
அந்துவன் கூட்டத்தில் பெண் பிறப்பதும் ஆனை குட்டி போடுவதும் ஒன்று என கொங்குப் பகுதியில் பொதுவாக சொல்லப்படுவதுண்டு, அத்தனை அரிது அந்துவன் குலத்தில் பெண்கள் பிறப்பது என்னும் பொருளில். ஆனால் அந்துவன் குலச் செல்வியான என் அம்மாவுடன் மேலும் இரு மூத்த சகோதரிகள் இருந்தனர். மூன்று பெண்களும் 7 சகோதரர்களுமாக 10 குழந்தைகள் கொண்ட பெருங்குடும்பத்தில் பரமேஸ்வரி என்னும் என் அம்மா பத்தாவது செல்லப் பெண்.
நிலபுலன்களுடன் ஓரளவு வசதியாக இருந்த குடும்பம், அம்மா பிறந்த பின்னர் மேலும் செல்வச் செழிப்பானதால் அம்மா கடைக்குட்டி செல்லமாக வளர்ந்தார்.
கடந்த மாதம் அம்மா மறைந்தைக் கேள்விப்பட்டு முதல் முறையாக எங்கள் வீட்டுக்கு வந்தார் அம்மாவின் அண்ணன். அவர் மட்டுமே சகோதரர்களில் உயிருடன் இருப்பவர் இப்போது. கடைசியாக 25 வயது இளம் பெண்ணாகப் பார்த்த தங்கையை, 55 வருடங்கள் கழித்து ஒரு கண்ணாடிப் பெட்டியில் சவமாக பார்த்த 96 வயதான அவர் மார்பிலறைந்துகொண்டு ”அய்யோ காஃபி குடிச்ச டம்ளரைக் கழுவக் கூடப் போட விடமாட்டோமே, அப்படிச் செல்லமா இருந்தாளே பாப்பாத்தி’’ என்று கதறினார்.
எங்கள் குடும்பங்களில் அனைவருமே நிறம் மட்டுத்தான். அபூர்வமாகவே வெள்ளைத்தோல் கொண்டவர்களை காணமுடியும். கொங்குப்பகுதியில் நல்ல நிறமுள்ள பெண்கள் என்றால் பிராமணப்பெண் என்னும் பொருளில் பாப்பாத்தி என பெயர் வந்துவிடும். பரமேஸ்வரியாகிய அம்மா நல்ல வெளுப்பு என்பதால் பாப்பாத்தி என்று அழைக்கப்பட்டார்.
அப்படிக் கதறிய என் தாய் மாமனை நான் அன்றுதான் முதன் முதலாக பார்த்தேன். அந்தக் கண்ணீரால் கரைக்க முடியாத கடந்த காலமொன்று குளிர்ந்து விறைத்திருந்த அம்மாவின் உடலுக்கும் அவருக்கும் இடையில் நின்றிருந்திருந்தது. இதன் பொருட்டே அவர் இன்னும் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்தாரோ என்னவோ என்று துக்க வீட்டில் பலரும் பேசிக்கொண்டனர்.
பத்துப் பேரில் மூத்தவரான ஞானம் பெரியம்மாவுக்கு 7 குழந்தைகள். அவருக்கு மூன்றாம் மகன் பிறக்கையில்தான் சில நாட்கள் இடைவெளியில் அம்மாவும் பிறந்திருக்கிறார்கள்.
தாயும் மகளும் ஒன்றாகப் பிரசவிப்பதை, ஏதோ பழைய கதையைச் சொல்லக் கேட்பதுபோல் அம்மா கதையாகச் சொல்லக் கேட்டிருப்போம். அம்மாவின் வாழ்க்கையே புனைவை மிஞ்சும் நிகழ்வுகளால் ஆனதுதான். அக்காள் மகன் துரையும் அம்மாவும் ஒரு சிலநாட்கள் இடைவெளியில் பிறந்தவர்கள் என்பதால் துரை அண்ணன் அம்மாவை ’பாப்பி சித்தி’ என்று பெயர் சொல்லித்தான் அழைப்பார்
பெரியண்ண கவுண்டருக்கும், வெள்ளையம்மாளுக்கும் 1942 பிப்ரவரி 20 அன்று அம்மா பிறந்தார். மிகச் செல்லமாக எந்த வீட்டு வேலையும் செய்யாமல், ராணியைப் போலவே வளர்ந்திருக்கிறார்கள். அக்காலத்திய பெரும்பாலான குடும்பங்கள் போலவே அம்மாவின் குடும்பமும் சாதிப்பற்று மேலோங்கிய குடும்பமாக ஊரில் நல்ல செல்வாக்குடன் இருந்திருக்கிறது.
அம்மா மட்டுமே சகோதர சகோதரிகள் அத்தனை பேரில் பள்ளி இறுதி முடித்து ஆசிரியர் பயிற்சிக்கு சென்றவர்.
அம்மாவின் அப்பா, நான் இப்போது வசிக்கும் இந்த குக்கிராமத்தில் ஒரு பெரிய அரிசி ஆலையில் கணக்கராக இருந்திருக்கிறார். அம்மாவின் ஒரு அண்ணன் பெரும் பொருட்செலவில் இந்தியா முழுவதும் செல்லும் பெர்மிட்டுடன் ஒரு லாரி வாங்கிய போது குடும்பம் எதிர்பாராமல் நொடிக்கத் துவங்கியிருக்கிறது. ஆனால் மீண்டு விடலாம் என்னும் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். லாரி அடிக்கடி பாம்பே சென்று வந்ததால் அந்த அண்ணன் பாம்பேக்காரர் என்று கிராமத்தவர்களால் அழைக்கப்பட்டிருக்கிறார்.
அப்படி பாம்பே சென்ற அவர் ஒருமுறை அங்கே பூரி என்னும் உணவைச் சுவைத்து விட்டு, அந்தப் பதார்த்தத்தைச் செய்யும் முறையையும் கற்றுக் கொண்டு வந்திருக்கிறார். அம்மாவின் ஊரான வேட்டைக்காரன் புதூரில் அப்போது பூரி அறிமுகமாயிருக்கவில்லை. வீட்டு முற்றத்தில் விறகடுப்பு கூட்டி பலர் முன்னிலையில் பூரியை அண்ணன் செய்து காண்பித்ததை அம்மா கதைபோல நீட்டி நீட்டிச் சொல்லுவார்கள். எப்போது பூரி செய்தாலும் அம்மா விவரித்த அக்காட்சி மனதில் வரும்.
அம்மா இப்படி தன் நினைவுகளிலிருந்து பலநூறு சம்பவங்களை கதை போலச் சொல்லுவார். அக்கதைகளின் கையை பிடித்துக் கொண்டு, தான் ஒருபோதும் திரும்பிச் செல்லவே முடியாத இடங்களுக்கு தன் நினைவில் சென்று கொண்டிருந்திருக்கிறார் என்பது புரிய வெகுகாலமாயிற்று. ஒருபோதும் அக்கதைகள் என் அப்பாவின் முன்னிலையில் சொல்லப்பட்டதில்லை.
அதே கிராமத்தில் மாடுகள், குதிரை மற்றும் யானைகளை வியாபாரம் செய்துவந்த ஒருவரின் வீட்டில் தாயும் குட்டியுமாக யானைகள் வந்திருப்பதை வேடிக்கை பார்க்க 10 வயது சிறுமியாக அம்மா சென்றிருக்கிறார். அந்த பெரிய வீட்டின் முற்றத்தில் தாய் யானை, குட்டிக்கு பாலூட்டி கொண்டிருந்திருக்கிறது. குட்டி பாலருந்துகையில் சிந்திய பால் ஒரு சிறு ஓடைபோல வாசலைத்தாண்டி ஓடிக்கொண்டிருந்ததாம். அதை சொல்லுகையில் எல்லாம் அம்மா பத்து வயது சிறுமியாகவே மாறிவிட்டிருப்பார்
பாம்பே அண்ணன் வடநாட்டுப் பயணமொன்று சென்று வந்தபோது ஒரு வைரக்கல்லையும் அக்காலத்தில் சாதாரணக் குடும்பத்தினர் நினைத்துப் பார்க்கவே முடியாத தொகை கொடுத்து வாங்கி வந்திருக்கிறார். அதன்பிறகு அம்மாவின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் நொடித்துப் போயிருக்கிறது. அப்போது பலரும் சொன்னபடியும், நம்பியபடியும் அந்த வைரம் நீரோட்டம் சரியில்லாதது என்றும் அதனால்தான் குடும்பம் நொடித்துப் போனதென்றும் அம்மாவும் நம்பினார்.
அந்த வைரத்தை யாருக்கும் விற்கவும் முடியாமல் பலவருடங்கள் கழித்து மிக மிகச் சாதாரண தொகை ஒன்றிற்கு கொடுத்திருக்கிறார்கள். அப்போது குடும்பம் மீண்டு வர முடியாத அளவிற்கு நொடித்து விட்டிருந்தது
அம்மாவும் ஆசிரியப் பயிற்சி முடிந்து அரசு வேலையும் கிடைத்து ஒரு அரசுப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றத் துவங்கி இருந்தார். வீட்டில் பொருளாதார நிலைமை மாறி இருந்தாலும் வழக்கம்போல செல்லப் பெண்ணாகவே இருந்தார்
இரண்டாவது அக்காவான மீனாட்சி ஒருமுறை அம்மா காபி குடித்த டம்ளரை எடுக்க மறுத்தபோது, கோபித்துக்கொண்டு அக்காவுடன் ஒரு வருடம் அம்மா பேசவே இல்லையாம். இப்போதும் மீனாட்சி பெரியம்மா ’’பிடிவாதக்காரிடி உங்கம்மா’’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகும்.
இன்னொரு பெரியம்மாவான ஞானம் கடும் சுத்தக்காரர், நாங்கள் சிறுமிகளாய் இருக்கையில் அவர் வீட்டுக்கு வந்தாலே அழத்துவங்கி விடுவோம். தலையில் பேன் பார்த்து, ஒட்ட நகம் வெட்டி, கொதிக்க கொதிக்க சுடுநீர் ஊற்றிக் குளிக்க வைத்து இம்சைப்படுத்துவார். உடலே சிவந்துபோய் ஆவி பறக்கும், குளியலுக்கு பின்னர். அம்மா வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தது அந்த இரண்டு பெரியம்மாக்கள் மட்டும்தான்.
அத்தனை செல்லமாய் வளர்ந்த அம்மாவுக்குத்தான், அவர் உயிருடன் இருக்கையிலேயே கடைசிக் காரியங்கள் செய்து, 16 ஆம் நாள் கருமாதியும் அவர் வீட்டில் செய்தார்கள்
நொடித்துக்கொண்டு இருந்த குடும்பத்தில் இரு சகோதரிகளுக்கும், நாலு சகோதரர்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. ஒரு அண்ணன் சாமியாராகி விட்டிருந்தார். பாம்பே அண்ணனுக்கு திருமணம் தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்திருக்கிறது.
பக்கத்து கிராமமான பூச்சனாரியின் ஜமீன் குடும்பமொன்றில் 6 மகள்கள், அனைவருக்கும் வரன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த ஜமீன் குடும்பத்தில் முன்னெப்போதோ நிகழ்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் தற்கொலையின் போது அக்குடும்பத்தில் இனி ஆண்வாரிசு தங்காது என்றும், பெண்கள் அனைவரும் விதவைகளாகவே இருப்பார்கள் என்றும் சாபம் இருந்திருக்கிறது. அதனால் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருந்த பெண்களை அந்த ஜமீன்தார், சாதாரண குடும்பங்களுக்கே கொடுக்க முனைந்தார், அதில் ஒரு பெண்ணான பச்சைநாயகியை அந்த பாம்பே அண்ணன் திருமணம் செய்துகொண்டார்.
பேரழகி அந்த அத்தை. அவரை முதன் முதலில் பார்த்தபோதே அவர் வெள்ளுடையில் விதவையாகத்தான் இருந்தார். தன் கடைசி காலம் வரை எங்களுடன் தொடர்பில் இருந்தார். பச்சை நாயகி அத்தையின் முதல் மகன் பிறந்த இரண்டாவது நாள் இறந்துபோனான். “பழனி முருகனாட்டம் நீள அகலமா இருந்தானே என் மகன், சுடுகாட்டுக்குக் கொண்டு போறப்போ அவனை கையில தூக்கிட்டு வாசல்வழியா நேரா போக முடியாம, கையை சாச்சுத்தானே கொண்டு போனாங்க’’ என்று அழுவார்கள் அடிக்கடி.
மீண்டும் அத்தை நிறை கர்ப்பிணியாக இருக்கையில் பாம்பே அண்ணன் ஒரு விபத்தில் காலமானார். ஒரு பெண் குழந்தையுடன் அத்தையும் அவரின் ஐந்து சகோதரிகளுமே இளம் விதவைகளாத்தான் இருந்தார்கள்.. அவர்களின் ஆண் வாரிசுகளில் ஒரே ஒருவரைத் தவிர பிறர் அனைவருமே மர்மமான முறையில் அல்லது அகாலமாய் மரணித்தார்கள். அவர்களுக்குப் பிறந்த பெண்கள் நலமுடன் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையிலும் ஆண் வாரிசுகள் தங்குவதில்லை. இந்த இணைய யுகத்தில் இது என் குடும்பத்தில் நடப்பதால் மட்டுமே என்னாலும் நம்ப முடிகிறது.
என் அம்மாவை அவர்களின் குடும்பமே மறந்து , கடைசிக் காரியங்கள் செய்து, எங்கள் மகள் இறந்துவிட்டாள் என்று புகைப்படத்துடன் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து விட்டிருந்தனர். எனினும் பச்சை நாயகி அத்தை தூயவெண் பருத்திப் புடவையுடன் நெற்றி நிறைந்த திருநீறு துலங்க அடிக்கடி வீட்டுக்கு வருவார். 7 குழந்தைகளுடன் விதவையாக இருந்த ஞானம் பெரியம்மா, குழந்தைகளே இல்லாத மீனாட்சி பெரியம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாய் எப்போதாவது அம்மாவுடன் பார்க்கப்போகும் பொள்ளாச்சி சுப்பிரமணிய சாமி கோவில் வாசலில் காவியுடுத்திப் பிச்சைக்காரர்களுடன் அமர்ந்திருக்கும் அம்மாவின் சாமியார் அண்ணன், பச்சைநாயகி அத்தை ஆகியோர் மட்டுமே எங்களுக்கு அம்மாவின் குடும்பத்தினருடனான கண்ணிகள்.
மீனாட்சிப் பெரியம்மா அம்மாவுக்கு வலுக்கட்டாயமாக விஷம் அளித்துக் கொல்லப்பார்த்ததை மீனாட்சிப் பெரியம்மாவே சொல்லிச் சொல்லி பலமுறை அழுவார்கள். வஞ்சமெனும் கொடுந்தெய்வம் மனத்தில் குடியேறினால் செய்ய முடிந்த அனைத்தையும் அம்மாவின் குடும்பம் செய்திருக்கிறது.
அம்மாவுக்கு 25 வயதான போது குடும்பம் நொடித்திருந்தாலும் அரசு வேலையும், அழகும், அம்மாவுக்கு நல்ல வரன்களைக் கொணர்ந்து வந்திருந்திருக்கின்றன. எனினும் அம்மா வீட்டினர் ஒரு அரசாங்க வேலையிலிருக்கும் மணமகனே உகந்தவரென்று அபிப்ராயப்பட்டதால் என் அப்பாவை சம்பந்தம் பேச விழைந்திருக்கின்றனர். அம்மாவுடன் ஒப்பிட்டால் பொருளாதார ரீதியாக மிகப் பின்தங்கியவர்கள் அப்பாவின் குடும்பம்.
இரு சகோதரிகள், இரு சகோதரர்களுடன் குடும்பத்தில் மூத்தவராக பல கடமைகள் கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்தாலும் சென்னையில் படித்து அரசுப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்ததால் அப்பாவுக்கு அம்மாவைக் கொடுப்பதாக வெற்றிலை பாக்கு மாற்றி எளிமையாக இரு குடும்பத்தினர் கூடி திருமணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மிக எளிமையாக மூன்று மாதங்களில் நடந்து முடிந்திருக்க வேண்டிய அம்மாவின் திருமணம் எதிர்பாராமல் பெரும் சிக்கலை சந்தித்திருக்கிறது. யார் பக்கம் தவறென்று சொல்லவே முடியாதபடிக்கு அம்மாவின் மொத்த வாழ்வையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டிருக்கிறது ஊழ்.
வெண்முரசில் ’’மாமலைகளைப்போல உங்கள் நெஞ்சின்மேல் பெருந்துயரை தூக்கி வைக்கக் காத்திருக்கிறது ஊழ்’’ என்று சொல்லப்பட்டிருக்கும். ஊழன்றி வேறெதெற்கு இத்தனை வல்லமை இருக்கும்?
அந்த திருமண உறுதிப்பாட்டின் போதுதான் அம்மவுக்கு தெரியவந்திருக்கிறது யானை பாலருந்தி ஓடையாய் பால் வழிந்தோடியது அப்பாவின் வீட்டு வாசலில் என்று. அத்தனை செல்வாக்கோடு இருந்த குடும்பம் என் தாத்தாவின் (அப்பாவின் அப்பா) திருமணத்தைத் தாண்டிய பந்தமொன்றினால் சரிந்திருக்கிறது
அந்தத் தொடர்பு என் தாத்தாவிற்கு அவரது இறுதிக்காலம் வரைக்கும் இருந்தது.
நான் சிறுமியாக இருந்தபோது தாத்தாவுடன் மிகப்பெரிய முற்றமும், விறகு எடைபோடும் தராசும், அடுக்கப்பட்டிருந்த விறகுக்குவியல்களுமாக இருந்த ‘அந்த’ பெரிய ஓட்டு வீட்டுக்கு சென்றது எனக்கு தேசலாய் நினைவிருக்கிறது.
அந்த மாபெரும் தராசுத்தட்டில் உட்கார வைக்கப்பட்டு சிறு துண்டு வெல்லம் எனக்கு அந்த வெற்றிலையால் சிவந்த உதடுகளுடன் இருந்த அம்மாள் அளித்தார்கள். அன்று இரவு என்னைப் பாட்டி ’’அங்கே போவியா போவியா’’ என்று கண்ணீருடன் அடித்தார்கள். அந்த அடிகள் எனக்கானவை அல்ல என்பது புரியவும் பல வருடங்களானது.
பாட்டியின் பிறந்த வீட்டிலிருந்து அனுப்பப்படும் வருஷத்துக்கான நெல்மூட்டை வண்டியும் அந்த விறகுக் கடை வீட்டுக்குத் திருப்பிவிடப்பட்டது. அப்போதைய வாயில்லாப் பூச்சி மனைவிகளில் ஒருவரான பாட்டி, வீட்டு செலவுகளுக்கென நிலக்கடலை உரிக்கவும் , வேப்பமுத்து பொறுக்கவும், வயல்களுக்குக் கூலி வேலைக்கும் போய்க் கொண்டிருந்தார்
அப்பா படித்து ஆசிரியராகி குடும்பம் நிமிரத்துவங்கி இருந்த நேரத்தில், இந்த சம்பந்தமும், அம்மாவின் அரசுவேலையும் பெரும் நம்பிக்கை ஊட்டுவதாகவும், திருமண வயதில் இருந்த இரு அத்தைகளின் எதிர்காலத்திற்கான பிடிமானமாகவும் இருந்திருக்கிறது
நிச்சயதார்த்தம் முடிந்து சில வாரங்கள் கழித்து அம்மாவின் பள்ளியில் நடந்த ஒரு அரசு விழாவில் அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரும், பெரும் செல்வாக்கான பதவியும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்களும் கொண்டிருந்த ஒருவர் அம்மாவை அந்த விழாவில் பார்த்திருக்கிறார்.
அம்மாவுக்குத் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட விவரம் தெரியாத அவர், அம்மாவின் அழகும் எளிமையும் பிடித்திருந்ததால் தன் குடும்பத்தினருடன் அன்றே அம்மா வீட்டுக்கு சென்று பெண் கேட்டிருக்கிறார் உடனடியாக திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
வேகமாக வீழ்ந்து கொண்டிருந்ததால் எதைப் பற்றிக்கொண்டாவது மேலே ஏறி மூச்சு விட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அம்மாவின் குடும்பத்தினர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள விரும்பியிருக்கின்றனர். மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு பற்றிக்கொள்ள ஒரு மரத்துண்டு கிடைத்தால் போதும் என்றிருக்கையில் ஒரு சொகுசுக் கப்பலே வந்தது போல, அவர்களுக்கு அனைத்தையும் கடந்து குடும்பம் நிமிர்தல் என்னும் ஒன்று மட்டுமே மிக முக்கியமானதாக தெரிந்திருக்கிறது.
அம்மாவுக்கு வெற்றிலை மாற்றி நிச்சயம் செய்துவிட்டதைச் சொன்னபோதும் மணமகன் வீட்டார் ’ வெறும் உறுதி செய்தலான அந்த நிகழ்வில் அவர்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, பெண் வீட்டினருக்கு சம்மதமென்றால் உடன் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னபோது அறமென்னும் ஒன்றை அம்மாவின் குடும்பம் மறந்து விட்டிருக்கிறது.
புதிய சம்பந்தமொன்றிற்கு சம்மதம் சொல்லப்பட்டது அம்மாவுக்கு மிகத் தாமதமாகவும், அப்பாவின் குடும்பத்திற்கு மிக மிகத் தாமதமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இது தெரிய வந்தபோது நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதிக்கு சரியாக ஒரு வாரம் இருந்திருக்கிறது
இதை அம்மா திகைப்புடன் எதிர் கொண்டிருக்கிறார்கள். அப்பா குடும்பத்தினர் இதில் சீண்டப்பட்டவர்களாகவும், இழிவு படுத்தப்பட்டவர்களாகவும் உணர்ந்திருக்கின்றனர்.
செல்வாக்கு மிக்க ஒரு குடும்பத்தினரின் தலையீடு, திருமணக்கனவில் இருந்த இரு இ்ளம் உள்ளங்களின் கணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கிறது.
அப்போது திராவிட கட்சியிலும் கடவுள் மறுப்புக்கொள்கையிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த அப்பா தனது நண்பர்களுடன் அம்மா வீட்டிற்குப் பேச்சு வார்த்தைக்குப் போன போது சிறுமைப்படுத்தப் பட்டிருக்கிறார்.
அம்மா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். பலமுறை வீட்டிலிருந்து வெளியேற முயன்று கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கிறார். அப்பா வழித்தாத்தா வறுமையில் இருந்தாலும் ஊரில் நல்ல செல்வாக்கு கொண்டவர். அவரும் இதில் தலையிட்டு உதவியதால், குறித்த நாளுககு முந்தைய இரவு தன் நண்பர்கள் உதவியுடன் அம்மாவை வீட்டிலிருந்து வெளியேறச் செய்து, தன் வீட்டு முற்றத்தில் எளிமையாக மாலைமாற்றி தாலி கட்டி அப்பா திருமணம் செய்துகொண்டார்.
விஷயம் தெரிந்து அந்தப் பெரிய வீட்டினர் எந்த மனவருத்தமும் இன்றி விலகிக்கொண்டனர். ஆனால் அம்மா வீட்டினர் இதில் அவமானப்பட்டு மிக மிகப் புண்பட்டுவிட்டனர். மறுநாளே அம்மாவை இறந்தவளாக அறிவித்து நாளிதழில் விளம்பரம் கொடுத்து வீட்டில் முறையாக நீத்தார் சடங்கும் செய்திருக்கிறார்கள்.
கட்டிய புடவையுடன் எளிமையாக அப்பாவின் வீட்டுக்கு வந்த அம்மாவுக்கு இடப்பட்ட முதல் கட்டளையே இனி பிறந்த வீட்டை நினைக்க கூடாது அங்கு போகக்கூடாது என்பதுதான். அதை கடந்த மாதம் மாரடைப்பால், என் தோளில் சாய்ந்து உயிரை விட்ட தனது 82 வது வயது வரை அம்மா கடைப்பிடித்தார்
தனது பெற்றோர் இறந்த செய்தி வந்தபோது கூடத்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கதறி அழுதுகொண்டிருந்த அம்மாவின் சித்திரம் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.
அந்தத் திருமணம் அப்பாவின் ஆணவத்தின், ஆண்மையின் வெற்றியாக அமைந்தது என்றாலும் ஒரு மிகப்பெரிய சம்பந்தத்தை உதறிவிட்டு அவர்களுடன் இணை சொல்லவே முடியாத இடத்தில் இருந்த தன்னை பரமேஸ்வரி மணம் செய்து கொண்டது அப்பாவை எங்கோ காயப்படுத்தி இருக்கிறது.
வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் மூத்த மகனாக இருந்த அந்த ஆணின் உள்ளுறைந்திருந்த விலங்கொன்று அப்போதிலிருந்து விழித்துக்கொண்டது. அம்மா ஒருபோதும் அந்த இணை வைத்தலை மனத்திலும் கனவிலும் நினைத்து விடக்கூடாது என்பதை இத்தனை வருட தாம்பத்ய வாழ்வில் அப்பா என்கிற பெரும் வன்முறையாளர் கணம் கணமாக நினைத்துக் கொண்டே தான் இருந்தார். தன் எல்லாச்செயல்களிலும் அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அம்மாவை வதைத்துக்கொண்டே இருந்தார்.
அம்மா ஒரு திருமண உறுதிப்பாட்டினை மீறக் கூடாது என்னும் எளிய அறத்தினால் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்திருக்க கூடும்.
ஆனால் கடைசிக்கணம் வரைக்கும் ஒரு தென்னிந்தியப் பெண்ணிற்கு உரித்தான அனைத்து குடும்ப வன்முறைகளும், அநீதிகளும் இழைக்கப்பட்டு, உதறிவிட்டு வந்த அந்த உறவை நினைத்துவிடக்கூடாது என்பதற்காக மேலதிகமாக, சித்ரவதையும் செய்யப்பட்டார். அறத்தின் மீது நின்றமைக்காக அம்மா இழந்ததும் பெற்றதும் ஏராளம்
இதை ஒருபோதும் அப்பாவும் அம்மாவும் வெளிப்படையாகப் பேசிக் கொண்டதில்லை எனினும் அப்பாவின் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த அந்தக் கனல் அவ்வப்போது தழலாடி எங்கள் அனைவரையும் பொசுக்கும்.
அப்பா செய்த அனைத்து இழிவுகளையும் மறு பேச்சின்றி ஏற்றுக்கொண்டு, அவரது எல்லாச் செயல்களுக்கும் மறுப்பேதும் தெரிவிக்காமல் மெளன சாட்சியாக இருந்த அநீதியை அம்மா இறுதிவரை செய்தார். ஒரு போதும் அப்பாவை மீறி ஒரு சொல் அம்மா சொன்னதில்லை, நினைத்ததும் இல்லை
புகுந்த வீட்டின் நான்கு திருமணங்களையும் அம்மா சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார். கழுத்தில், காதில், கைகளில் ஏதும் நகைகள் இன்றி வெறும் கழுத்தாக வந்த அம்மாவுக்கு அப்பா வாங்கிக்கொடுத்த ஒரேொரு பீட்ரூட் கல் நெக்லஸ் பெரும் பிரியத்துக்குரியதாக இருந்தது
கண்ணை விழித்துக் கொண்டு பெரிய பெரிய அடர் சிவப்பு நிற உருண்டைக்கற்களுடன் இருக்கும் அந்த பழமையான நெக்லஸை அம்மா எனக்கு திருமணத்தின் போது கொடுத்திருக்கிறார்கள். அம்மாவின் கழுத்திலும் வீட்டு அலமாரியிலும் இருந்ததை விட அதிக காலம் அது வங்கியில் கடனாக வைக்கப்பட்டிருந்தது.
அம்மாவின் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகி அம்மாவின் பெற்றோர் இறந்து, நானும் அக்காவும், தம்பியுமாக மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னர் அம்மாவின் இரு சகோதரிகளும் மெல்ல மெல்ல வீட்டுக்கு வரத் தொடங்கினர்.
கல்யாண பிரச்சனைகளின் போது அம்மா வீட்டைவிட்டு வெளியேறத் தயாராகிவிட்டதை தெரிந்துகொண்டு வலுக்கட்டாயமாக விஷம் புகட்ட முனைந்த மீனாட்சி பெரியம்மாவும், மகளைப் போல வளர்த்த சின்னத்தங்கையை கொல்ல உடந்தையாக இருந்த ஞானம் பெரியம்மாவும் சொல்லித்தான் எங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்தன. மீனாட்சி பெரியம்மா என் பாதுகாப்பில் இருக்கிறார்கள். சுத்தக்காரரான ஞானம் பெரியம்மா பல வருடங்களுக்கு முன்னர் ஒரு வாரம் வெறும் நீர் மட்டும் அருந்தும் கடும் சஷ்டி விரதம் இருந்து, ஏழாம் நாள் சூர சம்ஹாரம் பார்த்துவிட்டு வீடுதிரும்பி பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு புடவைக் கொசுவத்தை சொருகிக்கொண்டிருக்கையில் அப்படியே மாரடைத்து இறந்துபோனார். விழுந்து கிடந்த அவர் கைகளுக்கு வெகு அருகே விரதம் முடித்துவைக்க வேண்டிய முருகனின் தண்டு பிரசாதம் இருந்தது.
பல கஷ்டப்பாடுகளுக்கிடையில் எங்களை வளர்த்தெடுத்தாலும் அப்பாவின் அநீதிகளுக்கெல்லாம் மெளனமாக இருந்தே உடந்தையாக இருந்தார் என்னும் வருத்தம் அம்மாவின் மீது எங்கள் மூவருக்கும் உண்டு.
அம்மா கடைசி நாள் வரை தனக்கு தானே எல்லா வேலைகளையும் செய்து கொண்டார். விநாயக சதுர்த்திக்கு கொளுக்கட்டைகளை அவராகவே அன்று செய்தார். மறுநாள் செப்டம்பர் முதல்நாள்அன்று இரவு 1 மணிக்கு மூச்சு விட சிரமாயிருக்கிறெதென்று சொன்ன அம்மாவை உடனே காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
அவசரமாய் காரில் ஏற வந்த என்னை ’அந்தப் பக்கம் வந்து உடகாரு தேவி’’ என்றார் அம்மா. அதுவே அவரது வாழ்வில் கடைசியாக பேசிய வாக்கியம் என்பது அப்போது எனக்கும் அவருக்கும் தெரிந்திருக்கவில்லை. வயோதிகத்தினால் ஏற்பட்ட உடல் நலிவினால் அவ்வப்போது மூச்சுவிட சிரமப்படுவார்கள் அப்படியான ஒன்று தான் என அன்றும் நினைத்தேன்.
20 நிமிட பயண தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அப்பாவையும் அழைத்துக்கொண்டு என் மகன் ஓட்ட, காரில் விரைகையில் கண்களை மூடிக்கொண்டு கார் கூரையிலிருக்கும் சிறு கைப்பிடியை பிடித்துக்கொண்டே வந்த அம்மாவுக்குள் நான் பேசியவை எதுவும் சென்று சேரவே இல்லை.
மருத்துவமனையை நெருங்க 5 நிமிடங்கள் இருக்கையில் கைப்பிடியை விட்டுவிட்டு ஒரு கையால் என் இடது கையை இறுகப் பற்றிக் கொண்டு என் தோளில் சாய்ந்துவிட்டார்கள்.
அவ்வளவுதான். 82 வருட வாழ்வும் 55 வருட தாம்பத்யமும் எண்ணிலடங்கா துயர்களும், வேதனைகளும், அனுபவங்களும், நினைவுகளும் நிறைவுற்றன.
அம்மாவின் இறுதிச் சடங்குகளின் போது அவர்களை அலங்கரித்து எங்கோ தூர தேசத்துக்கு அனுப்புவது போல் தயார்படுத்துவதாக நான் நினைத்துக்கொண்டேன். உறுதியாக மின்மயானத்துக்கு வர மறுத்து விட்டேன். அம்மாவின் அலங்கரித்த தோற்றமே என் மனதின் கடைசி சித்திரமாக இருக்கட்டுமென்று.
சிதை ஏற்றுகையில் சொல்லப்பட்டிருக்கிறது முன்பு சுடுகாடாக இருந்த அங்குதான் அம்மாவின் அப்பாவினுடைய உடல் சாம்பலாக்கப் பட்டிருக்கிறதென்று. இந்த விசித்திரமான வாழ்வு நம்மை அழைத்துச் செல்லும் இடங்களை ஒருபோதும் நம்மால் கணிக்கவே முடிவதில்லை.
குழந்தையாக, கன்னியாக, மனைவியாக, அன்னையாக, முதியவளாக 82 நீண்ட வருடங்கள் வாழ்ந்து மறைந்த அம்மாவை மூன்றாம் நாள் ஒரு சிறு மண் சட்டியில் அஸ்தியாக எடுத்துக்கொண்டு பாரதப்புழா ஆற்றில் கரைத்துவிட்டு, கரையோரம் இருந்த நவ முகுந்தனை தரிசித்து விட்டு அம்மாவின் ஆன்மா சாந்திக்கென வேண்டிக்கொண்டு திரும்பினோம். திரும்பும் பயணத்தில் அனைவரின் மனதிலும் இனி அம்மா வெறும் நினைவாகவே எஞ்சுவார் என்பது ஒரு பெரும் பாறை போல அழுத்திக் கொண்டிருந்தது. வாழ்வென்னும் வதையிலிருந்து விலக்குகையில் இறப்பு ஒரு விடுதலையாகத்தான் இருக்கும்.
பாதி தூரத்தைக் கடந்தபோது கார் ஓட்டிக் கொண்டிருந்த என் தம்பி என்னிடம்’’ நீ கொஞ்ச நேரம் முன்னால் சாமி கும்பிடும் போது அப்படியே அம்மாவின் சாயலில் இருந்தே’’ என்றான். நான் பெருமூச்சு விட்டுக் கொண்டேன் அம்மாவின் இடத்துக்கு காலம் என்னை நகர்த்தி விட்டிருக்கிறது
அம்மாவின் இறப்பு நிகழ்ந்த அந்த வாரம் வீட்டிலிருந்த பெரு மரங்களைத் தறித்துக் கொண்டிருந்தோம். அம்மாவின் இறப்பு, மனத்திலும் வீட்டிலும் உருவாக்கி இருந்த வெறுமையை அத்தனை காலம் பசுமைப் பெருக்கினால் வீட்டை மூழ்கடித்து கொண்டிருந்த மரங்களும் அவற்றின் நிழலும் குளுமையும் இல்லாதிருந்தமை மேலும் அதிகரித்திருந்தது.
மிக எளிய இறப்பு அம்மாவுடையது. ஒரு மலர் உதிர்வதைப்போல உதிர்ந்து விட்டார்கள். இப்போது தினம் அம்மாவை நினைத்துக் கொள்கிறோம். மெல்ல மெல்ல வாழ்வின் இயக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கையில் அம்மாவை மெல்ல மறக்கவும் தொடங்குவோம். பின்னர் வருடா வருடம் ஒரு சடங்கு போல நினைவுகூர்ந்து வழிபடுவோம். எனினும் என் தோளில் அம்மாவின் அந்த கடைசிச் சாய்தலின் எடை என் இறுதிக்கணம் வரைக்கும் இருக்கும். இவ்வுலகின் இரக்கமற்ற நெறிகளுக்கும் வஞ்சங்களுக்கும் இடமில்லா மூச்சுலகில் அம்மா அமைதி கொள்ளட்டும்.
48 நாட்கள் கடந்துவிட்டன அம்மா இல்லாமல்.
தறிக்கப்பட்டு வெறுமை சூடி நின்ற மரக்கிளைகளில் செம்புநிறத் தளிர்கள் எழுந்திருக்கின்றன. சருகுகளை உதிரச்செய்யும் புடவியின் அதே நெறிதான் புதுத்தளிர்களையும் எழச் செய்கிறது.
அம்மாவின் ஆசி எங்களுக்கு பரிபூரணமாகக் கிடைத்து, உயிரொளிரும் தளிர்களும் மலர்களும் அவற்றின் குளுமையுமாக வீடு நிறையட்டும்.
தன் தாய்க்கு எழுதப் பட்ட அஞ்சலி என்பதால் அந்தரங்கமாகவும், ஆத்மார்த்தவும் உணர்ச்சிக் கொந்தளிப்பாகவும், அதே சமயம் ஒரு மாபெரும் வாழ்க்கையை நினைவு கூர்வதாகவும், நெஞ்சைத் தொடும் வகையில் இருந்தது இந்தக் கட்டுரை. இதில் பதிவு செய்யப்பட்டுள்ள நுண்தகவல்கள் இந்தியாவின் பல்வேறுவகைப்பட்ட சாதி சமூகங்களும் அதிலுள்ள தனி மனிதர்களும் கடந்த நூறு வருடங்களில் கடந்து வந்துள்ள சிக்கலான பாதையின் ஒரு தோற்றத்தை அளிப்பதாக உள்ளன. கட்டுரையாசிரியர் மனம் அமைதியுற பிரார்த்தனைகள்.
உங்கள் மனம் அமைதியுறட்டும்