- ஜெயந்தி சூரம்மா & தேவமணி சத்யநாதன்
- மல்லவரபு சுப்பம்மா, வேமூரி ஆண்டாளம்மாள், வேங்கட செல்லாயம்மா & காஞ்சனபல்லி கனகாம்பா
- புலவர்த்தி கமலாவதி தேவி எழுதிய ‘குமுத்வதி’ வரலாற்று நாவல்
- பிராட்டம்மா எழுதிய நாவல் ‘சோபாவதி’
- ஆ. ராஜம்மா எழுதிய நாவல் சம்பகமாலினி
- அயிதம் இந்திரா, பாரதி தேவி, காவேரிபாய், தேவமணி சத்யநாதன்
- மல்லாதி வசுந்தராதேவி எழுதிய நாவல் தஞ்சாவூர் பதனம்
- மாலதி சந்தூர், ரேணுகா தேவி
- கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம்
- ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு
- வட்டிகொண்ட விசாலாட்சி
- நிஷ்காம யோகி நாவல்
- வட்டிகொண்ட விசாலாக்ஷி-2
- காலாதீத வ்யக்துலு – டாக்டர். பி. ஸ்ரீதேவி
- காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி
- காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள்
- தென்னேட்டி ஹேமலதா
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
தெலுங்கு புதினப் பெண்கள் ஒரு பார்வை – பகுதி -4

1924 ல் ஆ.பெ. பிராட்டம்மா எழுதிய சோபாவதி என்ற நாவல் வெளிவந்தது. நகானபல்லி சமஸ்தானத்தின் ஆஸ்தான கவி கசிரெட்டி வேங்கட சுப்பாரெட்டி எழுதிய அறிமுக வசனத்தின் மூலம் ‘ஸ்வவிஷயமு’ என்ற தலைப்பில் நாவலாசிரியை எழுதிய முன்னுரையால் பிராட்டம்மாவின் வாழ்க்கை வரலாறு ஓரளவுக்குத் தெரிய வருகிறது. அவருடைய கணவர் ஸ்ரீமான் ஏ நம்மாள்வாரய்யா, கடப்பா மண்டலத்தில் ப்ரொத்துட்டூரு தாலுக்கா தாசில்தாராக பணிபுரிந்தார். ஆந்திர, ஆங்கில, சம்ஸ்கிருத மொழிகளில் இலக்கியப் பண்டிதர். பல புத்தகங்களுக்கு பதிப்பாசிரியராகவும், முன்னுரை எழுதியவராகவும் இருந்த ஸ்ரீமான் தேவேப்பெருமாளய்யா, நம்மாள்வாரய்யாவுடைய தாய்க்கு அக்காவின் மகன் அல்லது தங்கையின் மகன் ஆவார். இலக்கண சாஸ்திரம் எழுதிய சின்னய்ய சூரி அவருடைய உறவினர்களில் ஒருவர். மனைவி பிராட்டம்மா அவருக்குத் தகுந்த விதுஷீமணி.
பதினாறு வயதிலேயே பிராட்டம்மா ‘சோபாவதி’ என்ற நாவலை எழுதியுள்ளார். விதுஷீமணிகள் எழுதிய நூல்கள் பல இருக்கையில் இது வேறு எதற்காக என்று நீண்ட காலம் பிரசுரிக்காமல் இருந்து விட்டார். ஒரு பதிவிரதை ரத்தினத்தின் வரலாறு ஆனதால் பெண்டிர் குலம் அவசியம் படிக்க வேண்டியது என்று கணவர் புத்தகப் பிரசுரத்திற்கு அவரை ஊக்கப்படுத்தினார். கடப்பா மாவட்ட கலெக்டரின் மனைவி துரைசானிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூடக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரசுரம் பூர்த்தி ஆவதற்கு முன்பே அவர் திடீரென்று மரணம் அடைந்தார். அப்போதைக்கே நம்மாழ்வாரய்யாவின் தோழர் அருகில் உள்ள கிராமமான பர்லபாட்டுவில் வசித்த பால கவிரத்னா விருது பெற்றவரான கசிரெட்டி வேங்கடசுப்பையா (1923 செப்டம்பர் 30) இந்த நாவலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். ஏனென்றால் அதில் அவருடைய மரணம் பற்றிய குறிப்பு இல்லை. நாவல் பிரசுரமான போது நாவலாசிரியையின் வயது என்ன என்ற குறிப்பு கிடைக்கவில்லை. குழந்தைகளின் தாய் என்று மட்டும் தெரிகிறது. அதனால் நாவல் எழுதிய காலம் என்ன? எத்தனை ஆண்டுகள் கழித்து பிரசுமானது? என்பவை பற்றி அறிய முடியவில்லை.
கணவரை இழந்த துக்கத்தில் பிராட்டம்மா நாவலை பிரசரிப்பது பற்றிக் கவனம் செலுத்தாததால், கசிடெட்டி வேங்கட சுப்பையாவோடு கூட நம்மாள்வாரய்யாவின் மற்றும் ஒரு கவி நண்பரான மகபூப் மிய்யாஸ் சாஹேபு மற்றும் அவருடைய மைத்துனரும் நாவலை வெளிக்கொணர வேண்டும் என்றும் பரலோகத்தில் உள்ள கணவருக்கு அது மகிழ்ச்சி அளிக்கும் என்றும் எடுத்துக் கூறி பிராட்டம்மாவை சம்மதிக்கச் செய்தனர். 1924 அக்டோபர் ஒன்றாம் தேதியன்று நாவலாசிரியை முன்னுரை எழுதி பிரசுரித்துள்ளார். நாவலை சில மாதங்கள் முன்னால் இழந்த ‘ஜீவித ஈஸ்வரருக்கு’ கண்ணீரால் பாதங்களைக் கழுவி அர்ப்பணித்துள்ளார். அப்போதைக்கே அவர் மதராசு சென்று விட்டாலும் நாவல் பிரசுரம் மட்டும் ப்ரொத்துட்டூரு ஜானகி முத்திராக்ஷர சாலையிலேயே பூர்த்தியானது. இவை அனைத்தையும் கொண்டு பார்க்கையில் அவர் தமிழை மூலமாகக் கொண்ட ராயலசீமா எழுத்தாளர் என்பது தெளிவாகிறது. பின் அவரை சீதா பிராட்டம்மா என்றும் நல்லகுண்டாவில் வசிப்பவர் என்றும் தெலங்காணாவின் முதல் தெலுங்கு நாவலாசிரியை என்றும் கீதாஞ்சலி எந்த ஆதாரத்தோடு கூறியுள்ளார் என்று தெரியவில்லை. (தீரொக்க புவ்வுலு – பின்ன அஸ்தித்வால ஸ்திரீல சாஹித்யம் – பரிச்சய வியாசாலு, 2016, பக்கம் 125).
கும்பகோணமும் தஞ்சாவூரும் இந்த நாவல் நடக்கும் இடங்கள். கதாநாயகி சோபாவதியின் பிறந்த ஊர் கும்பகோணம். புகுந்த ஊர் தஞ்சாவூர். முதல் இரண்டு அத்தியாயங்களில் அந்த இரண்டு ஊர்கள், அந்த இரண்டு குடும்பங்கள், அவர்களிடையே உள்ள வேறுபாடு, தொடர்புகள் போன்றவை அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த இரண்டும் அந்தணர் குடும்பங்கள். கதை நடந்த காலத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே சோபாவதிக்கு பட்டாபிராமோடு திருமணம் நடந்திருந்தது. சோபாவதி பெரியவளாகி நான்காண்டுகள் ஆனது என்ற குறிப்பைக் கொண்டு கதை நடந்த காலத்திற்கு அவளுடைய வயது பதினாறு என்று எண்ணிக் கொள்ளலாம். பட்டாபிராமின் வயது பதினெட்டு. சோபாவதியின் மாமியார் ஜானகம்மா திருமணத்தில் மரியாதைகள் சரியாக நடக்கவில்லை என்று குற்றச்சாட்டினார். அதோடு திருமணத்திற்கு பின் சோபாவதியின் பிறந்த வீட்டிலிருந்து யாரும் வந்து எட்டிப் பார்க்காதபடி பார்த்துக் கொண்டாற். அவளுடைய கொடுமைக்கு பயந்து கணவர் சேஷய்யா பந்துலு கூட மௌனமாக இருந்து விட்டார். இந்தச் சூழ்நிலையில் நாவலில் கதை ஆரம்பமாகிறது.
கதையின் தொடக்கத்திலேயே சோபாவதியின் தந்தை ராமச்சந்த்ரய்யா சம்பந்தியை தீபாவளி பண்டிகைக்கும் மறுநாள் நடக்கும் லக்ஷ்மி நோன்புக்கும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்து கடிதம் எழுதுகிறார். அதற்கு அவரிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ராமச்சந்த்ரய்யாவுக்கு சம்பந்தி அவதானி சேஷய்யா பந்தலு வைசாக மாத கிருஷ்ணபட்ச தசமியன்று நடக்கப் போகும் பெண்ணின் திருமணத்திற்கும் சின்ன மகன் திருமணத்திற்கும் மருமகளை அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று அழைப்பிதழ் கொடுத்து எழுதிய கடிதத்தோடு கதையில் திருப்பம் ஆரம்பமாகிறது. தீபாவளி ஆஸ்வீஜ மாத இறுதி நாள். வைசாக மாதத்தில் திருமணங்கள். அதாவது நடுவில் ஆறு மாத காலம் இருந்தது. சோபாவதியை அழைத்துக் கொண்டு அந்த திருமணங்களுக்கு அவள் தாய் கல்யாணியும் தந்தை ஹயக்ரீவரும் தஞ்சாவூர் சென்றார்கள். திருமணங்கள் நடந்து முடிந்த பின் மீண்டும் திரும்பி புகுந்தவீடு செல்வதற்கு விருப்பப்படாத மகளை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு தாயும் தந்தையும் கும்பகோணம் திரும்பிச் சென்று விட்டார்கள்.
மாமியார் வீட்டில் அவள் எத்தனை நாட்கள் இருந்தாளோ தெரியவில்லை. ஆனால் பிறந்த வீட்டில் பாட்டி பார்வதம்மா மட்டும் வீட்டில் கௌரி பூஜை நடக்கும் சமயத்தில் சோபாவதி இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டே இருந்தாள். சோபாவதிக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்து விட்டன என்று மகனிடம் கூறுகிறாள். புகுந்த வீட்டில் மாமியாரின் கொடுமைகள், கணவனின் அட்டூழியங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்கிறாள் சோபாவதி. கணவன் அவள் அணிந்திருந்த நகைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்று விலைமாதருக்கு அளித்துக் கொண்டிருந்த போதும் சகித்துக் கொண்டு வாழ்நாளைக் கடத்தும் போதே கர்ப்பம் ஆவது மற்றொரு திருப்பம். பிரசவத்திற்கு பிறந்த வீட்டார் அவளை அழைத்துச் சென்று விட்டால் ஒவ்வொரு மாதமும் அவள் தந்தை அவளுக்கு அனுப்பும் பத்து ரூபாய் தனக்குக் கிடைக்காது என்ற கவலையும் அவளுடைய மூக்குத்தியை பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்ற துர்புத்தியும் சேர்ந்து திருச்சிராப்பள்ளியில் உத்தியோகம் என்று சாக்கு வைத்துக் கொண்டு அவளை உடனழைத்துக் கொண்டு பிரயாணமாகி நடுவழியில் ஒரு ஸ்டேஷனில் ரயிலில் இருந்து இறக்கி ஸ்டேஷனின் பின் வழியாக அழைத்துச் சென்று அவளை அடித்து மூக்குத்தியை பிடுங்கிக் கொண்டு காயப்படுத்தி அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடுகிறான். அவர்கள் ரயிலில் இருந்து இறங்கிய ஊர் கும்பகோணம் ஆனதால் யாரோ வழிப்போக்கர் அவளை அவள் தந்தையின் வீட்டில் கொண்டு சேர்ப்பதோடு கதையில் ஒரு கட்டம் முடிகிறது.
பெற்றோரின் ஆதரவில் ஆரோக்கியவதியாக ஆன சோபாவதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒன்பதாம் மாதம் ஆகும் வரும் வரை மருமகள் பிறந்த வீட்டில் நலமாக உள்ளாள் என்ற செய்தியை அறியாத மாமனார், தெரிந்த பின் சம்பந்தி தன்மீது தப்பு சுமத்துவாரோ என்று சந்தேகப்பட்டாலும் போகாமல் இருப்பது தவறாகிவிடும் என்று எண்ணி மகனின் தீய செயல்கள் காரணமாக எது எதிர் வந்தாலும் அதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று கும்பகோணம் செல்கிறார். மாமனாரோடு செல்வதற்கு சோபாவதி கிளம்பியபோது பின்னர் யாரையாவது அழைத்துச் செல்ல அனுப்புகிறேன் என்று சொல்லிச் சென்று விடுகிறார். அண்ணியை அழைத்து வருவதற்கு சின்ன மகனை அனுப்பியதால் கதை மீண்டும் தஞ்சாவூருக்குச் செல்கிறது.
தன் தீய பழக்கங்களுக்கு பணம் வரும் வழிகள் எதுவும் இல்லாததால் பட்டாபிராம் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்தாலும் அனைத்தையும் விலைமகளிருக்குச் செலவழித்து மனைவியை எப்போதும் போலவே அடித்துத் துன்புறுத்தி தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தான். குழந்தைக்கு இரண்டு வயது வந்த போது சோபாவதி மீண்டும் கர்ப்பவதியானாள். மகன் பிறந்தான். மூன்றாண்டுகள் முழுமை அடைந்தன. கணவர் சரியாக பார்த்துக் கொள்ளாததால் ஏற்பட்ட மன வேதனை, அவனுடைய அடிகளால் நலிந்து போன உடல், நோயுற்று படுக்கையில் விழுந்த மாமியாருக்கு சேவை செய்வது போன்றவற்றால் உடல் நலிவுற்ற சோபாவதி படுக்கையில் விழுந்தது கதையின் கிளைமாக்ஸ். கணவரின் அன்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தம், அவனுக்கு சேவை செய்யும் பாக்கியம் இல்லையே என்ற கவலை, கணவருக்கு உபயோகம் இல்லாத வாழ்க்கை எதற்கு என்ற ஏமாற்றம், நிராசை காரணமாக மருந்து எதுவும் வேலை செய்யாத நிலையில் ஐந்தாறு மாதங்கள் கடந்து போயின.
அதுவரையிலேயே இருவர் துரத்தி விடவே ராகமஞ்சரி என்ற மற்றொரு விலைமாதை அடைந்து பட்டாபி, அவருடைய போதனையால் விவேகம் பெற்று மனைவியிடமும் அவளுடைய ஆரோக்கியத்திடமும் சிரத்தையும் ஆர்வமும் காண்பிப்பது, குழந்தைகளை அரவணைப்பது போன்றவற்றைச் செய்ய முன்வந்தான். இந்த மாற்றங்களால் சோபாவதியை மரணத்திலிருந்து காப்பாற்ற முடிந்தது.
உடல் நோய்வாய்ப்பட்ட மகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று வந்த கல்யாணி, உடல் நலம் தேறிவந்த மகளைத் தன்னோடு அழைத்துச் சென்று முழுவதும் குணமடைந்த பின் அனுப்புகிறேன் என்று கூறிய போது சரி என்று அனுப்பிய பட்டாபி பத்து நாட்களிலேயே அவளையும் பிள்ளைகளையும் விட்டு இருக்க முடியாமல் மாமனார் அழைக்காமல் எவ்வாறு செல்வது என்று கவலையோடு இருந்தான். அது போன்ற சந்கோஜங்களையெல்லாம் விட்டுவிட்டு மனைவி, பிள்ளைகளுக்காக மாமனார் வீட்டுக்குச் செல்லும் சுதந்திரத்தை எடுத்துக் கொள்வதற்கு கூட ராகமஞ்சரியின் அறிவுரையே காரணமானது. எது எப்படியானாலும் பட்டாபியிடம் மாற்றம் ஏற்பட்டதற்கு அந்த கட்டம் ஒரு நிச்சயமான அத்தாட்சி. சோபாவதி பொறுமைக்கும், உதைத்த காலையே பிடித்து மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளும் பதிவிரதை தர்மத்திற்கும், கணவனின் தப்புகள் அனைத்தையும் நெஞ்சிலேயே மறைத்துக் கொண்டு தன்னை அவனுக்கு உடன்படுத்திக் கொண்ட கட்டுப்பாட்டிற்கும் கிடைத்த பலன் பட்டாபியிடம் வந்த அந்த மாற்றம். மொத்தத்தில் நான்காண்டு காலத்தில் இந்த கதை நடந்ததை அறிய முடிகிறது.
பெண்கள் கொடுமைக்காரிகளானால் குடும்பத்தில் அமைதி நிலவாது என்று கூறுவதற்கு நாவலாசிரியை இந்த நாவலில் ஜானகம்மா என்ற கதாபாத்திரத்தையும் அவளுடைய மகள் பாத்திரத்தையும் முழுமையாக உபயோகித்துள்ளார். கணவனின் உதாசீனத்திற்கு சோபாவதி ஆளாவதற்கு ஜானகம்மாவின் கொடுமைத்தனம் எவ்விதம் காரணமாகிறதோ, மகனை வளர்த்த விதம், அவனிடம் தன் ஆதிக்கத்தை செலுத்திய விதம் கூட அவ்விதம் காரணம் என்பது கதையம்சத்தில் உள்ள குறிப்பு. அதுமட்டுமல்ல. மகள் கொடுமைக்காரியாவதற்குக் கூட அவள் வளர்ந்த விதமே காரணம் என்ற குறிப்பும் உள்ளது. கணவன் இறந்த பின் மைத்துனரின் வீட்டில் தங்கி வீட்டை சரி செய்யும் சின்ன மாமியார் சுபத்ரம்மாவும் ஓரகத்தி மீனாட்சியும் சோபாவதிக்கு உதவியாக இருந்த பெண்கள். ராகமஞ்சரி விலைமாதுவானாலும் திருமணம் ஆகி சம்சாரத்தில் உள்ள புருஷர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் என்ற நியமம் உள்ள பெண்மணி. இந்த விஷயத்தில் அவள் தன் தாயோடு போராடி ஊரை விட்டுச் சென்று தஞ்சாவூரை அடைகிறாள். பட்டாபி பொய் சொல்லி தன்னை நெருங்கினான் என்ற விஷயம் தெரிந்த பின் அவள் அவனை முழுவதும் ஒதுக்கி வைத்தாள். மனைவி பிள்ளைகளோடு சேர்ந்து வாழ்வதற்குத் தேவையான பண்பாட்டை அவனுக்கு கற்றுக் கொடுத்தாள். மனைவியை அலட்சியம் செய்து தன்னிடம் வந்த ஆண்களிடம் அவர்கள் செல்லும் வழி சரியல்ல என்று எடுத்துக் கூறுவதாலும், குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணுவதாலும் ராகமஞ்சரியிடம் – குரஜாட அப்பாராவு எழுதிய ‘கன்யாசுல்கம்’ நாடகத்தில் வரும் மதுரவாணி, “கெட்டுப் போகாதவர்களைக் கெடுக்காதே என்ற அம்மா சொல்லியுள்ளாள்” என்று சொல்லும் – மதுரவாணியின் அடையாளங்கள் சிறிது தெரிகின்றன.
சாமானிய குடும்பச் சித்திரங்களை கதைப் பொருளாக எடுத்து சகல நற்குணங்களும் நிறைந்து பதிபக்தியில் சிறந்தவளான சோபாவதி கஷ்டங்களை எதிர்கொண்டு வாழ்ந்த முறையை சித்திரித்த இந்த நாவலில் ஆண் பாத்திரங்களின் சித்திரிப்பு சரியாக இல்லை என்ற விமர்சனம் உள்ளது. அவ்வாறு சித்திரிக்காமல் விட்டது பெண்களுக்கு இயல்பான குணம் போலும் என்ற ஐயத்தைக் கூட வெளிப்படுத்தினார்கள் விமர்சகர்கள்.
கனுபர்த்தி வரலக்ஷ்மம்மா எழுதிய நாவல் ‘வசுமதி’
கதை, கட்டுரை, கவிதை முதலான வெவ்வேறு படைப்புகளைச் செய்த கனுபர்த்தி வரலக்ஷ்மம்மா (1896 அக்டோபர் 6 -1978 ஆகஸ்ட் 13) அபராதினி, வசுமதி என்ற சமூக நாவல்களையும் வரதராஜேஸ்வரி என்ற வரலாற்று நாவலையும் எழுதினார். 1959ல் சப்தபதி என்ற தொடர் நாவலை நேரடியாவுக்காக எழுதிய ஏழு பேரில் வரலக்ஷ்மம்மாவும் ஒருவர். அதில் முதல் பகுதியை இவர் எழுதினார். 1963ல் அந்த நாவல் பிரசுரமானது.
1925 ல் எழுதிய நாவல் ‘வசுமதி’. வரலக்ஷ்மம்மாவின் கணவர் அனுமந்தராவின் நண்பர் கிடுகு வெங்கட ராமமூர்த்தி இதற்கு பீடிகை எழுதியுள்ளார். விண்ணப்பம் என்ற பெயரில் கனுபர்த்தி வரலக்ஷ்மம்மா எழுதிய முன்னுரையில் இந்த நாவலின் கருப்பொருளாக அவருடைய பதினான்காவது வயதில் அவருடைய வீட்டிற்கு வந்த ஒரு முதிய பெண்மணி தன் தாய்க்குக் கூறிய கதையை எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார். பிற பெண்டிர் மோகத்தில் அலைந்த கணவனிடம் மகள் பட்ட கஷ்டங்களைப் பற்றி அவர் கூறிய விஷயமே தனக்கு நாவல் எழுதுவதற்கு ஊக்கப்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதி அப்படியே விட்டு விட்டதாகவும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிழிந்து போகும் நிலையிலிருந்த பிரதியை மீண்டும் எழுதி அச்சேற்றியதாகவும் கூறுகிறார். அவ்விதமாக பதினாறு, பதினேழு வயதிலேயே எழுதிய இந்த நாவலை அவர் 1925 ல் தான் பிரசுரிக்க முடிந்தது. அது மட்டுமின்றி சாத்வியான பெண்ணிற்கு விலைமகளோடு திரியும் கணவனால் ஏற்பட்ட கஷ்டங்களையும் அவனிடம் இருந்து தப்பித்துக் கொண்ட வழிமுறைகளையும் நாவலுக்கு கதைப் பொருளாக தேர்ந்தெடுப்பதிலும் வரலக்ஷ்மம்மாவுக்கு ‘பெரிய பிராட்டம்மா’வோடு நிறைய பொருத்தங்கள் தென்படுகின்றன.
வசுமதி நாவலில் கதை தசரா பண்டிகையில் தொடங்குகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் கணவனை இழந்து மகனைப் படிக்க வைத்து, பெண்கள் இருவருக்கும் திருமணம் செய்த மகாலக்ஷ்மம்மா வீட்டில் நடக்கும் தசரா பண்டிகை அது. கதை நடக்குமிடம் விஜயவாடா. மகன் பெயர் ராமசந்த்ரம். பெரிய மகள் ராஜலட்சுமி கணவனோடு பாபட்லாவில் வசிக்கிறாள். சின்ன மகள் வசுமதி. அண்ணன் அவளுக்கு வீட்டிலேயே படிப்பு சொல்லித் தருகிறான். புதிதாக கட்டப்பட்ட ராமமோகன புத்தக பாண்டாகாரத்தில் இருந்து நல்ல புத்தகங்களை எடுத்து வந்து படிக்க வைக்கிறான். அவளுக்கு ஆனந்தராவோடு திருமணமாகி ஐந்தாறு மாதங்கள் ஆகின்றன. இன்னும் குடித்தனத்திற்குச் செல்லவில்லை. குண்டூரில் படித்துக் கொண்டிருக்கும் ஆனந்தராவுக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு இருப்பதாக ராமசந்திரத்திற்கு நண்பன் கிருஷ்ணமூர்த்தி மூலம் தெரிய வருகிறது. அந்த விஷயம் குறித்து தம்பியை கொஞ்சம் எச்சரிக்க வேண்டும் என்று நர்சாராவு பேட்டையில் உள்ள அவனுடைய அண்ணனுக்கு கடிதம் எழுதுகிறான். அந்த கடிதம் எழுதியது 20 -10- 1909ல். நாவலின் இறுதியில் ரங்கூனில் உள்ள ஆனந்தராவுக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி குறிப்பு வருகிறது. அந்த கடிதம் எழுதியது 1914 ல். அதாவது நாவலின் கதை 1909லிருந்து 1914 வரை ஐந்தாண்டு காலம் நடந்ததாகத் தெரிகிறது.
அண்ணன் எடுத்துக் கூறினாலும் ஆனந்தராவு தீய சகவாசத்தில் இருந்து மாறாமல் சொத்துக்களை பிரித்துக் கொடுக்கும்படி அண்ணனோடு சண்டையிடுகிறான். மனைவி குடித்தனத்திற்கு வந்தால் நல்ல வழிக்கு திருந்தி விடுவான் என்ற ஆசையால் வசுமதியை குடித்தனத்திற்கு அழைத்துச் செல்வது, படித்த பெண் ஆணுக்கு அடங்க மாட்டாள் என்று அவளை புத்தகங்களுக்கும் பிறந்துவீட்டுக்கும் கூட தொலைவாக இருக்கும்படி அடக்கி வைப்பது, பதிவிரதை தர்மத்தைக் கடைப்பிடித்து வசுமதி எதிர்ப்பு காட்டாமல் வாழ்வது, கணவன் குண்டூரில் வேறு குடித்தனம் வைத்து அண்ணனிடம் இருந்து பிரித்து வந்த சொத்தை செலவழித்துத் தன் கண் முன்னாலேயே நாகமணியோடு கொண்டிருந்த தொடர்பை தொடர்ந்து கொண்டிருப்பது, அவன் எத்தனை கொடுமை செய்தாலும் அவமதித்தாலும் சகித்துக் கொண்டு சும்மா இருப்பது போன்ற சம்பவங்களோடு நடக்கும் இந்த கதையில் ஆனந்தராவு நாகமணியோடு ரங்கூனுக்குச் செல்வதோடு ஒரு திருப்பம் ஏற்படுகிறது. பிறந்த வீட்டிற்கு வந்து சேர்ந்த வசுமதி நோய் வாய்ப்படுகிறாள். கணவனிடமிருந்து ரங்கூனுக்கு வரச் சொல்லி அழைத்து வந்த கடிதம் மீண்டும் அவளுக்கு உயிரூட்டுகிறது. பயணத்திற்கு ஆயத்தமாவதும் ஆனால் மீண்டும் அவனிடமிருந்து வராதே என்ற கடிதம் வருவதால் நின்று விடுவதும் அண்ணன் வீட்டிலேயே இருந்து போவதும் இறுதியில கணவன் ஆனந்தராவு பச்சாத்தாபத்தோடு மனைவியை தேடிக்கொண்டு ரங்கூனில் இருந்து வருவதும், வசுமதியின் வாழ்க்கைக்கு ஆதரவும் நிம்மதியும் கிடைப்பதும் நாவலின் முடிவு.
கல்வியின் முக்கியத்துவம் அதிலும் பெண் கல்வியைக் குறித்து புதுமையான எண்ணங்களுக்கு இந்த நாவலில் முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரம் ராமச்சந்த்ரம். தங்கையின் படிப்பு பற்றி மட்டுமின்றி தன் மனைவி திருப்புரசுந்தரியின் படிப்பு பற்றியும் கூட அவன கவனம் எடுத்துக் கொள்கிறான். தான் மேல்படிப்புக்கு மதராசுக்கு போகும்போது அவளுக்கு மொல்ல ராமாயணம், ஆந்திர தேச சரித்திரம், ஆரோக்கிய சாஸ்திரம், அபலா சத்சரித்ர ரத்தினமாலா ஆகியவற்றை எடுத்துச் சென்று கொடுக்கிறான். உண்மையில் அவன் திரிபுராவை திருமணம் செய்து கொண்டதே அவள் தன் தங்கையைப் போலவே படித்தவள் என்பதால். வீரேசலிங்கம் பந்தலு காலத்தில் இருந்து பெண் கல்விப் புரட்சியில் பெண்களுக்கு எந்த அளவு படிப்பு இருக்க வேண்டும்? எதுவரை அவர்கள் படிக்கலாம்? போன்ற கேள்விகள் விவாதிக்கப்பட்டுக் கொண்டே வந்தன. படிக்கவும் எழுதவும் வந்தால் போதும், சமையல், வீட்டு நிர்வாகம், குழந்தைகளை வளர்ப்பது – இவற்றுக்கு தொடர்பான அறிவு பெண்களுக்கு இருந்தால் போதும் என்றார்கள். இதெல்லாம் கேட்டும் பார்த்தும் வளர்ந்த வரலக்ஷ்மம்மா, பெண் கல்வி என்றால் அதுமட்டுமல்லவென்றும் கணக்கு, வரலாறு, பூகோளம் போன்ற ஞான விஷயங்கள் எல்லாமே ஆண்களுக்குச் சமமாக பெண்களும் படிக்க வேண்டும் என்றும் அபிப்ராயத்தை ஏற்படுத்திக் கொண்டார். சுயமாக தான் அந்த விதமாகவே சகோதரனின் ஆதரவாலும் உதவியாலும் வீட்டில் இருந்தே பல விஷயங்களை கற்றுக் கொண்டார். அந்த அபிப்பிராயங்களையும் அனுபவங்களனைத்தையும் இந்த நாவலின் கதைப்பொருளில் ஒரு பகுதியாக்கினார். அதனால்தான் ராமச்சந்த்ரம் தங்கைக்கு அனைத்து வித புத்தகங்களும் எடுத்து வந்து கொடுத்து அவற்றை அவள் புரிந்து கொள்வதற்கு உதவி செய்கிறான் என்று கதையில் கற்பனை செய்துள்ளார். அது மட்டுமல்ல. கல்வி என்பது பெண்களின் பண்பாட்டில் உயர்ந்த மாற்றத்தை எடுத்து வரும் என்றும் வரலக்ஷ்மம்மா நம்புகிறார். அதனால்தான் படித்து வரும் வசுமதி, த்ரிபுரா ஆகியவர்களின் பண்பாட்டை விட படிப்பறிவு இல்லாத செல்வந்தர் வீட்டு பெண் கிருஷ்ணமூர்த்தியின் மனைவியின் பண்பாடு குறுகியதாக இருப்பதாகக் காட்டி அது குடும்பத்தில் அமைதியின்மைக்குக் காரணம் ஆகின்றது என்று காட்டி அதற்கு பரிஷ்காரம் அப்படிப்பட்டவர்களை புத்தகங்களைப் படிப்பதற்கு பழக்கப்படுத்துவதே என்பதை எடுத்துரைக்கிறார்.
ராமச்சந்த்ரத்தின் உயிர்த் தோழனான கிருஷ்ணமூர்த்தியின் தங்கை திரிபுரசுந்தரி. வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யக்கூடிய வசதி இல்லாததால் அவர்கள் வருத்தப்பட்டு கொண்டு இருந்தபோது ராமச்சந்த்ரம் அவளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறான். அந்த சந்தர்ப்பத்தில் திருமணங்களில் வரதட்சணை வாங்குவதைக் குறித்து எதிர்ப்பு தெரிவித்துப் பேசுகிறான். வரதட்சணை கொடுக்க இயலாத நிலையில் பெண்களுக்கு திருமணம் ஆகாமல் போவது என்பது அவனை மிகவும் வருத்தப்படுத்துகிறது. அதனால் வரதட்சனை கொடுக்க முடியாத சாமானியரின் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறான். நண்பனின் தங்கை சிறு வயதில் இருந்தே அவனுக்குத் தெரிந்த பெண். படித்தவள் என்பதால் அவளை திருமணம் செய்ய விரும்புகிறான். அந்த விஷயத்தில் தாயோடு போராடுவதற்கும் கூட அவன் பின்வாங்கவில்லை. ஆனால் வரதட்சணை வாங்கக் கூடாது என்ற கொள்கை அனைவரும் அனைத்து காலங்களிலும் கச்சிதமாக கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் அல்ல என்ற புரிதல் கூட அவனுக்கு இருந்தது. கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு பணக்கார குடும்பத்திலிருந்து திருமண சம்பந்தம் வந்தபோது சாதாரண வீட்டுப் பெண்ணை வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தன் லட்சியம் பற்றி கிருஷ்ணமூர்த்தி கவலைப்படுகிறான். மேல்படிப்புக்கு பொருளாதார உதவி இல்லாத கிருஷ்ணமூர்த்திக்கு பெண் கொடுத்து கல்வியும் கற்பிக்கிறோம் என்று வந்த சம்பந்தத்தை அவர்கள் செல்வந்தர்கள் என்ற காரணத்துக்காக மறுப்பது சரியல்ல என்கிறான் ராமச்சந்த்ரம். செல்வந்தர் வீட்டுப் பெண்களின் மீது நமக்கு ஏதாவது துவேஷமா என்று கேள்வி கேட்டு எந்த பெண்ணானாலும் அவர்கள் மேன்மைப்படுத்தப்பட வேண்டியவர்களே என்று கூறி, செல்வந்தர் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது குற்றமல்ல என்று கிருஷ்ணமூர்த்தியை சம்மதிக்கச் செய்கிறான். அவ்விதமாக நவீனகால இளைஞர்களுக்கு ஒரு உதாரணமாக ராமச்சந்த்ரம் பாத்திரத்தை மெருகேற்றியுள்ளார் நாவலாசிரியை.
இந்த நாவலில் வரலக்ஷ்மம்மா, இலக்கியத்தின் சக்தியைக் கூட கதைப்பொருளில் ஒரு பாகம் செய்தது சிறப்பு. ஆனந்தராவின் தீய சகவாசம், பிற பெண்டிர் மீது மோகம், மனைவியிடம் அலட்சியம், பெரியவர்களின் மீது கௌரவமின்மை – இவற்றோடு அனைவரையும் வேண்டாம் என்று உதறி நாகமணியோடு ரங்கூன் சென்ற ஆனந்தராவுக்கு அவள் தன்னை வஞ்சிக்கிறாள் என்று புரியும் போது மனைவிக்கு செய்த துரோகத்தை குறித்த கழிவிரக்கம் ஏற்படுகிறது. உத்தியோகம் கொடுத்து ஆதரித்த சுந்தரராவின் சகவாசமும் உரையாடலும் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும் வேளையில் ‘ஹரிதாசி’ என்ற புத்தகத்தைப் படிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு அவனிடம் இருந்த தீய மாசுக்கள் அனைத்தையும் கழுவிக் கொள்வதற்கு காரணமாவதை கவனிக்கலாம். இந்த நாவலில் கஷ்டம் அனுபவித்த ஹரிதாஸின் இடத்தில் தன் மனைவியை நிறுத்தி எண்ணிக் கண்ணீர் விட்ட ஆனந்தராவு உள்ளத் தூய்மை பெற்று வசுமதியைச் சந்திப்பதற்காக உடனே கிளம்பி வருகிறான். இலக்கியத்திற்கு மனிதனை உயர்ந்த பண்பாட்டின் பக்கம் திருப்பக்கூடிய சக்தி இருக்கிறது என்று அதிக அளவு நிரூபித்துள்ளார் வரலக்ஷ்மம்மா.
பெண் பித்து பிடித்த கணவனால் வசுமதி பட்ட கஷ்டங்கள், அவற்றை எதிர்கொள்வதில் அவளுடைய திறமை, பொறுமை, மன்னிக்கும் குணம் ஆகியவற்றை கதைப்பொருளாகக் கொண்ட இந்த நாவல் பாடநூல் கௌரவத்தையும் பெற்றுள்ளது.
ஆனால் சோபாவதி நாவலில் சோபாவதிக்கு இல்லாத நவீனக் கல்வி இந்த நாவலில் வசுமதிக்கு இருந்தாலும் கணவனுக்கு அடங்கி நடப்பதிலும் சேவை செய்வதிலும் பதிவிரதை தர்மத்தை கடைப்பிடிப்பதிலும் இருவரும் ஒரே மாதிரி நடந்து கொள்வதை கவனிக்க முடிகிறது. அந்த நாவலில் பட்டாபியும், இந்த நாவலில் ஆனந்தராவும் மாறுவது என்பதில் இந்த பெண்கள் இருவருக்கும் எந்த முயற்சியும் இல்லை. அவர்கள் மாறுவது வெறும் அவர்களின் அதிர்ஷ்டத்தின் மீது ஆதாரப்பட்டு இருந்ததே தவிர வேறொன்றும் இல்லை. தம் நடத்தையால் அவர்கள் எத்தனை இம்சை படுத்தினாலும் முணுமுணுக்காமல், திரும்பத் திட்டாமல் மறுக்காமல் பொறுமையோடு எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தது மட்டுமே அவர்கள் செய்த வேலை. இது பதிவிரதைகளின் இலக்கணம். நவீன நாவல் கூட அதற்கே உபயோகப்படுவதும் இதுவரை பெண்களை அடக்குவதற்கு புருஷ தர்ம சாஸ்திரங்கள் செய்த வேலையை தற்போது பெண்கள் மீது பெண்களே செய்வதையும் காண முடிகிறது. பெண்கள் மூலம் பெண்களின் மீது நடக்கும் ஹிம்சைக்கு பெண்களின் சம்மதத்தை சாதித்துக் கொடுத்த வேலையில் பிராட்டம்மா ஆனாலும் வரலக்ஷ்மம்மா ஆனாலும் தமக்குத் தெரியாமலேயே சாதனங்கள் ஆகிறார்கள். ஆணாதிக்கத்தின் மாயாஜாலம் என்பது இதுதான் போலும்.

(Source Magazine – நெச்செலி இணைய மாத இதழ்)
(தொடரும்)