
பாதங்கள் குறுகுறுக்கும்படி போடப்பட்டிருந்த ஆற்று மணற் துகள்கள் பின் காலை வெயிலுக்கு வைரங்கள் பரப்பி வைத்ததைப்போல பளபளத்தன. வாசலைத்தாண்டி உள்ளே கம்பிகளால் போடப்பட்டிருந்த அளிக்கு பின்னால் பிளாஸ்டிக் நாற்காலிகள் இருந்தன. எல்லாம் சரியாக வந்தால் ஒருவேளை எங்களை உள்ளே அனுப்பலாம் என நினைத்திருப்பார்கள் போல. நான் அமர்ந்ததும் அம்மா என்னருகில் அமர்ந்தாள். சுற்றி நின்ற எதிர்காலச் சொந்தக்காரர்களாகும் வாய்ப்புள்ளவர்கள் எங்களை பார்த்துப் புன்னகைத்தபடி நின்றனர். என்னால் வாய்திறக்க முடியவில்லை என்பது தெரிந்ததும் அம்மா என் தொடையில் காலால் தட்டி குறிப்புணர்த்தினாள். நான் புன்னகைத்ததும் அந்த இடம் மங்களகரமான இடம் என நாம் கற்பனை செய்யும்படி மாறியிருந்தது.
“மாப்பிள ரொம்ப பேச மாட்டாரு போலையே! என்ன மாப்புள அப்புடியா?” எனச் சிரித்தார் நான் பார்க்க வந்த பெண்ணின் அப்பா என நம்பக்கூடிய அடையாளங்கள் கொண்ட மனிதர்.
“புது இடம்லா அதான்” என்றாள் அம்மா. எனக்காகப் பேசியிருக்க வேண்டாமென தோன்றவும். நான் பேச முயலவும் அம்மா தொடையில் மீண்டும் இடித்தாள்.
“அது செரி, பிள்ள பெத்த மாரிதான்” என்ற கிழவின் குரல் வீட்டிற்குள்ளிருந்து வந்தது.
என்னைத் தவிர எல்லாரும் “கெக்கே கெக்கே” எனச் சிரித்து அடங்குவதற்குள் நான் அமைதியிழந்திருந்தேன்.
என் முகத்தில் தெரிந்த விகாரமான மாற்றத்தை பார்த்திருக்க வேண்டும் “ராசம், தங்கத்தக் கூட்டிட்டு வா? எனக் குரல் கொடுத்தார் பெண்ணின் அப்பா போன்ற மனிதர்.
வயதாவதற்கு இன்னும் சில வருடங்களாவது காத்திருக்க வேண்டிய பெண் இன்னொரு இளம் பெண்ணைத் தொட்டணைத்தவாறு கூட்டிவந்தாள். ஏறக்குறைய இருவருமே நிலம் பார்த்தபடி நின்றனர். நானும் அதே பாவனையில் அமர்ந்திருந்தேன். அங்கிருந்து எழுந்த மாறுபட்ட குரல்கள் என்னைப் பதறவைத்தன.
“நீ எதுக்கு சீவி சிங்காரிச்சி நிக்க. உன்னையா பாக்க வந்துருக்காரு.”
“அதானே!”
மீண்டும் “கெக்கே கெக்கே” சிரிப்பால் இடம் நிரம்பியது. என் முகத்தைப் பார்த்துச் சிரிப்பதில் என்னையும் அவர்களுடன் சேர்த்துக்கொள்ள முயல்வது வெளிப்படையாகவே தெரிந்தது. சிரிப்படங்கியதும் “இதாம் பெண்ணு. மாப்புள பாத்துக்கிடுங்க” என்றது நான் எதிர்பார்த்திருந்த குரல்.
நான் பார்க்கையில் அவள் கண்கள் நேரடியாக என்னை பார்த்திருந்தன. அவை துணுக்குற வைத்ததில் நாற்காலியில் அமர்ந்தபடியே அசைந்துகொடுத்தேன். அவளாகவே “அப்பா , கொஞ்ச நேரம் பேசிக்கிடுதோம்,” என்றதும் அவர் என்னைப் பார்த்தார். அவள் அங்கிருந்து நகர்ந்ததும் நானும் பின்னாலேயே சென்னறேன். என் நகர்வைக் கவனித்த மற்றவர்களில் அம்மாவைத் தவிர்த்து அனைவரது முகங்களிலும் நமுட்டுச் சிரிப்பு வெளிவந்திருக்க வேண்டும்.
வெயில் வீசிய வீட்டின் பின் புறத்தில் அவள் நின்றதும் நானும் போய் நின்றுகொண்டேன். நிழலான திண்டை பிடித்தபடி அவள் நின்றாள். இரண்டு மூண்று பிளாட்டுகளைத் தாண்டி நீண்ட கரும்பு வயல் பரந்த நிலத்தில் முள்ளம்பன்றிக் கூட்டமென நின்றது. நான் அதையே கவனித்தபடியிருந்தேன். அவள் இருப்பை அந்த நேரத்தில் மறக்க நினைத்து அதன் விரிவை , ஒரமாய் சிணுங்கியபடி ஓடிய வாய்க்கால் நீரின் ஒலியை எண்ணங்களில் நிறைத்தபடி நிற்கையில் அதை துண்டிக்கும்படி அவள் என்னைப்பார்க்காமல் பேசினாள்.
“எல்லாமே எங்க வயல்தான்.”
“ஒ”
“நீஙக் எங்க வேல பாக்குதீங்க.”
“சென்னைல”
“சம்பளம்லாம் எப்புடி மாச மாசமா?”
“ஆமா 31ஆம் தேதி”
“கஷ்டந்தான் இல்லையா?”
“ஆமா சில மாசம் அப்புடி ஆகுறதுண்டு”
“அம்மா கூட இருக்காளா?”
“இல்ல இப்ப நான் மட்டுந்தான். தனியா. ஃப்ரெண்ட்ஸ் கல்யாணமாகி போயிட்டாங்க.”
“முன்னாடியே கல்யாணம் பண்ணிட்டாங்களா?”
“ஆமா ரெண்டு மூணு வருசமிருக்கும்” என்றதும் அவ கேள்வி ஏனோ என்னைச் சீண்டுவதை உணர்ந்தேன்.
“செரி செரி”
“என்னப் புடிச்சிருக்கா?”
“ஆமா” என்றேன். காரணமின்றி அந்த நேரத்தில் அப்பபுடிச் சொல்லி சொல்லியிருக்க எந்தவொரு தேவையும் இருக்கவில்லை.
ஆனால் அப்படிச் சொன்னதும் அவள் “உங்கள நேர்ல பாத்தொடன பிடிக்கல்ல பேசுனதுக்குப் பொறவு புடிச்சிருக்கு” என சேர்த்துக்கொண்டாள். வலக்கையில் சடையைச் சுழற்றியது எனக்கென்னவோ அசௌகரியத்தை உண்டாக்கியது. கைகளை பாக்கெட்டுக்குள் விட்டு கீழ்நோக்கி இழுத்துக்கொண்டேன். கரும்புகள் நெருக்கமாக நின்றும் ஒன்றையொன்று வெறுப்பது போல அவற்றின் இலைகள் வீசிய காற்றுக்குச் சத்தமிட்டன. கூரிலைகள் ஒன்றையொன்று வெட்டிக்கொண்டிருந்தன.
அமைதியாக ஐந்தாறு நிமிடங்கள் கழிந்ததும் “போலாம்” என்று என் அனுமதி கேட்காமல் அங்கிருந்து சென்றாள்.
அம்மாவின் அருகில் அமர்ந்ததும் எல்லாம் செரிதானே என்பது போல தலையாட்டினாள். நான் எதும் அப்பொழுது காட்டிக்கொள்ளவில்லை.
“எல்லாம் செரிதான?” என்றார் மாமா ஆகப்போகிற அவளின் அப்பா.
“பின்னயில்லாம” என்று அம்மா சிரித்தாள்.
“அப்போ மத்த காரியங்கள் பேசுன மாரி”
“அதெல்லாம் ஒரு மாத்தமுமில்ல”
“ராசம் யெலைய போடு” எனக் கத்திவிட்டு என்னை நோக்கி குனிந்து ’வாங்க மாப்ள’ என்றார். நான் சிரித்து குழைந்தது எனக்கே விசித்திரமாக இருந்தது. ஆனால் அதை புரிந்துகொள்ளும் சமயம் எனக்கு அப்போது அளிக்கப்படவில்லை.
நாங்கள் வீட்டிற்குச் சென்று கதவைத் திறக்கும் போது அம்மா உற்சாகமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. நொடிக்கொரு முறை என்னைப் பெயர் சொல்லி அழைத்தாள். டிவியில் பாட்டுச் சேனலை ஓடவிட்டு கண்களை மூடி அமர்ந்திருந்தேன். அம்மா “கடுங்காப்பி போட்டா” என்பதற்கு பதிலளிக்காமல் எதிர்காலம் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். தோளில் தட்டி எழுப்பி “என்னல பேசுனது கேக்கல்லியா? எனக்கென்னான்னு இருக்க” என்றாள் சற்றே கோபமாக. அதற்கும் நான் அமைதியாக இருந்தது அவளை எப்பொழுதும் போல அன்றும் கோபப்படுத்தியிருக்க வேண்டும். ஏதும் பேசாமல் அப்பாவின் மாலையிட்ட புகைப்படத்தின் கீழ் முட்டிக்குள் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.
“அழாதம்மா..” எனச் சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவளை முடியைப் பிடித்து இழுத்து தெருவில் போட்டு மிதிக்கும் ஆத்திரம் எனக்குள் இருந்தது. நான் மீண்டும் “அழாதம்மா , இப்பொ எதுக்கு அழுக. அதையாவது சொல்லிட்டு அழு,” என்றுபடி அவளை உற்றுப்பார்த்தேன். என்னை நேருக்கு நேர் பார்த்தால் தன் அழுகையை நிறுத்திவிடும் வாய்ப்பிருப்பதால் அதைத் தவிர்த்தாள். அவளருகில் சென்று மண்டியிட்டதும் , அவள் முகம் கட்டாமல் “இந்தப் பிள்ளையும் வேண்டான்னு சொல்லப்போற அதான” என்றாள்.
“நான் அந்தப் பிள்ளைய பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு வந்துருக்கேன்” என்றேன்.
“அப்போ எதுக்கு எனக்கிட்ட நாய அவுத்துவிடுக” என கண்களை துடைத்துக்கொண்டாள். தன்னை இயல்பாக்கிக்கொள்ள அவள் தனக்குத்தானே செய்துகொள்ளும் செயலது.
“ஆனா ஒரு மாதிரியா இருக்கு”
“என்ன ஒரு மாதிரியா இருக்குங்கற. அதெல்லாம் ஒண்ணுமில்ல. எல்லாரும் நல்லவங்களா தெரியாங்க” சொல்லிக்கொண்டே கடுங்காப்பியை எடுத்துவந்து தந்தாள்.
“இல்லம்மா…பூத்த பணமிருக்கும் போல. நம்ம வீட்டுக்கு, எனக்கு, உனக்குச் செரி வருமான்னு தோணுகு”
“லேய் , அது உனக்கு பணம். உனக்க பெண்டாட்டிக்கி பணம். வேறென்ன வேணும்”
“அது மொறையில்ல” எனும் போது எனக்கே நான் சொல்வது பொய்யென உறைத்தது.
“நீ வாங்கலன்னு சொன்னா , உனக்கு என்னமாம் செரியில்லான்னு சொல்லுவான். அதுக்குத்தான் மத்ததெல்லாம் பேசுனது. இல்லாம அதவச்சி நானென்ன கொட்டாரம் கெட்டி வாழவா போறேன். நீ உனக்க குடும்பம். அதான் எனக்கு வேணும் மக்கா”
“அப்புடி ஒண்ணு வேண்டாம்மா”
“உனக்குப் புத்தியில்ல. இப்பொ இருக்க பயக்க பூரா இத எதோ சாவான பாவம்னு ஆக்கி வச்சிருக்கீங்க”
“எனக்கு இந்த பிள்ள வேண்டாம்”
“லேய் பைத்தியாரா, அம்ம சொல்லுகத கேளு. இந்த ஒலகத்துலையே உனக்கு எந்த கெடுதியும் நெனைக்காத ஒரே ஆள் நானாக்கும். என்னாண இந்த பிள்ளைய வேணாம்னு சொல்லாத.”
அவள் முகத்திற்கு நேராக “நீ பொய் சொல்லுதம்மா” என்று மாறி மாறி கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் நான் அமைதியாக நின்றேன். பேசாமல் நிற்க நிற்க அவள் என்னை உரசி உரசி வெட்டுவது போல உடல் முழுவதும் எரிய ஆரம்பித்தது. மீண்டும் அவள் அழ ஆரம்பித்தாள். மூர்ச்சை ஆவது போல விக்கித் திணறினாள். பதற்றத்துடன் அதை பார்த்துக்கொண்டிருந்தேன். சொந்த வீட்டை அப்பாவின் குடியால் விற்றுவிட்டு பிச்சைக்காரியைப்போல இறங்கிய அம்மாவின் முகம் அழுது முடித்ததும் அவளுக்கு வந்துவிட்டிருந்தது. அல்லது அதை அவளாகவே தருவித்துக்கொண்டாள். நானாகவே அந்த பெண்ணின் அப்பாவிற்கு போன் செய்தேன். அம்மா பதறி என் கையிலிருந்து போனை பிடுங்கும் முன். அவர் எடுத்திருந்தார்.
“ஹலோ” என்ற குரல் கேட்டதும் ஒரு கணம் தயங்கி பின் “மாமா , நாந்தான் , எனக்கு வேலை பெங்களூருக்கு மாத்தலாக வாய்ப்பிருக்கு. அதான் அதுக்குள்ள நாள குறிச்சி எல்லாம் ஒறப்பிச்சிரலாம்னு பாக்கேன். நீங்க நாள் பாத்துச் சொல்லுங்க,” என்றதும் “செரி மாப்ள , பாத்து நாளைக்குள்ள சொல்லிருகேன்,” என்றார்.
போனை வைத்ததும் அம்மா என்னை கட்டிக்கொண்டாள். உடல் இன்னும் எரிந்து கொண்டுதானிருந்தது.
இரவேறியதும் சாணலுக்கு குளிக்கச் சென்றேன். வெயிலறியாத குளிர்ந்த கரும்பச்சை நிற நீரில் மூழ்கியவாறு காதுகளில் அதன் சிறுமியின் கொலுசையொத்த ஒலியை கேட்டவாறு நீருக்குள் அமிழ்ந்திருந்தேன். தனிமையில் அந்த நீர் என் எரிச்சலை மட்டுப்படுத்தும். எந்தவிதமான எண்ணங்களும் கேள்விகளுமற்ற நிலையில் சாடி நீந்திக் குளிக்க அது அனுமதிக்கும். நீண்ட காரை பெயர்ந்த படித்துறையில் படிகளைத்தாண்டி நீரின் இழுப்பில் மூழ்காத நகராத இலையென அதன் மேல் மிதந்தேன். இருளில் இரு கரைகளிலும் கவிந்த மரங்கள் பச்சையிளந்து கருத்து இலையசைத்து நின்றன. மரங்களுக்கிடையில் தெரிந்த பாதி உதிர்ந்த வெண்மையில் சாம்பல் திட்டுகளுடன் நிலா சல்லடைபோன்ற மேகத்தினுள் ஒளிர்ந்தது. பெயரற்ற பறவையொன்றின் சத்தம் மரங்களின் கிளைக்கு கிளை தாவி மறைந்தது. நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்று தாழ்ந்து சென்றுகொண்டிருந்தது. அதன் மென்மையான அரவணைப்பில் தட்டிக்கொடுப்பில் என்னைக்கொடுத்துக் கிடக்கையில் நீருக்குள் யாரோ பொறுமையின்றி இறங்கும் சத்தம் கேட்டது. சுதாரித்து என்னை சாதாரணமாக்கிப் படியேறி, சோப்பை எடுத்துத் தேய்த்துக்கொண்டிருந்தேன்.
சாணலில் இறங்கும் மனிதனின் உடல் தொப்பையுடன் ஆனால் உறுதியாக இருந்தது. குலுங்காத தொப்பை அங்கு எதோ கருங்கல் ஒன்றை கட்டிவைத்திருப்பதைப்போல பிரமையை உண்டாக்கியது.
ஆடைகளை அவிழ்த்துவிட்டு நீரில் சற்றும் கரிசனமின்றி துணிகளை முக்கி எடுத்து படிக்கல்லில் போட்டுத் தேய்க்க ஆரம்பித்தான். தனிமை கலைந்த வெறுப்பில் அமர்ந்திருந்தேன். வலது கரையோரம் சென்ற வண்டியின் வெளிச்சத்தில் படித்துறையின் ஓரமாய் குந்தியிருந்த மெலிந்த சிறுமியின் உருவம் தெரிந்தது. ஒரக்கண்ணால் பார்த்ததில் அவள் முகம் எலும்பெடுத்து கன்னங்கள் குழிந்து சதைப்பற்றில்லாமல் இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் இடைக்கிடை பார்த்துக்கொண்டனர் ஆனால் பேசிக்கொள்ளவில்லை. துணிகளை பிழிந்து வைத்துவிட்டு அவன் நீருக்குள் இறங்கியதும் நானும் இறங்கிக்கொண்டேன். அவர்களைக் கவனிக்காதது போல காட்டிக்கொள்ள ஏதுவாக முதுகுகாட்டி நீரின் குளுமையை உடலில் உணர்ந்தவாறு தலைமட்டும் வெளியே தெரிய நின்றிருந்தேன்.
கரையோரமிருந்த சிறுமியின் குரல் அசாதாரணமாய் நடுவயதைக் கடந்த பெண்ணின் குரல் போலிருந்தது “வாங்குன கடனெல்லாம் எப்பொ அடைக்கதா உத்தேசம். எதாவது யோசன இருக்கா இல்ல மாடு கணக்கா இருந்துரலாம்னு நெனப்பா” என்றாள். தூரமாய் வந்த வண்டியும் வெளிச்சம் அருகில் வரவும் தலையை மட்டும் திருப்பி அவளை கவனித்தேன் அழுக்கடைந்த அல்லது சாம்பல் நிற சட்டையும் சிவப்பு பாவாடையும் அணிந்திருந்தாள். அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் நீரில் கைகளை அளைந்து உடலில் வழியவிட்டான். கடுப்பானவள் “லேய் கேக்கது காதுல விழுகா இல்லையா மாடு…கருமத்த மாடு” எனக் கத்தினாள்.
அவன் “கேக்கு கேக்கு…” என்று ஒரு முறை முங்கி எழுந்து “எல்லாத்துக்கும் கணக்கிருக்கு” என்றவாறு மீண்டும் முங்கி எழுந்து நீரை கொப்பளித்து துப்பினான்.
“உனக்க கணக்குதான் தெரியுமே. முடிவே இல்லாத கணக்கு. உனக்கு இருக்க ஒரே தெறம எந்த எந்த வழிலலாம் கடம் வாங்கலாம், அதுலர்ந்து எப்புடிலா தப்பிக்கலாம்னுங்கிறது தான” என்றாள். அவள் குரல் கட்டையான ஆண்குரல் போலிருந்தது.
“நான் வாங்கி வாங்கி எனக்க குண்டிக்கடியிலையா வச்சேன்” என்று அவளைப் பார்க்காமல் என்னைப் பார்ப்பது தெரிந்தது. நான் கண்டுகொள்ளாதது போல அமைதியாக நீருக்குள் ஒருமுறை மூழ்கி எழுந்தேன்.
“ஆமா எனக்கு அட்டியலும் ஆரமுமா போட்டு அழகு பாத்தபாரு. இந்தா கழுத்துல கெடக்கே இந்த இத்துப்போனது , இதுதான் கடைசி. மிச்சத்த எல்லாம் பணயம் வச்சி தின்னு தீச்சாச்சு”
“ஜீவிக்கணும்னா அதுக்குண்டான வழிய கண்டுடிக்கணும். தொழில் , யாவாரம்னு வந்தா செலவில்லாம வெறும் சம்பாத்தியம் மட்டும் வருமா” ஆரம்பத்திலிருந்தே அவன் குரல் தணிந்து தவறு செய்து அதற்கான காரணம் சொல்லும் சிறுவனின் குரல் போலவே இருந்தது.
“போட்ட மொதலாவது வரணும்ல. அதுக்குண்டான வழிய ஒருட்ரிப்பாவது செஞ்சிருக்கியா. வாய் கிழியப் பேச மட்டும் வந்துட்ட”
“நீதான கேட்ட”
“திண்டுக்கு முண்டு பேசுனா கோவம் வரும் பாத்துக்க. கட்டிட்டு வரதுக்கு முன்னாலயே இதெல்லாம் செரி செஞ்சிட்டுத்தான இறங்கிருக்கணும்”
என்னைச் சாட்சியாக வைத்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனயை தீர்த்துக்கொள்ள முயல்வது போலிருந்தது அவர்களின் பேச்சு. நான் அமைதியாக நீரில் எழும்பி அமிழும் அலைகளில் அவர்களின் பேச்சை இணைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“உனக்க பேருல தான அந்த வீட்ட வாங்கி போட்டேன்”
“ஆமா அதும் கடத்துலதான கெடக்கு”
“உனக்கு பண்டுவம் பாத்து வாங்குன கடமாக்கும் அது. உனக்க உடம்ப நீ நல்லா பாத்திருந்தா இந்த கடம் வந்துருக்காதுல்ல. தேவயில்லாத செலவு” என்று சலித்துக்கொண்டான்.
“ஆமா எனக்கு சீக்கு வந்து. நானா வருத்தி வச்சதில்ல. நீயும் உனக்க தள்ளையும் சேந்து எனக்கு உண்டாக்கி வச்சது. உனக்க கொட்டாரத்துக்கு வரதுக்கு முந்தி எனக்க தேகத்துல ஒரு ரோகமும் கெடையாது”
“இல்ல தெரியாமத்தான் கேக்கேன்..எனக்கு வெளங்கல?”
“ஆமா உனக்க அம்மதான் காரணம். எல்லாத்துக்கும்.” என்று நிறுத்தி மூச்சு வாங்கினாள். மூச்சு விடுவது சம்பந்தமான எதோ நோய் அவளுக்கு இருந்திருக்க வேண்டும். மெல்ல ஆரம்பித்த செருமல் கொடுமையான இருமலில் போய் நின்றதும். அவன் அமைதியானான். நிலவு இறங்கியிருந்தது. கரு மேகங்கள் சூழ அது நடுவில் தனியாக மிதந்தது. அமைதியாக சில நிமிடங்கள் கடந்ததும் அவன் “பிள்ளயில்லன்னு எனக்க அம்ம சொல்லி பாக்க போயித்தான இந்த ரோகம் உனக்கு இருந்ததே நமக்கு தெரிஞ்சி. அதுக்கு எங்கம்ம என்ன செய்வா” என்றான்.
அவள் அந்த பேச்சை தொடராமல் “அனாவசியமாப் பேசாத. மொத்தமா எவ்வளவு கடமிருக்கும் அத சொல்லி கணக்கு போடுவொம். நீ எவ்வளவுதான் உனக்கு கும்பில போட்ருக்கண்ணுதான் பாப்பமே” என்றாள் பழைய கடுகடுப்பான குரலுடன்.
“அது செட்சுமிக்கு ஒரு பத்து , அணஞ்சபெருமாளுக்கு நுப்பத்தாறு , வெண்ணக்கட செட்டியாருக்கு இருவது. அப்படியே சேத்து மொத்தமா ஒண்ணு , ஒணண்ர வரும்”
“எதையாவாது ஒழுங்கா சொல்லத்தெரியுதா? இதுல ஓவிய மயிரா எல்லா பிசினஸும் செய்யணும்”
“நீ வாங்குன அறுவது. குழுல வாங்குனேல்லா அது என்ன கணக்கும்மோ” எழுந்து படித்துறையில் நின்றவாறு துவட்ட ஆரம்பித்தான். அவன் வயிறு குலுங்காமல் அசைந்து கொடுத்ததை நான் ஓரக்கண்ணால் பார்த்தேன்.
“அது, நான், வாரக்குழுவாக்கும். இப்பொ அசலு எவ்வளவோ களிஞ்சிருக்கும்”
“எவ்வளொ களிஞ்சிருக்கும்”
“அதொரு பத்து”
“மிச்ச அம்பதாயிரம் கெடக்குல்லா”
“நான் தீத்துட்டுத்தான் இருக்கேன்”
“செரி செரி” என்று துண்டை அடித்து உதறினான்.
“இன்னும் அஞ்சி நாளைல கடைய தொறக்கணும். அதுக்கு பலசரக்கு கேஸு எல்லாம் எடுக்கணும். தெரிஞ்ச ஓணரு, அதான் அட்வான்ஸ் இல்லாமல் கடைய தந்தாரு” எனும் போது அவன் குரல் கனத்து ஒலித்தது
“என்னமாஞ்செய்யி” என்றவள் வானத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அவன் “குழுல கேட்டு ஒரு பத்தாயிரம் வாங்கித்தாயேன். இதான் கடைசி” என்றதும் “அதானே பாத்தேன். இந்த சோலியே வேண்டாம்” என்றாள்.
“ஒருத்தன் முன்னேற என்னமாம் சப்போட் உண்டா” என்று நானிருக்கும் திசை பார்த்து சொன்னான்.
“அந்தாளு உனக்க அம்மைக்கி மத்தவனா. உனக்கு சப்போட்டுக்கு வர” என்று சிரித்தாள். அவனும் சிரித்தான். எனக்கும் சிரிக்கத் தோன்றியது.
“நைட்டுக்கு என்னத்த வைக்கப்போற” என்றபடி அவன் அவளை இடித்து தள்ளிக்கொண்டு அவர்கள் வந்திருந்த பைக்கின் அருகில் நகர்த்திச்சென்றான்
“கை காலெல்லாம் நல்லா ஒளையிது” என்றாள் தரையை பார்த்தவாறு
“அப்போ முக்கு பாய் கடைல அம்மைக்கி தோசையும் நமக்கு புரோட்டாவும் பீஃப் வாங்கிட்டு போவமா”
“அத்தைக்கி கோழிப் பொரிப்புன்னா இஷ்டம்” என்று கொஞ்சலாகச் சொன்னாள்.
அவன் “அதையும் வாங்கிருவோம். எனக்க தங்கம்” என்று அவள் கன்னத்தைக் கிள்ளியபடி வண்டியை கிளம்பும் சத்தம் எனக்கு கேட்டது.
நீரில் அமிழ்ந்தபடி “அம்மா சொன்னதெல்லாம் நடக்கட்டும்” என எனக்கு மட்டும் கேட்கும்படி சத்தமாக சொல்லிக்கொண்டேன். ஏனோ மனம் உற்சாகமாக இருந்தது. நீரை கொப்பளித்து மூழ்கி எழுந்தேன். அம்மாவை அந்தப் பெண்ணை, அவள் அப்பாவை , இந்த கணவன் மனைவியை என எல்லோரையும் சில நிமிடங்களாவது கட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
***
எப்போதும் போலில்லாமல் இந்த முறை மெல்லுணர்வுகளையும் புன்னகையையும் தூண்டியது ஆறுதலாயிருந்தது. உங்களோடு நானும் மகிழ்கிறேன், இவான்!