திறக்காமலேயே, அதில் அவர் என்ன வைத்திருக்கிறார் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவருடைய உயிர். ஒரு பாவனைக்காகவே உயிர் எப்போதும் உடலில் இருப்பது போலவே இருந்தாலும், அதை எடுத்து எல்லோருமே அவர்களுக்குப் பிடித்தமான இடங்களிலேயே பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். அந்த முதியவரையும்விட கூடுதலாக நான் இன்னொரு பெட்டியிலும் என் உயிரை வைத்து அவற்றைப் பற்றியவாறே எங்கும் நடந்து கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்குப் பெட்டிகள் என்பது இரண்டு வீடுகளாக இருக்கின்றன.

     முதலாவது இருபத்தாறு ஆண்டுகளாக அந்த வீட்டின் நிழல் போல நான் சுற்றிச்சுற்றி வரும் என் காதலியின் வீடு. திருமணம் முடித்து, அந்த வீட்டை விட்டு, அவள் சென்றே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் என்றாலும், அந்த வீட்டின் மீதான ஈர்ப்பு மட்டும் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பூமி முழுவதுமே காந்தம்தான் என்றாலும், அவள் வசித்த அந்தப் பகுதியின் காந்தத்துக்குச் சற்று கூடுதல் ஈர்ப்புத் தன்மை போல. என்னுடைய வீட்டிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்தப் பகுதிக்குள் வண்டியில் நுழையும் போதே, அவள் இல்லை என்பதையெல்லாம் மறந்து பரவசத்துக்கும், பதற்றத்துக்கும் உள்ளானவன் போலவும், இளமைக்குத் திரும்பிவிட்டவன் போலவும் தடுமாறத் தொடங்கிவிடுவேன். கண் பார்வை மங்கிவிடுவது போலவும் தோன்றும். எதிர்ப்படும் எல்லோருமே அவளைப் போலவே தெரிவார்கள். இந்த மயக்கத்துடனேயே அவள் வீட்டுக்கு நேராக எதிர்ப்புறச் சாலையில் போய் நின்று கொண்டு, மங்கலான பச்சை நிறம் கொண்ட அந்தப் பழைய மாடி வீட்டைப் பார்த்துக்கொண்டே நிற்பேன். 

     இருவரும் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்தபோது, சக மாணவன் என்கிற முறையில் ஒருமுறை அவளுடைய வீட்டிற்குச் சென்றிருக்கிறேன் அது எனக்குக் கிடைக்கப் பெற்ற பரிசுகளிலேயே பெரிது போல இருக்கிறது. அந்த வீட்டின் அமைப்புகளில் இருந்து அறைகள் வரை, அவளுடைய சிரிக்கும் கண்களைப் பார்ப்பது போல இப்போதும் அப்படியே மறக்காமல் இருக்கின்றன. அதனால், அந்த வீட்டில் ஏதாவது ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ அவள் அந்தப் பொழுதை இனிதாக்குவதைக் காண்பவனைப் போன்ற கற்பனையில் என்னை மறந்திருப்பேன். நேரம் அதிகமாகி, யாராவது கவனிப்பது போல தெரிந்தால், கல்லூரி விட்டு மாலையில் இருவரும் பிரிவது போல அந்த இடத்தை விட்டு பிரிந்து வருவேன். 

     பண்டிகை நாட்கள் என்றால், அவள் வந்திருப்பாளோ என்று கூடுதலாக ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வர என்னுடைய மனைவி அனுமதிப்பாள். பல முறை அவளையும் அழைத்து வந்து, அந்த வீட்டைப் பார்த்தவாறே நின்றிருக்கிறேன். அவளுக்கும் அவளைப் பார்க்க வேண்டும் என்கிற நெடுநாள் கனவு. சில முறை என்னுடைய பிள்ளைகளையும்கூட அழைத்து வந்திருக்கிறேன். ஆனாலும், நூறாண்டுக்கு ஒருமுறை தென்படும் நட்சத்திரம் போலவோ என்னவோ, ஒருமுறை கூட என் கண் முன்னால் அவள் அங்கு தோன்றியது இல்லை. அப்படியும் இப்போதும் என் உயிர் அங்குதான் இருப்பது போலும், அந்த வீட்டைப் பார்ப்பதன் மூலமே என் உயிரின் ஆயுள் நீடிப்பது போலும், அந்த வீட்டைச் சுற்றிச்சுற்றி வருகிறேன். 

     திரண்ட கருமேகங்கள் வலுவிழந்து போவது போல காதல்கள் கலைவதற்குச் சில நேரம் அதீதமான காதலும் காரணமாக இருக்கலாம் அல்லது உயிர் போகும்வரையும் கூட தன்னை ஒருவன் காதலிக்க வேண்டும் என்கிற காதல் முற்றிப் போனதன் பித்தாகவும் இருக்கலாம். அவள் அதீதமான காதல் ததும்பிய கண்களோடு, என்னுடனான காதல் கலைதலை இறுதியாக இவ்வாறு சொன்னாள்: `என்னை விடவும், அழகான, அன்பான நல்ல பெண் உனக்குக் கிடைப்பாள்.‘ வேறொரு திசைக்குக் கிளைநதி பிரிந்து செல்கிறது என்பதற்காக எந்த நதியும் அதன் உயிர் போன்ற நீரை அங்கே பாயவிடாமல் அதுவாகவே கட்டுப்படுத்திக் கொள்வதில்லை. என் மனைவியைக் காதலிக்கிற அதே நேரம், அவளுடைய நினைவிலிருந்து என்றும் நான் தப்பி இருந்தது இல்லை. அப்படியே, தப்பினேன் என்றாலும் அவளுடைய வீட்டைச் சுற்றி வருவதன் காதலில் இருந்து தப்பியது இல்லை.

     இரண்டாவது, முப்பத்தியெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நான் சுற்றிச்சுற்றி வரும் என்னுடைய அப்பாவின் காதலி வீடு. அது என்னுடைய காதலியின் வீடும். அப்பாவும் மகனும் எப்படி ஒரே மனதால் ஈர்க்கப்பட்டோம் என்பது வியப்பாக இருக்கிறது. எனக்கு மூன்றாம் வகுப்பு ஆசிரியை கயல் டீச்சர். அந்தப் பள்ளியிலேயே அன்பான டீச்சர். அதிரப் பேசாதவர். மாணவர்களை அடிக்காதவர். எப்போதும், `கண்ணு.. கண்ணு’ என்று கூப்பிடுபவர். அவரை அப்போது நான் காதலித்தேன். பெரியவன் ஆனதும், அந்த டீச்சரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை நீரூற்றைப் போல எனக்குள் மேலெழுந்திருக்கிறது. 

     அது மழைக்காலம். வகுப்பில் டீச்சர் பாடம் எடுக்கத் தொடங்கும்போது. “காலையில் குளிக்காதவங்க. எழுந்திருங்க’’ என்றார். நான் எழுந்தேன். இன்னும் இரண்டு பேர் எழுந்தனர். டீச்சர் என்னை உட்காரச் சொல்லிவிட்டு, அவர்கள் இரண்டு பேரையும் கண்டிப்பது போல காரணம் கேட்டார். அதற்கு ஒரு பையன், “அவனை மட்டும் ஏன் உட்காரச் சொன்னீங்க’’ என்கிற பதிலைச் சொன்னான். டீச்சர் ஒரு கணம் புரையேறி, “அபிக்கு மழை ஒத்துக்காது’’ என்றவாறே, “சரி, நீங்களும் உட்காருங்க’’ என்று கூறிவிட்டார்.  `அபிக்கு மழை ஒத்துக்காது’ என்ற அந்தக் கணத்தில் டீச்சரின் மனம் அப்பாவின் மீதான காதலால் என் மீது எவ்வளவு அன்பின் மழை பொழிந்து கொண்டிருந்திருக்கும் என்பதை இப்போது நினைத்தாலும் என் ரத்தத்தில் உப்பின் சேர்க்கை மிகுதியாகிறது  

     குறைப் பிரசவத்தில் பிறந்ததாலோ என்னவோ அப்போது மழை மேகங்கள் திரண்டாலே எனக்கு உடலில் நடுக்கம் குடிபுகுந்துவிடும். சளி, இருமலோடு, நெருப்புக் காய்ச்சல் வாட்டி வதைக்கும். மழைக்காலத்தில் என்னை மருத்துவர்கள் தரையிலேயே கூட படுக்க வைக்கக் கூடாது என்பார்கள். அதனால், மழை நாட்களில் அவ்வளவாக குளிக்க வைப்பது இல்லை. அது டீச்சருக்குத் தெரிந்து என்னை உட்காரச் சொல்லியிருக்கிறார். 

     நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அப்பா இறந்து போய்விட்டார். அவருக்கு ஏதோ ஓர் அவசரம். கொஞ்சம் முன்னதாகவே எல்லாவற்றிலிருந்தும் விடைபெற்றுக் கொண்டார். விடைபெறுபவர்கள் எப்போதும் வெறுங்கையோடு சென்றாலும், அவர்கள் சுமந்த பாரங்களை மட்டும் அப்படியே விட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள். அப்பா சுமந்த பாரங்களை அம்மா சுமந்தாள். சில நேரம் சுமக்க முடியாத அளவு பாரம் அதிகமாக அழுத்தும்போது அப்பாவுடைய நினைவுகளை எங்களுக்குக் கடத்துவதன் வழியே அந்தச் சுமையை மறக்கப் பார்த்தாள். அப்படி அவள் கடத்தியவற்றில் ஒன்றுதான் டீச்சருடனான அப்பாவின் அன்பும். அதைக் கொண்டே என் மீதான டீச்சரின் அன்பு குறித்து நெருங்கிச் சென்று பார்க்க முடிகிறது.

     அப்பாவும் அதே பள்ளியில் ஆசிரியராக இருந்தபோதுதான் கயல் டீச்சரின் மீது அன்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அதே நேரம் அது குறித்த தெளிவான தகவல் என்னிடம் இல்லை. அதே போல் அவர்கள் இருவரும் திருமணத்தை நோக்கி ஏன் செல்லவில்லை என்பது குறித்த தெளிவான தகவலும் என்னிடம் இல்லை. அப்பாவுக்கும் அதீத காதலால் ஏற்பட்ட பிரிவாக இருக்கலாம். ஆனால், திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும் டீச்சருடனான அப்பாவின் அன்பு, ரகசிய பரிமாறல்கள் அவர் இறக்கும் வரையில் இருந்திருக்கலாம் என்பதை உணர முடிகிறது. அதே நேரம், அது அம்மாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு, அவர்களைப் பிரித்துவிட்டதாக அவள் நம்பிக் கொண்டிருக்கிறாள். அம்மா சொன்னாள்: “என்னைப் பெண் பார்க்க டீச்சரையும் அப்பா அழைச்சிட்டு வந்திருந்தாங்க. கூட ஒர்க் பண்ணுறவங்க தானேன்னு நானும் சாதாரணமா எடுத்துக்கிட்டேன். டீச்சர் என்னைப் பார்த்துட்டு, அப்பாகிட்ட போய், பொண்ணு நல்லா இல்லன்னு சொன்னீங்க. ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாங்க. நான் நல்லா இருக்கேன்னு சொன்னா டீச்சர் வருத்தப்படுவாங்களோன்னு அப்பா அப்படிச் சொல்லியிருப்பாங்க போல.’’ என்றார். எனக்கு அம்மா சொன்னதைவிட பெண் பார்க்க டீச்சரையே அப்பா அழைத்து போனது ஆச்சரியமாக இருந்தது. அப்போது டீச்சரின் மனம் பறவையைப்போல துடித்துக் கொண்டிருந்திருக்குமோ என்றும் வருத்தமாக இருந்தது. பிறகு, அவர்களுக்குள் பேசிப்பேசி ஏற்பட்ட புரிதலுக்குப் பிறகான நிலையாகவும் அது இருக்கலாம் என்றும் நினைத்துக் கொண்டேன். “ கல்யாணத்துக்குப் பிறகு தான் தெரிந்தது அவர்களுக்குள்ள நெருங்கின பழக்கம் இருக்குன்னு. உள்ளூரில் இல்லாமல் வெளியூர் போகும்போது டீச்சரையும் அப்பா அழைச்சிட்டு வருவாங்க. அவுங்க ரெண்டு பேரும் முன்னால் ஒண்ணா நடந்து பேசிக்கிட்டே போவாங்க. நான் பின்னாலேயே நடந்து போவேன். கோபமா இருக்கும். ஒருமுறை ஹோட்டலில் சாப்பிடப் போனோம். அப்பாவும் டீச்சரும் பக்கத்துபக்கத்து சீட்டுல உட்கார்ந்துகிட்டு, என்னைத் தனியா உட்கார வைச்சிட்டாங்க. அதுவும் இல்லாம டீச்சர் தட்டுல இருந்தத அப்பாவும், அப்பா தட்டுல இருந்தத டீச்சருமா மாத்திமாத்தி எடுத்து வைச்சி சாப்பிட்டாங்க. எனக்குக் கோபம் வந்துது. ஹோட்டல்னுகூட பாக்காம கன்னாபின்னான்னு கத்திட்டேன். அதோட கூட வர்றதுல தொடங்கி எல்லாத்தையும் டீச்சர் விட்டுட்டாங்க’’ அம்மா சாகச மனநிலையிலோடு சொன்னாள். அவள் நம்பிக்கையை நான் சிதைக்கவில்லை. ஆனால், ஆழத்துக்குள் துழாவிப் பார்த்தபோது எனக்கு உதிரிகளாக சில நினைவுகள் இருக்கின்றன. அதன் மூலம் அப்பாவும் டீச்சரும் அவர்களுக்குள்ளான உயிரின் நரம்பை தண்ணீர் தாவரமாக நீளச் செய்துகொண்டே இருந்ததைத்தான் பார்க்க முடிகிறது.

      அம்மா ஒருமுறை தாத்தா வீட்டுக்குப் போயிருந்தார். அப்போது அருகிலேயே இருந்த ஹோட்டல்களை எல்லாம் விட்டுவிட்டு, இரண்டு தெரு கடந்து டீச்சர் வீட்டு வழியே தூரத்திலிருந்த ஹோட்டலுக்கு இரவு சாப்பிடுவதற்காக அப்பா அழைத்துச் சென்றார். அப்போது பார்வை பரிமாறல்கள் பற்றியெல்லாம் எனக்குப் புரியாத வயது. டீச்சர் அவருடைய வீட்டில் நின்றிருந்தாரா, அப்பா அந்த வீட்டைத் திரும்பிப் பார்த்தாரா என்பதெல்லாம் நினைவு இல்லை. அப்பாவோடு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போகிறேன் என்கிற மகிழ்ச்சியோடு ஒற்றைக் காலை ஊன்றி துள்ளிதுள்ளி குதித்துப் போய் வந்தேன் என்பதற்கு மேல் அந்த நினைவில் அர்த்தமில்லை. டீச்சர் வீட்டுக்கு எதிரில் என்னுடன் படித்த பாபுவின் வீடு இருந்தது. அவன் வீட்டுக்கு அடிக்கடி சென்று விளையாடிவிட்டு வருவேன். ஒருநாள் அவனும் நானும் விளையாட்டுக்கு இடையே ஏதோவொரு விவகாரத்துக்காக சண்டை போட்டுக் கொண்டோம். அவனுடைய அம்மா ஓடிவந்து என்னைத் திட்டினார். அதை டீச்சரும் பார்த்தார். எல்லாவற்றையும் மறந்து, மறுநாளும் நான் அங்கு போய் விளையாடிவிட்டு வந்தேன் என்றாலும், அதற்குப் பிறகு அங்கே போக அப்பா அனுமதிக்கவில்லை. பிறகு பாபு என் வீட்டுக்கு விளையாட வந்தான். அதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை. பாபுவின் அம்மா என்னைத் திட்டியதை அப்பாவுக்கு டீச்சர்தான் கடத்தியிருக்க வேண்டும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அதைப்போல நான்காவது படிக்கும்போது குதிரை, புலி, கார், ஹெலிகாப்டர், கப்பல் போன்ற வண்ணப் படங்கள் மட்டும் கொண்ட வெளிநாட்டு ஆங்கிலப் புத்தகம் ஒன்றை அப்பா கொண்டு வந்து கொடுத்தார். கடலளவு விரிந்த கண்களோடு அந்தப் புத்தகத்தைப் புரட்டி அதில் உள்ள படங்களைப் பார்த்தேன். அதுதான் பாடப்புத்தகம் அல்லாது நான் தொட்டுப் பார்த்த முதல் புத்தகமாக இருக்கலாம். இப்போது நினைத்தால் அதுதான் நான் பார்த்த முதல் காதல் புத்தகமாகவும் இருக்கலாம் என நினைக்கிறேன். அது டீச்சரிடம் இருந்துதான் கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். அந்தப் பகுதியில் அவர் வீட்டில் உள்ளோர்தான் வெளிநாட்டில் இருந்தனர். டீச்சர் சொல்லிதான் வெளிநாட்டில் இருந்து அவர் உறவினர்கள் யாராவது அந்தப் புத்தகத்தை வாங்கி வந்திருக்க வேண்டும். புத்தகம்தானே என்று அம்மாவும் விட்டிருக்க வேண்டும். இதிலும் எனக்குச் சந்தேகம் இல்லை. அப்பா இறப்பதற்கு முன்னான கடைசி இரண்டு ஆண்டுகளில், அதாவது நான் ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவர்கள் உயிரின் ரத்த ஓட்டம் குறித்து நெருங்கிப் பார்க்கும் நினைவு எதுவும் என்னிடம் இல்லை

     அப்பா இறப்புக்கு வந்த டீச்சர் எப்படிக் காணப்பட்டார் என்பது குறித்து அம்மாவுக்கு அவ்வளவு தெளிவு இல்லை. “அழுதிருக்கலாம். தெரியல. ஒருவேளை வீட்டிலேயே அழுது முடிச்சிட்டு, இங்க வந்து அமைதியாக நின்னுட்டுப் போயிருக்கலாம். ஆனால், டீச்சருக்குச் செய்த பாவம்தான். நம்ம குடும்பம் இப்ப அழுவுது. டீச்சர் கல்யாணம் பண்ணாமலேயே இருக்க, இருக்க இன்னும் அழுதுகிட்டே இருக்கணும் போல.’’ என்றார். அப்பாவை நினைத்துக் கொண்டோ அல்லது அப்பாவால் மாற்று முடிவுக்குச் செல்ல முடியாமல் இருந்து ஏமாந்து போனது பற்றி நினைத்துக் கொண்டோ, டீச்சர் திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம் என நினைத்தேன். “அப்பாவ நினைச்சிக்கிட்டு இல்ல. ஏதோ தோஷம்னு சொல்லுறாங்க’’ என்று வேறொரு சந்தர்ப்பத்தில் அம்மா சொன்னாலும், டீச்சரின் வீட்டு வழியே எதற்காகவாவது போய் வருபவளாக இருந்தாள். ஒருமுறை சொன்னாள்: “அப்பாவ நினைச்சிக்கிட்டே  டீச்சர் இருக்காங்களான்னு பாக்கலாம்னு அந்தப் பக்கம் போனேன். நல்லாதான் இருக்காங்க. மெழுகுச் சிலை போல’’ அந்தக் காலகட்டத்தில் அம்மா அப்படி அதிகம் முறை டீச்சர் வீட்டு வழியே சென்றாளா அல்லது நான் சென்றேனா என்பது தெரியவில்லை. ஆனால், டீச்சர் அப்பாவின் காதலி எனத் தெரிய தொடங்கிய பிறகு நான்தான் அதிக முறை சென்று வந்திருப்பேன். பெரும்பாலும் மூடியே இருக்கும் அந்த வீட்டை ஏதோ புனிதமான ஒன்றைக் காண்பதைப் போலவும் கிட்டத்தட்ட அப்பாவின் ஆவி அங்கு சுற்றிக் கொண்டிருப்பதைப் போலவும் அதைத் தேடிக் கொண்டு  போவதைப் போலவும் பார்த்துக் கொண்டே போய் வருவேன். சென்னைக்குப் படிக்க வந்து, வேலை பெற்று, திருமணம் முடித்து, சென்னையையே நிரந்தரமாக்கிக் கொண்டாலும் ஊருக்குப் போனேன் என்றால், உடனே அங்கே போய் வருவேன். சில நேரம் அதற்காகவும் ஊருக்குப் போவது உண்டு. ஒரே ஒருமுறை டீச்சரை நேரில் பார்த்து பேசுவது என்கிற முடிவோடு சென்றேன். அவரிடம் எப்படிப் பேசுவது, என்ன பேசுவது என்று பல நாள் பலவாறு யோசித்து, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். `அப்பாவோடு பணியாற்றுனப்ப எடுத்த போட்டோ ஏதாவது இருக்கா டீச்சர். அப்பா ஸ்கூல்ல இருக்காப் போல எங்களிடம் படம் இல்ல’ என்று கேட்கலாம் என நினைத்தேன். ஏதோ காதலைச் சொல்லப் போவதைப் போல இதற்கு ஒத்திகையெல்லாம் பார்த்தேன். `என்னிடம் ஏன் கேட்கணும்’ என்று பதில் வந்தால், `விஜி சார் கிட்டக்கூட கேட்டேன். அவர் இல்லன்னுட்டார்’ என்று பதில் சொல்ல வேண்டும் என்று கூட தயாராகிப் போனேன். ஒத்திகை எப்போதும் நூறு சதவீதம் கைகொடுக்கும் என்று சொல்லிவிட முடியாது.

     டீச்சர் வீட்டின் கதவைத் தட்டியபோது என்னுடைய இதயம் யாரோ சுத்தியல் கொண்டு தாக்குவதுபோல அலறிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்து கொண்டு டீச்சர் வந்தார். எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. கசாப்புக்காரன் ஆட்டை அறுக்கும்போது அதன் ஈரலில் ஏறும் சூட்டைப்போல என் உடலில் சூடேறி நடுக்கத்தோடு நின்றுகொண்டிருந்தேன். அதேநேரம், உண்மையாகவே அப்போது பேசுவதற்கு எனக்கும் டீச்சருக்குமே எந்தத் தேவையும் இல்லாமல்தான் இருந்தது. டீச்சருடன்  அன்பைப் பரிமாற தொடங்கிய காலகட்டத்தில் அப்பா என்ன வயதில் இருந்தாரோ அதில் கொஞ்சம் முன்னவோ பின்னவோ இருக்கக்கூடிய வயதில்தான் அப்போது இருந்தேன். அதனால், என்னை அறிமுகம் செய்துகொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. இறந்த ஒருவன் திடீரென சுடுகாட்டில் விழித்தெழுந்து அவனுடைய காதலியைத் தேடி வந்ததைப்போல நின்றுகொண்டிருந்தேன். டீச்சர் எதுவும் பேசவில்லை. ஆனால், பிரபஞ்சம் இதுவரை காணாத இடியையும் மின்னலையும் மழையையும் அவர் உள்ளுக்குள் சந்திப்பதைப் பார்த்தேன். “நடராஜ் வாத்தியார் பையன் டீச்சர். சும்மா பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’’ என்று கூறிவிட்டு அவரை நீங்கி வந்துவிட்டேன். அதற்குப் பிறகு டீச்சர் வீட்டுக் கதவைத் தட்டவில்லை. என்னுடனான அந்தச் சந்திப்பு டீச்சருக்கு எவ்வளவு ரணத்தைக் கொடுத்திருக்கும் என்பதை அறிவேன். எழும்பூரில் இருந்து சைதாப்பேட்டைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது அவளுடைய விழிகளை ஒரு முறை சந்தித்தேன். அப்போதுதான் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்  விழிகள் பாசம் மறவாத நாய்கள் எனப் புரிந்தது. அவளுடைய சிரிக்கும் விழிகளைப் பார்த்ததுமே என்னுடைய விழிகள் வாலை ஆட்டிக்கொண்டு தாவ ஆரம்பித்துவிட்டன. என்னால் என்னுடைய நாய்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த விழிகள் மீது பாய்ந்துவிடுபவைப் போல துள்ளிக்கொண்டிருந்தன. சட்டென அடுத்த நிறுத்தத்தில் இறங்கி திரும்பிக் கூட பார்க்காமல் வந்து, இரவு முழுவதும் அழுதுகொண்டிருந்தேன். அதற்குப் பிறகு டீச்சருக்கு நேரடியாக ரணத்தைக் கொடுக்காவிட்டாலும், அந்த வீட்டைப் பார்ப்பதான எனதன்பு மட்டும் மாறவில்லை. பொங்கலுக்கு ஊருக்குச் செல்லும்போது, இரவு யாருக்கும் தெரியாமல், அந்த வீட்டின் வெளிக் கதவோரம் புடவையைப் போட்டுவிட்டு வருவதாக அதிகரிக்கவே செய்தது. என் அப்பாவின் இதயம் துடித்துக் கொண்டிருக்கும் இடமாகவும் அது இருக்கும்போது, அங்கு போகாமல், அந்த வீட்டைப் பார்க்காமல் எப்படி இருக்க முடியும்?

     டீச்சரின் இறப்பு குறித்த தகவலை அம்மா சொல்லும் போது, “அவுங்க இறந்தா போலவே தெரியல. புதுப் புடவையில நல்லா, அழகா இருந்தாங்க. சொன்னா நம்ப மாட்ட. அவுங்க கண்ணை மூடி படுத்திருந்தத பாத்தா, அசல் அப்பா போலவே தெரிஞ்சாங்க. என்னால தாங்க முடியல. அழுதிட்டேன்.’’ என்றாள். “அழுதிட்டியா?’’ “ஆமாம் அழுதிட்டேன். என்ன இருந்தாலும் அவுங்க எனக்கு விட்டுக் கொடுத்த உயிர் தான அப்பா’’ என்று அழுதாள்.  எனக்கு டீச்சர் வீட்டை உடனே போய் பார்த்து வர வேண்டும் போல இருந்தது. அது உடனே சென்றுவிட இயலாத தூரம் என்பதால், வண்டியை வேகமாக விரட்டிப் போய் அவளுடைய வீட்டைப் பார்த்துவிட்டு வந்தேன்.

2 Replies to “பார்வையின் கட்டுமானம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.