
‘இன்று ஹரி தரிசனத்துக்காக மனம் துடிக்கிறது’
இந்தித் திரைப்பாடல்களில் பக்திப் பாடல் என்றதும் முதலில் நினைவுக்கு வரும் பாடல் ‘மன் தடப்பத் ஹரி தர்ஷன்கோ ஆஜ்’ – திரைப்படம்: பைஜு பாவ்ரா (1952), பாடலாசிரியர்: ஷகீல் பதாயுனி. இவர் கோஹினூர் (1960) திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடல், ‘மதுபன் மே ராதிகா நாச்சே ரே / கிரிதர்கி முரலியா பாஜே ரே’ (நந்தவனத்தில் ராதை நடனம் ஆடினாள் / கிரிதரனின் புல்லாங்குழல் இசைத்துக்கொண்டிருந்தது) பாடலையும் எழுதினார்.
ஷகீல் அஹமத் உத்தரப்பிரதேசத்திலுள்ள பதாயுன் மாவட்டத்தில் பிறந்தவர். உருதுக் கவிஞர்கள் சிலர் தங்கள் பெயருடன் ஊரையும் இணைக்கும் வழமை உள்ளவர்கள், அதன்படி ஷகீல் அஹமத், ஷகீல் பதாயுனி என்னும் பெயரில் கவிதைகள் எழுதினார்.
ஷகீலுக்கு அரபி, உருது, பாரசீகம், இந்தி மொழிகள் வீட்டில் பயிற்றுவிக்கப்பட்டன. அவருடைய ஆர்வம் இயல்பாக உருதுக் கவிதைகளின் பக்கம் சென்றது. மார்க்கப் பாடல்களை எழுதும் உறவினரால் ஈர்க்கப்பட்டு உருதுக் கவிதைகளைப் பயின்றார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் படித்தபோதிலிருந்து கவிதைகளில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணிக்காக டெல்லிக்குக் குடிபெயர்ந்தார். இந்தித் திரையில் பாடல்கள் எழுதுவதற்காக 1944இல் மும்பைக்குக் குடிபெயர்ந்தார்.
இசையமைப்பாளர் நௌஷாதுடன் இணைந்து ‘தர்த்’ திரைப்படத்தில் ஷகீல் எழுதிய பாடல் பிரபலமடைந்தது. நௌஷாதின் ஆஸ்தான பாடலாசிரியர் எனச் சொல்லும் அளவுக்கு அவருடன் இணைந்து ஷகீல் பாடல்களை எழுதினார். தீதார், பைஜு பாவ்ரா, மதர் இண்டியா, மொஹலே ஆசம் என நௌஷாத் – ஷகீல் பதாயுனி கூட்டணி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது.
இஸ்லாமியர் ஒருவர் திரைப்படத்தில் இந்து சமய பக்திப் பாடல்களை எழுதியது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ‘திருவிளையாடல்’ திரைப்படக் காலத்தில் தமிழ்த் திரையில் இருந்ததைப் போல, வடக்கிலும் பைஜு பாவ்ரா (1952) திரைப்படக் காலத்தில் இருந்துள்ளது.
பைஜு பாவ்ராவில் பக்திப் பாடல்கள் நிறைய எழுதப்படவேண்டியதால் இயக்குநர் விஜய் பட் கவிஞர் கவி ப்ரதீப்பைப் பரிந்துரைத்துள்ளார். ஒருமுறை ஷகீலின் பாடல்களைப் பார்த்துவிடும்படி இசையமைப்பாளர் நௌஷாத் விஜய் பட்டிடம் விண்ணப்பம் வைக்க, ஷகீலின் பாடலைப் பார்த்த விஜய் அவருக்கு பைஜு பாவ்ராவில் பக்திப்பாடல்களை எழுத வாய்ப்பு அளிக்கிறார்.
இன்றைக்கு இந்தித் திரையில் பக்திப் பாடல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஷகீல் பதாயுனி எழுதிய ‘பைஜு பாவ்ராவின் மன் தர்பத் ஹரி தர்ஷன்கோ ஆஜ்.’
1961, 62, 63 மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஃபிலிம்ஃபேரின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றவர்.
அறுபதுகளில் காதலைப் பாடிய பாடல்களுள் முன்வரிசையில் நிற்கும் சௌத்வீன் கா சாந்த் ஹோ (பதினான்காம் நாள் முழு நிலவா), மேரே மெஹபூப் துஜே மேரி மொஹப்பத் கி கசம் (என் காதலியே உனக்கு என் காதலின் மீது சத்தியம் செய்கிறேன்), பேகரார் கர்க்கே ஹமேன் யூன் நா ஜாயியே (இப்படித் துடிக்கவிட்டுச் செல்லாதே) பாடல்கள் ஷகீலால் எழுதப்பட்டவை.
திரைக்குப் பாடல்களை எழுதியவர் இருபதுக்கு மேற்பட்ட புத்தகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கஜல்களை எழுதியுள்ளார். இவருடைய மொத்த படைப்புகளும் ‘குல்லியாத்தி ஷகீல்’ எனப் புத்தகமாக வெளிவந்துள்ளது.
1. எனக்கும் காதலின் கைதியாக இருப்பதில் விருப்பம்தான் ஆனால் யாரோ என்னைச் சிறைப்பிடித்து விடுவித்துவிட்டார்கள் (முஜேதோ கைத்-ஏ-மொஹப்பத் அஜீஸ் தி லேக்கின் கிசினே முஜே கிரிஃப்தார் கர்கே சோடுதியா) 2. காதலில் வெல்வது கடினமாகத் தோன்றியது வெல்லப்போகும் அச்சத்தால் தோற்றுவிட்டேன் (முஷ்கில்தா குச்தோ இஷ்க் கி பாஸி கோ ஜீத்னா குச் ஜீத்னே கே கௌஃப் சே ஹாரே சலேகயே) 3. தீபங்களை முறைத்துப் பார்ப்பது கோழைத்தனம் மேகங்கள் விலகியதும் சூரியனை முறைத்துப்பார் (புஸ்-திலி ஹோகி சிராகோன் கோ திக்கானா ஆங்க்கேன் அப்ர் சாட் ஜாயே தோ சூரஜ் சே மிலானா ஆங்க்கேன்)
மொஹலே ஆசம் திரைப்படத்திற்கு ஷகீல் எழுதிய ‘பியார் கியாதோ டர்னா க்யா’ (காதல் செய்தால் அஞ்சவேண்டுமா?) பாடல் இன்றைக்கும் அதன் வரிகளுக்கும், இசைக்கும், நடனத்துக்கும், படப்பிடிப்புக்கும், நடிப்புக்கும் பேசப்படுகிறது.
தன்னுடைய காலகட்டத்தில் இருந்த முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து காலத்தால் அழியாத திரைப்பாடல்களை எழுதிய ஷகீல் பதாயுனி 1970ம் ஆண்டு இயற்கை எய்தினார்.
ஆண்டு 2013இல் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு இவரது புகழைக் கவுரவித்தது.