அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!

செந்தில் இப்படி ஒரு கேள்வியை கவுண்டமணியிடம் கேட்டால், “ஏண்டா மாங்கா தலையா, உருப்படியான பழமொழிய இப்படியாடா நாசம் பண்ணுவே?” என்று அவர் திரும்பக்கேட்கலாம். அதற்கு செந்தில், “நான் நாசம் பண்ணலைண்ணே. புதுசா வந்திருக்கிற கம்ப்யூட்டர்தான் இப்படி பழமொழியை பாதியாக்கிருச்சாம்”, என்று பதில் சொல்லலாம். கணினி என்றால் ஓரமாய் உட்கார்ந்துகொண்டு கணக்குப்போடும் இயந்திரம் என்று முதலில் இருந்த எண்ணம் மலையேறி, மென்பொருட்கள் வழியே கணினிகள் என்னென்னமோ திறன்களைப் பெற்றுக்கொண்டது பழைய கதை. அவை அத்தகைய திறன்களின் வழியே டிராவல் ஏஜெண்ட் போன்ற தொழில்களுக்கு பத்து இருபது வருடங்களுக்கு முன் உலை வைத்ததும் நாமே பார்த்து அறிந்ததுதான்.

கடந்த ஐந்தாறு வருடங்களில் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தில் வந்திருக்கும் முன்னேற்றங்களால், மனித மூளையால் மட்டுமே முடியக்கூடிய கலைத்திறன்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருந்த துறைகளிலும் கணினிகள் நிறையவே மூக்கை நுழைந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் சில கணினி அமைப்புகள், நாம் வார்த்தைகளால் விவரிக்கும் எது ஒன்றையும் சில வினாடிகளில் படமாக வரைந்து கொடுத்து விடுகின்றன. மேலே காணப்படும் படம் இப்படி வரையப் பட்டதுதான். அது ஒரு ஓவியப் போட்டியில் முதல் பரிசை வென்று பலரைக் கடுப்படித்திருக்கிறது அல்லது கவலைப் படுத்தியிருக்கிறது.

இந்த அமைப்புகள் கூகுளின் தேடல் சேவை போல, முன்பே வலைத்தளங்களில் இருக்கும் படங்களை அட்டவணைப் படுத்திக்கொண்டு, நாம் கொடுக்கும் ஆணைகளுக்கு ஏற்ற படங்களை எடுத்துத் தரும் சேவை இல்லை என்பதை தெளிவாக நினைவு கொள்வது மிகவும் அவசியம். நமது தேவைக்கேற்ப இந்தப் படங்களை பென்சில் சித்திரங்களைப் போலவோ, புகைப்படங்களைப் போலவோ, ஆயில் பெயிண்டிங் போலவோ, எப்படி வேண்டுமானாலும் உருவாக்கச் சொல்லலாம்.

நியூரல் நெட்வொர்க் என்று சொல்லப்படும் அமைப்புகளை உள்ளே வைத்திருக்கும் இந்த சேவைகள், பல மாதங்களாக கோடிக்கணக்கான படங்களையும், அவற்றைச் சார்ந்த விவரிப்புகளையும் பார்த்து, அலசி படங்களின் குணாதிசயங்களையும், அவை வார்த்தைகளால் எப்படியெல்லாம் விவரிக்கப் படுகின்றன என்பதையும் கற்றுக் கொள்கின்றன. இந்த இயந்திரக்கற்றல் ஓரளவு முடிந்தபின், அடுத்த கட்டமாக, GAN (Generative Adversarial Network) என்ற ஒரு அமைப்பு உள்ளே வருகிறது.

இதன்படி, படங்களை வரையும் பழுப்பு வண்ண செந்தில் தம்பிக் கணினி ஒரு படத்தை வரைந்து, அதை மதிப்பிடும் மஞ்சள் வண்ண கவுண்டமணி கணினியிடம் காட்டி, “அண்ணே, நான் வரைந்த இந்த நாய்க்குட்டி படம், எப்படி இருக்குண்ணே? அமர்க்களம். இல்லை?”, என்று கேட்க, அண்ணன் கவுண்டமணி கணினி, கொஞ்சமும் இரக்கமில்லாமல், “டேய்.. இதெல்லாம் ஒரு நாய்க்குட்டி படமாடா? தூ! சகிக்கலை, உனக்கு நான் தரும் மதிப்பெண் வெறும் முட்டைதான். போய் நன்றாக இன்னொன்று வரைந்து வா”, என்று சொல்லி துரத்தி விடும்.

படம் வரையும் செந்தில் ஒரு கணினிதான் என்பதால், அடுத்த மில்லிசெகண்டில் இன்னொரு படத்தை வரைந்து அனுப்பி, “அண்ணே, இது எப்படி இருக்கு?” என்று கவுண்டமணி அண்ணனின் அபிப்ராயத்தை கேட்கும். இப்போதும் “சகிக்கவில்லை” பதிலே திரும்ப வரலாம். சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனான தம்பி, திரும்பத் திரும்ப ஒரு மில்லிசெகண்டுக்கு ஒரு முறை, புதிய படங்களை வரைந்து வரைந்து அனுப்ப, சில லட்சப் படங்களுக்கு அப்புறம் வந்து சேரும் ஒரு படத்தில் நான்கு கால்கள், முகம், வால் போல ஏதோ இருப்பதால், “பரவாயில்லை, இந்தப் படத்திற்கு போனால் போகிறதென்று முட்டைக்கு பதில், ஒரு மார்க் போடுகிறேன்” என்று கவுண்டமணி கணினி சொல்லலாம். உடனே, “ஆஹா, இதைத்தான் எதிர் பார்க்கிறாயா? புரிந்து கொண்டுவிட்டேன்” என்று சொல்லும் தம்பி, இன்னும் கொஞ்சம் திருத்தமாக நாய்ப் படத்தை போட்டு காட்டி, முன்னேற முயலும். இப்படி சில கோடி முறைகள் ஒரே நாளில் முயன்று பார்த்தால், அண்ணன் கவுண்டமணியே அசந்து போய் நூறு மதிப்பெண்கள் கொடுக்கும் அளவுக்கு நாய்க்குட்டி படம் போடுவதில் தம்பி செந்தில்  தேர்ந்து விடலாம்தானே?

ஒரு நாளில் நாய்குட்டி வரையப் பழகிய பின், அந்த வாரம் பூராவும், விதம்விதமான நாய்க்குட்டிகள், பல்வேறு கோணங்களில் இருந்து எப்படி இருக்கும் என்று பலகோடி முறை முயற்சித்து, கவுண்டமணியின் பல கோடி கிண்டல், திட்டு அபிப்ராயங்களுக்கு அப்புறம், “அண்ணே, நீங்க இப்போ எந்த மாதிரி நாயி வேணும்னு சொன்னீங்கன்னாலும், உடனே வரைந்து விடுவேன்”, நிலைக்கு செந்தில் கணினி சென்று விடும்! வேறு வழியில்லாமல், கவுண்டமணி கணினியும், “சார், நீங்க எங்கியோ போய்ட்டீங்க சார்!” என்று ஒப்புக்கொள்ள வேண்டி வரும்.

கணினிகள் என்பதால் தூங்கவோ, காப்பி சாப்பிடவோ, வீட்டுக்கோ போக வேண்டாம். எனவே, அடுத்த வாரம் இதே போல் பூனைக்குட்டி, அப்புறம் பசு மாடு என்று விருவிருவென்று படம் போட்டு தள்ளிவிட்டு, அடுத்த மாதம், லட்சுமி, சரஸ்வதி, ஏசு நாதர், அப்புறம், கடல், ஆகாயம், விண்கலம், பிரபஞ்சம் என்று எதையும் வரையக் கற்றுக்கொண்டு விடலாம். இப்படி படம் வரைய மட்டுமின்றி, இதே முறையில், மொழிகளை புரிந்து கொள்ளவோ, கவிதை எழுதவோ, புதிதாக தோன்றிய ஒரு புற்றுநோய் கட்டி, இன்னும் ஆறு மாதங்களில் எப்படி வளரக்கூடும் என்று யூகிக்கவோ, இசையமைக்கவோ எதை வேண்டுமானாலும் இயந்திரக் கற்றலில் செய்து காட்ட முடியும்.

மற்ற துறைகளை தள்ளி வைத்துவிட்டு, திரும்ப படம் வரையும் அமைப்புகளை மட்டுமே ஆராய்ந்தோமானால், இப்போதைக்கு இதில் மூன்று செந்தில் தம்பிகள் மிக விரைவாக வளர்ந்து புகழ் பெற்று வருவதாக தெரிகிறது. டாலீ-2 என்பது அம்மாதிரியான ஒரு சேவை. WALL-E என்ற, பத்து வருடங்களுக்கு முன் வந்த ஒரு டிஸ்னி படத்தின் பெயரையும், சால்வடோர் டாலி என்ற அந்தக்காலத்து புகழ் பெற்ற ஓவியர் ஒருவரின் பெயரையும் இணைத்து, இந்த அமைப்புக்கு டாலீ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். மிட் ஜர்ணி என்பது இன்னொரு சேவை. மேலே உள்ள பரிசு வாங்கிய படத்தை வரைய உதவியது இந்த சேவைதான். தன் பங்குக்கு கூகிளும் இமாஜன் என்று ஒரு சேவையை (இமேஜ், இமாஜின் இரண்டு வார்த்தைகளின் கலக்கல்) ஆரம்பித்திருக்கிறது. நான் விளையாடிப் பார்த்தவரை, இமாஜன் இன்னும் கிண்டர் கார்டெனில்தான் இருக்கிறது. மற்ற இரண்டும் கல்லூரி நிலை என்று சொல்லலாம். கிண்டர் கார்டென் குழந்தைகள் வளர பூஸ்ட், காம்ப்ளான் எல்லாம் கொடுப்பது போல், இன்னும் சக்தி வாய்ந்த கணினிகளை உபயோகித்து, கூகிள் விரைவிலேயே தன் சேவையை மற்றவற்றிக்கு இணையாக கொண்டு வந்து விடும் என்றே தோன்றுகிறது. இந்த தொழில் நுட்பங்களைப்பற்றி நானே இஷ்டத்திற்கு GPT-3, GAN, என்று அளந்து வாசகர்களை போரடிப்பதை விட, இன்னும் கொஞ்சம் டெக்னிகலாக புரிந்து கொள்ள விரும்புவோர் இந்த யூட்யூப் வீடியோவிலிருந்து பயணத்தைத் தொடரலாம் என்று மட்டும் சொல்லி விடுகிறேன். 

எண்ணெய்யும் தண்ணீரும் என்ற தலைப்பில் சில வருடங்களுக்கு முன் அடியேன் சொல்வனத்தில் எழுதிய தொடரை, மெல்ல ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன். சிந்தனைச் சோதனைகள் தொடரை ஆங்கிலத்தில் Thought Experiments என்ற பெயரில் புத்தகமாக பதிப்பித்ததைப் போல, இதையும் பதிப்பிக்கலாம் என்றொரு உத்தேசம். எண்ணெய்யும் தண்ணீரும் தொடரில் சொல்ல வந்த சிக்கலான பல விஷயங்களை விளக்க பல படங்களை உபயோகிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலப் புத்தகமாக பிரசுரிக்கும்போது காப்புரிமை பிரச்சினைகள் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, தேவையான படங்களை டாலீயை வரையச் சொல்லி பயன்படுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு டாலீயின் சேவைகளை பயன்படுத்த விரும்பினால், அந்த வலைதளத்திற்குப் போய் நம் பெயர், மின் அஞ்சல் முகவரி முதலியவற்றைக் கொடுத்து பதிவு செய்துகொண்டு சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதன்பின் நமது கணக்கை அமைத்துக் கொள்ள அனுமதித்து ஒரு அழைப்பு வருகிறது. வழக்கமான புதிய வலைத்தள கணக்குத் திறப்பு செயல்முறையை நாம் முடித்தபின், முதல் மாதம் இந்த சேவையை இலவசமாக ஐம்பது முறை உபயோகித்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். இரண்டாம் மாதத்தில் இருந்து, மாதத்துக்கு வெறும் பதினைந்து முறை மட்டுமே இலவச உபயோகம். அதற்கு மேல் சேவையை உபயோகிக்க வேண்டுமென்றால், தேவையைப் பொறுத்து விளையாட எத்தனை உயிர்கள் வேண்டுமோ அத்தனையை பணம் கட்டி வாங்க வேண்டும்.  

வலைத்தளங்களில் பார்த்தது, படித்ததிலிருந்து, “கருப்புக்கண்ணாடியும் தொப்பியும் அணிந்த பூனைக்குட்டி, சந்திரமண்டலத்தில், மேகங்களுக்கிடையே கால் சட்டை அணிந்து பியானோ வாசித்துக் கொண்டே காண்டாமிருகத்துடன் சண்டை போடுகிறது” என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், டாலீ உடனே அதை வரைந்து கொடுத்து விடும் என்பது தெரிந்திருந்தது. எப்போதோ வெளிவந்த ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள் முதலியவற்றை உள்ளே தள்ளி, எந்தமாதிரி படங்கள் வெளியே வருகின்றன என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கும் பொன்னியின் செல்வன் வர்ணனைகளை செந்தில் கணினியிடம் கொடுத்தால், குந்தவை, பழுவேட்டரையர் போன்ற பாத்திரங்களை எப்படி வரையும் என்று பார்க்க ஆசைதான். அதெல்லாம் வேடிக்கையாக இருக்கும் என்றாலும், எனக்கு இலவச உயிர்கள் இந்த மாசத்துக்கு வெறும் ஐம்பதுதான் என்பதால், வாய்ப்புகளை வீணாக்க மனம் இடம் கொடுக்கவில்லை. எனது முதல் முயற்சியாக, “Complicated looking off-shore oil platform with flare” என்று டைப் அடித்துப் பார்த்தேன். சில வினாடிகளில் இந்தப் படத்தைப் உருவாக்கிக் கொடுத்தது.

“அட.. பரவாயில்லையே!” என்று சொல்லத்தோன்றினாலும், நான் இயற்கை எரிவாயுவை எரிக்கப் பயன்படும் Flare என்று சொன்னதை, டாலீ சூரியகதிர்கள் என்று புரிந்து கொண்டிருந்தது எனக்குப் புரிந்தபோது வேடிக்கையாக இருந்தது! உடனே எனது வர்ணனையை “Complicated looking off-shore oil platform in night lighting with gas burning flare tower located 100 meters away” என்று திருத்திக் கொடுத்தேன். டாலீ உடனே படத்தை இப்படி மாற்றிப் போட்டுக் கொடுத்தது.  

நான் கேட்டபடி flare நூறு மீட்டர் தள்ளி இருப்பதுபோல் தெரியவில்லை என்றாலும், படம் என்னவோ கிட்டத்தட்ட சரியாக வந்துவிட்டது போலத்தான் தெரிகிறது. நாம் கொடுக்கும் கட்டளையில் எந்த ஒரு சிறு திருத்தம் செய்து படத்தை திரும்ப வரையச் சொன்னாலும், நமக்கு கொடுக்கப் பட்டிருக்கும் வாய்ப்புகளில் இருந்து ஒன்று காணாமல் போய் விடும். இந்த மாதம் ஆட்டத்திற்கு இலவசமாக கிடைத்திருக்கும் உயிர்கள் வெறும் ஐம்பதுதான் என்பதால், இந்தப் படத்தையே திரும்பத்திரும்ப சரிசெய்ய முயற்சிப்பதை விட்டுவிட்டு, அடுத்த படத்திற்கு தாவினேன்.

எண்ணெய்யும் தண்ணீரும் வெளிவந்தபோது தொடரைப் படித்த சொல்வனம் வாசகர்களுக்கு, முதல் அத்யாயத்தில் முதல் பக்கத்திலேயே பிரசுரிக்கப் பட்டிருந்த இந்த ஹெலிகாப்டர் படம் ஞாபகம் இருக்கலாம்.

இதற்கு இணையான, இதே போன்ற படமொன்றை பெற, டாலீக்கு நான் கொடுத்த விவரிப்பு, “Bright Orange & white colored full side view of Dauphin helicopter flying over sea in daylight with cityscape in the blurry background”. டாலீயின் பதில் இதோ!  

படத்தில் வெள்ளை நிறத்தையே காணோமே என்றெல்லாம் யோசித்து, சில பல திருத்தங்கள் கொடுத்த பின், கிடைத்த படம் இது.

முன்பே சொன்னது போல், கூகுளில் நாம் எதையாவது தேடினால், எங்கோ, ஏதோ ஒரு வலைதளத்தில் உட்காந்திருக்கும் விஷயத்தை தூக்கிக் கொண்டுவந்து கூகிள் நம்மிடம் சேர்ப்பது போலன்றி, தான் கற்று வைத்திருக்கும் விவரங்களை உபயோகித்து, டாலீ நமக்காக இப்போது புதிதாக வரைந்த படம் இது. எனவே ஃபிரெஞ்சு வடிவமைப்பில் உருவாகிய டாஃபின் ஹெலிகாப்டரின் ஒரு சிறப்பான குணாதிசயமான பெனஸ்ட்ரான் டெய்ல் ரோட்டர் அமைப்பை டாலீ தன் நினைவில் நிறுத்தி சரியாக வரைந்திருந்தது பார்க்க திருப்தியாக இருந்தது.

இப்படி டாலீ வரைந்து தரும் படங்கள் சட்டப்படி இந்த சேவையை நமக்கு வழங்கும் நிறுவனத்தின் சொத்து என்றாலும், காப்புரிமை பிரச்சினைகள் ஏதுமின்றி நுகர்வோர் இவற்றை எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், பணம் பண்ணுவதற்கோ, இலவசமாக விநியோகிக்கவோ எந்த நிபந்தனைகளும் இன்றி உபயோகித்துக் கொள்ளலாம் என்பதால், இதை நான் என் புத்தகத்தில் பிரசுப்பதில் பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

கம்ப்யூட்டர் உதவி ஏதுமின்றி நிஜமாகவே படங்கள் வரைவதில் என்னை விட மிகவும் திறமையும் ஆர்வமும் உள்ள என் தம்பியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த யூட்யூப் காணொளி குறுக்கே வந்தது. அதைப்போன்ற ஊடக விவாதங்களை எல்லாம் பார்த்தால், ஹாலிவுட், கோலிவூட்டில் இருந்து ஆரம்பித்து, பெரிய விளம்பர, ஊடக நிறுவனங்கள், தனிமனிதர்கள் என எல்லோரும் இந்த மாதிரியான சேவைகளை தேவையான போது, உடனுக்குடன் உபயோகித்து தங்கள் செலவைக் குறைக்க முயல்வார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

வேறு சில கட்டுரைகள், “இதெல்லாம் சும்மா விளையாட்டுக்குத்தான், என்னதான் சொன்னாலும், ஒரு ஓவியரிடம் என்ன வேண்டும் என்று சொல்லி, உடனே அவர் வெளிப்படையாக சொல்லப்படாத பல விஷயங்களை தானே தன் அனுபவ ரீதியாகப் புரிந்து கொண்டு படம் போட்டுக்கொடுப்பதற்கு ஈடாக இந்த டாலீயும், இமாஜன்னும் வருவதற்குள், நாமெல்லாம் ரிடயர் ஆகி விட்டிருப்போம்” என்று கலாய்க்கின்றன. என்னால் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் சொல்வனத்தில் வெளிவந்த “அந்தக் காலத்து தீபாவளி” கட்டுரையில் அலசி இருந்தது போல், கணினிகளின் முன்னேற்றத்தின் பின்னே ஒளிந்திருக்கும் exponential rise வேகம், போகப்போக வெகுவிரைவில் நாம் எதிர்பார்ப்பதை விட நிறைய திறமைகளை அதற்கு கொடுத்து விடும். இந்த சேவை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது என்பதால், இதை 90களின் இறுதியில் இருந்த வலைதளங்கள், அப்போதைய செல்போன் காமெராக்களுக்கு  இணையான, இன்னும் அறிமுக நிலையில் இருக்கும் தொழில்நுட்பம் என்று கூறலாம். கடந்த இருபது வருடங்களில் வலைதளங்களும், செல் போன் காமெராக்களும் எவ்வளவோ முன்னேறி விட்டன. இப்போதுதான்  வந்திருக்கும் இந்த சேவையின் அறிமுக படங்களே இவ்வளவு நன்றாக,  திரைப்படங்களில் உபயோகித்துக் கொள்ளக் கூடிய தரத்தில் இருக்கிறதென்றால், இன்னும் 5, 10 வருடங்களில் தரம் எங்கேயோ போய்விடும் என்றுதான் தோன்றுகிறது.

70-80களில் நான் பாண்டிச்சேரியில் பள்ளிக்குச் சென்று வரும்போது, கடைகளுக்கு மேல் வைக்கப்படும் பெயர் பலகைகளை மிக அழகாக எழுதிக் கொடுக்கும், பி.சிவா என்ற, ஒரு பெயின்டர் கடை அங்கு இருந்தது. தினமும் அந்தப் பக்கமாய் நடந்து வரும்பொழுது கடைக்கு முன்னே சிறிது நேரம் நின்று புதிதாய் என்ன வரைந்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்து ரசித்து விட்டு வருவது என் வழக்கம். ப்ளெக்ஸ் பேனர்கள் வந்தபின், அந்த மாதிரிக் கடைகள் எல்லாம் காணாமல் போய் விட்டன. மனதின் எங்கோ ஒரு மூலையில் அந்தக்கலை மறைந்து போவது பற்றி ஒரு சிறிய வருத்தம் இருந்தாலும், புதிய தொழில் நுட்பங்கள் அதே தரத்திலான விளம்பர பலகைகளைத் தயாரிப்பதை, மிகவும் எளிதாகவும், விலை குறைவாகவும் ஆக்கி, எல்லோருக்கும் கிடைக்கச் செய்திருப்பதை மறுப்பதற்கில்லை. டிராவல் ஏஜெண்டுகளும், PCO கால் சென்டர்களும் காணாமல் போனது இதே காரணங்களால்தான்.

இந்த மாதிரியான புதிய தொழில்நுட்பங்களின் இன்னொரு, அதிகம் பேசப் படாத பக்க விளைவு, அமெரிக்க ஆங்கில பிரயோகங்களை உலகெங்கிலும் நுகர்வோர் இயல்பாகக் கற்றுக்கொள்வது! என் சகோதரன் Dog with cooling glasses என்று ஒரு வர்ணனையைக் உள்ளிட்ட போது, டாலீ வரைந்த படத்தில், குளிர்ந்த தண்ணீரை ஒரு டம்ளரில் வைத்துக் கொண்டிருக்கும் நாய்தான் காணப்பட்டது! அமெரிக்க ஆங்கிலத்தில் கூலிங் கிளாசை Shades அல்லது Sun Glasses என்று சொல்வது வழக்கம். எனவே, cooling glasses என்ற பதத்தை “டம்ளரில் குளிர்ந்த குடிநீர்” என்று அது புரிந்து கொண்டிருக்கிறது. அதை சரியாக வேலை வாங்க, நமது ஆங்கில உபயோகத்தை கொஞ்சம் அமெரிக்கப் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது! மைக்ரோசாப்ட் வோர்ட்டை பயன்படுத்தும் போதோ அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பும்போதோ, நாம் அடுத்து என்ன சொல்ல வருகிறோம் என்பதை யூகித்து, அவை predictive text ஆக அடுத்த சில சொற்களைத் தந்து உதவும்போதெல்லாம், அமெரிக்க ஆங்கில பழக்குகள் மெல்ல உள்ளே நுழைவதை கவனிக்கலாம். இதெல்லாம் மென்பொருட்கள் (Software) என்பதால், செட்டிங்ஸில் போய் பல விஷயங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்றாலும், அதையெல்லாம் எத்தனை பேர் மாற்ற முயல்கிறார்கள்?

நியூயார்க் டைம்ஸ்சில் வெளிவந்திருந்த கார்ட்டூன் போன்ற ஒரு சின்ன படத்தை என் சிந்தனைச் சோதனைகள் புத்தகத்தில் பிரசுரிக்க (Trolley Experiment பற்றியது) அவர்களிடம் முறையாக அனுமதி கேட்ட போது, அதற்கு கட்டணமாக 12,000 ரூபாய் கேட்டார்கள்! பணம் பண்ணுவதற்காக இல்லாமல், தெரிந்ததை பகிர்ந்து கொள்வதற்காக பிரசுரிக்கப்படும் புத்தகம், கொஞ்சம் விலையைக் குறைத்து தயவு செய்யுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தும் ஒரு பயனுமில்லை. எனவே சலித்துப்போய், அந்த மாதிரி ஊடகங்களிடம் மன்றாடுவதை நிறுத்திக்கொண்டு, என் தம்பியின் உதவியுடன், இந்தியாவில் எங்களுக்கு தெரிந்த ஒரு டிராயிங் மாஸ்டரிடம் என் சொந்தப்பணத்தைக் கொடுத்து புத்தகத்துக்கென்றே புதிதாக ஓவியங்கள் வரையச் சொல்லி வாங்கி பதிப்பித்தோம். அது மாதிரியான, நிறைய பணம் புழங்காத சந்தர்பங்களில் மட்டுமின்றி, சாதாரண விளம்பரங்கள், வாராந்திரப் பத்திரிகைகளுக்கான ஓவியங்கள், ஹோட்டல் அறைகளிலும், அலுவகங்களிலும் மாட்டப்படும் சித்திரங்கள் போன்ற பல இடங்களில், ஓவியர் யார் என்பது பற்றி யாரும் பெரிதாக யோசிக்கத் தேவை இல்லாத போதெல்லாம் இந்த மாதிரி செந்தில் கணினி சேவைகள் தரும் ஓவியங்கள் நிச்சயம் போதுமானதாகிவிடும்.

பி‌.சிவா பெயின்டர் கடைகளுக்கும், டிராவல் ஏஜெண்ட் அலுவலகங்களுக்கும் இப்போது தேவைகள் இல்லாமல் போய்விட்டது போல், இன்னும் சில வருடங்களில், ரவி வர்மா லெவலில் இல்லாமல், நடுத்தர ஓவியர்களாக படங்கள் வரைந்து வருமானம் தேடும் பலரின் வேலைக்கு இந்தத் தொழில்நுட்பம் உலை வைக்கும் சாத்தியக்கூறு மிக அதிகம். தொழில்நுட்ப முன்னேற்றங்களை முற்றிலும் தடுத்து நிறுத்துவதென்பது இயலாது, கூடாது. பிறகு இதற்கு என்னதான் தீர்வு? Ethics & Emerging Technology என்ற தலைப்பில், பல்கலைக்கழகங்களில் நான் ஆற்றும் ஒரு உரை யூட்யூப்பில் இருக்கிறது. அந்த உரையில் இந்தப் பிரச்சினைக்கு எனக்கு தோன்றிய தீர்வாக மூன்று பரிந்துரைகளை பதிவு செய்து வருகிறேன்.

 1. ஓவியர்களாக நாம் வரையும் ஓவியங்களை மட்டுமே நமது உழைப்பின் வெளியீட்டாக (output) விற்று வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பதற்கு பதிலாக, நாம் அந்த ஓவியங்களை உருவாக்கச் செலவிடும் “மனித நேரத்தை” விற்று வருவாயாக ஆக்க வேண்டும் என்று நமது பார்வையை மாற்றிக் கொள்ளலாம். படம் வரைய சொல்லித்தருவது, நாம் வரையும்போது கூட இருந்து பார்த்து கற்றுக்கொள்ள விழையும் விசிறிகளையும், மாணவர்களையும் உடன் இருக்க அனுமதிப்பது, நாம் வரையும் அனுபவத்தை TWITCH போன்ற தளங்களில் ஸ்ட்ரீம் செய்வது போன்ற முயற்சிகள் இந்த வகையில் வருமானம் ஈட்ட உதவும். இயந்திரங்கள் எதிர்காலத்தில் அங்கும் நுழைந்து கற்றுத்தரவும் ஆரம்பிக்கலாம் என்றாலும், மனிதர்களுக்கு சக மனிதர்களுடன் பழகும், உறவாடும் இயற்கையான ஆசையை இயந்திரங்களால் பூர்த்தி செய்ய முடியாது என்ற புரிதலை  பணமாக்கும் உத்தி இது. புகழ் பெற்ற இசைக்குழுக்கள் இப்போதெல்லாம் தங்கள் பாடல்களை இலவசமாக வெளியிட்டுவிட்டு, நேரடி நிகழ்ச்சிகள் (Live Performances) மூலமே பெரும்பாலான தங்கள் வருவாயை சம்பாதிப்பதை இந்த அணுகுமுறைக்கு ஈடாக்கலாம்.  
 • இயந்திரக்கற்றல், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை, நமது உடலுக்கு வெளியே இருந்து நமக்கு உதவும் நம் வெளியுலக மூளையாக பாவிக்கலாம். அப்படி பார்க்கும்போது, நம்மால் உருவாக்க முடிகிற குறைந்த பட்ச வெளியீடுகளை (output), வெகு எளிதாக பல மடங்கு பெருக்க உதவும் கருவிகளாக அவை நமக்கு உதவக் கூடும். உதாரணத்திற்கு, ஓவியர்கள் டாலீயை ஒரு கருவியாக பாவித்து, எக்கச்சக்கமான ஐடியாக்களை முதலில் உருவாக்கிக்கொண்டு, பின்னால் தமது தனித்திறமைகளை உபயோகித்து, ஓரிரு படங்களை மட்டும் வரைந்து மெருகேற்றலாம். முகப்பில் காணப்படும் ஓவியப்போட்டியில் பரிசு பெற்ற படத்தை இப்படித்தான் தான் உருவாக்கி மெருகேற்றியதாக அந்த “ஓவியர்” கூறியிருக்கிறார்.
 • இந்த புதிய சேவைகளை ஓவியர்கள் பயன்படுத்துவதற்கு முன் ப்ரோக்ராமிங் கற்றுக்கொள்ள வேண்டியதோ, பெரிய பாடங்கள்/பயிற்சிகள் போன்றவைகள் ஏதும் செய்ய வேண்டியதோ இல்லை என்பதை ஒரு வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்டு, தெரியாத மாணவர்களுக்கு இதை பற்றி சொல்லிக் கொடுத்து, அடோபீ ஃபோட்டோஷாப் போல, இந்த சேவைகளை அவர்கள் படம் வரையும் செயல்முறைகளுடன் எப்படி இணைத்துக் கொள்வது என்று பாடம் நடத்தலாம்.

செந்தில் கணினி வேகத்தில் நாமும் கற்றுக்கொண்டு அதோடு நேருக்கு நேர் போட்டியிட்டு வெற்றி பெறுவது, மனித சக்தியின் எல்லைகளுக்குள் சாத்தியமில்லை. எனவே நாம் கவுண்டமணி கணினியாக மாறி, நமது தேவைக்கேற்ற செந்தில் கணினியின் திறன்களை கட்டி மேய்ப்பதையும், நாம் செய்ய விரும்பும் வேலைகளுக்கு அவற்றை கருவிகளாக பயன்படுத்துவதையும் நம் திறமையாக ஆக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம். இது ஓவியம் வரையும் சேவைகளுக்கு மட்டுமின்றி, வேறு எந்தத் துறையிலும் நம்மோடு போட்டியிட விரைந்து வரும் கணினி செந்தில் தம்பிகள் எல்லோரையும் சமாளிக்கும் ஒரே வழி இதுதான். தடம் தவறினால் பல துறைகளில் பெருவாரியான வேலை வாய்ப்புகள் எதிர்காலத்தில் காணாமல் போய், சமத்துவமின்மை பல மடங்கு உயர்ந்து சமுதாயத்தை சீரழிக்கும். அதற்கு பதிலாக, தொழில்நுட்பம் தரும் இந்த வரங்களை, சரியான தடத்தில் பயணிக்க உபயோகித்தால், நமது உற்பத்தி/வெளியீடு இமாலய அளவு உயரும். அப்படிக் கொழிக்கும் அறுவடையை சண்டை சச்சரவுகள் இன்றி, எல்லோரையும் சென்றடைய வழி செய்தால், மனித சமுதாயம் சிறக்கும். உங்களுக்குத் தோன்றும் வித்யாசமான வேறு வழிமுறைகளை பின்னூட்டங்களில் பதிவிடுங்கள். நான் கணினி செந்திலாக முடியாதென்பதால், மனித செந்திலாக இருந்து கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன். குறைந்தபட்சம் என் உரைகளில் சேர்த்துக்கொள்ள இன்னும் சில யோசனைகளாவது கிடைக்குமில்லையா!

3 Replies to “அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!”

 1. அதிகாலையிலேயே செந்தில் கவுண்டமணி யோடு துவங்கி சொல்லும் கட்டுரை முழுமையாகப் படித்து விட்டேன். அருமை.

  மனித உருவங்கள் வரைய நிறைய நிபந்தனை சொல்கிறது. சம்பந்தப்பட்ட வரிடம் அனுமதி வாங்கினாயா என்கிறது.

  இன்னும் குறுகிய காலத்தில் பிரகாஷ் ராஜ் சொன்ன வருணனை க்கு ஜெமினியை வரையாமல் உத்தேச நபரையே வரைந்து காவல்துறையின் நண்பனாகிவிடும் இந்த செந்தில்

 2. An inspiring article. The pace at which AI and Deep ML is progressing is mind boggling. The Author’s you tube link is useful. Can all these ML and AI take responsibility for human and or other lives? In a chess tournament in July 22, a 7 year old boy’s fingers were broken by the robot . Reason, the robot didn’t liked the speed movements of the boy. As rightly said by the author, we can’t stop the technological advancements Putting them into good use lies with us.
  When huge data is fed into the DL Machine, the primary idea should be to give verified data . This is important for ruling out bias, personal likes and dislikes. If unchecked data is fed from any source, that may go against the depressed, deprived and voiceless people and or just the opposite. Neutrality is vital.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.