வாசகர் கடிதம்

2022-09-29

ஆசிரியர்,

சொல்வனம்

வணக்கம்!

இந்த மடலை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. நீங்களும் இதை வெளியிடாமல் இருக்க முடியாது போகலாம்.

சொல்வனம் இதழைப் புரட்டிப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும், தத்துவம், மொழிபெயர்ப்பு ஆகிய பத்திகள் இரண்டும் என்னை உறுத்துவதுண்டு. இங்கு தத்துவம் பற்றி மட்டுமே எழுதுகிறேன்:

தத்துவம் என்பது பெரிதும் சாம்பார் போன்ற ஒன்றாகவே பலராலும் கருதப்படுகிறது. அதனுள் மெய்யியல் (philosophy), சிந்தனை (thoughts), நம்பிக்கைகள் (beliefs)… எல்லாம் ஒன்றாகாக் குழப்பியடிக்கப் படுகின்றன. 

அதேவேளை மெய்யியல் வேறு, தத்துவம் வேறு என்று வலியுறுத்தப்படுகின்றது. ஒரு மெய்யியல் மாணவனாகிய எனக்கு இந்த் வேறுபாட்டைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.  

வெ. சாமிநாத சர்மா அவர்களின் பிளேட்டோவின் அரசியலை 1965 வாக்கில் ஒரு பள்ளிமாணவனாக வாசித்தேன். அத்தகைய ஒரு செவ்விய தத்துவ நூல் இதுவரை தமிழில் வெளிவரவில்லை என்பது  எனது துணிபு

Philosophy என்ற சொல்லை அவர் இயல்பாகவே தத்துவம் என்று கொண்டார். அது முறைசார் (formal) சொல்லாட்சி. முறைசார் தத்துவம் முற்றிலும் தருக்க (logical) முறைப்படி அமைவது. தருக்க நெறியை அளவை என்று கூறுகிறது மணிமேகலை.  அளவையியல், ஏரணவியல், logic மூன்றும் ஒரே பொருளை உணர்த்தும் கலைச்சொற்கள். 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயிலப் புகுந்தபொழுது மெய்யியல் என்ற கலைச்சொல்லை அறிந்துகொண்டேன். அது philosophy க்கு நிகரான தமிழ்ச்சொல். தத்துவம் வடமொழி என்பது தெரிந்ததே. ஒரு மெய்யியல் மாணவனாகிய எனக்கு இவை மூன்றும் ஒன்றையே குறிப்பவை. 

மெய்யியல்  என்பது philosophy என்று பொருள்படும் கலைச்சொல் மட்டுமே. அதற்காக, ஏனையவை எல்லாம் பொய்யியல் என்று வலிந்து பொருள் கொள்ளக் கூடாது. 

சொல்வனம் 279 இதழில் “தத்துவம்” பத்தியில் வரும் பேர்ட்ராண்ட் ரசல் போன்ற பெரும்பாலான மேதைகள் முறைசார் மெய்யியல் வரையறைக்கு உட்பட்டவர்கள் என்பதில் ஐயமில்லை.

அதேவேளை முறைசாரா (informal) விதத்தில், எடுத்துக்காட்டாக தருக்கம் சாரா விததத்தில், “எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்துவதே எனது தத்துவம்” என்று ஒருவர் கூறக்கூடும். இது ஒரு நம்பிக்கை அல்லது நிலைப்பாடு. இத்தகைய முறைசாரா தத்துவத்தை முறைசார் தத்துவத்துடன் குழப்பியடிக்கக் கூடாது. 

மீயியல் (metaphysics) என்பது மெய்யியலின் கிளைகளுள் ஒன்று. சமயநெறிகளை, எளிதில் அறியப்படாத மறைபொருள் நெறிகளை ஆராயும் துறை அது. இதனுள் நம்பிக்கைகள், எண்ணங்கள், நெறிகள்… இடம்பெறும். யேசு, இராமகிருஷ்ணர், விவேகானந்தர், கிருஷ்ணமூர்த்தி, கன்பூசியஸ் முதலியோர் இந்த மீயியல் வரையறைக்கு உட்பட்டவர்கள். இத்தகைய மீயியலை முறைசார் மெய்யியல் என மயங்கக் கூடாது. 

சொல்வனத்தின் “சிந்தனைச் சோதனைகள்” என்பதில் உள்ள பேர்ட்ராண்ட் ரசலின் “சிகைவலர் முரண்புதிர்” (barber paradox) அவர் மொழியில் இப்படி இருக்கிறது:

In a certain town, there is a barber who shaves the men who do not shave themselves. In that case who shaves the barber? On one hand, he can’t shave himself because he’s the barber, and the barber only shaves men who don’t shave themselves. But if he doesn’t shave himself, he must shave himself, because he shaves all the men who don’t shave themselves – Bertrand Russell). 

ஓர் ஊரில் ஒரேயொரு சிகைவலர்  இருக்கிறார் என்றும், அங்கு தமக்குத் தாமே சவரம் செய்யாதவர்களுக்கு மாத்திரமே அவர் சவரம் செய்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம். அப்படி என்றால், அந்த சிகைவலருக்கு சவரம் செய்பவர் யார்? மேற்கண்ட கூற்றின்படி தனக்குத் தானே சவரம் செய்யும் எவருக்கும் அவர் சவரம் செய்பவர் அல்லர். ஆகவே அவர் தனக்குத் தானே சவரம் செய்பவர் என்றால், தனக்குத் தானே சவரம் செய்ய முடியாது என்றாகிறது. அத்துடன், அவர் தனக்குத் தானே சவரம் செய்யாதவராக விளங்கினால் மாத்திரமே தனக்குத் தானே சவரம் செய்பவராக விளங்க முடியும் என்றாகிறது! அப்படி என்றால், அந்த சிகைவலருக்கு சவரம் செய்பவர் யார்?

மணி வேலுப்பிள்ளை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.