
அங்கு மாதம்தோறும் நடைபெற்றுவரும் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் தான் நானும் கூட்டத்தில் இணைந்து கொண்டேன். கூட்டம் நடைபெற்ற இடம் …. நீங்கள் கட்டாயம் பார்த்திருப்பீர்கள் .பழக்கப்பட்ட ஒரு இடம்தான். இந்தத்தெரு முடியும் இடத்தில்தான் இருக்கிறது. நாள்தோறும் நீங்கள் ஏறிச்செல்லும் பேருந்து ஸ்டாண்ட் பின் இருக்கும் அந்த பாழடைந்த வீட்டினுள், விண் தொட வளர்ந்து, லேசான காற்றிற்கு கூட வேகமாக …இல்லை வேகமாக என்பது இந்த மரத்திற்கு பொருந்தாது…..அபத்தமாக என்பதுதான் சரி, தன் பூதாகார கிளைகளை, இப்படி இந்தப்பக்கம் ஒன்று, மாறாக எதிர்த்திசையில் ஒன்று என்று அசைத்து நிற்கும் அதே புளியமரம் தான்.
இந்தக்கூட்டத்தை நடத்துவது ஒரு தலைவன்…அல்லது தலைவியாகவும் இருக்கலாம் …. என்ன குழப்பமா…. இங்கு இந்தக்கூட்டத்தில் ஆண் பெண் எனும் பேதமில்லை. பேதம் ஒரு தவறான பிரயோகம். அப்படிப்பட்ட மாறுபட்ட நிலையே கிடையாது. ஒரு அருவம் என்பது மட்டுமே… வெறும் காற்றினால் இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு சக்தி. அவ்வளவே… நீங்கள் என்னைப் பார்க்கமுடியாது….நான் உங்களை ஊடுருவிச் சென்றிருக்கிறேன். நீங்கள் உணர்ந்ததில்லை. சில நேரங்களில் கிச்சுகிச்சு மூட்டவும் துணிந்திருக்கிறேன். ஒரு சிலிர்ப்புடன் நீங்கள் உங்கள் உணர்தலை எனக்குக்காட்டி இருக்கிறீர்கள் , நீங்கள் அதை உணராமலே….
இதோ கூட்டம் துவங்கி விட்டது. என்னை இவர்கள் பார்த்ததில்லை. எனக்கும் இவர்கள் பழக்கம் இல்லை… என்ன பேசுவார்கள், நான் என்ன பேசப்போகிறேன் எதிலும் தெளிவில்லை. கடைசியாகக் காயத் தொடங்கியிருக்கும் ஓர் புளிய மரக்கிளையில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கிறேன். காற்றடிக்கும்போது கிளையுடன் சுகமாக ஊஞ்சல் ஆடுவது…. என் சிறு பிராயத்தை அபத்தமாக நினைவு படுத்தியது. இறந்த பின்… இன்று , நேற்று , நாளை என்ற பரிணாமங்கள் இருப்பதில்லை. சிறு வயது அல்லது முதுமை காலம் என்று ஏதுமில்லை. காலங்கள் ஜன்மங்களாகக் கணக்கிடப்படுகின்றன. சரி, தற்போது உள்ள என் நிலைப்படி சரியாகச்சொல்கிறேன் … என் போன ஜன்மம் பற்றி ஏதும் பேசப்படப்போவதில்லை. என் அடுத்த ஜன்மம் பற்றிய பேச்சு தான்.
சரி… கூட்டம் ஆரம்பித்து விட்டது. அதைப்பார்க்க வேண்டும். அங்கு நடப்பதை இப்போது உங்களுக்கும் சொல்கிறேன். என் கதையைப் பின்னர் சொல்கிறேன்.
”எல்லோரும் வந்து விட்டீர்களா….சென்ற கூட்டத்திற்கு முடியும் தருணம் வந்த ஓர் அருவம் போல் இன்றும் நடந்தால்….. இறந்தும் மனிதர்போலவே வாழ்கிறீர்கள் என்று அவப்பேரைத்தான் சுமக்க நேரிடும்”
உத்தேசமாக …தலை அசைப்பதைப்போல் தலை கீழாகத் தொங்கவிடப்பட்ட காற்று பையைப்போல் கிடந்த அனைவரும் ஒரு கலங்கல் கலங்கி மங்கலாகி, பின் மறுபடியும் பை உருவம் கொண்டோம்.
”முதலில் மூன்றாவது முறையாக இறந்து பின் இங்கே வந்திருப்பவர்கள் பற்றி பேசுவோம்” அந்தக்கூட்டத்தில் மிகச் சில அருவங்களே இதற்குப்பொருந்தி நின்றன. அவையும் தங்களுக்குள் ஒரு கூட்டு அமைப்பைக்கொண்டு ஒரே இடமாகக் குவிந்து இருந்தன.
“அது ஏன்…. மூன்று முறைக்கு மேல் இருப்பவர் இங்கே இல்லையா…? “ பக்கம் தொங்கிய அருவத்திடம் மெதுவாக வினவினேன்.
ஹே… முட்டாள் புது அட்மிஷனா… என்று ஒரு இளக்கார அசைதல் தெரிந்தது.
“ஆமாம், நமக்கு நம் விருப்பப்படி பூமியில் பிறக்க மூன்று வாய்ப்புக்கள் கொடுக்கப்படும்.பிறக்க வேண்டிய நேரம் , இடம், பொருள். வேடம்… இப்படி நமக்குப்பிடித்தமானவற்றை நாமே தேர்ந்தெடுக்கலாம். ”
“அதன் பின்….?”
“அதன் பின்…. நமக்கு இவ்வாறு யோசித்து முடிவு செய்ய நேரம் இருக்காது. ஓர் உடலை விட்டுப்பிரிந்த உடன், அடுத்த கணமே எந்த உயிர் உருவாகும் நிலையில் உள்ளதோ அதில் உட்புக வேண்டும்…”
“அப்படிச் செய்யாவிட்டால்…?”
“ உன் பிறப்புக்கான வழி மூடப்படும். நீ வெறும் அருவமாகவே அலையவேண்டிவரும். ஒன்று தெரியுமா… அப்படிப்பட்ட அருவங்கள் நம்மைச்சுற்றி எவ்வளவு உள்ளது அறியமாட்டாய்…. பாவம்… நிர்மூடர்கள்… புகையாக அலைந்து காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்….”
” அது எந்த நாள் வரை…?”
“ காலமில்லாக் காலம் வரை…”
“புரியவில்லை”
“புரிந்து கொள்வாய்”
எல்லோர் கவனமும் சிதைந்து பின் மறுபடியும் அங்கே பேசப்படுவதில் கவனம் சென்றது.
”சரி… உன் விருப்பம் அதுவென்றால்…அப்படியே ஆகட்டும்”
ஏதோ ஒரு அருவத்தின் வேண்டுதல், நிராகரிக்கப்பட இருந்து பின் சில வழிமொழிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேண்டுதல், நிராகரிப்பு, ஆசை, கோபம், மிதப்பு…. இப்படிப்பட்ட உணர்வுகள் மனிதருக்கு மட்டுமல்ல என்றும் புரிந்தது.
“ இதோ பார்… புதிதாக வந்ததுவே…. வேடிக்கைபார்க்காமல் சீக்கிரம் உன் தேர்வு என்ன என்று யோசனையிட்டு வை… நேரம் அதிகமாகக் கொடுக்கப்படாது… மனிதர்களுக்கு தேர்வுத் தாளைப் பார்த்ததும் பதில் மறப்பது போல் நமக்கும் அனைத்தும் மறந்து விட அதிக வாய்ப்புண்டு… நினைவில் கொள்”
எனக்கு எச்சரிக்கை இடப்பட்டது. யோசனையைத்தொடங்கினேன்…. இதில் யோசனை அவ்வளவாக இருக்காது என்று உங்களுக்கும் தோன்றி இருக்கும்.. ஆம், நான் இறப்பதற்கு வெகு சில மாதங்கள் முன் கல்யாணம் ஆகி இருந்தது என் மகனுக்கு. அவனும் , அவன் மனைவியையும் , அவர்கள் குடித்தனம் நடத்தும் பாங்கு, என் கணவர்….இவர்களைப்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
“அடுத்து… யார் இது, புதிதாக அமைப்பில் வந்த உறுப்பினரா…?”
புகை மண்டலம் லேசாக அசைந்து ஆம் போட்டது.
“உன் அடுத்த பிறவியை நீ தேர்வு செய்ய விருப்பமா?”
“ஆம்…”
“சீக்கிரம் சொல்…. என்ன தேர்வு செய்துள்ளாய்…”
“விட்டு வந்த என் குடும்பத்துடன் இருக்க வேண்டும்…”
“முடியாது…. இறைவன் கணைக்குப்படி. உன் வீட்டில் புது வரவு வருவதற்கு நாள் இருக்கிறது…”
“ஆனால்… அவர்களைப்பார்த்தபடி இருக்கவேண்டும்…. “
”உன் வீட்டிலிருக்கும் மாமரம் ஒன்றில் கூடுகட்டி வாழும் காக்கை ஒன்று இன்று புதிய பிறப்பு ஒன்றைக் கொண்டுவர உள்ளது. காக்கையாகப் பிறக்கிறாயா….?”
சரி என்று உடனே சொன்னேன். இதோ…இப்பொழுதே உடலில் இல்லாது இருக்கும் ரோமக்கால்கள் சிலிர்க்கத் தொடங்கிவிட்டது… என் வீடு, என் குடும்பம்….என் இறந்த வாழ்வு…..
மெதுவாகத் தலை சாய்த்து ஒற்றைக்கண்ணால் பார்வை பார்த்தேன். நான் இருந்த வரையில் பச்சைப்பசேல் என்று இருந்த தோட்டம் வாடி,காய்ந்து, களை இழந்து நின்றது. ஏன், நான் இப்போது இருக்கும் மாமரம் கூட பூச்சிகளால் இலைகள் வலையிடப்பட்டு அருவறுப்பான நிலையில் இருந்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு மாற்றங்களா…..!! பின் வாசல் திறக்கப்படவில்லை. யாரும் வெளியில் வரவில்லை. என்ன காரணமாக இருக்கக்கூடும். இப்போதுள்ள தாய்க்கு என் நினைப்பு புரியவில்லை. தன் மற்ற குஞ்சுகள் கூட்டினில் இருக்க , நான் மட்டும் வெளியே கிளையில் நாள் முழுவதும் அமர்ந்திருப்பதன் காரணமும் தெரியவில்லை. கா …கா…. என்று இயன்றவரை அதட்டி என்னை உள்ளே போகச்சொன்னது.. நானும் பேச்சை மதிப்பதுபோல் போக்குக்காட்டி அது பறந்து சென்ற மறு நிமிடம் கிளையில் தவம் தொடங்கினேன்.ஆனால் ஒன்று, இரண்டு…நாட்கள் சென்றன….யாரும் தென்படவில்லை.
இப்போது நான் ஒரு முழுவதுமாக வளர்ந்த காகம். எனக்கு என் தாய் காகம் உணவு எடுத்து வந்து ஊட்டி விடுவதில்லை. நான் பறக்கிறேன். என் கூட்டை கட்டிக்கொள்ளவும் பழகிவிட்டேன். உயிரோடிருந்தவரை ருசி பார்த்திராத அடுத்தவீட்டு , பின் வீட்டு, எதிர் வீட்டு … இன்னும் யார் யார் வீட்டுச் சாப்பாட்டுத் தன்மையும் பிடிபட்டு விட்டது. ஆனால் இது வரை என் வீட்டுச் சாப்பாடு ஒரு நாள் கூட சாப்பிடவில்லை. எங்கே சென்றிருப்பார்கள் இவர்கள் எல்லோரும்…?
அந்த ஒரு நாள் மதியம். நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டிற்குள் ஃபேன் காற்றில் கண்கள் சொருக , மிகவும் நிரம்பிய வயிற்றோடு அமர்ந்து இருந்த ஓர் வேளையில்….
“ பாருங்க…. பின்னால் ஒரு கார்டன் போட,வேண்டிய இடம் இருக்கு….”
இவர்தான்…. இதற்குள் இவ்வளவு வயதானவர் தோற்றமா…? எவ்வளவு நாட்கள் ஆகி இருக்கக்கூடும்..? காக்கைகளுக்கு கடிகாரம் கிடையாது, நாட்காட்டியும் கிடையாது. நாங்கள் பசித்தால் உண்போம். இரை தேடிச் செல்ல முடியாமல் இருட்டு படிந்தால் , கூட்டிற்கு திரும்புவோம்.ஆனால் பசி கணக்கு அறிவோம்.எங்கள் ஞாபக சக்தியும் அபாரம்.இவர் வீட்டில் இந்த நேரம் உணவு தயார் என்பதை உணவின் வாசனைக்கொண்டு அறிந்து கொள்வோம்.எங்களுக்கு உணவு கிடைக்கும் இடத்தையும் கொடுக்கும் மனிதரையும் மறக்கமாட்டோம். இந்த கணக்குகள் இப்போது செயல்பாடாமல் இருந்தாலும் பரபரப்பு மிகுந்து நின்றது. மகனும் வெளியே வருவானோ? உள்ளே பறந்து சென்று பார்த்துவிட்டு வந்தால் என்ன…? இவரிடம் நான் இங்கு இருப்பதை எப்படிச் சொல்வது..?
“கா….கா….க்கா…… “ மிகவும் அதிகக்குரல் எடுத்துக் கரைகிறேன்.
“மா…மரம்…என் ஃவைப் வைத்தது…. ஆள் இல்லை….பூச்சி வந்து புதரா மண்டிகிடக்கு….. என்ன…நீங்க ஃப்ளாட் தானே கட்டப்போறீங்க…. அப்போது மரத்தை எடுத்துடுவீங்க…..” பதில் எதிர்பார்க்காமல் இவர் பேசியபடி இருந்தார். தவறியும் என்னை நிமிர்ந்து பார்க்கவில்லை.
யோசித்தபடி மரத்தை விட்டுப் பறந்து மெதுவாக இவர் தலையில் உரசியவாறு பறக்கிறேன். தொட்டு எவ்வளவோ ஜென்மம் ஆனது போல் தோன்றுகிறது. சிரிப்பு வருகிறது. இதுதான் முதல் ஜென்மம்…. இந்தக்கணக்காவது நினைவில் உள்ளதே……
“சே…. சனியன்…. தலையில் அடித்துவிட்டுப்போகிறது. புதுசா வேறு என்ன சனி பிடிக்கப்போகிறதோ……” இவர் என்னைப்புரிந்துகொள்ளாமல் திட்டித் தீர்க்கிறார்.. மெதுவாக உள்ளே எட்டிப்பார்க்கிறேன்…. தத்தித்தத்தி உள்ளே செல்கிறேன்… வீடு காலியாகக்கிடக்கிறது. நான் அமரும் இடம், நான் படுக்கும் அறை…. என் மகனைத்தேடித் தேடி களைத்துச் சோர்வாக திறந்திருக்கும் ஷெல்பில் அமர்கிறேன்… என் புடவைகள் இருந்த இடம். என் வாசனை, நாப்தலேன் உருண்டை வாசனை, புடவைகளின் மணம்…ஒரு கலவையாக மயக்கத்தைக்கொடுத்தது….
“ அய்யோ…. கதவை மூட வேண்டாம் …நான் உள்ளிருக்கிறேன்…..” கதவு அழுத்தமாக மூடப்பட்டு, என் இந்த ஜன்மம் அதே வீட்டில் மறுபடியும் முடிந்தது.
மறுபடியும் மாதாந்திர கூட்டம்….புளிய மரத்தில் தான்…. ஆனால் நான் முன்பு பார்த்த அருவங்கள் வெகு சிலர். புதியவர்கள் பின் தொங்க , நான் இப்போது முதல் கிளையில்…
“ஓ…. அதற்குள் உன் மறுபிறப்பு முடிந்துவிட்டதா? பிறந்த எண்ணம் நிறைவேறியதா…..? இருக்கும்… உன் வீட்டில் தானே காகமாய் இருந்தாய்… இப்போது என்ன…?”
”இல்லை…. நினைத்தபடி நடக்கவில்லை. நான் இறந்ததும் என் விட்டிலுள்ளவர்கள் காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள். கணவரை சில நொடித்தருணமே பார்க்க முடிந்தது. நான் அவர்கள் அருகில் இருக்கும் பிறப்பாக இருக்கவே ஆசைப்படுகிறேன். “
“அதற்கு நேரம் வரவில்லை. அவர்கள் குடி இருக்கும் தெரு ஓரத்தில் உள்ள ஒரு கறுப்பு நாய் இப்போது குட்டி போடப்போகிறது. நீ வேண்டுமானால் அதைத் தேர்வு செய்யலாம்… உன் குடும்பத்தைத் தொலைவில் இருந்து பார்க்க முடியும்….”
சொல்லி முடிப்பதற்குள் நான் நாய் வயிற்றினுள் நுழைந்தேன்.
“அம்மா….மணி டாகி குட்டி போட்டிருக்கு….” பள்ளி பேருந்து வருவதற்கு காத்திருந்த ஒரு சிறு பெண் என்னைப்பார்த்து கைகொட்டிச் சிரித்தாள். இந்தத் தெரு எனக்குப்பழக்கமானதில்லை. நாங்கள் முன்பு இருந்த வீட்டைக்காலிசெய்துவிட்டு இங்கே வந்திருக்கிறார்கள். மெதுவாகச்சென்று அவர்கள் இருக்கும் வீட்டைக் கண்டு பிடிக்க வேண்டும். அதற்குள் அசந்தர்ப்பமாக அந்த சிறு பெண்ணால் ஆணின் பெயர் சூடப்பட்ட என் அம்மா… அவளிடமிருந்து என்னைக்காக்க வாயில் கவ்வி எடுத்து ஓட்டம் பிடித்தது.
கடவுளே…. என்னை எங்கேயாவது கொண்டு சென்றுவிடப்போகிறது. தப்பித்துச்செல்ல வேண்டும். ஓர் புதர் மறைவில் எனக்குப்பால் கொடுக்க நின்றபோது தப்பிச்செல்ல எண்ணினேன்.
முதல் இரண்டு கால்கள் தரையில் பட்டது. பின்னங்கால்கள் வெறும் காற்றினில் ஆடியது….
புரிந்தது. நான் சப்பாணி நாய்.. நாய் அழுமா… நான் மானிட உடலில் இருந்தபோது பார்த்ததில்லை. ஆனால் இப்போது கண்களில் கோடாக ஒரு வெள்ளி நூலிழை. மறு ஜன்மம் எடுத்தும் தெரு ஓரம் காத்துக்கிடக்கவேண்டும் என்பது விதி. என்றாவது ஓர் நாள் என் மகனைப்பார்க்கமாட்டேனா… அவன் கால்களை லேசாகத் தடவிக்கொடுக்கவேண்டும். அவன் அப்போது என்ன சொல்வான் என்பது இரண்டு பிறப்பு தப்பிய பின்னும் நினைவில் உறைந்து நிற்கிறது…..அம்மா, நீ கையால் பிடித்து விட்டால் ஏதோ ஒரு கண்ணுக்குத்தெரியாத நிம்மதி வருகிறது…. இப்போதும் அப்படி ஓர் உணர்வு தோன்றுமா…. காத்துக்கொண்டிருந்தேன்.
” ஃஹலோ….ப்ளூ க்ராஸ்… ஆமாங்க , தெரு நாய்க் குட்டி போட்டிருக்கு…அம்மா நாய் தண்ணி லாரியில் அடிபட்டு போயே போச்சு… மூணு குட்டிகள்… ஒண்ணு கால் நொண்டி…. க்யாங்…க்யாங்க்னு அலறிகிட்டே இருக்குங்க…. சாவடிக்குத்துங்க…. தூங்கமுடியலே…. ஆமாம்….மினிஸ்டர் வீடுதான்…..வந்து அள்ளிகிட்டு போங்க…..”
அய்யோ….நான் சத்தம் போடவில்லை… என்னை எடுத்துச்செல்ல வேண்டாம்…. கத்தியதை யாரும் சட்டை செய்யவில்லை…
இந்தா….. ஆஃபீசுக்கு போய் இந்த நொண்டி பொணத்தை விஷம் வெச்சு கொண்ணுடனும்….
இதோ மறுபடியும் புளியமரத்தில் தலைகீழாக ஆடுகிறேன். காற்று வேகமாக அடித்து என்னைக்கலைக்கிறது. உள்ளேயும் கலைந்து தான் இருந்தேன். இரண்டு முறை தோற்று விட்டேன். இந்த முறை ….இது கடைசி…. இதில் சாதித்தால் தான்…. இல்லை சென்ற மூன்று பிறவிகளின் நினைவும் சுத்தமாக கரும்பலகைபோல் அழிக்கப்பட்டு, அடுத்த பிறப்பு, நான் நிச்சயம் செய்யாமல் நடக்கும்.
“ஓ…. அதற்குள் வந்துவிட்டாயா…. ஏன் , அந்த ஜன்ம உறவுகள் அலுத்துவிட்டதா… உன்னை மறந்ததாலா அது இல்லை உனக்கும் அவர்கள் நினைப்பு வேண்டாம் என்று தோன்றுகிறதா…?“
“இல்லை, இந்த முறையும் நான் தோல்வி அடைந்துவிட்டேன். அவர்களைப் பார்க்கக்கூட முடியவில்லை…”
மற்ற அருவங்கள் என்னைப்பரிதாபமாகப் பார்த்தது .என்னை விட்டு விலகி தனியே சென்று… பேச ஆரம்பித்தன…. என்னைப்பற்றித்தான்.
“சரி…உனக்கு ஒரு நல்ல சேதி உள்ளது. உன் மருமகளின் வயிற்றில் சிசு உருவாகப்போகிறது. நம் வழக்கப்படி அந்த உடலில் உயிர் புகுந்து கொள்வதற்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. ஆனால் உன்னை அது வரையில் அலைந்து திரிய வைப்பதற்கு எனக்கு அனுமதி இல்லை. வேண்டுமானால் ஒன்று செய்… நீ இன்றே முழுவதும் உருவாகாத சிசு உடம்பில் ஏறிக்கொண்டுவிடு. என்ன… ஒரு கைதியாக வயிற்றில் நீ அதிக நாட்கள் இருக்கவேண்டும்.”
கட்டி முத்தம் கொடுப்பது இங்கே அனுமதிக்கப்படாத ஓர் செயல். இல்லை என்றால் அங்கே உள்ள அனைவரையும் கட்டி முத்தம் இட்டிருப்பேன்.
“போ…. உனக்கு அனுமதி வழங்கப்படுகிறது….”
அந்த மிதமான சூட்டினுள் அமைதியாகப்படுத்திருந்தேன். மகனையும் கணவரையும் பார்க்க முடியவில்லை. குரல் அவ்வப்போது தெளிவில்லாமல் கேட்கிறது. என் புலன்கள் இன்னும் முழுமையாக வளராததால் இருக்கக்கூடும். பொறு…இன்னும் சில மாதங்களே… அனைவரையும் பார்க்கமுடியும்…. மெதுவாக அசைந்து நடனமாடினேன்.
“நாளைக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட்….நினைவிருக்கில்ல…”
நாளை என் மகனும் மருமகளும் என்னை மானிடரில் பார்க்கப்போகிறார்கள்…. கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. துணி ஏதும் போடாமல் இருக்கப்போகிறேன். கால்களை வளைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
” சாரி…. ஃபீடஸ்சைப்பார்த்தால்… பிறவிக்கோளாறு இருக்கும்போல் தெரிகிறது. சில டெஸ்டுக்கள் எடுத்துவிட்டுச் சொல்கிறேன்….”
“ஆமாம், கைகால் வளைந்தபடி இருக்கிறது. மெடிகல் ஃஹிஸ்ட்ரி படி இவ்வாறான குழந்தை மூளை வளர்ச்சியும் இல்லாதிருக்கும். இதற்காக எடுக்கப்பட்ட எல்லா வித சோதனைகளும் பாஸிடிவ். இதற்கு மேல் கேட்கவேண்டாம். உங்கள் மனது சங்கடப்படும். நன்றாக யோசித்து இந்த ப்ரெக்னென்ஸி தொடரவேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்.அந்த முடிவை காலம் கடத்தாமல் எடுக்கவேண்டும். இப்போதே குழந்தை முழுவதும் உருவானார்போல் தெரிகிறது….”
அய்யோ….டாக்டர்….நான் தான் வேண்டுமென்றே கால்களை மடக்கிக்கொண்டு இருக்கிறேன்….உங்கள் லாப் ரிபோர்ட்ஸ் தவறு… வேண்டாம்… என்னைக்கொல்லவேண்டாம்….
அருவம் ஒன்று விண்வெளியல் மிதக்கத்தொடங்கியது வேறு ஒரு உடலை தேடியபடி.
நல்ல கற்பனை. இருக்கும் போது நாம் இல்லாமல் போன தருணத்தில் என்ன ஆகும் என்ற கவலையில் இவ்வாறுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.. உறவுகளை நாம்தான் தாங்குவதான கோபுரத்து பொம்மை எண்ணங்கள்.. ஆனால் உறவுகள் நாம் மறைந்த பின் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அப்படித்தான் இருக்க வேண்டும்.. தேவையற்ற பிடிமானம் இருக்கும்போதோ தொல்லைதான்.. அவரவர் வாழ்வு அவரவர் வாழ்தல் அந்த அந்தக் கணத்தில் .. அதுவே நிறைவு.. வாழ்த்துகள்..