ஒளியின் நிழல்

கலைச்செல்வி

“நான் மிகவும் களைத்துப் போய் விட்டேன்”

“களைப்பை விட அதிகம் மலைத்து போய் விட்டாய்” 

“ஏன்.. எதற்கு..? என் மகன்கள் தொட முடியாத உயரங்களையெல்லாம் தொட்டு விட்டார்கள் என்ற திருப்தியிலா…?”

காந்தி மெலிதாக சிரித்தார். “நீயும் உன் மகனும் உயரமென்று எதை கருதிக் கொள்கிறீர்கள் கஸ்துார்?” மலஜலம் கழிப்பதற்கான குழியை தோண்டிக் கொண்டே பேசினார். ”ஒன்றரை அடிக்கு தோண்டப்படும் சதுரக்குழிகள்  உபயோகத்துக்கு பிறகு மண் கொண்டு மூடப்படுவதால் அவற்றில் ஈக்கள் மொய்ப்பதில்லை. துர்நாற்றமும் வருவதில்லை.” 

“அதுசரி… உங்களுடைய நீள அகல உயரங்களெல்லாம் வேறு வேறு அல்லவா?” வெடுக்கென்று வந்து விழுந்தன கஸ்துாரின் வார்த்தைகள். 

“கஸ்துார்… ஏன் கோபம் கொள்கிறாய்? கடந்த காலத்தை ஒருபோதும் மீட்க முடியாது அல்லவா?” மூத்தமகன் ஹரிலால் இந்தியாவுக்கு கப்பலேறி விட்டது குறித்து மனைவிக்கு மாறாத மனக்குறை என்பதை அவரும் அறிந்திருந்தார். 

“நிகழ்காலத்தில் அதை சரி செய்வதன் மூலம் கடந்த காலத்தை மீட்கலாம்”

ஆனால் அதற்கு முதலில் நான் அதை பிழையென்று உணர வேண்டுமே… வாயோடு வந்த வார்த்தைகளுக்கு வெகு கவனமாக அவர் ஓசை கொடுக்கவில்லை. அவர் மண்வெட்டியை ஓரமாக சார்த்தி விட்டு கைகளை கழுவிக் கொண்டு வந்த பிறகும் கஸ்துார் அதே இடத்தில் நின்றிருந்தார். பிரச்சனை ஆரம்பித்து விடுமோ என்று பயந்தவருக்கு கைக்கொடுப்பதுபோல நண்பர் பிரணஜீவன்மேத்தா திடீரென்று பிரச்சன்னமானது காந்திக்கு உற்சாகத்தைக் கொடுத்தாலும் அதை அதிகம் வெளிக்காட்டாதவராக, “வாங்க மேத்தா…” என்றார். ஹரிலாலுக்கும் அவர் தகப்பனாருக்குமிடையே நடந்துக் கொண்டிருக்கும் மௌனப் பூசலை அவர் அறியாதவர் அல்ல என்றாலும் தம்பதிகள் இருவருக்குமே விவாதத்தை மேற்கொண்டு தொடர விருப்பம் இருக்கவில்லை. 

“இன்றைக்கு நீங்க கொஞ்சம் சத்தமா பேச வேண்டியிருக்கும் மேத்தா…” 

ஏனென்று புருவத்தை உயர்த்திய மேத்தா தச்சு வேலைக்காக வெட்டப்பட்டு விழக் காத்திருக்கும் மரத்தை கண்டதும் “சரிதான்…” என்று புன்னகைத்தார். 

தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க் நகருக்கு அருகில் சுமார் ஆயிரத்துநுாறு ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட அந்த பண்ணையை  காந்தியின் நண்பர் ஹெர்மான்காலன்பாக் வாடகையின்றி உபயோகித்துக் கொள்ள அனுமதித்திருந்ததையடுத்து அங்கு அடிப்படைக் கட்டுமானப்பணிகள் நடந்துக் கொண்டிருந்தன. அதிர்ஷ்டவசமாக குன்றிலிருக்கும் பெருங்கற்கள் கட்டுமானத்திற்கேற்ற உறுதியுடனிருந்தன. எறும்புகள் புற்றை எழுப்புவதுபோல அந்நிலம் சீராக்கப்பட்டு வீடுகள் எழுப்பப்பட்டன. செலவு அதிகம் பிடிக்காத வளைவுத் தகடுகளைக் கொண்டு கூரை அமைத்துக் கொண்டனர். கதவு, சன்னல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் மரப் பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துக் கொண்டனர்.  நண்பர்களும் ஆதரவாளர்களும் மெத்தைகள், போர்வைகள், பாத்திரங்கள், பழங்கள் என அவரவருக்கு முடிந்த உதவிகளை செய்தனர். காந்தியின் குடும்பத்தார், தம்பி நாயுடுவின் குடும்பம், காலன்பாக் மற்றும் அங்கு வந்து சேர தொடங்கிய சாத்வீக எதிர்ப்பாளர் சிலரின்  குடும்பங்கள் என மனிதர்கள் புழங்கத் தொடங்கியபோது அது குடியிருப்பு பூமி என்றாயிற்று. காந்தி தனது ஆதர்ச நாயகரான ரஷ்ய இலக்கியவாதியும் தத்துவவாதியுமான டால்ஸ்டாயின் பெயரை அந்த பண்ணைக்கு சூட்டியிருந்தார்.

“மோகன்தாஸ்…சத்தியாகிரகிகளுக்கு பிழைப்புக்கான ஊதியமும் தங்குவதற்கான இடமுமாக இந்த பண்ணை மிகவும் நல்ல ஏற்பாடுதான்” 

“நம்முடைய அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்துக் கொள்பவர்களின் குடும்பத்தாரைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கு அல்லவா?”

போர்பந்தரில் பிறந்து ராஜ்கோட்டில் வளர்ந்த திவான் குடும்பத்தை சேர்ந்தவரான காந்தி மரபுகளையும் சமூகத்தையும் மீறி இங்கிலாந்தில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்தார்.  ஆனால் பெருமைமிக்க அக்கல்வியைக் கொண்டு வெற்றி பெற்ற வழக்கறிஞராக ராஜ்கோட்டிலும் பம்பாயிலும் அவரால் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இயலவில்லை. அதேசமயம் சந்தர்ப்பவசமாக தென்னாப்பிரிக்கா சென்றவர் டர்பனில் வெற்றிகரமான வழக்கறிஞரானார். அங்கு ஆளும் வர்க்கத்தினரின் ஆசியர் மீதான வெறுப்பும் பராபட்ச நடவடிக்கைகளும் அவரை அரசியல் தளத்துக்கு அழைத்து வந்ததில் தென்னாப்பிரிக்கா அரசியலில் அறியப்படும்  ஆளுமையாகியிருந்தார்.

கஸ்துார் ஆரஞ்சு பழங்களை உரித்து சுளைகளை இரண்டு தட்டுகளில் எடுத்து வந்து அவர்கள் முன் வைத்தார்.

“ஜெக்கி இன்னும் வரக்காணோமே?” என்றார் மேத்தாவிடம். 

“அவ தோட்டத்துக்கு நீர் ஊத்திக்கிட்டுருக்கா பா” உபயோகிக்கப்பட்ட கழிவுநீர் வாளிகளில் சேகரிக்கப்பட்டு காய்கறி செடிகளுக்கு பாய்ச்சப்படும். சேமிக்கப்பட்ட காய்கறி கழிவுகள் அவற்றுக்கே உரமாவதில் செடிகள் செழித்து வளர்ந்தன. 

மேத்தாவின் மகள் ஜெக்கிக்கு சமீபத்தில்தான் திருமணமாகியிருந்தது. காந்திக்கு தான் நடத்தி வரும் இந்தியன் ஒப்பீனியன் இதழை தான் இந்தியா திரும்பும்போது ஜெக்கி தம்பதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தது. மேத்தாவும் ஒரு பொறுப்பான தகப்பனான மகளையும் மருமகனையும் அதற்கான பயிற்சிக்காக பண்ணைக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த தம்பதியினரை காணும்போதெல்லாம் கஸ்துாருக்கு, கணவர் தன் மகன் விரும்பிய படிப்பை அதற்கான வாய்ப்புக் கிடைத்தபோதிலும் அடுத்தவருக்கு வழங்கி விட்டது நினைவுக்கு வந்து விடும். இது குறித்து ஒருமுறை கணவரிடம் கேட்டபோது “ஹரிலாலைப் படிக்க அனுப்பவில்லை என்பதுதான் உனக்கு பிரச்சனையா..? அல்லது எனது உறவுக்கார பையன் சக்கன்லாலுக்கு இந்த வாய்ப்பை கொடுத்து விட்டது பிரச்சனையா?” என்றார். 

கஸ்துாருக்கு எரிச்சலுண்டாயிற்று. திருமணமாகி இத்தனை வருடங்களாகியும் என்னை இவர் புரிந்துக் கொள்ளவேயில்லை. அட.. இவர் யாரைதான் புரிந்துக் கொண்டு விட்டார்? தலைக்கு மேல் உயர்ந்து விட்ட மகன் ஆசைப்பட்ட பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள அனுமதி கேட்டபோது அவனை மெச்சிக் கொண்டாரா என்ன? இத்தனைக்கும் மருமகள் குலாபென் அவருடைய நண்பர் ஹரிதாஸ்வோராவின் மகள். 

“அவர் என்னை புரிந்துக் கொள்வார்னு எப்படி எதிர்பார்க்கிறீங்க அம்மா..? சின்ன வயசிலேர்ந்து அவர் என்னுடன் சேர்ந்தே இருக்கலயே?” மகனின் குரலில் இருப்பது ஆதங்கமா… வருத்தமா… சோகமா… தன்னிரக்கமா… ஏக்கமா… எதுவென்று கஸ்துாரால் வகைப்படுத்த முடியவில்லை. ஆனால் அவன் சொல்வதுபோல அவர்களுடைய நான்கு மகன்களில் மூத்தவனான ஹரிலாலுக்கு தந்தையுடன் சேர்ந்திருக்க அதிகம் வாய்த்திருக்கவில்லை. அவன் சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும்போதே கல்விக்காக மனைவியையும் மகனையும் பிரிந்து இங்கிலாந்து சென்று விட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்து வந்தபோது அவனுக்கு எட்டு வயதாகியிருந்தது. பிறகு அவர்கள் குடும்பமாக  தென்னாப்பிரிக்கா வந்தபோது அவன் இந்தியாவிலேயே தங்கி விட்டான். 

மரவேலைக்காக வெட்டப்பட்ட மரம் மளமளவென்று சரிந்து எழுந்த ஓசையில் கஸ்துாரின் எண்ணவோட்டம் தடைப்பட்டது. மரம் மண்ணைத் தொட்டு எழுப்பிய புழுதியிலிருந்து புறப்பட்டு வந்தவர் போல கணவரைதாஆ தேடிக் கொண்டு வந்த நண்பரை கண்டதும் அவரை வரவேற்கும்பொருட்டு கஸ்துார் எழுந்து வந்தார். அப்போது  காந்தி டிரான்ஸ்வால் அரசின் காலனிகளுக்கான அமைச்சரான ஜான் கிறிஸ்டியன் ஸ்மட்ஸ் தன்னுடன் நடத்திய பேச்சு வார்த்தைக் குறித்து நண்பரிடம் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தார். 

டிரான்ஸ்வாலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை முற்றிலும் நியாயமற்றது. இதுவரை எழுப்பப்படாதது, என்றாராம் ஸ்மட்ஸ். 

இந்தியர்கள் அனைவரும் தத்தம் கை ரேகை பதிந்து உரிமைச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அதை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அனுமதிச்சீட்டு இல்லாமல் நடமாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் டிரான்ஸ்வாலில் சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. அதை எதிர்க்கும் விதமாக பதிவுச் சான்று இல்லாமல் டிரான்ஸ்வாலுக்குள் நுழைவதும் கைது செய்யப்பட்டு சிறைப்படுவதும் விடுதலையானதும் மீண்டும் அனுமதியின்றி நுழைவதும் கைதாவதுமாக தொடரும் சத்தியாகிரக போராட்டத்தில் காந்தியும் அவரது மகன் ஹரிலாலும் அடக்கம். படிப்படியாக சத்தியாகிரகிகள் எண்ணிக்கையில் பெருகிப்போக நிரந்தர வருமானமின்றி தவிக்கும் அவர்களது குடும்பங்களை காந்தி தன் பொறுப்பில் ஏற்றிருந்தார். 

“மிஸ்டர் ஸ்மட்ஸ்.. ஃப்ரீ ஸ்டேட் சட்டமும் புதிய மசோதாவும் அங்கு ஹைதராபாத் நிஸாம் நுழைவதைக் கூட தடை செய்து விடும் போலிருக்கிறது. சத்தியாகிரகிகள் இதை எதிர்த்து போராடிக் கொண்டேதான் இருப்பார்கள்”

“மிஸ்டர் காந்தி.. நீங்கள் கோரும் மாற்றங்களுக்கு ஃப்ரீ ஸ்டேட்காரர்கள் ஒருக்காலும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்”

“அவர்களை ஒப்புக் கொள்ள வைப்பது உங்கள் கடமை”

“அதை விட நிலைமையை எடுத்துச் சொல்லி சத்தியாகிரகிகளை நீங்கள் சிறை மீட்டு விடலாமல்லவா? அவர்களின் குடும்பங்களை நீங்கள் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார்களே… அது உண்மைதானா? வருமானத்துக்கு என்ன செய்கிறீர்கள்? நீங்கள் இப்போது வழக்கறிஞர் தொழில் செய்வதில்லை என்கிறார்களே”

“உண்மைதான்” என்றார் பொதுவாக. 

“பிறகு எப்படி வாழ்கிறீர்கள்? உங்களிடம் பணம் ஏராளமாக இருக்கிறதா?”

“இல்லை… நான் ஒரு ஏழையைப் போல வாழ்ந்து வருகிறேன். டால்ஸ்டாய் பண்ணையில் இருக்கும் மற்ற சத்தியாகிரகிகளை போல”

“நான் பண்ணையை வந்து பார்க்க வேண்டுமே.. அது எங்கிருக்கிறது மிஸ்டர்.காந்தி?”

“லாலே ரயில் நிலையம் அருகில்”

அன்று ரயில் வண்டி புகையை கிளப்பிக் கொண்டு லாலே ரயில் நிலையம் வந்து நின்றபோது கஸ்துாருக்கு பண்ணையை அடைவதற்குக் கடக்க வேண்டிய தொலைவின் மலைப்பை விட மகன் ஹரிலாலை காணும் ஆர்வமே மேலோங்கியிருந்தது. அவன் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்த சத்யாகிரகிகளை  கௌரவிக்கும் விதமாக ஜோஹான்னஸ்பர்க்கில் நடக்கும் பாராட்டு விழாவில் தந்தையின் சார்பில் கலந்துக் கொண்டு விட்டு ஃபீனிக்ஸ் குடியிருப்புக்கு வருவதாக கூறியிருந்தான். அவன் அங்கு வராததையடுத்து டால்ஸ்டாய் பண்ணைக்கு வந்திருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் கஸ்துார் அங்கிருந்து புறப்பட்டு கிட்டத்தட்ட முன்னுாறு மைல்கள் பயணித்து  பண்ணைக்கு வந்திருந்தார். வயது, பயணக்களைப்பு இவற்றோடு இரத்தசோகையும் சேர்ந்துக் கொள்ள அவரது உடல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கடினமானதாக மாற்றி மூச்சு வாங்க வைத்தது. நடைப்பயணமோ நீண்டுக் கொண்டே செல்வது போலிருந்தது. சற்றே அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என தோன்ற கஸ்துார் அங்கிருந்த பெரிய கல் ஒன்றின் மீது அமர்ந்துக் கொண்டார். 

சிறு குன்றின் அடிவாரத்தில் அமைந்திருந்த டால்ஸ்டாய் பண்ணையில் மண்ணின் வளத்தால் இயற்கை செழித்திருந்தது. காற்று, சுனைநீர் என்று ஆரோக்கியமாக கழிக்கக் கூடிய இடமாக அது இருந்தாலும் மனிதர்கள் வாழ்வதற்கேற்ற அடிப்படை கட்டமைப்புகள் இன்னும் பூர்த்தியடையாதலால் பண்ணைவாசிகள் நிறையவே சிரமப்பட வேண்டியிருந்தது. அங்கு பாம்புகள் பூச்சிகளுக்கு குறைவில்லை. அவசரத்துக்கு சாமான்கள் எதுவும் கிடைக்காது. ஏதொன்றாகிலும் ஜோஹனஸ்பர்க் நகருக்கு செல்ல வேண்டியிருக்கும். அது பண்ணையிலிருந்து இருபத்தோரு மைல் தொலைவிலிருந்தது. போக்குவரத்துக்காக பணத்தை விரயம் செய்வதில் காந்திக்கு விருப்பமிருப்பதில்லை.  குடியிருப்புவாசிகள் வேண்டிய சாமான்களை மொத்தமாக எழுதி வைத்துக் கொண்டு குழுவாகக் கிளம்பி ஜோஹானஸ்பர்க் வரை நடந்து சென்று வாங்கி வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். கூடுமானவரை கட்டட வேலை, தோட்ட வேலைகளுக்கு கூட ஆட்களை அமர்த்திக் கொள்ளாமல் பண்ணைவாசிகளே செய்துக் கொள்ள முடிவாயிற்று. 

ஹரிலால் வேலை செய்வதற்கு அஞ்சுபவனில்லை. கடின உழைப்புடன் கூடிய சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கு பண்ணை வேலைகள் பெரிதாக தோன்றாது. பண்ணையில் கடின வேலை செய்பவர்களுக்கு சிறைவாசம் பெரிய கொடுமையாக இருந்திராது. ஆனால் அதற்கு முழு ஈடுபாட்டுடன் கூடிய மனம் தேவை. சமீபமாக ஹரிலால் எதையோ இழந்தவன் போலிருக்கிறான். போராட்ட சூழல் அதிகப்பட்டு விட்ட இக்காலக்கட்டத்தில் ஹரிலாலும் போராட்டக் களத்தில் முனைப்புடன்தானிருக்கிறான். மக்கள் அவனை “இளைய காந்தி“ என்று புகழ்கின்றனர். ஆனால் அவன் மனம் உற்சாகத்தை தொலைத்திருந்ததை பெற்றவளால்தான் உணர முடியும். மனைவி குலாபென்னும் மகள் ராமியும் இங்கிருந்தாலாவது பரவாயில்லை. இரண்டாவதாக கர்ப்பம் தரித்திருந்த அவள் தன் மாமனாரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவுக்கு சென்று விட்டாள். போகும்போது தன்னுடன் தன் கணவனின் சந்தோஷத்தையும் எடுத்துச் சென்று விட்டாள் போலும். 

“பா… எதிலோ ஆழ்ந்து விட்டீர்கள் போலிருக்கு” நண்பரின் குரல் கஸ்துாரை மீட்டெடுக்க, அவர் என்ன… என்பதுபோல புருவத்தை உயர்த்தினார்.  

“அந்தந்த தொழிலுக்கான பணியாளர்களை அமர்த்திக் கொண்டால் வேலைத் திறன் மேம்படும் என்கிறார் நண்பர். ஆனால் அதை நான் ஆமோதிக்க மாட்டேன் என்கிறேன்,” தாயிடம் ஓடி வந்து ஒப்புவிக்கும் குழந்தையைப் போல நண்பரை முந்திக்கொண்டு மடமடவென்று மனைவியிடம் சொல்லி முடித்தார் காந்தி. 

குழுவாக இயங்கினாலும் வேலைகளை பகிர்ந்துக் கொண்டாலும் பழக்கமின்மையின் காரணமாக தடுமாற்றங்கள் இருக்கவே செய்தன. பணி செய்யும் போது பண்ணைவாசிகள் முரடான நீலதுணியில் காற்சட்டையும் மேற்சட்டையும் அணிந்துக் கொண்டனர். அவற்றையும் பண்ணையிலிருந்த பெண்கள் தைத்துக் கொடுக்க முறையான அளவுகளின்றி அவை தொளதொளத்திருந்தன. 

“பா… நான் சொல்வதில் என்ன தவறிருக்கு? இந்த மரத்தை தோட்டக்காரர் முறையாக அறுத்திருந்தால் இன்னும் பிசிறுகள் இல்லாமல் செய்திருப்பார் அல்லவா?” 

“பழக்கமில்லாதவற்றை பழக்கப்படுத்திக்கணும் இல்லையா… பா”

“அது முடியாமல்தானே பிராக்ஜி ஒருமுறை மயங்கி விழுந்து விட்டார்” நண்பரும் விடவில்லை. 

“ஆனாலும் கொண்ட ஊக்கத்தை இறுதிவரை அவர் கைவிடவில்லையே” காந்தியும் விடவில்லை.

“பாரிஸ்டர் காந்தி தன் கருத்தை எப்போதும் விட்டு தர மாட்டார் என்பது தெரிந்த விஷயம்தானே?” 

“ஜோசப் ராயப்பன் கூட பாரிஸ்டர்தான். அவர் பளுவான மூட்டைகளை ரயிலிலிருந்து இறக்குவதும் அவற்றை வண்டியில் ஏற்றி இழுப்பதையும் முன்னரே பழக்கப்படுத்தி வைத்திருந்தாரா என்ன?“ மோகன்தாஸ் சிரித்தபோது கண்ணோரம் லேசாக சுருக்கம் விழுந்தது. கழிவு நீர் செல்வதற்கான பாத்திகளை மண்வெட்டியால் ஒழுங்குபடுத்திக் கொண்டே பேசினார்.  

“நண்பரே… காந்தி தன்னால் கடைப்பிடிக்க முடியாத அல்லது செய்ய முடியாத எந்த ஒரு கருத்தையோ செயலையோ எப்போதும் யாரிடமும் முன் வைப்பதில்லை. எதையும் முதலில் தான் பின்பற்றிய பிறகே அதை மற்றவர்களுக்கு உபதேசம் செய்வார். ஆகவே அவர் தீர்மானித்து விட்ட சத்தியத்தின் பாதையில் எந்த ஆபத்தும் அவரை கட்டுப்படுத்தாது” என்றார் மேத்தா இடையில் புகுந்து.

“உங்களை விட என் கணவரை நான் நன்றாகவே அறிவேன்” என்றார் பா. கைகள் வேர்க்கடலை தோல்களை குவித்து அள்ளிக் கொண்டிருந்தது. 

“ஒப்புக்கொள்கிறேன் பா. நீங்கள் அறிந்ததைத்தான் நானும் கூறுகிறேன். உலகாயுத இச்சைகள் ஏதொன்றும் அவரால் வெல்ல முடியாததல்ல. அவை எதுவும் தனக்காக அவர் வரித்துக் கொண்டிருக்கிற மேலான பாதையிலிருந்து அவரை வழுவச் செய்ய முடியாது. பொருள் சார்ந்த வாழ்வே பிரதானமாக தோன்றும் இன்றைய யுகத்தில் அவரைப்போலத் தான் உபதேசிக்கும் லட்சிய வாழ்க்கைக்கு தானே உதாரணமாக வாழ்ந்து காட்டும் இன்னொரு மனிதரை பார்க்க முடியாது என்பது அவருடைய நண்பராக எனக்கு பெருமைதானே?”

ஆனால் மகன்களாக…? என் மகன்கள் தன் தகப்பனிடமிருந்து வாழ்க்கையின் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொண்டு விட்டார்களா? அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் மறுக்கப்பட்ட பள்ளிக் கல்வியும், கண்டிப்பும் ஒழுங்குமாக செய்ய பணிக்கப்பட்ட பணிகளும், வயதுக்கு மீறிய பொறுப்பும் வலிந்து கொடுக்கப்பட்ட வறுமையும்தானே? இவற்றை தம் மகன்களால் விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ள முடியுமா என என்றாவது அவர் யோசித்திருப்பாரா? மூத்தவன் ஹரிலாலுக்கு தந்தையை போல இங்கிலாந்து சென்று படிக்க வேண்டுமென்ற ஆசை. அவனுடைய வயதில் அவரிருக்கும்போது குடும்பமே அவரை இங்கிலாந்துக்கு படிக்க அனுப்பி வைத்து பெருமைப்பட்டுக் கொண்டதே..? அவரை போல அவர் மகனும் தன்னிச்சையாக செயல்பட விருப்பம் கொள்வது அத்தனைப் பெரிய குற்றமா என்ன? 

“என்னையோ, பாரிஸ்டர் படிக்கணும்கிற என்னோட கனவையோ அவர் பொருட்டாவே எடுத்துக்கல. ஆனா அவங்கண்ணா பையனை அதுக்கு சிபாரிசு பண்ணியிருக்காரும்மா” என்றபோது ஹரிலால் உடைந்திருந்தான்.

“யாரு? சக்கன்லாலையா?”

“ஆமா… நான் படிக்கறதில அவருக்கென்ன பிரச்சனை? ஏன் நான் படிக்கக்கூடாதுன்னு நினைக்கிறாரு? அவருடைய உயரத்தைத் தொட்டுடுவேன்னு பயப்படறாரா? அம்மா… ப்ளீஸ்… புரிஞ்சுக்கங்க. நான் யாரோ கொடுக்கற உபகார சம்பளத்தில் படிக்கணும்னு நினைக்கல. அவர் என்னை படிக்க வைக்கணும்னு உரிமையா கேட்கிறேன். என்னோட ஆசை அத்தனை நியாயமற்றதா?” 

இம்மாதிரியான அதிர்ச்சிகளும் கணவரின் புதிரான நடவடிக்கைகளும் அவருக்கு பழக்கப்பட்டிருந்தாலும் மகனின் பரிதவிப்பான முகம் இதயத்தை நெகிழ்த்தியது.

“நான் வேணும்னா பேசி பார்க்கவா ஹரி?”

“எல்லாமே முடிஞ்சிடுச்சுடுச்சு அம்மா… என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு”

“ஏன்ப்பா இப்படி சொல்றே?”

மகனை நெருங்கி வந்து அமர்ந்துக் கொண்டார். 

“அவர் சிபாரிசு செய்ற ஆள் எளிமையாக வாழ்வதாக உறுதி எடுத்துக்கணுமாம். சைவ உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்கணுமாம். சக இந்திய மாணவர்களிடம் நெருங்கி பழகி ஃபீனிக்ஸின் இலட்சியங்களை அவங்களுக்கு அறிமுகப்படுத்தணுமாம். இங்கிலாந்தில் மதன்லால் திங்ராங்கிற மாணவன் சிவில் சர்வெண்ட் ஒருத்தரை கொன்னுட்டானாம். அதனால மாணவர்களுக்கு வன்முறை மேல பெரிய ஆர்வம் பிறந்திருக்காம். அவங்களை திசை திருப்பி அகிம்சை மேல நம்பிக்கை கொள்ள வைக்கணுமாம். இதுக்கெல்லாம் சக்கன்லால்தான் சரியாயிருப்பாருன்னு அவருக்கு தோணிடுச்சு. நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்னு இவரா ஏம்மா நினைச்சுக்கணும்? என்னை ஏம்மா கேட்கல?”

கஸ்துார் ஆற்றாமையும் கோபமுமாக பேசும் மகனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். “நீ பேசாம இந்தியாவுக்கு போய் மெட்ரிகுலேஷன் பரீட்சையை எழுதுப்பா… அதான் சரிப்பட்டு வரும்” என்றார்.

“அதான் எனக்கும் தோணுது. ஆனா இவர் பாட்டுக்கு துாது கோஷ்டியோட இங்கிலாந்து போயிட்டார். மணிலாலுக்கும் உடல்நிலை சரியா இல்ல. நீங்க ராமாவையும் தேவாவையும் வச்சிக்கிட்டு இங்கே தனியா என்ன பண்ணுவீங்கம்மா”

மகனின் கரிசனத்தில் இளகிய தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு “ஹரி… இத்தனை நாள் நான் உன்னை நம்பியா இங்கே இருந்தேன்? நீ உன் மனைவியையும் மகளையும் கூட்டீக்கிட்டு கிளம்பு. நாங்க எப்படியோ சமாளிச்சிக்கிறோம்” என்றார்.

“இல்லம்மா… நான் திரும்பவும் டிரான்ஸ்வால் போறதா இருக்கேன்”

“அய்யோ… திரும்பவும் ஜெயிலுக்கா?”

“ஆமா… அப்பா அதைதானே சொல்றாரு” என்றான். அதற்குள் ராமி உள்ளறையில் சிணுங்கலாக அழத் தொடங்கியிருந்தாள். காத்திருந்தவன் போல ஓடிச்சென்று மகளை கையிலேந்திக் கொண்டபோது கஸ்துாரின் கண்களுக்கு அவன் சின்னஞ்சிறுவனான தெரிந்தான்.

தன் சின்னஞ்சிறு மகள் ராமியை பார்க்காமல் தன்னால் இருக்க முடியாது என்பான் ஹரிலால். இப்போது மகனும் பிறந்து விட்டான். குலாபென்னும் பாவம்தான். கணவன் மீது உயிரையே வைத்திருக்கும் சிறு பெண் அவள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள். ஆனால் கணவருடன் சேர்ந்திருக்க அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை. எனக்கு வாய்த்த அதே தலையெழுத்தை அடுத்த தலைமுறைக்கும் வாய்க்க வைத்த விதியை என்னவென்று சொல்வது? தகப்பனுக்கான கடமைகளை பிறிதொருவர் ஏற்க முடியாது. அது குழந்தைகளின் எதிர்கால வாழ்வுக்கு நல்லதன்று. அது ஹரிலாலுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் உயர்கல்வியின் மீது அதிக அக்கறை காட்டுகிறான். ஆனால் அக்கறையற்ற தகப்பனால் அது கை நழுவிப் போகிறது. விழா முடிந்ததும் ஃபீனிக்ஸ் குடியிருப்புக்கு வருவதாக சொன்னவன் அவர் அங்கிருந்தததால்தான் வராமலே போய் விட்டான். அவர் மீது கோபமா… வருத்தமா…? ஏதோ ஒன்று. அவனுக்கு அவர் மீதிருக்கும் விலகல் அதிகரித்துக் கொண்டே போகிறது. சுயமாக சிந்திக்க தெரிந்த மகனை இன்னும் கைக்குள் பொத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் எண்ணுவது நியாயமில்லை. ஆனால் அவரோ, அவன்தான் நான், நான்தான் அவன் என்கிறார். யாரைத் திருத்துவது என்றே தெரியவில்லை. ஆனால் மகனுக்கென்று ஒரு சுயம் இருக்கிறது. அதுதான் தகப்பனுக்கும் மகனுக்கும் உறுத்தலாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை அப்படியே விட்டுவிடுவது சரியாகாது. 

பாப்பு… நீங்கள் இலட்சிய மனிதராக இருக்கலாம். அதற்காக உங்கள் இலட்சியங்களை உங்கள் பிள்ளைகளின் விருப்பம் அறியாமல் அவர்கள் மீது திணிக்காதீர்கள். ஒவ்வொருவரின் விருப்பும் வெறுப்பும் தனி மனிதரின் ஆளுமை சம்மந்தப்பட்டது அல்லவா?”  தாய்பாசம் கணவரை கேள்வி கேட்க வைத்தது. 

“கஸ்துார்… நீ என்னை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யேன் ப்ளீஸ்… கைரேகைப் பதிவுக்கான போராட்டம் வலுத்தபோது அதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் ரகசியமாக பதிவு செய்துக் கொண்டவர்களையும் பெர்மிட்டுகளில் கையெழுத்திட்டவர்களையும் சிறை செல்ல நழுவிக் கொள்பவர்களையும் நான் கண்டும் காணாது விட்டு விடலாம். ஆனால் என் சொந்த மகன்கள் அப்படி ஏதாவது செய்து விட்டால்? அந்த எண்ணம் கூட அவர்களுக்கு தோன்றாதபடி நான்தானே பார்த்துக் கொள்ள வேண்டும்?“

“ஆனால் அதற்காக நாம் நம் எல்லைகளை மீறி விட கூடாதல்லவா?” 

பா வின் வார்த்தைகளில் கோபமிருந்தது. இனியும் அருகிலிருந்தால் அது வாக்குவாதத்தை  பெரிதாக்கி விடும் என்பதோடு கணவருக்கும் யோசிக்க நேரம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கஸ்துார் அங்கிருந்து நகர்ந்து கொண்டார். அதே நேரம் அவர் மகனுக்கும் அறிவுறுத்திக் கொண்டுதானிருந்தார். 

“ஹரி… அவரோட சிந்தனைகளே வேறு. துறந்து போறதுதான் வாழ்க்கைன்னு நினைக்கிறார். கடமையை செய்வது மட்டும்தான் நம் வேலை. அதற்கான பலன்களை கூட நாம் எதிர்பார்க்க கூடாது என்கிறார். அவர் மனம் பொதுப்போக்கோடு ஒத்துப் போறதில்லை. அதற்காக மகனான நீ அவரை விலக்கிட முடியுமா?”

“அம்மா… நான் சாதாரணன். அவருடைய உயர் இலட்சியவாதத்தை தாங்கிக் கொள்ளும் அறிவுத்திறனும் ஆன்மீகத்திறனும் எனக்கில்லை. ஒருவேளை அது பின்னாட்களில் வரலாம் அல்லது வராமலும் போகலாம். ஆனால் ஒன்று… அவர் என்னை அடக்கும்போது அவர் ஒடுக்கியவைகளெல்லாம் என்னுள் பேருருக் கொள்கின்றன அம்மா”

“நீ உன் அடையாளங்கள் இப்படிதான் இருக்கணும்னு விரும்புவது எப்படி உன்னோட இயல்போ அதே மாதிரி இம்மாதிரியான சிந்தனைகள் எழுவது அவரோட இயல்பு. இனிமே அதை அவரால மாத்திக்க முடியாது. மூத்தவங்க அவங்கவங்க கொள்கையில உறுதிப்பட்டுப் போயிருப்பாங்க. சின்ன வயசுக்காரங்க நீங்கதான் மாத்திக்கணும்“

ஆனால் எதுவும் மாறி விடவில்லை. எதுவுமே மாறி விடவில்லை… இங்கே எதுவுமே மாறாது… அவர் மனம் புலம்பிக் கொண்டிருந்தது. 

“கஸ்துார்… சாப்பாடுக்கான நேரம் நெருங்கி விட்டது” கணவரின் குரல் காதில் விழுந்தபோது வாய் அனிச்சையாக பதில் கூறினாலும் அவரால் மகனின் நினைவுகளின்று விலகி விட முடியவில்லை. 

“ம்ம்… சரிதான்” அவர் முக்காடை இழுத்து விட்டுக் கொண்டு சமையலறைக்கு சென்றார். மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. மதிய உணவுக்கான நேரம் அது. காலை ஆறு மணிக்கு உண்ட கோதுமை அடையும் கோதுமைக் காப்பியும் வேலை பளுவில் எல்லோருக்கும் எப்போதோ செரிமானமாகியிருக்கும். பண்ணையில் இந்துகள், முஸ்லிம்கள், பார்ஸிகள், குஜராத்திகள் என மாறுப்பட்டோர் தங்கியிருந்தபோதிலும் மாமிசமில்லாத ஒரே சமையல் என்று முடிவு செய்துக் கொண்டனர். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணவும் உண்டபின் அவரவர் பாத்திரங்களை சுத்தம் செய்துக் கொள்வதும் நடைமுறையிலிருந்தது. 

சமையலறையில் வேர்க்கடலைத் துகையலும் தித்திப்பு ஆரஞ்ச் பச்சடியும் தயாராக இருந்தது. கஸ்துார் தீட்டாத கோதுமையை அரைத்து தவிடு நீக்காமல் எடுத்து வைக்கப்பட்ட மாவை ரொட்டிக்காக பிசைந்து வைத்திருந்தார். இளையவன் தேவதாஸ் வேர்க்கடலைத் துகையலை விரும்ப மாட்டான். ஆனால் ஹரிலால் இதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. அண்ணனும் தம்பியும் தகப்பனும் மகனும் போல பேசிக் கொள்வார்கள். அண்ணன் தம்பியை இடுப்போடு அணைத்து தூக்கி வட்டமடிப்பான். அவன் தலைச்சுற்றி தடுமாறி உட்காரும்போது ராமியை அவன் மடி மீது அமர்த்தி “இவர் உன்னோட குட்டி சித்தப்பா” என்று இருவரையும் சேர்ந்தே அணைத்துக் கொள்வான். 

ஒருமுறை தேவதாஸ் அண்ணனிடம் கோட்டு சூட்டுகள் வாங்கித்தருமாறு கேட்டபோது, ஹரிலால், நான் இங்கிலாந்து போய் படிச்சிட்டு வர்றேன். அப்பறம் பாரு… உனக்கு என்னவெல்லாம் வாங்கித்தர்றேன்னு, என்றான். அந்நேரம் இங்கிலாந்தில் படிப்பதற்கான வாய்ப்பு அவன் தந்தையை தேடி வந்திருந்தது. அவர் அதை நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என முழு மனதுடன் நம்பியிருந்தான். ஊரே அவனை “இளைய காந்தி“ என மெச்சிக் கொள்ள, அப்பா அவனை உச்சி முகர்ந்துக் கொள்வதும் என் மகன் அவன்.. என்று பெருமையாகப் பேசுவதும் அவனுக்கு பிடித்திருந்தது. தகப்பனாரின் கவனத்தை கவர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. அவரை போல இங்கிலாந்தில் படித்து பாரிஸ்டர் பெற்ற பிறகு அவனாலும் சத்தியாகிரகிகளுக்காக இலவசமாக வாதிட முடியும். சட்ட நுணுக்கங்களை அறிந்து இந்தியன் ஒப்பீனியன் இதழில் அவரை போல அவனும் கட்டுரைகள் எழுதலாம். ராமிக்கு புது பொம்மைகள் வாங்கித் தரலாம். மனைவியும் தானும் இந்தியாவுக்கு செல்வதற்கு அப்பாவிடம் அனுமதி கேட்டபோது அவர் இருக்கும் பற்றாக்குறை நிதியில் ஒரு நபருக்கான பயணச்சீட்டு செலவைதான் தன்னால் ஏற்க முடியும் என்று கூறி விட்டார். தான் சம்பாதித்த பிறகு இவற்றையெல்லாம் சரிக்கட்டி விடலாம் என்று எத்தனை கனவுகள் வைத்திருந்தான். ஆனால் அவன் தந்தையாரோ இரக்கமேயின்றி எல்லாவற்றுக்கும் மூடு விழா நடத்தி விட்டார். என் மகன் மனதளவில் நிறைய காயப்பட்டு விட்டான். அச்சுப்பணிகளின்போது சற்றும் அசராமல் இயந்திரத்தை சுற்றுபவனுக்கு இப்போது அதில் மனம் ஒன்றுவதில்லை. உணவில் வேண்டுமென்றே சர்க்கரையையும் உப்பையும் சேர்த்துக் கொள்கிறான். பேச்சு கூட வெகுவாக குறைந்து வி்ட்டது. அவன் என்னை தவிர எல்லோரிடமும் எல்லாவற்றிலிருந்தும் பாராமுகமாகதான் நடந்துக் கொள்கிறான். 

“காலன்பாக் இன்னும் வரவில்லையா..?”  சாப்பிட அமரும் முன்பாக காந்தி நண்பரைத் தேடினார். காலன்பாக் கைத்தொழில் கற்றுக் கொள்ள அங்கிருக்கும் ஜெர்மன் கத்தோலிக்க சன்னியாசிகளின் மடத்திற்கு சென்றிருந்தார். அங்குதான் அவர் செருப்பு தைக்கும் தொழிலைக் கற்றுக கொண்டு அதை காந்திக்கும் கற்றுக் கொடுத்திருந்தார். 

“அவர் மதியத்துக்கான ரொட்டிகளை கையோடு எடுத்துச் சென்று விட்டார் பாப்பு” 

“சரிதான்…”  

அன்று காந்தி செருப்பு தைத்து கொண்டிருந்தபோது கஸ்துார் “அவர் தன்னை பாரிஸ்டர்ன்னு ஒருபோதும் நினைச்சுக்கறதில்லை ஹரி..” என்றார். 

“அம்மா.. இதையெல்லாம் அவர் செஞ்சா அது அவரோட பெருந்தன்மைன்னு சொல்வாங்க. ஆனா நாம் இதையே பிழைப்பா எடுத்து செஞ்சா சாப்பிடும் உணவுக்கு கூட திண்டாட்டம் வந்துடாதா?” என்றான் ஹரிலால். தனது நறுக்கென்ற பேச்சால் தாயார் மனம் புண்பட்டுவிட்டதோ என கருதி அவரருகே வந்து அமர்ந்துக் கொண்டார்.

வயதால் மூத்தவன் என்றாலும் ஹரிலால் அன்புக்காக ஏங்கும் சிறு குழந்தை.  அவன் மனைவி இந்தியாவிலிருக்கும் இந்த சமயத்தில் அவனை தனித்திருக்க செய்ய வேண்டாம் என்ற வைராக்கியமே அவரை அன்று ஃபீனிக்ஸிலிருந்து டால்ஸ்டாய் பண்ணைக்கு தனித்து பயணிக்க வைத்திருந்தது. இருபுறமும் அடர்ந்திருந்த தாவரங்களுக்கு மத்தியில் நடை தடத்தால் ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையின் வழியே நடந்து வந்தவருக்கு காற்றில் தவழ்ந்து வந்த ஆரஞ்ச் பழ வாசம் பண்ணை நெருங்கி விட்டதைச் சொன்னது. ஆரஞ்ச், ஆப்ரிகாட், பிளம் மரங்களுக்கிடையே கட்டடங்கள் தெரியத் தொடங்கியபோது, ஹரிலால் இங்குதான் இருக்கிறான். என்  வரவை எதிர்ப்பார்த்து காத்திருப்பான் என்ற இனிய படபடப்பு எழுந்தது. 

காந்தி, மேத்தா உட்பட குடியிருப்புவாசிகள் அனைவரும் உணவு உண்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அந்த நீண்ட வராந்தாவில் குழுமத் தொடங்கினர். ஃபீனிக்ஸில் இருப்பதைப் போன்று இங்கும் பிரார்த்தனைக்கூடம், உணவுக்கூடம், தச்சுப்பட்டறை, பள்ளிக்கூடம், கைத்தொழிலுக்கான கூடங்கள் என இடம் ஒதுக்கப்பட்டு கட்டுமானத்துக்காக காத்திருந்தது. சாப்பாட்டுக்கான வேலைகள் மளமளவென்று நடைபெற தொடங்கின.  சுனையிலிருந்து காவடி மூலம் எடுத்து வரப்பட்ட நீர் குடுவைகளில் நிரப்பப்பட்டது. தட்டுகள் ஏந்தி எடுத்து வரப்பட்டன. தணல் அடுப்பு ஏற்றப்பட்டது. மளமளவென்று உருண்டைகள் உருட்டப்பட்டு தேய்க்கப்பட்டு வாட்டப்பட்டு மரத்தட்டுகளில் அடுக்கப்பட்டன. குறிப்பிட்ட எண்ணிக்கையை கடந்ததும் அது முன்னறைக்கு எடுத்து வரப்பட, அடுத்தடுத்த மரத்தட்டுகளில் ரொட்டிகள் அடுக்கப்பட்டன. மேத்தா குடுவையிலிருந்த நீரை தம்ளர்களில் ஊற்றி தட்டுகளுக்கு அருகே வைத்தார். ஆரஞ்ச் பச்சடியும் வேர்க்கடலைத் துகையலும் பரிமாறப்பட்டன. உண்பதும் ஒரு வேலையென மாற அனைவரும் சூடான ரொட்டிகளை பிய்த்து துகையலில் தொட்டு சாப்பிட தொடங்கினர். 

ஹரிலாலுக்கு சூடான ரொட்டியை உருளைக்கிழங்கு தொடுகறியோடு சேர்த்து வைத்து உண்ண பிடிக்கும். அதுவும் கிழங்கில் சரியான அளவு உப்பு போட்டு சமைத்துக் கொடுத்தால் ஒரே மூச்சில் ஐந்து ரொட்டிகளை கூட உண்டு விடுவான். அன்று அதை செய்துக் கொடுக்கும் ஆவலோடும் மகனைக் காணும் பரபரப்போடும் குடியிருப்புக்கு வந்தவரை ஏமாற்றமே வரவேற்றது. 

“ஹரிலாலா..? அவர் இங்கு வரவில்லையே பா…” 

எலும்புகளற்ற உடலைப் போல மனம் தொய்ந்து விழுந்தது. கடவுளே… இத்தனை துாரம் வந்தது வீணாகி விட்டதே. சற்று பொறுத்துக் கிளம்பியிருந்தால் அவன் ஃபீனிக்ஸுக்கே வந்திருப்பானோ? நான்தான் அவசரப்பட்டு கிளம்பி விட்டேனா? ஆனால் அங்கும் வரவில்லை என்கிறார்களே.. ஒருவேளை மீண்டும் கைதாகி சிறைக்கு சென்று விட்டானோ? குடும்பமும் குழந்தைகளும் எங்கோ இருக்க இவன் தனித்து எத்தனை சிரமப்படுகிறான்? இதற்காகதான் என் வயிற்றில் மகனாக வந்து பிறந்தாயா ஹரி..? அதற்காகதான் கடல் கடந்து இங்கு வந்து சேர்ந்தாயா? 

அவர் இடது உள்ளங்கையை விரித்து வலதுக்கையால் பிடித்துக் கொண்டார். இப்படிதான் அன்று அவனும் பிடித்துக் கொண்டான். தன் கையின் வெம்மையின் வழியே தாயாருக்கு தெம்பையும் தைரியத்தையும் ஊட்டிக் கொண்டிருந்தான். அது 1896ஆம் ஆண்டு அவர் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த சமயத்தில் நிகழ்ந்தது. அப்போது அவனுக்கு எட்டு வயதிருக்கும். இந்தியாவிலிருந்து புறப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வார கடல் பயணத்துக்கு பிறகு அவர்கள் தென்னாப்பிரிக்க நிலத்தை அடைந்திருந்தார்கள். பயணிகள் நிலம் காணும் ஆவலில் இறங்க முற்பட்டபோது, அங்கிருந்த ஐரோப்பியர் அவர்களை தரையிறங்க விடாமல் ஆர்ப்பாட்டம் செய்வதாக தகவல் வந்தது.  அவர்களோடு இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா வந்திருந்த மற்றொரு கப்பலுக்கும் இதேகதிதான். நீர் மேல் பயணம் செய்த நாட்களளவுக்கு கரையில் அவர்கள் நிலம் இறங்குவதற்காக காத்திருக்க வேண்டியிருந்தாலும் நிலைமை சீரடைவதாக தெரியிவல்லை. அவர் தன் மகன்களோடு கணவனை ஒட்டிக்கொண்டு திகிலோடு ஒடுங்கினார். முதலில் இந்தியர்கள் பிளேக் நோயை கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற பயம்தான் காரணம் என்றார்கள். மருத்துவப்பரிசோதனைக்கான காத்திருப்பு என்றார்கள். பிறகுதான் விஷயம் மெல்ல பரவியது. அவரது கணவர் நேட்டாலில் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு எதிராக நிலவி வரும் மோசமான இனவெறி குறித்து இந்தியாவின் பல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டியது அவருக்கெதிரான விஷயமாக ஐரோப்பியரிடம் பரவியிருந்ததும் அதன் காரணமாக அவரை தரையிறங்க விடாமல் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும்தான் இந்த காத்திருப்புக் காரணமென்று. காந்தி இந்தியாவிலிருந்து இரண்டு கப்பல்கள் நிறைய தன் உறவினர்களை அழைத்து வந்திருக்கிறார் என்றும் இந்தியர்களின் படையெடுப்புக்கு தலைமை தாங்கி வந்திருக்கிறார் என்றும் அது அவர்களிடமிருந்து நாட்டையும் வீடுகளையும் பறிக்கவிருக்கும் படை என்றெல்லாம் பேசிக் கொண்டதாக சொல்லிக் கொண்டார்கள்.

இறுதியில் கணவரின்றி பிள்ளைகளோடு கரையிறங்க வேண்டிய நிர்பந்தம் கஸ்துாருக்கு வாய்க்க, நடுக்கத்தோடு நகர்ந்த அத்தருணத்தில் தனித்து விடப்பட்ட உணர்வோடு சொந்தங்களையும் சொந்த மண்ணையும் விட்டு வந்த அவருக்கு ஹரிலாலின் இளஞ்சூடான உள்ளங்கைகள் எத்தனை நம்பிக்கையளித்தன? இந்திய குடும்பங்களில் குடும்பத்தலைவருக்கு அடுத்தப்படியாக குடும்பத்தின் மூத்தமகன்கள் அதேயளவு தெம்பும் நம்பிக்கையும் அளிப்பவர்கள்.

“நீங்கள் இந்தியாவுக்கு அதிகம் தேவைப்படுகிறீர்கள் மோகன்தாஸ்”  என்ற மேத்தாவை வேர்க்கடலை துகையலை தொட்டு ரொட்டியை மடித்து வாயில் வைத்தப்படியே நோக்கினார் காந்தி.

“நான் இந்தியாவுக்கு சென்றதும் அங்கு நமக்கு தேவையான இளைஞர்கள் கிடைத்து விடுவார்கள் என்று நீங்கள் கருதினால் அது தவறு மேத்தா. நாம் தென்னாப்பிரிக்காவில் சந்தித்த அதே கஷ்டங்கள் அங்கும் இருக்கும். இங்கு நாம் தொடங்கியிருக்கும் வேலைகளுக்கு ஒரு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த பின்னரே இந்தியாவுக்கு செல்ல வேண்டும்”

கஸ்துார் கணவரையே பார்த்துக் கொண்டிருந்தார். தகப்பனும் மகனும் உருவத்தில் மட்டுமல்லாது செயல்களில் கூட ஒத்தமாதிரியே இருந்தனர். இவரை போலதான் அவனும் பெரிய துண்டாக ரொட்டியை பிய்த்தெடுத்து அதன் நுனியில் துகையலை தொட்டுக் கொள்கிறான். கடின உழைப்புடன் கூடிய சிறைவாசத்தை கூட சிரமப்படாது அனுபவிப்பதும் மீண்டும் மீண்டும்                                                                                                                                                                                                                                                                            சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு சிறைப்படத் தயாராவதுமான அவன் மனத்துணிவு எங்கே போனது? ஏன் அப்படி ஒரு முடிவெடுத்தான்?

“போலக்தான் காந்தியை தென்னாப்பிரிக்காவில் அவருக்கான வேலைகள் இன்னும் முடியவில்லை என்று கூறிக் கொண்டே இருப்பவர்” பிரணஜீவன்மேத்தாவுக்கு காந்தி தன் வார்த்தைகளை விட நண்பர் ஹென்றிபோலக்கின் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தோன்றியது.

“ஆனால் யார் என்ன சொன்னாலும் உங்கள் நண்பர் தான் செய்ய விரும்புவதைதான் செய்வார் என்று நீங்கள்தானே சற்று நேரத்துக்கு முன்பு சொன்னீங்க மேத்தா” என்றார் கஸ்துார்.

பிள்ளைகள் தன் பாட்டுக்கு மடமடவென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மதிய நேரத்தில் அவர்களுக்கு பள்ளிக்கூடம் துவங்கி விடும். அதன் பிறகு பண்ணை வேலைகளிலிருந்து அவர்களுக்கு விடுதலை. பிளந்த விறகுகளை கட்டி வைப்பது, காய்ந்த சுள்ளிகளை சமையலறைக்கு எடுத்துச் செல்வது, தோட்டத்தில் களைப்பிடுங்குவது, சமையலுக்கான காய்கறிகளை சேகரித்துத் தருவது, துணிகளை உலர்த்தி மடித்து வைப்பது, காவடியில் சுனை நீரை சுமந்து வருவது என அவரவர் வயதுக்கேற்ற வேலைகள் காலை முதலே தொடங்கி விடும். ஆனால் கடின உழைப்புக்கும் மதிய உணவுக்கும் பிறகு வகுப்பறையில் ஓரிடமாக அமரும்போது வகுப்புகள் கலகலப்பாக நடந்தாலொழிய பிள்ளைகளுக்கு உறக்கம் வந்து விடும். சரித்திரம், பூகோளம், கணித வகுப்புகளை போல சமய வகுப்புகள் அத்தனை பிடித்தமானதாக இருக்காது. அடிப்படை பாடங்களை காந்தியும் கால்லன்பாக்கும் கற்றுக் கொடுத்தாலும் முஸ்லிம் குழந்தைகளுக்கு குரான் வேதமும் பார்ஸி பிள்ளைகளுக்கு அவெஸ்தா வேதமும் அந்தந்த மதத்தை சேர்ந்த குடியிருப்புவாசிகளால் கற்றுத் தரப்பட்டன. காந்தி இஸ்லாம் பற்றியும் ஜோர்வாஸ்தரின் சமயம் குறித்துமான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்து தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளை சமய வகுப்புகளில் மாணவர்களுக்கு கற்றுத் தருவதும் காந்தியின் பணிகளுள் ஒன்றாக இருந்தது. 

கஸ்துார் தட்டுக்கொன்றாக வெட்டி வைத்த மாம்பழத் துண்டுகளை வைத்துக் கொண்டே வந்தார். 

“பா… ரொட்டி நல்லாயிருக்கு. வெங்காயத்தை வதக்கி வைச்சிருந்தீங்கன்னா இன்னும் நல்லாயிருந்திருக்கும். அதுவும் உங்கள் கைப்பக்குவமே அமோகம்” என்றார் மேத்தா. 

கஸ்துார் மென்புன்னகை பூத்தார். தன்னிடம் இத்தனை உரிமையாக பேசும் இவர் கூட ஹரிலால் காணாமல் போன தினத்தன்று  எதுவும் கூறவில்லை. பெற்ற மனமோ தவித்தலைந்தது. அவன் எங்கு தான் போயிருக்கிறான்? ஜோஹான்னஸ்பர்க் முழுக்க சாத்தியப்படும் இடங்களிலெல்லாம் தேடி பார்த்தாகி விட்டதாம். நண்பர்களும் கட்சிக்காரர்களும் காந்தியின் அலுவலகத்தில் கூடி விட்டனராம். பா இதை பின்னாளில் கேள்விப்பட்டார். 

“அவன் மனைவிக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. ஒருவேளை குழந்தையை பார்க்கும் ஆவலில் கிளம்பியிருக்கலாம்” என்றாராம் அவர் கணவர். 

“குழந்தை பிறப்பு என்பது குடும்ப நிகழ்வுதானே? அதை வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பியிருக்கலாமே?”

பார்ஸி நண்பர் ஒருவர், சமீபத்தில் ஹரிலால் தன்னிடம் இருபது பவுன் கடன் வாங்கியதாக தெரிவித்தபோது லேசானதொரு பிடி கிடைத்தது. ஜோசப் ராயப்பனிடம் ஹரிலால் நெருங்கிப் பழகுபவன். இருவரும் ஒன்றாக சிறையில் இருந்திருக்கிறார்கள். அவர் அவனை பாராட்டுக்கூட்டத்தில் பார்த்ததாகவும் அப்போது ஹரிலால் தான் இன்னும் இருபது நாட்களில் தென்னாப்பிரிக்காவை விட்டு செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் அதை தன் தந்தையிடம் கூறி விடுமாறும் சொல்லிக் கொண்டிருந்தான் என்றபோது மற்றொரு முடிச்சு அவிழ்ந்தது. 

“ஓ.. அவர் ஏன் அப்படியொரு முடிவு எடுக்க வேண்டும்?”

ஆளுக்காள் ஒவ்வொன்றாக கருத்து சொன்னார்கள். அது பொதுவாக திரண்டபோது “ஹரிலாலுக்கு இப்படியொரு ஆசை இருப்பது தெரிந்தால் நாங்களே அவரை படிக்க அனுப்பியிருப்போமே“ என்பதாக இருந்தது. ஆனால் அவர் கணவரின் பிடிவாதத்துக்கு முன்னால் இந்த வீண்வாதங்கள் எடுபடுமா என்ன?

“பாட்டீ… பாட்டீ…” யாரோ அழைக்கிறார்கள். அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ஹரியின் மகன் இந்நேரம் உட்கார ஆரம்பிச்சிருப்பான். ராமிக்கு தம்பியை பார்த்துக் கொள்ளத் தெரியுமா..? பாட்டீ… பாட்டி என்று என்னை சுற்றிக் கொண்டு கிடந்தவள் என்னை மறந்துப் போய் விட்டாளோ? கஸ்துாரின் மனம் அவிழ்க்க முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டதுபோல அலை பாய்ந்தது. அவன் காணாமல் போனபோது நிம்மதியைத் தேடிச் சென்று விட்டதாக சொல்லிக் கொண்டார்களாம். அது உண்மையானால் அவனுடைய குடும்பமாவது அவனுக்கு நிம்மதியை தருமா…? ஆனால் நிம்மதியை தேடி செல்பவன் ஏன் தகப்பனுடைய புகைப்படத்தை தன்னோடு எடுத்துக் கொள்ள வேண்டும்? அவன் எழுதி வைத்து விட்டு சென்ற கடிதத்தில் கூட அவரை பற்றி குறையேதும் இல்லையே… அவர் அந்த கடிதத்தை அடிக்கடி மணிலாலிடம் கொடுத்து படித்துக் காட்ட சொல்லுவார்.

என் இதயம் என்ன கட்டளையிட்டதோ அதை செய்திருக்கிறேன். கெட்ட நோக்கங்களுடன் எதையும் செய்யவில்லை. நான் ஓடிப்போய் விட்டேன் என்று நினைக்க வேண்டாம். நான் இன்னும் உங்கள் கீழ்படிதலுள்ள் ஹரிலால்தான். நீங்கள் அப்படி நினைக்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் எப்போதும், இனியும் கூட என் மரியாதைக்குரியவர்தான். நீங்கள் கற்றுத் தந்திருக்கும் பாடங்களை பின்பற்றுவேன். உங்கள் செயல்களையே பிரதி செய்வேன் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். அம்மாவிடம் நான் சம்பாதிப்பத்ற்காக சென்றிருக்கிறேன் என்று தெரிவிக்கவும். அவரிடமிருந்து பிரிந்திருப்பது வருத்தமளிக்கிறது என்றாலும் இதை நான் கடமை என்று எண்ணியே செய்திருக்கிறேன். இதை உடனே செய்யாமல் எனக்கு விடிவுகாலம் இல்லை. இப்போதைக்கு படிப்பது மட்டுமே என் நோக்கம். எனக்கு கட்டாயம் பணம் தேவைப்படும். உங்களால் முடிந்தால் அனுப்பி வைக்கவும் நான் என்னை ஸ்திரப்படுத்திக் கொண்டதும் என் லட்சியத்தில் வெற்றி பெற்றால் உங்களுக்கு எழுதுகிறேன். நான் போனாலும், போராட்டம் திரும்பவும் ஆரம்பிக்கப்படுமானால், உலகின் எந்தப்பகுதியில் நானிருந்தாலும் அங்கு வந்து கைதாவேன்.

மகனே… எனக்கும் உன்னை பிரிந்திருப்பது பெருந்துயரையே அளிக்கிறது. 

நீண்ட பெருமூச்சோடு நினைவுகளை ஒதுக்கி விட்டு அந்த சிறுவனை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டார் கஸ்துார். அவன் தச்சு வேலை செய்யும் விஹாரியின் மகன் நாகசாமி. 

“தாத்தா உங்களிடம் ஆரஞ்ச் பழம் வாங்கிக்க சொன்னாங்க பாட்டீ” அவன் காந்தியை கைக்காட்டினான. 

“ஓ.. தரேனே” நேற்று ஆரஞ்சு மரத்தடியிலிருந்து பொறுக்கி எடுத்து வைத்த பழங்களை சிறு பையிலிட்டு சிறுவனிடம் நீட்டினார். சிறுவனின் தகப்பனார் விஹாரியும் காந்தியும் நேற்றைய தினம் உரையாடிக் கொண்டது அவர் நினைவுக்கு வந்தது. 

அய்யா.. பக்குவமடைந்த தத்துவ நிலையிலிருந்து பார்ப்பவர்களுக்கு கடவுள் எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றும் எல்லா இடங்களிலும் வியாபித்துள்ள பரம்பொருள் என்றும் தோன்றுவது சரிதான். அதாவது ஞானயோகியும் தியானயோகியும் பரம்பொருளையே சிந்தித்தவண்ணம் தியானம் செய்வார்கள். ஆனால் தவறு செய்யும் மனிதனும் தவறுக்காக வருந்தும் பக்தனும் என்ன தான் செய்வது?”

அவர் பழங்களை பொறுக்குவதை நிறுத்தி விட்டு கணவரின் பேச்சை கவனித்தார். 

“கீதையை மீறிய கேள்விகளோ பகவான் உபதேசத்தை மீறிய பதில்களோ இவ்வுலகில் இல்லை விஹாரி… நிரந்தரமான ஆன்மா சுதந்திரத்துடனும் யாதொரு செயலுமின்றியும் ஒன்பது வாயில்கள் கொண்ட கோட்டையில் சாந்தமாகவும் பேரானந்தத்துடனும் அமர்ந்திருக்கிறது. ஆனால் உடலில் பற்றுள்ள ஆன்மாவோ உலகம் முழுவதும் வியாபித்துள்ள ஆன்மாவுடன் ஐக்கியமடைவதற்காக போராடிக் கொண்டு செயலில் ஈடுப்பட்டவண்ணம் இருக்கிறது. வெளிப்படையான அலங்காரங்களிலெல்லாம் பற்றுக் கொள்கிறது. எறிய வேண்டிய கர்மவினையை துாக்கி சுமக்கிறது”

அவர் வாய் திறந்து பேசினாலும் கண்களை மூடிக் கொண்டிருந்தார்.

“நண்பரே… தத்துவ முறையை உணர்ந்தவர்கள் தத்துவ நிலையின் சிகரத்தை அடைய முடியும். அடைந்தும் இருக்கிறார்கள். ஆனால் போராடிக் கொண்டிருக்கும் ஆன்மாவானவன் தான் சாய்ந்து கொள்ளவும் தன் கவலைகளையெல்லாம் உதறித்தள்ளவும் ஏதோவொன்றை நாடுகிறான். அவனாலும் கூட சத்தியமான பரம்பொருளை அறிந்துக் கொள்ள முடியும். ஒன்று அவனது செயல்களையெல்லாம் கடவுளுக்கு அர்ப்பணம் செய்து விட வேண்டும் அல்லது கடவுளிடம் அப்பழுக்கற்ற பூரண பக்தி செலுத்த வேண்டும்”

அவர் பொறுக்கியெடுத்த பழங்களை மடியில் கட்டிக் கொண்டார். இவரை மாதிரியான மனம் வாய்க்கப் பெறுவது கிடைத்தற்கரிய பேறுதான். ஆனால் அது உதிர்ந்துக் கிடக்கும் இந்த ஆரஞ்சுப் பழங்களை போல கனிந்து காம்பிலிருந்து விழுந்தால்தானே நல்லது? தடியால் அடித்து பறித்து அதனை கூடையிலிட்டு பழுக்க வைத்தால் பழங்கள் புளித்தல்லவா போய் விடும்?

அன்று மகன் எங்கோ சென்று விட்டான் என்ற செய்தி அவரைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் தெரிந்திருந்தது. இச்சேதியை மனைவி எத்தனை துாரம் தாங்கிக் கொள்வாள் என்று தெரியாதபட்சத்தில் அவரிடம் விஷயத்தை கொண்டு செல்லாமல் இருப்பதே நல்லது என்றும் தானே சமயம் வரும்போது மனைவியிடம் பக்குவமாக தெரிவித்துக் கொள்வதாகவும் காந்தி கூறி விட்டாராம். 

ஹரிலால் ஜோஹான்னஸ்பர்க்கிலிருந்து இந்தியாவுக்கு கப்பல் ஏறுவதற்காக டெலகோவா வளைக்குடாவுக்கு சென்று பிரிட்டிஷ் துணைத்துாதரகத்தில் நுழைந்து தான் ஒரு ஏழை இந்தியன் என்றும் தனக்கு பம்பாய் செல்ல இலவசப் பயணச்சீட்டு தேவைப்படுகிறது என்றும் சொன்னபோது அவர்கள் அவனை காந்தியின் மகனென அடையாளம் கண்டு கொண்டனராம். காலன்பாக் அவனை அழைத்து வர கிளம்பியபோது காந்தி அதனை மறுத்து விட்டு இரண்டு தந்திகளை உடனுக்குடன் அனுப்பி மகனை திரும்ப அழைத்து வந்திருந்தார்.  

பின்னர் இந்த செய்திகளெல்லாம் காதுக்கு எட்டியபோது கஸ்துார் எவ்வித உணர்வுமின்றி கேட்டுக் கொண்டிருந்தார்.

ஜோஹானஸ்பர்க்கிலிருக்கும் காந்தியின் அலுவலக அறையில் தகப்பனும் மகனும் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனராம். ஹரிலாலின் கேசமும் உடைகளும் கலைந்திருந்தன. முகம் வழக்கமான களையை இழந்து சற்றே வீங்கினாற்போலிருந்தது. கண்கள் ஓரிடம் நிற்காமல் அலைப்பாய்ந்தன. ஆனால் அவை எந்தவொரு கணத்திலும் அவை தகப்பனின் மீது நிலைக்கொள்ளவேயில்லை. இருவருக்குமிடையே நிலவிய மௌனத்தை அவன் பொருட்டாக கருதியது போலின்றி இருந்தானாம். 

காந்தி மகனை நேராக பார்த்தார். “உனக்கு என்ன பிரச்சனை ஹரி? ஏன் கிளம்பிப் போனாய்? அதுவும் யாரிடமும் சொல்லாமல். நமக்கிருக்கும் நிதி நிலையில இந்த பயணம் சாத்தியப்படாதுன்னு நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதை நீ கருதிக்கவே இல்லை. சத்யாகிரகியானவன் இப்படி போராட்டத்தை கை விட எந்த வித நியாயமும் இல்லைன்னு உனக்கு தெரியாதா?“

“இதை தவிர உங்களால வேற எதையுமே யோசிக்க முடியாதாப்பா?”

“நீயே சொல்லு. நீ எதை யோசித்தாய்?”

“நீங்கள் உங்கள் மகன்களுக்கு தகப்பனைப் போலில்லாமல் ரிங் மாஸ்டரை போல நடந்துக்கிறதா உங்களுக்கு தோன்றியதே இல்லையா அப்பா?”

“மணிலாலோ ராமாவோ தேவாவோ அப்படி சொன்னதில்லையே ஹரிஹர்” 

“ஆனா நான் சொல்றேன். எனக்கு அப்படித்தான் தோணுது. நீங்க என் சுயத்தை அங்கீகரிக்க மறுக்குறீங்க”

“பெற்றவங்க பிள்ளைங்களை வழி நடத்தறது தப்பா ஹரி?”

“பிள்ளைங்க படிக்கணும்னு ஆசைப்படறது தப்பா அப்பா?”

“பகவான் ராமகிருஷ்ணர், தயானந்த சரஸ்வதி, சிவாஜி, ராணா பிரதாப் இவங்கள்ளாம் உயர்க்கல்வியோ ஆங்கிலக்கல்வியோ பயின்றவங்களா? தாய்நாட்டுக்கு தொண்டு செய்யறதுக்கு கல்வி தேவையில்லை ஹரி” 

“அது உங்களோட அனுமானம்ப்பா. ராணடே, கோகலே, திலகர், லஜபதிராய் இவங்கள்ளாம் உங்களுக்கு மறந்து போச்சாப்பா? இனிமே இதை பற்றிப் பேசி பிரயோஜனமில்லை. நான் கிளம்பறேன். என்னை என் போக்கில அனுமதியுங்க… இப்பவும் இந்த கடிதம் எழுதி வைக்காமலோ ஜோசப் அண்ணாக்கிட்டே தகவல் சொல்லாமலோ கூட போயிருக்கலாம். ஆனா நான் இன்னும் உங்க மேல மரியாதை வச்சிருக்கேன்”

ஹெர்மானும் மற்ற நண்பர்களும் பரிதவிப்போடும் ஒருவர் எண்ணுவதை மற்றவரிடம் பகிராமலும் தகப்பன்-மகன் விவகாரத்தில் தலையிடாமலும் அறைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தனர். மௌனம் கனத்த திரையாக அவர்களை சூழ்ந்திருந்தாலும் அது எந்நேரமும் கிழிந்து விடுவோமோ என்ற பயம் எல்லோரிடமும் இருந்தது.

“நானே சட்டத்தொழிலிருந்து விடுபடத்தான் எண்ணுகிறேன் ஹரி”

“ஆனாலும் நீங்கள் பாரிஸ்டர்தானே அப்பா?”

“அதை வைத்து நான் பணம் சம்பாதிக்க விரும்பல ஹரி”

“ஆனா இதனால் மரியாதையும் சுயகௌரவமும் உங்களுக்கு கிடைச்சிருக்கே?”

“சத்யாகிரகியொருவன் இதற்கு எந்தவிதத்திலும் குறைந்தவன் இல்லை ஹரி“

“நீங்கள் எப்பவுமே நீங்க நினைச்சதை மட்டும்தான் செஞ்சிட்டு வந்துருக்கீங்க. ஆனா நாங்க விரும்பினதை செய்ய நினைச்சா அது தப்புன்னு சொல்றீங்க. உங்களை சுற்றியிருக்கறவங்க கூட நான் ஏன் உங்கள் விருப்பப்படி நடக்கக்கூடாதுன்னு கேட்கிறார்கள்”

மகனை பார்த்து மென்மையாக சிரித்தார் காந்தி. “ஹரிலால் நீ சரஸ்வதிசந்திரா நாவலை படிச்சதோட விளைவுதான் இது. அதில் வரும் நாயகன் தன் தந்தை மீது பற்றற்று கடிதம் எழுதி வைத்து விட்டு வெளியேறியதை நீ செயலாக செய்து பார்க்க ஆசை கொண்டு விட்டாய்” 

“நீங்கள் உங்கள் கோணத்தில் மட்டும்தான் சிந்திப்பீர்களா அப்பா? நீங்கள் எங்களுக்கென நேரம் ஒதுக்கவில்லை என்பதோ எங்களைக் கவனிக்கவே இல்லை என்பதோ என்றாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? இதற்கெல்லாம் நீங்கள் வகுத்துக் கொண்ட பணிகள்தான் காரணம் என்றால் அவை எல்லாவற்றையும் விட உங்கள் மகனான நான்தான் முதன்மையானவன்னு நீங்க எப்பவாவது உணர்ந்திருக்கீங்களா? நீங்க ஏம்ப்பா எங்களை மறந்து போனீங்க. புழு குளவியாகறதுக்கான கதகதப்பை நீங்க ஒருபோதும் கொடுக்கவேயில்லை. அகிம்சையை பத்தி பேசற நீங்க ஏன் உங்க சொந்த மகன்களிடம் ஆயுதம் ஏந்தி நிக்கிறீங்க”

அவர் எதையோ பேச வந்து பின்னர் தன்னை அமைதியாக்கிக் கொண்டார்.

“நீங்க எங்களை உங்க கிட்டேயிருந்து நகர்த்தி வைக்கறதுக்காக கோபம் என்னும் ஆயுதத்தை கையில எடுத்துக்கிட்டீங்க. உங்களுக்கு எங்களிடம் அன்பாக பேச ஏம்ப்பா எதுவுமே இல்லாம போச்சு? நான் உங்களிடம் பேச முற்படும்போதெல்லாம், நீங்கள் அதை கேட்டு முடிப்பதற்குள் பொறுமை இழந்துடுவீங்க. மற்றவர்களுக்கு எதிரிலேயே என்னிடம் முட்டாள்தனமாக பேசாதே என்பீர்கள். இதற்கெல்லாம் காரணம் நீங்கள் உங்களை முழுமையான அறிவு கொண்டுள்ளதாக நினைச்சுக்குறீங்க. அதனால்தான் எல்லாவற்றுக்கும் என்னுடன் விவாதம் செய்றீங்க. மீறி விவாதித்தால் அதையும் வெறுப்பால் அடக்கி வெல்கிறீர்கள். எது உண்மை என்று அறிவதை விட அதை விதிக்கப்பட்டது என்று நம்புறீங்க. அப்பா… இது மேலும்  மேலும் என்னை மனச்சோர்வுக்குள்ளாக்குது. நடக்கும்போதும் உறங்கும்போதும் விழிக்கும்போதும் அமரும்போதும் படிக்கும்போதும் எழுதும்போதும் எங்களுக்குள் உங்களைப் பற்றிய பயத்தை துாண்டி விட்டுக்கிட்டே இருக்கீங்க” 

“அவரை யாருமே எதிர்த்து பேசியிருக்கவில்லை” அறைக்கு வெளியே மௌனத்தை கீறிக் கொண்டு முதற்குரல் ஒலித்தது.

“அது அவர் காட்டும் அன்பினால் கட்டுண்டுப்போவதால்” ஜோசப் ராயப்பனின் குரல் கனிந்திருந்தது.

“ஆனால் அவர் மகன்களிடம் அடக்குமுறையை மட்டுமே கையாள்கிறார். அவர் நவீன காலத்தின் தொழில்களின் மீது பற்றிழந்து விட்டதால் அவரது மகன்கள் நவீனக்கல்வியை பெற அனுமதி மறுக்கிறார். அவர் பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தலால் அவரது பிள்ளைகளும் அப்படியே செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட அவருக்கிருக்கலாம். ஹரிலாலும் மணிலாலும் சத்யாகிரகிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். கைதாவதிலிருந்து நிலத்தில் பாடுபடுவது வரை அவர் தந்தை விரும்பியதையே அவர்கள் செய்ய வேண்டும் என்று கருதுவது இந்த காலத்து பிள்ளைகளிடம் அதிகப்படியான எதிர்பார்ப்பு அல்லவா?” 

“ஆனால் இது இந்துக் குடும்பங்களில் குடும்பத்தலைவர் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும் வழக்கமான நடைமுறைதானே?” என்றார் சுரேந்திரமெத்.

ஆனால் அது அலுவலக அறைக்குள் கேள்விக்குரியதாக இருந்தது.

“நீங்க இன்னும் வேறுப்பட்ட கருத்துகளையோ அல்லது விமர்சனங்களையோ கேட்பதற்கு உங்களை ஆட்படுத்திக்கலைப்பா. ஒருவேளை உங்களைச் சுற்றியுள்ளவர்களை அதற்கு நீங்க அனுமதிக்கலையோ என்னவோ? அதனாலதான் நான் பேசறது உங்களுக்கு ரொம்ப அதிகமா தெரியுது. என் எண்ணங்களை சின்னாபின்னப்படுத்தி என் சிறகுகளை வெட்டி விட்டுட்டீங்க. உங்களுக்கு பிடிச்சமாதிரி பாதையை போட்டு வச்சிட்டு அதுல எங்களை நடக்க சொல்றீங்க. என் திறமைகளை நான் எடை போட்டு பார்க்கறதுக்கு என்னை நீங்க அனுமதிக்கவே இல்லைப்பா. எனக்காக நீங்களே அதை செய்து பாக்றீங்க… நான் சொல்றது உங்களுக்கு புரியுதாப்பா?“ 

“நிச்சயமா புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன் ஹரி… உன் தந்தை உனக்கு கெடுதல் செஞ்சுட்டேன்னு நினைச்சின்னா தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடுப்பா”

“அப்பா… நீங்க இப்படியெல்லாம் பேச வேண்டாம். அது எனக்கு மேலும்  கஷ்டத்தைத் தான் தரும். நான் கொஞ்சநாள் தனியா இருக்கணும்னு நினைக்கிறேன். மனசு கொஞ்சம் தணிஞ்ச பிறகு நானே இங்கே வந்துடுறேன்”

“நல்லது… நீ இந்தியாவுக்கு போய்ட்டு வா. ஆனா உனக்கான கடமைகள் இங்கே காத்திருக்குங்கிறதை மறக்காதே ஹரி”

“நிச்சயமா… அதை நான் கடிதத்தில் கூட தெளிவா எழுதியிருந்தேன் அப்பா“ 

அவர்கள் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தபோது நண்பர்கள் அவர்களை வரவேற்க காத்திருந்தனர். ஹெர்மான், ஹரிலாலை நெருங்கி அணைத்துக் கொண்டார். பிறகு டால்ஸ்டாய் பண்ணையில் கஸ்துாரை சந்தித்தபோது அதையே வேறுவிதமாக கூறினார். “குழந்தை பெற்றிருக்கும் உங்கள் மருமகளிடம் ஹரி கொஞ்சநாள் இருந்துட்டு வரட்டும் பா”

ஆனால் இதை என்னால் நம்ப முடியாது. சத்தியாகிரக போராட்டம் கெட்டு விட கூடாது என்பதற்காக மருமகளை இங்கிருந்து பிரித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தவர் அவரது கணவர். மனைவியுடன் செல்ல துடிக்கும் அவனது உள்ளத்து தவிப்பை அவர் அறியாமலா இருந்திருப்பார்? இருந்தபோதிலும் அவன் வாய் விட்டே கேட்ட பிறகும் அனுமதிக்க மறுத்தவர் இப்போது எப்படி ஒப்புக் கொண்டார்? ஏன் மகனே சென்று விட்டாய்? உனக்கு தந்தை மட்டும்தான் இருக்கிறாரா? உனக்காக உருகிக் கொண்டிருக்கும் தாயை நீ எண்ணிப்பார்க்கவே மாட்டாயா? 

அவருடைய மகன் ஹரிலால் இந்தியாவுக்கு கிளம்பி விட்டான். யாருமறியாமல் செல்லத் துணிந்தவன் இப்போது தகப்பனாரின் ஒத்திசைவோடு செல்லவிருக்கிறான். இனி என் மகனை நான் எப்போது காணப் போகிறேன்? என் வயிற்றின் கதகதப்பில் உயிர் பிடித்து வந்தவன் இன்று கண்டம் விட்டு கண்டம் தாவி எங்கோ செல்லவிருக்கிறான். அவரிடம் விடைப்பெற்றுக் கொள்ள வந்தபோது அவன் முகம் அன்பான தாயை விட்டு பிரியும் பரிதவிப்போ மனைவி மக்களை பார்க்கவிருக்கும் மகிழ்ச்சியோ ஏதுமற்றிருந்தது. அவனை வழியனுப்புவதற்காக அவன் தந்தையும் அவர் நண்பர்களும் புகைவண்டி நிலையம் வரை செல்லவிருக்கிறார்கள். பிறகு அவன் தனியே பயணிப்பான். அவன் மனைவியும் குழந்தைகளும் அவளுடைய பெற்றோரின் முறையான பராமரிப்பிலிருக்கும்போது பெற்ற தாயையும் உடன் பிறந்த சகோதரர்களையும் தென்னாப்பிரிக்க அரசியல் களத்தில் காந்தியின் மகனாகவும் ஹரிலாலாகவும் பெற்றுக் கொண்டிருக்கும் பெயரையும் புகழையும் விடுத்து விட்டு எது அவனை இங்கிருந்து கிளப்பிக் கொண்டு போகிறது?

தொலைவில் புகைவண்டியின் சைரன் ஓசை கேட்டது. ? மகனே… நீ கிளம்பி விட்டாயா…? மகனே…

The letters handwritten in Gujarati in Mahatma Gandhi’s own hand were sent from Vardha near Nagpur in June 1935.

***

அன்றைய தினம் அவர் கணவர் வழக்கத்திற்கு முன்னதாகவே  பிரார்த்தனை நடைபெறும் கூடத்திற்கு வந்திருந்தார். அந்தி மயங்கத் தொடங்கியிருந்தது. மகன் இந்நேரம் டெலகோவா வளைக்குடாவுக்கு சென்றிருப்பானோ…? அவன் செல்லவிருக்கும் கப்பல் என்றைக்கு புறப்படவிருக்கிறது? எப்போது இந்தியாவுக்குச் சென்று சேர்வான்? எதையோ இழந்தவனைப் போன்றிருக்கும் அவனுக்கு ஒட்டு மொத்த குடும்பத்தையும் விட்டு பிரிந்திருக்கக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பும் தனிமையும் நல்லதா… கெட்டதா… சரியா… தவறா..? கஸ்துாருக்கு எண்ணங்களே சித்திரவதைகளாயின. அவர் குழப்பமும் துயரமும் சூழ்ந்த மனதை பலவந்தமாக பிடுங்கியெடுத்து பிரார்த்தனையில் ஒருங்கிணைக்க முயன்றார். குடியிருப்புவாசிகள் பிரார்த்தனைக்கு வரத் தொடங்கியிருந்தனர். சிறுவர்சிறுமியரும் பள்ளி விட்ட பிறகு விளையாக்ட கிடைத்த நேரத்தை முறையாகவும் முழுமையாகவும் அனுபவித்து விட்டு அகன்றும் நீண்டுமிருந்த அந்த பிரார்த்தனைக்கூடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அதற்கு முன்னரே காந்தி பிரசங்கத்தை தொடங்கியிருந்தார்.

அலைக்கழிந்த மனதுடன் போர்க்களத்தில் நின்றிருந்த அர்ஜுனனின் மனக்கலக்கத்தை கண்டு பகவான் கிருஷ்ணர், எவனொருவன் தன் மனம் முழுவதையும் என்னிடம் அர்ப்பணம் செய்து என்னையே அடைக்கலமாகக் கொண்டு கர்மயோகத்தை அனுசரித்து வருவானோ, அவன் என்னை பூரணமாக அறிந்துக் கொள்வான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அனுபவத்தை அடிப்படையாக கொண்ட ஞானம் ஒருவனுக்கு ஏற்படுமாயின், பின்னர்  அவனுக்கு இந்த உலகத்தில் மேற்கொண்டு தெரிந்துக்கொள்ள வேண்டியது எதுவுமே இல்லை. எனினும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவன்தான் அத்தகைய ஞானத்தை அடைய முயற்சிப்பான். அவர்களிலும் ஒரே ஒருவன்தான் அதில் வெற்றியும் பெறுவான். 

அவர் குரல் கனிந்திருந்தது. கண்கள் யார் முகத்தையும் பாராமல் கறுத்த அந்திப்பொழுதை நோக்கிக் கொண்டிருந்தது. 

மண், தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், அறிவு, அகங்காரம் ஆகிய எட்டும் சேர்ந்ததே எனது இயல்பாகும். நீரின் சுவையிலும் சூரியசந்திரனின் ஒளியிலும் ஓம் என்ற நாதத்திலும் விண்ணின் ஓசையிலும் மண்ணின் மணத்திலும் தீயின் வெம்மையிலும் உயிர்களின் ஜீவனிலும் துறவிகளின் தவத்திலும் மனிதனின் முயற்சியிலும் அறிவாளிகளின் அறிவிலும் பலவான்களின் பலத்திலும் நானே இருக்கிறேன். சத்துவ, ரஜோ, தமோ என்னும் முக்குணங்களுக்கு மயங்கிய மக்கள் அழிவற்ற என்னை அறிந்துக் கொள்வதில்லை. இந்த குணங்களால் உருவான என்னுடைய மாயையை கடந்து வெற்றிப் பெறுவது கடினமாகும். ஆனால் என்னையே யார் சரணடைகிறார்களோ அவர்களால் இம்மாயையை கடக்க முடியும். சிலர் வேதனையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்காக என்னை பூஜிக்கின்றனர். சிலர் என்னை பற்றிய ஞானம் ஏற்படுவதற்காக என்னை வணங்குகின்றனர். மூன்றாமானவர்களோ தங்கள் ஆசைகள் நிறைவேற வேண்டுமென்பதற்காகவும் மற்றும் சிலர் அவ்விதம் வணங்க வேண்டியது தங்களுடைய கடமை என்ற ஞானத்துடனும் அப்படி செய்கின்றனர். 

அவர் தனக்குள்ளாக கூறிக் கொள்பவரைப்போல அனுபவித்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.

என்னை பூஜிப்பதென்றால், என்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு புரிவதேயாகும். தங்களுடைய துன்பம் காரணமாக சிலர் தொண்டு செய்ய முன்வருகின்றனர். மற்றும் சிலர் தாங்கள் நலன் பெற வேண்டும் என்பதற்காக தொண்டு புரிகின்றனர். அத்தகைய நடவடிக்கைகளால் என்ன பலன் ஏற்படும் என்பதை அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் சிலர் தொண்டு செய்கின்றனர். நாலாவதான சிலர் அத்தகைய தொண்டின் பெருமையை அறிந்து அவ்விதம் செய்கின்றனர். அவர்களால் மற்றவர்களுக்கு தொண்டுப் புரியாமல் இருக்கவியலாது. இவர்கள்தான் ஞானிகளான என் பக்தர்கள். இவர்கள்தான் மற்றவர்களைக் காட்டிலும் என் அன்புக்கு பாத்திரர்கள். என்னைக் காட்டிலும் சிறந்தது எதுவுமில்லை என்பதை இவர்கள் அறிந்திருக்கின்றனர். 

ரயில் கிளம்பும் சமயம் காந்தி சன்னலோரம் அமர்ந்திருந்த தன் மகன் ஹரிலாலை முத்தமிட்டு அவன் கன்னத்தில் லேசாக தட்டிக்கொடுத்து, உன் தந்தை உனக்கு தவறிழைத்திருக்கிறேன் என்று நினைத்தால் அவரை மன்னித்து விடுவாயா ஹரி, என்றாராம். அப்போது அவர் கண்கள் லேசாக கலங்கியிருந்தனவாம். பின்னர் சன்னல் கம்பியை பிடித்திருந்த மகனின் கரத்தின் மீது தன் கரத்தை வளையமாக சுற்றிக் கொண்டாராம். 

“ஹரி என்ன பதில் சொன்னான்?” கஸ்துார் நண்பர்களிடம் ஆவலும் தவிப்புமாக கேட்டார்.

அவர் உரையில் இலயித்திருந்தார்.

மனிதனின் விருப்பு வெறுப்புகளின் விளைவாகவே இன்பமும் துன்பமும் ஏற்படுகின்றன. அவைதான் மனித வர்க்கத்தையே மாயையினால் ஆட்டி வைக்கிறது. எனினும் மாயையிலிருந்து தங்களை விடுதலை செய்துக் கொண்டு, தங்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் துாய்மையாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களுடைய விரதங்களில் உறுதியாக நின்று என்னை இடைவிடாது பூஜிக்கிறார்கள். நான் குற்றம் குறையற்ற பரப்பிரம்மம் என்பதையும், உடலோடு கூடிய எல்லா ஜீவராசிகளிடத்திலும் நான் இருக்கிறேன் என்பதையும் என்னுடைய சிருஷ்டித் தொழிலையும் அவர்கள் அறிகிறார்கள். ஸ்துால உலகம், தெய்விக உலகம், வேள்விகள் ஆகியவற்றை ஆட்கொண்டு நடத்தி வைப்பவன் நான்தான் என்பதை அறிந்து மன உறுதியையும் சாந்தியையும் யோக சித்தியையும் அடைந்து மரணத்திற்கு பிறகு பிறப்பு இறப்புகளிலிருந்து அறவே விடுதலை பெறுகிறார்கள். உண்மையான ஞானம் அவர்களுக்கு ஏற்பட்டதும் அவர்களுடைய மனம் அற்ப விஷயங்களில் ஈடுபடுவதில்லை. இந்த உலகம் முழுவதும் கடவுள் மயமாகவே அவர்களுக்கு தோன்றுகிறது. அவர்கள் கடவுளிடமே லயித்து விடுகிறார்கள்.

அவன் தகப்பனாரின் கையிலிருந்து தன்னுடைய விரல்களை மெள்ள விடுவித்துக் கொண்டானாம். 

மரங்களில் காற்றசைவு இல்லாததால் விளக்கு நிதானமாக எரிந்துக் கொண்டிருந்தது. ஒளிக்கு நடுவில் காந்தி அமர்ந்திருந்தார். இமைகள் கண்களில் திரையாக கவிழ்ந்திருந்தன. 

கணவர் கசப்பான எதோவொன்றை விழுங்கிக் கொண்டிருக்கிறார் என்பது வரை கஸ்துாரால் புரிந்துக் கொள்ள முடிந்தது. 

“ஆம்… இனி இது எப்போதுமே கசப்பானதுதான்” அவருள்ளம் முணுமுணுத்துக் கொண்டது.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.