
தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி
அடுத்த நாள்
அம்மா வாய் திறக்காமல் மௌனமாக படுத்திருக்கிறார். பேச்சின்மை அம்மாவின் மீது கவிழ்ந்திருக்கிறது. கையில் அணிந்திருந்த வளையல்களை கழற்றி தலையணை அடியில் வைத்து விடுகிறார். போர்த்தியிருந்த போர்வையை பந்தாக சுழற்றி தரையில் வீசி எறிகிறார். தலைக்கு கீழ் இருந்த தலையணையை எடுத்து ஒரு மூலையில் வைத்து விடுகிறார். குஷனை அறையின் வாயிலருகே தூக்கி எறிகிறார். கீழே விரிக்கப்பட்டிருக்கும் படுக்கை விரிப்பை இழுக்க முயற்சித்து, தலையை இடமும் வலமும் சுழற்றுகிறார்.
சூசன் அறையில் நுழைந்ததுமே,
அம்மா, இதென்ன? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்?
அம்மா, நீங்கள் இப்படி செய்யலாமா?
தேவைப்படும்போது இப்படி செய்யத்தான் வேண்டும்.
நான் படுக்கை விரிப்பை மாற்றித் தருகிறேன் அம்மா.
அம்மா ஒன்றும் பேசாமல் கட்டை அவிழ்க்கத் தொடங்குகிறார். பஞ்சு, கட்டு போடும் துணி எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக இழுத்து எடுத்த பின் அவற்றை ஒன்று சேர்த்து பந்து போல சுருட்டி பேசினில் வீசி எறிகிறார்.
சூசன் அக்காவை அழைத்து வருகிறாள்.
மகள், அருகே வந்து, மென்மையான குரலில் –
இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது அம்மா?
நீ எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயோ, அது தான் நடக்கிறது.
அம்மா, இப்படி கட்டை பிரித்துப் போடுவதால், காயத்திலிருந்து ரத்தமும் சீழும் வராதா? உங்களுக்கு உஷ்ணமாக இருக்கிறதா?
இல்லை. எனக்கு குளிர்கிறது.
மகள் கூலரை அணைத்து விடுகிறாள்.
அம்மா கோபத்துடன் –
வெயிலோ குளிரோ, எதுவாக இருந்தாலும் சரி, இப்போதே இங்கிருந்து எல்லா சாமான்களையும் வெளியே எடுத்துப் போட்டு விடு.
அம்மா தன் கழுத்திலிருந்து மாலையை கழற்ற முயற்சிக்கிறார்.
கழற்றி விடு. வேண்டாம். இப்போது எனக்கு எதுவும் வேண்டாம்.
மகள், மிகவும் அன்பாக –
இப்படி எல்லாம் செய்யக்கூடாது அம்மா!
அம்மா விழிகளை விரியத்திறந்து மகளைப் பார்க்கிறார்.
அம்மா, உங்களுக்கு எதாவது சாப்பிட வேண்டுமா அல்லது வேறு ஏதேனும் ஆசை…..
அம்மா சுட்டு விரலை உதடுகளின் மீது வைத்து,
பேசாதே!
அம்மா, எந்த விஷயம் உங்களை இப்படி அலை கழிக்கிறது? என்னிடம் சொல்லுங்களேன். தயவு செய்து சொல்லுங்களேன் !
அம்மா நீண்ட நேரம் அறையின் வாசற் கதவை பார்த்தபடியே படுத்தி ருக்கிறார். பிறகு, ஜாடை காட்டி மகளை அருகில் அழைத்து, காதில் கிசுகிசுப்பதைப் போலக் கூறுகிறார்.
என் மீது போர்த்தியிருந்த போர்வையை நான் கழற்றி எறிந்ததைப் போல, என்னுடைய உடலையும் கழற்றி எறிந்து விடு. என்னிடமிருந்து என் உடலைப் பிரித்து விடு. என்னால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.
மகள், அருகே வந்து குனிந்து, மௌனமாகவும் கவனமாகவும் அம்மாவைப் பார்க்கிறாள்.
என்னுடைய துணிகள் எதையும் வீட்டில் வைத்திருக்க வேண்டாம். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிடு. எங்காவது அனுப்பிவிடு. வெகு தூரம். கண்களில் படாதவாறு, அவற்றை தூக்கி எறிந்து விடு.
அம்மாவின் மனவெளியில் நிகழ்ந்து கொண்டிருப்பதை, ஒரு நொடியில் கைப்பற்ற முடிந்தவள் போல மகள் பார்க்கிறாள். குரலில் வெளிப்படும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு –
அம்மா, எல்லாம் உங்கள் விருப்பப்படியே நடக்கும். ஆனால் நான் சொல்வதையும் கொஞ்சம் தயவு செய்து கேளுங்கள். நீங்கள் உடுத்திய உடைகளை நான் யாருக்கும் தர மாட்டேன். அவற்றை நான் உடுத்திக் கொள்வேன். அம்மா, கேட்டுக் கொண்டுதானே இருக்கிறீர்கள்? இந்த விஷயமாக நீங்கள் வேறு என்ன சொன்னாலும், நான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை.
அம்மாவின் முகத்தில் குழப்பம் சற்றே அகல, தலையணையில் முகத்தை புதைத்துக் கொள்கிறாள்.
அடுத்த நாள் காலை அம்மா, பூரண விழிப்புணர்வோடு இருக்கிறார்.
சூசன், இன்று நீ ஏன் மிகவும் மெதுவாக நடக்கிறாய்? இரவு சரியாக தூங்கவில்லையா?
இல்லையே அம்மா, நன்றாக தூங்கினேனே!
அப்படி என்றால், நான் தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்தேனா? சூசன், உன்னுடைய நோயாளி தூங்கினால்தான் நீ தூங்க முடியும். நோயாளி விழித்துக் கொண்டிருந்தால் நீயும் விழித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
சூசன் சிரிக்கிறாள்.
நான் சொல்வதைக் கேள் சூசன். என் அருகே வா. கையெழுத்திட்டாகிவிட்டது. இனி புறப்பட வேண்டியது தான் பாக்கி. தேவையான ஆவணங்கள் எல்லாம் தயாராகி விட்டன. சூசன், கொஞ்சம் வெளியே எட்டிப் பார். வானத்தில் மேகத்துண்டு ஏதேனும் தெரிகிறதா?
சூசன், பால்கனியிலிருந்து திரும்பி, அம்மா வானம் பளிச்சென்று சுத்தமாக இருக்கிறது ஒரு மேகமும் இல்லை. கண்ணை கூசுகிற வெயில்.
நான் குளிப்பதற்கான ஏற்பாடுகளை செய். இன்று நான் உடம்பை டவலால் துடைத்துக் கொள்ள போவதில்லை. குளியலறையில் ஷவரில் குளிக்கப் போகிறேன்.
அம்மா, டாக்டர் சாஹிபுக்கு ஃபோன் செய்து கேட்டுக் கொள்ளலாம்.
இல்லை. அவருடைய வேலை மருந்து கொடுப்பதுதான். அவருடைய வேலை முடிந்துவிட்டது. இப்போது அவர் என் உடலின் மருத்துவர் இல்லை. சூசன், இந்த எல்லா டாக்டர்களுக்கும் மேலாக, ஒரு பெரிய டாக்டர் இருக்கிறார். இம்மாதிரி நேரங்களில், தனது மருத்துவக் கட்டணமாக, முழுதாக மனிதர்களையே வசூல் செய்து கொள்வார்.
அம்மா, நான் அக்காவை எழுப்புகிறேன்.
அவளைத் தூங்க விடு. அவளுக்கு தலைக்கு மேல் வேலை காத்துக்கிடக்கிறது. கொஞ்சம் ஓய்வெடுக்க முடிந்தால் நல்லது தானே.
எந்த சோப்பு போட்டு குளிப்பாட்டப் போகிறாய் என்னை?
இதோ, இந்த சோபால்தான் அம்மா.
வேண்டாம். இது வேண்டாம். என்னுடைய அலமாரியில் ஒரு டப்பா வைத்திருக்கிறேன் அதிலிருந்தே ஒரு கட்டியை எடுத்து வா. அந்த சோப்பு குழந்தைகளுக்கானது. சருமத்தை ஈரப்பசையோடு மிருதுவாக வைத்திருக்கும்.
மகள், அருகில் நின்று கொண்டு கவலையோடு பார்க்கிறாள்.
அம்மா, குளிப்பதற்கு முன் காலை உணவு சாப்பிட்டு விடுகிறீர்களா?
நீ சொல்கிறபடியே செய்கிறேன். இன்று காலை உணவாக என்ன கொடுக்கப் போகிறாய்?
உங்களுக்கு எது விருப்பமோ அது. மாம்பழச் சாறு… டோஸ்ட்… முட்டை… பரோட்டா… தயிர்… வெண்ணை…
அம்மா சிரிக்கிறார்
என்னுடைய எடையை கொஞ்சம் கூட்டி மேலே அனுப்பலாம் என்று நினைக்கிறாயா? அங்கே எனக்கு உழைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கப் போகிறது? பெண்ணே, இங்கே, இந்த உலகில் தான் மனிதன் தன் கைப்பட ஏதையேனும் உருவாக்கி அழகு பார்க்க முடியும். அங்கு எந்த வீட்டிலும் அடுப்பு எரியாது. வயிற்றில் பசியும் ஏற்படாது. வைகுண்டத்தை யார் கண்ணால் பார்த்திருக்கிறார்கள்? வேறு எங்கும் இல்லை… உயிர்த்திருப்பவர்களுக்கான வைகுண்டம், இதோ இங்கே இருக்கிறது. இங்ககே தான் இருக்கிறது.
அம்மா, இரவு தூக்கத்தில் திடீரென கண் விழித்து –
உங்கள் இருவருக்கும் என்ன ஆகிவிட்டது? இப்படி கவனம் ஏதும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களே. எழுந்து வந்து நான் எப்படி இருக்கிறேன் என்று பாருங்கள்!
மகள், அருகே வந்து குனிந்து பார்க்கிறாள்.
என்ன விஷயம், அம்மா?
காக்கைகள் வெகு நேரமாக கரைந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் இரைச்சலை என்னால் தாங்க முடியவில்லை. அவற்றை விரட்டி விடு. தூர விரட்டி விடு. இரைச்சல் என் காதுகளில் விழாமல் இருக்கட்டும்.
மகள், ஜன்னலைத் திறந்து காக்கைகளை விரட்டுவது போல குரல் எழுப்புகிறாள். பிறகு, ஜன்னலை மூடிவிட்டு அம்மாவை அமைதிப்படுத்துகிற குரலில்,
அம்மா இப்போது தூங்குங்கள். எல்லாம் பறந்து விட்டன.
எல்லாம் என்றால்?
புறாக்கள், அம்மா.
அவை புறாக்கள் தானா?
ஆமாம்.
அவற்றின் தொண்டை வளையைக் கவ்வ, வாசலில் பூனை கட்டாயம் காத்துக் கொண்டிருக்கும்.
இல்லை அம்மா. வெளியே எதுவும் இல்லை.
உனக்கு தெரியாது பெண்ணே. சிங்கம் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. விழுங்கி விடும்.
சூசன், ஸ்பூனால் அம்மாவின் வாயில் தண்ணீர் விடுகிறாள்.
மரத்தடியில் விளக்கை யார் வைத்து விட்டு சென்றது? காற்றடிக்கிறது. அணைந்து விடும். எனக்குள் விரிசல் விட்டுக் கொண்டிருக்கிறது. என் அங்கங்கள் துண்டு துண்டாகி, உடலை விட்டு பிரிந்து கொண்டிருக்கின்றன. ஒளிரும் நீல முகம் படைத்த இவன் யார்? என்னை அழைத்துப் போக வந்திருக்கிறானா? உடனடியாக என் மகனைக் கூப்பிடு…
என்னருகே வா மகனே… என்னை வழி யனுப்பு!
சூசன், ஏன் அறையை இருட்டாக்கி வைத்திருக்கிறாய்? என் காலுக்கு கீழே இருக்கும் படிகளை நகர்த்திவிடாதே. நான் தானாகவே படியேறுவேன். என்னுடைய வெள்ளை செருப்பைக் கொண்டு வா. நான் மஷோப்ரா வரைக்கும் போக வேண்டும். பெண்ணே, அப்பாவிடம் எனக்காக காத்திருக்க சொல். நான் வந்து கொண்டிருக்கிறேன்.
நாம் காளி கோவில் வழியாக ஏன் சென்று கொண்டிருக்கிறோம்? அங்கு ஆடு மாடுகளை வெட்டிக் கொண்டிருப்பார்கள். தள்ளிப் போ…எட்டப் போ… மனிதர்களைத் தின்னும், தாமிர நிற மிருகம் என் பின்னாடி வந்து கொண்டிருக்கிறது.
எங்கிருந்து, எப்படி தப்பிப்பது? அது தன் கொம்புகளால் என்னை தூக்கிக் கொள்ளும்.
இது என்ன, என் முன் இருட்டு இப்படி முடிவில்லாமல்விரிந்து கொண்டே போகிறதே!
என்னை எதற்காக போர்த்துகிறாய்?
என் கண்களைத் தொடாதே!
பெண்ணே, உன் சகோதரனைக் கூப்பிடு.
அவனை சீக்கிரம் கூப்பிடு.
கொட்டிலிலிருந்து என் குதிரையை அவன் அவிழ்த்து விடுவான்.
நான் குதிரையை சமுத்திரத்தை தாண்டி வேகமாக ஓட்டிச் செல்வேன்!
மகள், அம்மாவின் கையைத் தொட்டு –
அம்மா, நன்றாக நனைந்து முழுகிக் குளியுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
நீண்ட மூச்சு. நடுக்கம். பிறகு, அறை, மௌனத்தில் அமிழ்கிறது.