
தன் திருமணத்திற்கு வரவேண்டாம் என்று ராணி சொன்னதையும் மீறி வந்திருந்த முன்னாள் காதலன் குமரேசன் கீழ்வரிசைப்படியில் அமர்ந்து சித்தி குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தான். இரு தோழிகள், அம்மா, பக்கத்து வீட்டு ஜெயந்தி அக்கா குடும்பம், சித்தி குடும்பம், பெரியப்பா குடும்பம், எல்லாம் சேர்த்து பதினேழு பேர், இது பத்தாதா? தன் அம்மாவை அருகில் அழைத்து “இவனை யாரு கூப்பிட்டா?” என்று கேட்டாள் ராணி. அம்மா உதட்டைப் பிதுக்கினாள். ராணியின் அருகே அமர்ந்திருந்த பெரியப்பா மகள் இந்திரா சொன்னாள் “என்னக்கா உங்க ஆளு அப்படியே சாப்பிடற மாதிரி பாத்துட்டு இருக்கார்?”
மருதமலைக் கோவில் கோபுரத்தின் அருகே வாசற் படிக்கட்டுகளில் நண்பர்கள் நடுவே அமர்ந்திருந்த சந்திரன் சிவப்புப் பட்டுடுத்தி, கழுத்தொட்டிய அட்டிகையும் ஒரு சன்னச் சங்கிலியும் அணிந்து பெரிய சிவப்பு வட்டப் பொட்டிட்டு கோவில் படியில் குடையின் கீழ் அமர்ந்திருந்த ராணியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்படித் தன்னிடம் எதைப் பார்த்து திருமணம் வரை வந்து விட்டான் இவன் என்று ராணி யோசித்தாள். குமரேசன், கல்லூரியில் கூடப் படித்த சபரி, தன்னோடு வேலை செய்த கௌரிஷங்கர், இவர்களும்தான் காதலித்தார்கள், எவனாவது கல்யாணம் என்று வந்து நின்றானா?
ராணியின் அம்மா நிலைகொள்ளாமல் அலைந்தாள். பத்து மணிக்கு முன் தாலி கட்டி முடிக்க வேண்டுமே என்ற பதட்டம் அவள் முகத்தில். ராணி கைப்பேசியில் மணி பார்த்தாள். சந்திரன் தூரத்திலிருந்தே “இன்னும் பத்து நிமிடம்” என்று சமிக்கை செய்தான். சந்திரனின் தங்கை அவள் குடும்பத்துடன் கோவை வந்திறங்கிய விமானம் இரண்டு மணிநேரம் தாமதம். அரைமணி நேரத்தில் டாக்ஸி மருதமலைக்கு வந்துவிடும் என்று அரைமணி நேரம் முன்னால் சந்திரன் சொன்னான்.
சென்னையில் வேலை செய்து கொண்டிருந்த ராணியிடம் அவள் அம்மா சந்திரனைப் பற்றி கைப்பேசியில் சொன்னபோது “மா, எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்குன்னு அவங்க வீட்டுல சொன்னியா?”
“இரண்டு வாரம் கழித்து பையன் வீட்டுல பெண் பார்க்க வராங்க. நீயே நேர்ல…” சந்தித்தபோது சொன்னாள் ராணி.
“கல்யாணத்துக்கு அப்பறம் நீங்க வேலைக்குப் போணும், உங்க அம்மாவைப் பாத்துக்கணும். இதுக்கு எதுக்கு கண்டிஷன்? இதெல்லாம் உங்க உரிமை. உங்க விருப்புவேறுப்புகள், உங்க தனித்துவங்கள், உங்க தனிமை எதுக்கும் நான் இடைஞ்சலா இருக்க மாட்டேன், நீங்களும் அப்படியே இருந்தா நமக்குள்ள பிரச்சனையே இருக்காது” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் சந்திரன்.
சந்திரன் வீட்டினர் சந்தோஷமாய் உணவருந்திவிட்டுச் சென்றதும் ராணி சமையலறையில் அம்மாவுக்கு உதவிக்கொண்டே சொன்னாள் “எல்லாத்துக்கும் சரீன்னு சொல்லறான். டயலாக் வேற பேசறான். அதுதான் சந்தேகமா இருக்கு.”
கழுவிய பாத்திரங்களை நகர்த்தியபடி அம்மா சொன்னாள் “ரெண்டு வருஷமா தேடியும் பொண்ணு கிடைக்கலையாம். நீ என்ன சொன்னாலும் சரின்னு சொல்லச் சொல்லியிருப்பாங்க. பையன் டயலாக் மனப்பாடம் பண்ணாமலா வருவான்?“
சென்னைக்குத் திரும்பிய அடுத்த நாள் பெங்களூரில் திருமணமாகி வாழ்ந்து வந்த இந்திராவிடம் கைப்பேசியில் நடந்ததைக் கூறிவிட்டு ராணி கேட்டாள் “நல்லவனாத் தான்டீ தெரியறான். பழசை எல்லாம் அவன்கிட்ட சொல்லிடட்டுமா?”
“அவர் கேட்டாரா?”
“கேக்காமலே சொல்ல வேண்டாமா?”
“எல்லாக் கதையும் கேப்பாங்க. கண்ணீர் கூட விடுவாங்க. படுத்து எந்திரிச்சதுக்கு அப்பறம் அவனையா நினைச்சேன்னு கேப்பாங்க.”
“இவன் அப்படி இருக்கமாட்டான்னு தோணுதுடீ இந்திரா.”
“இவரும் ஆம்பளைதானே? குடிக்கவே மாட்டேன்னு கல்யாணத்துக்கு முன்னாடி சொன்ன என் புருஷன் மூனே மாசத்துல சாராய நாத்தத்தொட வந்து மோப்பம் புடிக்கற நாய் மாதிரி ஏறி… வேணாம்க்கா நீயாவது நல்லா இரு”
ராணி சந்திரனிடம் எதுவும் சொல்லவில்லை. வரதட்சணை இல்லாமல் மூன்று மாதத்தில் மருதமலைக் கோவிலில் எளிய முறையில் திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டது. ஏதேதோ காரணங்கள் சொல்லி சந்திரன் இடையே இரண்டு மாதத்தில் ஐந்து முறை சென்னைக்கு வந்தான். இவனுக்கு இப்போதுதான் முதன்முறையாக காதல் வருகிறதோ என்று ராணி வியக்கும்படி மெரினாவிலும் திருவான்மியூரிலும் கடற்கரைகளில் காதல் சொட்ட ராணியையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்திரன். தெரியாததுபோல் ராணியின் கையைத் தடவுவதும் தோளை இடிப்பதும் என்று இருந்த அவன்மேல் பரிதாபப்பட்டு ஒருமுறை மெரினா கரையில் வைத்து ராணியே சந்திரன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“யாரோ வந்திருக்காங்க” என்று ராணியின் தோளைத் தொட்டாள் அவள் தோழி இந்து. கோவில் வாசலில் சந்திரன் யார் காலிலோ விழுந்து கொண்டிருந்தான். ராணி எழுந்து சந்திரன் அருகே சென்று நின்றாள். தான் வேலை செய்த முதல் கம்பெனியில் மேனேஜர் என்று வந்தவரை அறிமுகப்படுத்திவிட்டு அவருடன் சந்திரன் பேச ராணி சற்றே ஒதுங்கி நின்றாள். குமரேசன் சந்திரனின் பின்னால் வந்து நின்றான். ராணி குமரேசனை எரிச்சலுடன் பார்த்தாள். “லாலி ரோடு வந்துட்டாங்க. பதினைஞ்சு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சந்திரன் குமரேசனைக் கவனித்தான். “இது குமரேசன், இவங்க பேமிலி முன்னாடி பக்கத்து வீட்டுல இருந்தாங்க” என்று அறிமுகம் செய்து வைத்தாள் ராணி.
சந்திரனுடன் கை குலுக்கிவிட்டு குமரேசன் சொன்னான் “ராணியோட பழைய ப்ரெண்ட் சார் நான். நீங்க ரொம்ப குடுத்து வெச்சவர்.”
“வெயிலா இருக்கு நான் கொஞ்சம் நிழல்ல இருக்கேன்” என்று சொல்லிவிட்டு நடந்த ராணி இந்திராவின் அருகே சென்று அமர்ந்தாள். குமரேசன் இன்னும் சந்திரன் பக்கம் நின்றிருந்தான். ராணி நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள்.
இதே குமரேசனைப் பார்க்கையில் ராணிக்கு உடல் குறுகுறுத்த நாட்களும் இருந்தன. இந்திரா நகர் குறுக்குத் தெருவில் இருந்த தாத்தா சொத்தான மூன்று வரிசை வீடுகளில் ஒன்று ராணியின் அப்பா சற்குணத்திற்கும், ஒன்று பெரியப்பா குடும்பத்திற்கும் உரித்தாக மூன்றாவது வீட்டை முத்துப்பிச்சை என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்கள். முத்துப்பிச்சை மாமா, தேவி அத்தை, குமரேசன், அவன் தங்கையர் இரட்டையர் யமுனா, ஜமுனா என்று ஐந்து பேர் கொண்ட குடும்பம். அவசரத்திற்கு வெளியூர் செல்ல வேண்டி வந்தால் குழந்தைகளை அடுத்த வீட்டில் விட்டுச் செல்லும் அளவு மூன்று குடும்பத்துக்குள்ளும் நல்ல பழக்கம் இருந்தது. இந்திரா, ராணி, யமுனா, ஜமுனா நால்வரும் எப்போதும் ஒன்றாய் விளையாட ராணியை விட இரண்டு வயது மூத்த குமரேசன் அவர்களோடு சேர்ந்து விளையாடியதே இல்லை.
எட்டாவது படிக்கும்போதே வயதுக்கு வந்து மேலான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டிருந்தாலும் ராணிக்கு பத்தாவது ஆரம்பத்தில்தான் குழந்தைகளின் விளையாட்டில் ஆர்வம் குறைந்து குழந்தைக்காக விளையாடும் ஆட்டத்தில் ஆர்வம் மிகுந்தது. நள்ளிரவில் ஓடு வேய்ந்த வரிசை வீடுகளில் எங்கிருந்தோ வந்த ஒரு முனகல் சத்தம் ராணியின் தூக்கத்தைக் கெடுத்து ஒரு அணையா நெருப்பை மனதுக்குள் பற்ற வைத்தது. எது எங்கிருந்து எப்படி எனப் பல விடையறியாக் கேள்விகளால் பின் வந்த இரவுகளில் ராணியின் மனம் நிரம்பிக் கிடந்தது. மளிகைக்கடை அண்ணாச்சி மகன் லுங்கியை மடித்து வெங்காயம் பொறுக்குவது சுவாரசியமான விஷயமாக மாறியது. ராணியின் பார்வையில் மீசை முளைக்காத குமரேசன் நாயகன் ஆனான். குமரேசனும் ராணியை வேறாகப் பார்க்க ஆரம்பித்தான். இருவரும் தெருக்குழந்தைகளை ஒரே நேரத்தில் கொஞ்சவும் தூக்கவும் முயற்சித்தார்கள். காதல் மொழி பேசத் தெரியாவிட்டாலும் இருவர் பார்வைகளிலும் பொறி பறந்து கொண்டிருந்தது.
நெய்வேலியில் சின்னப் பாட்டி இறந்தபோது அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா நால்வரும் ஊருக்குச் செல்ல ராணி, இந்திரா இருவரும் முத்துப்பிச்சை மாமா வீட்டில் மூன்று நாட்கள் தங்கினார்கள். முதல் நாள் மாலை தொட்டு இரவு வரை வீட்டுக்குள்ளே வளைய வந்துகொண்டிருந்த குமரேசன் ராணியையே பார்த்துக் கொண்டிருக்க நாயைக் கண்டு பதுங்கி சாலையைக் கடக்கும் பூனைபோல நடித்துக் கொண்டிருந்தாள் ராணி. இரவு உணவுக்குப் பின் தொலைக்காட்சியைப் பார்த்தபடி இந்திரா யமுனா ஜமுனா மூவரும் தூங்க அவர்களுக்கு அடுத்து ராணியைப் படுத்துக்கொள்ளச் சொன்னாள் தேவி அத்தை. அவளுக்கு அடுத்து ஒரு இடம் விட்டு குமரேசனும் முத்துப்பிச்சை மாமாவும் படுத்திருந்தார்கள். தேவி அத்தை அடுக்களை வேலைகளை முடித்துவிட்டு வருவதாகச் சொல்லி விளக்கை அணைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.
மேலே பார்த்துப் படுத்திருந்த ராணி இருட்டில் குமரேசன் கொஞ்சம் கொஞ்சமாய் தன் பக்கம் நகர்வதை உணர்ந்தாள். என்ன வேண்டும் என்று தெரியாமல் ஏதோ வேண்டும் என்று கேட்கும் பசி அவளுக்குள் ஆரம்பித்தது. ராணியின் கழுத்தருகே வந்துவிட்ட குமரேசனின் அருகாமையால் ராணியின் உடலின் இடதுபுறம் தீ பற்றிக் கொண்டது. ராணி அடுக்களையைப் பார்த்தபடி திரும்பிப் படுத்துக்கொண்டாள். குமரேசனின் மூச்சுக்காற்று ராணியின் பின்கழுத்தில் பட அவன் ஒவ்வொரு மூச்சும் சுட்டது. உள்ளுக்குள் ஏதோ அவஸ்தை, வரப்போகும் காய்ச்சலுக்கான அறிகுறி போல. திரும்பி குமரேசனைப் பார்த்து படுக்கலாமா என்று ராணி நினைக்கும்போது விளக்கு எரிந்து தேவி அத்தையின் குரல் கேட்டது “குமரேசா இடம் விட்டுப் படு.” ராணி விழித்திருந்தும் கண் திறக்கவில்லை. குமரேசன் தூக்கத்தில் பிதற்றுவது போல “ஏன்மா எழுப்பற” என்றான். ராணி வாயைப் பொத்தி சிரித்துக் கொண்டாள்.
அடுத்த நாள் இரவும் கிட்டத்தட்ட அதே சம்பவங்கள். தூங்கிவிட்ட குழந்தைகள், அடுக்களைக்குள் தேவி அத்தை, ஒரு இடம் விட்டு குமரேசன். ராணி குமரேசனைப் பார்த்து படுத்தாள். அவன் உறங்குவதுபோல நடித்தான். ராணி கை நீட்டி அவன் முட்டியை ஒரு முறை தொட்டுவிட்டு குமரேசனுக்கு முதுகைக் காட்டி திரும்பிப் படுத்தாள். அவன் தீண்டலுக்காக காத்திருந்தபடியே ராணி கண் அயர்ந்தாள். முதுகில் யாரோ தொட்டு எழுப்புவதுபோல உணர்ந்த ராணி கண் விழித்தாள். அடுக்களை விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. பின்கழுத்தில் சூடு, அவள் தோளில் இருந்து இரு விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து பனியனுக்குள் ஊர்ந்தது. உள்ளாடையைத் தொட்டு நின்ற விரல்கள் அதைத் தாண்டியும் செல்ல முயற்சிக்க ராணி போதும் என்று திரும்பிப் படுத்து குமரேசனின் முகத்தை தொட்டாள். அவள் கை நிறைய மீசை தட்டுப்பட்டது. நீண்ட கூர்மையான ஆணின் மீசை. முத்துப்பிச்சை மாமா ராணியின் அருகே படுத்துக் கொண்டிருந்தான்.
ஒரு கணம் ராணிக்கு எதுவும் புரியவில்லை. திரும்பிப் படுத்துக் கொண்டாள். முத்துப்பிச்சையின் விரல் மறுபடியும் அவளைத் தீண்டியது. அவன் விரல்களைப் பிடித்தபடி எழுந்து அமர்ந்த ராணி தன் வலிமை முழுவதும் திரட்டி அந்த விரல்களை மடக்கினாள். வெடுக்கென கையை விலக்கிய முத்துப்பிச்சை எழுந்து சுவரோரம் சென்று படுத்துக் கொண்டான். அந்த இரவு முழுவதும் ராணி தூங்காமல் தனக்குத்தானே காவல் காத்தாள்.
அடுத்த நாள் வேலைக்குக் கிளம்பிய முத்துப்பிச்சை தெருமுக்கைத் தாண்டும் வரை காத்திருந்து பின் ஓடிச்சென்று அவன் பேருந்து நிலையத்தை அடையும் முன் வழியை மறித்து நின்றாள் ராணி.
பெருமூச்சு விட்டபடி “ஏன் மாமா அப்படி செஞ்சீங்க” என்று கேட்டாள்.
சுற்றுமுற்றும் பார்த்தபின் முத்துப்பிச்சை சொன்னான் “நான் என்ன பண்ணேன்? நீ தான் என் பக்கத்துல படுத்து என் முகத்தைத் தொட்ட.”
குழம்பிய ராணி “ஏன் மாமா பொய் சொல்லறீங்க? நீங்க என் பனியனுக்குள்ள கைய விடல?”
“என்ன பேசற? ராத்திரி நீ இப்படி தப்புத்தப்பா பேசி என் பக்கத்துல வந்து படுத்தேன்னு உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லட்டுமா?”
ராணியின் கண்களில் நீர் முட்டியது “அவங்களுக்குத் தெரியும் நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்னு.”
பேருந்து வருவதைப் பார்த்த முத்துப்பிச்சை “எல்லாரும் என்னை நம்புவாங்களா இல்ல உன்னையா? வீட்டுக்குப் போ. கண்டதையும் கற்பனை பண்ணிட்டு இருக்காதே” என்று சொல்லிவிட்டு பேருந்தில் ஏறினான். காலியான பேருந்து நிறுத்தத்தில் ராணி வெகுநேரம் தனியே நின்றிருந்தாள்.
அதன்பின் ராணி முத்துப்பிச்சை மாமா வீட்டுக்குச் செல்லவில்லை. குமரேசன் அவன் ராணியின் அருகே நகர்ந்து படுத்தது தவறு என்று பலமுறை மன்னிப்புக் கேட்டுப் பார்த்தான். ராணிக்கு குமரேசனைப் பார்த்தாலே முத்துப்பிச்சையின் ஞாபகம் வந்தது. அவள் குமரேசனை முற்றிலுமாய் ஒதுக்கினாள். அதன் பின் ராணியின் வாழ்வில் பல மாற்றங்கள். நன்றாகப் படிக்கும் ராணி தேர்வுகளில் தோற்க ஆரம்பித்தாள். ராணியின் அப்பா மாரடைப்பில் இறந்தார், முத்துப்பிச்சை குடும்பம் வீட்டைக் காலி செய்தது, அவர்கள் இருந்த வீடு விற்கப்பட்டது. எல்லாம் மாறியபோதும் ஒவ்வொரு இரவும் ராணி தன்னைத்தானே காவல் காப்பது மட்டும் தொடர்ந்தது. ஆண்களின் அருகாமையை ராணி வெறுக்க ஆரம்பித்தாள்.
கல்லூரியில் எல்லோருக்கும் ராணி ஆண்களிடம் எரிந்து விழும் அகம்பாவம் கொண்ட பெண்ணாகத் தெரிந்தாள். பெண்ணுக்கு இத்தனை கோபம் கூடாதென ஒன்றிரண்டு பேராசிரியைகள் ராணிக்கு அறிவுரை கூட சொல்லிப் பார்த்தார்கள். வசையையும் சிரிப்பையும் வேண்டியபடி உபயோகித்து அந்தச் சூழ்நிலைகளை ராணி கடந்தாள். கல்லூரியில் முதல்முறையாய்ப் பார்த்ததில் இருந்து அவளையே காதலிப்பதாய் பிரிவு உபச்சார விழாவில் சொல்லிய சபரியைப் பார்க்கும்போது மட்டும் கொஞ்சம் பாவமாய் இருந்தது ராணிக்கு.
சென்னையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து மகளிர் விடுதியில் இருந்த நாட்களில் மற்ற பெண்களைப் பார்க்கும்போது எத்தனை தழும்புகள் இருந்தாலும் தன் உடல் தனக்குக் கொஞ்சமேனும் சுகத்தைக் கொடுத்திடாதாவென ராணி தனக்குத்தானே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தாள். அலுவலகத்தில் அறிமுகமாகியிருந்த கௌரிஷங்கர் அப்போதுதான் அவனுக்கு ராணியைப் பிடித்திருப்பதாகச் சொல்லி இருந்தான். அப்படியா என்ற ஒற்றை வார்த்தையில் அந்தக் கணத்தைத் தாண்டிய ராணி அதன்பின் கௌரியுடன் சகஜமாகப் பேசவும் வெளியிடங்களுக்குச் சென்று வரவும் ஆரம்பித்தாள். சில மாதப் பழக்கத்துக்குப் பின் ஓர் இரவில் கௌரியின் அறையில் ராணி தனக்குத்தானே விதித்திருந்த காவலை சற்றே தளர்த்தினாள். உடைகளைக் கூச்சத்துடன் கழட்டியபின் கௌரி அவள் தோளைத் தொட்டதும் அவனைத் தள்ளிவிட்டு ராணி மெத்தையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள். மெத்தையில் ராணியின் அருகே அமர்ந்து இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்த கௌரி அடுத்தநாள் அவளை மனநல மருத்துவரைச் சென்று பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தினான். மருத்துவருடன் பல அமர்வுகளுக்குப் பின் ராணி தன் மனதில் இருக்கும் தழும்புகளைத் தடவிப் பார்ப்பதை நிறுத்தினாள்.
“வந்துட்டாங்க, வந்துட்டாங்க” என்ற குரல் கேட்டது. சந்திரனின் தங்கை குழந்தையை இழுத்துக் கொண்டு தன் குடும்பத்தினருடன் படி ஏறி வந்து கொண்டிருந்தாள். ராணி திரும்பி நின்று கோவில் சன்னிதானத்தைப் பார்த்தாள். கோவிலுக்குப் பின்னிருந்த மலையே ராணிக்கு முருகனாய் தெரிந்தது. மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் “எப்பா மருதமலை முருகா, எப்படியோ எனக்கும் கடைசியா நல்ல வழி காமிச்சுட்ட இல்ல நீ.”
அத்தனை நேரம் இல்லாத அவசரம் காட்ட ஆரம்பித்த எல்லோரும் கூட்டமாய் சந்நிதிக்குள் நுழைய “மாலை எங்க”, “நீல டிரவுசர் குழந்தை இங்கதானே இருந்தான்”, “என்ன மோதிரம் போடலையா?”, “போட்டோக்கார தம்பி எங்க”, “தாலி எங்க”, “தட்சணை பத்தலையா, பர்ஸ் எங்க” என்று ஒரு வழியாக சந்திரன் தங்கையின் உதவியுடன் தாலி கட்டி முடித்து ராணியின் கல்யாணம் இனிதே நடந்தது. பிரகாரத்தை வலம் வந்து முருகன் முன் விழுந்து எழுகையில் சந்திரன் வேஷ்டி அவிழ அவன் படுத்தபடியே வேஷ்டியைக் கட்ட ராணி மனமார சிரித்தாள்.
சந்நிதானத்துக்கு வெளியே வந்த தம்பதிகள் விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அடுத்து குடும்பத்தினருடன் புகைப்படம் எடுக்கத் தயாராகும் போது ராணி கவனித்தாள். கோவில் கோபுரம் தாண்டி முத்துப்பிச்சை மாமா வந்து கொண்டிருந்தான். அம்மா குமரேசனுடன் சென்று முத்துப்பிச்சையை வரவேற்றாள். முத்துப்பிச்சையை அம்மா அழைக்கவில்லை என்று ராணிக்கு உறுதியாய் தெரியும். ராணிக்குப் பழைய பயம் திரும்பி வந்தது. தன் அருகே இருந்த இந்திராவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவள் அம்மாவுடன் பேசிக்கொண்டே வந்து ராணியின் முன்னால் நின்ற முத்துப்பிச்சை கேட்டான் “என்ன ராணி, என்னை ஞாபகம் இருக்கா?”
இத்தனைக்குப் பின்னும் எப்படி இவனால் தன் முன் இப்படி நிற்க முடிகிறது என்று நினைக்கும்போது ராணியின் கைகள் நடுங்கியது. “பெரியவர்கிட்ட விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க” என்று சொந்தக்காரர் ஒருவர் சொன்னார். சந்திரன் முத்துப்பிச்சை காலில் விழத் தயாராய் இருந்தான். முத்துப்பிச்சை ராணியையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். எதுவும் நடக்காதது போன்ற சிரிப்பு, நடந்திருந்தால்தான் என்ன என்பது போன்ற சிரிப்பு, ஆமாம் நடந்தது அதனால் என்ன என்பது போன்ற சிரிப்பு. பின்னிருந்து யாரோ முன்னால் தள்ளுவதைப் ராணி உணர்ந்தாள். அடுத்த நொடி கையை ஒரு சுழட்டு சுழற்றி முத்துப்பிச்சையைத் தலையோடு சேர்த்து ஒரு அறை அறைந்தாள் ராணி. பின்னே வீசிய அவள் கைப்பட்டு அங்கே நடந்து கொண்டிருந்தவர் முகத்தில் அணிந்திருந்த கண்ணாடி பறந்து சுவற்றில் பட்டு உடைந்தது. தரையில் விழுந்திருந்த முத்துப்பிச்சை எழ முடியாமல் ராணியைப் பார்த்துபடி படுத்திருந்தான். விழுந்த அறையின் சத்ததில் சுற்றி இருந்த ஒரு கூட்டமே திரும்பிப் பார்த்தது.
கூட்டத்திலிருந்து யாரோ சொன்னார்கள் “அக்கா, கல்யாணப் பொண்ணுக்கு சாமி வந்திருச்சு”
“யாருக்கா இது, முருகனா?”
“அடியே அந்தப் பொண்ணு கண்ணைப் பாரு. மிளகாயை அரைச்சுப் பூசின மாதிரி சிவந்து கிடக்கு. ஆக்ரோஷத்தைப் பாரு. அவ ஆவேசத்தைப் பாரு. சத்தியமா இது ஆத்தாதான்.”
கோவிலை வலம் வந்து கொண்டிருந்த பெண்கள் சிலர் திரும்பி ராணியைப் பார்த்து கண்ணத்தில் போட்டுக் கொண்டனர். சந்திரனும் மற்றவர்களும் ராணியின் பின்னால் சுற்றி நின்று பேயறைந்ததுபோல் ராணியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராணியின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ராணியின் அருகே சென்ற இந்திரா நன்றியுடன் ராணியின் கையைக் கோர்த்து நின்றாள்.
******************